Showing posts with label நினைவுகள். Show all posts
Showing posts with label நினைவுகள். Show all posts

Thursday, January 2, 2014

இடைக்காடும் செலவில்லாமற் கிடைக்கும் ஒரு சில ஞாபகங்களும்

ஊரென்றால் என்ன இருக்கும்?

வயல்கள் வெளிகள், தோட்டங்கள், கலட்டிகள், வீடுகள், ஒரு சில தார் ரோட்டுக்கள், நிறையப் புழுதி படிந்த ஒழுங்கைகள், வாசிக சாலைகள், சிறிய கோவில்கள், அரைக் காற்சட்டை வழுக வழுக ஒருகையால் அதை இழுத்து விட்டுக் கொண்டு ஓடித்திரியும் சிறுவர்கள், இரட்டைப் பின்னல்/ஒற்றைப் பின்னல் சிறுமிகள், சந்தியில் 'அலம்பிக்' கொண்டிருக்கும் இளசுகள் பின்னே பெரிசுகள் இல்லையோ? எல்லாம் உண்டு இடைக்காட்டில். யாழ்ப்பாணத்தில் ஆறுகள் இருக்காது. எனவே எங்கள் ஊரிலும் ஆறுகள் இல்லை. அதைச் சரிக்கட்ட நிறையக் கிணறுகள் உண்டு. மொத்தத்தில் ஒரு சராசரி யாழ்ப்பாணக் கிராமம். ஆனால் எங்களுக்குக் மட்டும் மிகத் 'திறம்'பட்ட ஊர்.

என்ன இருக்கக் கூடாது? தொழிற்சாலைகள். இவை இருந்தால் ஊர், சிறு நகரமாகப் பதவி உயர்வு பெற்றுவிடும். நாங்கள் 'ஃபாக்டரி' கட்டக் கூடாது' என்று கொடி பிடித்து ஆர்ப்பாட்டம் எல்லாம் நடத்தத் தேவை வரவில்லை. ஊரில் யாரும் தொழிற்சாலைகள் கட்டவில்லை. ஒன்றிரண்டு கம்மாலைகள் அப்பப்ப திறந்து மூடப்பட்டன. சைக்கிள் கடை கூட நிரந்தரமாக இருந்ததில்லை.

எனக்கும் இடைக்காட்டுக்குமான தொடர்பு 1989 இலேயே குறையத் தொடங்கி 1990 இற்குப் பிறகு ஊரில் கால் வைக்கத் விடாமல் நாட்டு நிலைமையும் சொந்தத் தேவைகளும் சதி செய்தன. ஊர் என்று நான் எழுதுவதெல்லாம் 1990 இற்கு முன்பானவை. எனக்கு ஞாபகப் பிசகு இருப்பதால் தகவல்கள் முன்பின்னாக இருக்கலாம். பிழை இருப்பின் சுட்டிக் காட்டவும். அல்லது மொட்டைக் கடிதமாவது போடவும்.

இடைக்காட்டின் எனது ஆகப் பழைய ஞாபகம், "வெள்ளி விழா, பொன் விழா" என்று அறியப்பட்ட இடைக்காடு மகாவித்தியாலத்தின் பொன் விழாவும் இடைக்காடு பழைய மாணவர் சங்கத்தின் வெள்ளிவிழாவும். 1977 என்று ஞாபகம். மிகக் கோலாகலமாக இ.ம.வித்தியாலத்தில் நடைபெற்றது. பள்ளிக்கூடத்திற்குக் கிட்ட அலங்கார வளைவுகள் எல்லாம் கட்டப்பட்டிருந்தன . கலை நிகழ்வுகள், பொருட்காட்சி என்றெல்லாம் நடந்தன. இதை எழுதும் நான் அப்போது ஒரு சிறு பையன். என்பதால் அப்பா அம்மாவிடம் வாங்கிய சில்லறைக் காசுக்கு இனிப்பு, ரொபி, கச்சான் அலுவா, ஐஸ் பழம் என்று பக்ரீறியா, சுகாதாரம் என்றெல்லாம் யோசிக்காமல் தின்று தீர்த்தேன். அதைவிட முக்கியம் 'அவிட்டு' விட்ட மாடு மாதிரிச் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்தேன்.

பள்ளிக் கூடத்தை விட்டால் அதுக்கு அடுத்த முக்கியமான இடங்கள் இரண்டு வாசிகசாலைகள். (கடவுள் பக்தர்கள் இதைவிடக் கோவில்கள் தான் முக்கியமானவை என்பார்கள். நான் இந்தப் பட்டிமன்றத்திற்கெல்லாம் வரவில்லை). "இடைக்காடு சனசமூக நிலையம்" என்பது ஒன்று. மற்றது "இடைக்காடு கலைமகள் சனசமூக நிலையம்". இரண்டிற்கும் இருக்கும் பெயரை வைத்துப் பார்க்கும்போது ஒன்றிலிருந்து கோவித்துக் கொண்டு பிரிந்துபோய்த் தொடங்கியதுதான் மற்றது என்று எண்ண இடமுண்டு. சன சமூக நிலையம் என்றூ 'ஒபிசியலாக' அறியப்பட்டாலும் வாய்ச்சொல்லில் (பேச்சு வழக்கில்) கிழக்கு வாசாலை, மற்றது மேற்கு வாசாலை என்றே அறியப் பட்டன. (வாசாலை =வாசிக சாலை ). இரண்டு வாசாலைகளிலும் வீரகேசரி, உதயன், ஈழ நாடு, ஈழ முரசு, டெய்லி நியூஸ் என்று எல்லாப் பேப்பர்களும், ஆனந்த விகடன், கல்கி, குமுதம் (நடுப்பக்கம் சில வேளைகளில் கிழிக்கப்பட்டிருக்கும்) ,குங்குமம், சாவி, இதயம் பேசுகிறது ,அம்புலி மாமா, ரத்ன பாலா, பால மித்திரா என்று எல்லா வாராந்திர/மாத சஞ்சிகைகளும் இருக்கும். ஒன்றிரண்டு இந்த 'வாசாலை'யில் இருக்காது எனில் அவை மற்றதில் இருக்கும். தனியப் பேப்பர், விகடன், குமுதம் எனில் மற்ற ஊர் வாசிகசாலைகள் போலாகி விடும். முக்கியமானதை விட்டு விட்டேன். அவை வகை பிரித்து வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்கள். புத்தகங்கள் என்றால் வெறுமானே கதைப் புத்தகங்கள் இல்லை. கதைப் புத்தகங்கள் பாடப் புத்தங்கள், கட்டுரைப் புத்தககள், கலைக் கழஞ்சியங்கள் முழுமையான எல்லா வகைப்புத்தகங்களும் இருந்தன..

