Showing posts with label குசும்பு. Show all posts
Showing posts with label குசும்பு. Show all posts

Wednesday, July 9, 2014

பிரேசிலாதல்



அரையிறுதி 2014 FIFA உலகக்கிண்ணம். பிரேசில் 1 ஜேர்மனி -7. பிரேசில் ரசிகர்கள் நொந்துவிட்டார்கள். இதன் பாதிப்புக் கனகாலம் இருக்கும். இருக்கட்டும், நான் இதன் பாதிப்புக்கள் தமிழ் கூறும் நல்லுலகில் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன்.


(1) எதிர்காலத் தமிழ்ப் படம்

காட்சி 1: பாத்திரங்கள் ஹீரோ(வேலையில்லாப் பட்டதாரி), அம்மா, அப்பா.

அப்பா வழக்கம்போலக் கத்துகிறார். "தடிமாடு மாதிரி வளர்ந்திருக்கு, மூணு வேளையும் திங்கத்தான் தெரியுது. மிச்ச நேரத்திற்கு ஆத்தங்கரை, குளத்தங்கரையிலை குந்தியிருக்கிறது. போறவாற பொண்ணுங்களைச் சைட் அடிக்கிறது. பத்துப் பைசா உழைக்க வக்கிருக்கா?".

"சும்மா இருங்க, எதுக்கெடுத்தாலும் எம்புள்ளயைக் குத்தம் சொல்லுறது." அம்மா சப்போர்ட்டுக்கு.

"தண்டச்சோறு, இவன் எதுக்குத்தான் லாயக்கு? பிரேசிலுக்குப் புட்பால் விளையாடத்தான் லாயக்கு".

இவ்வளவு நேரமும் எருமைமாட்டுக்கு மேலே ஏதோ பெய்ததுமாதிரிச் சுணைப்பு இல்லாமல் இருந்த ஹீரோ, கடைசி வசனத்தால் மனம் வெறுத்து வீட்டை விட்டு கோபத்துடன் வெளியேறுகிறான். கையில் ஒரு பெட்டி. (சிம்பொலிக்'காக ஆசாமி கோபித்துக் கொண்டு ஓடுகிறான் என்று உணர்த்துகிறது. கமரா பெட்டியைக் குளாசப்பில் இரண்டு, மூன்றுமுறை காண்பித்து உங்களின் IQ வைச் சோதிக்கிறார்கள்.)

அம்மா வழக்கம்போல, "என்னங்க, என்னங்க, எம் புள்ளையை நிக்கச் சொல்லுங்க" என்று ஒரு கலன் கண்ணீர் விடுகிறார்.

பிறகென்ன, ஹீரோ திருட்டுத்தனமாக ரிக்கட் இல்லாமல் ரயில்/பஸ் பிடித்து மெட்ராஸ் வந்து, காதலித்துக் கோடீஸ்வரனாகி, வில்லனை அழித்து என்று கதை போகிறது.


(2) கோர்ட் சீன். கொலை வழக்கு. ராமன் சோமனைக் கொன்றுவிட்டான்.

நீதிபதி: திரு ராமன், நீர் சோமனைக் கொன்றது உண்மையா?

ராமன்: ஆம் ஐயா!

ராமனின் வக்கீல் திடுக்கிட்டுப் போய் குறுக்கிடுகிறார், "ஐயா என் கட்சிக்காரருக்கு மனநிலை சரியில்லை, அதுதான் கன்னா பின்னா என்று பேசுகிறார்"

நீதிபதி: அப்படித் தெரியவில்லை. ராமன் நீர் ஏன் இந்தக் கொலையைப் புரிந்தீர்?

ராமன்: ஐயா அவன் என்னை கோபமடையச் செய்யுறமாதிரி அவமதித்தான் ஐயா.

நீதிபதி: இதுக்கெல்லாம் கொலையா செய்வது? என்ன? போயும் போயும் உன் மனைவியின் கற்பை வம்புக்குக் இழுத்திருப்பான்.

ராமன்: இல்லை ஐயா, அதைவிட மோசமாக அவமதித்தான்.

நீதிபதி:?

ராமன்: "நீ ஒரு கையாலாகாதவன் பிரேசிலுக்குப் புட்போல் விளையாடத்தான் லாயக்கு" என்றான் ஐயா. அதுதான் நான் சூடாகி கையில் கிடந்த ஒன்றை அவன் தலையில்போட, ஆள் குளோஸ். சத்தியமாகா நான் பிளான் பண்ணிக் கொலை புரியல்லை ஐயா.

குறிப்பு: மிக நீண்ட விசாரணையின் பிறகு ஜூரர்கள் அவனை விடுதலை செய்யச்சொல்லி முடிவு எடுக்கிறார்கள்.


(3) 10/10/2014. இலங்கை அணிக்கும் பிரேசில் அணிக்கும் இடையில் நடக்கவிருந்த கால்பந்து விளையாட்டு ரத்து செய்யப்படுகிறது. யாரும் ரிக்கற் வாங்காததுதான் காரணம் என்று ஊகிக்கப்படுகிறது.

(4) தமிழில் சில பழமொழிகள் கொஞ்சம் மாறும். உ+ம் யாரும் "கழுதை கெட்டால் குட்டிச்சுவரில்" என்று சொல்லமாட்டார்கள். "கழுதை கெட்டால் பிரேசிலில் கால்பந்து விளையாடுமாம்" என்பார்கள்.

தமிழில் ஒரு புது வார்தை வரும்.

பிரேசிலாதல் - 1.அசிங்கமாகத் தோற்றல். 2. (கம்பஸ் மொழி) பெயிலாகுவது, அரியர்ஸ் வாங்குவது

எதிர்காலத்தில் இலங்கை, இந்தியக் கிரிக்கட் அணிகள் சொதப்பினால், கிரிக்கட் ஆய்வாளர்கள் எழுதுவார்கள்' "இது மாதிரி இனியும் விளையாடினால். இனி இவர்கள் பிரேசிலாவதைத் தவிர்க்க முடியாது.


(5) இலங்கைக் கம்பஸ் பெடியள் சொல்லுவார்கள் "மூன்று பாடம் கையில்" என்று. அதையே தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்கள் "மூன்று பாடம் அரியர்ஸ்" என்பார்கள்.

இனிமேல் இலங்கை, இந்தியாக் கல்லூரி மாணவர்கள் ஒரேமாதிரிச் சொல்லுவார்கள், "மூன்று பாடம் பிரேசில் ஆச்சு"




-----------------

புகைப்படம்

www.smh.com.au

Sunday, June 29, 2014

ஓடக்காரனும் தோழரும் (சற்றுப் பெரிய குட்டிக் கதை)

தோழர் என்று அறியப்பட்ட பரமார்த்த செந்தமிழன் முற்றும் கற்ற ஒரு மார்க்ஸிய அறிஞர். தடித் தடியான சிவப்பு மட்டைப் புத்தகங்களை முதற் பக்கத்தில் இருந்து கடைசிப்பக்கம் வரை ஒருவித கொள்கை வெறியோடு படித்துத்தீர்த்தவர். அதுகாரணமாகவோ என்னவோ அவர் முகத்தில் ஒரு அறிவுக்களை எப்பவும் வீசும், எப்பவாவது முறையாகப் பனங்கள் அடித்தநாட்களில் மட்டும் இந்த அறிவுக்களை இன்னும் அதிகமாகும்.

ஒரு நன்னாளில் தோழருக்கு கடலின் இக்கரையிலிருந்து அக்கரைக்குப் போக வேண்டிய தேவை உண்டாயிற்று. முள்ளுப் பற்றைகள், மணல் வெளிகள் எல்லாம் தாண்டி இக்கரைக்கு வந்தார் தோழர். அக்காலங்களில் அக்கடலைக் கடந்து அந்தப் பக்கம் போவது ஒரு பயங்கர ரிஸ்க்கான விடயம். மேலேயிருந்து ஹெலி சுடும். நேவிக்காரன் ஷெல் அடிப்பான்; அல்லது பென்னாம் பெரிய கலிபர் துவக்கால் எட்ட நின்று சுடுவான். சனங்கள் இதுக்குப் பயந்தால் என்ன பயப்படாவிட்டால் என்ன இக்கரையிலிருந்து அக்கரை போகவேண்டிய தேவை. வள்ளக்காரர்கள் கரையில் நிற்பார்கள். நாலைந்து பேரிலிருந்து, பத்துப் பதினைந்துபேர்வரை கொள்ளக்கூடிய வள்ளங்கள் சேவையில் இருக்கும். அன்றைக்கு முதல் நாளில் போன வள்ளங்களை ஹெலி துரத்தித் துரத்திச் சுட்டதில் எட்டுப் பத்துப்பேர் பலி. இன்னும் எட்டுப் பத்துப் பேருக்குக் காயம். அதனால் அன்று படகோட்டிகள் யாரும் இல்லை. முதல் நாள் உதயன் பேப்பரில் தலைப்புச் செய்தியே இதுதான்.

தோழர் உள்ளூர் விடயங்களில் அவ்வளவு அக்கறை காட்டுவதில்லை. கியூபா, பழைய சோவியத் யூனியன், வியட்னாம் என்று அவர் சிந்திக்கும் தளமே வேறு. கரையில் சனஞ்சஞ்சடி குறைவாக இருப்பதால் ஏதோ சம்பவங்கள் நேற்று நடந்திருக்கலாம் என்று ஊகித்தார். சரி படகோட்டி ஒருவன் தன்னும் இன்றைக்கு வர விடாமலா போகின்றான்? என்று அங்கலாய்ப்போடு கடற்கரையில் இருந்த தென்னை மரத்தில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டு 'அன்னா கரீனினா' வை பன்னிரண்டாம் முறை வாசிக்கத் தொடங்கினார்.

