Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Thursday, January 2, 2014

இடைக்காடும் செலவில்லாமற் கிடைக்கும் ஒரு சில ஞாபகங்களும்

ஊரென்றால் என்ன இருக்கும்?

வயல்கள் வெளிகள், தோட்டங்கள், கலட்டிகள், வீடுகள், ஒரு சில தார் ரோட்டுக்கள், நிறையப் புழுதி படிந்த ஒழுங்கைகள், வாசிக சாலைகள், சிறிய கோவில்கள், அரைக் காற்சட்டை வழுக வழுக ஒருகையால் அதை இழுத்து விட்டுக் கொண்டு ஓடித்திரியும் சிறுவர்கள், இரட்டைப் பின்னல்/ஒற்றைப் பின்னல் சிறுமிகள், சந்தியில் 'அலம்பிக்' கொண்டிருக்கும் இளசுகள் பின்னே பெரிசுகள் இல்லையோ? எல்லாம் உண்டு இடைக்காட்டில். யாழ்ப்பாணத்தில் ஆறுகள் இருக்காது. எனவே எங்கள் ஊரிலும் ஆறுகள் இல்லை. அதைச் சரிக்கட்ட நிறையக் கிணறுகள் உண்டு. மொத்தத்தில் ஒரு சராசரி யாழ்ப்பாணக் கிராமம். ஆனால் எங்களுக்குக் மட்டும் மிகத் 'திறம்'பட்ட ஊர்.

என்ன இருக்கக் கூடாது? தொழிற்சாலைகள். இவை இருந்தால் ஊர், சிறு நகரமாகப் பதவி உயர்வு பெற்றுவிடும். நாங்கள் 'ஃபாக்டரி' கட்டக் கூடாது' என்று கொடி பிடித்து ஆர்ப்பாட்டம் எல்லாம் நடத்தத் தேவை வரவில்லை. ஊரில் யாரும் தொழிற்சாலைகள் கட்டவில்லை. ஒன்றிரண்டு கம்மாலைகள் அப்பப்ப திறந்து மூடப்பட்டன. சைக்கிள் கடை கூட நிரந்தரமாக இருந்ததில்லை.

எனக்கும் இடைக்காட்டுக்குமான தொடர்பு 1989 இலேயே குறையத் தொடங்கி 1990 இற்குப் பிறகு ஊரில் கால் வைக்கத் விடாமல் நாட்டு நிலைமையும் சொந்தத் தேவைகளும் சதி செய்தன. ஊர் என்று நான் எழுதுவதெல்லாம் 1990 இற்கு முன்பானவை. எனக்கு ஞாபகப் பிசகு இருப்பதால் தகவல்கள் முன்பின்னாக இருக்கலாம். பிழை இருப்பின் சுட்டிக் காட்டவும். அல்லது மொட்டைக் கடிதமாவது போடவும்.

இடைக்காட்டின் எனது ஆகப் பழைய ஞாபகம், "வெள்ளி விழா, பொன் விழா" என்று அறியப்பட்ட இடைக்காடு மகாவித்தியாலத்தின் பொன் விழாவும் இடைக்காடு பழைய மாணவர் சங்கத்தின் வெள்ளிவிழாவும். 1977 என்று ஞாபகம். மிகக் கோலாகலமாக இ.ம.வித்தியாலத்தில் நடைபெற்றது. பள்ளிக்கூடத்திற்குக் கிட்ட அலங்கார வளைவுகள் எல்லாம் கட்டப்பட்டிருந்தன . கலை நிகழ்வுகள், பொருட்காட்சி என்றெல்லாம் நடந்தன. இதை எழுதும் நான் அப்போது ஒரு சிறு பையன். என்பதால் அப்பா அம்மாவிடம் வாங்கிய சில்லறைக் காசுக்கு இனிப்பு, ரொபி, கச்சான் அலுவா, ஐஸ் பழம் என்று பக்ரீறியா, சுகாதாரம் என்றெல்லாம் யோசிக்காமல் தின்று தீர்த்தேன். அதைவிட முக்கியம் 'அவிட்டு' விட்ட மாடு மாதிரிச் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்தேன்.

பள்ளிக் கூடத்தை விட்டால் அதுக்கு அடுத்த முக்கியமான இடங்கள் இரண்டு வாசிகசாலைகள். (கடவுள் பக்தர்கள் இதைவிடக் கோவில்கள் தான் முக்கியமானவை என்பார்கள். நான் இந்தப் பட்டிமன்றத்திற்கெல்லாம் வரவில்லை). "இடைக்காடு சனசமூக நிலையம்" என்பது ஒன்று. மற்றது "இடைக்காடு கலைமகள் சனசமூக நிலையம்". இரண்டிற்கும் இருக்கும் பெயரை வைத்துப் பார்க்கும்போது ஒன்றிலிருந்து கோவித்துக் கொண்டு பிரிந்துபோய்த் தொடங்கியதுதான் மற்றது என்று எண்ண இடமுண்டு. சன சமூக நிலையம் என்றூ 'ஒபிசியலாக' அறியப்பட்டாலும் வாய்ச்சொல்லில் (பேச்சு வழக்கில்) கிழக்கு வாசாலை, மற்றது மேற்கு வாசாலை என்றே அறியப் பட்டன. (வாசாலை =வாசிக சாலை ). இரண்டு வாசாலைகளிலும் வீரகேசரி, உதயன், ஈழ நாடு, ஈழ முரசு, டெய்லி நியூஸ் என்று எல்லாப் பேப்பர்களும், ஆனந்த விகடன், கல்கி, குமுதம் (நடுப்பக்கம் சில வேளைகளில் கிழிக்கப்பட்டிருக்கும்) ,குங்குமம், சாவி, இதயம் பேசுகிறது ,அம்புலி மாமா, ரத்ன பாலா, பால மித்திரா என்று எல்லா வாராந்திர/மாத சஞ்சிகைகளும் இருக்கும். ஒன்றிரண்டு இந்த 'வாசாலை'யில் இருக்காது எனில் அவை மற்றதில் இருக்கும். தனியப் பேப்பர், விகடன், குமுதம் எனில் மற்ற ஊர் வாசிகசாலைகள் போலாகி விடும். முக்கியமானதை விட்டு விட்டேன். அவை வகை பிரித்து வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்கள். புத்தகங்கள் என்றால் வெறுமானே கதைப் புத்தகங்கள் இல்லை. கதைப் புத்தகங்கள் பாடப் புத்தங்கள், கட்டுரைப் புத்தககள், கலைக் கழஞ்சியங்கள் முழுமையான எல்லா வகைப்புத்தகங்களும் இருந்தன..

என் இடைக்காட்டு நாட்களில் கைத்தொலைபேசி (மொபைல் போன்) இன்னும் பாவனைக்கு வந்திருக்கவில்லை. எனவே கண்ட இடத்தில் கண்ட நேரத்தில் அழைப்பு அல்லது குறுந்தகவல் அனுப்பும் வழி இல்லை. இணையம் இல்லை என்பதால் ஃபேஸ்புக்கும் இல்லை. அப்ப ஊர்ப்புதினங்களை எப்படி அறிவது? இந்த இடத்தில் ஆண்கள், பெண்கள் என்று இரண்டாகப் பிரிக்கவேண்டிள்ளது.
ஆண்களுக்கு வாசிகசாலை வாங்கும்(Bench) பெண்களுக்கு சந்தையும்தான் அன்றைய ஊர்ப்புதினம் கதைக்கும்/பரப்பும் இடம். ஊர் வம்புகள் அந்தக் காலத்தில் இன்னும் விரைவாகப் பரவியது என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. எல்லாவற்றையும் விட முக்கியமானது இவ்வாறு ஊர்ப்புதினம் பேசுவது அவரவர் கற்பனைத் திறனை வளர்க்க உதவியது. இக்காலங்களில் ஃப்பேஸ்புக்கில் 'share' பண்ணுவது அவரவர் கற்பனைத் திறனை மழுங்கடிக்கிறது.

வாசிகசாலைகள மட்டும் பேசிவிட்டு ஊரில் மூலைக்கு மூலையிருக்கும் வைர(வ) கோவில்களைப் பற்றி எழுதாவிட்டால் வைரவர் கனவில் வந்து என்னை மிரட்டலாம். கொட்டடி வைர கோவில், பெரீய தம்பிரான் கோவில், சொத்தி வைர கோவில் ('சொத்தி வைரவர்', ' சோதி வைரவர்' என்று மறுநாமம் சூட்டப்பட்டார்), இத்திக்கலட்டி வைர கோவில் என்பன உடனே ஞாபத்திற்கு வருகின்றன. மாணிக்கப் பிள்ளையாரும் இருக்கிறார் காட்டுப் பிள்ளையாரையும் மறக்கவில்லை. அம்மன் கோவில் சற்றுப் பெரியது.. வருடாந்திர திருவிழாவும் உண்டு. அம்மன் கோவில் திருவிழா தவிர்த்து மற்றக் கோவில்களுக்கு வருடத்தில் ஒரே ஒருநாள்தான் திருவிழா. பகலில் பூசையும் அன்னதானமும் இருக்கும். இரவில் மேளக் கோஷ்டி, சின்ன மேளம், இசைக் குழுவினரின் பாட்டு, நாடகம் என்று களை கட்டும்- லையிற்று மிசின் புன்ணியத்தால் ரியூப் பல்ப்கள் (கலர் கலராக), "ஓடும்" பல்ப்புக்கள் என்று அலங்காரம். இதிலே ஒரு சின்ன 'அரசியலும்' எண்டு. எல்லா வைர கோவில்களுக்கும் வருஷத் திருவிழா இல்லை. எனவே வைரவர்களுக்குள்ளும் 'ஸ்ரேஸ்' பிரச்சினை இருக்குப் போல.

புது வருஷம் என்றாற் கூடுவோம் பள்ளிக்கூட மைதானத்தில். புது வருட விளையாட்டுப் போட்டி அவர் அவரிற்கு அவரவர் சோலி. பெடி பெட்டைகளுக்கு ஐஸ்கிறீம், அல்லது ரொபி , ஐஸ் இனிப்பு என. பேரன் பேர்த்தி கண்டவர்களுக்கு சிறிசுகளின் விளையாட்டைக் கண்டு களிக்க என்று. இளைஞர்களுக்கு பிரியமானவர்களின் பார்வை மட்டும் போதும். (மூன்று போத்தற் கள் அடித்தாலும் இதன் போதைக்கு இணையாகுமா?). கிறிஸ் கம்பில் ஏறுவார்கள் இளந்தாரிகள். அநேகமாக ஒவ்வொருவரும் தம் முயற்சிகளில் கிறீசை வழித்தெடுக்கக் கடைசியாக வருபவருக்கே 'லக்'. இதெல்லாம் நடக்க இன்னொரு சீரியஸ் பார்ட்டியையும் மறக்கலாகாது- நடுத்தர வயது கொழும்பு உத்தியோகத்தர்! லீவு போட்டு விட்டு ஊருக்கு வந்தால் போதுமா? கொஞ்சம் போட்டுவிட்டு இங்கிலிஷ்' கதைக்காவிட்டால நாலுபேர் மதிப்பார்களா? அல்லது கிடைத்த சந்தர்ப்பத்தை விடமுடியுமா?

"ஐ சே, ஜேயார் இஸ் ஏ ஸ்டுபிட் கை..... யூ சீ!, பெடியள் வில் டீச் ஹிம் எ லெஸ்ஸன்" என்று பிளந்து கட்டுவார்கள். (விடியக் காலமை இறக்கிய கள்ளின் வாடையும் இவர்கள் பேச்சில் லேசாக அடிக்கும்). இவர்கள் பேசுவது அநேகம் பேருக்குப் புரியாது. புரிந்தவர்கள் குழப்பிப் போய் இருப்பார்கள்). இருக்கட்டும் ஆனால் இவர்கள் 'முதியோர் " ஓட்டத்தில் மட்டும் பங்கு பற்ற மாட்டார்கள். 'பழைய மாணவர்" ஓட்டத்திற்கு 'அரைக் காற்சட்டையுடன்' ஆயத்தமாக இருப்பார்கள். மனதில் மட்டும் ஒரு நம்பிக்கை அந்தக் கால 'ஓட்டோகிறாப்ஃ' காரி நாம் ஓடுவதைப் பார்க்க மாட்டாளா என....

ஊரில் நிறையப் பேர் நீளக்காற்சட்டை போட்டு "ஒபிஸ்' வேலை பார்த்தாலும் இடைக்காடு விவசாய பூமிதான். மிகுதி யாழ்ப்பாணத்தையும் போல கிணற்று நீர் இருந்தாலும் கற் பூமி இது. அந்தக் காலத்திலேயே முன்னவர்கள் கலட்டிகளைத் 'திருத்தி' நிறையத் தோட்டாக்காணி ஆக்கிவிட்டார்கள். எனவே வெங்காயம், மிளகாய், பயறு, உளுந்து, தக்காளி, கத்தரி, மரவள்ளி என்று யாழ்ப்பாணத்தில் விளையும் எதையும் விட்டுவைக்கவில்லை. எல்லாவற்றையும் 'செய்தோம்'. என்றாலும் வெங்காயந்தான் எங்கள் முக்கிய பயிர்.

முழுநேரமாகத் தோட்டம் செய்பவர்கள் மூவாயிரம், நாலாயிரம், ஏன் பத்தாயிரம் 'கண்டு' என்று வெங்காயம் செய்வார்கள். இன்னொரு தொழில் செய்பவர்கள் 800- 1000 கண்டு வெங்காயமாவது செய்வோம். வெங்காயம்தான் அநேகத் தேவைகளுக்குப் பணம் கொடுத்தது. "புரொபஷனல்" கமக்காரருக்கு வருமானத்தில் பெரும்பகுதி வெங்காயச் செய்கையினால்தான் வரும். இன்னொரு வேலை செய்துகொண்டு கொஞ்சமாக வெங்காயம் செய்பவர்களுக்கு அவசரத் தேவைகளுக்குக் கை கொடுப்பதும் அதுவே. வெங்காயக் கொட்டிலில் தொங்கிக் கொண்டிருக்கும் வெங்காயப் பிடிகள் மாதிரி ஒரு "மாற்றுத் தங்கம்" இன்னும் நான் தேடிக்கொண்டிருப்பது. திடீர்ப் பணத்தேவைகளுக்கு உதவுவது இது மாதிரி ஒன்றில்லை. காசுத் தேவை எனில் கொட்டிலில் தொங்கிக் கொண்டிருக்கும் வெங்காயப் பிடிகள் சிலவற்றை அவிழ்த்தி, நுள்ளிச் சாக்குகளில் போட்டுக் கொழும்பு லொறியில் அனுப்பலாம், இல்லாவிட்டாம் உள்ளூர்க் கடைகளிலும் விற்கலாம். பெரியவர்களுக்கு இப்படி என்றால் சிறியவர்களையும் இந்த 'வெங்காயம்' கைவிடாது. இது வெங்காயம் பூக்கும் காலங்களில். வெங்காயப் பூக்களை 'முறித்து' அளவாகப் 'பிடிகளாகக் கட்டினால் பிறகு சந்தைக்குக் கிட்ட உள்ள ஒரு கடையில் விற்றால் கிடைக்கும் காசு சிறுவர் எமக்கே :-)

சிறுவனாக ஓடித்திரிந்து, கள்ள மாங்காய், புளியங்காய் ஆய்ந்து, பிறகு அந்த ஆமிப் பிரச்சினைக்கிடையில் வளர்ந்து ஒரு இருபது வயது இளைஞனாக ஊரை விட்டு வெளிக்கிட்டேன். பிறகு படிப்பு, வேலை, என்று நாட்டுக்கு நாடு மாறினேன். பிறகு ஊரிற் கால் வைக்கக் கிடைக்கவில்லை. கிடைத்ததெல்லாம் காசில்லாமல் அனுபவிக்கக் கூடிய சில சிலிர்ப்பான ஞாபகங்கள் ம்ட்டுமே.

கனவா, நனவா என்று புரியாத ஒரு மத்திய நிலையில் நடந்து கொண்டிருக்கிறேன் -சத்தியமாக உற்சாக பானம் எதுவும் ஏற்றாமல். தொண்டை வறள்கிறது. பசி வயிற்றையும் தாண்டிக் காதையும் பிறாண்டுகிறது. என்றாலும் எதையோ தேடி இன்னும் இன்னும் நடக்கின்றேன். கால்கள் 'நீ இன்னும் இளைஞன் இல்லை" என்று உணர்த்துகின்றன. ஆழ் மனத்திற்குள் ஒளித்திருக்கும் இன்னும் வளராத சிறுவன் மட்டும் சொல்லுகிறான் 'இன்னும் நட, கிடைக்கும்' என்று. என்னத்தைத் தேடுகிறேன் என்றால் விடை கொஞ்சம் குழம்பலாக... சில வாசனைகள், சத்தங்கள், மற்றும் நினைவுகளின் கோர்வைகள்.

", வாய்க்கால்களில் வளர்ந்திருக்கும் அறுகம்புல்லை உழவாரத்தால் கஷ்டப்பட்டுச் 'செருக்கும்' ஒரு வயதானவர், பக்கத்துத் தோட்டத்தில் இயங்கும் இறைப்பு மிசினின் ரீங்காரம், வாசிகசாலை வாங்கில் இருந்தபடியே அரசியலில் pHD செய்யும் ஆய்வாளர்கள், சிலிப்பர் போடாமல் பள்ளிக்கூடம் போகும் சிறுவர்கள், மீன் சந்தையில் கேட்கக்கூடிய 'விசேட' தமிழ், ரியூசன் விடும் நேரம் பார்த்துக் கணக்காகத் தற்செயலாக குறுக்கே நெடுக்கே சைக்கிள் ஓடும் பெரிய பொடியள், நவராத்திரிக்குக் கிடைக்கும் ஓசி அவல்/கடலை, மாரித் தவளைகளின் கத்தல்கள், முறித்த வெங்காயப் பூவின் மெதுவாக மூக்கை அரிக்கும் வாசனை, மாரியில் மட்டும் நீர்ப்பிட்டிக் கடற்கரையில் கிடைக்கும் சீலா மீனையும் மறந்துவிட முடியவில்லை "

இவ்விடை கூட அண்ணளவானதுதான். முழு விடையும் இடைக்காட்டில்தான் இருக்கிறது என்று மட்டும் புரிகிறது. ஆனால் இன்னும் தேடுகின்றேன்.





-----

கண்டு (கன்று) - என்பது ஒரு நில அளவை. 1000 கன்று = ?????? பரப்பு
செருக்குதல்- செதுக்குதல் என்பதன் மருவிய வடிவம் என நினைகிறேன். தமிழ்ப் பண்டிதர்கள் யாராவது விளக்குவார்களா?

நன்றி- 'இத்தி மலர் 2013", யாழ் இடைக்காடு மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கம் (கனடா)

Tuesday, August 27, 2013

"கிழிச்சம்" சஞ்சிகையின் முப்பதாவது ஆண்டு விழா

"கிழிச்சம்", கலை இலக்கிய, மாத சஞ்சிகை என்றால் சாதாரண வாசகர்கள் தலை தெறிக்க ஓடித்தப்பி விடுவார்கள். என்றாலும் தீவிர வாசகர்கள் விட்டு விட மாட்டார்கள். ஒரு விசித்திரக் கூட்டம் நாடி, நரம்பு, இதயம் கணையம், பித்தப்பை எல்லாவற்றிலும் இலக்கியம் பரவி இனித்தப்ப முடியாது என்ற ஒரு நிலையில் இருப்பது எல்லாருக்கும் தெரிந்திருக்க நியாயம் இல்லை. இவர்கள்தான் தீவிர இலக்கிய வாசகர்கள். 2013 தை "கிழிச்சம்" இதழில் வந்த ஒரு 'படைப்பு'க் கீழே.