என் இடைக்காட்டு நாட்களில் கைத்தொலைபேசி (மொபைல் போன்) இன்னும் பாவனைக்கு வந்திருக்கவில்லை. எனவே கண்ட இடத்தில் கண்ட நேரத்தில் அழைப்பு அல்லது குறுந்தகவல் அனுப்பும் வழி இல்லை. இணையம் இல்லை என்பதால் ஃபேஸ்புக்கும் இல்லை. அப்ப ஊர்ப்புதினங்களை எப்படி அறிவது? இந்த இடத்தில் ஆண்கள், பெண்கள் என்று இரண்டாகப் பிரிக்கவேண்டிள்ளது.
ஆண்களுக்கு வாசிகசாலை வாங்கும்(Bench) பெண்களுக்கு சந்தையும்தான் அன்றைய ஊர்ப்புதினம் கதைக்கும்/பரப்பும் இடம். ஊர் வம்புகள் அந்தக் காலத்தில் இன்னும் விரைவாகப் பரவியது என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. எல்லாவற்றையும் விட முக்கியமானது இவ்வாறு ஊர்ப்புதினம் பேசுவது அவரவர் கற்பனைத் திறனை வளர்க்க உதவியது. இக்காலங்களில் ஃப்பேஸ்புக்கில் 'share' பண்ணுவது அவரவர் கற்பனைத் திறனை மழுங்கடிக்கிறது.

வாசிகசாலைகள மட்டும் பேசிவிட்டு ஊரில் மூலைக்கு மூலையிருக்கும் வைர(வ) கோவில்களைப் பற்றி எழுதாவிட்டால் வைரவர் கனவில் வந்து என்னை மிரட்டலாம். கொட்டடி வைர கோவில், பெரீய தம்பிரான் கோவில், சொத்தி வைர கோவில் ('சொத்தி வைரவர்', ' சோதி வைரவர்' என்று மறுநாமம் சூட்டப்பட்டார்), இத்திக்கலட்டி வைர கோவில் என்பன உடனே ஞாபத்திற்கு வருகின்றன. மாணிக்கப் பிள்ளையாரும் இருக்கிறார் காட்டுப் பிள்ளையாரையும் மறக்கவில்லை. அம்மன் கோவில் சற்றுப் பெரியது.. வருடாந்திர திருவிழாவும் உண்டு. அம்மன் கோவில் திருவிழா தவிர்த்து மற்றக் கோவில்களுக்கு வருடத்தில் ஒரே ஒருநாள்தான் திருவிழா. பகலில் பூசையும் அன்னதானமும் இருக்கும். இரவில் மேளக் கோஷ்டி, சின்ன மேளம், இசைக் குழுவினரின் பாட்டு, நாடகம் என்று களை கட்டும்- லையிற்று மிசின் புன்ணியத்தால் ரியூப் பல்ப்கள் (கலர் கலராக), "ஓடும்" பல்ப்புக்கள் என்று அலங்காரம். இதிலே ஒரு சின்ன 'அரசியலும்' எண்டு. எல்லா வைர கோவில்களுக்கும் வருஷத் திருவிழா இல்லை. எனவே வைரவர்களுக்குள்ளும் 'ஸ்ரேஸ்' பிரச்சினை இருக்குப் போல.

புது வருஷம் என்றாற் கூடுவோம் பள்ளிக்கூட மைதானத்தில். புது வருட விளையாட்டுப் போட்டி அவர் அவரிற்கு அவரவர் சோலி. பெடி பெட்டைகளுக்கு ஐஸ்கிறீம், அல்லது ரொபி , ஐஸ் இனிப்பு என. பேரன் பேர்த்தி கண்டவர்களுக்கு சிறிசுகளின் விளையாட்டைக் கண்டு களிக்க என்று. இளைஞர்களுக்கு பிரியமானவர்களின் பார்வை மட்டும் போதும். (மூன்று போத்தற் கள் அடித்தாலும் இதன் போதைக்கு இணையாகுமா?). கிறிஸ் கம்பில் ஏறுவார்கள் இளந்தாரிகள். அநேகமாக ஒவ்வொருவரும் தம் முயற்சிகளில் கிறீசை வழித்தெடுக்கக் கடைசியாக வருபவருக்கே 'லக்'. இதெல்லாம் நடக்க இன்னொரு சீரியஸ் பார்ட்டியையும் மறக்கலாகாது- நடுத்தர வயது கொழும்பு உத்தியோகத்தர்! லீவு போட்டு விட்டு ஊருக்கு வந்தால் போதுமா? கொஞ்சம் போட்டுவிட்டு இங்கிலிஷ்' கதைக்காவிட்டால நாலுபேர் மதிப்பார்களா? அல்லது கிடைத்த சந்தர்ப்பத்தை விடமுடியுமா?

"ஐ சே, ஜேயார் இஸ் ஏ ஸ்டுபிட் கை..... யூ சீ!, பெடியள் வில் டீச் ஹிம் எ லெஸ்ஸன்" என்று பிளந்து கட்டுவார்கள். (விடியக் காலமை இறக்கிய கள்ளின் வாடையும் இவர்கள் பேச்சில் லேசாக அடிக்கும்). இவர்கள் பேசுவது அநேகம் பேருக்குப் புரியாது. புரிந்தவர்கள் குழப்பிப் போய் இருப்பார்கள்). இருக்கட்டும் ஆனால் இவர்கள் 'முதியோர் " ஓட்டத்தில் மட்டும் பங்கு பற்ற மாட்டார்கள். 'பழைய மாணவர்" ஓட்டத்திற்கு 'அரைக் காற்சட்டையுடன்' ஆயத்தமாக இருப்பார்கள். மனதில் மட்டும் ஒரு நம்பிக்கை அந்தக் கால 'ஓட்டோகிறாப்ஃ' காரி நாம் ஓடுவதைப் பார்க்க மாட்டாளா என....

ஊரில் நிறையப் பேர் நீளக்காற்சட்டை போட்டு "ஒபிஸ்' வேலை பார்த்தாலும் இடைக்காடு விவசாய பூமிதான். மிகுதி யாழ்ப்பாணத்தையும் போல கிணற்று நீர் இருந்தாலும் கற் பூமி இது. அந்தக் காலத்திலேயே முன்னவர்கள் கலட்டிகளைத் 'திருத்தி' நிறையத் தோட்டாக்காணி ஆக்கிவிட்டார்கள். எனவே வெங்காயம், மிளகாய், பயறு, உளுந்து, தக்காளி, கத்தரி, மரவள்ளி என்று யாழ்ப்பாணத்தில் விளையும் எதையும் விட்டுவைக்கவில்லை. எல்லாவற்றையும் 'செய்தோம்'. என்றாலும் வெங்காயந்தான் எங்கள் முக்கிய பயிர்.

