Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Wednesday, July 9, 2014

பிரேசிலாதல்



அரையிறுதி 2014 FIFA உலகக்கிண்ணம். பிரேசில் 1 ஜேர்மனி -7. பிரேசில் ரசிகர்கள் நொந்துவிட்டார்கள். இதன் பாதிப்புக் கனகாலம் இருக்கும். இருக்கட்டும், நான் இதன் பாதிப்புக்கள் தமிழ் கூறும் நல்லுலகில் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன்.


(1) எதிர்காலத் தமிழ்ப் படம்

காட்சி 1: பாத்திரங்கள் ஹீரோ(வேலையில்லாப் பட்டதாரி), அம்மா, அப்பா.

அப்பா வழக்கம்போலக் கத்துகிறார். "தடிமாடு மாதிரி வளர்ந்திருக்கு, மூணு வேளையும் திங்கத்தான் தெரியுது. மிச்ச நேரத்திற்கு ஆத்தங்கரை, குளத்தங்கரையிலை குந்தியிருக்கிறது. போறவாற பொண்ணுங்களைச் சைட் அடிக்கிறது. பத்துப் பைசா உழைக்க வக்கிருக்கா?".

"சும்மா இருங்க, எதுக்கெடுத்தாலும் எம்புள்ளயைக் குத்தம் சொல்லுறது." அம்மா சப்போர்ட்டுக்கு.

"தண்டச்சோறு, இவன் எதுக்குத்தான் லாயக்கு? பிரேசிலுக்குப் புட்பால் விளையாடத்தான் லாயக்கு".

இவ்வளவு நேரமும் எருமைமாட்டுக்கு மேலே ஏதோ பெய்ததுமாதிரிச் சுணைப்பு இல்லாமல் இருந்த ஹீரோ, கடைசி வசனத்தால் மனம் வெறுத்து வீட்டை விட்டு கோபத்துடன் வெளியேறுகிறான். கையில் ஒரு பெட்டி. (சிம்பொலிக்'காக ஆசாமி கோபித்துக் கொண்டு ஓடுகிறான் என்று உணர்த்துகிறது. கமரா பெட்டியைக் குளாசப்பில் இரண்டு, மூன்றுமுறை காண்பித்து உங்களின் IQ வைச் சோதிக்கிறார்கள்.)

அம்மா வழக்கம்போல, "என்னங்க, என்னங்க, எம் புள்ளையை நிக்கச் சொல்லுங்க" என்று ஒரு கலன் கண்ணீர் விடுகிறார்.

பிறகென்ன, ஹீரோ திருட்டுத்தனமாக ரிக்கட் இல்லாமல் ரயில்/பஸ் பிடித்து மெட்ராஸ் வந்து, காதலித்துக் கோடீஸ்வரனாகி, வில்லனை அழித்து என்று கதை போகிறது.


(2) கோர்ட் சீன். கொலை வழக்கு. ராமன் சோமனைக் கொன்றுவிட்டான்.

நீதிபதி: திரு ராமன், நீர் சோமனைக் கொன்றது உண்மையா?

ராமன்: ஆம் ஐயா!

ராமனின் வக்கீல் திடுக்கிட்டுப் போய் குறுக்கிடுகிறார், "ஐயா என் கட்சிக்காரருக்கு மனநிலை சரியில்லை, அதுதான் கன்னா பின்னா என்று பேசுகிறார்"

நீதிபதி: அப்படித் தெரியவில்லை. ராமன் நீர் ஏன் இந்தக் கொலையைப் புரிந்தீர்?

ராமன்: ஐயா அவன் என்னை கோபமடையச் செய்யுறமாதிரி அவமதித்தான் ஐயா.

நீதிபதி: இதுக்கெல்லாம் கொலையா செய்வது? என்ன? போயும் போயும் உன் மனைவியின் கற்பை வம்புக்குக் இழுத்திருப்பான்.

ராமன்: இல்லை ஐயா, அதைவிட மோசமாக அவமதித்தான்.

நீதிபதி:?

ராமன்: "நீ ஒரு கையாலாகாதவன் பிரேசிலுக்குப் புட்போல் விளையாடத்தான் லாயக்கு" என்றான் ஐயா. அதுதான் நான் சூடாகி கையில் கிடந்த ஒன்றை அவன் தலையில்போட, ஆள் குளோஸ். சத்தியமாகா நான் பிளான் பண்ணிக் கொலை புரியல்லை ஐயா.

குறிப்பு: மிக நீண்ட விசாரணையின் பிறகு ஜூரர்கள் அவனை விடுதலை செய்யச்சொல்லி முடிவு எடுக்கிறார்கள்.


(3) 10/10/2014. இலங்கை அணிக்கும் பிரேசில் அணிக்கும் இடையில் நடக்கவிருந்த கால்பந்து விளையாட்டு ரத்து செய்யப்படுகிறது. யாரும் ரிக்கற் வாங்காததுதான் காரணம் என்று ஊகிக்கப்படுகிறது.

(4) தமிழில் சில பழமொழிகள் கொஞ்சம் மாறும். உ+ம் யாரும் "கழுதை கெட்டால் குட்டிச்சுவரில்" என்று சொல்லமாட்டார்கள். "கழுதை கெட்டால் பிரேசிலில் கால்பந்து விளையாடுமாம்" என்பார்கள்.

தமிழில் ஒரு புது வார்தை வரும்.

பிரேசிலாதல் - 1.அசிங்கமாகத் தோற்றல். 2. (கம்பஸ் மொழி) பெயிலாகுவது, அரியர்ஸ் வாங்குவது

எதிர்காலத்தில் இலங்கை, இந்தியக் கிரிக்கட் அணிகள் சொதப்பினால், கிரிக்கட் ஆய்வாளர்கள் எழுதுவார்கள்' "இது மாதிரி இனியும் விளையாடினால். இனி இவர்கள் பிரேசிலாவதைத் தவிர்க்க முடியாது.


(5) இலங்கைக் கம்பஸ் பெடியள் சொல்லுவார்கள் "மூன்று பாடம் கையில்" என்று. அதையே தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்கள் "மூன்று பாடம் அரியர்ஸ்" என்பார்கள்.

இனிமேல் இலங்கை, இந்தியாக் கல்லூரி மாணவர்கள் ஒரேமாதிரிச் சொல்லுவார்கள், "மூன்று பாடம் பிரேசில் ஆச்சு"




-----------------

புகைப்படம்

www.smh.com.au

Sunday, June 29, 2014

ஓடக்காரனும் தோழரும் (சற்றுப் பெரிய குட்டிக் கதை)

தோழர் என்று அறியப்பட்ட பரமார்த்த செந்தமிழன் முற்றும் கற்ற ஒரு மார்க்ஸிய அறிஞர். தடித் தடியான சிவப்பு மட்டைப் புத்தகங்களை முதற் பக்கத்தில் இருந்து கடைசிப்பக்கம் வரை ஒருவித கொள்கை வெறியோடு படித்துத்தீர்த்தவர். அதுகாரணமாகவோ என்னவோ அவர் முகத்தில் ஒரு அறிவுக்களை எப்பவும் வீசும், எப்பவாவது முறையாகப் பனங்கள் அடித்தநாட்களில் மட்டும் இந்த அறிவுக்களை இன்னும் அதிகமாகும்.

ஒரு நன்னாளில் தோழருக்கு கடலின் இக்கரையிலிருந்து அக்கரைக்குப் போக வேண்டிய தேவை உண்டாயிற்று. முள்ளுப் பற்றைகள், மணல் வெளிகள் எல்லாம் தாண்டி இக்கரைக்கு வந்தார் தோழர். அக்காலங்களில் அக்கடலைக் கடந்து அந்தப் பக்கம் போவது ஒரு பயங்கர ரிஸ்க்கான விடயம். மேலேயிருந்து ஹெலி சுடும். நேவிக்காரன் ஷெல் அடிப்பான்; அல்லது பென்னாம் பெரிய கலிபர் துவக்கால் எட்ட நின்று சுடுவான். சனங்கள் இதுக்குப் பயந்தால் என்ன பயப்படாவிட்டால் என்ன இக்கரையிலிருந்து அக்கரை போகவேண்டிய தேவை. வள்ளக்காரர்கள் கரையில் நிற்பார்கள். நாலைந்து பேரிலிருந்து, பத்துப் பதினைந்துபேர்வரை கொள்ளக்கூடிய வள்ளங்கள் சேவையில் இருக்கும். அன்றைக்கு முதல் நாளில் போன வள்ளங்களை ஹெலி துரத்தித் துரத்திச் சுட்டதில் எட்டுப் பத்துப்பேர் பலி. இன்னும் எட்டுப் பத்துப் பேருக்குக் காயம். அதனால் அன்று படகோட்டிகள் யாரும் இல்லை. முதல் நாள் உதயன் பேப்பரில் தலைப்புச் செய்தியே இதுதான்.

தோழர் உள்ளூர் விடயங்களில் அவ்வளவு அக்கறை காட்டுவதில்லை. கியூபா, பழைய சோவியத் யூனியன், வியட்னாம் என்று அவர் சிந்திக்கும் தளமே வேறு. கரையில் சனஞ்சஞ்சடி குறைவாக இருப்பதால் ஏதோ சம்பவங்கள் நேற்று நடந்திருக்கலாம் என்று ஊகித்தார். சரி படகோட்டி ஒருவன் தன்னும் இன்றைக்கு வர விடாமலா போகின்றான்? என்று அங்கலாய்ப்போடு கடற்கரையில் இருந்த தென்னை மரத்தில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டு 'அன்னா கரீனினா' வை பன்னிரண்டாம் முறை வாசிக்கத் தொடங்கினார்.

மெலிதாக வீசும் கடற்கரை உப்புக் காற்று, தூரத்தே இருட்டில் தெரிந்த தென்னங்கூடல், பெயர் தெரிந்த தெரியாத விலங்குகள்/பூச்சிகளின் இரைச்சல், மற்றும் கடலில் இருந்து வந்த வாசனைகள் எதுவும் தோழரின் மனத்தில் படவில்லை. இன்றைக்குக் கடல் இரைச்சல் வேறு அதிகமாக இருந்தது இவர் தன்னை மறந்து புத்தகத்தில் மூழ்கிப் போனார். யாரோ மெலிதாகத் தோளில் தட்டுவது புரிந்ததும் திடுக்கிட்டு துள்ளி எழுந்தார்.

"தம்பி, வள்ளத்திற்கு காத்திருக்கிற மாதிரி இருக்கு.." என்று கேட்ட ஆசாமிக்கு சுமார் ஐம்பது வயதிருக்காலம். பெயர் சீனித்தம்பி, சுருக்கமாகச் சீனி. உறுதியான ஆனால் சற்று வரண்ட உடல்வாகு. "ஐஞ்சியாங் காசு உழைக்க லாயக்கில்லை, இரவிலை சுரண்டுறதுக்கு மட்டும் குறைச்சல் இல்லை" என்று பெண்டாட்டி வழக்கம்போல் டோஸ் கொடுத்ததால் இன்றைக்கு மட்டும் ரோஷம் பொத்திக் கொண்டு வர ' ஐந்நூறு ரூபாக் காசாவது உழைக்காமல் வீட்டுக்கு வருவதில்லை' என்று திட சங்கற்பற்பத்தோடு வீட்டைவிட்டு வந்திருந்தார்.

"ஓம் தோழர் அந்தப் பக்கம் போகலாமே?" என்றார் தோழர். இது நடந்தது தாடி வைத்த - பீடி குடிக்கிற எல்லாரும் தம்மைத் தானே கொம்யூனிஸ்ட் என்று நம்பிக் கொண்டு தில்லாகத் திரிந்த காலத்திற்குச் சற்றுப் பின். "தோழர்" என்று அழைக்கப்பட்டதில் சீனி வியப்பேதும் அடையவில்லை. சீனிக்குச் சின்ன வயதில் 'எறும்பு' என்று ஒரு பட்டப்பெயர் இருந்தது மட்டும் ஞாபகம் வந்தது. வாத்திமார்கள் அதேகாலத்தில் அவனை 'கணக்குப்புலி' என்று செல்லமாக அழைப்பார்கள். கணக்குப் போடுவதில் விண்ணன்தான். கல்யாணம் கட்டிய புதிசில் மனிசி செல்லமாக அழைத்த பெயரை எழுதினால் சங்கடப்படுவார். இந்தப் பெயர் வரிசையில் 'தோழர்' என்பதுவும் ஒன்றெண்டு அலுத்துக் கொண்டார்.

"தம்பி, ஐஞ்நூறு ரூபா எண்ணி வையும்," என்றார் சீனி.

"ஐந்நூறா?" என்று திடுக்கிட்ட தோழர், "உழைப்பைச் சுரண்டக் கூடாது" என்று ஞாபகம் வர அமைதியானார்.

தோழர் சாரத்தை மடித்துக் கட்டி விட்டு வள்ளத்தினுள் ஏறிக்கொண்டார். சீனி வள்ளத்தைக் கொஞ்சத்தூரம் தள்ளிக்கொண்டு சென்று பிறகு படகின்
ஒருபக்கத்தில் கைகளை ஊன்றி ஒரு எம்பு எம்பிப் படகில் குதித்தார். மாரி காலக் கடற் காற்று சில்லென்று வீசியது. தூரத்தில் புலம்பெயர்ந்து வந்த பெயர் தெரியாத பறவைகள் கூட்டங் கூட்டமாகப் பறந்து திரிந்தன. தோழர் 'பைக்கால்' ஏரியில் இதுமாதிரிப் படகுச் சவாரி செய்தால் எப்படி இருக்கும் என்று கற்பனையில் ஒருவித மம்மல் நிலைக்குப் போய்க் கொண்டிருந்தார்.

அன்றைக்குக் கடலில் அலை சற்று அதிகமாக அடித்தது. வள்ளமும் கொஞ்சம் தூக்கிப் போட்டதில் தோழர் மோகன நிலையில் இருந்து சற்று மீண்டுவந்தார். குளிருக்கு இதமாக பீடி குடிக்கவேண்டும் போல் இருந்தது. இடுப்பில் செருகி வைத்திருந்த பீடிக்கட்டைப் பிரித்து ஒன்றை வாயில் வைத்தார். இன்னொன்றை சீனித்தம்பியிடம் நீட்டனார். "தம்பி நான் கட்டினாப் பிறகு விட்டுட்டன்" என்று வழக்கமாக யாழ்ப்பாணத்துக்காரர் அநேகம்பேர் சொல்லுகிற மாதிரிச் சொன்னார்.

தோழர் தான் வாசித்த ரஷ்யக் கதைகளில் யாராவது படகோட்டி எதுவும் புகைக்காமல் இருந்தானா என்று யோசிக்க ஆரம்பித்தார்.

"தோழர், இன்றைக்கு ஐநூறு ரூபாய்கள் உழைத்துவிட்டீர், இனி இன்றைக்கு இது போதுந்தானே?" என்று கதையைத் தொடங்கினார். வெறும் பரமார்த்த செந்தமிழன் எப்ப 'தோழர் பரமார்த்த செந்தமிழன்' ஆனாரோ அன்றையிலிருந்து அவரின் பேச்சுத் தமிழும் எழுத்துத் தமிழும் கிட்டக் கிட்ட வரத் தொடங்கின. அத்தோடு, செயப்பாட்டு வினைச் சொற்களை அதிகம் பாவிக்கத் தொடங்கினார். உ+ம் "ஒடுக்கப்படுகிறார்கள், சுரண்டப்படுகிறார்கள், ஏமாற்றப்படுகிறீர்கள்". சிலவேளை இவர் பேசுவது சுவிஷேஷ நற்செய்தி கேட்பதுமாதிரி இருக்கும். இதைச் சொன்னால் பத்திரகாளியின் பெரியப்பா மாதிரியாய் விடுவார் செந்தமிழன். விட்டு விடுவோம்.

"தம்பி சூடாக்காதேயும்," சீனி சூடாகத் தொடங்கினார்.

"ஏன் தோழர்?" தோழர் நோண்டத் தொடங்கினார்.

"படகு என்ரை இல்லை. படகுச் சொந்தக் காரனுக்கு சரி பாதிக் காசு கொடுக்கோணும். அவங்களுக்கும் 2 வீதம் வரியும் குடுக்கவேணும்"

"நீங்கள் நன்றாகச் சுரண்டப் படுகிறீர்கள்!" இப்போது தோழரின் மீசை, தாடி, புஜங்கள் எல்லாம் துடிக்கத் தொடங்கின. கண்கள் சிவந்தன. குடித்துக் கொண்டிருந்த பீடியைக் கடலினுள் வீசீனார்.

"ஒவ்வொரு நாளும் நான்தான் சுரண்டுறதாகப் பெண்டாட்டி அலுத்துக் கொள்ளுறாள்" சீனி கனக்க வெட்கப் பட்டார்.

"தோழர் உங்களுக்குப் பிரச்சினை புரியவில்லை. இதுதான் பிரச்சினையே" தோழர் தொடர்ந்தார்.

"நீங்கள் கார்ல் மார்க்ஸின் மூலதனம் படித்தீர்களா?" ஆர்வத்தோடு தோழர் கேட்டார்.

"இல்லை!" படகு அலைகளில் சற்று அதிகமாக ஆடுவதைக் கவனித்துக்கொண்டே பதிலளித்தார் சீனி.

"கார்ல் மார்க்ஸ் எழுதிய வேறு ஏதாவது புத்தகங்கள் படித்தீரா?"

"இல்லை"

"லெனின், ஏங்கெல்ஸ், மாவோ எழுதிய ஏதாவது புத்தகங்கள்?"

"தம்பி, நான் சின்ன வயசில கணக்கு நல்லாச் செய்வன். கணக்கு வாத்தியார் கனக்க இங்கிலிஸ் புத்தகங்கள் தந்து பயிற்சி செய்யச் சொல்லுறவர்.. " சீனி தான் படித்த கணக்குப் புத்தகங்களை மனதில் கொண்டுவர எத்தனித்தார். ஐம்பது வயதில் மூளை முன்போல் இல்லை என்று சற்று கவலைப்பட்டார். கூடவே தன்னோடு படித்த சிலபேர் டாக்குத்தர், இஞ்சினியர் என்று இப்ப இருக்க தான் மட்டும் படகோட்ட வேண்டி வந்திட்டுது என்று ஒரு சுய பச்சாபமும் வந்துவிட்டது.

"சொச் சொச், " தோழர் தொடர்ந்தார். "உங்கள் வாழ்க்கையில், அம்பது வீதத்தை இழந்து விட்டீர்களே!!"

"தம்பி சரியாச் சொல்லுது, எனக்கு இப்ப அம்பது வயசு. நூறு வயசுக்கு இருக்க ஆசை", சீனிக்குச் சின்ன வயதில் கடியன் என்று ஒரு பெயரும் இருந்தது.

தோழர் பரமார்த்த செந்தமிழனுக்கு சீனியின் நக்கல் புரிபடவில்லை. "பொருள்முதல்வாதமும் அனுபவ விமர்சனமும், ஏகாதிபத்தியம் பற்றி, லெனினியத்தில் பிரச்சினைகள், மார்க்சியமும் மொழியியல் பிரச்சினையும், பிற்போக்குவாதிகள் பற்றி, இதில் ஏதாவது ஒன்றாவாது கேள்விப்பட்டிருக்கிறீரா?"

சீனியின் அவதானம் கடல் சற்றுப் பொங்குவதிலும் படகின் ஆட்டத்தைச் சரிப் பண்ணுவதிலும் இருந்தது. "இது எந்தப் பள்ளிக்கூடத்தில தம்பி சொல்லிக் கொடுக்கிறங்கள்?" என்றார் அசுவாரசியமாக.

"ஐயா, இதெல்லாம் பள்ளிக்கூடத்திலை சொல்லிக் கொடுக்கிறதில்லை. முதலாளித்துவ கல்வித்திட்டத்திலை உங்களுக்குத் தேவையில்லாதவற்றைத் தான் சொல்லிக்கொடுக்கிறர்கள். தேவையான ஒன்றையும் படிக்கவில்லை. உங்கள் வாழ்வில் எழுவது வீதததை இழந்துவிட்டீர்களே?" என்றார் பரமார்த்த செந்தமிழன் நக்கலாக.

கடலில் அலை இன்னும் வேகமாக அடிக்கத் தொடங்கியது. காற்றும் பலமாக வீசத் தொடங்கியது. படகு மேலும் கீழுமாகவும் பக்கப் பாட்டாகவும் ஆடத் தொடங்கியது. படகு கவிழ்ந்து விடப் போதுதோ என்று தோழரும் பயந்தார்.