மெலிதாக வீசும் கடற்கரை உப்புக் காற்று, தூரத்தே இருட்டில் தெரிந்த தென்னங்கூடல், பெயர் தெரிந்த தெரியாத விலங்குகள்/பூச்சிகளின் இரைச்சல், மற்றும் கடலில் இருந்து வந்த வாசனைகள் எதுவும் தோழரின் மனத்தில் படவில்லை. இன்றைக்குக் கடல் இரைச்சல் வேறு அதிகமாக இருந்தது இவர் தன்னை மறந்து புத்தகத்தில் மூழ்கிப் போனார். யாரோ மெலிதாகத் தோளில் தட்டுவது புரிந்ததும் திடுக்கிட்டு துள்ளி எழுந்தார்.

"தம்பி, வள்ளத்திற்கு காத்திருக்கிற மாதிரி இருக்கு.." என்று கேட்ட ஆசாமிக்கு சுமார் ஐம்பது வயதிருக்காலம். பெயர் சீனித்தம்பி, சுருக்கமாகச் சீனி. உறுதியான ஆனால் சற்று வரண்ட உடல்வாகு. "ஐஞ்சியாங் காசு உழைக்க லாயக்கில்லை, இரவிலை சுரண்டுறதுக்கு மட்டும் குறைச்சல் இல்லை" என்று பெண்டாட்டி வழக்கம்போல் டோஸ் கொடுத்ததால் இன்றைக்கு மட்டும் ரோஷம் பொத்திக் கொண்டு வர ' ஐந்நூறு ரூபாக் காசாவது உழைக்காமல் வீட்டுக்கு வருவதில்லை' என்று திட சங்கற்பற்பத்தோடு வீட்டைவிட்டு வந்திருந்தார்.

"ஓம் தோழர் அந்தப் பக்கம் போகலாமே?" என்றார் தோழர். இது நடந்தது தாடி வைத்த - பீடி குடிக்கிற எல்லாரும் தம்மைத் தானே கொம்யூனிஸ்ட் என்று நம்பிக் கொண்டு தில்லாகத் திரிந்த காலத்திற்குச் சற்றுப் பின். "தோழர்" என்று அழைக்கப்பட்டதில் சீனி வியப்பேதும் அடையவில்லை. சீனிக்குச் சின்ன வயதில் 'எறும்பு' என்று ஒரு பட்டப்பெயர் இருந்தது மட்டும் ஞாபகம் வந்தது. வாத்திமார்கள் அதேகாலத்தில் அவனை 'கணக்குப்புலி' என்று செல்லமாக அழைப்பார்கள். கணக்குப் போடுவதில் விண்ணன்தான். கல்யாணம் கட்டிய புதிசில் மனிசி செல்லமாக அழைத்த பெயரை எழுதினால் சங்கடப்படுவார். இந்தப் பெயர் வரிசையில் 'தோழர்' என்பதுவும் ஒன்றெண்டு அலுத்துக் கொண்டார்.

"தம்பி, ஐஞ்நூறு ரூபா எண்ணி வையும்," என்றார் சீனி.

"ஐந்நூறா?" என்று திடுக்கிட்ட தோழர், "உழைப்பைச் சுரண்டக் கூடாது" என்று ஞாபகம் வர அமைதியானார்.

தோழர் சாரத்தை மடித்துக் கட்டி விட்டு வள்ளத்தினுள் ஏறிக்கொண்டார். சீனி வள்ளத்தைக் கொஞ்சத்தூரம் தள்ளிக்கொண்டு சென்று பிறகு படகின்
ஒருபக்கத்தில் கைகளை ஊன்றி ஒரு எம்பு எம்பிப் படகில் குதித்தார். மாரி காலக் கடற் காற்று சில்லென்று வீசியது. தூரத்தில் புலம்பெயர்ந்து வந்த பெயர் தெரியாத பறவைகள் கூட்டங் கூட்டமாகப் பறந்து திரிந்தன. தோழர் 'பைக்கால்' ஏரியில் இதுமாதிரிப் படகுச் சவாரி செய்தால் எப்படி இருக்கும் என்று கற்பனையில் ஒருவித மம்மல் நிலைக்குப் போய்க் கொண்டிருந்தார்.

அன்றைக்குக் கடலில் அலை சற்று அதிகமாக அடித்தது. வள்ளமும் கொஞ்சம் தூக்கிப் போட்டதில் தோழர் மோகன நிலையில் இருந்து சற்று மீண்டுவந்தார். குளிருக்கு இதமாக பீடி குடிக்கவேண்டும் போல் இருந்தது. இடுப்பில் செருகி வைத்திருந்த பீடிக்கட்டைப் பிரித்து ஒன்றை வாயில் வைத்தார். இன்னொன்றை சீனித்தம்பியிடம் நீட்டனார். "தம்பி நான் கட்டினாப் பிறகு விட்டுட்டன்" என்று வழக்கமாக யாழ்ப்பாணத்துக்காரர் அநேகம்பேர் சொல்லுகிற மாதிரிச் சொன்னார்.

தோழர் தான் வாசித்த ரஷ்யக் கதைகளில் யாராவது படகோட்டி எதுவும் புகைக்காமல் இருந்தானா என்று யோசிக்க ஆரம்பித்தார்.

"தோழர், இன்றைக்கு ஐநூறு ரூபாய்கள் உழைத்துவிட்டீர், இனி இன்றைக்கு இது போதுந்தானே?" என்று கதையைத் தொடங்கினார். வெறும் பரமார்த்த செந்தமிழன் எப்ப 'தோழர் பரமார்த்த செந்தமிழன்' ஆனாரோ அன்றையிலிருந்து அவரின் பேச்சுத் தமிழும் எழுத்துத் தமிழும் கிட்டக் கிட்ட வரத் தொடங்கின. அத்தோடு, செயப்பாட்டு வினைச் சொற்களை அதிகம் பாவிக்கத் தொடங்கினார். உ+ம் "ஒடுக்கப்படுகிறார்கள், சுரண்டப்படுகிறார்கள், ஏமாற்றப்படுகிறீர்கள்". சிலவேளை இவர் பேசுவது சுவிஷேஷ நற்செய்தி கேட்பதுமாதிரி இருக்கும். இதைச் சொன்னால் பத்திரகாளியின் பெரியப்பா மாதிரியாய் விடுவார் செந்தமிழன். விட்டு விடுவோம்.

"தம்பி சூடாக்காதேயும்," சீனி சூடாகத் தொடங்கினார்.

"ஏன் தோழர்?" தோழர் நோண்டத் தொடங்கினார்.

"படகு என்ரை இல்லை. படகுச் சொந்தக் காரனுக்கு சரி பாதிக் காசு கொடுக்கோணும். அவங்களுக்கும் 2 வீதம் வரியும் குடுக்கவேணும்"

"நீங்கள் நன்றாகச் சுரண்டப் படுகிறீர்கள்!" இப்போது தோழரின் மீசை, தாடி, புஜங்கள் எல்லாம் துடிக்கத் தொடங்கின. கண்கள் சிவந்தன. குடித்துக் கொண்டிருந்த பீடியைக் கடலினுள் வீசீனார்.

"ஒவ்வொரு நாளும் நான்தான் சுரண்டுறதாகப் பெண்டாட்டி அலுத்துக் கொள்ளுறாள்" சீனி கனக்க வெட்கப் பட்டார்.

"தோழர் உங்களுக்குப் பிரச்சினை புரியவில்லை. இதுதான் பிரச்சினையே" தோழர் தொடர்ந்தார்.

"நீங்கள் கார்ல் மார்க்ஸின் மூலதனம் படித்தீர்களா?" ஆர்வத்தோடு தோழர் கேட்டார்.

"இல்லை!" படகு அலைகளில் சற்று அதிகமாக ஆடுவதைக் கவனித்துக்கொண்டே பதிலளித்தார் சீனி.

"கார்ல் மார்க்ஸ் எழுதிய வேறு ஏதாவது புத்தகங்கள் படித்தீரா?"

"இல்லை"

"லெனின், ஏங்கெல்ஸ், மாவோ எழுதிய ஏதாவது புத்தகங்கள்?"

"தம்பி, நான் சின்ன வயசில கணக்கு நல்லாச் செய்வன். கணக்கு வாத்தியார் கனக்க இங்கிலிஸ் புத்தகங்கள் தந்து பயிற்சி செய்யச் சொல்லுறவர்.. " சீனி தான் படித்த கணக்குப் புத்தகங்களை மனதில் கொண்டுவர எத்தனித்தார். ஐம்பது வயதில் மூளை முன்போல் இல்லை என்று சற்று கவலைப்பட்டார். கூடவே தன்னோடு படித்த சிலபேர் டாக்குத்தர், இஞ்சினியர் என்று இப்ப இருக்க தான் மட்டும் படகோட்ட வேண்டி வந்திட்டுது என்று ஒரு சுய பச்சாபமும் வந்துவிட்டது.

"சொச் சொச், " தோழர் தொடர்ந்தார். "உங்கள் வாழ்க்கையில், அம்பது வீதத்தை இழந்து விட்டீர்களே!!"

"தம்பி சரியாச் சொல்லுது, எனக்கு இப்ப அம்பது வயசு. நூறு வயசுக்கு இருக்க ஆசை", சீனிக்குச் சின்ன வயதில் கடியன் என்று ஒரு பெயரும் இருந்தது.

தோழர் பரமார்த்த செந்தமிழனுக்கு சீனியின் நக்கல் புரிபடவில்லை. "பொருள்முதல்வாதமும் அனுபவ விமர்சனமும், ஏகாதிபத்தியம் பற்றி, லெனினியத்தில் பிரச்சினைகள், மார்க்சியமும் மொழியியல் பிரச்சினையும், பிற்போக்குவாதிகள் பற்றி, இதில் ஏதாவது ஒன்றாவாது கேள்விப்பட்டிருக்கிறீரா?"