முழுநேரமாகத் தோட்டம் செய்பவர்கள் மூவாயிரம், நாலாயிரம், ஏன் பத்தாயிரம் 'கண்டு' என்று வெங்காயம் செய்வார்கள். இன்னொரு தொழில் செய்பவர்கள் 800- 1000 கண்டு வெங்காயமாவது செய்வோம். வெங்காயம்தான் அநேகத் தேவைகளுக்குப் பணம் கொடுத்தது. "புரொபஷனல்" கமக்காரருக்கு வருமானத்தில் பெரும்பகுதி வெங்காயச் செய்கையினால்தான் வரும். இன்னொரு வேலை செய்துகொண்டு கொஞ்சமாக வெங்காயம் செய்பவர்களுக்கு அவசரத் தேவைகளுக்குக் கை கொடுப்பதும் அதுவே. வெங்காயக் கொட்டிலில் தொங்கிக் கொண்டிருக்கும் வெங்காயப் பிடிகள் மாதிரி ஒரு "மாற்றுத் தங்கம்" இன்னும் நான் தேடிக்கொண்டிருப்பது. திடீர்ப் பணத்தேவைகளுக்கு உதவுவது இது மாதிரி ஒன்றில்லை. காசுத் தேவை எனில் கொட்டிலில் தொங்கிக் கொண்டிருக்கும் வெங்காயப் பிடிகள் சிலவற்றை அவிழ்த்தி, நுள்ளிச் சாக்குகளில் போட்டுக் கொழும்பு லொறியில் அனுப்பலாம், இல்லாவிட்டாம் உள்ளூர்க் கடைகளிலும் விற்கலாம். பெரியவர்களுக்கு இப்படி என்றால் சிறியவர்களையும் இந்த 'வெங்காயம்' கைவிடாது. இது வெங்காயம் பூக்கும் காலங்களில். வெங்காயப் பூக்களை 'முறித்து' அளவாகப் 'பிடிகளாகக் கட்டினால் பிறகு சந்தைக்குக் கிட்ட உள்ள ஒரு கடையில் விற்றால் கிடைக்கும் காசு சிறுவர் எமக்கே :-)

சிறுவனாக ஓடித்திரிந்து, கள்ள மாங்காய், புளியங்காய் ஆய்ந்து, பிறகு அந்த ஆமிப் பிரச்சினைக்கிடையில் வளர்ந்து ஒரு இருபது வயது இளைஞனாக ஊரை விட்டு வெளிக்கிட்டேன். பிறகு படிப்பு, வேலை, என்று நாட்டுக்கு நாடு மாறினேன். பிறகு ஊரிற் கால் வைக்கக் கிடைக்கவில்லை. கிடைத்ததெல்லாம் காசில்லாமல் அனுபவிக்கக் கூடிய சில சிலிர்ப்பான ஞாபகங்கள் ம்ட்டுமே.

கனவா, நனவா என்று புரியாத ஒரு மத்திய நிலையில் நடந்து கொண்டிருக்கிறேன் -சத்தியமாக உற்சாக பானம் எதுவும் ஏற்றாமல். தொண்டை வறள்கிறது. பசி வயிற்றையும் தாண்டிக் காதையும் பிறாண்டுகிறது. என்றாலும் எதையோ தேடி இன்னும் இன்னும் நடக்கின்றேன். கால்கள் 'நீ இன்னும் இளைஞன் இல்லை" என்று உணர்த்துகின்றன. ஆழ் மனத்திற்குள் ஒளித்திருக்கும் இன்னும் வளராத சிறுவன் மட்டும் சொல்லுகிறான் 'இன்னும் நட, கிடைக்கும்' என்று. என்னத்தைத் தேடுகிறேன் என்றால் விடை கொஞ்சம் குழம்பலாக... சில வாசனைகள், சத்தங்கள், மற்றும் நினைவுகளின் கோர்வைகள்.

", வாய்க்கால்களில் வளர்ந்திருக்கும் அறுகம்புல்லை உழவாரத்தால் கஷ்டப்பட்டுச் 'செருக்கும்' ஒரு வயதானவர், பக்கத்துத் தோட்டத்தில் இயங்கும் இறைப்பு மிசினின் ரீங்காரம், வாசிகசாலை வாங்கில் இருந்தபடியே அரசியலில் pHD செய்யும் ஆய்வாளர்கள், சிலிப்பர் போடாமல் பள்ளிக்கூடம் போகும் சிறுவர்கள், மீன் சந்தையில் கேட்கக்கூடிய 'விசேட' தமிழ், ரியூசன் விடும் நேரம் பார்த்துக் கணக்காகத் தற்செயலாக குறுக்கே நெடுக்கே சைக்கிள் ஓடும் பெரிய பொடியள், நவராத்திரிக்குக் கிடைக்கும் ஓசி அவல்/கடலை, மாரித் தவளைகளின் கத்தல்கள், முறித்த வெங்காயப் பூவின் மெதுவாக மூக்கை அரிக்கும் வாசனை, மாரியில் மட்டும் நீர்ப்பிட்டிக் கடற்கரையில் கிடைக்கும் சீலா மீனையும் மறந்துவிட முடியவில்லை "

இவ்விடை கூட அண்ணளவானதுதான். முழு விடையும் இடைக்காட்டில்தான் இருக்கிறது என்று மட்டும் புரிகிறது. ஆனால் இன்னும் தேடுகின்றேன்.





-----

கண்டு (கன்று) - என்பது ஒரு நில அளவை. 1000 கன்று = ?????? பரப்பு
செருக்குதல்- செதுக்குதல் என்பதன் மருவிய வடிவம் என நினைகிறேன். தமிழ்ப் பண்டிதர்கள் யாராவது விளக்குவார்களா?

நன்றி- 'இத்தி மலர் 2013", யாழ் இடைக்காடு மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கம் (கனடா)

Tuesday, September 10, 2013

பென் ஜோன்சனின் ஓட்டம் அல்லது "இதயம்" நிறைந்த காதல்

அழகான ஆறு, கரையில் மூங்கில் மரங்கள்,
வளாகம் முழுக்க அழகிய மரங்கள்...மிக அழகான் மரங்கள்-சிலது பூத்துக் குலுங்கும் சிலது பூக்காது, ஆனால் எல்லாமே அழகு. , மிக அழகான கட்டடங்கள். படத்தில் இருப்பது மாதிரி உண்மையாகவே பல 'சீனறிகளைக்' கொண்ட பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இது நடந்தது.

காலம்: 1992 ஒலிம்பிக் முடிந்து சில நாட்கள். உசேன் போல்ட் 'ஐ மட்டும் அறிந்த இளம் தலை முறைக்கு பென் ஜோன்சனைப் பற்றிச் சொல்லவேண்டும். நான்கு வருடங்களின் முன், 1988 இல் பென் ஜோன்சன் 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்று பிறகு ஊக்க மருந்து சாப்பிட்டதாக நிரூபிக்கப்பட்டு பதக்கத்தைப் இழந்தவர். பதக்கத்தை இழந்தாலும் 9.79 செக்கனில் 100 மீட்டர் ஓடியது அந்தக் காலப் பகுதியில் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. என்பதால் அடுத்த ஒலிம்பிக் காலத்திலும் பென் ஜோன்சன் பேசப்பட்ட நபராகிறார்.

மீண்டும் கதைக்கு: ஆற்றுக்கு இந்தப் பக்கம் அக்பர் விடுதியும் பொறியியல் பீடமும். அந்தப் பக்கம் மிச்ச எல்லாப் பீடங்களும் விடுதிகளும். அக்பர் விடுதி ஆண்கள் விடுதி. அங்கிருந்த பெரிய விதானையார் என்று அறியப்பட்ட பேர்வழியைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும். பேருக்கேற்ற மாதிரி ஆள் நன்றாக இடம் வலமாக வளர்ந்த ஆள். நல்ல பெலசாலியும் கூட. இவரை நகராமல் நிறுத்த நாலைந்து பேர்கள் போதாது. பெரிய விதானையார் என்று இவருக்குப் பெயர் வந்த காரணம், பெரிய என்பது உருவத்தால் வந்தது. விதானையார் என்பதற்கு ஒரு மசமசப்பான காரணம் உண்டு. சின்ன விதானையார் என்றும் இன்னொருவர் இருந்தார்.