அப்போதுதான் சீனித்தம்பி முதல்முறையாகத் 'தோழர்' என்ற வார்த்தையைப் பாவித்தார்.

"தோழர், உங்களுக்கு நீந்தத் தெரியுமா?"

"இல்லையே" என்றார் தோழர் பரிதாபமாக

"அப்ப உங்கள் வாழ்க்கையில் நூறு வீதத்தையும் இழக்கப் போகிறீர்களே!" என்றுவிட்டுச் சீனித்தம்பி கடலில் குதித்து நீந்தலானார்.


-------------------------------------------
பொறுப்பாகாமை: இது ஒரு கற்பனைக் கதை. உயிரோடு இருப்பவர்கள், இறந்தவர்கள், அல்லது அயிராக அலைபவர்கள் எவரையும் குறிக்கவில்லை. அத்தோடு பல்வேறு இஸவாதிகள், நிலைவாதிகள், குழப்பவாதிகள், திரிபுவாதிகள், திரியாதவாதிகள், ஃப்பேஸ்புக் சிந்தனைவாதிகள், மற்றும் அப்பாவிகள், அப்பாவிகள் அல்லாதோர் எவரையும் குறிக்கவில்லை. மேலும் யாராவது மேலே உள்ள பட்டியலில் விடுபட்டிருந்தால், அவர்களையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகமோ இக்கதை குறிப்பிடவில்லை என்று கூறிக்கொள்கிறேன்.

அயிர்- (பெயர்ச்சொல்)
1. zombie என்பதற்கான தமிழ் வார்த்தை. சத்தியமாக இது நான் உண்டாக்கிய தமிழ் வார்த்தை. எழுத்தாளர் ஜெயமோகனிடம் இருந்து திருடப்படவில்லை.
2. வெல்லம் ( 1. இற்குத் தொடர்பற்றது)


கனக்க- நிறைய

Tuesday, September 10, 2013

பென் ஜோன்சனின் ஓட்டம் அல்லது "இதயம்" நிறைந்த காதல்

அழகான ஆறு, கரையில் மூங்கில் மரங்கள்,
வளாகம் முழுக்க அழகிய மரங்கள்...மிக அழகான் மரங்கள்-சிலது பூத்துக் குலுங்கும் சிலது பூக்காது, ஆனால் எல்லாமே அழகு. , மிக அழகான கட்டடங்கள். படத்தில் இருப்பது மாதிரி உண்மையாகவே பல 'சீனறிகளைக்' கொண்ட பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இது நடந்தது.

காலம்: 1992 ஒலிம்பிக் முடிந்து சில நாட்கள். உசேன் போல்ட் 'ஐ மட்டும் அறிந்த இளம் தலை முறைக்கு பென் ஜோன்சனைப் பற்றிச் சொல்லவேண்டும். நான்கு வருடங்களின் முன், 1988 இல் பென் ஜோன்சன் 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்று பிறகு ஊக்க மருந்து சாப்பிட்டதாக நிரூபிக்கப்பட்டு பதக்கத்தைப் இழந்தவர். பதக்கத்தை இழந்தாலும் 9.79 செக்கனில் 100 மீட்டர் ஓடியது அந்தக் காலப் பகுதியில் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. என்பதால் அடுத்த ஒலிம்பிக் காலத்திலும் பென் ஜோன்சன் பேசப்பட்ட நபராகிறார்.

மீண்டும் கதைக்கு: ஆற்றுக்கு இந்தப் பக்கம் அக்பர் விடுதியும் பொறியியல் பீடமும். அந்தப் பக்கம் மிச்ச எல்லாப் பீடங்களும் விடுதிகளும். அக்பர் விடுதி ஆண்கள் விடுதி. அங்கிருந்த பெரிய விதானையார் என்று அறியப்பட்ட பேர்வழியைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும். பேருக்கேற்ற மாதிரி ஆள் நன்றாக இடம் வலமாக வளர்ந்த ஆள். நல்ல பெலசாலியும் கூட. இவரை நகராமல் நிறுத்த நாலைந்து பேர்கள் போதாது. பெரிய விதானையார் என்று இவருக்குப் பெயர் வந்த காரணம், பெரிய என்பது உருவத்தால் வந்தது. விதானையார் என்பதற்கு ஒரு மசமசப்பான காரணம் உண்டு. சின்ன விதானையார் என்றும் இன்னொருவர் இருந்தார்.

இன்றைக்கு பெரிய விதானையாருக்கு நல்ல வெறி. 'ஃபாகல்ரி டே' என்று ஞாபகம். கான்ரீ'னுக்குப் பககத்தில் இருந்த பெரிய 'வரைதல் கட்டடத்தில்' டின்னர் & டான்ஸ். 'தண்ணி' ஆறாக ஓடாவிடினும் அருவியாக ஓடியது. ஒருசிலரை விட அநேகர் 'சோடா மூடி' அளவு பானத்தை மட்டும் முகர்ந்து விட்டு 'தள்ளாடிக்' கொண்டிருந்தார்கள். மிக முக்கியமாக, பெண் பிள்ளைகளைக் கண்டால் இன்னும் அதிகம் தள்ளாடினார்கள். "உன்னால தானையடி குடிக்கிறன்" என்று பொதுவாக அடிக்கடி சொல்லிக் கொண்டார்கள். அதுமட்டுமல்ல சிங்களப் பெண் பிள்ளைகளைக் கண்டால் திடீரென்று 'இங்கிலிஷ்' பேசத் தொடங்கினார்கள். 'இங்கிலிஷ்' கிழவிகள் என்று அறியப்பட்ட ஆங்கிலம் படிப்புக்கும் விரிவுரையாளார்களுடன் மட்டும் எதையும் பேசாமல் ஒரு அசட்டுச் சிரிப்புச் சிரித்துவிட்டு நழுவினார்கள். மேடையில் ஒரு மவுசு இழந்த ஒரு இசைக்குழுவினர் புதிய, பழைய சிங்கள, ஆங்கில, சில தமிழ்ப்பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தனர். ஆத்மா லியனகே'இன் லியத்தம்பராய் மட்டும் சுமாராகப் பாடப்பட்டது. மாணவர்கள் நடனமாடிக் கொண்டிருந்தனர். நடனம் என்றால் கிட்டத்தட்டத் தவளைகள் தாவிக் கொள்வதுமாதிரி... என்றாலும் இது கஷ்டமான வேலை. நிறைய 'எனர்ஜி' தேவைப்படும். களைத்துப் போனால் அதைக் காட்டிக் கொள்ளாமல் "வெறி" மாதிரித் தள்ளாட்டம் போடவேண்டும். இருக்க ஒரு சின்ன இடைச்செருகல் போடவேண்டியுள்ளது. நடனம் என்றால் நிறையக் கற்பனை கிற்பனை பண்ணக் கூடாது. ஆண்கள் தங்கள் பாட்டுக்குத் தனியாக நடனம் என்று எதோவொன்றைச் செய்து கொண்டிருப்பார்கள். பெண்களுடன் சேர்ந்து நடனம் ஆடுவது என்பது ஆராவது 'செற்' ஆன சோடிகளுக்கு மட்டும்தான். சில சிங்களப் பெண் பிள்ளைகள் இதேமாதிரி இன்னொரு இடத்தில் ஒரு குழுவாக நடனம் ஆடிக்கொண்டிருப்பார்கள். இதுதான் கம்பஸ் நடனம். தமிழ்ப் பிள்ளை யாராவது ஒருத்தி தன்னும் ஆடியதாகத் தகவல் இல்லை. (ஆட்டக்காரி என்று லேபல் அடிக்கப்பட்ட பெண்களும் ஆடியதாக இல்லை);ஆனால் லீவில ஊருக்குப் போகேக்க யாராவது ஒன்று கேட்கும் "கம்பசில பெட்டையள் எல்லாம் நல்ல "சோசலாக" பழகுவாள்கள் என்ன?". இந்த இடத்தில் மட்டும் கற்பனை பீறிட்டுக் கிளம்பும் . அங்காலை இஞ்சாலை பார்த்துவிட்டு "மச்சான் இந்த டின்னர் அண்ட் டான்சிலை பெட்டைகளோடைதான் டான்ஸ் ஆடுறது. சொல்லி வேலையில்லை". என்றாலும் நம்பாதமாதிரி "மச்சான் நீயெல்லாம் டான்ஸ் ஆடமாட்டாய்! " என்று ஆள் தொடரும். உள்ளுக்கு நம்பத் தொடங்கியிருப்பார்.

சரி பெரிய விதானையாரை மீண்டும் கவனிப்போம். அவருக்கு கூடப் படித்த ஒரு சிங்களப் பெட்டையில ஒரு கண். கேட்கத் துணிவில்லை. இதயம் முரளி கணக்காக ஒரு மௌனக் காதல். (அவளிற்குப் பெயர் சம்பிகா என்பது மட்டும் இப்போதைக்குப் போதும்)

"மச்சான் இவளுக்கு என்னிலை ஒரு கண் " என்று சொல்லிக் கொள்வார். உண்மை என்னவென்று "பாலர்" வகுப்புக் போகத் தொடங்கிய குறிஞ்சிக் குமரன் கோவில் ஐயரின்ர மகனுக்கே தெரியும். கிடக்கட்டும். இன்றைக்கு இருக்கிற வெறியிலே ஆள் அவளைக் கேட்டாலும் கேட்கலாம்.

"மஷான், இண்டைக்கு நான் இவளோடை கதைக்கப் போறன்" என்று தொடங்கினார்.

"உனக்கு வெறி மச்சான், இண்டைக்குச் சரி வராது, நாளைக்குக் கேட்போம்" என்றான் நூலகர் சிவா. (இவனுக்கு நூலகர் என்று பட்டம் வந்ததற்கு காரணங்கள் நான் சொல்லாமலே உங்களுக்குப் புரிந்திருக்கும்)

விதானையார் மிகத் தெளிவாகச் சொன்னார் "மச்சான், நாளைக்கு எனக்கு வெறி இறங்கினால், கதைக்கத் துணிச்சல் வராது, இண்டைக்கே இவளைக் கேட்கப் போறன். வெறி இருக்கக்கைதான்தான் மச்சான் கதைக்கலாம்".

"எனக்குத் தண்ணி அடிச்சால்தான் இங்கிலிஷ் வரும், I want to talk to her in English மஷான்" தொடர்ந்தார் விதானையார். சரிதான் இவருக்கு சிங்களத்தில் "எக்காய், தெக்காய், துணாய், ... பாலுவாய்" வரைதான் வரும். எனவே சிங்களப் பெட்டையை எப்படி டாவடிக்கிறது? "ஷேக்ஸ்பியர் துணை" என்று மானசிகமாகக் கும்பிடு போட்டுவிட்டு இங்கிலிஷ்'இல் விளையாட வேண்டியதுதான். இதிலும் சிக்கல். விதானையார் அறிந்துவைத்திருந்த இங்கிலிஷ்'இல் நிறைய 'நாலெழுத்து' க் கெட்ட வார்த்தைகள்தான் அதிகம். மருதானைப் பக்கம் 'இங்கிலிஷ்" படம் பார்த்து ஆங்கில அறிவை வளர்த்துக் கொண்டதால் வந்த வினை. "மச்சான் நான் வெள்ளைக்காரன் மாதிரி இங்கிலிஷ் கதைப்பன்" என்று விதானையார் தொடர, திடுக்கிட்டுவிட்டான் ஆங்கிலப் புலவர் வீரசாமி (இயற்பெயர் எதற்கு?). வீரசாமியைப் பற்றி இரண்டே வசனங்களிற் விபரிக்க வேண்டுமானால், ஒன்று: அவன் அடிக்கடி ஆங்கிலப் பழமொழிகளைச் சொல்லுவான், இரண்டு: ஒட்டுமொத்த ஆங்கில மொழியையே தான் குத்தகைக்கு எடுத்தவிட்டது மாதிரிப் பீலா விடுவான்.

சாம்பிளுக்கு ஒன்று சொல்ல வேண்டுமானால், "மச்சான் கேள்," என்று தொடங்கி
''The perfection of wisdom and the end of true philosophy is to proportion our wants to our possessions, our ambitions to our capacities, we will then be a happy and a virtuous people.'' by Mark Twain என்று முடிப்பான். எனக்கு 20 வருடங்கள் கழித்தும் இன்னும் இது புரியவில்லை.

"மச்சான் வா! இண்டைக்குக் கேட்டிடுவம்" என்று தொடங்கினான் பொதிசுமந்த வரதன். வரதன் குழந்தை மனசுக்காரன். பெண்பிள்ளைகள் எதாவது பாரம் சுமந்தால் அவனுக்கு மனம் பொறுக்காது. ஓடிச்சென்று வாங்கித் தான் சுமப்பான். அப்பாதெல்லாம் கிளாலி, கொம்படி கடந்து யாழப்பாணம் போகவேண்டுமென்றால் வரதன் ஒரு வரப்பிரசாதம்- கம்பஸ் பெட்டைகளுக்கு; நாலைந்து பெண்களின் பொதிகளைத் தனியாளாக சுமந்து கொண்டு கிளாலி கொம்படி எல்லாம் திரிந்தபடியால் ஆள் நல்ல பெலசாலி என்பதை அறிவீர்கள்.

விதானையாருக்கு இப்ப கொஞ்சம் பயம் பிடித்துவிட்டது. என்றாலும் உள்ளே போயிருந்த நான்கு 'மூடிகள்' அளவான வெளிநாட்டுப் பானம் தந்த உத்வேகத்தில் படீரென்று எழுந்து நின்றார்.

"மச்சான் இந்த நேரம் அவளவை அக்பர் பாலத்தைத் தாண்டிப் போயிருப்பாளவ, நீ இன்னுங் கொஞ்சம் சுணங்கினால் ராமநாதன் ஹோலுக்குப் போய்த்தான் பிடிக்கவேணும்" என்று இன்னும் ஏற்றத் தொடங்கினான் பொ.சு.வரதன். எல்லாருக்கும் 'ஏத்திவைத்துக் கூத்துப் பாக்கிற' ஆர்வம். என்றாலும் விதானையார் வழமையாக எப்பவும் கடைசி நேரத்தில் ஒரு 'ராஜதந்திரப்' பின்வாங்கலில் ஈடுபட்டுச் சிக்கல்களில் இருந்து நழுவுவதால் கூத்து நடைபெறாது என்றுதான் எல்லோரும் எண்ணியிருந்தார்கள். என்றாலும் இறைவன் சித்தம் வேறக இருந்தது.

விதானையார் அந்தக் காலங்களில் சினிமாக் கதாநாயகர்கள் செய்வதுமாதிரி இடது கையால் தலை முடியைக் கோதிக்கொண்டார். தோள்களைக் குலுக்கினார். பிறகு நாம்பன் மாடு மூசுகிறமாதிரி மூச்சைச் சத்தமாக விட்டார் "டேய், பென் ஜோன்சன் தோத்தான்டா" என்றுவிட்டுத் திடீரென மிக வேகமாக ஓடத் தொடங்கினார். ஓரிரு விநாடிகள் தாமதித்துத்தான் எல்லாருக்கும் நிலைமையின் "சீரியஸ்னெஸ்' விளங்கியது. எல்லாரும் இவருக்குப் பின்னால் ஒடத்தொடங்குகிறார்கள். என்றாலும் யாராலும் விதானையாரை முந்தமுடியவில்லை.இவர்கள் அக்பர் பாலத்தின் இந்தப் பக்கத்திற்குக் கிட்டப் போகும்போது விதானையார் பாலத்தின் அடுத்தபக்கத்திற்குக் கிட்டஓடுவது தெரிந்தது.

அடுத்த சீன்: அக்பர் பாலம் தாண்டியவுடன் கண்ணில் படும் பெயர் தெரியாத, கூடாரமாகச் சடைத்து வளர்ந்திருக்கும் மரத்தின் கீழ் நடக்கிறது. சம்பிகா பழைய தமிழ்ப் படங்களில் வருகிறமாதிரி தோழிகளுடன் மரத்தில் உள்ள கொப்பொன்றில் சாய்ந்து நிற்கிறாள். அருகில் விதானையார். விரைவாக ஓடியதால் தலையெல்லாம் வியர்த்து ஈரமாகி இருந்தது. ஆனால் இவர் மிகத் தெளிவாக ஏதோ கதைத்துக் கொண்டிருந்தார். ஏதும் குளறுபடி நடந்தது மாதிரி இல்லை. விதானையார் தன் காதலைச் சொல்லிருந்தால் சீன் இப்படி இருக்கமாட்டாது என்று தெரிந்தது. இவர்கள் எல்லோரும் போய்ச்சேர ஒரு அசௌகரிய மௌனம். என்ன கதைப்பது என்று யாருக்கும் புரியவில்லை. என்றாலும் நடந்ததை ஊகிக்கக் கூடிய வகையில் அடுத்த வசனத்தை விதானையார் ஆங்கிலத்தில் விட்டார்.
"சம்பிகா, அடுத்த கிழமை கொடுக்க வேண்டிய 'பிராக்ரிகல் ரிப்போர்ட்'டை முடித்துவிட்டேன். நாளைக்குக் கொடுக்கிறேன்."

(முடிவுரை: இச்சம்பவம் நடந்து சிலநாட்களின் பின் "இதயம்" திரைப்படத்தைக் கண்டியில் உள்ள ஒரு பாடாவதி தியேட்டரில் பார்த்தோம். விதானையார் கண் கலங்கியதாகப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பொ.சு.வரதன் சொன்னான். என்றாலும் அன்று படம் பார்த்த கனபேர் சில பல காரணங்களால் கண் கலங்கியதால் "விதானையார் கண் கலங்கிய காதை" பெரிதாகப் பேசப்படவில்லை. அவனவனுக்கு அவனவன் பிரச்சினை!)




பொறுப்பாகாமை :
இது உண்மைச் சம்பவத்தை வைத்துக் கற்பனை செய்யப்பட்டது என்று பல பதிவர்கள் "பொறுப்பாகாமை/டிஸ்கி போடுகிறார்கள். எனக்கு அவ்வளவு நெஞ்சுரம் இல்லை. எனவே இது "உண்மையில்லாத சம்பவத்தை" வைத்துக் கற்பனை செய்யப்பட்டது என்று கூறிக்கொள்கிறேன்.

Tuesday, April 16, 2013

முடியுடை நம்பி அல்லது ஒரு சோக்கான காதல் கதை

"தணியன் சிவலிங்கம்" என்று ஒருவரை முகநூலிற் சந்தித்திருப்பீர்கள். இல்லாவிட்டாலும் அவர் புகைப்படத்தையாவது பார்த்திருப்பீர்கள். பிடரிவரை சிலிர்த்து நிற்கும் முடியுடன் "நான் சிங்கம்டா, சிங்கம்" என்று ஒரு அலட்சியப் பார்வையுடன், கமராவை ஒரு சாய்வாகப் பார்த்துக் கொண்டிருப்பார். அவர் கூந்தல் அழகு பெண்களையே பொறாமைப்பட வைக்கும், முக்கியமாக முப்பத்தைந்தைக் கடந்து , கூந்தல் அடர்த்தி குறைய -ஸ்ரயில் என்று என்றொரு மொக்கைக் காரணத்தைக் கண்டுபிடித்து -முடியைக் குட்டையாக்கிக் கொண்டு திரியும் பெண்களின் வயிறு பற்றி எரியும். நல்லகாலமாக அவர் என்னைச் சந்திக்கவில்லை , அத்தோடு நான் முகநூலில் என் உண்மையான போட்டோவைப் போடவுமில்லை.

என் தலைமுடி காடுபோல் அடர்ந்து வளர்ந்திருக்கும், அத்தோடு தோள்ப்பட்டைக்கும் கீழே வளர்த்து- மெதுவாக ஓடும் ஆறு போல் வழிய விட்டிருப்பேன். வேலைக்குப் போகும்போது மட்டும் இரண்டு ரப்பர் பாண்ட் களால் தலைமுடியை முடிந்து ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பேன். த.சிவலிங்கத்தையே பொறாமைப்பட வைக்கிறமாதிரி ஒரு போட்டோ முகநூலிற் போடவென்று எடுத்து வைத்துள்ளேன். "ஐயோ பப்ளிக்கில போடாதேயுங்கப்பா நாவூறு, கண்ணூறு பட்டிடும்" என்கிறாள் சுகந்தி. அவளுக்கு வேறு பயமோ தெரியவில்லை. இவளை நான் சந்தித்ததே என் நீண்ட 'கூந்தலாலே' தான்.