ஏம்பிச் சலித்து எழுந்து, "ஆவ் என்று கொட்டாவி விட்டான். கச கச என்று வியர்வை உடம்பெல்லாம் வழிந்து ஓடியது. பாயைச் சுருட்டிக் கதவுக்குப் பின் வைத்தான். பாயிருந்தவிடத்தில் பத்திருவது சிற்றெறும்புகள் ஓடின. கரப்பான் ஒன்று பாயின் ஓரத்திலிருந்து பாய்ந்தோடியது. (இது இலக்கிய எழுத்து என்பதால் "மோர்ட்டீன்" மாதிரிப் பூச்சி கொல்லிகள் வராது). சில்வண்டொன்று தூரத்தில் கத்திக் கேட்டது. அதற்கு எதிரொலியாக பல்லி ஒன்று "சொச் சொச்" என்று "சொல்லியது".

பூச்சி புழுவெல்லாம் இன்னும் இரண்டு பந்திகள் உலாவித் திரிந்தன. நாலாவது பந்தியில் கதை கொஞ்சம் சூடு பிடிக்கிறது.

ஆடுகள் மே மே என்று கத்தின. அவற்றிற்குப் பசித்திருக்க வேண்டும். ஆட்டுக் கொட்டிலில் இருந்து வந்த மூத்திர, புழுக்கை நெடியும் சாய்வாகக் தெறித்து விழுந்த சூரிய வெளிச்சமும் இவனுக்கு ஒரு சிறிய பரவச உணர்வைக் கொடுத்தது. ஆட்டுக் கொட்டில் எங்கும் பரவிக் கிடந்த புழுக்கைகளை விளக்குமாறினாற் கூட்டினான்.

(அடுத்த பந்தியிற் சாணம் அள்ளுகிறார்)

நீங்கள் பயப்பிடுகிறமாதிரி எனக்கும் "கிழிச்சம்" மாதிரி இதழ்களுக்கும் தொடர்புகள் இல்லை. அந்தக்கால சுஜாதா எழுத்துக்களில் வருகிறமாதிரி நான் ஒரு கொம்பியூட்டர் ஆசாமி. அண்மையில் கிழிச்சம் இதழின் முப்பதாவது ஆண்டு விழா நடந்தது. அதற்குப் போய் நொந்து, வாழை நாராய்க் கிழிந்து வந்த நண்பர் திருவடிவேல் சொன்ன கதைதான் இது. திருவடிவேல் ஒரு பதிவர்.ஒரு மாதத்தில் ஒரு பத்துப்பேர் வாசிக்கும் வலைப்பூ ஒன்று வைத்திருக்கிறார். ஆளுக்கு பேசக் கதைக்கத் தெரியாது, பிறகு எழுதவா வரும்? என்றாலும் தன் முயற்சியிற் சற்றும் தளராத விக்கிரமன் மாதிரித் தொடர்ந்து ஏதோ எழுதுகிறார்.

**************************

"திரு" விற்கு வீட்டில் தொல்லை தாங்க முடியவில்லை. அடிக்கடி தொட்டாண்டி வேலைகள் செய்யவேண்டி இருக்கிறது. செய்யவேண்டிய வேலைகளை மனிசன் செய்யார். ஒரு வேலையைச் செய்யாமல் தட்டிக்கழிக்க இன்னொரு வேலையைக் கண்டுபிடிப்பார் பிறகு இன்னொன்று. இப்படியே போகும். கடந்த ஆறுமாதமாக 'வீட்டுத் 'தோட்டத்தில்' புல் காடாய் மண்டிக்கிடந்தது. வெட்டவேண்டும். புல்வெட்டி "ஸ்டார்ட்" ஆகுதில்லை. இழுகயிற்றை ஊன்றி இழுத்தபின் முதுகுப் பிடிப்பு வந்தது. அது வந்ததால் வயதாகிவிட்டதும் ஞாபகத்திற்கு வந்தது. வயதாகியது புரிந்ததால் உடனே அடுத்த சனி நடக்கவிருந்த இலக்கியச் சந்திப்பும் ஞாபகத்திற்கு வந்தது.

வலு சீரியஸ் ஆக இலக்கியச் சந்திப்புக் ஆயத்தம் செய்யத் தொடங்கினார். ஆயத்தம் என்றால் கட்டுரை எதுவும் எழுதி வாசிக்கும் ஆயத்தம் இல்லை. முதலில் ஒரு நல்ல பெல்ட் வாங்கினார். ஜீன்ஸ்'சில் இறுக்கமாகக் கட்டினார். பிறகு இரகசியமாக ஜீன்ஸ்'சை உருவிப்பார்த்து 'நல்ல பெல்ட்' தான் என்று ஸ்திரப்படுத்தினார். போனமுறை கிச்சா அண்ணன் இப்படி ஒரு 'புத்தக வெளியீட்டிற்கு' வேட்டியுடன் போய், அங்கே ஒரு மோதல் நடந்து, வேட்டி உருவுப்பட்டு ,பிறகு அந்தப் போட்டோக்கள் 'பேஸ்புக்' இல் ஒரு ரவுண்ட் வந்தது. சொன்னால் நம்பமாட்டீர்கள். 366 முறை 'ஷெயர்' பண்ணுப்பட்டது. (குறிப்பு அண்ணர் வேட்டிக்குள்ளே ஒரு கோடுபோட்ட அரைக்காற்சட்டை போட்டிருந்தவர்)

ஆயிற்று. சனிக்கிழமையும் வந்தது. இது ஒரு முழுநாள் நிகழ்வு. மெல்பனில் இருந்தெல்லாம் இலக்கியத் தாதாக்கள் வந்திருந்தார்கள். வடிவேலர் மண்டபத்திற்குள் உள்ளிட்டபோது அந்த நாள்களில் ரேடியோ சிலோனில் கலக்கிய திருமதி பிரமீளா ரவீந்திரன் "சினிமாப் பாடல்களைத் திருப்பித் திருப்பிப் பாடுவதுதான் நம்மவர்கள் இலக்கியம் என்று நினத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சொந்தமாக ஆக்கப்படுவதுதான் தமிழ் வளர்ச்சிக்கு' வழிவகுக்கும்'.." என்று உருப்படியாக ஒரு கருத்தை விபரித்துக் கொண்டிருந்தார். இந்த இடத்தில் உண்மையாக விதி சிரித்துக் கொண்டிருக்கவேண்டும். ஏனென்றால் அடுத்துப் பேச எழுந்த 'சில்லெடுத்த சி.அம்பலம் (இயற்பெயர் சிற்றம்பலம்)' இதை வன்மையாக எதிர்த்தார். எதிர்ப்பது ஒரு குற்றமா என்ன? இல்லைத்தான். அடுத்து அவர் செய்ததுதான் வட்ட இலக்கியம் சிறுபத்திரிகை , குறும்பத்திகை இயக்கம் இங்கும் கேள்விப்படாதது. திடீரென்று மூச்சை நன்றாக உள்ளிழுத்து விட்டு "காயாத கானகத்தே.... " என்று தன்னைத் தானே டீ.ஆர். மகாலிங்கம் மாதிரிக் கற்பனை பண்ணிக் கொண்டு பாடத் தொடங்கினார். மேடையில் இருந்த நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் தலையைச் சொறிந்து கொண்டார். கடைசி வரிசையில் உட்கார்ந்திருந்த சிலர் அவசர அவசரமாக 'ரீ' குடிக்க என்று எழுந்து போனார்கள்.

அப்பதான் பின்னுக்கிருந்த ஒரு பெண் சங்கடத்தோடு தன் தோழிக்குச் சொன்னார். 'இந்தாள் இப்படி மானங்கெடுத்துமெண்டா வந்திருக்க மாட்டன்," என்று. அவ்வாளைக் கட்டிய இல்லாள் போல. பாவம்!

ஒருவழியாக திருவாளர் சி.அம்பலம் நாலைந்து சினிமாப் பாடல்களைப் பாடி தன் கருத்துக்களை ஆழமாகப் புரியவைத்துவிட்டுச் சென்றுவிட்டார்.

அடுத்து வந்தவர் மா(ர்)க்சிய இலக்கியத்தில் பழம் தின்று கொட்டைபோட்ட கோ.சா.பெரியதம்பி. இவர் எழுதிய எழுதுகிற விடயங்கள் யாருக்கும் புரிந்ததாகச் சரித்திரம் இல்லை. வாசித்த, கேட்ட துர்ப்பாக்கியவான்களெல்லாம் "நமக்கேன் வம்பு" என்ற பாணியில், "அருமை, அற்புதம்" என்று சொல்லவெளிக்கிட இவருக்குக் கிடைத்துவிட்டது ஒரு 'பரந்த அங்கீகாரம்" நம்பவில்லையாயின் அன்றைய பேச்சில் இருந்து ஒரு சின்ன 'சாம்பிள்'

"...காத்திரமான படைப்பு வெளியின் உச்சம் என்பது எமது மேலாண்மை விழுமியங்களின் சங்கிலித்தொடர்களை இணைக்கும் செவ்விய நீரோட்டத்தின் ஆளுமையை எடுத்தியம்புவதாக இருக்கவேண்டும். ஈழத்து இலக்கியத்தின் ஒவ்வொரு படிநிலைகளையும் இந்த யதார்த்த விழுமிய காரணகூறுகளுடன் புணருமிடத்து, போருக்கு பின்னரான நமது படைப்பு கூறுகள் , ரூசியப்புரட்சின் பின்னரான சோவியத் பண்புகளை தொக்கி நிற்கிறது ...."

இவ்வாறு ஒருவழியாக 'தேத்தண்ணி" இடைவேளை வந்தது. இந்தமாதிரி 'இலக்கியச்' சந்திப்புக்களில் உப்புச் சப்போடு இருக்கிற விஷயம் என்றால் தேத்தண்ணி'யோடு வரும் சிற்றுண்டிகளும் இதர சாப்பாட்டு அயிட்டங்களும்தான். பாட்டுப்பாடி இலக்கியம் வளர்த்த திருவாளர் சி.அம்பலத்துடன் ஒரு மெல்பன் கவிஞர் சீரியசாக ஏதோ விவாதித்துக் கொண்டிருந்தார்.

இடைவேளை முடிந்து இவர் உள்ளே வர மெல்பன் கவிஞர் கவிதை வாசித்துக் கொண்டிருந்தார். பிறகு மேடையிலேயே அழத் தொடங்கிவிட்டார். என்னவென்று விசாரித்தால் இவர் மேடையில் அழுவது இது பன்னிரண்டாம் தடவையாம். ஏதாவது ஒரு அதிஷ்ட எண் வந்ததும் அழுவதை நிறுத்தலாம். (சந்தேகம்: இவர் மேடையில் அழுவது இவர் குடும்பத்திற்குத் தெரியுமா?)

அழுகுணிக் கவிஞர் போனதும் "கிழிச்சம் 30" வெளியிடப்பட்டது. வெளியிடப் பட்டது என்று சாதரணமாகச் சொல்லமுடியாது. ஒரு பத்து இதழ்களை அழகாகப் பொதி செய்து ரிப்பனால் கட்டி, சிட்னியில் உள்ள ஒரு பத்துப் பிரமுகர்களைத் தனித்தனியாக  மேடைக்குக் கூப்பிட்டு ஒவ்வொன்றைக் கையில் கொடுத்து போட்டோ எடுத்து.. ஒரு வழியாக முடிந்தது.

"கிழிச்சம் 30" இனை விமர்சிக்க சோனா மாவன்னா தமிழ்க்கண்ணன் வந்தார்.மடை திறந்த வெள்ளம் என்பார்கள். இவர் "மடை' அது இது வெள்ளம் என்று கவலைப்படாமல் சூனாமி வேகத்தில் பேசத் தொடங்கினார். சற்று நேரம் போனதும்தான் புரிந்தது, புண்ணியவான் முன் அட்டையில் இருந்து பின்னட்டை வரை ஒரு எழுத்து விடாமல் வாசித்துக் கொண்டிருக்கிறார் என்று. இந்த அழகான விமர்சனத்தின் புண்ணியத்தாலோ அல்லது மக்கள் புத்திசாலிகளாகி விட்டார்களோ தெரியவில்லை, அன்றைக்கு "கிழிச்சம் 30" வெறுமனே நான்கு பிரதிகள்தான் விற்கப்பட்டது.


திரு' விற்குப் பசிக்கத் தொடங்கியது. பக்கத்தில் எங்காவது 'burgher' வாங்கிக் கடிக்கலாமோ அல்லது "தேநீர் இடைவேளை" வந்து காப்பாற்றுமோ என்று ஒரு சின்ன யோசனை ஓடியது. அப்போது

"அடுத்து ஏக்கே எனும் சோக்கான பதிவர்" என்றும் அறிமுகத்துடன் மேடையேறினார் அந்த இளைஞர். பெண்கள் பக்கத்தில் இருந்து பலத்த கரகோஷம். இலக்கியப் பெரிசுகளிற்கு வயிற்றில் இருந்து புகை வந்திருக்கும்.

"வணக்கங்க" என்று கைகூப்பினார் ஏக்கே.

"தம்பி தஞ்சாவூரிலை இருந்து இலக்கிய விழா'விற்கு வந்திருகிறார்" என்று குசுகுசுத்தார் பக்கத்தில் இருந்த பெரியவர்.

"சே இவன் புங்குடுதீவு" என்றான் பக்கத்தில் இருந்த யசோ. (இவன் யசோ என்ற பெயரில் முகநூல் கணக்கொன்று வைத்திருக்கிறான். ஆணா பெண்ணா என்று சரியாகச் 'செக்' பண்ணாமல், நாடறிந்த கவிஞர் பொ.ஐ.க.ஜெயவாணன் இவனிடம் முகநூல்-ஜொள் விட்டது தனிக்கதை.)

"நனைவிடை தோயும் நாதாரிகள்" என்று ஒருதரம் மெதுவாகச் சொன்னார் ஏகே . பிறகு எல்லாக் கவிஞர்களும் செய்வதுமாதிரி தலைப்பை மீண்டும் ஒருமுறை வாசித்தார்.- இம்முறை அழுத்தி உறுத்தி நிதானமாக இழுத்து வாசித்தார்.

"ந னை வி டை ...தோ யு ம்... நா தா ரி க ள்

இரண்டு வரிசை தள்ளி உட்கார்ந்திருந்த எஸ்.பொ சங்கடத்தோடு நெளிந்துகொண்டார்.

"மட்டுவில் கத்தரிக்காய், பூநகரிப் புழுக்கொடியல்
வெட்ட வெட்டத் தழைக்கும் இடைக்காட்டுக் கிழுவங் கொப்புக்கள்..
விஜிதா மில் மொட்டைக்கறுப்பன், ஊர்க் கோழிக்கறி
ஞாயிற்றுக் கிழமை முழுக்கு ......"

"ஐயா தீர்ந்ததா உங்கள் தோய்தல்??"

(இந்த இடத்தில் வலது கையை உயர்த்திச் சபையோரைக் கேள்வி கேட்பதுபோல் சைகை செய்கிறார்)

"அச்சுவேலிச் சந்தையடியில் அண்ணன் சைக்கிள் செயின் நழுவியது..
இவர் பெடல் சறுக்க, களுக் என்று சிரித்தாள் அவள்
வழிந்தார் அண்ணன் அசடாகி, மறக்கிலார் அந்தத் தொங்கட்டானை மூபத்து ஆண்டுகள் கழிந்தும்"


(இப்படிப் பந்தி பந்தியாக நனவிடை தோய்தல்கள் கிழிக்கப்பட்டன)

ரூல் அடித்த சீயார்க் கொப்பிகள், நட்ராஜ் கொம்பாஸ்
வாசம் வீசும் இலவசப் புத்தகங்கள், மரவேலைப் பாடம், ஒளித்துவைத்துப் படித்த இலக்கியங்கள்,

எல்லாம் விட்டு வைக்க மாட்டீர்- எல்லாம் எழுதித் தள்ளுவீர்

ந னை வி டை ...தோ யு ம்... நா தா ரி க ள்

என்று முடித்தார்.


**************************


திரு'விற்கு ஒரு சந்தேகம். ஏக்கே தன்னைத்தான் வறுத்தாரோ என்று. இவர் நன்றாகத் தாளிக்கப்பட்டது புரிந்தது. என்றாலும் "சே அப்படி இருக்காது" என்று சொன்னேன். இதுக்கு விடை சொன்ன என்னால் அவர் கேட்ட இன்னொன்றுக்கு விடை சொல்ல முடியவைல்லை.

"ஏன் எல்லாக் கவிஞர்களும் ஒவ்வொரு வரியையும் இவ்விரண்டு தரம் வாசிக்கிறார்கள்? யாராது இதை நிறுத்த மாட்டார்களா?"

நான் ஓடித் தப்பிவிட்டேன்.




----------

நன்றி-

(1) ஜேகே
"...காத்திரமான படைப்பு வெளியின் உச்சம் என்பது எமது மேலாண்மை விழுமியங்களின் .."என்று தொடங்கும் பந்தி ஜேகே'இன் முகநூற் பக்கத்தில் இருந்து அனுமதி இல்லாமற் சுடப்பட்டது.

(2) Image from
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/86381/language/ta-IN/--.aspx

Thursday, December 20, 2012

களவையும் கற்று மறந்தேன் - 1

இது எப்ப நடந்தது என்று மிகச் சரியாக ஞாபகம் இல்லை. ஏழு வயதில் சின்னப் பள்ளிக்கூடத்தில் முதலாம் வகுப்புப் படித்தேன். எனவே ஏழு வயதிற்குப் பின்தான். சின்னப் பெடியளுக்கு அப்ப 'வாச்சர் அப்பா' தான் ஹீரோ. வேறொன்றுமில்லை. பள்ளிக்கூடத்திற்குக் வெளியே ஒரு சின்ன இனிப்புக் கடை வைத்திருந்தார். ஒரு ஒலைக் கொட்டில், அதுக்கு ஒரு மரக்கதவு. மரக்கதவில் 'சோக்குக் கட்டி'யால் எதாவது எழுதியிருக்கும். அதில் எழுதியிருப்பது புரியும் வயசல்ல அது.

வாச்சர் அப்பா கடை என்று பெயர் இருந்தாலும் இது கடை என்ற வரையறக்குள் வருமோ தெரியவில்லை. ஓலைக் கொட்டிலின் முன்புறம் ஒரு சிறிய மரக்கதவு. அதைத் தாண்டி உள்ளுக்குப் போனால் இடப்பக்கத்தில் ஒரு மர மேசை. அதில் நீளமான கண்ணாடிப் போத்தல்கள். போத்தல்கள் எல்லாம் புகை பிடித்தமாதிரி மங்கலாக இருக்கும். தோடம்பழ இனிப்பு, ஐஸ் இனிப்பு, தேங்காய்ப்பூ இனிப்பு, மலிபன் பிஸ்கற், என ஒவ்வொன்று ஒவ்வொரு போத்தலினுள். சுருட்டுற் ரொபி என்று இன்னொன்று அநேகமாக ஒரு பொலித்தீன் பைக்குள் இருக்கும். இவ்வளவுதான் 'கடையின்' உள்ளடக்கம்.