சீனியின் அவதானம் கடல் சற்றுப் பொங்குவதிலும் படகின் ஆட்டத்தைச் சரிப் பண்ணுவதிலும் இருந்தது. "இது எந்தப் பள்ளிக்கூடத்தில தம்பி சொல்லிக் கொடுக்கிறங்கள்?" என்றார் அசுவாரசியமாக.

"ஐயா, இதெல்லாம் பள்ளிக்கூடத்திலை சொல்லிக் கொடுக்கிறதில்லை. முதலாளித்துவ கல்வித்திட்டத்திலை உங்களுக்குத் தேவையில்லாதவற்றைத் தான் சொல்லிக்கொடுக்கிறர்கள். தேவையான ஒன்றையும் படிக்கவில்லை. உங்கள் வாழ்வில் எழுவது வீதததை இழந்துவிட்டீர்களே?" என்றார் பரமார்த்த செந்தமிழன் நக்கலாக.

கடலில் அலை இன்னும் வேகமாக அடிக்கத் தொடங்கியது. காற்றும் பலமாக வீசத் தொடங்கியது. படகு மேலும் கீழுமாகவும் பக்கப் பாட்டாகவும் ஆடத் தொடங்கியது. படகு கவிழ்ந்து விடப் போதுதோ என்று தோழரும் பயந்தார்.

அப்போதுதான் சீனித்தம்பி முதல்முறையாகத் 'தோழர்' என்ற வார்த்தையைப் பாவித்தார்.

"தோழர், உங்களுக்கு நீந்தத் தெரியுமா?"

"இல்லையே" என்றார் தோழர் பரிதாபமாக

"அப்ப உங்கள் வாழ்க்கையில் நூறு வீதத்தையும் இழக்கப் போகிறீர்களே!" என்றுவிட்டுச் சீனித்தம்பி கடலில் குதித்து நீந்தலானார்.


-------------------------------------------
பொறுப்பாகாமை: இது ஒரு கற்பனைக் கதை. உயிரோடு இருப்பவர்கள், இறந்தவர்கள், அல்லது அயிராக அலைபவர்கள் எவரையும் குறிக்கவில்லை. அத்தோடு பல்வேறு இஸவாதிகள், நிலைவாதிகள், குழப்பவாதிகள், திரிபுவாதிகள், திரியாதவாதிகள், ஃப்பேஸ்புக் சிந்தனைவாதிகள், மற்றும் அப்பாவிகள், அப்பாவிகள் அல்லாதோர் எவரையும் குறிக்கவில்லை. மேலும் யாராவது மேலே உள்ள பட்டியலில் விடுபட்டிருந்தால், அவர்களையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகமோ இக்கதை குறிப்பிடவில்லை என்று கூறிக்கொள்கிறேன்.

அயிர்- (பெயர்ச்சொல்)
1. zombie என்பதற்கான தமிழ் வார்த்தை. சத்தியமாக இது நான் உண்டாக்கிய தமிழ் வார்த்தை. எழுத்தாளர் ஜெயமோகனிடம் இருந்து திருடப்படவில்லை.
2. வெல்லம் ( 1. இற்குத் தொடர்பற்றது)


கனக்க- நிறைய

Tuesday, September 10, 2013

பென் ஜோன்சனின் ஓட்டம் அல்லது "இதயம்" நிறைந்த காதல்

அழகான ஆறு, கரையில் மூங்கில் மரங்கள்,
வளாகம் முழுக்க அழகிய மரங்கள்...மிக அழகான் மரங்கள்-சிலது பூத்துக் குலுங்கும் சிலது பூக்காது, ஆனால் எல்லாமே அழகு. , மிக அழகான கட்டடங்கள். படத்தில் இருப்பது மாதிரி உண்மையாகவே பல 'சீனறிகளைக்' கொண்ட பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இது நடந்தது.

காலம்: 1992 ஒலிம்பிக் முடிந்து சில நாட்கள். உசேன் போல்ட் 'ஐ மட்டும் அறிந்த இளம் தலை முறைக்கு பென் ஜோன்சனைப் பற்றிச் சொல்லவேண்டும். நான்கு வருடங்களின் முன், 1988 இல் பென் ஜோன்சன் 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்று பிறகு ஊக்க மருந்து சாப்பிட்டதாக நிரூபிக்கப்பட்டு பதக்கத்தைப் இழந்தவர். பதக்கத்தை இழந்தாலும் 9.79 செக்கனில் 100 மீட்டர் ஓடியது அந்தக் காலப் பகுதியில் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. என்பதால் அடுத்த ஒலிம்பிக் காலத்திலும் பென் ஜோன்சன் பேசப்பட்ட நபராகிறார்.

மீண்டும் கதைக்கு: ஆற்றுக்கு இந்தப் பக்கம் அக்பர் விடுதியும் பொறியியல் பீடமும். அந்தப் பக்கம் மிச்ச எல்லாப் பீடங்களும் விடுதிகளும். அக்பர் விடுதி ஆண்கள் விடுதி. அங்கிருந்த பெரிய விதானையார் என்று அறியப்பட்ட பேர்வழியைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும். பேருக்கேற்ற மாதிரி ஆள் நன்றாக இடம் வலமாக வளர்ந்த ஆள். நல்ல பெலசாலியும் கூட. இவரை நகராமல் நிறுத்த நாலைந்து பேர்கள் போதாது. பெரிய விதானையார் என்று இவருக்குப் பெயர் வந்த காரணம், பெரிய என்பது உருவத்தால் வந்தது. விதானையார் என்பதற்கு ஒரு மசமசப்பான காரணம் உண்டு. சின்ன விதானையார் என்றும் இன்னொருவர் இருந்தார்.

இன்றைக்கு பெரிய விதானையாருக்கு நல்ல வெறி. 'ஃபாகல்ரி டே' என்று ஞாபகம். கான்ரீ'னுக்குப் பககத்தில் இருந்த பெரிய 'வரைதல் கட்டடத்தில்' டின்னர் & டான்ஸ். 'தண்ணி' ஆறாக ஓடாவிடினும் அருவியாக ஓடியது. ஒருசிலரை விட அநேகர் 'சோடா மூடி' அளவு பானத்தை மட்டும் முகர்ந்து விட்டு 'தள்ளாடிக்' கொண்டிருந்தார்கள். மிக முக்கியமாக, பெண் பிள்ளைகளைக் கண்டால் இன்னும் அதிகம் தள்ளாடினார்கள். "உன்னால தானையடி குடிக்கிறன்" என்று பொதுவாக அடிக்கடி சொல்லிக் கொண்டார்கள். அதுமட்டுமல்ல சிங்களப் பெண் பிள்ளைகளைக் கண்டால் திடீரென்று 'இங்கிலிஷ்' பேசத் தொடங்கினார்கள். 'இங்கிலிஷ்' கிழவிகள் என்று அறியப்பட்ட ஆங்கிலம் படிப்புக்கும் விரிவுரையாளார்களுடன் மட்டும் எதையும் பேசாமல் ஒரு அசட்டுச் சிரிப்புச் சிரித்துவிட்டு நழுவினார்கள். மேடையில் ஒரு மவுசு இழந்த ஒரு இசைக்குழுவினர் புதிய, பழைய சிங்கள, ஆங்கில, சில தமிழ்ப்பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தனர். ஆத்மா லியனகே'இன் லியத்தம்பராய் மட்டும் சுமாராகப் பாடப்பட்டது. மாணவர்கள் நடனமாடிக் கொண்டிருந்தனர். நடனம் என்றால் கிட்டத்தட்டத் தவளைகள் தாவிக் கொள்வதுமாதிரி... என்றாலும் இது கஷ்டமான வேலை. நிறைய 'எனர்ஜி' தேவைப்படும். களைத்துப் போனால் அதைக் காட்டிக் கொள்ளாமல் "வெறி" மாதிரித் தள்ளாட்டம் போடவேண்டும். இருக்க ஒரு சின்ன இடைச்செருகல் போடவேண்டியுள்ளது. நடனம் என்றால் நிறையக் கற்பனை கிற்பனை பண்ணக் கூடாது. ஆண்கள் தங்கள் பாட்டுக்குத் தனியாக நடனம் என்று எதோவொன்றைச் செய்து கொண்டிருப்பார்கள். பெண்களுடன் சேர்ந்து நடனம் ஆடுவது என்பது ஆராவது 'செற்' ஆன சோடிகளுக்கு மட்டும்தான். சில சிங்களப் பெண் பிள்ளைகள் இதேமாதிரி இன்னொரு இடத்தில் ஒரு குழுவாக நடனம் ஆடிக்கொண்டிருப்பார்கள். இதுதான் கம்பஸ் நடனம். தமிழ்ப் பிள்ளை யாராவது ஒருத்தி தன்னும் ஆடியதாகத் தகவல் இல்லை. (ஆட்டக்காரி என்று லேபல் அடிக்கப்பட்ட பெண்களும் ஆடியதாக இல்லை);ஆனால் லீவில ஊருக்குப் போகேக்க யாராவது ஒன்று கேட்கும் "கம்பசில பெட்டையள் எல்லாம் நல்ல "சோசலாக" பழகுவாள்கள் என்ன?". இந்த இடத்தில் மட்டும் கற்பனை பீறிட்டுக் கிளம்பும் . அங்காலை இஞ்சாலை பார்த்துவிட்டு "மச்சான் இந்த டின்னர் அண்ட் டான்சிலை பெட்டைகளோடைதான் டான்ஸ் ஆடுறது. சொல்லி வேலையில்லை". என்றாலும் நம்பாதமாதிரி "மச்சான் நீயெல்லாம் டான்ஸ் ஆடமாட்டாய்! " என்று ஆள் தொடரும். உள்ளுக்கு நம்பத் தொடங்கியிருப்பார்.