இது நடந்தபோது கிபிர், புக்காரா குண்டுகள் விழத்தொடங்கவில்லை. பல்குழல் எறிகணைகளும் வரவில்லை. சாதா ஷெல், பீரங்கிக்குண்டுகள், ஹெலிச் சூடு என்றிருந்த பழைய யாழ்ப்பாணம். மதில் சுவர்கள் இயக்க நோட்டீசுகளால் நிறைந்திருக்கும். இன்னும் இருவது இருவத்தைந்து ஆண்டுகள் கழித்து 'நான் குழந்தைப் போராளி' என்று இலக்கியம் எழுதப்போகிற சிலர் இரவுகளில் பசை வாளிகள், பிரஷ், நோட்டிஸ் என்று பிசியாக இருந்த காலம். பல்வேறு "ஐக்கிய" விளையாட்டுக் கழகங்கள் மின்னொளியில் வொலிபோல் விளையாடிக் கொண்டிருந்த, மின்சாரம் இருந்த பழைய யாழ்ப்பாணம்.

அக்காலத்திலே மழையும் பெய்யாத, வெயிலும் கடுமையாக எறிக்காத ஒரு நாளில், நான் என்பாட்டுக்கு எதோ ஒரு ரியூசன் சென்ரருக்கு முன்னாலே நடந்து போய்க் கொண்டிருந்தேனாம். முதல் நாள்தான் பியோர் மத்ஸ் வாத்தியார் என்னை வாங்கு வாங்கு என்று வாங்கியிருந்தார். "டேய் உனக்கு மண்டைக்கு வெளியிலை இருகிறமாதிரி மண்டைக்குள்ள ஒண்டும் இல்லை. ஏண்டா என்ரை உயிரை வாங்குகிறாய்?" என. எனக்கு மனசு சரியில்லை. ரோட்டுக்கு இந்தப் பக்க வேலியில் நின்ற ஓணானுக்கு ஏதோ பிரச்சினைபோல. தலையை ஆட்டுவதை நிறுத்திவிட்டு என்னைப் பார்த்துக் கொண்டு நின்றது. காலை ஓங்கி நிலத்தில் குத்தினேன். ஓணான் அலட்டிக்கொள்ளாமல் மெதுவாக நகர்ந்து சென்றது.


"எடி இஞ்சை பாரடி இதை!" என்று ஒரு பெண்குரல் சிந்தனையைக் குழப்பியது.
"என்னத்தை?"
"முன்னுக்கு ஒரு ஆசாமி பெண்டுகள் மாதிரி நீளமாக மயிர் வளர்த்துக் கொண்டு போகுது; ஒரு ஒற்றை ரோசாப்பூவை தலையில் வைத்தால் இன்னும் நல்லாயிருக்கும்".

பிறகு ஒரு நாலைந்து பெட்டையள் "களுக்" என்றோ 'ஈ ஈ " என்றோ சிரித்துக் கேட்டது.

எனக்குச் சுலபமாகக் கோபம் வராது, என்றாலும் இப்படிப் நாலைந்து பெட்டையள் நக்கல் விட்டால் ஆருக்குத்தான் கோபம் வராமல் விடும்? திரும்பி ஒரு கடு கடுப் பார்வையை விட்டேன். எல்லாரும் பயந்து போனாளையள். ஒருத்தி மட்டும் பயப்படாமல் 'நான் பனக்காட்டு நரி' என்றமாதிரி ஒரு பார்வையுடன் நின்று கொண்டிருந்தாள். எனக்கு விளங்கீட்டுது, இவள்தான் இந்த நக்கல்காரி என. ஆள் ஊருக்குப் புதுசு. ஆமிப்பிரச்சினை என்று குடும்பத்தோடு இடம்பெயர்ந்து ஊரில் வசிக்கிறாள்.

"ஏலுமெண்டா என்னை மாதிரி வடிவாக நீளமாக முடி வளர்த்துக் காட்டும், நான் ஒற்றை ரோசாப்பூ என்ன ஒரு கிலோ ரோசாப்புவையே உமக்கு வைக்கிறேன்" என்றேன். கொஞ்சம் வெட்கப்பட்டுக் கன்னம் சிவப்பாள் என்று பார்த்தால் ஒரு முறைப்பை மட்டும் எறிந்தாள். அப்பவெல்லாம் நான் அதிகம் தமிழ்ப் படங்களைப் பார்ப்பேன். அதன் விளைவோ தெரியவில்லை, அடுத்து இவளோடு 'லா லா' என்று பாடிக் கொண்டு திரியிறமாதிரி கனவுகளும் வரத் தொடங்கியது. பிறகு அழுக்கும் கறளுமாக இருந்த என் சைக்கிளை தேங்காயெண்ணெய் மண்ணெண்ணெய் எல்லாம் போட்டுப் பொலிஷ் பண்ணினேன். தலைக்கு மட்டும் இதுநாள் வரை போட்டுக் கொண்டிருந்த நல்லெண்ணையை நிறுத்தினேன். சேட்டு மட்டுமில்லை , சாரத்தையும் அயர்ன் பண்ணி அணியத் தொடங்கினேன்.

பிறகென்ன அந்தக் கால யாழ்ப்பாணக் காவாலிகளின் வரைவிலக்கணப்படி 'சைக்கிளில் பின்னுக்குச் சுத்தினேன் , பிறகு ஒருநாள் காய்ச்சல் என்று வீட்டில் ஓய்வெடுக்கும்போது "என் ஒற்றை ரோசாப்பூவே, செல்லமே அதுவே இதுவே .. " என்று கன்னா பின்னா என்று ஒரு கடுதாசியை எழுதினேன். தனியாகக் கொண்டுபோய்த் குடுக்கத் தைரியம் இல்லை. "டேய் எனக்குப் பயமாக் கிடக்குது, நீயும் வாடா" என்று விக்கியைக் கேட்டேன். கனக்கப் பிகு பண்ணினான். அச்சுவேலி ராஜா கபே'யில் ரோல்ஸ் உம் வடையும் பிளேன் ரீ'யும் வாங்கித் தருவதாக ஆசை காட்டிச் சரிப் பண்ணினேன். ஒருநாள் இரண்டு பேரும் சைக்கிளில் வெளிக்கிட்டு சின்ன வாசிகைசாலையைத் தாண்டி புளியமரச் சந்திக்குக் கிட்ட வந்தாச்சு. அப்ப பார்த்தால் எதிர்பார்த்தமாதிரி இவள் சுகந்தி ரியூசன் முடிந்து வந்து கொண்டிருந்தாள். பக்கத்திலே வழமையாக வருகிற தோழியரைக் காணவில்லை. சேட்டுப் பொக்கற்றுக்குள் கடதாசி, வெளியே எடுக்க முடியவில்லை. கை நடுங்கியது. தொண்டை உலர்ந்தது. இவன் விக்கியைப் பார்த்தேன். ஆள் என்னைவிடப் பயந்துபோனான். "டேய் எனக்கு வயத்தைக் கலக்குது, நான் வீட்டை போப்போறன்" என்றுவிட்டுப் பதிலை எதிர்பார்க்காமல் சைக்கிளைத் திருப்பிக்கொண்டு போய்விட்டான்.

"சரி இதுவும் நல்லதுக்குத்தான், 'கடுதாசு கொடுக்கிறது' மாதிரி சரித்திரப் பிரசித்தி வாய்ந்த சம்பவங்களுக்குச் சாட்சி வைத்துக்கொண்டா செய்வார்கள்?" என்று யோசித்துக் கொண்டேன். கொஞ்சக் காலத்துக்கு முன் ரூட் கிளியர் ஆக்கிய சேந்தன் அண்ணா எல்லாம் என்னை விடப் பயந்தாங்கொள்ளி, நான் மட்டும் என்ன குறைவா? என்று துணிச்சலை வரவழைச்சுக் கொண்டு "இந்தா பிடியும், உமக்கொரு கடதாசி வந்திருக்குது" என்று அவசரமாக நாலாக மடித்து வைத்திருந்த அதைக் கொடுத்தேன்.

"எப்பங்காணும் தபால்காரன் வேலை பாக்கத் தொடங்கின்னீர்?" என்று கண்களை நேரில் பார்த்துக் கொண்டு கேட்டாள். என்றாலும் 'தபாலை' வாங்கத் தயங்கவில்லை.

அந்த இடத்திலேயே வைத்து வாசித்தாள் , பிறகு "கிலோக் கணக்கில் இருந்து இப்ப ஒற்றை ரோசாப் பூவாச்சு, சரியான கஞ்சன் நீர்" என்றாள். பிறகென்ன...?

வீட்டை வந்தாப் பிறகு அக்கா மட்டும் "ஏன்டா இண்டைக்கு இலுப்பெண்ணை குடிச்ச கழுதை மாதிரி முகத்தை வச்சிருக்கிறாய்?" என்று கேட்டாள்.


*************

எனக்கு ஞாபகம் இருந்த நாளில் இருந்தே எனக்கு இந்த முடியுடன் பிரச்சினைதான்; சின்ன வயசில் பார்பர் நல்லையா "தம்பி சாப்பிடறது எல்லாம் முடிக்குத்தான் போகுது போல, உடம்பு வளரக் காணல்லை, முடி மட்டும் அளவு கணக்கிலாமல் வளருது" என்று அலுத்துக் கொண்டுதான் முடி வெட்டத் தொடங்குவார். எனக்கு முடி வெட்டுவது பிடிக்காது, பெண்களை மாதிரி ஆண்களுக்கும் நீளமாக முடி வளர்க்கும் உரிமை வேண்டும் என்று சின்ன வயதுகளிலே யோசிக்கத் தொடங்க்கிவிட்டேன். ஆனால், இதற்கு சில வில்லன்கள். ஒன்று அப்பா. மகன் நீளமாக முடி வளர்த்தால் காவாலியாக விடுவான் என்று ஒரு தப்பான கொள்கை வைத்திருந்தார். மற்றது பள்ளிக்கூடப் பிரின்சிபால் மற்றும் வாத்தியார்கள். இவர்கள் எல்லாம் என் முடிக்குச் சவாலாக இருந்தபடியால் வளர்ந்து இளந்தாரியாக ஆகுமட்டும் "முடியிழந்த" மன்னனாகத்தான் திரிய முடிந்தது.

என்றாலும் தலையில் முடி காட்டுத்தனமாக வளர்ந்ததால் பேன் , பொடுகு என்று கஷ்டப்படுவேன். அம்மாவும் அப்பாவும் மாறி மாறிப் பேன் பார்ப்பார்கள். அப்பா என்றால் பேன்சீப்பால் ஊன்றித் தலையை இழுப்பார். வலிக்கும். பிறகு சீப்பை முகத்தில் இருந்து நாலடி தள்ளிப் பிடித்துப் பார்ப்பார். சீப்பின் பல்லுகளுக்கு இடையில் மாட்டிக் கொண்டிருக்கும் கொழுத்த பேன்களை விரல்களால் வெளியே எடுத்து சீமெந்துத் தரையில் விடுவார்.

"பார்! பண்டிக்குட்டி சைசில் பேன்கள் . நீ சாப்பிட்டுகிறதெல்லாம் பேன்களுக்குத்தான் போகுது" என்றுவிட்டு தரையில் இருக்கும் பேன்களை நகத்தால் தரையுடன் சேர்த்து 'டிக் டிக்' என்று சத்தம் வர நசிப்பார்

"இவனுக்கு மொட்டை போட்டால்தான் சரி" என்று இலவச இணைப்பாக வயிற்றில் புளியையும் கரைப்பார்.

அம்மா பேன் பார்ப்பது ஒரு அழகு.

"வாடா பேன் பார்க்க" என்று கூப்பிட்டா என்றால் நான் மினக்கெடாமல்  அம்மாவின் மடியில் தலை வைத்துப் படுத்து விடுவேன்.

"என்ரை பெடிக்கு ஐயா மாதிரி அடர்த்தியான தலைமயிர்" என்று சொல்லிக்கொண்டு பெரிய பல்லுகள் உள்ள சீப்பால் தலையை வாரத்தொடங்குவா.

"மூளையும் கொப்பன் மாதிரி இல்லாவிட்டால் சரிதான்" என்று அப்பா தொடங்குவார். (மாமியார் மருமகள் பிரச்சினைமாதிரி மாமனார் மருமகன் பிரச்சினை இருக்கக் கூடாதா என்ன?)

அப்பாவும் அம்மாவும் சண்டைபிடிக்க நான் அம்மா மடியில் நித்திரை கொண்டுவிடுவேன்.

நான் வளர வளர உடம்பு வைத்ததுமாதிரி எல்லாம் இல்லை. தலைமயிர் மட்டும் காட்டுத்தனமாக வளரத் தொடங்கியது. தலையில் கடிக்குது என்று சொறிந்தால் நகம் தலையில் படாது, அவ்வளவு அடர்த்தி என் முடி. மலிவான சீப்பைத் தலைவாரப் பாவித்தால், அது முறிந்துவிடும். அப்பா சின்னக்கடையிலே தெரிந்த ஒரு சோனகக் கடையிலே சொல்லி, கொழும்பில் இருந்து எடுப்பித்த ஒரு ஜேர்மன் பிராண்ட் சீப்புத்தான் என் பாவனைக்கு. எனக்குத் தெரியாமல் அக்காகூட அந்தச் சீப்பை எடுத்தால் பெரிய சண்டை வரும். பள்ளிக்கூடத்தில் கூட சமூகக்கல்வி வாத்தியார் "டேய் பெருமுடி மன்னா, சூயஸ் கால்வாய் ஆர் எப்ப வெட்டினது?" என்றுதான் அறுப்பார். கேள்வி மாறும் ஆனால் தொடங்குவது எப்பவும் 'டேய் பெருமுடி.." என்று. இப்படி எனக்கு முடிப் பிரச்சினைகள் கூடக்கூட எனக்கு வழுக்கையரின் மேல் ஒரு சின்னப் பொறாமை வரத் தொடங்கியது. வாழ்க்கை எவ்வளவு சுலபமானது அவர்கட்கு?, பேன் இல்லை, தலையில் அரிப்பு இல்லை. தலைக்கு எண்ணை வார்க்கத் தேவையில்லை. தலைமுடி குழம்பி இருக்கா இல்லையா என்று கவலைப்படத் தேவையில்லை. நமக்குக் கொடுத்து வைத்தது இவ்வளவுதான் என்று பெருமூச்சு விடுவேன்.

*************

முடியுடன் எனக்குப் பிரச்சினை இருந்தாலும் சுகந்தியுடன் பிரச்சினைகள் இல்லை, ஒன்றைத் தவிர. இவளுக்கு என் முடியின் நீளத்தைக் குறைக்கவேண்டும் என்பதில்மட்டும் ஒரு பிடிவாதம். "உப்பிடி நீளமாக மயிர் வளைர்ப்பது எல்லாம் தியாகராஜ பாகவதர் காலம் பாரும், இப்ப கட்டையாக வெட்டுவதுதான் ஸ்ரையில்" என்று மெதுவாக ஒரு ஊக்கி தந்தாள். நான் புரியாததுமாதிரி இருந்துவிட்டேன். பிறகு நேரடியாக சொல்லிவிட்டாள், "தலை மயிர் சேட்டுக் கொலரிலை முட்டாத அளவிற்கு வெட்டவேண்டும்" என்று. அதுவும் சரிவரவில்லை. கடைசியாக இன்னொரு பாணத்தையும் எடுத்துவிட்டாள். "உங்களுக்கு சேந்தன் அண்ணாவைத் தெரியும் தானே? அவர் அவற்றை ஆள் சொல்லிப் போட்டுது என்று நாலு வருசமா வளத்த தாடியையே ஒரு நாளில் வழிச்சுக் போட்டாராம், உங்களுக்கு சலூன் போய் மனுசன் மாதிரி ஒரு ஸ்ரையிலிலே முடி வெட்டத் தெரியவில்லை" எனச் சிணுங்கினாள். அப்ப அவளின் காதில் இருந்த தொங்கட்டானும் சிணுங்கிய மாதிரி இருந்தது. அடுத்தநாட்தான் கனகாலத்திற்குப் பிறகு நான் அசோகன் சலூனிலை முடி வெட்டினேன். வெட்டினாப்பிறகு எனக்குப் என்னையே பார்க்கச் சிரிப்பாக இருந்தது. படலையைத் திறந்துகொண்டு வீட்டுக்குள் நுளைய அக்கா கத்தினாள்

"அம்மோய் இஞ்சை பார் தம்பியின்ரை சாயலில ஆனா ஆனால் சகிக்கக் கூடிய முகச் சாயலில் ஒண்டு வந்து நிக்குது. உனக்கு ஆரெண்டு தெரியுதே?" என்று.

நான் எல்லாப் பல்லும் தெரிய "ஈ ஈ" என்று முகத்தை அஷ்டகோணலாக்கி அழகு காட்டிவிட்டு "அம்மா பிளேண் ரீ போடேலுமே?" என்று கத்தினேன். தம்பி ஒரு நமுட்டுச் சிரிப்புடன் தலையைப் பார்த்தான். அவனுக்குப் பதினான்கு வயதிலேயே முடி கொட்டத் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு நாளும் பச்சை எலுமிச்சங்காயைத் தலையில் தேய்த்து, அரை மணித்தியாலம் ஊறவிட்டு கிணற்று நீரில் தலை முழுகினால் முடி வளரும் என்று யாரோ சொன்னதால், வீட்டில் கறிக்கு வாங்கிய எலுமிச்சங்காய்களை ஒரு கை பார்க்கிறான். இப்ப கீரைக்கறிக்குக்கூட எலுமிச்சம் புளி விடமுடிவதில்லை. எல்லாவற்றையும் 'முடிவளர்ச்சித் தைலமாகப்' பாவித்துத் தீர்க்கிறான்.

கிணற்றடிக்கு வந்தேன், கொஞ்சம் மழைக் குணமாக இருந்தது. கிணற்றடியில் தென்னை, வாழைகள், இப்பில் இப்பில், பிறகு சின்னத் தம்பி நட்டிருந்த 'நாலு மணிச் செடி' , சீனியாஸ் செடிகள் என்று பச்சைப் பசேல் என்று இருந்தது. தலையிற் கிணற்றுத் தண்ணீர் படச் சிலீரென்று ஒரு புது உணர்வாக இருந்தது. அள்ளிஅள்ளித் தலையில் வார்க்க அடங்காத சிலிர்ப்பு. கிணற்றுத் துலாவில் இருந்து அணில் ஒன்று தாவி ஓடியது. ஒரு கவிதை எழுதலாம் போல் ஒரு வேகம். எல்லாம் அப்பா மீன் வாங்கிக்கொண்டு சைக்கிளில் திரும்பி வரும்போது நோ(ர்)மலுக்கு வந்தது.அப்பா என் தலையை விசித்திரமாகப் பார்த்தார். பிறகு ஒன்றும் பறையாமல் போய்விட்டார்.

கண்ணாடியில் என்னைப் பார்க்கும்தோது ஏனோ பண்டைக்காலங்களில் பெண்களால் முடியிழந்த மன்னர்கள் ஞாபகத்திற்கு வந்து போனார்கள். அப்போதே ஒரு முடிவு எடுத்தேன் 'இனி என் தலைமயிரை இப்படிக் கட்டையாக வெட்டுவது இல்லை" என.

*************

இப்படியே என் முடிப் பிரச்சினையும் திரௌபதியின் சேலை மாதிரி நீண்டு கொண்டு போனது. நான் இவளைக் கட்டி பிள்ளை குட்டிகள் பெத்து, நாப்பதைத் தாண்டினாலும் தலையில் முடி மட்டும் மற்ற நாற்பது பிளஸ் பேர்வழிகள் மாதிரிக் கொட்டவில்லை. பதிலாக முடி இன்னும் செழித்து வளரத் தொடங்கியது. சுகந்தி பயப்படத் தொடங்கினாள். "பேய் கீய் பிடித்துவிட்டதோ" என்று பயப்படுவதாகச் சொன்னாள். "நீ பக்கத்தை இருக்கேக்க எந்தப் பேய் கிட்ட வரும்?" என்று கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துக் கடி ஜோக்கை எடுத்து விட்டேன்.