கடை அல்லது கொட்டிலின் இன்னொரு பக்கம் ஒரு மண் அடுப்பும் சில சமையல் பாத்திரங்களும் இருக்கும். வாச்சர் அப்பா ஒண்டிக்கட்டை. மனைவி நிறைய நாட்களுக்கு முன் இறந்துவிட்டார். பிள்ளைகள் இல்லை.

பள்ளிக்கூடத்தில் இன்டேர்வல் விட்டுவிட்டால் 'கெயார்' இலவச பிஸ்கற்றை வாங்கினாலும் வாங்காவிட்டாலும் கையில் ஐந்து சதமாவது இருந்தால் பெடி பெட்டைகள் ஓடிப்போவது வாச்சர் அப்பா கடைக்கு. அவரும் அந்நேரத்தில் செமை பிஸி. ஐந்து சதம், பத்துச் சதம், இருபத்தைந்து, ஐப்பது, ஒருரூபா என்று குற்றிக் காசுகளை எண்ணி கேட்பவற்றைக் கொடுத்து மிச்சக் காசும் கொடுக்கவேண்டும்.

"வாச்சர் அப்பா, வாச்சர் அப்பா, ரண்டு தோடம்பழ இனிப்பு, ரண்டு ஐஸ் இனிப்பு, மிச்சத்துக்குப் பல்லி முட்டை இனிப்பு" என்று ஒன்று ஒரு ஒரு இருபத்தந்து சதக் குற்றியை நீட்டும்.

"எனக்கு ரண்டு தட்டு தேங்காய்ப்பூ ரொபி" என்று இன்னொன்று கத்தும்.

"எனக்குக் கெரியா பருப்புச் சரையைத் தாணோய் பெல் அடிக்கப் போகுது" அன்று இன்னொன்று அவசரப் படுத்தும்.

கடையின் வாசலுக்குக் கிட்ட நின்றுகொண்டு, மேல்வகுப்பு அண்ணாமார் சட்டையின் மேல்ப் பொத்தானைத் திறந்திவிட்டு, மேலே பார்த்துக்கொண்டு "கடக் கடக்" என்று சத்தம் வர சோடாக் குடித்துக் கொண்டிருப்பார்கள். "ஏ/எல் வந்தால் பல்லிமுட்டை இனிப்பு, தேங்காய்ப்பூ இனிப்பு என்று வகைவகையாகத் தின்னமுடியாது. சோடாவும் விசுக்கொத்தும்தான்" என்று யாரோ ஒரு முனிவர் சாபம் போட்டிருப்பாரோ?

நானும் ஒரு நாள் ஆசையாக அம்மாவைக் கேட்டேன் , "சோடா வாங்க வேணும், காசு தாங்கோ" என்று

"என்னது, பள்ளிக்கூடத்தில் சோடாவோ? இந்த வயதிலோ?" என்று அம்மா திடுக்கிட்டுக் கேட்டா. பின்னேரம் அப்பா வீட்டில் நிற்கும்போது அம்மா சொல்லிக் கேட்டது "பெரியவருக்குச் சோடா வாங்கக் காசு வேணுமாம்" என்று.

"ஏன் அவருக்கு மீசை முளைச்சுட்டுதாமே?" அப்பா சொட்டை விட்டார்.

ஆனாலும் அடுத்த சிலநாட்களில் அப்பா கடைக்குப் போய் வரும்போது இரண்டு ஒரேஞ் பார்லி + ஒரு நேக்ரோ சோடாவும் கால் றாத்தால் மாறி பிஸ்கட்டும் வாங்கிவந்தார்.

அப்பதான் ஒன்று புரிந்தது பள்ளிக்கூட இன்ரவலில் சோடாக் குடிக்க ஒரு மினிமம் அடிப்படைத் தகுதி இருக்குதென்று : மீசை முளைத்திருக்க வேண்டும். அதுக்குப் பிறகு அப்பாவின் ஷேவிங் செற் 'ரைக் கவனிக்கத் தொடங்கினேன்.

அக்காலங்களில் இன்ஸ்டன்ட் ஷேவிங் கிரீம் எல்லாம் இல்லை. ஒரு ஷேவிங் பிரஷ், ஷேவிங் சோப்பு, ஒரு ரேசர், என்று ஒரு செற்' ஆக இருக்கும். அப்பா ஷேவ் எடுப்பதைப் பார்ப்பது ஒரு குதூகலம். ஷேவிங் பிரஷ்'ஐத் தண்ணீரில் நனைத்து, ஷேவிங் சோப்பபில் தேய்த்து நுரை வரச்செய்து அதை முகத்தில் பூசுவார். பிறகு கண்ணாடியில் முகத்தைப் பார்த்துக் கொண்டு 'கறுக் கறுக்' என்று சத்தம் வர ரேசரால் வழிப்பார். முகத்தை இடைக்கிடை நெளித்து அஷ்ட கோணலாக்குவதை யாரும் பார்க்கவில்லை என்றுதான் எண்ணியிருப்பார்.

ஷேவிங் செற் கொஞ்சநாட்களில் அலுத்துப் போக அப்பாவின் 'பேர்ஸ்' ஐக் கவனிக்கத் தொடங்கினேன். நல்ல தோலினாற் செய்யப்பட்டது . புதிதாக வாங்கியபோது மண்ணிற நிறமாக இருந்திருக்கும். இப்ப கொஞ்சம் கறுப்பை அண்டிய நிறமாக இருந்தது. சில்லறைக் காசு வைக்க தனியாக ஒரு சின்ன compartment இருந்தது. இது எப்பவின் கொஞ்சம் உப்பிப் போய் இருக்கும்-ஐந்து சதம், பத்துத் சதம், இருபத்தைந்து , ஐம்பது, ஒரு ரூபா என்று

குற்றிக் காசுகளால். தாள்க் காசு இன்னொரு compartment இல் ; கனக்க அலுப்படிக்காமற் சொன்னால் அப்பா பாவித்த பேர்ஸ் , இப்போது நான் பாவிப்பதை விட அதிகம் வித்தியாசமானதல்ல. வித்தியாசம் அந்தச் சில்லறைக் காசுகள் வைக்கும் தனி 'அறைதான்'.

அப்பாவிற்கோ அல்லது அம்மாவிற்கோ அநேகமாக அவர்கள் தரும் இருபத்தைந்து அல்லது ஐம்பது சத்தத்தில் நிறைய இனிப்பு, ரொபி, கறுவாக்கட்டு என வாங்க முடியாது என்கின்ற பொருளாதார பாடம் விளங்கியமாதிரி இருக்கவில்லை. போதாக்குறைக்கு 'சோடா வாங்க' என்று காசு கேட்கவும் முடியாது. (முதலாம் இரண்டாம் வகுப்புப் பெடியங்களுக்கு மீசை முளைக்காது என்று அந்த வயதிலேயே என் சிற்றறிவுக்கு எட்டிவிட்டது !); எனவே அப்பாவின் பேர்ஸ்'சில் கை வைக்கத் தொடங்கினேன்.

இப்போது நான் திடீர் பணக்காரனாய் விட்டேன். ஒவ்வொருநாளும் பள்ளிக்கூடம் போகும்போது குறைந்தது ஒரு ரூபா ஆவது கொண்டுபோவேன். இண்டர்வல் மணியடிக்க பாய்ந்தடித்துக் கொண்டுபோய் வாச்சர் அப்பா கடையில் முன்னுக்கு நின்றுவிடுவேன். ஐஸ் இனிப்பு, தேங்காய்ப்பூ இனிப்பு, பருப்புச்சரை, கறுவாக் கட்டு, (சுருள்) , விசுக்கொத்து, அப்பப்ப சோடா என்று நல்ல மிதப்பாகத்தான் கொஞ்சநாள் தின்று தள்ளினேன்.

ஒரு ரூபாவிற்குக் கிட்ட ஏறக்குறையத் தினமும் அபேஸ் பண்ணியும் அப்பா கண்டுபிடித்தமாதிரி இல்லை. எனவே இப்போது இரண்டு ரூபா , மூன்று ரூபா என்று முன்னேறிக் கொண்டிருந்தேன் . சிலநாட்களில் 'மாரித் தவளை' மாதிரி உப்பிப் போயிருக்கும் அப்பாவின் பேர்ஸ் என் கை வண்ணத்திற்குப் பிறகு தேரை மாதிரி ஒல்லியாக போய்விடும். நாள் முழுக்க எப்ப பிடிபடுவனோ என்று பயமாக இருந்தாலும் , தொழிலைக் கைவிடவில்லை. அப்பாவும் பேர்சில் காசு குறைவதைக் கவனித்த மாதிரி இல்லை.

ஒருநாள் மட்டும் அம்மாவிடம் "நீ என்னைக் கேக்காமல் காசு எடுத்தாயோ?" என்று கோவித்துக் கொண்டார். நான் "திடுக் திடுக் கடக் மடக்" என்று நெஞ்சு அடிக்க முழியைப் 'பிரட்டிக்' கொண்டு கேட்டுக் கொண்டிருந்தேன். அடுத்து ஓரிரு நாட்களுக்கு நல்ல பிள்ளையாக இருந்தேன்; அம்மா தந்த இருபத்தந்து சதம், ஐம்பது சதத்தோடு வாச்சர் அப்பா கடை பட்ஜட் முடிந்துபோனது.

அடிக்கடி வாசிப்பீர்கள். விதி வலியது என்று. அதுமாதிரி எனக்கும் ஒரு "சோதனை" வந்தது. பெரிய தம்பிரான் கோவிலோ அல்லது சொத்தி வைரவர் கோவில் திருவிழாவோ- ஏதோ ஒரு திருவிழா. திருவிழா என்றால் இரவுத் திருவிழாதான். பின்னேரத்திற்குப் பின்தான் கோவில் களை கட்டத் தொடங்கும். மேளம், சின்ன மேளம், நாடகம் என்று இரவிரவாகத் திருவிழா நடக்கும். இதெல்லாம் பெரிய ஆட்களுக்கு. சிறுவர்களுக்கு கலர் அப்பளம், 'சோக்கட்டி' இனிப்பு, சோடா, பீடா (இதுக்கும் மீசை முளைக்கவேண்டும், களவாகச் சாப்பிடுவோம்), அது, இது என்று தின்பண்டங்கள் இருக்கும். அம்மாவிற்கும் அப்பாவிற்கும் விலைவாசி, பணவீக்கம் பற்றி எல்லாம் அறிந்து கொள்ள ஆர்வம் இல்லை.

"நாங்கள் சின்னப் பிள்ளைகளாக இருக்கேக்கை என்ரை ஐயா ஐந்து சதந்தான் தந்துவிடுறவர்" என்று அம்மா வியாக்கியானம் வேறு தருவா.

எனக்கு இப்போது இதைப்பற்றிக் கவலை இல்லை. கவலையெல்லாம் தம்பி பார்க்காமல் இருக்கும்போது இனிப்புக்களை வாங்கவேண்டும். இல்லாவிட்டால் நிறைய வாங்கும்போது ஆள் 'அலேர்ட்' ஆகி வீட்டில் வத்தி வைத்துவிடுவான். பிறகு விளக்கம், விசாரணை என்று.... கஷ்டம்.

(தொடரும்)

Tuesday, October 23, 2012

மனைவியைச் சந்தோஷமாக வைத்திருப்பது எப்படி?

மனைவியைச் சந்தோஷமாக வைத்திருப்பது எப்படி?
(20 வழிகள்)

என்று இணையத்தளம் ஒன்றில் வெள்ளைக்கார அம்மணி ஒருவர் எழுதியிருந்தார். அதை நான் எங்கள் 'கலாச்சாரத்திற்குப்' பொருத்தும் வகையில் மொழிபெயர்த்து என் கொமென்ற்'களுடன் கீழே தருகிறேன்.

(1)மனைவியைப் பார்த்துப் புன்சிரியுங்கள். நீங்கள் ஒன்றும கதை/வசனங்கள் பேசத் தேவையில்லை, வெறுமனே ஒரு கனிவான புன்னகையைக் கசியவிடுங்கள். முக்கியம் புன்னகைக்கும்போது அவள் கண்களைப் பார்க்கவேண்டும்.

நீங்களே 'ஒன்றும் பேசத் தேவையில்லை' என்று சொல்லிவிட்டீர்கள். பிறகு என்ன? கடைப் பிடித்துப் பார்த்தேன். "சும்மா அசட்டுச் சிரிப்புச் சிரிச்சுக் கொண்டிருக்காமல் வூல்வேர்த்'துக்குப் போய் இந்த லிஸ்ட்'இல இருக்கிற எல்லாத்தையும் வாங்கி வாங்கோ" என்று ஒரு நீஈஈஈளமான ஒரு பேப்பர்த் துண்டு வந்தது.


(2) அவளிடம் (கோபத்தில்) கத்தவேண்டாம். மென்மையாக, மகிழ்வாக, அடங்கிய குரலில் பேசவும். (அடக்கி வாசிக்கச் சொல்லுறா). அவள் காதுகளில் கத்துவது அவளுக்கு ரொம்பக் கோபமூட்டும். நீங்கள் கத்தாமலேயே அவளுக்குக் காது கேட்கும்.

என்னது? கத்துவதா? மூச். அம்மா தாயே நீங்கள் எந்த நூற்றாண்டில் இருக்கிறீர்கள்?


(3) மனைவி சொல்வதை எப்போதும் கேளுங்கள். அது மிகவும் கஷ்டமானது என்று எனக்குத் தெரியும். உங்களால் அவள் சொல்வதைக் கொன்சென்ரேட் பண்ணிப் புரிந்துகொள்ள முடியாது. அது போறிங்'ஆக இருக்கலாம் அல்லது நீங்கள் செய்து கொண்டிருக்கும் வேலையைப் பாதியில் விட வேண்டி வரலாம். முயற்சி செய்யுங்கள். அவள் முக்கியமான ஒன்றைச் சொல்லவரலாம்.

இதைத்தான் எங்கள் தமிழர் "மனைவி சொல்லே மந்திரம் என்பார்கள்". யாருக்காவது மறுக்கிற துணிச்சல் உண்டா?

(4) மனைவி எதாவது ரிப்பேர், அல்லது வேறு 'அலுப்பு' வேலைகள் செய்யச் சொன்னால் எதையும் பின்போடாதீர்கள். சூடாற முதல் செய்யவும். இதெல்லாம் உங்கள் நல்லதுக்குத்தான் அவள் சொல்லுகிறாள்.

நாம் பிறப்பு எடுத்ததே எதற்காக? இதுமாதிரித் தொட்டாண்டி வேலை பார்க்கத்தானே?

(5)உங்கள் மனைவியைப் புகழ்ந்துதள்ளுங்கள். பாசாங்கு பண்ணாமல் 'உண்மையாகவே' சொல்லவும். அவள் 'ஷொப்பிங்' போனால், "உனக்கு என்ன வாங்கினாய்" என்று அக்கறையாகக் கேட்கவும். அப்படிக் கேட்டால்தான் அவள் வாங்கிவந்த "ட்ரஸ்' உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்று அவளுக்குப் புரியும்.

நான் மெய்யாகவே புகழ்ந்துதான் சொல்லுகிறேன்.. போனகிழமைகூட "நீ கிண்டிய கேசரி நல்லாகத்தான் இருக்குது" என்று புகழ்ந்தேன். 'கேக்குக்கும் கேசரிக்கும் வித்தியாசம் தெரியாதா?' என்று கோபித்துக் கொண்டாள்.

(6)ரொம்பக் கஞ்சத்தனம் வேண்டாமே. அவளுக்குக் தேவையானல எல்லாவற்றையும் நீங்களே வாங்கிக் கொடுத்துவிட்டால், அவளுக்குக் காசு செலவழிக்க வேண்டிய தேவை இல்லையல்லவா?

வேறை வழி?

(7)காசை வீணடிக்காதீர்- குடி, பீடி/சிகரட், 'படம்' போட்ட புத்தகம் என்று...

சான்ஸ்ஸே இல்லை

(8) ரொய்லட் மூடியை எப்போதும் மூடி வைத்திருக்கவும். உங்கள் மனைவி இது விசித்திரம் என்று நினைத்தால், உள்ளே உள்ள 'தண்ணீர்' தெரியாமல் இருப்பது அழகு என் விபரிக்கவும்.

இது புரியவே இல்லைங்கோ.

(9) உங்கள் உடைகளை நிலத்தில் வீசி எறியவேண்டாம். உடை மாற்றியதும் அழுக்கு உடைகளை அதற்குரிய 'லோண்டரி பாஸ்கற்' இனுள் போடவும்.

(10) பற்களை ஒழுங்காகத் துலக்கவும்.

(11) ஒழுங்காகக் குளிக்கவும்.

மேலே (9), (10), (11) - ஞாபகம் இருக்கும் குழந்தைப் பருவத்தில் இருந்ததே யாராவது சொல்லிக்கொண்டுதான் உள்ளார்கள். சின்ன வயசிலே (அதாவது கல்யாணம் கட்டமுதல்) அப்பா/அம்மா, இப்ப மனிசி. ஆனால் மனிசி ஒருக்கா மட்டும்தான் ஓ(ர்)டர் போட்டது சொன்னது. பிறகு திருப்பிச் சொல்லவேண்டிய தேவை வரவேயில்லை.

(12)குப்பைகளை வெளியே எடுத்துச் செல்லவும். அது உங்கள் வேலை, அவளுடையது அல்ல.

நீங்கள் சொல்லமுதலே-- சிட்னியிலே, இந்தச் சில்லுப் பூட்டிய குப்பை வாளிகளை (Wheelie Bins), தந்தைக் குலம்தான் வீதிக்கரைக்கு இழுத்துச் செல்லும். சிட்னியில் மட்டுமல்ல, முழு அவுஸ்திரேலியாவிலேயும் அப்படித்தான்..

(13) அவளிடம் கார் இருப்பின், சே(ர்)விஸ்ஸிற்கு நீங்கள்தான் எடுத்துச் செல்லவேண்டும். எப்போது அடுத்த சே(ர்)விஸ் வருகின்றது என்று நீங்கள்தான் ஞாபகம் வைத்திருக்கவேண்டும்.

மேலே (6) ஐப் பார்க்கவும்

(14) ரிவி'யில் என்ன பார்ப்பது என்று அவள்தான் முடிவெடுக்கவேண்டும். அவள் பார்க்கும் 'மெகா' சீரியலைப் பக்கத்தில் இருந்து முடியும்வரை பார்க்கவும். வெறுமனே தேமே'யென்று பார்த்தால் போதாது. 'சுவாரசியமாகப்' பார்க்கவேண்டும்.

மாட்டேன் போ!! நேற்றுத்தான் "மாற்றான்" பார்த்தேன்.

(15) உங்களுக்கான உடைகளையோ பாதணிகளையோ அவளே தேர்ந்தெடுக்கட்டும். எப்படியும் நீங்கள் தேர்ந்தெடுப்பதைவிட அவை நன்றாக இருக்கும்.

சொந்தமாக ஒரு விருப்பு/வெறுப்பும் இருக்ககூடாது என்கிறீர்கள். இதைத்தான் ஞானிகள் "பற்றற்றிரு" என்றார்கள்.