இன்றைக்கு பெரிய விதானையாருக்கு நல்ல வெறி. 'ஃபாகல்ரி டே' என்று ஞாபகம். கான்ரீ'னுக்குப் பககத்தில் இருந்த பெரிய 'வரைதல் கட்டடத்தில்' டின்னர் & டான்ஸ். 'தண்ணி' ஆறாக ஓடாவிடினும் அருவியாக ஓடியது. ஒருசிலரை விட அநேகர் 'சோடா மூடி' அளவு பானத்தை மட்டும் முகர்ந்து விட்டு 'தள்ளாடிக்' கொண்டிருந்தார்கள். மிக முக்கியமாக, பெண் பிள்ளைகளைக் கண்டால் இன்னும் அதிகம் தள்ளாடினார்கள். "உன்னால தானையடி குடிக்கிறன்" என்று பொதுவாக அடிக்கடி சொல்லிக் கொண்டார்கள். அதுமட்டுமல்ல சிங்களப் பெண் பிள்ளைகளைக் கண்டால் திடீரென்று 'இங்கிலிஷ்' பேசத் தொடங்கினார்கள். 'இங்கிலிஷ்' கிழவிகள் என்று அறியப்பட்ட ஆங்கிலம் படிப்புக்கும் விரிவுரையாளார்களுடன் மட்டும் எதையும் பேசாமல் ஒரு அசட்டுச் சிரிப்புச் சிரித்துவிட்டு நழுவினார்கள். மேடையில் ஒரு மவுசு இழந்த ஒரு இசைக்குழுவினர் புதிய, பழைய சிங்கள, ஆங்கில, சில தமிழ்ப்பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தனர். ஆத்மா லியனகே'இன் லியத்தம்பராய் மட்டும் சுமாராகப் பாடப்பட்டது. மாணவர்கள் நடனமாடிக் கொண்டிருந்தனர். நடனம் என்றால் கிட்டத்தட்டத் தவளைகள் தாவிக் கொள்வதுமாதிரி... என்றாலும் இது கஷ்டமான வேலை. நிறைய 'எனர்ஜி' தேவைப்படும். களைத்துப் போனால் அதைக் காட்டிக் கொள்ளாமல் "வெறி" மாதிரித் தள்ளாட்டம் போடவேண்டும். இருக்க ஒரு சின்ன இடைச்செருகல் போடவேண்டியுள்ளது. நடனம் என்றால் நிறையக் கற்பனை கிற்பனை பண்ணக் கூடாது. ஆண்கள் தங்கள் பாட்டுக்குத் தனியாக நடனம் என்று எதோவொன்றைச் செய்து கொண்டிருப்பார்கள். பெண்களுடன் சேர்ந்து நடனம் ஆடுவது என்பது ஆராவது 'செற்' ஆன சோடிகளுக்கு மட்டும்தான். சில சிங்களப் பெண் பிள்ளைகள் இதேமாதிரி இன்னொரு இடத்தில் ஒரு குழுவாக நடனம் ஆடிக்கொண்டிருப்பார்கள். இதுதான் கம்பஸ் நடனம். தமிழ்ப் பிள்ளை யாராவது ஒருத்தி தன்னும் ஆடியதாகத் தகவல் இல்லை. (ஆட்டக்காரி என்று லேபல் அடிக்கப்பட்ட பெண்களும் ஆடியதாக இல்லை);ஆனால் லீவில ஊருக்குப் போகேக்க யாராவது ஒன்று கேட்கும் "கம்பசில பெட்டையள் எல்லாம் நல்ல "சோசலாக" பழகுவாள்கள் என்ன?". இந்த இடத்தில் மட்டும் கற்பனை பீறிட்டுக் கிளம்பும் . அங்காலை இஞ்சாலை பார்த்துவிட்டு "மச்சான் இந்த டின்னர் அண்ட் டான்சிலை பெட்டைகளோடைதான் டான்ஸ் ஆடுறது. சொல்லி வேலையில்லை". என்றாலும் நம்பாதமாதிரி "மச்சான் நீயெல்லாம் டான்ஸ் ஆடமாட்டாய்! " என்று ஆள் தொடரும். உள்ளுக்கு நம்பத் தொடங்கியிருப்பார்.

சரி பெரிய விதானையாரை மீண்டும் கவனிப்போம். அவருக்கு கூடப் படித்த ஒரு சிங்களப் பெட்டையில ஒரு கண். கேட்கத் துணிவில்லை. இதயம் முரளி கணக்காக ஒரு மௌனக் காதல். (அவளிற்குப் பெயர் சம்பிகா என்பது மட்டும் இப்போதைக்குப் போதும்)

"மச்சான் இவளுக்கு என்னிலை ஒரு கண் " என்று சொல்லிக் கொள்வார். உண்மை என்னவென்று "பாலர்" வகுப்புக் போகத் தொடங்கிய குறிஞ்சிக் குமரன் கோவில் ஐயரின்ர மகனுக்கே தெரியும். கிடக்கட்டும். இன்றைக்கு இருக்கிற வெறியிலே ஆள் அவளைக் கேட்டாலும் கேட்கலாம்.

"மஷான், இண்டைக்கு நான் இவளோடை கதைக்கப் போறன்" என்று தொடங்கினார்.

"உனக்கு வெறி மச்சான், இண்டைக்குச் சரி வராது, நாளைக்குக் கேட்போம்" என்றான் நூலகர் சிவா. (இவனுக்கு நூலகர் என்று பட்டம் வந்ததற்கு காரணங்கள் நான் சொல்லாமலே உங்களுக்குப் புரிந்திருக்கும்)

விதானையார் மிகத் தெளிவாகச் சொன்னார் "மச்சான், நாளைக்கு எனக்கு வெறி இறங்கினால், கதைக்கத் துணிச்சல் வராது, இண்டைக்கே இவளைக் கேட்கப் போறன். வெறி இருக்கக்கைதான்தான் மச்சான் கதைக்கலாம்".

"எனக்குத் தண்ணி அடிச்சால்தான் இங்கிலிஷ் வரும், I want to talk to her in English மஷான்" தொடர்ந்தார் விதானையார். சரிதான் இவருக்கு சிங்களத்தில் "எக்காய், தெக்காய், துணாய், ... பாலுவாய்" வரைதான் வரும். எனவே சிங்களப் பெட்டையை எப்படி டாவடிக்கிறது? "ஷேக்ஸ்பியர் துணை" என்று மானசிகமாகக் கும்பிடு போட்டுவிட்டு இங்கிலிஷ்'இல் விளையாட வேண்டியதுதான். இதிலும் சிக்கல். விதானையார் அறிந்துவைத்திருந்த இங்கிலிஷ்'இல் நிறைய 'நாலெழுத்து' க் கெட்ட வார்த்தைகள்தான் அதிகம். மருதானைப் பக்கம் 'இங்கிலிஷ்" படம் பார்த்து ஆங்கில அறிவை வளர்த்துக் கொண்டதால் வந்த வினை. "மச்சான் நான் வெள்ளைக்காரன் மாதிரி இங்கிலிஷ் கதைப்பன்" என்று விதானையார் தொடர, திடுக்கிட்டுவிட்டான் ஆங்கிலப் புலவர் வீரசாமி (இயற்பெயர் எதற்கு?). வீரசாமியைப் பற்றி இரண்டே வசனங்களிற் விபரிக்க வேண்டுமானால், ஒன்று: அவன் அடிக்கடி ஆங்கிலப் பழமொழிகளைச் சொல்லுவான், இரண்டு: ஒட்டுமொத்த ஆங்கில மொழியையே தான் குத்தகைக்கு எடுத்தவிட்டது மாதிரிப் பீலா விடுவான்.