சரி பெரிய விதானையாரை மீண்டும் கவனிப்போம். அவருக்கு கூடப் படித்த ஒரு சிங்களப் பெட்டையில ஒரு கண். கேட்கத் துணிவில்லை. இதயம் முரளி கணக்காக ஒரு மௌனக் காதல். (அவளிற்குப் பெயர் சம்பிகா என்பது மட்டும் இப்போதைக்குப் போதும்)

"மச்சான் இவளுக்கு என்னிலை ஒரு கண் " என்று சொல்லிக் கொள்வார். உண்மை என்னவென்று "பாலர்" வகுப்புக் போகத் தொடங்கிய குறிஞ்சிக் குமரன் கோவில் ஐயரின்ர மகனுக்கே தெரியும். கிடக்கட்டும். இன்றைக்கு இருக்கிற வெறியிலே ஆள் அவளைக் கேட்டாலும் கேட்கலாம்.

"மஷான், இண்டைக்கு நான் இவளோடை கதைக்கப் போறன்" என்று தொடங்கினார்.

"உனக்கு வெறி மச்சான், இண்டைக்குச் சரி வராது, நாளைக்குக் கேட்போம்" என்றான் நூலகர் சிவா. (இவனுக்கு நூலகர் என்று பட்டம் வந்ததற்கு காரணங்கள் நான் சொல்லாமலே உங்களுக்குப் புரிந்திருக்கும்)

விதானையார் மிகத் தெளிவாகச் சொன்னார் "மச்சான், நாளைக்கு எனக்கு வெறி இறங்கினால், கதைக்கத் துணிச்சல் வராது, இண்டைக்கே இவளைக் கேட்கப் போறன். வெறி இருக்கக்கைதான்தான் மச்சான் கதைக்கலாம்".

"எனக்குத் தண்ணி அடிச்சால்தான் இங்கிலிஷ் வரும், I want to talk to her in English மஷான்" தொடர்ந்தார் விதானையார். சரிதான் இவருக்கு சிங்களத்தில் "எக்காய், தெக்காய், துணாய், ... பாலுவாய்" வரைதான் வரும். எனவே சிங்களப் பெட்டையை எப்படி டாவடிக்கிறது? "ஷேக்ஸ்பியர் துணை" என்று மானசிகமாகக் கும்பிடு போட்டுவிட்டு இங்கிலிஷ்'இல் விளையாட வேண்டியதுதான். இதிலும் சிக்கல். விதானையார் அறிந்துவைத்திருந்த இங்கிலிஷ்'இல் நிறைய 'நாலெழுத்து' க் கெட்ட வார்த்தைகள்தான் அதிகம். மருதானைப் பக்கம் 'இங்கிலிஷ்" படம் பார்த்து ஆங்கில அறிவை வளர்த்துக் கொண்டதால் வந்த வினை. "மச்சான் நான் வெள்ளைக்காரன் மாதிரி இங்கிலிஷ் கதைப்பன்" என்று விதானையார் தொடர, திடுக்கிட்டுவிட்டான் ஆங்கிலப் புலவர் வீரசாமி (இயற்பெயர் எதற்கு?). வீரசாமியைப் பற்றி இரண்டே வசனங்களிற் விபரிக்க வேண்டுமானால், ஒன்று: அவன் அடிக்கடி ஆங்கிலப் பழமொழிகளைச் சொல்லுவான், இரண்டு: ஒட்டுமொத்த ஆங்கில மொழியையே தான் குத்தகைக்கு எடுத்தவிட்டது மாதிரிப் பீலா விடுவான்.

சாம்பிளுக்கு ஒன்று சொல்ல வேண்டுமானால், "மச்சான் கேள்," என்று தொடங்கி
''The perfection of wisdom and the end of true philosophy is to proportion our wants to our possessions, our ambitions to our capacities, we will then be a happy and a virtuous people.'' by Mark Twain என்று முடிப்பான். எனக்கு 20 வருடங்கள் கழித்தும் இன்னும் இது புரியவில்லை.

"மச்சான் வா! இண்டைக்குக் கேட்டிடுவம்" என்று தொடங்கினான் பொதிசுமந்த வரதன். வரதன் குழந்தை மனசுக்காரன். பெண்பிள்ளைகள் எதாவது பாரம் சுமந்தால் அவனுக்கு மனம் பொறுக்காது. ஓடிச்சென்று வாங்கித் தான் சுமப்பான். அப்பாதெல்லாம் கிளாலி, கொம்படி கடந்து யாழப்பாணம் போகவேண்டுமென்றால் வரதன் ஒரு வரப்பிரசாதம்- கம்பஸ் பெட்டைகளுக்கு; நாலைந்து பெண்களின் பொதிகளைத் தனியாளாக சுமந்து கொண்டு கிளாலி கொம்படி எல்லாம் திரிந்தபடியால் ஆள் நல்ல பெலசாலி என்பதை அறிவீர்கள்.

விதானையாருக்கு இப்ப கொஞ்சம் பயம் பிடித்துவிட்டது. என்றாலும் உள்ளே போயிருந்த நான்கு 'மூடிகள்' அளவான வெளிநாட்டுப் பானம் தந்த உத்வேகத்தில் படீரென்று எழுந்து நின்றார்.

"மச்சான் இந்த நேரம் அவளவை அக்பர் பாலத்தைத் தாண்டிப் போயிருப்பாளவ, நீ இன்னுங் கொஞ்சம் சுணங்கினால் ராமநாதன் ஹோலுக்குப் போய்த்தான் பிடிக்கவேணும்" என்று இன்னும் ஏற்றத் தொடங்கினான் பொ.சு.வரதன். எல்லாருக்கும் 'ஏத்திவைத்துக் கூத்துப் பாக்கிற' ஆர்வம். என்றாலும் விதானையார் வழமையாக எப்பவும் கடைசி நேரத்தில் ஒரு 'ராஜதந்திரப்' பின்வாங்கலில் ஈடுபட்டுச் சிக்கல்களில் இருந்து நழுவுவதால் கூத்து நடைபெறாது என்றுதான் எல்லோரும் எண்ணியிருந்தார்கள். என்றாலும் இறைவன் சித்தம் வேறக இருந்தது.

விதானையார் அந்தக் காலங்களில் சினிமாக் கதாநாயகர்கள் செய்வதுமாதிரி இடது கையால் தலை முடியைக் கோதிக்கொண்டார். தோள்களைக் குலுக்கினார். பிறகு நாம்பன் மாடு மூசுகிறமாதிரி மூச்சைச் சத்தமாக விட்டார் "டேய், பென் ஜோன்சன் தோத்தான்டா" என்றுவிட்டுத் திடீரென மிக வேகமாக ஓடத் தொடங்கினார். ஓரிரு விநாடிகள் தாமதித்துத்தான் எல்லாருக்கும் நிலைமையின் "சீரியஸ்னெஸ்' விளங்கியது. எல்லாரும் இவருக்குப் பின்னால் ஒடத்தொடங்குகிறார்கள். என்றாலும் யாராலும் விதானையாரை முந்தமுடியவில்லை.இவர்கள் அக்பர் பாலத்தின் இந்தப் பக்கத்திற்குக் கிட்டப் போகும்போது விதானையார் பாலத்தின் அடுத்தபக்கத்திற்குக் கிட்டஓடுவது தெரிந்தது.

அடுத்த சீன்: அக்பர் பாலம் தாண்டியவுடன் கண்ணில் படும் பெயர் தெரியாத, கூடாரமாகச் சடைத்து வளர்ந்திருக்கும் மரத்தின் கீழ் நடக்கிறது. சம்பிகா பழைய தமிழ்ப் படங்களில் வருகிறமாதிரி தோழிகளுடன் மரத்தில் உள்ள கொப்பொன்றில் சாய்ந்து நிற்கிறாள். அருகில் விதானையார். விரைவாக ஓடியதால் தலையெல்லாம் வியர்த்து ஈரமாகி இருந்தது. ஆனால் இவர் மிகத் தெளிவாக ஏதோ கதைத்துக் கொண்டிருந்தார். ஏதும் குளறுபடி நடந்தது மாதிரி இல்லை. விதானையார் தன் காதலைச் சொல்லிருந்தால் சீன் இப்படி இருக்கமாட்டாது என்று தெரிந்தது. இவர்கள் எல்லோரும் போய்ச்சேர ஒரு அசௌகரிய மௌனம். என்ன கதைப்பது என்று யாருக்கும் புரியவில்லை. என்றாலும் நடந்ததை ஊகிக்கக் கூடிய வகையில் அடுத்த வசனத்தை விதானையார் ஆங்கிலத்தில் விட்டார்.
"சம்பிகா, அடுத்த கிழமை கொடுக்க வேண்டிய 'பிராக்ரிகல் ரிப்போர்ட்'டை முடித்துவிட்டேன். நாளைக்குக் கொடுக்கிறேன்."

(முடிவுரை: இச்சம்பவம் நடந்து சிலநாட்களின் பின் "இதயம்" திரைப்படத்தைக் கண்டியில் உள்ள ஒரு பாடாவதி தியேட்டரில் பார்த்தோம். விதானையார் கண் கலங்கியதாகப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பொ.சு.வரதன் சொன்னான். என்றாலும் அன்று படம் பார்த்த கனபேர் சில பல காரணங்களால் கண் கலங்கியதால் "விதானையார் கண் கலங்கிய காதை" பெரிதாகப் பேசப்படவில்லை. அவனவனுக்கு அவனவன் பிரச்சினை!)




பொறுப்பாகாமை :
இது உண்மைச் சம்பவத்தை வைத்துக் கற்பனை செய்யப்பட்டது என்று பல பதிவர்கள் "பொறுப்பாகாமை/டிஸ்கி போடுகிறார்கள். எனக்கு அவ்வளவு நெஞ்சுரம் இல்லை. எனவே இது "உண்மையில்லாத சம்பவத்தை" வைத்துக் கற்பனை செய்யப்பட்டது என்று கூறிக்கொள்கிறேன்.