(16) (மிக முக்கியம்). எக்காரணம் கொண்டும் மனைவிமேல் கோபமாகவே வேண்டாம். ரொம்பச் சூடானால், உடனே வெளியே போய் காலாற நடக்கவும். சூடு இறங்கியபின் உள்ளே வரவும். வந்தவுடன் மனைவிக்கு ஐஸ் வைக்கவும்.

மேலே (2) இல் சொல்லியும் உங்களுக்குத் திருப்தி வரவில்லை. ம்ஹூம். ரொம்பச் 'சூடானால்' வெளியே துரத்தப்படுவீர். எனவே வெளியே கௌரவமாக நாங்களாகவே முதலில் போகச் சொல்லுகிறீர்கள் போல.

(17) மனைவியிடன் 'ஐ லவ் யூ' அடிக்கடி சொல்லவும். நிறைந்த மனத்துடன் சொல்லவும். நக்கல் கூடவே கூடாது.

ற்ம்ம்ம்ம்ம்ப முயற்சித்தேன். "இது நக்கலா? அல்லது கிண்டலா?" என்கிறாள்.

(18)உங்கள் மனைவி எதாவது ஒரு சிக்கலில் மாட்டுப்பட்டால், புரிந்துணர்வுடன் நடவுங்கள். குற்றம் சாட்டும் வேலை எல்லாம் வேண்டாமே.

குற்றம் சாட்டும் அளவிற்குத் துணிச்சல்?

(19) நீங்கள் சிக்கலில் மாட்டுப்பட வேண்டாம். அப்படி மாட்டுப்பட்டாலும் அவளையும் உதவிக்கு இழுக்காது நீங்களே தனித்துத் தீர்த்து வைக்கவேண்டும்.

முயற்சிக்கிறேன். மேலே (18) இல் இருக்கிற மாதிரி புரிந்துணர்வு கிடைக்குமா?

(20) (மிக முக்கியம்) அவள் உங்கள் வேலைக்காரி இல்லை. அவள் பேசும்போதெல்லாம் 'கப்சிப்' என்று கேட்கவேண்டியது உங்கள் வேலை. அவள் பேசும்போது குறுக்கிடவேண்டாம்.

ஏற்கெனவே அப்படித்தானே? அவள் பேச, நான் கேட்கமட்டும் முடியும். சின்னச் சந்தேகம். (1) இலிருந்து (20) வரை உள்ளதைப் பார்க்க 'நாமதான்' வேலைக்கா..... சரி சரி எனக்கேன் வம்பு?



---------------

Image from: http://www.cartoonfaces.net/2009/11/cartoon-picture-of-cute-little-dog-with.html

Friday, June 8, 2012

மழை

இரவெல்லாம் ஒரே மழை. சாக்குக் கட்டிலில் போர்த்துக்கொண்டு படுத்திருக்க நன்றாக இருந்தது. ஒன்றிரண்டு மழைத்துளிகள் கூரையில் இருந்து எப்படியோ தப்பி வந்து முகத்தில் விழுந்தன. இரவு முழுவதும் தூரத்தில் ஷெல் வெடிப்பதுவும் துப்பாக்கிகள் சடசடப்பதுவும் இடிமுழக்கத்துடன் கலந்து கேட்டது. சிலவேளைகளில் ஷெல் விழுந்து யாரும் சாகாமல் இருந்திருக்கவும் கூடும். அப்படியே இருக்கக் கடவது. போன கிழமை இப்படி இரவு முழுக்க மழைபெய்த ஒரு இரவில்தான் ஷெல் விழுந்து பன்னிரண்டு பேர் ஏதோ ஒரு ஊரில் செத்தார்கள். ஈழநாடு,ஈழமுரசு, உதயனில் எல்லாம் தலைப்புச் செய்தி. நான்கு ஆண்கள், ஆறு பெண்கள், இரண்டு குழந்தைகள். ரூபவாஹினி ரிவி "நேற்றிரவு பலாலி இராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை இராணுவம் முறியடித்துப் பதில் தாக்குதல் நடத்தியதில் பதினைந்து பயங்கரவாதிகள் கொல்லப்பட்டார்கள்" என்றது. இன்றைக்கு அப்படி இராது. இருக்கக்கூடாது. சந்நிதி முருகன் பார்த்துக் கொள்வார். "அவருக்கு அவற்றை தேர் ஐக் காப்பாற்ற முடியவில்லை, ஆக்களைக் காப்பாற்றப் போறாறோ?" என்று சேந்தன் அண்ணா கேட்பார். அவர் நிறையச் சிவப்பு மட்டைப் புத்தகங்கள் வாசிப்பார். புத்தகங்கள் எல்லாம் பூர்ஷ்ஷவா, நிலவுடமை, சுரண்டல், உழைக்கும் வர்க்கம், ஆளும் வர்க்கம் என்று இருக்கும். ஒன்றும் புரியாது. ஒரு புத்தகத்திலும் ஒரு படமும் போட்டிருக்காது. நான் படம் போட்ட புத்தங்கள்தான் வாசிப்பேன். "ரொபின்சன் குறூசோ" கூட மழை பெய்த ஒரு நாளில்தான் சேந்தன் அண்ணாவின் புத்தக அலுமாரியில் கண்டு பிடித்து வாசித்தேன். "ரொபின்சன் குறூசோ" இற்குப் பக்கத்தில் ஒரு கறுப்பு/வெள்ளை புகைப்படங்கள் நிறையப் போட்ட ஒரு புத்தகமும் இருந்தது.

காலையில் மழை ஓய்ந்திருந்தது. ஆனால் ஒரே மழை இருட்டு. வெள்ளம் வடிந்திருந்தது. நிலம் சுத்தமாக இருந்தது. நிலத்தில் அட்டைகளும் நத்தைகளும் ஊர்ந்து திரிந்தன. மரங்களும் மழையில் கழுவுப்பட்டுச் சுத்தமாக இருந்தன. கிளிகள், குருவிகள் என்று கலவையாகச் சத்தம் கேட்டது. "கோபால் பற்பொடி நேரம் காலை ஏழு மணி" என்று றேடியோ சொன்னது. பொங்கும் பூம்புனல் அடுத்ததாக இருக்கலாம். றேடியோவை முடுக்கினேன், ஆமி றேடியோவில் "சிட்டூக்குச் செல்லச் சிட்டூக்குச்-சிறகு முளைத்தது.." என்று யேசுதாஸ் சோகமாகப் பாடிக்கொண்டிருந்தார். இடையில் எந்நேரமும் பாட்டு நிறுத்தப்பட்டு, "அச்சுவேலி, இடைக்காடு ,அவரங்கால் மக்கலுக்கு.....பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடக்க இருப்பதால் உடனடியாக பதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயரவும்... " என்று அறிவித்தல் வரலாம். வரவில்லை. "ஒரே இடத்தில் ஆட்களைக் குவித்தால் போடுகிற குண்டுகளுக்குக்கான செலவு குறையும்; குறைந்த குண்டுகள், நிறைந்த சாவுகள்"; இஸ்ரேல்காரன் 'அத்துலத் முதலி'க்குக் கொடுத்த அட்வைஸ் இப்படித்தான் இருந்திருக்க்கும்.

"இண்டைக்கு அடுப்பு மூட்டுவது கஷ்டம், விறகு எல்லாம் ஈரம், போய்ப் பாண் வாங்கி வா" என்றா அம்மா. மழைநாட்களிற் பாண் சூடாக சாப்பிட்டால் நன்றாக இருக்கும். பாண்காரனும் மழை என்பதாற் பிந்தித்தான் கடைகளில் 'சப்ளை' பண்ணியிருப்பான். பாண் சூடாகத்தான் இருக்கும்.

அப்பா வாங்கித் தந்த ஹீரோ சைக்கிள். அதை உழக்க ஒருதரம் தனியாகச் சாப்பிட வேண்டும். என்றாலும் அதில் ஒரு பிரியம். ஓ/எல் பரீட்சைக்கு அதில்தான் போனேன். மகன் வளர்ந்திட்டான் என்று அப்பாவிற்குப் புரிந்த ஒருநாள் வாங்கியிருப்பார்.

மண் ரோட்டில் சைக்கிள் ரயர் தடம் பதிந்த அடையாளங்கள் தெரிந்தன. குட்டை குட்டையாகத் தேங்கி நின்ற தண்ணீரை விலக்கச் சைக்கிளை வெட்டி வெட்டி ஓட வேண்டியிருந்தது. "சரக்க்" என்று சத்தம் கேட்டது. அட்டையோ நத்தையோ ஒன்று ரயரில் நெரிந்து போயிருக்கவேண்டும். ஒருகணம் அரியண்டம், பிறகு பிறகு பரிதாப உணர்ச்சி. புத்த மதக் கொள்கைப்படி ஈ , எறும்பைக் கூடக் கொல்லக் கூடாதாமே? தூரத்தில் இடைக்கிடை துவக்குச் சூட்டுச் சத்தங்கள் கேட்டுக் கொண்டுதானிருந்தன. ஒன்றிரண்டு சூட்டுச் சத்தங்கள் கேட்டாலே தலை தெறிக்க எதிர்த் திசையில் ஓடும் காலம் கழிந்து, 'தூரத்தில் தானே'என்று அசண்டையாக இருக்கும் காலமிது. ஈரக்காற்று முகத்தில் அடித்தது... நெஞ்சுக்குக் குறுக்கே கைகளைக் கட்டிக்கோண்டு மெலிதாக நடுங்கிக்கொண்டு இரண்டொரு பெரிசுகள் நடந்து போய்க்கொண்டிருந்தர்கள். ('இந்தக் காலத்துப் பெடியளுக்குக் குளிர்ச்சட்டை தேவைப்படுது, நாங்களும் இருக்கிறமே, இந்த அறுவைத்தஞ்சு-எழுவது வயதிலும் சட்டையே இல்லாமல் நடந்து திரியுறம், இது ஒரு குளிரே?)

திடீரென்று வெயில் அடிக்க ஆரம்பித்தது. இப்பதான் முதல் முதலில் வெயில் அடிப்பதுமாதிரி ஒரு சுத்தமான புது வெயில். கண்கூசியது. தும்பிகளும், வண்ணத்திப் பூச்சிகளும் பறக்கத் தொடங்கின. முன்பு எங்கு ஒளித்திருந்தன? தூரத்தில் ஹெலிகொப்ரர் பறப்பது கேட்டது. ஹெலிகொப்ரர்காரன் என்றால் கண்ணில் பட்ட யாரையும் துரத்திச் துரத்திச் சுடுவான். "பிளேன்"காறன் என்றால் முன்பே திட்டமிட்டிருந்தால் தான் குண்டு போடுவான். போற வாற வழியில் "எந்நேரமும் எவருக்கும்" வஞ்சகமில்லாமல் சுடுவது ஹெலிகாரன்தான். நினைத்தது மாதிரி 'ஹெலிச்சூட்டுச்' சத்தம் கேட்டது, தூரத்தான். கிட்ட வந்தால் கண்ணில் அகப்பட்ட வீட்டுக்கு புகுந்து தலைக்கறுப்பையும் சைக்கிளையும் மறைக்கவேண்டும். '50 கலிபரா?, 60 கலிபரா' ? எதுவாக இருந்தாலும் ஒரு மனிதனைப் பிய்த்தெறியப் போதும். சிலவேளை ஜாம்பழப் போத்தலில் கைக்குண்டைப் நுளைத்து, அதைச் சும்மா மேலேயிருந்து போட்டுவிடுவாங்கள். அப்படி ஒன்று விழுந்துதான் எங்கள் கணக்கு வாத்தியார் ஒருவர் இறந்து போனார்.

மீண்டும் இருட்டு. இருட்டு என்றால் இரவு மாதிரி இருட்டு. எதிரில் சுகந்தி வந்திருந்தாலே மட்டுக்கட்டியிருக்க மாட்டேன். அவ்வளவு இருட்டு. மழை எந்நேரமும் பெய்யலாம். அல்லது ரூபவாஹினியில் சொல்வதுமாதிரி 'மழை பெய்யக்கூடும்' . அதுக்குமுன் பாணோடு வீடு போகவேண்டும். இரண்டரை இறாத்தல் பாண் வாங்கவேண்டும். அதில் ஒரு இறாத்தல் "அச்சுப்" பாண், மிகுதி "ரோஸ்" பாண். 'ரோஸ்" பாணின் கரை சைக்கிளை ஓடி ஓடித் தின்ன நன்றாக இருக்கும். பாணுக்கு கோழிக்கறி நல்ல பொருத்தம்-அதுவும் மழை நாட்களில். இல்லாவிட்டால் போனாப் போகுது என்று தேங்காய்ச் சம்பலோடு சாப்பிடலாம், அதுவும் நல்லாத்தான் இருக்கும். மழைக்கு இடித்த அரிசிமாப் புட்டும் நல்லாகத்தான் இருக்கும். வெளியில் மழை பெய்ய , வீட்டு விறாந்தையில் குந்தியிருந்து, புட்டை தேங்காய்ச் சம்பலோடு... காமுகன் என்பவன் எந்த நேரமும் பொம்பிளையைப் பற்றி யோசிப்பானாம், நான் மழை வந்தால் சாப்பாட்டைப் பற்றி யோசிக்கத் தொடங்கிவிடுகிறேன்.

**************************

பின்னேரம் ஆகியும் இருட்டு விலகவில்லை. இனி வெளிச்சம் நாளை காலை வந்தால்தான் உண்டு. வயல் வெளியில் நடுங்கிக் கொண்டு நடந்தேன். சுருக்கிய குடை கையில். குளிர் காற்றுக் காதில் வீசியது. வயல் கட்டில் 'பலன்ஸ்' பண்ணி நடக்க நாரியை நெளித்து இடைக்கிடை ஒரு சின்ன ஓட்டம் ஓட வேண்டியிருந்தது. எதிரில் சின்ராசு அண்ணை "தண்ணீஈஈ கருக்கையிலே அங்கே தவளை சத்தம் கேட்டீஈஈருச்சு..." என்று பாடிக்கொண்டு வந்தார். என்னைக் கண்டதும் பாட்டை நிறுத்தி , "தம்பி வளலாய்க் குளத்துக்க முதலை வந்துட்டுதாம், பாத்துப் போ" என்றார். இந்த முதலைகள் எப்படி வருகின்றனவோ தெரியாது. மழைக்காலத்தில் மட்டும்தான் யாராவது காண்பார்கள். முதலை என்றவுடனே ஆளை விழுங்கிவிடுமென்றுதான் யோசனை ஓடும். ஆருக்காவது ஒரு முதலைக்கடி தன்னும் விழுந்தது மாதிரி ஊரில் அறியவில்லை. ஆனால் 'வழிதவறி' ஒரு தோட்டக் கிணற்றிற்குள் விழுந்துவிட்ட ஒரு குட்டி முதலையை அடி அடி என்று அடித்துப் பின்னும் அது சாகாததால் அதன் வாய்க்குள் இறைப்பு மிசின் பைப்'பைச் செருகி தண்ணீர் பம்ப் பண்ணிக் கொன்றார்கள்.அது பழங்கதை.செத்த முதலையை நானும் போய்ப் பார்த்திருந்தேன். முதலைப் பயம் இருந்தாலும் தலை முழுக்க அடிகாயங்களுடன் செத்திருந்த குட்டி முதலையைப் பார்க்கப் பாவமாகத்தான் இருந்தது.

புத்த மதக் கொள்கைப்படி ஈ , எறும்பைக் கூடக் கொல்லக் கூடாதாமே?


------------

நன்றிகள்:
(1) புகைப்படம்: சுகேசன் கேதீஸ்வரன்

Friday, November 18, 2011

ஐந்து வெள்ளி யாசிப்பவன்

நல்ல வெயில் எறித்த சனிக்கிழமை காலை நேரம். லிஃப்டில் இருந்து இறங்கிக் கீழே வர, வழக்கம்போல் அந்த நிலமட்டத்தில் இருந்த சீமெந்துக் கதிரை மேசைகளில் சீனக் கிழவர்கள் கடதாசி விளையாடிக் கொண்டிருந்தார்கள். இரண்டு மலேக் கிழவர்கள் பிளாஸ்ரிக் பையில் இருந்த 'ரெக் எவே' தேனீரை ஸ்ரோ (straw) வைத்து உறிஞ்சிக் கொண்டிருந்தார்கள். இப்பதான் அரை றாத்தல் பாணை நேற்று இரவு தின்றும் மிஞ்சின கோழிக்கறியுடன் கலந்து அடித்தது, என்றாலும் நிறையற் ரின் பாலும் கடும் தேயிலைச் சாயமும் கலந்து 75 சென்ற் இற்கு விற்கும் பிளாஸ்ரிக் பை தேனீரைக் குடிக்கவேணும்போல் இருந்தது.

இப்பதான் அவனைப் பார்த்தேன். இந்திய அல்லது இலங்கையனாக இருக்கவேண்டும் எனக்கு மிகக் கிட்ட நின்றான். என்னை விடச் சற்று உயரம். கொஞ்சம் மெலிந்த உடல்வாகு. நாலைந்து நாட்களாகச் சவரம் பண்ணியிருக்க மாட்டான். போட்டிருந்த உடுப்பைப் பார்த்தால் கஷ்டப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்தவன்போல் இல்லை. கண்கள் மட்டும் ஒரு அடிபட்ட விலங்கின் கண்ளைப் போல பரிதாபமாக இருந்தன. மொத்தத்தில் விசிற் விசாவில் வந்து, வேலை தேடிக் களைத்து நாளைக்குத் தோல்வியுடன் நாட்டுக்குப் திரும்பிப் போகும் இஞ்சினியர் மாதிரி இருந்தான். ஒன்றும் பேசாமல் மிகக் கிட்ட நின்று என்னப் பார்த்துக் கொண்டு நிற்பது கொஞ்சம் அசௌகரியமாக இருந்தது.

"நீங்கள் இலங்கையே?" அசௌகரியத்தை உடைக்க முயன்றேன்.
"இல்லை, நான் சிங்கப்பூரிலதான் பிறந்தது," பதில் உடனே வந்தது.
"இண்டைக்கு வேலை இல்லைப் போல?"
"இல்லை அண்ணே, வேலை ஆரும் தர மாட்டேங்கிராங்க."
"ஏன்?" கேட்டிருக்கக் கூடாது, கேட்டுவிட்டேன். சிங்கப்பூரில் முன்னாள் சிறைக் கைதிகளுக்கும், முன்னாள்- இன்னாள் போதைப் பொருள் அடிமைகளுக்கும் வேலை கிடைப்பது கஷ்டம்.

இப்போது சங்கடப் பட்டான். கொஞ்சம் தயங்கி பிறகு சொல்லத் தொடங்கினான். "எனக்கு முந்திக் கொஞ்சம் 'மனநிலை' குழம்பி இருந்திச்சு, இப்ப சிகிச்சை எல்லாம் எடுத்துச் சரியா வந்திட்டுது. ஆனா எல்லாரும் என்னை "லூசு" எண்டுதான் நினைக்கிறாங்கள்.". இப்போது நான் இடத்தை விட்டு நழுவ முயற்சித்தேன், என்றாலும் சட்டென்று எப்படி இடத்தைக் காலி பண்ணுவது? ஏற்கெனவே நான் அரை லூசுகளுடன் சிநேகிதம் வைத்திருப்பதாக மனைவி சொல்லிக்கொள்வாள். இதிலே இது வேறு. சுற்றவர நின்ற எல்லோரும் என்னையே பார்ப்பதுமாதிரி ஒரு உணர்வு.