சாம்பிளுக்கு ஒன்று சொல்ல வேண்டுமானால், "மச்சான் கேள்," என்று தொடங்கி
''The perfection of wisdom and the end of true philosophy is to proportion our wants to our possessions, our ambitions to our capacities, we will then be a happy and a virtuous people.'' by Mark Twain என்று முடிப்பான். எனக்கு 20 வருடங்கள் கழித்தும் இன்னும் இது புரியவில்லை.

"மச்சான் வா! இண்டைக்குக் கேட்டிடுவம்" என்று தொடங்கினான் பொதிசுமந்த வரதன். வரதன் குழந்தை மனசுக்காரன். பெண்பிள்ளைகள் எதாவது பாரம் சுமந்தால் அவனுக்கு மனம் பொறுக்காது. ஓடிச்சென்று வாங்கித் தான் சுமப்பான். அப்பாதெல்லாம் கிளாலி, கொம்படி கடந்து யாழப்பாணம் போகவேண்டுமென்றால் வரதன் ஒரு வரப்பிரசாதம்- கம்பஸ் பெட்டைகளுக்கு; நாலைந்து பெண்களின் பொதிகளைத் தனியாளாக சுமந்து கொண்டு கிளாலி கொம்படி எல்லாம் திரிந்தபடியால் ஆள் நல்ல பெலசாலி என்பதை அறிவீர்கள்.

விதானையாருக்கு இப்ப கொஞ்சம் பயம் பிடித்துவிட்டது. என்றாலும் உள்ளே போயிருந்த நான்கு 'மூடிகள்' அளவான வெளிநாட்டுப் பானம் தந்த உத்வேகத்தில் படீரென்று எழுந்து நின்றார்.

"மச்சான் இந்த நேரம் அவளவை அக்பர் பாலத்தைத் தாண்டிப் போயிருப்பாளவ, நீ இன்னுங் கொஞ்சம் சுணங்கினால் ராமநாதன் ஹோலுக்குப் போய்த்தான் பிடிக்கவேணும்" என்று இன்னும் ஏற்றத் தொடங்கினான் பொ.சு.வரதன். எல்லாருக்கும் 'ஏத்திவைத்துக் கூத்துப் பாக்கிற' ஆர்வம். என்றாலும் விதானையார் வழமையாக எப்பவும் கடைசி நேரத்தில் ஒரு 'ராஜதந்திரப்' பின்வாங்கலில் ஈடுபட்டுச் சிக்கல்களில் இருந்து நழுவுவதால் கூத்து நடைபெறாது என்றுதான் எல்லோரும் எண்ணியிருந்தார்கள். என்றாலும் இறைவன் சித்தம் வேறக இருந்தது.

விதானையார் அந்தக் காலங்களில் சினிமாக் கதாநாயகர்கள் செய்வதுமாதிரி இடது கையால் தலை முடியைக் கோதிக்கொண்டார். தோள்களைக் குலுக்கினார். பிறகு நாம்பன் மாடு மூசுகிறமாதிரி மூச்சைச் சத்தமாக விட்டார் "டேய், பென் ஜோன்சன் தோத்தான்டா" என்றுவிட்டுத் திடீரென மிக வேகமாக ஓடத் தொடங்கினார். ஓரிரு விநாடிகள் தாமதித்துத்தான் எல்லாருக்கும் நிலைமையின் "சீரியஸ்னெஸ்' விளங்கியது. எல்லாரும் இவருக்குப் பின்னால் ஒடத்தொடங்குகிறார்கள். என்றாலும் யாராலும் விதானையாரை முந்தமுடியவில்லை.இவர்கள் அக்பர் பாலத்தின் இந்தப் பக்கத்திற்குக் கிட்டப் போகும்போது விதானையார் பாலத்தின் அடுத்தபக்கத்திற்குக் கிட்டஓடுவது தெரிந்தது.

அடுத்த சீன்: அக்பர் பாலம் தாண்டியவுடன் கண்ணில் படும் பெயர் தெரியாத, கூடாரமாகச் சடைத்து வளர்ந்திருக்கும் மரத்தின் கீழ் நடக்கிறது. சம்பிகா பழைய தமிழ்ப் படங்களில் வருகிறமாதிரி தோழிகளுடன் மரத்தில் உள்ள கொப்பொன்றில் சாய்ந்து நிற்கிறாள். அருகில் விதானையார். விரைவாக ஓடியதால் தலையெல்லாம் வியர்த்து ஈரமாகி இருந்தது. ஆனால் இவர் மிகத் தெளிவாக ஏதோ கதைத்துக் கொண்டிருந்தார். ஏதும் குளறுபடி நடந்தது மாதிரி இல்லை. விதானையார் தன் காதலைச் சொல்லிருந்தால் சீன் இப்படி இருக்கமாட்டாது என்று தெரிந்தது. இவர்கள் எல்லோரும் போய்ச்சேர ஒரு அசௌகரிய மௌனம். என்ன கதைப்பது என்று யாருக்கும் புரியவில்லை. என்றாலும் நடந்ததை ஊகிக்கக் கூடிய வகையில் அடுத்த வசனத்தை விதானையார் ஆங்கிலத்தில் விட்டார்.
"சம்பிகா, அடுத்த கிழமை கொடுக்க வேண்டிய 'பிராக்ரிகல் ரிப்போர்ட்'டை முடித்துவிட்டேன். நாளைக்குக் கொடுக்கிறேன்."

(முடிவுரை: இச்சம்பவம் நடந்து சிலநாட்களின் பின் "இதயம்" திரைப்படத்தைக் கண்டியில் உள்ள ஒரு பாடாவதி தியேட்டரில் பார்த்தோம். விதானையார் கண் கலங்கியதாகப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பொ.சு.வரதன் சொன்னான். என்றாலும் அன்று படம் பார்த்த கனபேர் சில பல காரணங்களால் கண் கலங்கியதால் "விதானையார் கண் கலங்கிய காதை" பெரிதாகப் பேசப்படவில்லை. அவனவனுக்கு அவனவன் பிரச்சினை!)




பொறுப்பாகாமை :
இது உண்மைச் சம்பவத்தை வைத்துக் கற்பனை செய்யப்பட்டது என்று பல பதிவர்கள் "பொறுப்பாகாமை/டிஸ்கி போடுகிறார்கள். எனக்கு அவ்வளவு நெஞ்சுரம் இல்லை. எனவே இது "உண்மையில்லாத சம்பவத்தை" வைத்துக் கற்பனை செய்யப்பட்டது என்று கூறிக்கொள்கிறேன்.