"நான் சீரியஸ்சாக கதைக்க நீ நக்கல் விடுறாய் என்ன?" என்று கோவித்துக் கொண்டாள். பிரச்சினை அப்போதைக்கு முடிவுக்கு வந்தது. . இவள் "நீ' என்று விளித்தால் ஆள் கோபமாக இல்லை எனப் பொருள் படும் என்று அர்த்தம் . "நீர்" என்றால் கொஞ்சம் வில்லங்கம் . "நீங்கள்" என்றால் விருந்தினர் இருக்கிறார்கள் என்று அர்த்தம் -இல்லாவிட்டால் குழந்தைகள் காது கேட்குமிடத்தில் இருக்கிறார்கள். அடுத்தநாள் குண்டொன்றைத் தூக்கிப்போட்டாள்.

"இஞ்சரப்பா?"

"என்ன?"

"முடி நீக்கல் சிகிச்சை எண்டு ஒண்டைக் கேள்விப்பட்டனீங்களே?"

"என்னது கொப்பர் சொன்னவரே?"

"அந்தாளை இழுக்காட்டி உங்களுக்குத் திண்டது செமிக்காது என்ன?"

"சரி இருக்கட்டும், அதென்ன முடியகற்றும் சிகிச்சை?

"முடி நாட்டும் சிகிச்சை மாதிரி, இது அதுக்கு எதிர்!"

"ம்ம்ம்ம்ம்.."

"சரி இருக்கட்டும் எப்ப போறம்?"

"எங்கை?"

"விடிய விடிய ராமாயணாம், விடிஞ்சாப்போலை ராமன் சீதைக்குச் சித்தப்பா எண்ட மாதிரி...."

"சும்மா இரடி, ராமன் சீதைக்குச் சித்தப்பனாக இருந்தால் தப்பிப் பிழைச்சிருப்பான், எங்கைவது நிம்மதியாக...."

முடிவாக "3டி முடியகற்றும்" நிலையத்திற்கு போவது என்று ஒத்துக்கொண்டேன்.

"3டி முடியகற்றகம்" ரவுணில ஒரு ஹைஃபை'யான ஒரிடத்தில் இருந்தது. ஆரம்ம கொன்சல்ரிங் இலவசம். என்றாலும் பப்பளா என்றிருந்த கட்டடமும், குளுகுளு ஏசி'யும் நிறையைச் செலவு வைப்பார்கள் என்று தோன்றியது.

"திரும்பிப் போவமா?" என்று நைசாக நழுவும் ஐடியாவில் சுகந்தியைக் கேட்டேன். பதில் ஒன்றும் பேசாமல் அவள் முறைத்த முறைப்பில் கப்சிப் என்று இருந்துவிட்டேன். அதிகம் காத்திருக்க வைக்காமல் பெயரைக் கூப்பிட்டார்கள்.

கதவைத் திறந்து கொண்டு உள்ளிட்டால், "ஹாய் ஐ ஆம் தமாரா " என்று உதட்டுச் சாயம் கலையாத உச்சரிப்பில் அறிமுகப்படுத்தியவளை இவளுக்குப் பிடிக்கவில்லை என்று புரிந்தது. தன் அடர்த்தியான கூந்தலைத் தோள்வரை'தான் வளரவிட்டிருந்தாள்.

"சரி சொல்லுங்கோ.. " என்று தொடங்கினாள்.

"இவருக்கு 40 வயது கடந்தும், முடி இன்னும் காட்டுத்தனமாக வளருது, அதுதான் பேப்பரில உங்கடை விளம்பரத்தைப் பார்தனாங்கள்; வந்தம்" என்று உற்சாகமில்லாமல் தொடங்கினாள்.

"தலைமுடி எவ்வளவு அடர்த்தி என்று பார்ப்போம்" என்று ஹெல்மெட்  மாதிரி, ஆனால் இன்னும் சிக்கலான ஒரு கருவியைத் தலையில் மாட்டினாள் .
"நல்ல அடர்த்திதான், உங்கடை தலையிலை ஒரு ரோசாப்பூவை வைத்து அழகு பார்க்கலாம் போலுள்ளது. ... அவ்வளவு அடர்த்தி; பரவாயில்லை, குறைத்துவிடலாம், தொடர்ந்து சிகிச்சை எடுக்கவேண்டும்" என்று சொல்லத் தொடங்க, சுகந்தியின் முகம் கடு கடு என்று மாறியது.

படிரென்று எழுந்தாள். "வீட்டை போவோம்" என்று என்னை இழுக்காத குறையாக இழுத்துக்கொண்டு வெளியே வந்தாள்.


*************


"சரி அடுத்த அப்பொயின்ட்மன்ட் எப்ப?" என்று கண்ணைச் சிமிட்டினேன்.

"நான் வரல்லை, விருப்பம் என்றால் நீங்கள் போட்டுவாங்கோ" என்றாள் கொஞ்சம் வெட்கத்தோடு. முதல்நாள் கொஞ்சம் சிறுபிள்ளைத்தனமாக நடந்தது உறுத்தியிருக்க வேண்டும்.

"எனக்கு விருப்பமில்லை. நீ இப்ப பேன் பார்த்துவிட்டால் போதும்" என்றேன்.

"சரி" என்றாள்.

நான் மினக்கெடாமல் இவளின் மடியில் தலை வைத்துப்படுத்தேன்.

என் நீண்ட 'கூந்தலை'ப் பிரித்து பேன்களைத் தேடத் தொடங்கினாள்.

"அம்மா எனக்கும் பேன் கடிக்குது" என்றான் மூத்தவன்.

"எனக்கும்" என்றான் சின்னவன்.

கண்ணைச் சுழற்றிக்கொண்டு வந்தது நித்திரை.



Saturday, November 17, 2012

வைரவ சுவாமியும் கோனாச்சானாவும்

வைரவ சுவாமியை எல்லாருக்கும் தெரிந்திருக்கும். அவருக்கு ஒரு சின்னப் பிரச்சினை, இல்லைக் கொஞ்சம் பெரிய பிரச்சினை. அதைப் பிறகு பார்ப்போம். இப்ப கோனாச்சானா, கோனாச்சானா ஒரு தீவிர கடவுள் பக்தர். முருகன் சிவபெருமான், பிள்ளையார், உலகத்தில் உள்ள எல்லா அம்மன்கள், வைரவர்கள் என்று எல்லாக் கடவுளரையும் விட்டுவைக்காமற் கும்பிடுவார். இயேசு பிரானைத் தெரியாத ஊரிற் பிறந்துவிட்டார். இல்லாவிட்டால் அவருக்கும் ஒரு கும்பிடு போடாமல் இருக்கமாட்டார். கோனாச்சானா அவரிற்கு அவரின் அப்பா/அம்மா இட்டபெயராக இருக்கமுடியாது. கோ.சங்கரப்பிள்ளை தான் சுருங்கி கோனாச்சானா என்றாய் விட்டது. என்றாலும் ஊரில் முந்தநாள் மீசை முளைத்த பெடியளுக்கோ இல்லாவிட்டால் திரு கோ.சங்கரப்பிள்ளைக்கு அப்பா வயதில் உள்ளவர்களுக்கோ அவரின் இயற்பெயர் தெரியாது என்றுதான் சொல்வார்கள். எலக்சன் சமயத்தில் ஓட்டுப் போடுமிடத்தில்தான் இவரின் இயற்பெயர் அழைக்கப்படும். சங்கக்கடை மனேச்சர்கூட "கோவன்னா சங்கரப்பிள்ளை" என்று கூப்பன் மட்டையைப் பார்த்து முணுமுணுப்பாக வாசித்துவிட்டு உரத்து "கோனாச்சானா" என்றுதான் அழைப்பார். முறையாகப் பார்த்தால் "கோவன்னாச் சானா" என்றுதான் வரவேண்டும். இத்தவறை யாரும் கவனிப்பதாக இல்லை.

வயசென்று பார்த்தால் இவருக்கு ஒரு அறுபத்தைந்து மதிக்கலாம். கொஞ்சம் ஒல்லியான ஆனால் உறுதியான தேகம். சட்டை போடமாட்டார். சாரம் -அல்லது கோயில், குளம், விஷேசம் என்றால் வேட்டி அணிவார். மேலே போடும் துவாய், வேட்டியணியும் நாட்களில் நல்ல கைத்தறிச் சால்வையாக மாறும். நெற்றியில் எப்பவும் திருநீறு. போகிறவழியில் கோயில் இருந்தால் சந்தனத்தை எடுத்து நெஞ்சில் பூசுவார். சிக்கனம் எல்லாம் பார்க்காமல் நிறையப் அப்பி விடுவார். ஐந்து ஆறாம் வகுப்புவரை படித்திருக்கலாம். அந்தக் காலங்களில் அது ஒரு பெரிய பிரச்சினை இல்லை. ஆசாமியின் சிந்தனை எல்லாம் எப்போதும் "வயல், குளம், நெல்லு, குரக்கன், வெங்காயம் , மிளகாய், ஆடு, மாடு" என்றுதான் இருக்கும். வேறு எதைப்பற்றியும் கதைப்பதில்லை. நல்ல மனிசன், ஆனால் நல்ல மனிசனாக இருப்பதாற் கொஞ்சம் அப்பாவி.

வைரவ சுவாமியும் ஒரு அப்பாவிதான். கெட்டித்தனமாக நடந்து நல்லூர்க் கந்தன் மாதிரி ஒரு கோவிலில் குந்தியிருக்கத் தெரியவில்லை. மக்கள் ஊருக்கு ஊர் மரத்திற்குக் கீழே ஒரு சூலத்தை நட்டு இது உனக்குப் போதும் என்று சொல்லிவிட்டார்கள். சில ஊர்களில் பரிதாபப் பட்டு மூன்று பக்கமும் சுவர் வைத்து ஒரு "இசுக்குட்டி" கோவில் கட்டி வைத்தார்கள். வைரவருக்கும் தணியாத ஆசை. ஒரு 'சோக்கான கோவிலில்' ஆறுகாலப் பூசையுடன் 'செற்றில்' பண்ண. இது சரிவராவிட்டால் சந்நிதி கோவில் மாதிரி ஒரு சுமாரானா கோவில் என்றாலும் பரவாயில்லை என்று ஒரு 'பிளான் B" உம் வைத்துள்ளார். முன்னமே சொன்னேன் வைரவர் கொஞ்சம் அப்பாவிதான். அவருக்கு பசையுள்ள ஒரு ஆசாமியின் கனவில் தோன்றி, "பக்தா, எனக்கு ஒரு கோவில் கட்டாமல் காலத்தைக் கடத்துகிறாயா?" என்று நைச்சியமாகச் சொல்லத் தெரியவில்லை. இரண்டு, மூன்று கமக்காரர்களின் கனவில் தோன்றி, "பக்தா, எனக்குக் கோயில் கட்டு" என்று நேரடியாகவும் சொல்லிப் பார்த்தார். முதல் ஆள் தீவிர பெரியார் பக்தர். "எடே உழைக்காத கள்ளா! ஓடித்தப்பு" என்று பாதி நித்திரையில் எழும்பிக் கத்தத் தொடங்கினார். இரண்டாவது ஆள் மறதி/மாறாட்டக்காரன். காலை நித்திரையால் எழுந்ததும், "அட, கோவிலுக்கும் பொங்கச் சொல்லி வைரவர் சொன்னவர்" என்று பெண்டாட்டிக்குச் சொன்னர். மனைவி சீரியஸ்ஸாக எடுக்கவில்லை. எனவே வைரவருக்குப் பொங்கல் கூடக் கிடைக்கவில்லை.

மூன்றாவது முறை வைரவருக்கு 'லக்' அடித்தது. பெரிய கிணற்றடி சின்னையா உடனே அலுவலைப் பார்க்க எண்ணினார். கையில் காசில்லை. அடுத்த போகம் வெங்காயத் தோட்டத்தைப் பத்தாயிரம் கன்றாக்கினார். வைரவருக்கு கோவில் வரப்போகுது என்று புரியத் தொடங்கியது. 'நல்லூர்க் கந்தசாமி" கோவில் மாதிரி இல்லாவிட்டாலும் இப்போதைக்கு ஒரளவு பெரிய கோவில் எனக்கு என்று கனவு காணத் தொடங்கினார் உடம்பும் பூரிப்பாக மாறி மினுமினுக்கத் தொடங்கியது. பெரிய கோவில் என்றால் நல்ல 'பொலிஷ்' ஆகவும் இருக்கவேண்டும்தானே. வைரவருக்கும் தான் கொஞ்சம் 'வெள்ளையாக' மாறினால் என்ன என்று ஒரு சின்ன ஆசையும் வந்தது.

கோவில் விடயத்தில் நடந்ததோ வேறை. கிணத்தடிச் சின்னையாவுக்குக் அடுத்த போகம் வெங்காயம் நல்ல விலைக்குப் போனது. லொறிக் கூலி, நாலம் குறுக்குத் தெரு 'கமிசன் கடைக்காரனின்' வெட்டுக்கள் எல்லாம் போயும் கையில் காசு கனக்க மிஞ்சியது. எல்லாம் "வைரவர் அருள்" என்று சொல்லிக்க கொண்டார். சொல்லிக் கொண்டாலும் "கனவை நம்பிக் கோவில் எல்லாம் கட்டவேண்டுமா?" என்றும் சற்று சிந்திக்கத் தொடங்கினார். ஆரம்பத்தில் இருந்த வேகம் இப்போது இல்லை. என்றாலும் தெய்வக் குற்றம் ஏதாவது செய்ய வேண்டும். சின்னையர் அருகில் உள்ளா ஒரு கொல்லன் பட்டடைக்குப் போனார். திருப்பி வரும்போது நல்ல இரும்பில் 'அடித்த' ஒரு திரிசூலம் ரெடி. அன்றைக்குப் பின்னேரமே ஊருக்கு வடக்குப் புறம் இருக்கிற வெளிக்குப் போனார். வெறுமனே போகவில்லை. பெண்டாட்டி பிள்ளை, குட்டி, மூன்று கடகம் மோதகம், இரண்டு கடகம் வடை, இரண்டு பெரிய கதலி வாழைக் குலைகளுடன்தான் போனார். றோட்டுக் கரையில் இருகிற ஒரு சுமாரான சைஸ் மருத மரத்தைத் தேர்ந்தெடுத்தார். நிலத்தில் முறுகிப் பரவியிருந்த வேரில் திரிசூலத்தைக் கஷ்டப்பட்டுக் குத்தினார். இப்படித்தான் கண்டாமடம் வைரவர் கோவில் வந்த கதை.

வைரவருக்கும் கொஞ்சம் மனக்குறைதான். "மூன்று பக்கமும் சீமந்துச் சுவராவது கட்டியிருக்கலாம்" என்று முணுமுணுத்துக் கொண்டார்.

**************************

கண்டாமடம் வைரவர் கோவில் இருப்பது ஊரில் இருந்து கொஞ்சத் தூரம் தள்ளி. இன்னும் கொஞ்சத் தூரம் போனால் சுடலை. இடம் களிமண் தரை. வெங்காயம், நெல், குரக்கன் ,சாமி (சாமை) எல்லாம் விளையும் காணிகளும் அருகில். என்றாலும் வைரவர் கோவில் இருக்குமிடம் முள்ளுக்காடுகள் நிறைந்த இடம். இடைக்கிடை இருக்கும் வெறும் நிலத்தில் மழை பெய்யுங்காலங்களில் நல்ல பச்சைப் புல் முளைக்கும். பக்கத்தில் நல்ல தண்ணிக் கிணறும் உண்டு. பள்ளிக் கூடம் விட்டபின் ஆடு, மாடு மேய்க்கும் சிறுவர்கள், விடலைகள் இந்த இடத்தில் சந்திப்பார்கள். பெடியளுக்கு தினமும் ஆடு, மாடு மேய்ப்பது, கிட்டிப்புள் விளையாடுவது, வீட்டில் இருந்து களவாகக் கொண்டுவரும் தேயிலைத்தூள், சீனி, உடன் கறந்த பாலுடன் டீ போட்டுக் குடிப்பது என்று அலுத்துவிட்டது. வைரவருக்கும் வடை, வாழைப்பழத்துடன் படையல் கிடைப்பதுவும் அருகி விட்டது. இப்படி ஒருநாளில் தான் ஒரு பெடியன் வைரவருக்கு வேண்டுதல் வைத்தான், "வைரவரே எங்களுக்குத் 'பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் தேவையில்லை. தினமும் வடை, மோதகம், புக்கை, வாழைப்பழம் என்று கிடைக்க வழி செய்வாய்" என.

வைரவருக்கும் கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விட விருப்பமில்லை. "யார் சொன்னது, இவங்களில் யாரோ ஒருவன் படித்து டாக்குத்தர், இஞ்சினியர், எக்கவுண்டன் என்று பின்னாட்களில் நன்றாக வந்தால் ஒரு பெரிய சோக்கான கோயில் எனக்குக் கட்ட மாட்டாங்களா என்ன?" என்று கணக்குப் போட்டார். இந்த இடத்தில் நீங்கள் சிரிக்கக் கூடாது. முன்னமே சொல்லி விட்டேனே வைரவர் ஒரு அப்பாவி என்று. அத்தோடு வைரவர் கணக்கிலும் 'வீக்'. இருக்கட்டும், வைரவர் அருள் பாலிக்கத் தீர்மானித்தார். அத்தோடு அவர் இப்பதான் 'தீடீரெனத் தெரிவதும் உடனே மறைவதும்' கலையைக் கற்கத் தொடங்கி சுமாரான வெற்றியும் ஈட்டுகிறார். (சிலவேளை சொதப்புகிறார், அநேகமாகச் சரிவருகிறது).

சிலநாட்கள் இப்படியே போய்விட்டது. வைரவருக்கும் இப்போது கனவிற் தோன்றி வேண்டுதல் அல்லது கட்டளை கொடுப்பதில் நம்பிக்கை குறைந்துவருகிறது. மக்கள் இதையெல்லாம் சீரியஸ் ஆக எடுகிறார்கள் இல்லை. இனிக் கொஞ்சம் 'வித்தியாசமாக' எதையாவது செய்வது என்று தீர்மானித்தார்.

ஒரு புதன்கிழைமை காலை பதினோரு மணி. கோனாச்சானா கண்டாமடம் வைர. கோவிலில் வந்து "அப்பனே, முருகா, வைரவா!" என்று ஒரு கும்பிடு போட்டார். பிறகு செவிகளைப் பிடித்துக் கொண்டு மூன்று முறை தோப்புக்கரணம் போட்டார். கண்களை மூடாமலே வேண்டுதல்களைச் சொல்லத் தொடங்கினார்.

"பக்தா கண்களை மூடு" திடீரேன ஒரு குரல் மருதமரத்தில் இருந்து கேட்டது. குரலில் ஒரு தெய்வீகம். ஆனால் ஒருவித கம்பீரமான உத்தரவிடும் தொனி.

"ஐயா நீங்கள் ஆர்?" கோனாச்சானா கண்களைத் திறக்காமல் பயபக்தியாகக் கேட்டார்.

வைரவருக்குக் கடுப்பு. இந்தநேரம் இது "முருகன், சிவபெருமான், பிள்ளையாராக' இருந்தால் இப்படி ஒரு கேள்வி வருமா? என் குரலில் 'தெய்வீகத்தன்மை" போதாதா? எனறு ஒருவித சுய பச்சாபமும் வந்தது. என்றாலும் வைரவர் முடிவெடுத்ததை நிறைவேற்றியே தீருவேன் என்றிருந்தார்.

"பக்தா மேலே பார்"

"ஒண்டுமே தெரியல்லையே?"

"கண்களைத் திற பக்தா" ரொம்ப மினக்கெட்டுக் கனிவாகச் சொன்னார் வைரவர்.

இப்பதான் கோனாச்சானா கண்களைத் திறக்கிறார். மருத மரத்தில் ஒரு கரிய குண்டான ஒரு பேர்வழி. சுருட்டை முடி. கொட்டைப் பாக்கு முழி. பெரிய தொந்தி. ஆனால் உறுதியான உடல்வாகு.இரண்டு வேட்டைப் பற்களும் வாயை மூடியிருக்குப்போதே மிக மெலிதாகத் துருத்திக் கொண்டு வெளியே தெரிந்தன. இவரின் தந்தையார் இவர் சிறு பிள்ளையாக இருக்கும்போது வைரவ சுவாமி எப்படி இருப்பார் என்று சொல்லியிருந்தார். எல்லாம் பொருந்தி வந்தது. ஆனால் இந்த வைரவர் கொஞ்சம் வயசாளி மாதிரி இருந்தார்.

"இது மெய்யா அல்லது யாரும் விளையாடுகிறார்களா?" என்று யோசிக்கும்போதே வைரவர் மறைந்து விடுகிறார். கோனாச்சானாவிற்கும் இது வைரவ சாமிதான் என்று புரிகிறது.