"அண்ணே, ஒரு அஞ்சு வெள்ளிக் காசு தருவியளா? வீட்டில சாப்பாடு சரியாத் கொடுக்கிறாங்கள் இல்லை"

"அஞ்சு வெள்ளி இப்ப இல்ல", முகத்தைக் கடுகடுப்பாக வைத்துக் கொண்டு வேகமாக நடக்கத் தொடங்கினேன். அவன் அடுத்த இழித்த வாயைத் தேடத் தொடங்கினான்.

****
பிறகு இவனைப் பல இடங்களிற் காணக் கிடைத்தது. அநேகமாக இந்திய, இலங்கை உருவமுள்ள ஆட்களுடன் கதைத்துக் கொண்டு நிற்பதைக் காணக்கிடைத்தது. வேறு என்ன? "வீட்டில சாப்பாடு போடுறாங்கள் இல்லை, ஐந்து வெள்ளி தருவியளே?" என்று கேட்பானாக்கும். இப்போது எனக்கும் அவனில் பரிதாபம் வரத்தொடங்கிவிட்டது. ஒவ்வொரு முறை காணும்போதும் இன்னும் மெலிந்தமாதிரி இருந்தான், தாடிமட்டும் கூடிக்கொண்டு போனது ; உடையும் முந்தி மாதிரி இல்லை. அழுக்காகிக் கொண்டே போனது. கண்ட கண்ட எல்லாரிடமும் ஐந்து வெள்ளி கேட்பவன் என்னிடம் மட்டும் அதற்குப் பிறகுகேட்கவில்லை. நல்ல ஞாபகசக்தி இருக்கவேண்டும். இவனிடம் காசு பெயராது என்று இன்னும் மறக்கவில்லை.


*****
அரசகேசரி சிவன் கோவில் அப்போது வுட்லண்ஸ் வீதியில், மலேசிய எல்லைக்குக் கிட்ட இருந்தது. இப்போது கோவில் இடம் மாறியிருக்கவேண்டும். சிங்கப்பூரின் பரபரப்பான மற்றக் கோவில்கள் மாதிரியில்லாமல் அமைதியாக இருக்கும். கோவிலோடு ஒரு குளம், குளத்தில் சில ஆமைகள், மீன்கள், அலம்பல் பேர்வழியான கோவிற் கணக்குப் பிள்ளை என்று ஒரு நல்ல செற்றப். ஐயர் யாழ்ப்பாணம். ஆனால் இடைக்கிடை தமிழ்நாட்டில் இருந்து 'விசிற்றிங்' ஐயர்மாரும் வருவார்கள். கோவிலில் நின்றால் பத்துப் பதினைந்து வருடங்களின் முன் ஊரில் 'திருவிழா இல்லாதபோது' கோவிலில் நின்ற ஞாபகம் வரும். பின்னுக்கு என்னைக் 'கண்காணிக்க' மனைவி மட்டும் மேலதிகம். ஐந்து வெள்ளிக்காரன் இப்போது கோவில் மணியடிக்கும் வேலையைக் கைப்பற்றி விட்டான். பூசை இடையில் எப்பப்ப மணி அடிக்கவேண்டுமோ அப்பப்ப சுமாராகச் சரியாக மணி அடிக்கத் தொடங்குவான். அடிக்கத் தொடங்கினால் நிறுத்த விருப்பம் இல்லை. கணக்குப்பிள்ளை மெதுவாகத் தோளிற் தொட்டு, "நிப்பாட்டும்" என்று சொல்லுமட்டும் நிறுத்தமாட்டான். மணி அடிக்கும் 'பணிக்காகக்' கிடைத்த ஊதியம் என்றமாதிரிக் கோயிற் பிரசாதங்களை உரிமையுடன் தின்னப் பழகிவிட்டான். இப்போதும் என்னிடம் 'அஞ்சு வெள்ளி' கேட்பதில்லை. எப்போதாவது அவன் இன்னுமொரு முறை கேட்டால் ஒரு 'ரண்டோ,அஞ்சோ' வெள்ளியைக் கொடுத்து என் குற்றவுணர்ச்சியை 'அவுட்சோர்ஸ்' பண்ண இருந்த எனக்குப் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது.

கோவிற் பிரசாதம் அவன் வயிற்றை நிரப்பப் போதாதோ அல்லது ஐந்து வெள்ளி யாரிடம் வாங்கினாற்தான் அன்றைய பொழுது நன்றே போகும் என்று யோசித்தானோ தெரியவில்லை. கோவில் வந்த யாரையாவது மடக்கி ஏதோ ஒரு தாள்க் காசு வாங்காமற் போகமாட்டான்.


******
இவனைக் கடைசியாகக் கண்டதுவும் அரசகேசரி சிவன் கோவிலிற்தான். 2003 இன் கடைசிப் பகுதி. அப்போது சிட்னி வரும் முடிவிற்கு வந்தாயிற்று. கொஞ்சம் டல் அடித்தாலும் சிங்கப்பூர் பிடித்துத்தான் இருந்தது. பிளாஸ்க் பையில் விற்கும் ரீ'யும் 'புட் கோ(ர்)ட்'இல் கொலஸ்திறோல் பயமில்லாமல் சாப்பிடும் நாசி கொறெங், பிறகு எண்ணையில் 'குளிக்கவார்த்து' சுடச் சுடக் கிடைக்கும் பரோட்டாக்களும் பழகிவிட்டது. ஊர் ஞாபகம் வந்தால் செரங்கூன் சாலை, சிலோன் பிள்ளையார் கோயில், அல்லது அ.சிவன் கோவில் என்று ஒரு ஞாயிற்றுப் பொழுதைப் போக்காட்டி விட்டால் ஆயிற்று. ஒரு மழையும் பெய்யாத வெயிலும் அடிக்காத வெள்ளிக்கிழமை பின்னேரம் கோவிலின் வெளிப்புறம் றோட்டில் இருந்த பஸ் ஸ்டாண்டில் எனக்குக் கிட்ட இவன். நீண்ட நாட்களாக மனதில் அரித்துக் கொண்டிருந்த ஒன்றைக் கேட்டேன்.

"தம்பி, அப்பா என்ன செய்யிறார்?"
"நீங்கள் புது அப்பாவைக் கேக்கிறியளோ? அல்லது எங்க அப்பாவைக் கேக்கிறியளோ? புது அப்பா வந்து நாலைந்து வருஷங்களாச்சு ஆனா எனக்கு அடிக்கிறதை மட்டும் நிறுத்தல, புதுத் தம்பிமாரும் அடிக்கிறாங்கள், அம்மாவும் அடிக்கிறா, எல்லாரும் அடிக்கிறாங்கள். இப்ப நான் வீட்டில சாப்பாடு கேக்கிறதில்ல. ஏன் அண்ணே எல்லாரும் அடிக்கிறாங்கள்?".

*****

இப்பவும் அவன் வீட்டில் அடி வாங்கிக் கொண்டிருக்கலாம், அல்லது வெளியில் யாரிடமாவது ஐந்து வெள்ளி தரச்சொல்லிக் கெஞ்சிக் கொண்டிருக்கலாம்.

Sunday, October 9, 2011

'அன்னக்கிளி' யும் அது கொண்டுவரும் ஞாபகங்களும்...

Nostalgia என்ற ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழில் சரியாக என்ன சொல் வரும் என்று தெரியவில்லை. 'நனவிடை தோய்தல்' என்பது ஞாகத்திற்கு வருகிறது. ஆனால் மிகச் சரியான அர்த்தமா இல்லை இரண்டும் சற்று வித்தியாசமா என்று குழப்பமாகவுள்ளது. Nostalgia என்பது இறந்த காலத்தை ஒருவித ஏக்கத்துடன் நினைவு படுத்துக் கொள்வது. இதில் முக்கியமானது இறந்த காலத்தில் உள்ள நல்லதுகளை மட்டும் நினைத்துப் பார்ப்போம். உதாரணமாக, "நான் சின்னப்பிள்ளையாக இருக்கேக்கை பாண் ஒரு றாத்தல் 60 சதம்தான்" என்று ஞாகத்தில் உள்ளது. அப்ப ஒரு குடும்பத்தின் சராசரி வருமானம் என்பது சௌகரியமாக மறந்துவிடும்.

வெள்ளெழுத்துக் கண்ணாடி போட்டாப்பிறகும் அரைக்காற்சட்டையுடன் பள்ளிக்கூட ஞாபகம் வருவதும் அதோடு ஒட்டிக்கொண்டு ஒரு மெல்லிய ஏக்கம் வருவதும் தவிர்க்க முடியாமல் வருவதற்கும் காரணம் இந்த 'நனவிடை தோய்தல்' தான். இந்த 'ஏக்கம்' சென்ரிமென்ற்'இற்குக் காரணம் சுமைகளற்ற சிறுவயது மென் ஞாபகங்கள் அவை என்பது மட்டுமல்ல. என்னதான் தலைகீழாக நின்றாலும் அந்தக்காலம் திரும்பி வரப்போவதில்லை என்ற புரிதல்தான் முக்கிய காரணம் என நினைக்கின்றேன்.



சிலவற்றைக் காணும்போது அல்லது கேட்கும்போது இந்தப் பின்னோக்கிப் போகும் நினைவுகள் அதிகம் வரும். கொஞ்சம் பழைய தூசி பிடித்த பெட்டி ஒன்றைத் திறந்தபோது அதுக்குள் இருந்த ஆறாம் வகுப்பு 'றிப்போர்ட்'ஐக் காணும்போது கூடவே வருபவை ஞாபகங்கள். ஆறாம் வகுப்பில்தான் நட்ராஜ் அல்லது ஒக்ஸ்போர்ட் கொம்பாஸ் பெட்டி வாங்கியிருப்போம். விஞ்ஞானம், தமிழ், சமூகக்கல்வி என்று பாடங்கள் தனித்தனியாய்ப் பிரிந்து ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி வாத்தியா(ய)ர் வந்திருப்பார். சிலபேர் அப்பதான் களிப்பேனை பாவிக்கத்தொடங்கியிருப்போம். சின்னப் பள்ளிக்கூடத்திலிருந்து பெரிய பள்ளிக்கூடத்திற்கு வந்த 'மிதப்பு'க் கொஞ்சம் மீந்திருக்கும். 'ஏ/எல் படிக்கிற அண்ணாமார் அக்காமார் படிப்பு விடயமாக (!) டிஸ்கஸ் பண்ணுவதைக் கவனிக்கத் தொடங்கியிருப்போம்.

அன்னக்கிளி படம் வந்தது 1976 இல். முதலாம் வகுப்புக் படித்துக்கொண்டிருந்திருப்பேன். படத்தைப் பார்த்ததில்லை. ஆனால் இந்தப் பாட்டு என் அரைக்காற்சட்டைப் பருவம் முழுவதுமே என்னோடு கூட வந்தது. கோயிற் திருவிழா, சித்திரை வருஷப் பிறப்பு விளையாட்டுப்போட்டி, 'மின்னோளியிற்' கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி, ஐஸ்கிறீம் வான் என்று லவுட் ஸ்பீக்கர் இருக்கும் இடமெல்லாம் இந்தப் பாட்டுத் தப்பாது. இப்ப இந்தப் பாட்டைக் கேட்டால் கூடவே வருபவை ஒரு கலவை ஞாபகங்கள். ஏதோ ஒரு வைரவ கோயிற் திருவிழாவில் சோளப்பொரி கொறித்துக்கொண்டு இரவு எந்த மேளக்குழுக்கள் வருது, கண்ணன் கோஷ்டி பாட்டுப் பாட வருதா? போன்ற 'முக்கியமான' தகவல்களைச் சேர்த்துக் கொண்டிருப்பேன். அல்லது இவற்றைக் கொஞ்சக் கைச்சரக்குச் சேர்த்து இன்னொருவனுக்கு அவித்துக் கொண்டிருப்பேன். கோயிற்திருவிழாக்கள் தொடங்கினால் நாலைந்து மேளக் கோஷ்டிகள் இருக்கும், அநேகமாக இரவில்தான் இருக்கும். எங்களைப் போன்ற அரைக்காற்சட்டைகளுக்கு மேளக்காரர்களுக்குக் கிட்ட, முன்வரிசையில் இருந்து பார்க்கத்தான் ஆசை. மேளத்தைப் பார்ப்பதைவிட மேளக்காரரின் அங்க சேஷ்டைகளைத்தான் பார்த்து ரசிப்போம். இல்லாவிட்டால் 'ஆர் மேளத்தை உடைக்கிறமாதிரிக்' கெட்டித்தனமாக அடிக்கிறான்' என்பதிற்தான் நிறைய 'விவாதங்கள்' வரும்.


கோயில் இரவுத் திருவிழா என்றால் கலர் ரியூப் லைற், 'விட்டு விட்டு' எரியும் பல்ப் அலங்காரம் என்று கோயிலே ஒரு கலாதியாக இருக்கும். மத்தியான நேரத்திற்குப் பின் எந்நேரமும் 'லைற் மிசின்காரன்' வரலாம். எல்லாவற்றையும்விடத் 'திறிலான' விஷயம் லைற்று மிசினைச் 'ஸ்ரார்ட்' பண்ணுவது. 'பொழுதுபட்டுக்' கொஞ்சம் இருட்டத் தொடங்க ஆயத்தமாவார்கள். குட்டி ராட்சதன்மாதிரி இருக்கும் லைற் மிசினிற்குக் கற்பூரம் (சூடம்) காட்டி விட்டுப் பயபக்தியோடு இரண்டு 'பெலமான' ஆசாமிகள் ஒரு "ஸ்ரார்டிங் லீவர்' ஐத், தம் பிடித்துச் சுத்துவார்கள். ஒன்று, இரண்டு, மூன்று,..., என்று சுற்ற, 'டட், .. டட், .. டட், டட் டட்' என்று 'ஸ்ரார்ட்' ஆகும். பிறகு விடிய வெளிச்சம் வரும் மட்டும் இதன் இயந்திரச் சத்தம் எட்டுப் பத்து வீடுகளுக்காவது கேட்கும்.

சிவராத்திரி அநேகம் ஊர்களில் கோவில்களிற்தான் கொண்டாடப்படும் . எங்களூரில் மட்டும் சிவராத்திரிக்குக் கோவில்களில் சனம் மினக்கெடுகிறமாதிரி ஞாபகம் இல்லை அன்றைக்குப் பள்ளிக்கூடத்தில் மேடையில் இரவிரவாக பாட்டு/நாடகம் போடுப்படும். அநேகமாகக் கிட்டத்தட்ட விடியும் மட்டும் ஏதாவது நிகழ்ச்சி இருக்கும். தொடக்கத்தில் 'இப்போது நான்காம் வகுப்பு மாணவி தர்சினி ஒரு பாட்டுப் பாடுவார்" என்று அறிவிக்க, அவா கொஞ்சம் வெட்கப்பட்டுக்கொண்டு "சின்னப் பாப்பா எங்கள் தங்கப் பாப்பா, சொன்ன சொல்லைக் கேட்டால்தான் நல்ல பாப்பா..." என்ற மாதிரி ஒரு பாட்டைப் பாடுவா. இப்படியே போய் ஏ/எல் அண்ணாமார் நாடகம் போட நடு இரவு தாண்டிவிடும். அவர்களின் நாடகம் நிறைப்பேருக்குப் பிடிக்கும். காதல், நகைச்சுவை என்று கலந்து வெளுத்துவாங்குவார்கள்!

நாடகம் கிட்டத்தட்ட இப்படித்தான் இருக்கும். நீளத் தலைமயிர் வளர்த்து, பெல்பொட்டம் போட்ட இளைஞன். கொஞ்சம் 'பாதுகாப்பான' இடைவெளி விட்டு ஒரு சிவந்த இளம்பெண் நிற்பாள். இது முதல் சீன்.

"சுகந்தி, நான் உன்னை எவ்வளவு ஆழமாக நேசிக்கிறேன். உன் இதயம் என்ன கல்லா? நீ ஏன் இப்படி என்னை நோகடிக்கிறாய்?...", சுகந்தி அநேகமாக ஆராவது கொஞ்சம் சிவந்த பெடியன் 'பேமாஷார்ப்' பிளேட்டின் துணையால் மீசையிழந்து, பொய்முடி கட்டி, கஷ்டப்பட்டுச் சேலையும் கட்டி இருப்பான். சுகந்தி கோபப்பட்டுக் கொண்டு, "சேகர், உனக்கு இந்த வயதிற் காதல் தேவையா? உன் அப்பா/அம்மா உன் படிப்புக்கு எவ்வளவு செலவழிக்கிறார்கள் தெரியுமா? அதை யோசித்துப் பார்த்தாயா?" என்று காரைக்காலம்மையார் ரேஞ்'சிற்கு அட்வைஸ் மழை பொழிவாள். இப்படிக் காதல் வசனம்- அட்வைஸ் என்று நாடகம் ஒரு பத்து நிமிசம் ஓடும்.

அடுத்த காட்சி. ஒரு முரட்டு இளைஞன். சாரம் தான் கட்டி இருப்பான்.(அந்தக் காலங்களில் நாடகங்களில் வரும் முரடர்கள் சாரம்தான் கட்டியிருப்பார்கள்). கோபமாகக் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருக்கிறான். இவன்தான் சுகந்தியின் அண்ணா என்று இவ்வளவுக்குள் புரிந்திருக்கும்...

மிச்ச நாடகம் எப்படிப் போகும் என்று ஊகிக்க முடியாவிட்டால் நான் எழுதப்போகும் "காதல் என்பது கானல் நீரா?" மேடை நாடகத்திற்காகக் காத்திருக்கவும்.

எங்கள் வகுப்புப் பெடியளும் ஒருதரம் நாடகமொன்று போட்டார்கள். அது ஒரு 'ப.ய.ங்.க.ர.த் திகில் துப்பறியும் நாடகம்'. அப்படித்தான் நிகழ்ச்சி தொடங்கமுதல் அறிவிப்பாளர் அடிக்கடி ஞாபகமூட்டினார். கதை/வசனம்/நெறியாள்கை/நடிப்பு எல்லாம் வகுப்பு 7 பி மாணவர்கள். நேரம் கிடைக்கும்போது அதைப்பற்றி எழுதுகிறேன்.



--------------------------------------------------------------------------------------------
மிக முக்கியம்: பெயர்கள் யாவும் கற்பனையே.


பாண் - ப்ரெட் (தமிழ்நாடு)
லைற்று மிசின் -a diesel generator fixed permanently onto the body of a small lorry/truck
பொழுதுபட்ட நேரம் - சாயுங்காலம் (தமிழ்நாடு)
சாரம் - சாரம் (இலங்கை, தமிழ்நாட்டில் சில பாகங்கள் ( உ+ம் திருநெல்வேலி), லுங்கி/கைலி (சென்னை)
ஏ/எல்- A/L = Advanced Level, கிட்டத்தட்ட (இந்தியாவில்) ப்ளஸ் 2 மாதிரி

நன்றிகள்:
(1) புகைப்படம்: www.idaikkadu.com

Sunday, October 2, 2011

முருகா நீ ஏன் இப்படிக்...