Thursday, December 20, 2012

களவையும் கற்று மறந்தேன் - 1

இது எப்ப நடந்தது என்று மிகச் சரியாக ஞாபகம் இல்லை. ஏழு வயதில் சின்னப் பள்ளிக்கூடத்தில் முதலாம் வகுப்புப் படித்தேன். எனவே ஏழு வயதிற்குப் பின்தான். சின்னப் பெடியளுக்கு அப்ப 'வாச்சர் அப்பா' தான் ஹீரோ. வேறொன்றுமில்லை. பள்ளிக்கூடத்திற்குக் வெளியே ஒரு சின்ன இனிப்புக் கடை வைத்திருந்தார். ஒரு ஒலைக் கொட்டில், அதுக்கு ஒரு மரக்கதவு. மரக்கதவில் 'சோக்குக் கட்டி'யால் எதாவது எழுதியிருக்கும். அதில் எழுதியிருப்பது புரியும் வயசல்ல அது.

வாச்சர் அப்பா கடை என்று பெயர் இருந்தாலும் இது கடை என்ற வரையறக்குள் வருமோ தெரியவில்லை. ஓலைக் கொட்டிலின் முன்புறம் ஒரு சிறிய மரக்கதவு. அதைத் தாண்டி உள்ளுக்குப் போனால் இடப்பக்கத்தில் ஒரு மர மேசை. அதில் நீளமான கண்ணாடிப் போத்தல்கள். போத்தல்கள் எல்லாம் புகை பிடித்தமாதிரி மங்கலாக இருக்கும். தோடம்பழ இனிப்பு, ஐஸ் இனிப்பு, தேங்காய்ப்பூ இனிப்பு, மலிபன் பிஸ்கற், என ஒவ்வொன்று ஒவ்வொரு போத்தலினுள். சுருட்டுற் ரொபி என்று இன்னொன்று அநேகமாக ஒரு பொலித்தீன் பைக்குள் இருக்கும். இவ்வளவுதான் 'கடையின்' உள்ளடக்கம்.

கடை அல்லது கொட்டிலின் இன்னொரு பக்கம் ஒரு மண் அடுப்பும் சில சமையல் பாத்திரங்களும் இருக்கும். வாச்சர் அப்பா ஒண்டிக்கட்டை. மனைவி நிறைய நாட்களுக்கு முன் இறந்துவிட்டார். பிள்ளைகள் இல்லை.

பள்ளிக்கூடத்தில் இன்டேர்வல் விட்டுவிட்டால் 'கெயார்' இலவச பிஸ்கற்றை வாங்கினாலும் வாங்காவிட்டாலும் கையில் ஐந்து சதமாவது இருந்தால் பெடி பெட்டைகள் ஓடிப்போவது வாச்சர் அப்பா கடைக்கு. அவரும் அந்நேரத்தில் செமை பிஸி. ஐந்து சதம், பத்துச் சதம், இருபத்தைந்து, ஐப்பது, ஒருரூபா என்று குற்றிக் காசுகளை எண்ணி கேட்பவற்றைக் கொடுத்து மிச்சக் காசும் கொடுக்கவேண்டும்.

"வாச்சர் அப்பா, வாச்சர் அப்பா, ரண்டு தோடம்பழ இனிப்பு, ரண்டு ஐஸ் இனிப்பு, மிச்சத்துக்குப் பல்லி முட்டை இனிப்பு" என்று ஒன்று ஒரு ஒரு இருபத்தந்து சதக் குற்றியை நீட்டும்.

"எனக்கு ரண்டு தட்டு தேங்காய்ப்பூ ரொபி" என்று இன்னொன்று கத்தும்.

"எனக்குக் கெரியா பருப்புச் சரையைத் தாணோய் பெல் அடிக்கப் போகுது" அன்று இன்னொன்று அவசரப் படுத்தும்.

கடையின் வாசலுக்குக் கிட்ட நின்றுகொண்டு, மேல்வகுப்பு அண்ணாமார் சட்டையின் மேல்ப் பொத்தானைத் திறந்திவிட்டு, மேலே பார்த்துக்கொண்டு "கடக் கடக்" என்று சத்தம் வர சோடாக் குடித்துக் கொண்டிருப்பார்கள். "ஏ/எல் வந்தால் பல்லிமுட்டை இனிப்பு, தேங்காய்ப்பூ இனிப்பு என்று வகைவகையாகத் தின்னமுடியாது. சோடாவும் விசுக்கொத்தும்தான்" என்று யாரோ ஒரு முனிவர் சாபம் போட்டிருப்பாரோ?

நானும் ஒரு நாள் ஆசையாக அம்மாவைக் கேட்டேன் , "சோடா வாங்க வேணும், காசு தாங்கோ" என்று

"என்னது, பள்ளிக்கூடத்தில் சோடாவோ? இந்த வயதிலோ?" என்று அம்மா திடுக்கிட்டுக் கேட்டா. பின்னேரம் அப்பா வீட்டில் நிற்கும்போது அம்மா சொல்லிக் கேட்டது "பெரியவருக்குச் சோடா வாங்கக் காசு வேணுமாம்" என்று.

"ஏன் அவருக்கு மீசை முளைச்சுட்டுதாமே?" அப்பா சொட்டை விட்டார்.

ஆனாலும் அடுத்த சிலநாட்களில் அப்பா கடைக்குப் போய் வரும்போது இரண்டு ஒரேஞ் பார்லி + ஒரு நேக்ரோ சோடாவும் கால் றாத்தால் மாறி பிஸ்கட்டும் வாங்கிவந்தார்.

அப்பதான் ஒன்று புரிந்தது பள்ளிக்கூட இன்ரவலில் சோடாக் குடிக்க ஒரு மினிமம் அடிப்படைத் தகுதி இருக்குதென்று : மீசை முளைத்திருக்க வேண்டும். அதுக்குப் பிறகு அப்பாவின் ஷேவிங் செற் 'ரைக் கவனிக்கத் தொடங்கினேன்.

அக்காலங்களில் இன்ஸ்டன்ட் ஷேவிங் கிரீம் எல்லாம் இல்லை. ஒரு ஷேவிங் பிரஷ், ஷேவிங் சோப்பு, ஒரு ரேசர், என்று ஒரு செற்' ஆக இருக்கும். அப்பா ஷேவ் எடுப்பதைப் பார்ப்பது ஒரு குதூகலம். ஷேவிங் பிரஷ்'ஐத் தண்ணீரில் நனைத்து, ஷேவிங் சோப்பபில் தேய்த்து நுரை வரச்செய்து அதை முகத்தில் பூசுவார். பிறகு கண்ணாடியில் முகத்தைப் பார்த்துக் கொண்டு 'கறுக் கறுக்' என்று சத்தம் வர ரேசரால் வழிப்பார். முகத்தை இடைக்கிடை நெளித்து அஷ்ட கோணலாக்குவதை யாரும் பார்க்கவில்லை என்றுதான் எண்ணியிருப்பார்.