Tuesday, August 27, 2013

"கிழிச்சம்" சஞ்சிகையின் முப்பதாவது ஆண்டு விழா

"கிழிச்சம்", கலை இலக்கிய, மாத சஞ்சிகை என்றால் சாதாரண வாசகர்கள் தலை தெறிக்க ஓடித்தப்பி விடுவார்கள். என்றாலும் தீவிர வாசகர்கள் விட்டு விட மாட்டார்கள். ஒரு விசித்திரக் கூட்டம் நாடி, நரம்பு, இதயம் கணையம், பித்தப்பை எல்லாவற்றிலும் இலக்கியம் பரவி இனித்தப்ப முடியாது என்ற ஒரு நிலையில் இருப்பது எல்லாருக்கும் தெரிந்திருக்க நியாயம் இல்லை. இவர்கள்தான் தீவிர இலக்கிய வாசகர்கள். 2013 தை "கிழிச்சம்" இதழில் வந்த ஒரு 'படைப்பு'க் கீழே.

ஏம்பிச் சலித்து எழுந்து, "ஆவ் என்று கொட்டாவி விட்டான். கச கச என்று வியர்வை உடம்பெல்லாம் வழிந்து ஓடியது. பாயைச் சுருட்டிக் கதவுக்குப் பின் வைத்தான். பாயிருந்தவிடத்தில் பத்திருவது சிற்றெறும்புகள் ஓடின. கரப்பான் ஒன்று பாயின் ஓரத்திலிருந்து பாய்ந்தோடியது. (இது இலக்கிய எழுத்து என்பதால் "மோர்ட்டீன்" மாதிரிப் பூச்சி கொல்லிகள் வராது). சில்வண்டொன்று தூரத்தில் கத்திக் கேட்டது. அதற்கு எதிரொலியாக பல்லி ஒன்று "சொச் சொச்" என்று "சொல்லியது".

பூச்சி புழுவெல்லாம் இன்னும் இரண்டு பந்திகள் உலாவித் திரிந்தன. நாலாவது பந்தியில் கதை கொஞ்சம் சூடு பிடிக்கிறது.

ஆடுகள் மே மே என்று கத்தின. அவற்றிற்குப் பசித்திருக்க வேண்டும். ஆட்டுக் கொட்டிலில் இருந்து வந்த மூத்திர, புழுக்கை நெடியும் சாய்வாகக் தெறித்து விழுந்த சூரிய வெளிச்சமும் இவனுக்கு ஒரு சிறிய பரவச உணர்வைக் கொடுத்தது. ஆட்டுக் கொட்டில் எங்கும் பரவிக் கிடந்த புழுக்கைகளை விளக்குமாறினாற் கூட்டினான்.

(அடுத்த பந்தியிற் சாணம் அள்ளுகிறார்)

நீங்கள் பயப்பிடுகிறமாதிரி எனக்கும் "கிழிச்சம்" மாதிரி இதழ்களுக்கும் தொடர்புகள் இல்லை. அந்தக்கால சுஜாதா எழுத்துக்களில் வருகிறமாதிரி நான் ஒரு கொம்பியூட்டர் ஆசாமி. அண்மையில் கிழிச்சம் இதழின் முப்பதாவது ஆண்டு விழா நடந்தது. அதற்குப் போய் நொந்து, வாழை நாராய்க் கிழிந்து வந்த நண்பர் திருவடிவேல் சொன்ன கதைதான் இது. திருவடிவேல் ஒரு பதிவர்.ஒரு மாதத்தில் ஒரு பத்துப்பேர் வாசிக்கும் வலைப்பூ ஒன்று வைத்திருக்கிறார். ஆளுக்கு பேசக் கதைக்கத் தெரியாது, பிறகு எழுதவா வரும்? என்றாலும் தன் முயற்சியிற் சற்றும் தளராத விக்கிரமன் மாதிரித் தொடர்ந்து ஏதோ எழுதுகிறார்.

**************************

"திரு" விற்கு வீட்டில் தொல்லை தாங்க முடியவில்லை. அடிக்கடி தொட்டாண்டி வேலைகள் செய்யவேண்டி இருக்கிறது. செய்யவேண்டிய வேலைகளை மனிசன் செய்யார். ஒரு வேலையைச் செய்யாமல் தட்டிக்கழிக்க இன்னொரு வேலையைக் கண்டுபிடிப்பார் பிறகு இன்னொன்று. இப்படியே போகும். கடந்த ஆறுமாதமாக 'வீட்டுத் 'தோட்டத்தில்' புல் காடாய் மண்டிக்கிடந்தது. வெட்டவேண்டும். புல்வெட்டி "ஸ்டார்ட்" ஆகுதில்லை. இழுகயிற்றை ஊன்றி இழுத்தபின் முதுகுப் பிடிப்பு வந்தது. அது வந்ததால் வயதாகிவிட்டதும் ஞாபகத்திற்கு வந்தது. வயதாகியது புரிந்ததால் உடனே அடுத்த சனி நடக்கவிருந்த இலக்கியச் சந்திப்பும் ஞாபகத்திற்கு வந்தது.

வலு சீரியஸ் ஆக இலக்கியச் சந்திப்புக் ஆயத்தம் செய்யத் தொடங்கினார். ஆயத்தம் என்றால் கட்டுரை எதுவும் எழுதி வாசிக்கும் ஆயத்தம் இல்லை. முதலில் ஒரு நல்ல பெல்ட் வாங்கினார். ஜீன்ஸ்'சில் இறுக்கமாகக் கட்டினார். பிறகு இரகசியமாக ஜீன்ஸ்'சை உருவிப்பார்த்து 'நல்ல பெல்ட்' தான் என்று ஸ்திரப்படுத்தினார். போனமுறை கிச்சா அண்ணன் இப்படி ஒரு 'புத்தக வெளியீட்டிற்கு' வேட்டியுடன் போய், அங்கே ஒரு மோதல் நடந்து, வேட்டி உருவுப்பட்டு ,பிறகு அந்தப் போட்டோக்கள் 'பேஸ்புக்' இல் ஒரு ரவுண்ட் வந்தது. சொன்னால் நம்பமாட்டீர்கள். 366 முறை 'ஷெயர்' பண்ணுப்பட்டது. (குறிப்பு அண்ணர் வேட்டிக்குள்ளே ஒரு கோடுபோட்ட அரைக்காற்சட்டை போட்டிருந்தவர்)

ஆயிற்று. சனிக்கிழமையும் வந்தது. இது ஒரு முழுநாள் நிகழ்வு. மெல்பனில் இருந்தெல்லாம் இலக்கியத் தாதாக்கள் வந்திருந்தார்கள். வடிவேலர் மண்டபத்திற்குள் உள்ளிட்டபோது அந்த நாள்களில் ரேடியோ சிலோனில் கலக்கிய திருமதி பிரமீளா ரவீந்திரன் "சினிமாப் பாடல்களைத் திருப்பித் திருப்பிப் பாடுவதுதான் நம்மவர்கள் இலக்கியம் என்று நினத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சொந்தமாக ஆக்கப்படுவதுதான் தமிழ் வளர்ச்சிக்கு' வழிவகுக்கும்'.." என்று உருப்படியாக ஒரு கருத்தை விபரித்துக் கொண்டிருந்தார். இந்த இடத்தில் உண்மையாக விதி சிரித்துக் கொண்டிருக்கவேண்டும். ஏனென்றால் அடுத்துப் பேச எழுந்த 'சில்லெடுத்த சி.அம்பலம் (இயற்பெயர் சிற்றம்பலம்)' இதை வன்மையாக எதிர்த்தார். எதிர்ப்பது ஒரு குற்றமா என்ன? இல்லைத்தான். அடுத்து அவர் செய்ததுதான் வட்ட இலக்கியம் சிறுபத்திரிகை , குறும்பத்திகை இயக்கம் இங்கும் கேள்விப்படாதது. திடீரென்று மூச்சை நன்றாக உள்ளிழுத்து விட்டு "காயாத கானகத்தே.... " என்று தன்னைத் தானே டீ.ஆர். மகாலிங்கம் மாதிரிக் கற்பனை பண்ணிக் கொண்டு பாடத் தொடங்கினார். மேடையில் இருந்த நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் தலையைச் சொறிந்து கொண்டார். கடைசி வரிசையில் உட்கார்ந்திருந்த சிலர் அவசர அவசரமாக 'ரீ' குடிக்க என்று எழுந்து போனார்கள்.

அப்பதான் பின்னுக்கிருந்த ஒரு பெண் சங்கடத்தோடு தன் தோழிக்குச் சொன்னார். 'இந்தாள் இப்படி மானங்கெடுத்துமெண்டா வந்திருக்க மாட்டன்," என்று. அவ்வாளைக் கட்டிய இல்லாள் போல. பாவம்!

ஒருவழியாக திருவாளர் சி.அம்பலம் நாலைந்து சினிமாப் பாடல்களைப் பாடி தன் கருத்துக்களை ஆழமாகப் புரியவைத்துவிட்டுச் சென்றுவிட்டார்.

அடுத்து வந்தவர் மா(ர்)க்சிய இலக்கியத்தில் பழம் தின்று கொட்டைபோட்ட கோ.சா.பெரியதம்பி. இவர் எழுதிய எழுதுகிற விடயங்கள் யாருக்கும் புரிந்ததாகச் சரித்திரம் இல்லை. வாசித்த, கேட்ட துர்ப்பாக்கியவான்களெல்லாம் "நமக்கேன் வம்பு" என்ற பாணியில், "அருமை, அற்புதம்" என்று சொல்லவெளிக்கிட இவருக்குக் கிடைத்துவிட்டது ஒரு 'பரந்த அங்கீகாரம்" நம்பவில்லையாயின் அன்றைய பேச்சில் இருந்து ஒரு சின்ன 'சாம்பிள்'

"...காத்திரமான படைப்பு வெளியின் உச்சம் என்பது எமது மேலாண்மை விழுமியங்களின் சங்கிலித்தொடர்களை இணைக்கும் செவ்விய நீரோட்டத்தின் ஆளுமையை எடுத்தியம்புவதாக இருக்கவேண்டும். ஈழத்து இலக்கியத்தின் ஒவ்வொரு படிநிலைகளையும் இந்த யதார்த்த விழுமிய காரணகூறுகளுடன் புணருமிடத்து, போருக்கு பின்னரான நமது படைப்பு கூறுகள் , ரூசியப்புரட்சின் பின்னரான சோவியத் பண்புகளை தொக்கி நிற்கிறது ...."