இவங்கள் கொஞ்ச நாட்களாக ஓவர் ஆட்டம் போடுறாங்கள். "நான் ரண்டு வச்சிருக்கிறன்", என்றான் விஜயன். "மூண்டு என்னட்டை" என்றான் அச்சுவேலி ரமணன். "நான் எப்படியும் இந்த சனிக்கிழமை ஒண்டு வாங்கிப்போடுவன்" என்கிறான் விக்கி. ஐந்தாம் வகுப்பில் இருந்து ஆறாம் வகுப்பிற்கு வந்தால் புதுக் கொம்பாஸ் பெட்டி, கொப்பி, இலவசப் புத்தகங்கள் என்று போக இதுவும் சேர்ந்தாயிற்று. வீட்டிலே கேட்கக் கொஞ்சம் வெட்கம். மெதுவாக அம்மாவை அப்பாவிடம் காசு வாங்கச் சொன்னேன். அச்சுவேலியில்தான் இது விற்கும். "இதெல்லாம் தேவையில்லாத வேலை, கொம்மாவைக் கேட்டாத் தச்சுத் தருவா" என்று அப்பா சொல்லிப்போட்டார். சட்டை தைத்து மிஞ்சிப் போன சீததைத் துணியில் "சஸ்பென்ரர்" என்ற பெயரில் ஒன்று தைக்கப்பட்டு வந்தது. கதவைப் பூட்டிப்போட்டு அறைக்குள் ஒளிச்சு நின்று போட்டுப் பார்த்தேன். அழுகை அழுகையாக வந்தது. வலது பக்கக் காலில் இடுப்புக்குக் கிட்ட இரண்டு இடங்களில் முடிச்சுப் போட்டுக் கட்டவேண்டும். பழனி முருகன்தான் அப்ப ஞாபத்திற்கு வந்தார். இதோட ஊருக்கு வடக்குப் புறம் இருந்த அகலக் கிணறுகளுக்கு நீந்தப் பழகப் போகவேண்டும். நீந்தப் போறதென்றால் "பென்ரர்", "மினிப் பென்ரர்" என்ற பெயர்களில் அச்சுவேலிற் ரவுணிலே வாங்கின ஒன்றைப் போட்டால்தான் ஒரு 'ஸ்டாண்டட்". இதிலேயும் இந்த "மினிப்பென்ரர்" கொஞ்சம் எழுப்பம். பெயரரில்தான் "மினி" இருக்கே தவிர அது ஆக மினி அல்ல. இரண்டு 'கால்'வைத்திருக்கும். காசு/பணம் பத்திரமாக வைக்க ஒரு சின்ன zip வைத்து ஒரு பொக்கற்றும் இருக்கும்.

ஒரு மாதிரி அழுது அடம் பிடிச்சு 20 ரூபா வீட்டில் வாங்கியாயிற்று. இப்ப அடுத்த கட்டம். ஒரு சனிக்கிழமை காலை சைக்கிளில் விக்கியுடன் டபுள்ஸ்ஸில் அச்சுவேலிற் ரவுண் வந்தாயிற்று. "இண்டைக்கு எப்படியும் வாங்கிப் போடோணும்" என்று திட்டம். 'பெரிய' பஸ் ஸ்ராண்ட் இற்கு எதிரில் இருந்தது அந்தக் கடை. அலுமினியச் சட்டி, பிளாஸ்டிக் வாளிகள், ரெடிமேட் சேட்டுக்கள், ஸ்கேர்ட்டுக்கள், பிளவுஸ்கள், தேங்காய்த் திருவலை, பனடோல் எல்லாம் கிடைக்கும். அதோடு அங்கே பென்ரரும் மினிப்பென்ரரும் வாங்கலாம். ஒரு சின்னப் பிரச்சினை. கடையில் ஒரு பெண்பிள்ளை வேலை பார்த்தது. வயது இருபது, இருபத்திரண்டு இருக்கலாம். எங்கள் வயதைச் சொன்னால் இத்தனை வயதிலே இதை வாங்க வெட்கமே என்று சிரிப்பீர்கள். ஆனால் எங்கள் வயதோடு பார்த்தால் அவள் பெரிய பெண். ஆம்பிளைப் பிள்ளைகளின்ரை பிரச்சினை ஆம்பிளைப் பிள்ளைகளுக்குத் தானே விளங்கும்? அவளட்டை போய் "அக்கா இன்ன சைஸ் பென்ரர் எடுங்கோ" என்று எப்படிக் கேட்பது? நானும் விக்கியும் இரண்டு மூன்றுதரம் பக்கத்துக் கடையில் சைக்கிளை ஸ்ராண்ட் போட்டு நிற்பாட்டிவிட்டு 'தற்செயலாக' கடைக்குள் எட்டிப் பார்த்தோம். ஒவ்வொரு முறையும் கடையில் அவள் நின்றாள். அசோகனின் சலூனிலே ஓசிப் பேப்பர் பார்த்துவிட்டு, இன்னொரு கடைசி முயற்சி. இந்தமுறை அவள் இல்லை.

நெஞ்சை நிமித்திக் கொண்டு கடைக்குள் உள்ளிட்டோம். கடை முதலாளி 'ரீ' யை உறிஞ்சிக் கொண்டிருந்தார்.

"தம்பிமார் கொஞ்சம் இருங்கோ, இந்தற் ரீ' யைக் குடிச்சிட்டு வாறான்" , மனிசன் சாவகாசமாகக் ரீ' யைக் குடிக்கத் தொடங்கினார்.

வாழ்க்கையில் தேவையில்லாத நேரங்களில் தேவையில்லாத விஷயங்கள் நடக்கும். அதுமாதிரி அப்பதான் அவள் எங்கிருந்தோ திடீரென்று வந்தாள். "பிள்ளை, இந்தப் பெடியளுக்கு என்ன வேணும்" எண்டு கேட்டுக் குடு", முதலாளி அக்கறையாகச் சொன்னார்.

நான் விக்கியைப் பார்த்தேன். அவன் இப்ப தேங்காய்த் திருவலை ஒன்றைத் தூக்கி மேல், கீழ், இடம், வலம் என்று மும்முரமாக ஆராய்ந்து கொண்டிருந்தான். விபுலானந்த அடிகள் யாழ்'ஐப் பற்றி ஆராய்ச்சி செய்து ஒரு புத்தகம் எழுதினாராம். விட்டால் இவன் தேங்காய்த் திருவலை பற்றி நூறு பக்கத்தில் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினாலும் எழுதியிருப்பான். அவ்வளவு மும்முரம்.

"தம்பி என்ன வேணும்" அவள் கேட்டாள்.

"ம்ம்ம்ம் வந்து....... அந்தக் கண்ணாடிப் பெட்டிக்குள்ள இருக்கிற பவுடர் பேணி என்ன விலை?" என்றேன் அசடு வழிய.

**************************************************

யோசித்துப் பார்த்தால் தாத்தாமார் காலத்தில் இந்தமாதிரிப் பிரச்சினைகள் இருந்திருக்காது. வேட்டியை ஒடுக்கமாக நீளமாகக் கிழித்தால் கோவணம் ரெடி. இடுப்பில் அறுணாக் கொடி கட்டாயம் தேவைப்படும்தான். ஆனால் கடைக்கெல்லாம் போய் மினக்கெடத் தேவையில்லை. செலவும் இல்லை. எனது இரண்டு தாத்தாமாரும் கனக்க விஷயங்களில் வித்தியாசம். ஒற்றுமையான ஒன்று உண்டென்றால், இந்தக் குளிப்பு விடயத்தில்தான். கௌபீனத்துடன் கிணத்தடிக்கு வந்தால் 45 நிமிடம் ஆகாமல் குளிப்பு முடியாது. 15- 20வது நிமிடத்தில் கிணத்தடியில் நிக்கிற கமுக மரம் அல்லது ஒல்லித் தென்னையில் முதுகு தேய்ப்பார்கள். "ஓடிப் போய் சமையல் முடிஞ்சுதோ எண்டு பாத்திட்டு வா" என்றால் குளியல் முடியப் போகுது என்று அர்த்தம். ஆச்சிமாரும் ஒரேமாதிரித்தான் பதில் சொல்லுவார்கள், "கிழவன் ஏன் இப்படிச் சாணக முதலை மாதிரித் தண்ணியில நிக்குது?, கெதியாக சாப்பிட வரச் சொல்லு " என்று.

தாத்தாமார் காலம் போய் அப்பாமார் காலம் வந்ததும் சஸ்பென்ரர் என்று ஓன்று வந்தது. இது கடையிற் கிடைக்காது. வேறு உடுப்புத் தைத்த மிச்சத் துணியில் கெட்டித்தனமாக வெட்டித் தைக்க வேண்டும். இடுப்பில் இரண்டு இடத்தில் முடிச்சுப் போடவேண்டும். முடிச்சுப் போட்டுக் கட்டுவதால், இலாஸ்ரிக் பட்டை இடுப்பில் தேவைப்படாது. இந்தமாதிரி ஒன்றை சிட்னி டிசைனர் ஷொப்'பில் கண்டேன். விலை: ஒன்று எண்பத்தைந்து டொலர்கள் மட்டுமே!.

பிறகு சித்தப்பாமார் காலத்தில் வந்ததுதான் இந்த பென்ரர், மினிப் பென்ரர் என்பன. இவை கடையில் மட்டுமே கிடைக்கும். இப்படித்தான் ஆண்கள் உள்ளாடை வர்த்தக மயமாக்கப்பட்டு சர்வதேசப் பெருமுதலாளிகளின் சுரண்டலுக்கு ஆண்வர்க்கம் உள்ளாவதாக தோழர் செந்தமிழ்ச்செல்வன் சொல்லுகிறார்.

************************************************

பழனி முருகனுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்.




-------------------------------------
தேங்காய்த் திருவலை - தேங்காய்த் துருவு பலகை
கொம்மா - உனது அம்மா
கெதியாக- விரைவாக

Photo: Thanks to

http://ta.wikipedia.org/wiki/பழனி_முருகன்_கோவில்


Monday, August 29, 2011

செல்வச் சந்நிதி கோவில்

சந்நிதி கோவில் என்கின்ற "தொண்டைமானாறு செல்வச் சந்நிதி கோவில்" கொடியேற்றம் இன்றைக்குத்தான் என்று தற்செயலாக அறியவந்தேன். கடைசியாக எப்ப அங்கே போனேன் என்றால் ஞாபகம் வர மறுக்குது. 80களின் நடுவாக இருக்கும்.

"தொண்டைமானாறு வெளிக்கள நிலையம்" என்று ஒன்று ஒருகாலத்தில் இருந்தது. அது பெயருக்கு ஏற்ற மாதிரி தொண்டைமானாற்றில் இருந்தது. கீரிமலை வீதியும், (752 பஸ் ரூட்" ) பருத்தித்துறை வீதியும் சந்திக்கிற 'T-சந்தியில்' கடல் நீரேரிப் பக்கமாக இருந்த பச்சைக் நிறக் கட்டடத் தொகுப்புக்கள்தான் இவை. இந்த வெளிக்கள நிலையத்தில் இருந்துதான் முழு யாழ்ப்பாண பள்ளிக்கூடங்களுக்கும் கணக்கு, விஞ்ஞான ரெஸ்ட் பேப்பர்கள் வரும். கேள்விகள் கொஞ்சம் வயிற்றை கலக்க வைக்கிற மாதிரிக் கஷ்டமாக இருக்கும். இந்தப் பரீட்சைகளில் வரும் வினாக்களில் சிக்குப் பட்டுக் கொண்டிருக்கும்போது கட்டாயம் சந்நிதி முருகன் ஞாபகத்திற்கு வருவார். "முருகா முருகா" என்று ஒரு நேர்த்தி. பிறகு லோக்கல் இத்திக்கலட்டி வைரவரும் நினைவுக்கு வருவார். நமக்கேன் வம்பு என்று அவருக்கும் ஒரு நேர்த்தி. இரண்டு பேரும் மாறி மாறிக் ஹெல்ப் பண்ணினதால புள்ளடிக் கேள்விகளிற் கனக்கச் சரி வந்திருக்குது.

சந்நிதி கோவிற் திருவிழா தொடங்கினால் ஒரே ஒரே பிரச்சினைதான். வீட்டில் முட்டை, மீன், இறைச்சி அவிபட மாட்டாது. போனாப் போகுது என்று ஒரு முட்டைப் பொரியல் கூடக் கிடைக்காது. அப்பவெல்லாம் அச்சுவேலிக் கடைகளிற் மட்டன் ரோல்ஸ் களவாச் சாப்பிடத் தொடங்கவில்லை. சாப்பாடு 'சைவமாகி' இம்சை கொடுத்தாலும், திருவிழாத் தொடங்கினால் மிச்சம் எல்லாம் இனிமைதான். மண்ணிலாக் கொட்டை, சோளப் பொரியல், ஐஸ் கிறீம், அம்மம்மாக் குழல், காவடி, சிங்களவர்களின் பாய்/பெட்டிக் கடை, அலுமினியச் சட்டிக்கடை, "தலையில்லாமல் உடல் பேசுகிறது" வகைச் சுத்துமாத்துக்கள், போறவாற வழியில் வாற குஞ்சு குளுவான்கள், இளம் பெட்டைகள், பெடியங்கள், ஆச்சிமார், தாத்தாமார், 2-3 வயதுக் குழந்தைகளைக் 'குண்டு மாதிரிக் கனக்கிறான்/ள்' என்று பெருமையாச் சொல்லிக்கொண்டு காவிக்கொண்டு போகும் இளம் தம்பதிகள் என்று எல்லாமினிதே.

சின்ன வயதில் அப்பா, அம்மாவோடு சந்நிதி முருகன் போவில் போவேன். அநேகமாக கச்சான் சரையுடன் ஒரே ஒரு ஐஸ்கிறீம் தான் கிடைக்கும். இந்தப் பெரிய உண்மை அந்த்ச் சின்ன வயதிலேயே புரிந்ததால், கொஞ்சக் காலத்திலே தாத்தாவுடன் கோயில் போகத்தொடங்கினேன். தாத்தா வாங்கித்தரும் கடைசி ஐஸ்கிறீம் அவர் பணப்பை காலியாகும்போது. அதுக்கடுத்த ஐஸ்கிறீம் வீட்டில் தந்துவிட்ட காசில் நான் சொந்தமாக வாங்குவது! எனக்கு அடுத்தப் பிறந்த தம்பி கொஞ்சம் விபரமானவன். இந்தப் பெரிய திருவிழாக் கூட்டத்திலும் மற்றத் தாத்தாவைத் தேடிப்பிடிச்சு இன்னுமொரு ஐஸ்கிறீம் வாங்கிவிடுவான். "பக்கத்து இலைக்காரனுக்குக் கிடைத்த பாயாசம்" மாதிரி எனக்கும் இன்னொரு ஐஸ்கிறீம் கிடைக்கும்.

இன்னும் கொஞ்சம் வளர்ந்ததும் வாழ்க்கையில் ஐஸ்கிறீமை விட முக்கியமான சங்கதிகள் இருக்கு என்று புரிந்ததால், நண்பர்களுடன் கோவில் போகத்தொடங்கினேன். நடையிற் போனால் குறுக்கு வழிகளிற்தான் அதிகம் போவோம். வழியில் உள்ள குளம், குட்டை, கிணறு எதையும் எட்டிப் பார்க்காமற் போனதில்லை. அணில் கொந்தி விழுந்த நுங்குகளைக் கல்லிற் குத்தித் தின்னப் பார்த்திருகிறோம். வழியில் உள்ள அம்மன் கோவிலிற் சிதறு தேங்காய்களைப் பொறுக்கித் தின்போம். யாராவது புழுக்கொடியல் கொண்டு வந்த நாட்கள் இன்னும் உத்தமமானவை. புழுக்கொடியலும் தேங்காய்ச் சொட்டும் எச்சில் ஊறப் பண்ணும் ஒரு கொம்பினேசன்.

அம்மன் கோவிலுக்குக் கிட்ட 752 ரூட்டில ஏறிக் கொஞ்சத்தூரம் நடந்தால் புகழ்பெற்ற "காத்தாடி", ரோட்டுக்கரையில் வரும். இது ஏன் இருக்குது என்னத்துக்கு இருக்குது என்று எப்பவும் புரிந்ததில்லை. "கட பட" என்று பெருத்த சத்தத்துடன் சும்மா சுத்திக் கொண்டிருக்கும். முழியைப் பிரட்டி காத்தாடியை மேலே பார்ப்பது அரைக்காற்சட்டை வயதுப் பெடியளுக்குப் பிடிக்கும். பிறகு இன்னும் கொஞ்சம் நடந்தால் கீரிமலை ரோட்டு 752 ரூட்டைச் சந்திக்கும் முச்சந்தி வரும். சந்தியின் இடப்பக்கம் சைக்கிள் 'பார்க்கிங்'. திருவிழாக் காலங்களில் மட்டும் இருக்கும். சும்மா இல்லை, காசு கட்டி டிக்கட் எல்லாம் எடுக்கவேணும்.

நேரே வெளிக்கள நிலையத்தைக் கடந்து ரோட்டுக்கு வலப் பக்கம் இறங்கினால் - அது தற்காலிக பஸ் நிலையம். உடம்புக்கு முன்னும் பின்னும் "வைர மாளிகை" என்று எழுதிய அட்டைகளை ஒரு கவசம் மாதிரிப் போட்டுக் கொண்டு போதாக்குறைக்கு வசனங்களிலும் "உங்கள் நகைத் தேவைகளுக்கு -அணுகுங்கள் வைர மாளிகை" என்று விளம்பரம் செய்யும் பேர்வழியை இன்னும் மறக்கவில்லை. அவர் 2-in-1 மாதிரி பஸ் நம்பர்களையும் அறிவிப்பார். பின்னாட்களில் வந்த திருவிழாக்களில் ஆளைக் காணவில்லை. தொழிலை விட்டு விட்டார் போலும்.

பிறகு உடனே வருவது திருவிழாக்காலங்களில் மட்டும் கட்டப்படும் பாதசாரிகள் பாலம். அங்கை தொடங்கும் "அம்மா தாயே! பிச்சை போடுங்கோ" கோவில் வெளிவீதி வரை தொடரும். "அண்ணை கற்பூரம் வாங்குங்கோ" என்று ஒரு நாலைந்து "கால்நடை" விற்பனையாளர்கள் தங்கள் விற்பனைத் திறனைக் காட்டுவார்கள். வெளி வீதியில் பெரிய கடகங்களில் கச்சான், சோளப்பொரி விற்கும் ஆச்சிகள். பக்கத்தில் கிளிப்பு, சீப்பு, பேன்சீப்பு, கண்ணாடி, பொய்த்தலைமயில், பன்ஸ், அலிஸ்பான்ட் என்று அம்மா, அப்பாமாருடன் வாற இளம் பொம்பிளைப் பிள்ளகளை வரவைக்கும் கடைகள். அங்கே எங்களுக்கு என்ன வேலை? என்ன விக்கிறாங்கள் எண்டு பார்க்கத்தான்.