"பக்தா கண்களை மூடு" வைரவர் அவசரமாகச் சொல்கிறார். (கன நேரம் மறைந்திருப்பது சிரமம். அத்தோடு வைரவருக்கும் தன் 'மறைந்திருக்கும்" கலையில் அவ்வளவு நம்பிக்கை இல்லை.)

"எனக்குத் தினமும் வடை, மோதகம், புக்கையுடன் படையல் வைப்பாய். அத்தோடு பாயசமும் இருந்தால் நல்லது" வைரவர் கடைசியாகச் சொன்னது இதுதான். கோனாச்சனா அரை மணித்தியாலம் கழித்துத்தான் கண்களைத் திறந்தார்.



**************************

கதை ஊரில் பரவி விட்டது. நினைத்ததைவிட அதிகம் பேர் நம்பினார்கள். நம்பியவர்கள் எல்லாம் அள்ளி வழங்க, வைரவருக்குத் தினமும் வடை, மோதகம், புக்கை, சிலநாட்களில் பாயசம் என்று வேட்டைதான். பின்பலனாக ஆடு மேய்க்கும் சிறுவர்களுக்கும் தினமும் இவை கிடைத்தன. இது, இரு கிழமைகள் தொடர்ந்தன. மூன்றாம் கிழமையில் இருந்து வடை இருந்தால் மோதகம் இல்லை அல்லது மோதகம் இருந்தால் வடை இல்லை என்றாய் விட்டது. பிறகு அவற்றின் எண்ணிக்கைகளும் குறையத் தொடங்கியது. நாட் போகப் போக வடை மோதகமெல்லாம் மெலியத் தொடங்கின. ஆடு மேய்க்குக் சிறுவர்களுக்கு இப்போது ஆளுக்குப் பாதி வடை அல்லது மோதகம் கிடைத்தால் அதிசயம்.

தினமும் படையல் என்பது வாரம் ஒன்றாகியது. பிறகு அமாவாசை , பௌர்ணமி என்று சிறப்பு நாட்காளில் மட்டும். பிறகு எல்லாரும் வைரவரை மறந்து விட்டார்கள். வைரவர் மட்டும் கொண்ட கொள்கையில் பிடியாக இருந்தார்.

அன்றைக்கு ஒரு நல்ல பௌர்ணமி நாள். கோனாச்சானா தோட்டத்திற்கு இறைப்பு வேலை முடிந்து அலுத்துப் போய் கண்டாமடம் வைரவர் கோவிலில் "அப்பனே, முருகா, வைரவா!" என்று சொல்லிக்க் கொண்டு சாமி கும்பிடத் தொடங்கினார். இரவு எட்டு மணி இருக்கும். நிலவு உண்மையிலேயே இரவைப் பகலாக்கியமாதிரி எறித்துக் கொண்டிருந்தது.

"பக்தா கண்களை மூடு" அசரீரி கேட்டது. இவர் நிமிர்ந்து மேலே பார்த்தார். மரத்தில் அதே வைரவர்தான்.

"பொறுக்கிப் பயலே, என்னை ஏமாத்திறியா?" என்று அருகில் இருந்த நீண்ட கம்பைத் தூக்கிக் கொண்டு கோபமாக இவர் வர, மரத்தில் இருந்து குதித்து ஓடித் தப்பினார் வைரவர்.



-------------------------------------

படம் http://www.tamilmurasuaustralia.com/2010/07/blog-post_1486.html இலிருந்து

கதைக்குத் தேவையில்லாத குறிப்பு: 'வைரவர்' இலங்கையில், முக்கியமாக யாழ்ப்பாணத்தில் வழிபடப்படும் ஒரு கிராமக் கடவுள். தென்னிந்தியாவில் வைரவர் வழிபாடு இல்லை எனச் சில பதிவுகள் வாயிலாக அறிகிறேன். என்றாலும் கிராமப் புறங்களில் இருக்கும் மாடசாமி, ஐயனார் மாதிரிக் கடவுளர் இதுமாதிரித்தான் என ஊகிக்கிறேன்.

இசுக்குட்டி- மிகச் சிறிய, தம்மாத்துண்டு

Tuesday, October 23, 2012

மனைவியைச் சந்தோஷமாக வைத்திருப்பது எப்படி?

மனைவியைச் சந்தோஷமாக வைத்திருப்பது எப்படி?
(20 வழிகள்)

என்று இணையத்தளம் ஒன்றில் வெள்ளைக்கார அம்மணி ஒருவர் எழுதியிருந்தார். அதை நான் எங்கள் 'கலாச்சாரத்திற்குப்' பொருத்தும் வகையில் மொழிபெயர்த்து என் கொமென்ற்'களுடன் கீழே தருகிறேன்.

(1)மனைவியைப் பார்த்துப் புன்சிரியுங்கள். நீங்கள் ஒன்றும கதை/வசனங்கள் பேசத் தேவையில்லை, வெறுமனே ஒரு கனிவான புன்னகையைக் கசியவிடுங்கள். முக்கியம் புன்னகைக்கும்போது அவள் கண்களைப் பார்க்கவேண்டும்.

நீங்களே 'ஒன்றும் பேசத் தேவையில்லை' என்று சொல்லிவிட்டீர்கள். பிறகு என்ன? கடைப் பிடித்துப் பார்த்தேன். "சும்மா அசட்டுச் சிரிப்புச் சிரிச்சுக் கொண்டிருக்காமல் வூல்வேர்த்'துக்குப் போய் இந்த லிஸ்ட்'இல இருக்கிற எல்லாத்தையும் வாங்கி வாங்கோ" என்று ஒரு நீஈஈஈளமான ஒரு பேப்பர்த் துண்டு வந்தது.


(2) அவளிடம் (கோபத்தில்) கத்தவேண்டாம். மென்மையாக, மகிழ்வாக, அடங்கிய குரலில் பேசவும். (அடக்கி வாசிக்கச் சொல்லுறா). அவள் காதுகளில் கத்துவது அவளுக்கு ரொம்பக் கோபமூட்டும். நீங்கள் கத்தாமலேயே அவளுக்குக் காது கேட்கும்.

என்னது? கத்துவதா? மூச். அம்மா தாயே நீங்கள் எந்த நூற்றாண்டில் இருக்கிறீர்கள்?


(3) மனைவி சொல்வதை எப்போதும் கேளுங்கள். அது மிகவும் கஷ்டமானது என்று எனக்குத் தெரியும். உங்களால் அவள் சொல்வதைக் கொன்சென்ரேட் பண்ணிப் புரிந்துகொள்ள முடியாது. அது போறிங்'ஆக இருக்கலாம் அல்லது நீங்கள் செய்து கொண்டிருக்கும் வேலையைப் பாதியில் விட வேண்டி வரலாம். முயற்சி செய்யுங்கள். அவள் முக்கியமான ஒன்றைச் சொல்லவரலாம்.

இதைத்தான் எங்கள் தமிழர் "மனைவி சொல்லே மந்திரம் என்பார்கள்". யாருக்காவது மறுக்கிற துணிச்சல் உண்டா?

(4) மனைவி எதாவது ரிப்பேர், அல்லது வேறு 'அலுப்பு' வேலைகள் செய்யச் சொன்னால் எதையும் பின்போடாதீர்கள். சூடாற முதல் செய்யவும். இதெல்லாம் உங்கள் நல்லதுக்குத்தான் அவள் சொல்லுகிறாள்.

நாம் பிறப்பு எடுத்ததே எதற்காக? இதுமாதிரித் தொட்டாண்டி வேலை பார்க்கத்தானே?

(5)உங்கள் மனைவியைப் புகழ்ந்துதள்ளுங்கள். பாசாங்கு பண்ணாமல் 'உண்மையாகவே' சொல்லவும். அவள் 'ஷொப்பிங்' போனால், "உனக்கு என்ன வாங்கினாய்" என்று அக்கறையாகக் கேட்கவும். அப்படிக் கேட்டால்தான் அவள் வாங்கிவந்த "ட்ரஸ்' உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்று அவளுக்குப் புரியும்.

நான் மெய்யாகவே புகழ்ந்துதான் சொல்லுகிறேன்.. போனகிழமைகூட "நீ கிண்டிய கேசரி நல்லாகத்தான் இருக்குது" என்று புகழ்ந்தேன். 'கேக்குக்கும் கேசரிக்கும் வித்தியாசம் தெரியாதா?' என்று கோபித்துக் கொண்டாள்.

(6)ரொம்பக் கஞ்சத்தனம் வேண்டாமே. அவளுக்குக் தேவையானல எல்லாவற்றையும் நீங்களே வாங்கிக் கொடுத்துவிட்டால், அவளுக்குக் காசு செலவழிக்க வேண்டிய தேவை இல்லையல்லவா?

வேறை வழி?

(7)காசை வீணடிக்காதீர்- குடி, பீடி/சிகரட், 'படம்' போட்ட புத்தகம் என்று...

சான்ஸ்ஸே இல்லை

(8) ரொய்லட் மூடியை எப்போதும் மூடி வைத்திருக்கவும். உங்கள் மனைவி இது விசித்திரம் என்று நினைத்தால், உள்ளே உள்ள 'தண்ணீர்' தெரியாமல் இருப்பது அழகு என் விபரிக்கவும்.

இது புரியவே இல்லைங்கோ.

(9) உங்கள் உடைகளை நிலத்தில் வீசி எறியவேண்டாம். உடை மாற்றியதும் அழுக்கு உடைகளை அதற்குரிய 'லோண்டரி பாஸ்கற்' இனுள் போடவும்.

(10) பற்களை ஒழுங்காகத் துலக்கவும்.

(11) ஒழுங்காகக் குளிக்கவும்.

மேலே (9), (10), (11) - ஞாபகம் இருக்கும் குழந்தைப் பருவத்தில் இருந்ததே யாராவது சொல்லிக்கொண்டுதான் உள்ளார்கள். சின்ன வயசிலே (அதாவது கல்யாணம் கட்டமுதல்) அப்பா/அம்மா, இப்ப மனிசி. ஆனால் மனிசி ஒருக்கா மட்டும்தான் ஓ(ர்)டர் போட்டது சொன்னது. பிறகு திருப்பிச் சொல்லவேண்டிய தேவை வரவேயில்லை.

(12)குப்பைகளை வெளியே எடுத்துச் செல்லவும். அது உங்கள் வேலை, அவளுடையது அல்ல.

நீங்கள் சொல்லமுதலே-- சிட்னியிலே, இந்தச் சில்லுப் பூட்டிய குப்பை வாளிகளை (Wheelie Bins), தந்தைக் குலம்தான் வீதிக்கரைக்கு இழுத்துச் செல்லும். சிட்னியில் மட்டுமல்ல, முழு அவுஸ்திரேலியாவிலேயும் அப்படித்தான்..

(13) அவளிடம் கார் இருப்பின், சே(ர்)விஸ்ஸிற்கு நீங்கள்தான் எடுத்துச் செல்லவேண்டும். எப்போது அடுத்த சே(ர்)விஸ் வருகின்றது என்று நீங்கள்தான் ஞாபகம் வைத்திருக்கவேண்டும்.

மேலே (6) ஐப் பார்க்கவும்

(14) ரிவி'யில் என்ன பார்ப்பது என்று அவள்தான் முடிவெடுக்கவேண்டும். அவள் பார்க்கும் 'மெகா' சீரியலைப் பக்கத்தில் இருந்து முடியும்வரை பார்க்கவும். வெறுமனே தேமே'யென்று பார்த்தால் போதாது. 'சுவாரசியமாகப்' பார்க்கவேண்டும்.

மாட்டேன் போ!! நேற்றுத்தான் "மாற்றான்" பார்த்தேன்.

(15) உங்களுக்கான உடைகளையோ பாதணிகளையோ அவளே தேர்ந்தெடுக்கட்டும். எப்படியும் நீங்கள் தேர்ந்தெடுப்பதைவிட அவை நன்றாக இருக்கும்.

சொந்தமாக ஒரு விருப்பு/வெறுப்பும் இருக்ககூடாது என்கிறீர்கள். இதைத்தான் ஞானிகள் "பற்றற்றிரு" என்றார்கள்.

(16) (மிக முக்கியம்). எக்காரணம் கொண்டும் மனைவிமேல் கோபமாகவே வேண்டாம். ரொம்பச் சூடானால், உடனே வெளியே போய் காலாற நடக்கவும். சூடு இறங்கியபின் உள்ளே வரவும். வந்தவுடன் மனைவிக்கு ஐஸ் வைக்கவும்.

மேலே (2) இல் சொல்லியும் உங்களுக்குத் திருப்தி வரவில்லை. ம்ஹூம். ரொம்பச் 'சூடானால்' வெளியே துரத்தப்படுவீர். எனவே வெளியே கௌரவமாக நாங்களாகவே முதலில் போகச் சொல்லுகிறீர்கள் போல.

(17) மனைவியிடன் 'ஐ லவ் யூ' அடிக்கடி சொல்லவும். நிறைந்த மனத்துடன் சொல்லவும். நக்கல் கூடவே கூடாது.

ற்ம்ம்ம்ம்ம்ப முயற்சித்தேன். "இது நக்கலா? அல்லது கிண்டலா?" என்கிறாள்.

(18)உங்கள் மனைவி எதாவது ஒரு சிக்கலில் மாட்டுப்பட்டால், புரிந்துணர்வுடன் நடவுங்கள். குற்றம் சாட்டும் வேலை எல்லாம் வேண்டாமே.

குற்றம் சாட்டும் அளவிற்குத் துணிச்சல்?

(19) நீங்கள் சிக்கலில் மாட்டுப்பட வேண்டாம். அப்படி மாட்டுப்பட்டாலும் அவளையும் உதவிக்கு இழுக்காது நீங்களே தனித்துத் தீர்த்து வைக்கவேண்டும்.

முயற்சிக்கிறேன். மேலே (18) இல் இருக்கிற மாதிரி புரிந்துணர்வு கிடைக்குமா?

(20) (மிக முக்கியம்) அவள் உங்கள் வேலைக்காரி இல்லை. அவள் பேசும்போதெல்லாம் 'கப்சிப்' என்று கேட்கவேண்டியது உங்கள் வேலை. அவள் பேசும்போது குறுக்கிடவேண்டாம்.

ஏற்கெனவே அப்படித்தானே? அவள் பேச, நான் கேட்கமட்டும் முடியும். சின்னச் சந்தேகம். (1) இலிருந்து (20) வரை உள்ளதைப் பார்க்க 'நாமதான்' வேலைக்கா..... சரி சரி எனக்கேன் வம்பு?



---------------

Image from: http://www.cartoonfaces.net/2009/11/cartoon-picture-of-cute-little-dog-with.html

Monday, October 15, 2012

நொந்தபோபால் 2

(கண்டிப்பாக நாற்பது வயது தாண்டியோருக்கு மட்டும்)

பாலகோபாலுக்கும் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்திற்கும் இரண்டு ஒற்றுமைகள் உண்டு. ஒன்று மிகச் சாதாரணமானது. இருவரும் தமிழர். மற்றது கொஞ்சம் முக்கியமானது. இருவரும் பிறந்த ஆண்டும் 1969. வயதைக் கணக்கிட்டால் கோபால் வெறும் 43 வயதான வாலிபன். அட, நம்ம Felix Baumgartner இற்குக்கூட வயசு வெறும் 43 தானே!

கொஞ்சநாளாக கோபாலுக்கு ட்ராபிக் பொலிசுடன் தகராறு. 'பிழையான' இடத்தில் கார் பா(ர்)க் பண்ணியது, 50 கிமீ/ம வலயத்தில் வெறுமனே 65 கிமீ/ம இல் ஓடியது என்று "தம்மாத்துண்டு" விசயங்களுக்குக் எல்லாம் தண்டம் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 500 டொலருக்கும் அதிகமாகக் கட்டினான். நொந்து நூலாகிப் போன இவன் இப்ப பஸ்'ஸில்தான் வேலைக்குப் போய் வருகிறான்.(காரை ஓட்டினால்தானே ஃபைன் எல்லாம்?). பஸ்ஸில் குறைந்தது இரண்டு, மூன்று 'தேங்காய்ப்' பார்ட்டிகளாவது கூடவரும். ஆனால் 'தேங்காய்ப்' பார்ட்டிகள் சக 'மண்ணிறத் தோலர்'களுடன் பேசமாட்டார்கள். ஒரு அசட்டு அறிமுகச் சிரிப்புச் சிரித்தாலும் ஒரு முறைப்பு முறைத்து விட்டு ஐ'ஃபோனையோ அல்லது ஏதோ ஒரு கொரியன் ஃபோனையோ மும்முரமாகத் தேய்க்கத் தொடங்குவார்கள். இவனும் வெறுத்துப் போய் இப்ப சக மண்ணிறங்களைப் பார்த்துப் புன்னகைப்பதில்லை. 'தானும் ஒரு தேங்காய்ப் பேர்வழியாக ஆகி விட்டேனோ?' என்று ஒரு டவுட்டு மட்டும் அப்பப்ப வந்து போகிறது இவனுக்கு.

ஒரு புதன்கிழைமை இப்படித்தான் இவன் பஸ் ஸ்டாண்ட்டில் பஸ் வரவில்லை. ஒரு இருபது, இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க 'சின்னப் பெடியன்' கோபாலுக்குக் கிட்ட வருகிறான்.

"உங்களை நான் எங்கோ பார்த்திருக்கிறேனே?" என்றான் ஒரு சிநேகிதமான புன்னைகையுடன். சுருட்டை முடி, கொஞ்சம் புசுபுசு என்று அகலமான முகமும் சற்றுப் பருத்த உடலும். . மலையாளியாக இருக்கலாம் . கொஞ்சம் மூளையைக் கசக்கியதில் மெதுவாக ஞாபகம் வந்தது.

" மூன்று நான்கு வருடங்களின் முன் உங்களிடம் என் மகன் நீச்சல் பழகினான், உங்கள் பெயர் சாம் என்று நினைக்கின்றேன். உங்களுடன் அதிகம் பேச முடியவில்லை"

"பிரச்சினை இல்லை. பிரியந்த சமரதுங்க என் பெயர், சாம் என்று சுருக்கிவிட்டேன்"

"அப்ப நீங்கள் இலங்கையில் எங்கே"

"கண்டி"

கண்டி என்றதும் குஷியாகிவிட்டான் கோபால். இவன் நான்கு வருடங்கள் படித்தது கண்டிக்குக் கிட்டவுள்ள கம்பஸில்.

"தொண்ணூற்றொன்றில் இருந்து தொண்ணூற்றைந்து வரை நான் பேராதனையில்தான் படித்தேன்"

"அப்போது நான் ஆரம்பப் பள்ளியில்.." சாம் இப்ப ஒரு வயதான பேர்வழியுடன் பேசிக்கொண்டிருப்பதாக உணர்ந்திருக்க வேண்டும்.

ஒரு அசௌகரிய மௌனம் வந்து குந்திக் கொண்டது. "உங்களுக்குக் ஆட்களுடன் கதைக்கப் பேசத் தெரியாதப்பா" என்று மனைவி காதுக்குள் சொல்லுவதுபோல் ஒரு பிரமை இவனுக்கு. இப்படி 'அச்சுப் பிச்சென்று' கதைப்பவர்களை "பெக்கோ" என்று இவன் கல்லூரிக் காலங்களில் அழைப்பார்கள்.

இப்படி அசௌகரியமாகத் தொடங்கிய பஸ் நட்பு, நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்ந்தது. கோபால் தன் பழைய சிறுவயதுக் குறும்புகள் , சிறுபிராய நனைவிடை தோய்தல்கள் என்று பெரிய பாராயணங்களையே மெதுவாக எடுத்துவிட்டான். 'சாம்'உம் தன் பழைய காதல் , ஊரில் புதுவருசத்திற்குக் 'கிரிபத்' சாப்பிட்ட ஞாபகங்கள் -அது இது என்று தன பங்குக்கு எடுத்து விட்டான். இரண்டுபேரும் "புலிக்கதை" கதைப்பதை மட்டும் கெட்டித்தனமாகத் தவிர்த்தார்கள்.

**************************
இப்போது சிட்னியில் "வேலைத்தளங்களில் ஆட் குறைப்புத்தான்' எல்லா இடங்களிலும் பேசப்படும் ஒரு பொதுத் 'தலைப்பு'.

இன்றைக்குக் கதை இப்படிப் போனது.