இவ்வாறு ஒருவழியாக 'தேத்தண்ணி" இடைவேளை வந்தது. இந்தமாதிரி 'இலக்கியச்' சந்திப்புக்களில் உப்புச் சப்போடு இருக்கிற விஷயம் என்றால் தேத்தண்ணி'யோடு வரும் சிற்றுண்டிகளும் இதர சாப்பாட்டு அயிட்டங்களும்தான். பாட்டுப்பாடி இலக்கியம் வளர்த்த திருவாளர் சி.அம்பலத்துடன் ஒரு மெல்பன் கவிஞர் சீரியசாக ஏதோ விவாதித்துக் கொண்டிருந்தார்.

இடைவேளை முடிந்து இவர் உள்ளே வர மெல்பன் கவிஞர் கவிதை வாசித்துக் கொண்டிருந்தார். பிறகு மேடையிலேயே அழத் தொடங்கிவிட்டார். என்னவென்று விசாரித்தால் இவர் மேடையில் அழுவது இது பன்னிரண்டாம் தடவையாம். ஏதாவது ஒரு அதிஷ்ட எண் வந்ததும் அழுவதை நிறுத்தலாம். (சந்தேகம்: இவர் மேடையில் அழுவது இவர் குடும்பத்திற்குத் தெரியுமா?)

அழுகுணிக் கவிஞர் போனதும் "கிழிச்சம் 30" வெளியிடப்பட்டது. வெளியிடப் பட்டது என்று சாதரணமாகச் சொல்லமுடியாது. ஒரு பத்து இதழ்களை அழகாகப் பொதி செய்து ரிப்பனால் கட்டி, சிட்னியில் உள்ள ஒரு பத்துப் பிரமுகர்களைத் தனித்தனியாக  மேடைக்குக் கூப்பிட்டு ஒவ்வொன்றைக் கையில் கொடுத்து போட்டோ எடுத்து.. ஒரு வழியாக முடிந்தது.

"கிழிச்சம் 30" இனை விமர்சிக்க சோனா மாவன்னா தமிழ்க்கண்ணன் வந்தார்.மடை திறந்த வெள்ளம் என்பார்கள். இவர் "மடை' அது இது வெள்ளம் என்று கவலைப்படாமல் சூனாமி வேகத்தில் பேசத் தொடங்கினார். சற்று நேரம் போனதும்தான் புரிந்தது, புண்ணியவான் முன் அட்டையில் இருந்து பின்னட்டை வரை ஒரு எழுத்து விடாமல் வாசித்துக் கொண்டிருக்கிறார் என்று. இந்த அழகான விமர்சனத்தின் புண்ணியத்தாலோ அல்லது மக்கள் புத்திசாலிகளாகி விட்டார்களோ தெரியவில்லை, அன்றைக்கு "கிழிச்சம் 30" வெறுமனே நான்கு பிரதிகள்தான் விற்கப்பட்டது.


திரு' விற்குப் பசிக்கத் தொடங்கியது. பக்கத்தில் எங்காவது 'burgher' வாங்கிக் கடிக்கலாமோ அல்லது "தேநீர் இடைவேளை" வந்து காப்பாற்றுமோ என்று ஒரு சின்ன யோசனை ஓடியது. அப்போது

"அடுத்து ஏக்கே எனும் சோக்கான பதிவர்" என்றும் அறிமுகத்துடன் மேடையேறினார் அந்த இளைஞர். பெண்கள் பக்கத்தில் இருந்து பலத்த கரகோஷம். இலக்கியப் பெரிசுகளிற்கு வயிற்றில் இருந்து புகை வந்திருக்கும்.

"வணக்கங்க" என்று கைகூப்பினார் ஏக்கே.

"தம்பி தஞ்சாவூரிலை இருந்து இலக்கிய விழா'விற்கு வந்திருகிறார்" என்று குசுகுசுத்தார் பக்கத்தில் இருந்த பெரியவர்.

"சே இவன் புங்குடுதீவு" என்றான் பக்கத்தில் இருந்த யசோ. (இவன் யசோ என்ற பெயரில் முகநூல் கணக்கொன்று வைத்திருக்கிறான். ஆணா பெண்ணா என்று சரியாகச் 'செக்' பண்ணாமல், நாடறிந்த கவிஞர் பொ.ஐ.க.ஜெயவாணன் இவனிடம் முகநூல்-ஜொள் விட்டது தனிக்கதை.)

"நனைவிடை தோயும் நாதாரிகள்" என்று ஒருதரம் மெதுவாகச் சொன்னார் ஏகே . பிறகு எல்லாக் கவிஞர்களும் செய்வதுமாதிரி தலைப்பை மீண்டும் ஒருமுறை வாசித்தார்.- இம்முறை அழுத்தி உறுத்தி நிதானமாக இழுத்து வாசித்தார்.

"ந னை வி டை ...தோ யு ம்... நா தா ரி க ள்

இரண்டு வரிசை தள்ளி உட்கார்ந்திருந்த எஸ்.பொ சங்கடத்தோடு நெளிந்துகொண்டார்.

"மட்டுவில் கத்தரிக்காய், பூநகரிப் புழுக்கொடியல்
வெட்ட வெட்டத் தழைக்கும் இடைக்காட்டுக் கிழுவங் கொப்புக்கள்..
விஜிதா மில் மொட்டைக்கறுப்பன், ஊர்க் கோழிக்கறி
ஞாயிற்றுக் கிழமை முழுக்கு ......"

"ஐயா தீர்ந்ததா உங்கள் தோய்தல்??"

(இந்த இடத்தில் வலது கையை உயர்த்திச் சபையோரைக் கேள்வி கேட்பதுபோல் சைகை செய்கிறார்)

"அச்சுவேலிச் சந்தையடியில் அண்ணன் சைக்கிள் செயின் நழுவியது..
இவர் பெடல் சறுக்க, களுக் என்று சிரித்தாள் அவள்
வழிந்தார் அண்ணன் அசடாகி, மறக்கிலார் அந்தத் தொங்கட்டானை மூபத்து ஆண்டுகள் கழிந்தும்"


(இப்படிப் பந்தி பந்தியாக நனவிடை தோய்தல்கள் கிழிக்கப்பட்டன)

ரூல் அடித்த சீயார்க் கொப்பிகள், நட்ராஜ் கொம்பாஸ்
வாசம் வீசும் இலவசப் புத்தகங்கள், மரவேலைப் பாடம், ஒளித்துவைத்துப் படித்த இலக்கியங்கள்,

எல்லாம் விட்டு வைக்க மாட்டீர்- எல்லாம் எழுதித் தள்ளுவீர்

ந னை வி டை ...தோ யு ம்... நா தா ரி க ள்

என்று முடித்தார்.


**************************


திரு'விற்கு ஒரு சந்தேகம். ஏக்கே தன்னைத்தான் வறுத்தாரோ என்று. இவர் நன்றாகத் தாளிக்கப்பட்டது புரிந்தது. என்றாலும் "சே அப்படி இருக்காது" என்று சொன்னேன். இதுக்கு விடை சொன்ன என்னால் அவர் கேட்ட இன்னொன்றுக்கு விடை சொல்ல முடியவைல்லை.

"ஏன் எல்லாக் கவிஞர்களும் ஒவ்வொரு வரியையும் இவ்விரண்டு தரம் வாசிக்கிறார்கள்? யாராது இதை நிறுத்த மாட்டார்களா?"

நான் ஓடித் தப்பிவிட்டேன்.




----------

நன்றி-

(1) ஜேகே
"...காத்திரமான படைப்பு வெளியின் உச்சம் என்பது எமது மேலாண்மை விழுமியங்களின் .."என்று தொடங்கும் பந்தி ஜேகே'இன் முகநூற் பக்கத்தில் இருந்து அனுமதி இல்லாமற் சுடப்பட்டது.

(2) Image from
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/86381/language/ta-IN/--.aspx

Saturday, November 17, 2012

வைரவ சுவாமியும் கோனாச்சானாவும்

வைரவ சுவாமியை எல்லாருக்கும் தெரிந்திருக்கும். அவருக்கு ஒரு சின்னப் பிரச்சினை, இல்லைக் கொஞ்சம் பெரிய பிரச்சினை. அதைப் பிறகு பார்ப்போம். இப்ப கோனாச்சானா, கோனாச்சானா ஒரு தீவிர கடவுள் பக்தர். முருகன் சிவபெருமான், பிள்ளையார், உலகத்தில் உள்ள எல்லா அம்மன்கள், வைரவர்கள் என்று எல்லாக் கடவுளரையும் விட்டுவைக்காமற் கும்பிடுவார். இயேசு பிரானைத் தெரியாத ஊரிற் பிறந்துவிட்டார். இல்லாவிட்டால் அவருக்கும் ஒரு கும்பிடு போடாமல் இருக்கமாட்டார். கோனாச்சானா அவரிற்கு அவரின் அப்பா/அம்மா இட்டபெயராக இருக்கமுடியாது. கோ.சங்கரப்பிள்ளை தான் சுருங்கி கோனாச்சானா என்றாய் விட்டது. என்றாலும் ஊரில் முந்தநாள் மீசை முளைத்த பெடியளுக்கோ இல்லாவிட்டால் திரு கோ.சங்கரப்பிள்ளைக்கு அப்பா வயதில் உள்ளவர்களுக்கோ அவரின் இயற்பெயர் தெரியாது என்றுதான் சொல்வார்கள். எலக்சன் சமயத்தில் ஓட்டுப் போடுமிடத்தில்தான் இவரின் இயற்பெயர் அழைக்கப்படும். சங்கக்கடை மனேச்சர்கூட "கோவன்னா சங்கரப்பிள்ளை" என்று கூப்பன் மட்டையைப் பார்த்து முணுமுணுப்பாக வாசித்துவிட்டு உரத்து "கோனாச்சானா" என்றுதான் அழைப்பார். முறையாகப் பார்த்தால் "கோவன்னாச் சானா" என்றுதான் வரவேண்டும். இத்தவறை யாரும் கவனிப்பதாக இல்லை.