ஷேவிங் செற் கொஞ்சநாட்களில் அலுத்துப் போக அப்பாவின் 'பேர்ஸ்' ஐக் கவனிக்கத் தொடங்கினேன். நல்ல தோலினாற் செய்யப்பட்டது . புதிதாக வாங்கியபோது மண்ணிற நிறமாக இருந்திருக்கும். இப்ப கொஞ்சம் கறுப்பை அண்டிய நிறமாக இருந்தது. சில்லறைக் காசு வைக்க தனியாக ஒரு சின்ன compartment இருந்தது. இது எப்பவின் கொஞ்சம் உப்பிப் போய் இருக்கும்-ஐந்து சதம், பத்துத் சதம், இருபத்தைந்து , ஐம்பது, ஒரு ரூபா என்று

குற்றிக் காசுகளால். தாள்க் காசு இன்னொரு compartment இல் ; கனக்க அலுப்படிக்காமற் சொன்னால் அப்பா பாவித்த பேர்ஸ் , இப்போது நான் பாவிப்பதை விட அதிகம் வித்தியாசமானதல்ல. வித்தியாசம் அந்தச் சில்லறைக் காசுகள் வைக்கும் தனி 'அறைதான்'.

அப்பாவிற்கோ அல்லது அம்மாவிற்கோ அநேகமாக அவர்கள் தரும் இருபத்தைந்து அல்லது ஐம்பது சத்தத்தில் நிறைய இனிப்பு, ரொபி, கறுவாக்கட்டு என வாங்க முடியாது என்கின்ற பொருளாதார பாடம் விளங்கியமாதிரி இருக்கவில்லை. போதாக்குறைக்கு 'சோடா வாங்க' என்று காசு கேட்கவும் முடியாது. (முதலாம் இரண்டாம் வகுப்புப் பெடியங்களுக்கு மீசை முளைக்காது என்று அந்த வயதிலேயே என் சிற்றறிவுக்கு எட்டிவிட்டது !); எனவே அப்பாவின் பேர்ஸ்'சில் கை வைக்கத் தொடங்கினேன்.

இப்போது நான் திடீர் பணக்காரனாய் விட்டேன். ஒவ்வொருநாளும் பள்ளிக்கூடம் போகும்போது குறைந்தது ஒரு ரூபா ஆவது கொண்டுபோவேன். இண்டர்வல் மணியடிக்க பாய்ந்தடித்துக் கொண்டுபோய் வாச்சர் அப்பா கடையில் முன்னுக்கு நின்றுவிடுவேன். ஐஸ் இனிப்பு, தேங்காய்ப்பூ இனிப்பு, பருப்புச்சரை, கறுவாக் கட்டு, (சுருள்) , விசுக்கொத்து, அப்பப்ப சோடா என்று நல்ல மிதப்பாகத்தான் கொஞ்சநாள் தின்று தள்ளினேன்.

ஒரு ரூபாவிற்குக் கிட்ட ஏறக்குறையத் தினமும் அபேஸ் பண்ணியும் அப்பா கண்டுபிடித்தமாதிரி இல்லை. எனவே இப்போது இரண்டு ரூபா , மூன்று ரூபா என்று முன்னேறிக் கொண்டிருந்தேன் . சிலநாட்களில் 'மாரித் தவளை' மாதிரி உப்பிப் போயிருக்கும் அப்பாவின் பேர்ஸ் என் கை வண்ணத்திற்குப் பிறகு தேரை மாதிரி ஒல்லியாக போய்விடும். நாள் முழுக்க எப்ப பிடிபடுவனோ என்று பயமாக இருந்தாலும் , தொழிலைக் கைவிடவில்லை. அப்பாவும் பேர்சில் காசு குறைவதைக் கவனித்த மாதிரி இல்லை.

ஒருநாள் மட்டும் அம்மாவிடம் "நீ என்னைக் கேக்காமல் காசு எடுத்தாயோ?" என்று கோவித்துக் கொண்டார். நான் "திடுக் திடுக் கடக் மடக்" என்று நெஞ்சு அடிக்க முழியைப் 'பிரட்டிக்' கொண்டு கேட்டுக் கொண்டிருந்தேன். அடுத்து ஓரிரு நாட்களுக்கு நல்ல பிள்ளையாக இருந்தேன்; அம்மா தந்த இருபத்தந்து சதம், ஐம்பது சதத்தோடு வாச்சர் அப்பா கடை பட்ஜட் முடிந்துபோனது.

அடிக்கடி வாசிப்பீர்கள். விதி வலியது என்று. அதுமாதிரி எனக்கும் ஒரு "சோதனை" வந்தது. பெரிய தம்பிரான் கோவிலோ அல்லது சொத்தி வைரவர் கோவில் திருவிழாவோ- ஏதோ ஒரு திருவிழா. திருவிழா என்றால் இரவுத் திருவிழாதான். பின்னேரத்திற்குப் பின்தான் கோவில் களை கட்டத் தொடங்கும். மேளம், சின்ன மேளம், நாடகம் என்று இரவிரவாகத் திருவிழா நடக்கும். இதெல்லாம் பெரிய ஆட்களுக்கு. சிறுவர்களுக்கு கலர் அப்பளம், 'சோக்கட்டி' இனிப்பு, சோடா, பீடா (இதுக்கும் மீசை முளைக்கவேண்டும், களவாகச் சாப்பிடுவோம்), அது, இது என்று தின்பண்டங்கள் இருக்கும். அம்மாவிற்கும் அப்பாவிற்கும் விலைவாசி, பணவீக்கம் பற்றி எல்லாம் அறிந்து கொள்ள ஆர்வம் இல்லை.

"நாங்கள் சின்னப் பிள்ளைகளாக இருக்கேக்கை என்ரை ஐயா ஐந்து சதந்தான் தந்துவிடுறவர்" என்று அம்மா வியாக்கியானம் வேறு தருவா.

எனக்கு இப்போது இதைப்பற்றிக் கவலை இல்லை. கவலையெல்லாம் தம்பி பார்க்காமல் இருக்கும்போது இனிப்புக்களை வாங்கவேண்டும். இல்லாவிட்டால் நிறைய வாங்கும்போது ஆள் 'அலேர்ட்' ஆகி வீட்டில் வத்தி வைத்துவிடுவான். பிறகு விளக்கம், விசாரணை என்று.... கஷ்டம்.

(தொடரும்)

Wednesday, December 14, 2011

செல்வன்

செல்வனைக் கடைசியாகக் கண்ட நாள் 25 வருடங்களின் பின்னும் அப்படியே ஞாபகம் உள்ளது. அப்பாவின் மறைவுக்குப் பின் சில நாட்களில் வந்திருந்தான். ஒரு அந்தி மங்கிய நேரம் வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் கதைத்துக்கொண்டு நின்றது நேற்றுப் போல் உள்ளது. சம்பிரதாயமான எதையும் சொல்லவேண்டும் என்ற ஒற்றைக் காரணத்திற்காகச் சொல்லும் சுபாவம் இல்லாத பேர்வழி. எனவே வழமையான ஆறுதல்/ இரங்கல் பேச்சுக்கள் எதுவும் இல்லை. கொஞ்ச நேரம் கதைத்துக் கொண்டு நின்றான். அந்த நாளிற்குப் பிறகு செல்வனை நான் காணவில்லை. அவனது வீட்டுக்காரருக்கும் காணக் கிடைத்திருக்காது என்றுதான் நினைக்கிறேன்.