கோபால்: எனக்கு 'இந்தக்' கம்பனியில் குப்பை கொட்டி அலுத்து விட்டது. ஆள் குறைத்தலில் அகப்பட்டு கொஞ்சக் காசு எடுத்தால் சந்தோசமாக வேறு வேலை எடுத்துவிடுவேன்.

சாம் : உங்களை மாதிரி ஆட்களை இலகுவில் வெளியே அனுப்ப மாட்டாங்கள்.

கோபால் ஒரு கணம் சிலுசிலு என்று உணர்ந்தான். தன்னை மாதிரி எக்ஸ்பீரியன்ஸ் + அறிவு உள்ளவனை இலகுவில் "வீட்டை போ" என்று சொல்லமாட்டாங்கள் என்று சொல்ல வருகிறான் என்று புளகாங்கிதம் அடைந்தான்.

சாம்: வயசு போனவர்களை இலகுவில் அனுப்ப மாட்டார்கள். அது கம்பனிக்குக் கனக்க காசு செலவழியும் வழி. பதிலாக 'அதிகரிப்புக்களை' நிறுத்தி வைத்தல், உன் வேலை சரியில்லை என்று நொட்டை நொடுக்குச் சொல்லுதல்மாதிரி இம்சை வேலை செய்து நீங்களாகவே வெளியில் போகச் செய்வாங்கள்.

பஸ்'ஸில் வீடு வரும்போது வழியில் இருந்த முதியோர் இல்லத்தைக் கொஞ்சம் பயத்தோடுதான் பார்த்தான் போபால்.


------
அரும்பதவுரை:

'தேங்காய்ப்' பார்ட்டி - Coconut Party- Brown outside, white inside. தங்களைத் தாங்களே வெள்ளையராகப் பாவனைப் பண்ணிக் கொண்டு திரியும் பேர்வழிகள். ஏதோ தங்கள் கெட்டகாலம் தாம் மண்ணிறமாகப் பிறந்துவிட்டோம் என்பது மாதிரித்தான் இவர்களின் உடல் மொழி இருக்கும். சீனர்களில் இருக்கும் இவ்வாறானவர்களை Banana Party என்பார்கள்.

Sunday, August 26, 2012

சுவையான தேநீர் போடுவது எப்படி?

சீன மகாராஜா ஷெனொங் 'சுடுதண்ணி' குடித்துக்கொண்டிருந்தார். நிச்சயமாக அரண்மனையில் இல்லை. வெளியில் எங்கோ காட்டில் என்று வைத்துக் கொள்வோம். திடீரென்று குடித்துக் கொண்டிருந்த சுடுதண்ணி சுவையாக மாறியது. அதன் நிறமும் மாறிவிட்டது. மாண்புமிகு ஷெனொங் அவர்களுக்கு அளவுக்கு அதிகமாகக் கடவுள் நம்பிக்கை அல்லது பேய்,பிசாசு நம்பிக்கை இல்லைப் போல. தேத்தண்ணிப் பேணிக்குள்ளே மெதுவாகப் பார்வையை விட்டார். எங்கிருந்தோ மரத்தில் இருந்து உதிர்ந்து பேணிக்குள் விழுந்திருந்த இலைகளைக் கவனித்தார். வேறு பேர்வழிகள் எனில் உடனே கவிதை எழுதத் தொடங்கியிருப்பார்கள். மகாராஜா புத்திசாலி. ஆராய்ந்து பார்த்து அந்த இலைகள் எந்த மரத்தில் இருந்து உதிர்ந்தன என்று கண்டுபிடித்தார். இதுதான் தேநீர் பிறந்த வரலாறு.

நல்ல தேநீர் போடுவது ஒரு கலை. எல்லோராலும் ஏதோ ஒரு தேநீர் போடமுடியும். அல்லது தேத்தண்ணி ஊத்தமுடியும். ஆனால் ஒரு சிலரால்தான் 'சுவையான தேநீர்' தயாரிக்கமுடியும். தேநீர் போடுவதும் ஒருவிதத்தில் கவிதை எழுதுவது மாதிரித்தான். ஒரு பேப்பர் (இல்லாவிட்டால் ஒரு பஸ் ரிக்கட்டின் பின்புறம்), பேனை, யாரோ ஒருத்தியின் கண்வெட்டு- கவிதை ரெடி. தேயிலைத்தூள், சுடுதண்ணி, சீனி (சென்னையில் இதை ஏன் சர்க்கரை என்கிறார்கள்?), பால் மா (பவுடர்) அல்லது பால், இரண்டொரு பேணிகள் - தேநீர் ரெடி.

மீண்டும் நல்ல தேநீர் போடுவது. அது எல்லாருக்கும் வராது. அந்தக் கைமணம் ஒரு சிலருக்குத்தான் வரும். நானும் வாழ்க்கையில் எதோ ஒரு புள்ளியில் இந்த நல்ல தேநீர் போடும் கலையில் தேர்ந்துவிட்டேன். பேராதனைப் ப.க. இல் படிக்கும்போது என் தேநீர் அக்பர் ஹோல் இல் என் 'பாட்ச்' மாணவரிடையே பிரபலம். தேநீர் வாசம் ஹோல் விறாந்தை வழியே பரவிச் செல்ல பக்கத்து அறை மோகன், ராம், சந்திரன், சாஸ்திரிகள், ஆனந்தன் எல்லாம் திடீரென்று ஆனையிறவுத் தாக்குதல், பால்ராஜ், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், தங்களின் முதற் காதல்கள் பற்றி டிஸ்கஸ் பண்ண அறைக்கு வருவாங்கள். பிறகு என்ன ரண்டு தேத்தண்ணி ஊத்த வெளிக்கிட்ட நான் பதினைஞ்சு இருவது தேத்தண்ணி ஊத்த வேண்டி வரும்.

எல்லாரும் கதைகளுக்கிடையே, "மச்சான் உன்ரை தேத்தண்ணி சுப்பர்" என்று சொல்லுவாங்கள். நக்கலாகச் சொல்வது மாதிரி எனக்கு இருக்கவில்லை.

சாம்பிள்க் கதைகள் இப்படித்தான் இருக்கும்.

மோகன்: மச்சான் இளையராஜா மாதிரி இனி ஒருவன் மியூசிக் போடமுடியாது.
குமார்: இளையராஜாவுக்கும் அவற்றை ரசிகருக்கும் வயசு போட்டுது. இப்ப ரகுமான்தான் காய்.

சாஸ்திரி: மச்சான் சக்தி, இன்னொரு தேத்தண்ணி போடு. நீ போட்டாத்தான் மச்சான் அது தேத்தண்ணி மாதிரி இருக்கும்.

மோகன்:(சூடாக)எவன்டா இளையராஜாவைக் குறைச்சுக் கதைக்கிறது?

சந்திரன்: மக்கள்! இப்ப நாங்கள் சக்தியின்ரை தேத்தண்ணியைப் பற்றிக் கதைப்பம்...

இப்படிச் சூடான தேத்தண்ணியைக் குடித்துக் குடித்துக் கதைக்கும் கதைகள் பிறகு, சூடாகப் போய் அச்சில் என்ன? இணையத்திலேயே ஏற்ற முடியாதளவுக்குப் போய்விடும்.

**************************

தேநீர் போடுவதில் ஒரு சின்ன ரெக்னீக் இருக்கிறது. கனபேர் இதில்தான் கோட்டை விடுவார்கள். தண்ணீரை நன்றாகச் சூடாக்கி, தேயிலைத் தூளை teapot இல் போட்டு தேயிலை சாயம் நன்றாக ஊறுமட்டும் காத்திருக்கவேண்டும். அவசரம் கூடாது. சாயம் நன்றாக ஊறியபின் அதையும் பாலையும் கொஞ்சம் கொஞ்சமாகக் கலக்கவேண்டும். பிறகு அளவாகச் சீனியைக் கலந்தால் "சுவையான தேநீர்" ரெடி.

இன்னொரு விஷயமும் இருக்குது. இதைத்தான் 'மா(ர்)க்கற்றிங்' என்பது. நீங்கள் போடும் தேநீரை நீங்களே நல்லது என்று சொல்லிக்கொண்டு திரியவேண்டும். நீங்களே நல்லது என்று சொல்லாவிட்டால் மற்றவர்கள் எப்படி நல்லது என்று ஒப்புக்கொள்வார்கள்? இது மட்டுமில்லை, யாராவது மற்றவர்கள் போட்ட தேநீரை நல்லது என்று ஒப்புக்கொள்ளவே கூடாது. அப்படி உண்மையிலேயே நன்றாக இருந்தாலும் நீங்கள் சொல்லவேண்டியது "ரீ நல்லாகத்தானிருக்குது, ஆனால் இதில் ஏதோவொன்று குறையுது." கேட்பவரும் ஏதோ ஒன்று குறையுது என்று நம்பத் தொடங்கிவிடுவார்.

எச்சரிக்கை : நான் சொன்னது எதுவும் ஓசித் தேத்தண்ணிக்குப் பொருந்தாது.ஓசித் தேத்தண்ணி எப்பவுமே சுப்பர் (அல்லது சூப்பர்)!!
**************************

நான் கல்யாணம் கட்டிப் 10, 12 வருஷமாகின்றது. காலை எழுந்து பல்லு விளக்கமுன் இரண்டு தேநீர்கள் போடுவேன். ஒன்று எனக்கு, மற்றது மனைவிக்கு. மழை,வெயில், குளிர் என்று காலநிலை மாறினாலும் இது மாறாது. ஆனாலும் இனியும் தேநீர் போட வேண்டுமா என்று நீங்கள்தான் சொல்லவேண்டும். அதுக்குக் காரணம். மனைவியின் டயறி. மனைவியின் டயறி என்றாலும் படித்துப் பார்க்காதே என்பார்கள். எனக்கு இந்த ஜென்ரில்மன் குணவியல்பு எல்லாம் இல்லை. அண்மையில்தான் வாசித்தேன். இது நான் கல்யாணம் கட்டிக் கொஞ்ச நாட்களில் எழுதியிருந்தது.

22-04-2000

அசடு இன்றைக்குக் காலை இரண்டு கப் தேநீர்களுடன் வந்துது.
"என்ன?", என்றேன். தான் தேத்தண்ணி போடுவதில் விண்ணன் என்று ஒரு அரை மணித்தியாலம் கிளாஸ் எடுத்துது.

குடித்துப் பார்த்தேன். வாழ்க்கையில் இதுமாதிரி ஒரு மோசமான ஒரு தேத்தண்ணியைக் குடித்ததில்லை. ஒரு மாதிரிச் சகித்துக் கொண்டு குடித்தேன்.

"ரீ எப்படீருக்கு?" என்று இன்னும் அசடு வழிந்தது.

"சுப்பர் ரீ'யப்பா!" என்றேன்.


Sunday, June 10, 2012

நொந்தகோபால்

இரண்டு பெண்கள் பேசிக்கொண்டது.
இடம்: சிட்னியின் மேற்குப்பக்க புறநகர் ஒன்று

"ஐசே நான் உங்களை எங்கையோ பாத்திருக்கிறன்..... நீங்கள் லேடீஸ் கொலிஜ்'சே?"
"ஓம், நான் 92 ஏ/எல் பாட்ச், நீங்கள்?"
"நான் 93!"
"எப்படி இருக்கிறீயள்"

"------"
...
"------"
கதை ஒரு பத்து நிமிசம் உப்புச் சப்பில்லாமல் போகுது. பிறகு

"ஐசே, உங்கடை மனிசன்ர பேரென்ன?"
"பாலகோபால்"
"ஓ, உயரமா சிவலையா இருப்பாரே?
இரண்டாவது பெண் கொஞ்சம் அசௌகரியமாகிறார். "ம்ம்ம்"
"உத்துப் பாத்தா கமலின்ரை சாயலடிக்கும்.."
"அப்படித்தான் அவர் நினைக்கிறார், உங்களுக்கு எப்படி அவரைத் தெரியும்?" என்றார் உடனே
"நான் கம்பசிலை அவருக்கு ஜூனியர்"
"ம்ம்ம் நான் வேறை கம்பஸ்!?"
"கோபால் நல்ல முசுப்பாத்தி. கடி ஜோக் நெடுகச் சொல்லி எல்லாரையும் சிரிக்கவைப்பார்."
"ம்ம்ம்"
"ஆனாப் பாருங்கோ அவர் கொஞ்சம் 'லெவல்' பேர்வழி, அவர் மாதிரி இருந்தால் கொஞ்சம் லெவல் வரும்தானே?"
"ம்ம்ம்"
"அது சரி இப்பவும் அவர் ஷூ'வை நல்லா மினுக்கித்தான் போடுறவரே? அப்ப அவர் ஷூ'வைப் பள பள எண்டு கண்ணாடி மாதிரிதான் வைச்சிருப்பார்"
கொஞ்சம் எரிச்சலோடு, "ஆருக்கு இதையெல்லாம் கவனிக்க நேரம் வருது..."

"சரி ஐசே, நானொருக்கா என்ரை மனிசனையும் கூட்டிக் கொண்டு உங்கடை வீட்டுக்கு வாறன்.கோபாலின்ரை கடி ஜோக்'குகளைக் கேட்டுக் கனகாலம் ஆச்சு, எப்ப ப்ரீ'யா நிப்பியள்?"

"இப்ப எங்களுக்கு நேரமில்லைப் பாருங்கோ, பெடியனுக்கு எக்ஸாம் வருது, பிறகு நேரம் வரேக்கை பாப்பம்...இப்ப நேரம் போயிட்டுது, நான் வரட்டே"

-----
பாலகோபாலுக்கு அட்வைஸ் :"ஆம்பிளை வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா!"

Sunday, October 2, 2011

முருகா நீ ஏன் இப்படிக்...

இவங்கள் கொஞ்ச நாட்களாக ஓவர் ஆட்டம் போடுறாங்கள். "நான் ரண்டு வச்சிருக்கிறன்", என்றான் விஜயன். "மூண்டு என்னட்டை" என்றான் அச்சுவேலி ரமணன். "நான் எப்படியும் இந்த சனிக்கிழமை ஒண்டு வாங்கிப்போடுவன்" என்கிறான் விக்கி. ஐந்தாம் வகுப்பில் இருந்து ஆறாம் வகுப்பிற்கு வந்தால் புதுக் கொம்பாஸ் பெட்டி, கொப்பி, இலவசப் புத்தகங்கள் என்று போக இதுவும் சேர்ந்தாயிற்று. வீட்டிலே கேட்கக் கொஞ்சம் வெட்கம். மெதுவாக அம்மாவை அப்பாவிடம் காசு வாங்கச் சொன்னேன். அச்சுவேலியில்தான் இது விற்கும். "இதெல்லாம் தேவையில்லாத வேலை, கொம்மாவைக் கேட்டாத் தச்சுத் தருவா" என்று அப்பா சொல்லிப்போட்டார். சட்டை தைத்து மிஞ்சிப் போன சீததைத் துணியில் "சஸ்பென்ரர்" என்ற பெயரில் ஒன்று தைக்கப்பட்டு வந்தது. கதவைப் பூட்டிப்போட்டு அறைக்குள் ஒளிச்சு நின்று போட்டுப் பார்த்தேன். அழுகை அழுகையாக வந்தது. வலது பக்கக் காலில் இடுப்புக்குக் கிட்ட இரண்டு இடங்களில் முடிச்சுப் போட்டுக் கட்டவேண்டும். பழனி முருகன்தான் அப்ப ஞாபத்திற்கு வந்தார். இதோட ஊருக்கு வடக்குப் புறம் இருந்த அகலக் கிணறுகளுக்கு நீந்தப் பழகப் போகவேண்டும். நீந்தப் போறதென்றால் "பென்ரர்", "மினிப் பென்ரர்" என்ற பெயர்களில் அச்சுவேலிற் ரவுணிலே வாங்கின ஒன்றைப் போட்டால்தான் ஒரு 'ஸ்டாண்டட்". இதிலேயும் இந்த "மினிப்பென்ரர்" கொஞ்சம் எழுப்பம். பெயரரில்தான் "மினி" இருக்கே தவிர அது ஆக மினி அல்ல. இரண்டு 'கால்'வைத்திருக்கும். காசு/பணம் பத்திரமாக வைக்க ஒரு சின்ன zip வைத்து ஒரு பொக்கற்றும் இருக்கும்.

ஒரு மாதிரி அழுது அடம் பிடிச்சு 20 ரூபா வீட்டில் வாங்கியாயிற்று. இப்ப அடுத்த கட்டம். ஒரு சனிக்கிழமை காலை சைக்கிளில் விக்கியுடன் டபுள்ஸ்ஸில் அச்சுவேலிற் ரவுண் வந்தாயிற்று. "இண்டைக்கு எப்படியும் வாங்கிப் போடோணும்" என்று திட்டம். 'பெரிய' பஸ் ஸ்ராண்ட் இற்கு எதிரில் இருந்தது அந்தக் கடை. அலுமினியச் சட்டி, பிளாஸ்டிக் வாளிகள், ரெடிமேட் சேட்டுக்கள், ஸ்கேர்ட்டுக்கள், பிளவுஸ்கள், தேங்காய்த் திருவலை, பனடோல் எல்லாம் கிடைக்கும். அதோடு அங்கே பென்ரரும் மினிப்பென்ரரும் வாங்கலாம். ஒரு சின்னப் பிரச்சினை. கடையில் ஒரு பெண்பிள்ளை வேலை பார்த்தது. வயது இருபது, இருபத்திரண்டு இருக்கலாம். எங்கள் வயதைச் சொன்னால் இத்தனை வயதிலே இதை வாங்க வெட்கமே என்று சிரிப்பீர்கள். ஆனால் எங்கள் வயதோடு பார்த்தால் அவள் பெரிய பெண். ஆம்பிளைப் பிள்ளைகளின்ரை பிரச்சினை ஆம்பிளைப் பிள்ளைகளுக்குத் தானே விளங்கும்? அவளட்டை போய் "அக்கா இன்ன சைஸ் பென்ரர் எடுங்கோ" என்று எப்படிக் கேட்பது? நானும் விக்கியும் இரண்டு மூன்றுதரம் பக்கத்துக் கடையில் சைக்கிளை ஸ்ராண்ட் போட்டு நிற்பாட்டிவிட்டு 'தற்செயலாக' கடைக்குள் எட்டிப் பார்த்தோம். ஒவ்வொரு முறையும் கடையில் அவள் நின்றாள். அசோகனின் சலூனிலே ஓசிப் பேப்பர் பார்த்துவிட்டு, இன்னொரு கடைசி முயற்சி. இந்தமுறை அவள் இல்லை.

நெஞ்சை நிமித்திக் கொண்டு கடைக்குள் உள்ளிட்டோம். கடை முதலாளி 'ரீ' யை உறிஞ்சிக் கொண்டிருந்தார்.

"தம்பிமார் கொஞ்சம் இருங்கோ, இந்தற் ரீ' யைக் குடிச்சிட்டு வாறான்" , மனிசன் சாவகாசமாகக் ரீ' யைக் குடிக்கத் தொடங்கினார்.

வாழ்க்கையில் தேவையில்லாத நேரங்களில் தேவையில்லாத விஷயங்கள் நடக்கும். அதுமாதிரி அப்பதான் அவள் எங்கிருந்தோ திடீரென்று வந்தாள். "பிள்ளை, இந்தப் பெடியளுக்கு என்ன வேணும்" எண்டு கேட்டுக் குடு", முதலாளி அக்கறையாகச் சொன்னார்.

நான் விக்கியைப் பார்த்தேன். அவன் இப்ப தேங்காய்த் திருவலை ஒன்றைத் தூக்கி மேல், கீழ், இடம், வலம் என்று மும்முரமாக ஆராய்ந்து கொண்டிருந்தான். விபுலானந்த அடிகள் யாழ்'ஐப் பற்றி ஆராய்ச்சி செய்து ஒரு புத்தகம் எழுதினாராம். விட்டால் இவன் தேங்காய்த் திருவலை பற்றி நூறு பக்கத்தில் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினாலும் எழுதியிருப்பான். அவ்வளவு மும்முரம்.

"தம்பி என்ன வேணும்" அவள் கேட்டாள்.

"ம்ம்ம்ம் வந்து....... அந்தக் கண்ணாடிப் பெட்டிக்குள்ள இருக்கிற பவுடர் பேணி என்ன விலை?" என்றேன் அசடு வழிய.