வயசென்று பார்த்தால் இவருக்கு ஒரு அறுபத்தைந்து மதிக்கலாம். கொஞ்சம் ஒல்லியான ஆனால் உறுதியான தேகம். சட்டை போடமாட்டார். சாரம் -அல்லது கோயில், குளம், விஷேசம் என்றால் வேட்டி அணிவார். மேலே போடும் துவாய், வேட்டியணியும் நாட்களில் நல்ல கைத்தறிச் சால்வையாக மாறும். நெற்றியில் எப்பவும் திருநீறு. போகிறவழியில் கோயில் இருந்தால் சந்தனத்தை எடுத்து நெஞ்சில் பூசுவார். சிக்கனம் எல்லாம் பார்க்காமல் நிறையப் அப்பி விடுவார். ஐந்து ஆறாம் வகுப்புவரை படித்திருக்கலாம். அந்தக் காலங்களில் அது ஒரு பெரிய பிரச்சினை இல்லை. ஆசாமியின் சிந்தனை எல்லாம் எப்போதும் "வயல், குளம், நெல்லு, குரக்கன், வெங்காயம் , மிளகாய், ஆடு, மாடு" என்றுதான் இருக்கும். வேறு எதைப்பற்றியும் கதைப்பதில்லை. நல்ல மனிசன், ஆனால் நல்ல மனிசனாக இருப்பதாற் கொஞ்சம் அப்பாவி.

வைரவ சுவாமியும் ஒரு அப்பாவிதான். கெட்டித்தனமாக நடந்து நல்லூர்க் கந்தன் மாதிரி ஒரு கோவிலில் குந்தியிருக்கத் தெரியவில்லை. மக்கள் ஊருக்கு ஊர் மரத்திற்குக் கீழே ஒரு சூலத்தை நட்டு இது உனக்குப் போதும் என்று சொல்லிவிட்டார்கள். சில ஊர்களில் பரிதாபப் பட்டு மூன்று பக்கமும் சுவர் வைத்து ஒரு "இசுக்குட்டி" கோவில் கட்டி வைத்தார்கள். வைரவருக்கும் தணியாத ஆசை. ஒரு 'சோக்கான கோவிலில்' ஆறுகாலப் பூசையுடன் 'செற்றில்' பண்ண. இது சரிவராவிட்டால் சந்நிதி கோவில் மாதிரி ஒரு சுமாரானா கோவில் என்றாலும் பரவாயில்லை என்று ஒரு 'பிளான் B" உம் வைத்துள்ளார். முன்னமே சொன்னேன் வைரவர் கொஞ்சம் அப்பாவிதான். அவருக்கு பசையுள்ள ஒரு ஆசாமியின் கனவில் தோன்றி, "பக்தா, எனக்கு ஒரு கோவில் கட்டாமல் காலத்தைக் கடத்துகிறாயா?" என்று நைச்சியமாகச் சொல்லத் தெரியவில்லை. இரண்டு, மூன்று கமக்காரர்களின் கனவில் தோன்றி, "பக்தா, எனக்குக் கோயில் கட்டு" என்று நேரடியாகவும் சொல்லிப் பார்த்தார். முதல் ஆள் தீவிர பெரியார் பக்தர். "எடே உழைக்காத கள்ளா! ஓடித்தப்பு" என்று பாதி நித்திரையில் எழும்பிக் கத்தத் தொடங்கினார். இரண்டாவது ஆள் மறதி/மாறாட்டக்காரன். காலை நித்திரையால் எழுந்ததும், "அட, கோவிலுக்கும் பொங்கச் சொல்லி வைரவர் சொன்னவர்" என்று பெண்டாட்டிக்குச் சொன்னர். மனைவி சீரியஸ்ஸாக எடுக்கவில்லை. எனவே வைரவருக்குப் பொங்கல் கூடக் கிடைக்கவில்லை.

மூன்றாவது முறை வைரவருக்கு 'லக்' அடித்தது. பெரிய கிணற்றடி சின்னையா உடனே அலுவலைப் பார்க்க எண்ணினார். கையில் காசில்லை. அடுத்த போகம் வெங்காயத் தோட்டத்தைப் பத்தாயிரம் கன்றாக்கினார். வைரவருக்கு கோவில் வரப்போகுது என்று புரியத் தொடங்கியது. 'நல்லூர்க் கந்தசாமி" கோவில் மாதிரி இல்லாவிட்டாலும் இப்போதைக்கு ஒரளவு பெரிய கோவில் எனக்கு என்று கனவு காணத் தொடங்கினார் உடம்பும் பூரிப்பாக மாறி மினுமினுக்கத் தொடங்கியது. பெரிய கோவில் என்றால் நல்ல 'பொலிஷ்' ஆகவும் இருக்கவேண்டும்தானே. வைரவருக்கும் தான் கொஞ்சம் 'வெள்ளையாக' மாறினால் என்ன என்று ஒரு சின்ன ஆசையும் வந்தது.

கோவில் விடயத்தில் நடந்ததோ வேறை. கிணத்தடிச் சின்னையாவுக்குக் அடுத்த போகம் வெங்காயம் நல்ல விலைக்குப் போனது. லொறிக் கூலி, நாலம் குறுக்குத் தெரு 'கமிசன் கடைக்காரனின்' வெட்டுக்கள் எல்லாம் போயும் கையில் காசு கனக்க மிஞ்சியது. எல்லாம் "வைரவர் அருள்" என்று சொல்லிக்க கொண்டார். சொல்லிக் கொண்டாலும் "கனவை நம்பிக் கோவில் எல்லாம் கட்டவேண்டுமா?" என்றும் சற்று சிந்திக்கத் தொடங்கினார். ஆரம்பத்தில் இருந்த வேகம் இப்போது இல்லை. என்றாலும் தெய்வக் குற்றம் ஏதாவது செய்ய வேண்டும். சின்னையர் அருகில் உள்ளா ஒரு கொல்லன் பட்டடைக்குப் போனார். திருப்பி வரும்போது நல்ல இரும்பில் 'அடித்த' ஒரு திரிசூலம் ரெடி. அன்றைக்குப் பின்னேரமே ஊருக்கு வடக்குப் புறம் இருக்கிற வெளிக்குப் போனார். வெறுமனே போகவில்லை. பெண்டாட்டி பிள்ளை, குட்டி, மூன்று கடகம் மோதகம், இரண்டு கடகம் வடை, இரண்டு பெரிய கதலி வாழைக் குலைகளுடன்தான் போனார். றோட்டுக் கரையில் இருகிற ஒரு சுமாரான சைஸ் மருத மரத்தைத் தேர்ந்தெடுத்தார். நிலத்தில் முறுகிப் பரவியிருந்த வேரில் திரிசூலத்தைக் கஷ்டப்பட்டுக் குத்தினார். இப்படித்தான் கண்டாமடம் வைரவர் கோவில் வந்த கதை.

வைரவருக்கும் கொஞ்சம் மனக்குறைதான். "மூன்று பக்கமும் சீமந்துச் சுவராவது கட்டியிருக்கலாம்" என்று முணுமுணுத்துக் கொண்டார்.

**************************

கண்டாமடம் வைரவர் கோவில் இருப்பது ஊரில் இருந்து கொஞ்சத் தூரம் தள்ளி. இன்னும் கொஞ்சத் தூரம் போனால் சுடலை. இடம் களிமண் தரை. வெங்காயம், நெல், குரக்கன் ,சாமி (சாமை) எல்லாம் விளையும் காணிகளும் அருகில். என்றாலும் வைரவர் கோவில் இருக்குமிடம் முள்ளுக்காடுகள் நிறைந்த இடம். இடைக்கிடை இருக்கும் வெறும் நிலத்தில் மழை பெய்யுங்காலங்களில் நல்ல பச்சைப் புல் முளைக்கும். பக்கத்தில் நல்ல தண்ணிக் கிணறும் உண்டு. பள்ளிக் கூடம் விட்டபின் ஆடு, மாடு மேய்க்கும் சிறுவர்கள், விடலைகள் இந்த இடத்தில் சந்திப்பார்கள். பெடியளுக்கு தினமும் ஆடு, மாடு மேய்ப்பது, கிட்டிப்புள் விளையாடுவது, வீட்டில் இருந்து களவாகக் கொண்டுவரும் தேயிலைத்தூள், சீனி, உடன் கறந்த பாலுடன் டீ போட்டுக் குடிப்பது என்று அலுத்துவிட்டது. வைரவருக்கும் வடை, வாழைப்பழத்துடன் படையல் கிடைப்பதுவும் அருகி விட்டது. இப்படி ஒருநாளில் தான் ஒரு பெடியன் வைரவருக்கு வேண்டுதல் வைத்தான், "வைரவரே எங்களுக்குத் 'பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் தேவையில்லை. தினமும் வடை, மோதகம், புக்கை, வாழைப்பழம் என்று கிடைக்க வழி செய்வாய்" என.