"செல்வச் சந்நிதி ஆலயமணியின் கோபுரம் 54 அடி உயரமுள்ளது. சந்நிதியானின் ஆலய கண்டாமணிதான் உலகிலுள்ள இந்து ஆலயங்களில் அதிக உயர் கோபுரத்தில் அமைந்ததாக் கூறப்படுகின்றது.இதைச்செய்து கொடுத்தவர் மானிப்பாய் அதிகார் செல்லமுத்துவின் மகனான சோமசுந்தரம். இந்த மணியின் நாதஓசை தொண்டமானாறு சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து மானிப்பாய்க்கு கேட்குமாம்." இப்படி விக்கிபீடியாவில் உள்ள "செல்வச் சந்நிதி" சொல்லுது. "கேட்குமாம்" என்று சொல்லி விக்கிபீடியா எழுத்தாளர் தப்பப் பார்க்கிறார் என்று நினைகின்றேன். ஆனால் மணி நல்ல சத்தமான மணிதான். எங்களூர் வரை நிச்சயமாகக் கேட்கும். "மானிப்பாய்" வரை கேட்கும் என்பது "சொறி கொஞ்சம் ஓவர்" . கற்பனைத்திறன் உள்ளவர்களுக்கு மட்டும் கேட்டிருக்கலாம். மணியை  விட "டங்" என்று ஞாபகத்தில் நிற்பது லவுட் ஸ்பீக்கரில் எப்போதும் கேட்கும் டி. எம். சௌந்தரராஜனின் "ம‌ண்ணானாலும் திருச்செந்தூரில் ம‌ண்ணாவேன்", சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா போன்றன. சௌந்தரராஜனின் இசைத்தட்டு ஓய்வெடுக்கும்போது, " குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் " என்று ரமணியம்மா பாடிக்கொண்டிருப்பா. கடைசிப் பாட்டுத் துள்ளிசை என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.

**********************

கோயிலுக்கு மேற்குப்பக்கமாக ஒரு கேணி. எத்தனைபேர் குளித்தாலும் எல்லாற்றை பாவங்களையும் கழுவும் என்று ஒரு நம்பிக்கை. நிறையப் பேர் முயற்சித்தார்கள். எனக்கும் நண்பர்களுக்கும் வீட்டுக் கிணறுகள் அதே வேலையை இன்னும் "க்ளீனாகச்' செய்யும் என்று நம்பிக்கை என்பதால் வீட்டிலேயே குளித்துவிட்டு வந்துவிடுவோம். அதுதவிர கேணிக்குள் இறங்க மனத்திடம், நோய் எதிர்ப்புசக்தி எல்லாம் உச்சத்தில் இருக்கவேண்டும். கோயிலின் மேற்குப் பக்கம் தவிர்த்து எல்லாப் பக்கங்களும் மரங்கள். (மேற்குப்பக்கம் கோயில் வீதியைத் தாண்டினால் கடல்.)

கோயிலுக்குக் உள்ளே போனால், எல்லாக் கடவுளருக்கும் முன்னால் கற்பூரம் எரிக்கும் இரும்புக் கால்வைத்த பாத்திரம் ஒன்றிருக்கும். வாங்கிய கற்பூரத்தைத் தட்டுத் தட்டாகப் பிரித்து, ஒவ்வொரு கற்பூரப் பாத்திரத்தில் எறிந்தால் ஏதோ வந்த வேலை முடிந்தமாதிரி. உள்வீதியை ஒரு சுத்துச் சுத்தினாற் போதும். ஆனால் சிலவேளை 2, 3 முறையும் சுத்த வேண்டியும் வரலாம். அதுக்குக் காரணம், 2 வது பந்தியில் வந்த நேர்த்திக்கடன் சிலவேளைகள்தான். பிறகு வெளியே வந்தால், வழக்கமான ஐஸ்கிறீம், கச்சான் அது இது என்று வாங்கிக் கொறிப்போம். தும்பு முட்டாஸ், கலர்த் தண்ணி (சர்பத்?), சோக் கட்டி மாதிரி ஆனால், ஒரு குங்குமம்/இளம் சிவப்பு நிறத்தில் இருக்கும் இனிப்பு என்பனவற்றைப் பார்ப்பதோடு சரி. சிலவேளை தும்புமுட்டாஸ் வாங்கியுண்டு வயித்துக்குத்தையும் இலவசமாக வாங்கியதுண்டு.

**********************

1986இல் என்ன மாதம் என்று ஞாபகம் இல்லை. ஆனால் குண்டுச் சத்தங்கள் கேட்ட ஒருநாள். அப்போதுகூடக் குண்டுச் சத்தங்கள் புதினம் இல்லை. வானத்தில் விமானங்கள், ஹெலிகள் வட்டமிட்டன. இம்முறை குண்டுச் சத்தம் கேட்டபக்கம் மாத்திரம் வித்தியாசம். தொண்டமானாற்றறுப் பக்கம் குண்டுச்சத்தங்கள் கேட்டன. (தொண்டைமானாறு ) வெளிக்கள நிலையத்தில் ஆமிக் காம்ப் இருந்தது. அடுத்தநாட்தான் தெரிந்தது, வெள்ளோட்டம் விட்டுச் சில வருடங்களேயான, உலகத்தின் நான்காவது பெரிய சித்திரத் தேர் என்று சொல்லப்பட்ட, இலங்கைத் தமிழரின் ஆர்வம், சேர்ந்துசேர்த்த செல்வம் ஆகியவற்றோடு, இந்தியாவில் இருந்து வந்த சிற்பிகள் வருடங்களாக உழைத்துச் செய்த தேர் எறிகணை வீச்சால் எரிந்துவிட்டது என்று. பிறகு புதுத்தேர் செய்யப்பட்டதாக்க் கேள்விப்பட்டதோடு சரி. போகக்கிடைக்கவில்லை.

என்னதான் அப்பப்ப மூக்கைப் பொத்த வைத்தாலும், கோவில் வெளிவீதியில் ஏதோ ஒரு மருத மரத்தின் வேரில் குந்தி இருந்து கொண்டு , கச்சானைக் கொறித்துக்கொண்டு வம்பு தும்பு பேசுவதின் இன்பம், ஏதோ ஒரு வேற்று நாட்டின் கடற்கரையோர விடுதியில் வெள்ளைப் பெயின்ற் அடித்த கதிரையில் படுத்துக் கொண்டிருந்து கடலையும் வானையும் வெறிக்கும்போது வருவதில்லை. எனக்கும் எதாவது ஒரு திருவிழா நாளில் முக்கால் காற்சட்டை + பெரிய பூப்போட்ட சட்டையுடன், கூலிங் கிளாசை உச்சந்தலையில் போட்டுக்கொண்டு விலைகூடிய SLR கமராவால் மோசமான போட்டோக்கள் எடுத்து முகநூலிற் போட ஆசை. அடுத்தடுத்த வருடங்களில் அது நடக்க சந்நிதி முருகன் அருள் பாலிப்பாராக.



--------------------

கச்சான், மண்ணிலாக் கொட்டை = வேர்க்கடலை (தமிழ்நாடு)
சரை - பொட்டலம்
கனக்க - நிறைய
கதிரை - நாற்காலி, அல்லது சேரு (தமிழ்நாடு)
சோக் கட்டி- chalk piece

படங்கள் : http://www.thinakaran.lk/2009/09/03/_art.asp?fn=d0909035 இலிருந்து

குறிப்பு: இதை எழுதத் தொடங்கியது, ஓகஸ்ட் 29, 2011. முடித்தது செப்ரம்பர் 3, 2011.

Sunday, July 31, 2011

அழகிய இடைக்காடு


யாழ்ப்பாணற் ரவுணிலிருந்து அச்சுவேலிக்கூடாக பருத்தித்துறைக்கு 752ம் நம்பர் CTB பஸ் ஒரு காலத்தில் ஒடியது. அந்த றூட்டில் அச்சுவேலி ரவுண் தாண்டினால்,அடுத்த முக்கியமான (ஓஹோ அப்படியா?) சந்தி தம்பாலைச் சந்தி. அதுக்கு அடுத்த பெரிய சந்தி தொண்டமானாற்றில். இந்த இரண்டு "பெரிய" சந்திகளுக்குமிடையில் உள்ள றோட்டுக்கு மேற்குபக்கமாக உள்ளது எங்களூர். றோட்டுக்குக் கிழக்குப் பக்கமும் இடைக்காடுதான். ஆனால் கொஞ்ச வீடுகள்தான் உள்ளது. அந்தக் கொஞ்ச வீடுகளைத் தாண்டினால், பத்தைக்காடு. பிறகு தொண்டமானாறு கடல் நீரேரி, பிறகு வல்லை வெளி.

752 பஸ் மட்டும்தான் எங்களூரின் ஒரு எல்லையால் ஒடியது என்றால் மண்ணின் மைந்தர்கள் கோவிப்பார்கள். நான் சின்னப் பிள்ளையாக இருக்கும்போது "வளலாய்" பஸ் என்று இன்னொன்று, அச்சுவேலி -இடைக்காடு - வளலாய் வரைஓடியது. பிறகு நின்றுவிட்டது. 'லோக்கல்' பஸ்ஸில் ஏறாமல், அச்சுவேலி ரவுண் வரை சைக்கிளில் போய் அங்கை பஸ் பிடித்து எங்கென்றாலும் போனால்தான் ஒரு 'மவுசு'. அச்சுவேலி போற வாற வழியிலை நிறையப் பெட்டைகளைப் பார்க்கலாம் என்பது உண்மையில்லை. நான் நல்ல பெடியன். ஊரில் விசாரித்துப் பாருங்கள்.

பஸ் வராத ஊர் என்று சொல்லக்கூடாது. இந்த 752ம் பஸ்ஸில்தான் 'பெல்பொட்டம்' காற்சட்டை போட்ட, கூடைத்தலை அண்ணாமார் ஏறிப் 'பருத்துறை' போய் அப்பம், பருத்துறை வடை எல்லாம் வாங்கிச் சாப்பிடுவது. வீட்டிலை 'பெடியன் ரியூசன் போய்விட்டான்' என்றுதான் நினைத்துக் கொண்டிருப்பார்கள். இந்த அண்ணாமரைப் பற்றிச் சொன்னால் அது நீளமாகப் போய்விடும். அப்ப "நிறம் மாறாத பூக்கள்" என்று நல்ல கலரில் ஒரு படம் வந்தது. அதில் வந்த சுதாகர் மாதிரித்தான் எல்லாரும் பெல்பொட்டம் காற்சட்டை போடுவினம். தலைமயிர் வெட்டும் (வெட்டினால்), படத்தில் வந்த சுதாகர் மாதிரித்தான். சே(ர்)ட் ரவிக்கை மாதிரி இறுக்கமாகத்தான் போடுவினம். கழுத்திலிருந்து முதல் 3, 4 'தெறி'களைப் பூட்டமாட்டினம். இப்ப வந்த படமென்றால் "சுப்பிரமணியபுரம்" படத்திலயும் இந்தமாதிரி அண்ணாமாரைக் காணலாம்.

'அப்பு நீ இளத்தாரியா வந்தாப்பிறகு இந்தக் கழுதைகள் மாதிரிக் 'குப்பை கூட்டுற' காச்சட்டையும் ரவிக்கை மாதிரிச் சேட்டுமா(ய்) இப்படித் திரியக் கூடாது என்ன? பார் இவங்கடை தலையை? காகக்கூடு மாதிரி' என்று அப்பா சொல்லுவார். நான் இளந்தாரியாக வந்த காலத்தில் 'தொள தொள' baggy ஸ்டைல் வந்துவிட்டது. தலைமயிர் வெட்டும் '#இயக்கக்' கவர்ச்சியாலோ என்னவோ, கட்டையாக வெட்டுவது கொஞ்சம் எழுப்பமாக வந்துவிட்டது. தியாகராய பாகவதர் மாதிரி நீளமாக மயிர் வளர்த்தால் பெட்டையள் பார்க்க மாட்டாளவை. அதாவது நாங்கள் இளந்தாரிகளாக இருத்த காலத்தில்.

********************

ஊருக்கு வடக்குப் புறத்தில்தான் சாங்காணி வெளி இருக்கு. பேரில் 'வெளி' இருந்தாலும், ஏறக்குறைய எல்லா இடத்திலயும் பத்தைகள்தான் இருக்கும். கள்ளி, நாகதாளி, பிரண்டை, ஈச்சை, கற்றாளை, பிறகு நிறைய நிறைய முள்ளுப் பத்தைகள். பனை மரஙகளும் நிறைய. இப்ப யோசித்தாலும் முள்ளுக் கீறும்போல் உள்ளது. ஈச்சம்பழ காலத்தில் தாத்தாவோடை போய் ஈச்சங்குலைகளை வெட்டிவந்து உப்புத்தண்ணி தெளித்துப் பழுக்கவைத்து தம்பிமாரோடு புடுங்குப்பட்டு ஈச்சம்பழங்களைச் சாப்பிட்டது இப்ப மாதிரி இருக்கிறது.

சாங்காணி வெளியில்தான் வெட்டுக்குளம் இருக்கிறது. களிமண் வெட்டியெடுத்தபின் வந்த பள்ளத்தில் மழைத்தண்ணீர் தேங்குவதால் வந்த குளமாக இருக்கலாம். ஆனால் அதன் ஒருபுறத்தில் கோடையிலும் தண்ணீர் இருக்கும். எனவே தண்ணீர் ஊற்று ஒன்றாவது உள்ளே இருந்திருக்கலாம். குளத்துக்குள் கொஞ்சம் சேறு மணக்கும். தண்ணியில் நிறையச் சின்ன மீன்களும், கொஞ்சம் பெரிய மீன்களும் தென்படும். விக்கியும் நானும் முழங்காலளவு தண்ணீரில் நின்று கொண்டு கைகளால் மீன் பிடிக்க முயற்சித்திருக்கிறோம். ஒரு மீனைக்கூடப் பிடித்ததில்லை, ஆனால் கொஞ்சம் பெரிய மீன்கள் "நொழுக் நொழுக்" என்று கைகள், கால்களில் தட்டுப்பட ஒருமாதிரிக் கூசும். சின்னக் கொக்குகளும் நாரைகளும், ஆட்காட்டிக் குருவிகளும், வேறு பேர் தெரியாத நீர்ப்பறவைகளும் குளத்திற்கு அருகில் எப்பவும் தென்படும். காடைகளை (காடைக் குருவிகளை) நான் முதலிற் கண்டதும் இங்குதான்.

செல்வச் சந்நிதி கோவில் தொண்டைமானாற்றில் இருந்தாலும், எங்களூரின் ஒரு எல்லையில் இருந்து மிகக் கிட்டத்தான். ஊரில் இருந்து நடையிலோ அல்லது சைக்கிளிலிலோ போவோம். சாங்காணி வெளியின் ஒருபக்கத்தால் போகும் 'சுடலை வீதி' ஊடாக, சுடலையைத் தாண்டி, ஆயிரங்கால் மண்டபத்தடியில் (தார்போட்ட) கீரிமலை வீதியில் ஏறினால் பிறகு கிழக்கே நடந்தால் கொஞ்சத் தூரத்தில் செல்வச் சந்நிதி கோவில். "உங்கடை ஊரிலை தார்போட்ட றோட் இல்லையே" என்று கேட்டால் எனக்குக் கெட்ட கோபம் வரும். ஊருக்குள்ளே தார்போட்ட றோட்டுக்கள் உண்டு. நீங்கள் நம்பத்தான் வேண்டும். சந்நிதி கோவிற் திருவிழா காலத்தில் இந்தச் சுடலை வீதியால் , சுடலைக்குக் கிட்ட ஆட்காட்டிக் குருவி கத்திக்கொண்டிருக்க, இரவுத்திருவிழாவுக்குப் போவது ஒரு 'திறில்' தான். பேய் வந்தாலும் ஆட்காட்டிக் குருவி கத்துமாமே? போதாக்குறைக்கு "முருகேசர் தோட்டத்திற்குத் தண்ணி இறைக்கக் பேயுடன் போன" சரித்திரப் பிரசித்தி பெற்ற கதையை, சுடலைக்குக் கிட்டவைத்துத்தான் தாத்தா எப்பவும் சொல்லுவார். "முருகேசர் பேயுடன் தண்ணி' இறைக்காதபோது, "அவரின் தாத்தா இயக்கச்சிக்கு மாட்டு வண்டிலில் சிமிலி விளக்குக் கட்டிக் கொண்டு போகேக்கை, நடு இரவில் மாடு வெருண்டதாம், அப்ப ஒரு சின்னப் பெட்டை ஒருத்தி வண்டிலுக்குக் குறுக்கே வந்தாளாம், தலையில் வலிக்குது, இந்த ஆணியைக் கழட்டி விடு எண்டு தலையைக் காட்டினாளாம்" என்று கதை போகும். எனக்குப் பேய்ப்பயம் இல்லையென்றாலும்(!), எதுக்கும் இருக்கட்டுமென்று தாத்தாவின் கையை இறுக்கிப் பிடித்துக் கொள்வேன். "நீ வளந்திட்டாய், இப்பவும் பேய்க்குப் பயப்பிடுறியே?" என்று 9 அல்லது 10 வயதான் என்னைத் தாத்தா கேட்பார். இப்படியான தாத்தா, தன் பிற்காலத்தில் தவறுதலாக வீட்டுக் கிணற்றுக்குள் விழுந்து இறந்தபோது நான் அவுஸ்திரேலியாவில். கொழும்பிருந்தே அப்ப யாழ்ப்பாணம் போவது அவ்வளவு சுலபமில்லை. என்றாலும் "நிலமை சுமுகமாயிருந்தால் மட்டும் செத்தவீட்டுக்குப் போயிருப்பியாடா சுயநலமியே" என்று அப்பப்ப என்னை நானே கேட்டுக் கொள்வேன்.


********************

சீமைக் கிளுவை, கிளுவை, பூவரசு, முள்முருக்கு, வாணாரை - இதெல்லாம் வேலி கட்டுவதற்கு மட்டும்தான் என்பது அநேகரின் நம்பிக்கை போல. கிடுகு வேலி, கதியால் வேலி, பனம்மட்டை வேலி என்று எந்த வேலியாயிருந்தாலும் மேலேயுள்ள மரங்கள் கட்டாயம் இருக்கும். வேலிக்கு வேலியுமாகுது, ஆட்டுக்குக் குழையுமாகுது. இந்த வேலிகள் கட்டப்பட்டவிதத்தை வைத்தே, வேலிக்கு மற்றப்புறம் குமர்ப்பெட்டை ஒன்றிருக்கா என்று சுலபமாகச் சொல்லிவிடலாம். வேலி நன்றாக காற்றுக்கூடப் போகமுடியாதளவுக்கு நெருக்கமாக அடைக்கப்பட்டிருந்தால், வேலிக்கு அந்தப் பக்கம் ஒரு குமர்ப்பெட்டையாவது இருக்கும். வேலிக்கு மற்றப்பக்கம் றோட்டில் இளவட்டங்கள் அடிக்கடி நன்கு 'மினுக்கப்பட்ட' சைககிள்களில் திரிவினம். 'இறைப்பு மிசின்'தள்ளவேண்டி வந்தால் மட்டும், இளசு களுக்குக் கொஞ்சம் வெட்கம் வந்துவிடும். வேறை றோட்டால்தான் போவினம்.