**************************************************

யோசித்துப் பார்த்தால் தாத்தாமார் காலத்தில் இந்தமாதிரிப் பிரச்சினைகள் இருந்திருக்காது. வேட்டியை ஒடுக்கமாக நீளமாகக் கிழித்தால் கோவணம் ரெடி. இடுப்பில் அறுணாக் கொடி கட்டாயம் தேவைப்படும்தான். ஆனால் கடைக்கெல்லாம் போய் மினக்கெடத் தேவையில்லை. செலவும் இல்லை. எனது இரண்டு தாத்தாமாரும் கனக்க விஷயங்களில் வித்தியாசம். ஒற்றுமையான ஒன்று உண்டென்றால், இந்தக் குளிப்பு விடயத்தில்தான். கௌபீனத்துடன் கிணத்தடிக்கு வந்தால் 45 நிமிடம் ஆகாமல் குளிப்பு முடியாது. 15- 20வது நிமிடத்தில் கிணத்தடியில் நிக்கிற கமுக மரம் அல்லது ஒல்லித் தென்னையில் முதுகு தேய்ப்பார்கள். "ஓடிப் போய் சமையல் முடிஞ்சுதோ எண்டு பாத்திட்டு வா" என்றால் குளியல் முடியப் போகுது என்று அர்த்தம். ஆச்சிமாரும் ஒரேமாதிரித்தான் பதில் சொல்லுவார்கள், "கிழவன் ஏன் இப்படிச் சாணக முதலை மாதிரித் தண்ணியில நிக்குது?, கெதியாக சாப்பிட வரச் சொல்லு " என்று.

தாத்தாமார் காலம் போய் அப்பாமார் காலம் வந்ததும் சஸ்பென்ரர் என்று ஓன்று வந்தது. இது கடையிற் கிடைக்காது. வேறு உடுப்புத் தைத்த மிச்சத் துணியில் கெட்டித்தனமாக வெட்டித் தைக்க வேண்டும். இடுப்பில் இரண்டு இடத்தில் முடிச்சுப் போடவேண்டும். முடிச்சுப் போட்டுக் கட்டுவதால், இலாஸ்ரிக் பட்டை இடுப்பில் தேவைப்படாது. இந்தமாதிரி ஒன்றை சிட்னி டிசைனர் ஷொப்'பில் கண்டேன். விலை: ஒன்று எண்பத்தைந்து டொலர்கள் மட்டுமே!.

பிறகு சித்தப்பாமார் காலத்தில் வந்ததுதான் இந்த பென்ரர், மினிப் பென்ரர் என்பன. இவை கடையில் மட்டுமே கிடைக்கும். இப்படித்தான் ஆண்கள் உள்ளாடை வர்த்தக மயமாக்கப்பட்டு சர்வதேசப் பெருமுதலாளிகளின் சுரண்டலுக்கு ஆண்வர்க்கம் உள்ளாவதாக தோழர் செந்தமிழ்ச்செல்வன் சொல்லுகிறார்.

************************************************

பழனி முருகனுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்.




-------------------------------------
தேங்காய்த் திருவலை - தேங்காய்த் துருவு பலகை
கொம்மா - உனது அம்மா
கெதியாக- விரைவாக

Photo: Thanks to

http://ta.wikipedia.org/wiki/பழனி_முருகன்_கோவில்


Thursday, July 7, 2011

வந்தியத்தேவனின் காதல் தோல்வி அல்லது சோழர் காலத் தூய நட்பு

முன்னுரை

ஆறாம் வகுப்போ அல்லது ஏழாம் வகுப்போ படிக்கும்போது இரவு-பகலாக பசி-தூக்கமில்லாது தொடர்ந்து வாசித்து முடித்த "பொன்னியின் செல்வன்"ஐ மீண்டும் வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போதிருந்த பிரமிப்பு இப்பவும் கிட்டத்தட்ட அதேயளவு இருக்கிறது.

என்றாலும், அமரர் கல்கி அவர்கள் பாத்திரங்களைக் கொஞ்சம் "இலட்சியப்" படுத்திவிட்டார் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம் . எனவே நான் கொஞ்சம் அச்சுப்பிச்சுத்தனமாக "யதார்த்தப்" படுத்திப் பார்த்தேன்.

உசாத்துணை:

பொன்னியின் செல்வன்

**************************************


வந்தியத்தேவன் குழம்பிப் போயிருந்தான். மணிமேகலை கொஞ்சநாட்களாக அவன் அனுப்பிய காதல் ஓலைகளுக்குப் பதிலனுப்புவதிலை. ஓலைகளைக் கொண்டுபோய்ச் சேர்க்கும் சிறுவன் குஞ்சமல்லனும் இப்போது "ஓலைகாவுதல்" வேலைகளில் சுவாரசியம் காட்டுவதில்லை. "ஓலையைக் கொடுத்தால், முன்பு சம்பளமாக கற்கண்டுகள் கொடுப்பாள் மணிமேகலை அக்கா, இப்ப என் கன்னத்தில் கிள்ளல்களை மட்டும்தான் கொடுக்கிறாள்" என்கிறான்.

வந்தியத்தேவனின் நண்பன் கந்தமாறன். அவன் தங்கைதான் மணிமேகலை. அவன் காதலுக்கு கந்தமாறனின் மறைமுக ஆதரவும் இருந்தது. உடனே நீங்கள் "ஆஹா, எல்லா அண்ணன்மாரும் இப்படியிருந்தால் நல்லதல்லவா!" என்று பெருமூச்சு விடுவதும் கேட்கிறது. உங்கள் பெருமூச்சு வீரநாராயண ஏரியின் கரையில் குறுக்கும் நெடுக்கும் தன குதிரையில் பயணித்துக்கொண்டிருந்த வந்தியத்தேவனுக்குக் கேட்கமாட்டாதுதான். கேட்டாலும் குழம்பியிருந்த அவன் மனம் தெளியவா போகிறது?

போனமுறை, திருப்பனங்காட்டிலிருந்து வரவழைத்த அழகான, விலையுயர்ந்த, நன்கு பதப்படுத்திய ஓலையில், வேலை மினக்கெட்டு அழகான கையெழுத்தில் சிரமப்பட்டுக் காதல் மடல் வரைந்திருந்தான். அதற்கும் பதில் வரவில்லை. ஓலையில் அடியில் இரண்டு "இதயப்" படங்களை கிட்டக்கிட்ட வரைந்து, அவையிரண்டையும் ஒரு ஈட்டி துளைப்பது போலெல்லாம் வரைந்திருந்தான். ( கிரேக்க குதிரை வியாபாரி சொல்லிக் கொடுத்த யோசனையிது)

வந்தியத்தேவனின் குதிரையும் மூச்சு வாங்கத் தொடங்கியது. "கிழட்டுக் குதிரை" என்று அவன் திட்டிக் கொண்டிருக்க, எதிரில் ஒரு ஆஜானுபாவன் உருவம் ஒரு பெரிய முரட்டுக் குதிரையில் வந்து கொண்டிருப்பதைக் கண்டான். அவன் கண்கள் அந்தக் குதிரையைச் சற்றுப் பொறாமையுடன் நோக்கின. நல்ல கருநிறப் புரவி. இவனின் குதிரையைவிட அரை மடங்கு உயரம் அதிகமாக இருந்தது. "அதில் ஏறியிருந்தாலே ஒரு கம்பீரம்தான்" என்று சொல்லிக் கொண்டான். "இந்த மாதிரிப் பெரியபுரவி வைத்திருப்பவன் நிறையப் பொன் வைத்திருப்பவனாகத்தான் இருக்கவேண்டும். அத்தோடு இந்தக் குதிரைக்கு கொள்ளு வாங்கவும் இருமடங்கு பொன் தேவைப்படும்" மனம் முணுமுணுத்தது.

முரட்டுக் குதிரைக்காரன் கிட்ட வரத்தொடங்கவும் வந்தியத்தேவனின் கை குறுவாளை இறுகப் பற்றியது. சாலையிலிருந்து சற்று விலகி நின்று, வந்த உருவத்தை உற்று நோக்கினான். அருண்மொழிவர்மனின் மதிப்பிற்குரிய ஒற்றனின் விழிகளுக்கு அவன் யாரென்பது கணநேரத்தில் புரிந்துவிட்டது. இளவரசன் மதுராந்தகன்! அவன் சம்புவரையரின் கடம்பூர் மாளிகைக்கு போய்க்கொண்டிருக்க வேண்டும். சம்புவரையர் மணிமேகலையின் தந்தை.

அவன் அடிக்கடி சம்புவரையரின் மாளிகைக்கு போய் வருவது வந்தியத்தேவனிற்குப் பிடிக்கவில்லை. அத்தோடு போனமுறை அவன் சம்புவரையரின் மாளிகைக்கு போனபோது ஒரு அழகிய முத்துச்சரமும், சில வளையல்களும் எடுத்துச் சென்றதும் வந்தியத்தேவனின் காதுகளிற்கு எட்டாமல் போகுமா?

"அவர்கள் சந்திப்பது இராஜ காரியத்திற்கு, எனக்கு இதற்குமேல் தெரியாது," என்று கந்தமாறன் சொல்லியதையும் அவன் நம்பவில்லை.

**************************************

"வீரநாராயணன் மோர்க்குடில்" சம்புவரையரின் கடம்பூர் மாளிகைக்கு அதிக தூரத்தில் இல்லை. எப்பவும் அங்கு இளவட்டங்களின் சத்தம் , கும்மாளம் கேட்டுக் கொண்டிருக்கும். வயதானவர்கள் "காலம் கெட்டுப் போய் விட்டது" என்று சொல்லி அங்கு வருவது குறைவு. கால் முட்டி மோரை வாங்கிப் பத்து நாழிகைகள் செலவழித்து அதி மெதுவாகக் குடிக்கும் கலையை இளைஞர்கள் அல்லது யுவதிகளால்தான் செய்ய முடியும். அதுவும் தங்கள் மனங் கவர்ந்தவர்களுடன் வந்த இளைஞர்களைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. மோர்க்குடிலின் பின்புறம் இரகசியமாக, அரசனின் அனுமதியின்றிச் சோமபானமும் விற்கப்படுவதாகப் பேசிக் கொள்கிறார்கள்.

இங்குதான் வந்தியத்தேவன் மணிமேகலையை நீண்ட முயற்சிகளுக்குப் பிறகு சந்திக்கின்றான்.

"மணிமேகலை," வந்தியத்தேவன் காதல் உணர்ச்சியுடன் அழைத்தான்.

"என்ன?" பதில் கொஞ்சம் சூடாக வந்தது.

"நீ, ஏன் நான் அனுப்பிய மடல்களுக்குப் பதில் அனுப்பவில்லை"

"நேரம் கிடைக்கவில்லை," அவன் கண்களைப் பார்க்காமல் பதில் கூறினாள்.

"ஓ அதுதானா நான் வேறு ஏதோவென்று பயந்து விட்டேன் !"

"ஏதோவென்று?"

"இல்லை அடிக்கடி அந்த மதுராந்தகன் உன் மாளிகைக்கு வந்து போகின்றான்.."

"அதுக்கென்ன?"

"இல்லை, உன் தந்தை அவனை உனக்கு மணம் முடித்து வைக்கப் போகிறார் என்று பயந்து விட்டேன்"

"அவரைத்தான் நான் மணக்கப் போகின்றேன்", அவள் முகத்திலிருந்தது நாணமா அல்லது அச்சமா என்று தெரியவில்லை.

அதிர்ச்சியடைந்த வந்தியத்தேவன் தன்னிலையடையச் சில நிமிடங்கள் எடுத்தது. "மணிமேகலை, யாது சொல்லுகின்றாய்" என்றான்.

"ஏன் உங்களுக்குக் காது கேட்காதா? நான் இளவரசர் மதுராந்தகரை மணக்கப் போகின்றேன் என்று சொன்னேன்," சற்று உரக்கக் கூறினாள்.

"அப்போது நாங்கள் காதலித்தது?"

"காதலித்தது? நீங்கள் அப்படி யோசித்தால் நான் என்ன செய்வது? என்னைப் பொறுத்தவரையில் எமக்கிடையே இருந்தது தூய நட்புத்தான்!"

"புரிகிறது மணிமேகலை, அவன் இளவரசன். நான் ஒருகாலத்தில் நன்றாக இருந்து கெட்ட வாணர் குலத்தவன். நீ என்னை மெதுவாக நீக்க விழைகிறாய்"

"வல்லவரையரே, தங்களுக்கு நட்பென்றால் என்னவென்று புரியாது. நான் போய்வருகிறேன். சொல்ல மறந்துபோய் விட்டேன். இந்த ஓலை அனுப்புதல் வேலைகளையெல்லாம் இனி வைத்துக் கொள்ளாதீர்கள், மதுராந்தகருக்குப் பிடிக்காது" வந்தியத்தேவனின் கண்களை ஊடுருவிப் பார்த்துச் சொன்னாள். பிறகு மென்மையாக, மிக மென்மையாக, தனக்கு மட்டும் கேட்கக் கூடிய குரலில், "என் நிலைமை தங்களுக்குப் புரியாது" என்றாள்.

அதற்குப் பிறகு முட்டி முட்டியாகச் சோமபானம் அருந்தியதுதான் வந்தியத்தேவனின் ஞாபகத்தில் இருந்தது.

மணிமேகலை தன் முதல் ஆண் குழந்தைக்கு வந்தியக்குமாரன் என்று பெயர் வைத்தது வந்தியத்தேவனுக்குக் கனகாலம் பிறகுதான் தெரிய வந்தது.


--------------

1 நாழிகை = 24 நிமிடம்
கால் முட்டி = கால்வாசி முட்டி = 1/4 முட்டி

படங்கள் : http://www.eegarai.net/t50562-topic இலிருந்து

Saturday, June 11, 2011

ஒரு மத நல்லிணக்கக் கதை எழுதுவது எப்படி?

முதலில் முன்னுரை:

இது கனகாலம் முன்னுக்கு சிட்னியில் உள்ள ஒரு கற்பனைத் தமிழ்ப் பள்ளிக்கூடத்தில் உண்மையாக நடந்தது. அது தமிழ்ப் பள்ளிக்கூடம் என்பதால் சனிக்கிழமைகளில் மட்டும் கூடும். "வருடாந்த பெற்றோர், ஆசிரியர், பாடசாலை நிர்வாகத்தினர் கலந்துரையாடல்" அல்லது அதுமாதிரி நீளமான தலைப்பில் நடந்த ஒன்றில் நானும் ஓசித் தேத்தண்ணி, விசுக்கோத்துக்களை அனுபவித்துக்கொண்டு அமர்ந்து இருந்தேன். எல்லாரும் 'அமர்ந்திருந்து' கூட்டத்தில் பங்கு பற்றுமாறு அடிக்கடி வேண்டிக் கொண்டார்கள். எனவே, பின்வரிசையில், கதவிற்குக் கிட்ட, வழக்கம் போல் நிற்க முடியவில்லை. கதவுக்குக் கிட்டத்தான் விசுக்கோத்து, தேத்தண்ணி, கோப்பி எல்லாம் வைத்திருந்த மேசை இருந்தது.

நடுவில் நடுவுரை:

"கூட்டம்" வழக்கமான கூட்டங்களை போல் இருந்தது. "கொட்டாவி -தேத்தண்ணி- கொட்டாவி-கோப்பி- விசுக்கோத்து- கொட்டாவி", என்று என் பொழுது போயிற்று.

எப்படா எழும்பிப் போகலாம் என்று யோசித்துக் கொண்டிருக்க ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்தது. "கடந்த வருடம் நடந்த கலை விழாவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள், உங்கள் அபிப்பிராயங்களைக் கூறுங்கள்" என்று தலைவர் கேட்க, 'கச்சிதமாக அழுத்தப்பட்ட' நீளக் கைச் சட்டையும் பொருத்தமான, ஆனால் 1980 யாழ்ப்பாணத்தை ஞாபகப்படுத்தும் வகையிலான நீளக் காற்சட்டையும் அணிந்திருந்த ஒருவர் எழுந்தார்.

"என் பெயர் பீட்டர் சூசைதாசன். நான் ஒரு ஓய்வுபெற்ற பாடசாலை உப அதிபர்", எல்லோரையும் பார்த்துப் புன்னகைத்தார்.

"எல்லாம் நல்லாத்தான் இருந்தது, ஆனால் ஒரு சின்னக் கருத்தொன்றைச் சொல்லலாமென்று உள்ளேன். இது ஒரு நாடகத்தைப் பற்றியது. அதிலே ஒரு கிழவன் 'எல்லாம் அந்தச் சிட்னி முருகன் துணை என்று மானசீகமாக அந்தப் பக்கம் பார்த்துக் கும்பிடுகிறார்?", . இந்த இடத்திலே பேச்சை நிறுத்திவிட்டு ஒரு அரை வட்டமாத் திரும்பி, எல்லோரையும் பார்த்தார்.


"அது பிழைதானே?"

நான் மட்டும் குழம்பவில்லை என்று மற்றவர்களின் முகபாவனைகளிலிருந்து விளங்கியது.

"வழக்கமாக வயதானவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் தானே? அதிலென்ன பிழை?" என்று யாரோ பின்னுக்கிருந்து கேட்டார்கள். எல்லாவற்றிற்கும், "சந்நிதி முருகா" என்று முருகனைத் துணைக்கழைக்கும் என் ஆச்சி வேறு ஞாபகத்திற்கு வந்து போனா.

"இல்லை, நான் அதைச் சொல்லவில்லை, எல்லா மதப் பிள்ளைகளும் படிக்கிற ஒரு பள்ளிக் கூடத்திலே இப்படி ஒரு சைவ சமயத்தைப் திணிக்கிற காட்சிகள் வரக்கூடாதுதானே?" தொடர்ந்தார் அவர்.

இந்த இடத்தில் இன்னொரு பேர்வழியும் புகுந்து கொண்டார். "என் பெயர் ஜான் ஆசீர்வாதமுங்க , அது தப்புதாங்க" என்றார்.

எதோ இப்படியாவது " 'நீ இலங்கைத் தமிழன், நீ இந்தியாத் தமிழன்' என்று வேறுபடாது சேர்ந்து நிக்கிறாங்கள்" என்று யோசித்தும் கொண்டேன்.

"அப்ப அவர்கள் அப்படி நாடகங்கள் போட்டால், நீங்கள் ஏசுநாதரை வைத்து ஒரு நாடகம் போடலாமே", இது நான்.

"இது நல்ல ஐடியாதான், ஆனால் சரிவராது, எங்களில் ஆட்கள் குறைவு, எனவே ஏசுநாதரை வைத்து நாடகம் போடுவது கஷ்டம்" அவர் தொடர்ந்தார்.

இதுக்குப் பிறகு , 'எல்லோரையும் திருப்திப் படுத்தும் வகையில் நாடகம் போடுவது/ கதை எழுதுவது எப்படி' என்று மூளையைக் கசக்கி யோசித்ததில் வந்த எண்ணம் இது. யாரும் இதை இலவசமாகப் பயன்படுத்தலாம். காப்புரிமைப் பிரச்சினை இல்லை.

இப்ப விஷயம்

நீங்கள் இருக்குமிடத்தில் மூன்று மதங்களைப் பின்பற்றும் தமிழ் பேசும் நன்மக்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம் எனில் நீங்கள் எழுதும் கதை அல்லது நாடகம் நான்கு பகுதிகளாக்கப்படும் ஏன் நான்கு என்பது பிறகு விளங்கும். ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பந்தி கீழே ...

ஒன்று

யேசுதாசன் தாத்தாவிற்கு எண்பது வயதாகிவிட்டது. தடித்த கண்ணாடிக்குள் தெரியும் கண்கள் மட்டும் உயிர்ப்பாக உள்ளது. தோல் இன்னும் சுருங்க முடிய முடியாதளவிற்குச் சுருங்கி விட்டது. காதும் முக்கால் செவிடாயிற்று.

பிள்ளைகள் எல்லாம் அவுஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து என்று போய்விட்டார்கள். மனைவியும் பரலோகம் போய் விட்டாள். முதுமையிற் தனிமை வேதனையானது.

"ஏசுவே என்மீது இரக்கம் காட்டும்" என்று பொதுவாக வேண்டிக் கொள்வார். குறிப்பாக எதையும் யேசுவிடம் கேட்கமாட்டார். கடந்த அறுபது, எழுபது வருடங்களாக இரவில் பைபிள் படிக்கிறார். அதொன்றுதான் அவர் வாழ்வில் மாற்றமில்லாதது. மிகுதி எல்லாம் மாறி விட்டது. (தொடரும்)

இரண்டு

இஸ்மாயில் தாத்தாவிற்கு எண்பது வயதாகிவிட்டது. தடித்த கண்ணாடிக்குள் தெரியும் கண்கள் மட்டும் உயிர்ப்பாக உள்ளது. தோல் இன்னும் சுருங்க முடிய முடியாதளவிற்குச் சுருங்கி விட்டது. காதும் முக்கால் செவிடாயிற்று.