ஒல்லியான உருவம். முன் பற்கள் கொஞ்சம் நீக்கல். ஊர் சொல் வழக்கப்படி நல்ல கறுவலான பெடியன் என்றுதான் சொல்லவேண்டும். டக்கென்று பார்த்தால் கொஞ்சம் முரடு என்று யோசிக்கவைக்கும் ஆனால் ஆள் என்னவோ அதற்கு நேர்மாறு. மென்மையான, யாருடனும் அதிகம் பேசாத ஒரு சுபாவம். தனிமை விரும்பியாகத்தான் இருந்திருப்பான் என்று இப்போது கணிக்கின்றேன்.

80 களின் ஆரம்பத்தில் இருந்த வடக்குக் கிழக்கு நிலைமையை 80 களில் அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்களுக்குப் புரிய வைப்பது கடினம். கிபிர், புக்காரா விமானத்தாக்குதல்கள் தொடங்கவில்லை. ஆனால், தமிழன் என்ற ஒரேகாரணத்தால் இம்சைகளை அனுபவிக்கும் காலம் எப்பவோ ஆரம்பித்தாயிற்று; என்றாலும் 1983 ஆடிக் கலவரங்களின் பின் ஒட்டுமொத்த தமிழரிற்கும் "இப்படியே இருந்தால் சரி வராது" என்று புரிபடத் தொடங்கியது. அப்போதுதான் இளைஞர்கள் அதிகளவில் இயக்கங்களிர் சேரத் தொடங்குகிறார்கள். ஆனால் அதற்கு முன்னரும் இளைஞர்கள் போராட்டத்தில் இணைத்துக் கொள்ளத் தொடங்கிவிட்டார்கள்.

செல்வன் 1982 இல் மாணவர் அமைப்பில் சேர்ந்து கொள்கின்றான். பிறகு இராணுவப் பிரிவிற்கு மாறுகின்றான். ஆள் இடைக்கிடை ஊரிற்கு வருவதும் பிறகு காணாமற் போவதும் நடக்கும். காணும் போதெல்லாம் எனக்கும் செல்வனுக்கும் நடைபெற்ற உரையாடல்கள் எல்லாம் மிகச் சரியாக இரண்டு 'கதை/காரியம்' இல்லாத இருவருக்கு இடையில் நிகழ்வது போல்தான் இருந்தது. ரோட்டில் எங்காவது கண்டால்

"எங்கை போறாய்?", இது செல்வன்.
"வீட்டுக்கு" என்று பதிலளித்து விட்டு நிறுத்திக்கொள்வேன்.

அல்லது சிலவேளைகளில் ஒரு கதையும் இல்லாமல் ஆளை ஆள் பார்த்து ஒரு அசட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொள்வோம்.

அமைதியான சுபாவம் என்றாலும், அமைதியான சுபாவமானவர்களுக்குள் ஒளிந்திருக்கும் மற்ற பக்கம் போலவே செல்வனுக்கும் இருந்திருக்கிறது. "கோடையில் இளநீர் பிடிங்கிக் குடித்து , வடக்குக் கடலில் நீந்தி, மாரி காலங்களின் களவாக மரவள்ளிக் கிழங்கு பிடுங்கிச் சுட்டுச் சாப்பிட்ட" ஒரு நண்பர் கூட்டம் அவனுக்கு இருந்திருக்கிறது. அதே நண்பர்களுடன் பின்னேரங்களில் காற்பந்து விளையாடுவதையும் கண்டுள்ளேன். இலகுவிற் களைப்படையாத செல்வன் நன்றாகப் காற்பந்து விளையாடுவான் என்று அவன் நண்பர்கள் சொல்லக் கேட்கிறேன். காற்பந்து விளையாட முடியாதளவு இருட்டியபின் அதே இளைஞர் கூட்டம் பள்ளிக்கூட மதிலில் அல்லது திறந்தவெளி மேடையில் இருந்து வம்பளக்கத் தொடங்கும். "நீ சின்னப் பெடியன்... ஓடு வீட்டை" என்று என்னையும் கலைக்கும். "இவங்கள் 'நோட்டிஸ்' எழுதப் போகிறான்கள், அதுதான் என்னைக் கலைக்கிறாங்கள்" என்று யோசித்துக் கொள்வேன்.

****

இயக்கங்களிடையே 'கருத்து வேறுபாடு' தொடங்கி இனப்பிரச்சினை மாதிரி இதுவும் சிக்கலாகிக் கொண்டிருக்கும் ஒரு காலப் பகுதியில்தான் கிழக்கில் நிறைய வேலை செய்ய இருக்குது என்று கிழக்கு மாகாணங்களுக்குப் புறப்பட்டுப் போனான். பிறகு ஊர் வருவது ஆடிக்கொருக்கால் அமாவசைக்கொருக்காற் தான்.

இவ்வளவு காலம் கடந்து, வடக்குக்/ கிழக்கு என்று ஒரு மாபெரும் பிளவு வந்து, அது எல்லாவற்றையும் காவு கொண்டு போனபின், 25, 26 வருடங்களிற்கு முன்பே "கிழக்கில் செய்ய வேண்டிய வேலைகள் கனக்க இருக்கு" என்று கிழக்கிற்குப் பயணமான ஒரு 22 வயது இளைஞனை நினைத்துப் பார்க்கின்றேன். How great he is ! தீவிர தமிழ்ப் பிரியர்கள் மன்னிப்பீர்களாக. உண்மையாகவே கடைசி வரியைத் தமிழிற் கோர்க்க முடியவில்லை.

கிழக்குக்குப் பயணமாகமுன் சொந்த அண்ணா ஒருவரிடம் செல்வன் சொன்னது, "அண்ணை நான் இனி அடிக்கடி இங்கை வருவனோ தெரியாது, எனக்கு ஒரு ஷே(ர்)ட்டும் ஒரு மணிக்கூடும் வாங்கி அனுப்பு" என்று. அண்ணா அனுப்பினார். போய்ச்சேர்ந்ததோ இல்லயோ என்பது செல்வனுக்கு மட்டும் தெரிந்ததொன்றாகியது.

செல்வன் ஞாபகமாக:
************************
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
ஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
- பாரதியார்


--------------------------
செல்வன் என்கின்ற சுப்பிரமணியம் செல்வகுமார் (இயக்கப் பெயர் செல்றின்) 14/12/1986 இல் அம்பாறை மாவட்டத்தில் உள்ள தங்கவேலாயுதபுரத்தில் நடந்த மோதலில் வீரமரணம் அடைகின்றார். அன்றுதான் அவரது 23 வது பிறந்த நாள். என்னைவிட ஆறு வயது பெரியவன் என்றாலும் "ன்" போட்டுக் கதைத்த பழைய இடைக்காட்டில் வாழ்ந்தோம். என்பதால் அதே உரிமையோடு 'அவன்' என்று பத்தியில் எழுதுகின்றேன். செல்வனின் தாய்வழிப் பேத்தியாரும் என் தந்தைவழிப் பேத்தியாரும் சகோதரிகள் என்பது டிஸ்கி.

"கோடையில் இளநீர் பிடிங்கிக் குடித்து , வடக்குக் கடலில் நீந்தி, மாரி காலங்களின் களவாக மரவள்ளிக் கிழங்கு பிடுங்கிச் சுட்டுச் சாப்பிட்ட" என்ற சொற்றொடரை அவரது நண்பர் எழுதிய அஞ்சலியில் இருந்து எடுத்துப் பாவிக்கின்றேன்.