ஆனால் இந்த வேலிகள் அப்பப்ப அங்கால இஞ்சாலை கொஞ்சம் 'நகர்ந்து' பெரிய கோர்ட், கேஸ் என்றாய் விட்டதும் நடைபெறும். என்றாலும் யாழ்ப்பாணத்து அப்புக்காத்துமாருக்கு அந்தக் காலத்திலே வருமானம் வேறை எப்படி? சீமந்து மதில் கட்டினவர்களை அந்தக் காலத்து அப்புக்காத்துமாருக்குப் பிடித்திருக்காது. ஆனால் அவையளின்ர வீட்டுக்கு மட்டும் நல்ல காங்கேசன் சீமந்தில் மதில் போட்டுவிடுவார்களாம். வாழ்க அப்புக்காத்துமார்.

குச்சொழுங்கைகள் ஊரின் உயிர்நாடி மாதிரி. வேலை வில்வட்டி இல்லாவிட்டாலும் குச்சொழுங்கைகளில் சைக்கிளிலில் திரிவது எனது பிரியமான பொழுதுபோக்கு. வீமன், அர்ஜுனன், சைமன் என எதோ ஒரு பெயர் வைத்த சொறிநாய் எதாவதொன்று அநேகமாத் தம் அன்பைக்காட்டும். எப்பவும் எல்லாருக்கும் வாலாட்டுவது எங்களுர் சொறி நாய்களின் சிறப்பியல்பு. விதிவிலக்குகளும் இல்லாமல் இல்லை. செல்லத்தம்பி வாத்தியாரில் செல்ல நாய் எல்லாரையும் பார்த்துக் குரைக்கும். கிட்டப்போனால் கடிக்கும். ஆனால் "வாழைக்குலை களவாக வெட்டவந்த பேர்வழியைப் பார்த்து வாலையாட்டியது ஏன்" என்று கேட்கக்கூடாது.

சொல்ல மறந்துபோனேன், மத்தியான் வெயிலில் எதிரில் நடந்தோ அல்லது சைக்கிளிலிலோ, தலையில் ஒரு துண்டைப் போட்டுக்கொண்டு ஒரு பெரிசு வந்தால் கவனம். ஆள் அநேகமாகக் "கோப்பிறேசன்" என்று அறியப்பட்ட கள்ளுக்கடையிலிருந்து வந்துகொண்டிருக்கக் கூடும். அன்னாரின் நடையோ அல்லது சைக்கிளோட்டமோ நேர்கோட்டில் இருக்காது என்று நான் சொல்லாமலே உங்களுக்குப் புரிந்திருக்கும். மத்தியான வெயிலில் கள்ளடித்த பேர்வழிகள் தலையில் ஒரு துண்டைப் போடுவதேன் என்று காரணம் தெரிந்தால் ஈமெயில் அடிக்கவும்.

இப்படிக் குச்சொழுங்கைகளில் அங்குமிங்கும் திரிந்தால், கட்டாயம் ஒரு பனங்காணி சிக்கும். வடலி, இளம்பனை, கிழட்டுப் பனையென்று எல்லாப் பருவத்திலும் பனைகளிருக்கும். பனையுச்சிகளில் கள்ளு முட்டிகளோ அல்லது தூக்கணாங் குருவிக்கூடுகளோ இருக்கும். சிலவேளை அறுந்த பட்டமொன்றும் எதாவதொரு பனையில் சிக்குப்பட்டிருக்கும். இந்தப் பனங்காணிகளில் செண்பகம், தவிட்டுக்குருவி, சிட்டுக்குருவி, புளினி, மைனா என்று கனக்கக் குருவிகளைக் காணலாம்.

********************


பள்ளிக்கூடம் என்றால் உங்களுக்குக் கன ஞாபகங்கள் வரும். எனக்கு உடனே ஞாபகம் வருவது சின்னப் பள்ளிக்கூடத்தில் கிட்டக் கிட்ட நிற்கும் இரண்டு வேப்ப மரங்களும் அதில் செழித்து வளர்ந்திருந்த குருவிச்சையும். இப்பவும் நிற்கலாம் அந்த வேப்ப மரங்கள். ஆருக்குக் கையில் "மசில்" கூட என்று கையை "ட" போல வளைத்து தசையை முறுக்கிப் பார்த்த ஆறாம் வகுப்பு நண்பர் கூட்டம், இப்ப 8 ,10 நாடுகளிற் சிதறிவிட்டோம்.

அழுக்கு ஐஸ்பழ வியாபாரி, 'சீசனுக்கு' மட்டும் பள்ளிக்கூடத்துக்குக் கிட்டக் கடை விரிக்கும் நாவல்பழ ஆச்சி, "போஓஓஓத்தல் பித்த்தளை அலுமினியமிருக்கா" ஏன்று கூவிக்கொண்டு சைக்கிளில் வரும் வியாபாரி, "ஆஆடு விக்க இருக்கா ஆஆஆடு" என்று கூவும் இன்னோரு சைக்கிள் வியாபாரி. எல்லாரும் நம்மூரின் ஒரு பகுதியே என் உணர்கின்றேன்.

அவசர அவசரமாகக் காலையில் தோட்டத்துக்கு 'மருந்து' அடித்துவிட்டு அல்லது தண்ணீர் இறைத்துவிட்டு குளித்துமுடித்து நேரத்திற்கு பள்ளிக்கூடம் வந்துவிடும் வாத்திமார்கள், வாத்தியார் வயித்துக்குத்து வந்து "இண்டைக்கு 'சிக் லீவு' எடுக்கவேணும்" என்று நேர்த்திக்கடன் வைத்த என் வகுப்புத் தோழர்கள் எல்லாம் நம்மூரே.



------------

முள்முருக்கு - கல்யாண முருங்கை
#இயக்கம் -விடுதலை இயக்கம் /இயக்கங்கள்
பத்தைக்காடு - பற்றைக்காடு
தெறி - பொத்தான்/பித்தான் - button
அப்புக்காத்து - வக்கீல், வழக்குரைஞர்
குச்சொழுங்கை = குச்சு+ஒழுங்கை - சிறிய ஒழுங்கை/பாதை

நன்றிகள்:
(1) புகைப்படங்கள்: சுகேசன் கேதீஸ்வரன்


திருத்தங்கள்
(1) 17/08/2011. பஸ் நம்பரை 751 இலிருந்து 752 இற்கு மாற்றிவிட்டேன். எங்கள் ஊரின் கிழக்குப் பக்கத்தால் ஓடியது 751ம் இலக்க பஸ் என்று என் ஞாபகத்தில் தவறாகப் பதிந்து விட்டது. தவற்றைச் சுட்டிக் காட்டிய எல்லோருக்கும் நன்றிகள்.

Tuesday, June 28, 2011

என் மீன்பிடித் தொழில்...

70 களின் இறுதி அல்லது 80 களின் ஆரம்பம். நாலாவதோ அல்லது ஐந்தாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். சரியாக ஞாபகமில்லை.

ஒரு சனிக்கிழமை காலைச் சாப்பாட்டு நேரம். நான் ஏழாவது தோசையைப் பிய்த்து தேங்காய்ச் சம்பலுடம் கலந்து வயிற்றிற்குள் தள்ளிக் கொண்டிருக்ககொண்டிருக்க, விக்கி வந்தான். விக்கி என் வகுப்புத் தோழன் மற்றும் நண்பன். "அன்பின் நணபண் கண்ணனுக்கு" என்று எழுதப் பழகத் தொடங்கிய காலத்திலேயே தீபாவளிக் கார்ட் எல்லாம் போட்டிருக்கிறான். என்னை விட இரண்டே மாதங்கள் மூத்தவன். அந்தக் குற்றத்திற்காக "விக்கி அண்ணா" என்றெல்லாம் ஒரு காலத்தில் அவனைக் கூப்பிட்டு இம்சைப் படுத்தியுள்ளேன்.

விக்கி குழம்பிப் போய்விட்டான். கைகளைப் பின்னுக்குக் கட்டிக் கொண்டு பெரிய மனிசன் மாதிரி குறுக்கும் நெடுக்குமாக நடந்தான். கனநேரம் ஒன்றும் பேசவில்லை. முதல்நாள் இரண்டு பேரும் போட்ட பெரும் திட்டத்தை நான் மறந்துவிட்டேனோ என்று பயந்திருப்பான். திட்டத்தின்படி நான் காலமைச் சாப்பாட்டை முடித்தவுடன் இரண்டு சட்டை ஊசிகள், நீளமான நைலோன் நூல் (ஒரு சாண் நீளமான பூவரசங் கட்டையில் வடிவாகச் சுற்றியது), ஒரு பழைய லக்ஸ்பிறே மாப் பேணி என்பவற்றுடன் அவன் வீட்டுக்குப் போயிருக்கவென்டும். எதிர்பாரதவிதமாகத் தோசை இடையிற் குறுக்கிட்டு விட்டது. காலைமைச் சாப்பாடு தோசை என்றால் எப்படியும் பிந்திவிடும்.

திட்டங்கள் இரகசியத் திட்டங்கள் என்பதால் அம்மா, அப்பா, சகோதரங்கள் இருக்கும்போது கதைக்கமுடியாது. விக்கியின் நிலைமை தர்மசங்கடம். என்னை முழிசிப் பார்த்தான். நானோ தோசையுடன் பிஸி. இலேசாகப் பல்லை நறநறத்த மாதிரியிருந்தது.

"மறந்து போனியே?" என்று மெல்லமாகக் கேட்டான்.

"நீ போ, நான் வாறன்," அதைவிட மெல்லமாகச் சொன்னேன்.

விக்கி வீட்டில் ஒரு பெரிய "பிலிப்ஸ்" ரேடியோ இருந்தது. அது "செந்தூரப் பூவே, செந்தூரப் பூவே, ஜில்லென்ற காற்றே.."" என்று உரத்துப் பாடிக் கொண்டிருக்க வீட்டினுள் நுழைந்தேன்.அவனின் பங்குக்கு இரண்டு சட்டை ஊசிகள், நீளமான நைலோன் நூல் (ஒரு சாண் நீளமான பூவரசங் கட்டையில் வடிவாகச் சுற்றியது), ஒரு பழைய லக்ஸ்பிறே மாப் பேணி என்பன ஆயத்தமாக இருந்தன.

"எடே ரெடியே" என்று மறந்துபோய் உரத்துக் கேட்டு விட்டேன். பதிலாக ஒரு முறைப்புத்தான் கிடைத்தது. பிறகு, "ஸ்ஸ்ஸ்...மெல்லமாகச் சொல்லக் கூடாதெ? இப்ப எதுக்கு ரெடி எண்டு கேள்வி வரப்போது" என்றான். நல்ல வேளை, தோசைக் கடை மாதிரி அலறிக் கொண்டிருந்த ரேடியோவின் புண்ணியத்தில் யாருக்கும் என் குரல் கேட்டிருக்கவில்லை போல.

விக்கிக்கு நான்கு அண்ணன்மாரும் மூன்று அக்காமாரும். கடைக்குட்டி என்பதால் எல்லோரினதும் அன்பு மழையில் நனைந்து கொண்டிருப்பான்.
அன்றைய அன்பு மழை மூத்த அண்ணர் வடிவத்தில் வந்தது.

"டேய் விக்கி, இஞ்சை வா". வந்தான்.

"குளிச்சியே காலமை?"
"இல்லை"
"நேற்று?"
"இல்லை"
"முந்த நாள்?"
"ஓ குளிச்சேனே", வலு உசாராகச் சொன்னான்.

"ரண்டு நாளாக் குளிக்கல்லை, வெளிக்கிட்டுட்டாய் சுத்த; அங்கை பார் கண்ணனை ! காலங்காத்தாத்லை குளிச்சுப் பவுடர் பூசி வந்திருக்கிறான். ஓடு கிணத்தடிக்கு" என்று விரட்டினார். இதிலை "பவுடர் பூசி" என்பது மெய். நான் கடைசியாகக் குளித்தது அதுக்கு முந்திய ஞாயிறு என்பதைத் 'தன்னடக்கம்' காரணமாக வெளிவிடவில்லை.

இவன் குளித்து முடிந்துவர இன்னும் அரை மணித்தியாலமாவது எடுக்கும். திட்டம் இரண்டாவது முறையாகப் பிந்திப் போயிற்று.

******************

ஒருமாதிரி எல்லாருக்கும் போக்குக் காட்டி வெளிக்கிட்டாயிற்று. பள்ளிக்கூடம் தாண்டி நடந்துகொண்டிருக்க ஓணான் முருகேசர் எதிரில் வந்தார். (எங்கள் ஊரில் இப்படி எல்லாருக்கும் ஒரு "மூன்றாவது" பெயர் உண்டு. அதைப்பற்றிப் பிறகு பார்ப்போம்.)

"தம்பியவை, எங்கை கையிலே பேணியோடை?" தலையை மேலும் கீழும் ஆட்டியபடி கேட்டார்.

என்ன விடை சொன்னாலும் மனிசன் வீட்டை போய் அப்பாவைச் சந்தித்து வத்தி வைக்காமல் ஒரு வாய் கள்ளுக் கூடக் குடிக்கமாட்டுது.

"அப்பு, பள்ளிக்கூடத்தில கைவேலைப் பாடத்திற்கு மாப் பேணி சேர்க்கச் சொன்னவை. அதுதான் சேர்க்கிறம். உங்கடை வீட்டிலயும் ஏதாவது ஒரு லக்ஸ்பிறேப் பேணி சும்மா இருந்தால், தாறீயோணை?" வாயில் வந்த பொய்யை எடுத்து விட்டேன்.

"தம்பியவையள் நான் அவசரமாகப் போகோணும், பிறகு பாப்பம் என்ன?," ஆசாமி நழுவினார்.


*************************

முனியப்பர் கோயிற் குளம் 'அவ்வளவு' ஆழமானதல்ல. அதன் தெற்குப் பக்கம் தண்ணீர் ஆழம் குறைவு. வடக்குப் பக்கம் ஒரு வளர்ந்த ஆளை மூழ்கடிக்கக் கூடியளவு ஆழம் இருக்கும். ஒரு பனையளவு ஆழம் இருக்குமென்று எங்களோடு படித்த "அளப்பு மன்னன்" குஞ்சன் சொல்லுவான். நல்ல சுத்தமான தண்ணீர். பக்கத்திலுள்ள தோட்டங்களுக்கு அதிலிருந்துதான் "இறைப்பு மிசின்" பூட்டித் தணணீர் விடுவார்கள். ஒன்றிரண்டு மாரிகாலங்களில் முதலைகள் வசித்திருந்த குளம் அது என்பது இப்ப அவசியமில்லை. எங்களுக்குத் தேவைப்பட்டது, குளத்திலிருந்த மீன்கள். சின்னதாக, பெரிதாக, கறுப்பாக, வெள்ளியாக என்று நிறைய மீன்கள். சின்ன மீன்கள் அனேகமாகக் கூட்டமாக நீந்தும். ஒரு சின்னக் கல்லெடுத்து எறிந்தால், ஒரு கணத்திற் சிதறி ஓடி, மீண்டும் கூட்டமாகச் சேர்ந்து ஓடும். எங்கள் திட்டம் பெரிய மீன்களைப் பிடிப்பதுதான். பெரிய மீன்கள் குளத்தின் வடக்குப் பக்கத்தில்தான் இருக்கும்.

சட்டை ஊசியை நேராக்கி பிறகு தூண்டில் முள்ளு மாதிரி வளைத்தெடுத்தேன். ஊசியின் காதில் நைலான் நூலை இறுக்கமாக முடிந்தேன். இப்ப தூண்டிலில் எதைக் குத்திக் குளத்துக்குள் விடுவது? அதுக்குத்தான் பாவப்பட்ட மண்புழுக்கள் கிடைத்தன. ஈரமான தண்ணீர் வாய்க்கால்களில் தேடி எட்டுப் பத்து உயிருள்ள மண்புழுக்களைப் பிடித்தோம். முதலாவது மண்புழுவைத் தூண்டிலில் குத்தினேன். இப்ப தூண்டில் ரெடி. தூண்டில் கொளுக்கியைக் குளத்தில் வீசிவிட்டு, நைலான் நூலின் மற்றப் பக்கத்தை பூவரசங் கட்டையுடன் சேர்த்துப் பிடித்த் கொண்டேன்.

தூண்டிலை அங்குமிங்கும் அசைத்து மீன் ஏதாவது மாட்டுப்படுதா என்று முயற்சித்துக் கொண்டிருந்தேன். விக்கியின் லக்ஸ்பிறேப் பேணிக்குள் இதுக்கிடையில் இரண்டு பெரிய மீன்கள். என்னைப் பார்த்து ஒரு நக்கல் சிரிப்பு வேறு அடித்தான். மனதுக்குள் அவன் பிடித்த மீன்களைத் திருப்பிக் குளத்துக்குள் எறிந்தேன்.

ஒருமணித்தியாலம் கழிந்தும் எனக்கு ஒரு மீனும் பிடிபடவில்லை. ஆனால், "ம்ம் கும்" என்று ஒரு செருமல் பின்னுக்குக் கேட்டது. நான் மீன் பிடியில் பிஸி. "மாப்பிளே, மீன் என்ன விலை?" என்று பழகிய குரல். திரும்பிப் பார்த்தால் அப்பா! அடுத்து நடந்தது அநேகமாகக் கார்ட்டூன் படங்களில் மாத்திரம் பார்த்திருப்பீர்கள். அந்தக் கணம் அந்த இடத்திலிருந்து மறைந்து அடுத்த கணம் வீட்டில் நின்றேன். அவ்வளவு வேகமாக எந்த ஓட்டப் போட்டியிலும் ஓடியிருக்கவில்லை. விக்கி பிறகு அப்பாவின் சைக்கிளில் அவன் வீட்டுக்கு வந்ததாக அறிந்தேன்.

சொல்லாமல் கொள்ளாமல், களவாக, ஆளை மூழ்கடிக்கக் கூடிய குளத்தில் மீன் பிடித்ததிற்கு பூவரசங் கம்பு முறிய அடி விழப் போகுது என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் அதுக்குப் பிறகு அப்பா "என் மீன்பிடித தொழிலைப்" பற்றி ஒருநாளும் கதைக்கவில்லை. கொஞ்சம் ஏச்சும் அடியும் தந்து அலுவலை அப்பவே முடித்திருந்தால் இதைவிடப் பரவாயில்லை என்றுதான் இப்பவும் நினைக்கிறேன்!




-------------------
பேணி = a tin can

தேங்காய்ச் சம்பல் - கிட்டத்தட்ட தேங்காய்ச் சட்னி மாதிரி ஒன்று, கொஞ்சம் உலர்வாக இருக்கும்

சட்டை ஊசி = safety pin

நைலோன் - Nylon

பூவரசங் கட்டை/பூவரசங் கம்பு - கிட்டத்தட்ட கட்டைவிரல் தடிப்பில் உள்ள பூவரசங் கிளையை வெட்டி, அதன் தோலைச் சீவி எறிந்துவிட்டு, ஒரு சாண் அளவான துண்டுகளாக்கி அதைக் காயவைத்தால், அவைதான் எங்கள் (பட்டம் விடும் நூலின்) நூல் கட்டைகள். இத்தக் கட்டைகளில் நைலோன் நூலை வடிவாகச் சுற்றி வைத்திருப்போம். ஒரு சில விற்பன்னர்கள் வெட்டிய பூவரசங் கட்டைகளை வெறுமனே வெயிலிற் காயவிடாமல், நெருப்பில் மெதுவாகச் சுட்டு (heat treatement !) அதை வலுவாக்குவார்கள்.