பிள்ளைகள் எல்லாம் அவுஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து என்று போய்விட்டார்கள். மனைவியும் மவுத்தாகி விட்டாள். முதுமையிற் தனிமை வேதனையானது.

"இன்ஷா அல்லா" என்று வாய்க்கு வாய் சொல்லிக் கொள்வார். குறிப்பாக எதையும் அல்லாவிடம் கேட்கமாட்டார். கடந்த அறுபது, எழுபது வருடங்களாக இரவில் குர்ஆன் படிக்கிறார். அதொன்றுதான் அவர் வாழ்வில் மாற்றமில்லாதது. மிகுதி எல்லாம் மாறி விட்டது. (தொடரும்)

மூன்று

முருகுப்பிள்ளை தாத்தாவிற்கு எண்பது வயதாகிவிட்டது. தடித்த கண்ணாடிக்குள் தெரியும் கண்கள் மட்டும் உயிர்ப்பாக உள்ளது. தோல் இன்னும் சுருங்க முடிய முடியாதளவிற்குச் சுருங்கி விட்டது. காதும் முக்கால் செவிடாயிற்று.

பிள்ளைகள் எல்லாம் அவுஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து என்று போய்விட்டார்கள். மனைவியும் சிவனடி சேர்ந்து விட்டாள். முதுமையிற் தனிமை வேதனையானது.

"முருகா முருகா" என்று வாய்க்கு வாய் சொல்லிக் கொள்வார். குறிப்பாக எதையும் முருகனிடம் கேட்கமாட்டார். கடந்த அறுபது, எழுபது வருடங்களாக இரவில் தேவாரம்/திருவாசகம் என்பன படிக்கிறார். அதொன்றுதான் அவர் வாழ்வில் மாற்றமில்லாதது. மிகுதி எல்லாம் மாறி விட்டது. (தொடரும்)

நான்கு

ஏதுசாமி தாத்தாவிற்கு எண்பது வயதாகிவிட்டது. தடித்த கண்ணாடிக்குள் தெரியும் கண்கள் மட்டும் உயிர்ப்பாக உள்ளது. தோல் இன்னும் சுருங்க முடிய முடியாதளவிற்குச் சுருங்கி விட்டது. காதும் முக்கால் செவிடாயிற்று. (ஏதுசாமி தாத்தாவிற்குக் கடவுள் நம்பிக்கையில்லை. பெற்றோர் வைத்த பெயரை "ஏதுசாமி" என்று மாற்றிவிட்டார்)

பிள்ளைகள் எல்லாம் அவுஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து என்று போய்விட்டார்கள். மனைவியும் உடல் இயக்கத்தை நிறுத்திவிட்டாள் . முதுமையிற் தனிமை வேதனையானது.

"கடவுள் இல்லை, கடவுள் இல்லை" என்று வாய்க்கு வாய் சொல்லிக் கொள்வார். கடந்த ஐம்பது, அறுபது வருடங்களாக இரவில் பெரியாரின் புத்தகங்களைப் படிக்கிறார். அதொன்றுதான் அவர் வாழ்வில் மாற்றமில்லாதது. மிகுதி எல்லாம் மாறி விட்டது. (தொடரும்)

******************************************************

எப்படி என் ஐடியா?


-----------

Image from http://www.humanitarianforum.org/pages/en/faith-religion-and-the-forum.html


தேத்தண்ணி = தேநீர் = tea ; இந்தியாவில் பரவலாக "டீ" எனப்படும். மலேசியா/சிங்கப்பூரில் "டீத்தண்ணி" எனச் சொல்லப்படுவதைக் கேட்டுள்ளேன்.

விசுக்கோத்து = பிஸ்கட்=biscuit;

Monday, May 23, 2011

பணப் பையைத் தொலைத்தவன்

"நண்பனே" , என்று அந்தக் குரல் என்னை அழைத்தபோது, நான் "தூங்காபி" ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தேன். அன்று கிறிஸ்தமஸ் தினம் வேறு. 50 அடி நடைக்குள் வரும் மூன்று இடியப்பக் கடைகளில் ஒன்றாவது மூடாமலிருக்க வேண்டும். இல்லாவிட்டால் இரவுச் சாப்பாடும் பாண் தான்.

குரல் வந்த திசையில் தலையை நிமிர்த்திப் பார்த்தேன். 6 அடி 4 அங்குலத்திற்கும் குறையாத உயரத்தில் நம் "சகோதர" இனத்தவன். கொஞ்சம் சதுர முகம். கருப்பான சுருட்டை முடி. மண்ணிறக் கண்கள். இந்த மார்கழி வெக்கையிலும் கோட் , சூட் போட்டிருந்தான். நல்ல வேலையில் இருக்கவேண்டும். சில ஆங்கிலப் படங்களில் வரும் வில்லன் மாதிரிச் சுமாராக இருந்தான். இவன் பூர்வீகம் இத்தாலி அல்லது கிரேக்கமாக இருக்கவேண்டும் என்று எண்ணிக் கொண்டேன். பக்கத்தில் நின்றவள் அவன் மனைவி அல்லது துணைவியாக இருக்கவேண்டும். உயரமாக, ஒல்லியாக வில்லு மாதிரியிருந்தாள். அவளின் காலைக் கட்டிக் கொண்டு ஒரு நான்கு வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை. நீலக் கண்கள். நீளமான, பொன்னிற முடி. குழந்தை அம்மா மாதிரியே அழகாக இருந்தது.

நான் வாய் பார்த்துக் கொண்டு நின்றதால் பதில் சொல்ல மறந்து போய் விட்டேன் போலிருக்கிறது.

"தொந்தரவிற்கு மன்னிக்கவும், என் பெயர் மார்க்கஸ் செர்ஜோபௌலஸ். இவள் என் துணைவி கிளாரா , இவள் சாரா - என் குழந்தை , அப்படித்தான் நினைகிறேன்" என்று வெடிச் சிரிப்புச் சிரித்தான்.

அவளும் நக்கலுக்குக் குறைந்தவள்போல் இல்லை.

"நானும் அப்படித்தான் நினைக்கிறேன்" என்று கண் சிமிட்டினாள்.

"என் பெயர் சுப்ரமணியம் வாசுதேவன்" , வேண்டுமென்று பாஸ்போர்ட் இல் இருக்கிறமாதிரிச் சொன்னேன்.

இப்ப அவன் கொஞ்சம் கிட்ட வந்தான். குரலைத் தாழ்த்தி, "இன்றைக்குக் கிறிஸ்மஸ் தெரியுமா?" என்றான். 'கிறிஸ்மஸ், கோட் , சூட் போட்ட வெள்ளைக்காரன், அடுத்து என்ன , பைபிளை எடுத்து நீட்டப் போகிறான்' என்று யோசனை ஓடியது.

"எல்லா வங்கிகளும் பூட்டு. கடைகளும் பூட்டு", என்று தொடந்தான். "இடியப்பக் கடை திறந்திருக்கும்" அன்று நான் என் உள்ளூர்த் தகவல்திரட்டை எடுத்துவிடமுன், "நான் என் பணப்பையைத் தொலைத்து விட்டேன்" என்றான்.

பணப்பையைத் தொலைத்துவிட்டுத் 'தேடுவபவர்களை' நான் துபாய் தேய்ராவில், ஷார்ஜா கிரிக்கெட் கிரவுண்ட்டிற்கு வெளியே, சிறிரங்கம் கோவில் உள்வீதியில், கொழும்பு /கோட்டை பஸ் ஸ்ராண்ட்டில், இன்னும் பின்னுக்குப் போனால் யாழ்ப்பாண நகரத்தில் எல்லாம் சந்தித்திருக்கிறேன். எல்லாரும் நிறையத் தூரத்தில் இருந்துதான் வந்திருப்பார்கள். எல்லாருக்கும் அது நண்பர்கள் இல்லாத புது நகரமாகத்தான் இருக்கும். இப்பதான் ஞாபகம் வருது. எல்லாரும் நாகரிகமாக "இங்கிலிஷ்" பேசுவார்கள். எல்லாரும் வீட்டுக்குப் போக பஸ் காசு கேட்பார்கள். மறக்காமல் எங்கள் பெயர், விலாசத்தையும் எழுதி வைப்பார்கள், காசைத் திருப்பி அனுப்பத்தான்!

நான் கொஞ்சம் உஷார் பேர்வழி. 'யாரிடமும் ஒருக்காக்கூட ஏமாந்ததில்லை' என்று மனைவியிடம் சொல்லியிருக்கிறேன். அவள் நம்பியமாதிரித் தெரியவில்லை.

நான் வேண்டுமென்று ஒன்றும் சொல்லவில்லை. ஒரு சிறிய அசௌகரியமான அமைதி. "என் கார் அங்கே நிற்கிறது, பார்" என்று எதிற்பக்கம் சுட்டிக்காட்டினான். "அப்பாடா, இது ரிக்கற் வாங்கப் பணம் கேட்கப்போகும் வகையல்ல" என்று ஒரு சின்ன ஆசுவாசம். தூரத்தில் தெரிந்த காரைப் பார்த்தேன். புத்தம் புதிய காரல்ல. என்றாலும் என் நகரும் தகரக் கூடு போலிருக்கும் காருடன் பார்க்கும்போது எவ்வளவோ பரவாயில்லை. "இவன் பைபிள் பேர்வழிதான்" என்று முடிவு கட்டிக்கொண்டிருக்க, "தந்தையே, பசிக்கிறது, மக்காஸ் போவோம்" என்று சிறுமி அழத் தொடங்கினாள்.

"சரி, உன் நேரத்தை அதிகம் எடுக்க விரும்பவில்லை. உன்னைப் பார்த்தால் கௌரவமான பேர்வழி போலுள்ளாய்; என் காருக்குப் பெற்றோல் தீர்ந்துவிட்டது. முந்தியே சொன்னேனே, என் பணப் பையும் தொலைந்து விட்டது. ஒரு முப்பது டொலர் இப்போது தருவாயாயின், நான் வீடு போய்ச்சேருமட்டுமளவிற்குப் பெற்றோல் போட்டுவிடுவேன், ஒரு நண்பனுக்கு நண்பனாக இந்த உதவியைச் செய்யமாட்டாயா?" என்று கெஞ்சும் தொனியிற் கேட்டான்.

என்ன சொல்லி இவனைக் "கழட்டுவது" என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

******************

"எங்கேயப்பா இடியப்பம்? வழக்கம்போல் மறந்தாச்சோ?", இது மனைவியின் வரவேற்பு.
"அது பெரிய கதை". கதையைச் சொல்லத் தொடங்கினேன்.

முடிக்கமுன்னே "நான் மிச்சத்தைச் சொல்லுறன். கொடைவள்ளல் அவன் கேட்கமுன்னே அம்பது டொலரைத் தூக்கிக் குடுத்திருப்பீங்கள்" என்றாள்.

"ஹா ஹா பிழை, முப்பது டொலர் மட்டும்தான் இருந்தது. குடுத்துட்டன். அவன் திருப்பியனுப்புவான். "அக்கவுன்ட்" நம்பரெல்லாம் எழுதிக் கொண்டு போறான்."

"வடிவாக அனுப்புவான், வட்டியும் சேர்த்து, இருக்கட்டும் ஒரு கேள்வி"

"கேள்"

"அவள் வடிவோ?"

"சே, சும்மா ஒரு சாதாரண 'லுக்'தான்" என்றேன்!


------------

மக்காஸ் = Maccas = McDonalds
mate - இதை "நண்பன்" என்று மொழிபெயர்ப்பது மிகச் சரியாகாது. வேறு பொருத்தமான சொல் அகப்படவில்லை.

Thursday, May 5, 2011

வழுக்கை இலக்கியம்

வரைவிலக்கணம் : ஒரு வழுக்கையனால்  வழுக்கையரால் வழுக்கையர்களுக்காக எழுதப்படும் இலக்கியம்  "வழுக்கையிலக்கியம் " எனப்படும்.

வழுக்கையரைப் பற்றி நிறையக் கட்டுக் கதைகள் உண்டு, என்றாலும், மிக அபத்தமானது 'இளம் பெண்களுக்கு வழுக்கையரைப் மிகப் பிடிக்கும்' என்பது. எனக்குத் தெரிய மாப்பிள்ளை மொட்டை என்று பெண்களால் தூக்கி எறியப்பட்ட ஆண்களின் எண்ணிகையை ஒரு பெரிய "தரவுக் கட்டு" அட்டவணையில் போட்டால் அதன் 'அடி, நுனி' தேட சிவபெருமான் புதிதாக ஆள் தேட வேண்டும். அத்தோடு 'மாப்பிள்ளைக்கு தலைமுடி போதாது" என்று வந்த "சம்பந்தத்தைத்' தட்டிக்கழித்த பெண்களின் 'நிரலும்' நீளமானது. 'பசையுள்ள' வழுக்கையரின் கதை வேறு.

வழுக்கை என்பது ஒரு நீண்ட நாள் நண்பன்/எதிரி. கிட்டத்தட்ட பதினாறு, பதினேழு வயதுகளில் நமக்குக் கிட்ட வந்துவிடுவான். பிறகு போ என்றாலும் போகமாட்டான். ஆரம்ப நாட்களின், அவன் ஒரு ரகசிய சிநேகிதன்.எமக்கு மட்டும் தெரிவான். 'எனக்கு முடி' கொட்டுது என்றால் எல்லாரும் சிரிப்பார்கள். ரகசியமாக "நெரில்", "கேர்ன்" என்று வாங்கி வைத்து காலையிலும் மாலையிலும் டியுஷன் போகுமுன்னும் தலை தேயத் தேய மசாஜ் செய்வீர்கள். வழுக்கையரை யாரேனும் கிண்டல் செய்தால் ரத்தம் கொதிக்கும். 'காவோலை விழக் குருத்தோலை சிரிக்குது' என்று பெரிய மனுசத்தனமாக யோசித்துக் கொள்வீர்கள். வழுக்கையயரில் மிகப் பிரபலமானவர்கள் எல்லாம் எங்கப்பன் பாட்டன் போல் உணர்வீர்கள். யாராவது வகுப்பில் 'வழுக்கையன் ஜோக்" சொன்னால் சங்கடமாக உணர்வீர்கள். இத்தனைக்கும் நீங்கள் ஒரு ஆரம்பகால வழுக்கையன்; உங்களைத் தவிர வேறு ஒருவருக்கும் நீங்கள் 'முடி' இழந்து கொண்டிருப்பது புரியாது. ம்ம்ஹூம், இதெல்லாம் சொல்லிப் புரிகிற விஷயமா?

'வழுக்கையர் மூளைசாலிகள்" என்றுதான் சொல்கிறார்கள் ! அது வடிகட்டிய பொய் என்று தெரிந்தாலும் ஒத்துக் கொள்ள மாட்டேன்.

வழுக்கைக்கான சிகிச்சை முறைகள்

கீழே உள்ள எதுவும் வேலை செய்யாது. ஆனால் "ஆரம்ப வழுக்கையர் சொல் கேளார்" என்பது வழுக்கையர் வாக்கு என்பதால் எழுதுகின்றேன்.

(1) சிரசாசனம் செய்யலாம், எச்சரிக்கை: சிரசாசனப் பயிற்சி ஆரம்பிக்கமுன் ஒரு தகுதி பெற்ற வைத்தியரை ஆலோசிக்கவும்.
(2) உங்கள் வழுக்கைத் தலையை மாட்டினால் நக்கப் பண்ணலாம்.மாட்டின் சொரசொரப்பான நாக்கு, முடி வளர்ச்சியைத் தூண்டும். திரும்ப எச்சரிக்கை பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல.
(3) மருதாணியை அரைத்துத் தலையில் பூசலாம். தலை சிவப்பாக மாறப்போவதால், அடுத்த சில நாட்களுக்கு "சிக்" லீவு அடிக்க வேண்டிய தேவையுண்டு. வேலை போனால் என்னிடம் மல்லுக்கு வரவேண்டாம். எதற்கும் முன்னெச்சரிகையாக "பயோடேட்டா" வைச் சோடித்து வைக்கவும். www.seek.com முதலிய தளங்கள் உதவியாக இருக்கும்.
(4) ஒரு கப் சூடான வெந்நீரில் ஒரு தேக்கரண்டி கடுகு' இனை இட்டு ஐந்து நிமிடங்கள் சூடாக்கவும். பிறகு அதை , அவசரப்பட்டுத் தலையில் வைத்து மசாஜ் பண்ண வேண்டாம். குடிக்கவும்.

கீழே உள்ளது பண்டைய எகிப்தில் கிட்டத்தட்ட 1100 வருடங்களிற்கு முன்
 பாவிக்கப்பட்டது என ஒரு வலைத்தளம் கூறுகின்றது.

சிங்கம், நீர் யானை, முதலை, பாம்பு, தாரா என்பவற்றின் கொழுப்பைத் தலையிற் தேய்க்கவும். தனித் தனியாகவா? அல்லது சேர்த்தா? என்ன விகிதத்தில்? என்ற விபரம் கிடைக்கவில்லை. ஈமெயில் அனுப்பியுள்ளேன் பதில் கிடைத்தால் பிறகு பதிகிறேன்.

மேலேயுள்ளதைப் பார்க்கும்போது கடந்த 1100 வருடங்களாக வழுக்கைத் தலைக்கு மருத்துவத் சிகிச்சையில் பெரிய மாற்றங்கள் வரவில்லைப் போல் இருக்கிறது. என்ன நான் "நெரில்", "கேர்ன்"  வைத்துத் தேய்த்தேன், 1100  வருடங்களுக்கு முன் முதலை எண்ணெய், பாம்பு எண்ணெய் ...

வழுக்கையை மறைப்பதற்கான ஒரு வழிமுறை அல்லது செல்லத்தம்பி வாத்தியாரின் முறை.

முதலில் கெட்ட செய்தி: சுத்தமான முழு வழுக்கையர் இதைப் பாவிக்க முடியாது. தலையின் பக்கங்களில் முடி இருக்க வேண்டும். எனக்குத் தெரிந்து, எங்களுக்கு ஆறாம் வகுப்பில் 'சமூகக் கல்வி' படிப்பித்த செல்லத் தம்பி வாத்தியார்தான் இதை முதலில் பாவித்தவர்.

தலையின் ஓரங்களில் வளரும் முடியை, எவ்வளவு நீளமாக வளர்கிறதோ அவ்வளவு நீளமாக வளர்க்கவும். பிறகு, அதை லாவகமாகச் சீப்பினால் இழுத்து (வாரி) ,தலையின் வழுக்கையான பிரதேசங்களை  மூடி மறைக்கவும். எஞ்சும் தலை முடியை வெட்டி விடவும். கடுங் காற்று அடிக்கும் இடங்களைத் தவிர்க்கவும். துரதிஷ்ட விதமாகச் செல்லத்தம்பி வாத்தியாருக்குக் காப்புரிமை பற்றித் தெரிந்திருக்கவில்லை. இரண்டு அமெரிக்காக்காரங்கள் முந்திக் கொண்டார்கள். நம்பாவிட்டால் கீழே பார்க்கவும்.

யு.எஸ். காப்புரிமை இலக்கம் 4,022,227

அவர்களுக்கு "இக் நோபல்" பரிசுகூடக் கிடைத்தது என்பது உபரித் தகவல்.

"காதலித்துப் பார், உன்னைச்சுற்றி ஒளிவட்டம் தோன்றும்"  என்று ஒரு கவிஞர் எழுதுகிறார். இது கவிதையா இல்லை மொக்கையா என்ற ஆராய்ச்சிகளைப் பிறகு பார்ப்போம். ஆனால் நாம்  சும்மா இருக்கவே நம்மைச் சுற்றி ஒளி வட்டம் தோன்றுகின்றது. என்ன, அருகில் ஒரு  *ஒளிமுதல் இருக்க வேண்டும்.

------------------------------------------
*'ஒளிமுதல்' என்றால் என்ன என்று புரியாதவர்கள் சின்ன வயதில் தமிழில் விஞ்ஞானம் படித்தவர்களை அணுகவும்.

Image: cartoon  character Caillou

தரவுக் கட்டு -  database
நிரல் -list
சோடித்து - அலங்கரித்து