வைரவருக்கும் கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விட விருப்பமில்லை. "யார் சொன்னது, இவங்களில் யாரோ ஒருவன் படித்து டாக்குத்தர், இஞ்சினியர், எக்கவுண்டன் என்று பின்னாட்களில் நன்றாக வந்தால் ஒரு பெரிய சோக்கான கோயில் எனக்குக் கட்ட மாட்டாங்களா என்ன?" என்று கணக்குப் போட்டார். இந்த இடத்தில் நீங்கள் சிரிக்கக் கூடாது. முன்னமே சொல்லி விட்டேனே வைரவர் ஒரு அப்பாவி என்று. அத்தோடு வைரவர் கணக்கிலும் 'வீக்'. இருக்கட்டும், வைரவர் அருள் பாலிக்கத் தீர்மானித்தார். அத்தோடு அவர் இப்பதான் 'தீடீரெனத் தெரிவதும் உடனே மறைவதும்' கலையைக் கற்கத் தொடங்கி சுமாரான வெற்றியும் ஈட்டுகிறார். (சிலவேளை சொதப்புகிறார், அநேகமாகச் சரிவருகிறது).

சிலநாட்கள் இப்படியே போய்விட்டது. வைரவருக்கும் இப்போது கனவிற் தோன்றி வேண்டுதல் அல்லது கட்டளை கொடுப்பதில் நம்பிக்கை குறைந்துவருகிறது. மக்கள் இதையெல்லாம் சீரியஸ் ஆக எடுகிறார்கள் இல்லை. இனிக் கொஞ்சம் 'வித்தியாசமாக' எதையாவது செய்வது என்று தீர்மானித்தார்.

ஒரு புதன்கிழைமை காலை பதினோரு மணி. கோனாச்சானா கண்டாமடம் வைர. கோவிலில் வந்து "அப்பனே, முருகா, வைரவா!" என்று ஒரு கும்பிடு போட்டார். பிறகு செவிகளைப் பிடித்துக் கொண்டு மூன்று முறை தோப்புக்கரணம் போட்டார். கண்களை மூடாமலே வேண்டுதல்களைச் சொல்லத் தொடங்கினார்.

"பக்தா கண்களை மூடு" திடீரேன ஒரு குரல் மருதமரத்தில் இருந்து கேட்டது. குரலில் ஒரு தெய்வீகம். ஆனால் ஒருவித கம்பீரமான உத்தரவிடும் தொனி.

"ஐயா நீங்கள் ஆர்?" கோனாச்சானா கண்களைத் திறக்காமல் பயபக்தியாகக் கேட்டார்.

வைரவருக்குக் கடுப்பு. இந்தநேரம் இது "முருகன், சிவபெருமான், பிள்ளையாராக' இருந்தால் இப்படி ஒரு கேள்வி வருமா? என் குரலில் 'தெய்வீகத்தன்மை" போதாதா? எனறு ஒருவித சுய பச்சாபமும் வந்தது. என்றாலும் வைரவர் முடிவெடுத்ததை நிறைவேற்றியே தீருவேன் என்றிருந்தார்.

"பக்தா மேலே பார்"

"ஒண்டுமே தெரியல்லையே?"

"கண்களைத் திற பக்தா" ரொம்ப மினக்கெட்டுக் கனிவாகச் சொன்னார் வைரவர்.

இப்பதான் கோனாச்சானா கண்களைத் திறக்கிறார். மருத மரத்தில் ஒரு கரிய குண்டான ஒரு பேர்வழி. சுருட்டை முடி. கொட்டைப் பாக்கு முழி. பெரிய தொந்தி. ஆனால் உறுதியான உடல்வாகு.இரண்டு வேட்டைப் பற்களும் வாயை மூடியிருக்குப்போதே மிக மெலிதாகத் துருத்திக் கொண்டு வெளியே தெரிந்தன. இவரின் தந்தையார் இவர் சிறு பிள்ளையாக இருக்கும்போது வைரவ சுவாமி எப்படி இருப்பார் என்று சொல்லியிருந்தார். எல்லாம் பொருந்தி வந்தது. ஆனால் இந்த வைரவர் கொஞ்சம் வயசாளி மாதிரி இருந்தார்.

"இது மெய்யா அல்லது யாரும் விளையாடுகிறார்களா?" என்று யோசிக்கும்போதே வைரவர் மறைந்து விடுகிறார். கோனாச்சானாவிற்கும் இது வைரவ சாமிதான் என்று புரிகிறது.

"பக்தா கண்களை மூடு" வைரவர் அவசரமாகச் சொல்கிறார். (கன நேரம் மறைந்திருப்பது சிரமம். அத்தோடு வைரவருக்கும் தன் 'மறைந்திருக்கும்" கலையில் அவ்வளவு நம்பிக்கை இல்லை.)

"எனக்குத் தினமும் வடை, மோதகம், புக்கையுடன் படையல் வைப்பாய். அத்தோடு பாயசமும் இருந்தால் நல்லது" வைரவர் கடைசியாகச் சொன்னது இதுதான். கோனாச்சனா அரை மணித்தியாலம் கழித்துத்தான் கண்களைத் திறந்தார்.



**************************

கதை ஊரில் பரவி விட்டது. நினைத்ததைவிட அதிகம் பேர் நம்பினார்கள். நம்பியவர்கள் எல்லாம் அள்ளி வழங்க, வைரவருக்குத் தினமும் வடை, மோதகம், புக்கை, சிலநாட்களில் பாயசம் என்று வேட்டைதான். பின்பலனாக ஆடு மேய்க்கும் சிறுவர்களுக்கும் தினமும் இவை கிடைத்தன. இது, இரு கிழமைகள் தொடர்ந்தன. மூன்றாம் கிழமையில் இருந்து வடை இருந்தால் மோதகம் இல்லை அல்லது மோதகம் இருந்தால் வடை இல்லை என்றாய் விட்டது. பிறகு அவற்றின் எண்ணிக்கைகளும் குறையத் தொடங்கியது. நாட் போகப் போக வடை மோதகமெல்லாம் மெலியத் தொடங்கின. ஆடு மேய்க்குக் சிறுவர்களுக்கு இப்போது ஆளுக்குப் பாதி வடை அல்லது மோதகம் கிடைத்தால் அதிசயம்.

தினமும் படையல் என்பது வாரம் ஒன்றாகியது. பிறகு அமாவாசை , பௌர்ணமி என்று சிறப்பு நாட்காளில் மட்டும். பிறகு எல்லாரும் வைரவரை மறந்து விட்டார்கள். வைரவர் மட்டும் கொண்ட கொள்கையில் பிடியாக இருந்தார்.

அன்றைக்கு ஒரு நல்ல பௌர்ணமி நாள். கோனாச்சானா தோட்டத்திற்கு இறைப்பு வேலை முடிந்து அலுத்துப் போய் கண்டாமடம் வைரவர் கோவிலில் "அப்பனே, முருகா, வைரவா!" என்று சொல்லிக்க் கொண்டு சாமி கும்பிடத் தொடங்கினார். இரவு எட்டு மணி இருக்கும். நிலவு உண்மையிலேயே இரவைப் பகலாக்கியமாதிரி எறித்துக் கொண்டிருந்தது.

"பக்தா கண்களை மூடு" அசரீரி கேட்டது. இவர் நிமிர்ந்து மேலே பார்த்தார். மரத்தில் அதே வைரவர்தான்.

"பொறுக்கிப் பயலே, என்னை ஏமாத்திறியா?" என்று அருகில் இருந்த நீண்ட கம்பைத் தூக்கிக் கொண்டு கோபமாக இவர் வர, மரத்தில் இருந்து குதித்து ஓடித் தப்பினார் வைரவர்.



-------------------------------------

படம் http://www.tamilmurasuaustralia.com/2010/07/blog-post_1486.html இலிருந்து

கதைக்குத் தேவையில்லாத குறிப்பு: 'வைரவர்' இலங்கையில், முக்கியமாக யாழ்ப்பாணத்தில் வழிபடப்படும் ஒரு கிராமக் கடவுள். தென்னிந்தியாவில் வைரவர் வழிபாடு இல்லை எனச் சில பதிவுகள் வாயிலாக அறிகிறேன். என்றாலும் கிராமப் புறங்களில் இருக்கும் மாடசாமி, ஐயனார் மாதிரிக் கடவுளர் இதுமாதிரித்தான் என ஊகிக்கிறேன்.

இசுக்குட்டி- மிகச் சிறிய, தம்மாத்துண்டு

Tuesday, October 23, 2012

மனைவியைச் சந்தோஷமாக வைத்திருப்பது எப்படி?

மனைவியைச் சந்தோஷமாக வைத்திருப்பது எப்படி?
(20 வழிகள்)

என்று இணையத்தளம் ஒன்றில் வெள்ளைக்கார அம்மணி ஒருவர் எழுதியிருந்தார். அதை நான் எங்கள் 'கலாச்சாரத்திற்குப்' பொருத்தும் வகையில் மொழிபெயர்த்து என் கொமென்ற்'களுடன் கீழே தருகிறேன்.

(1)மனைவியைப் பார்த்துப் புன்சிரியுங்கள். நீங்கள் ஒன்றும கதை/வசனங்கள் பேசத் தேவையில்லை, வெறுமனே ஒரு கனிவான புன்னகையைக் கசியவிடுங்கள். முக்கியம் புன்னகைக்கும்போது அவள் கண்களைப் பார்க்கவேண்டும்.

நீங்களே 'ஒன்றும் பேசத் தேவையில்லை' என்று சொல்லிவிட்டீர்கள். பிறகு என்ன? கடைப் பிடித்துப் பார்த்தேன். "சும்மா அசட்டுச் சிரிப்புச் சிரிச்சுக் கொண்டிருக்காமல் வூல்வேர்த்'துக்குப் போய் இந்த லிஸ்ட்'இல இருக்கிற எல்லாத்தையும் வாங்கி வாங்கோ" என்று ஒரு நீஈஈஈளமான ஒரு பேப்பர்த் துண்டு வந்தது.


(2) அவளிடம் (கோபத்தில்) கத்தவேண்டாம். மென்மையாக, மகிழ்வாக, அடங்கிய குரலில் பேசவும். (அடக்கி வாசிக்கச் சொல்லுறா). அவள் காதுகளில் கத்துவது அவளுக்கு ரொம்பக் கோபமூட்டும். நீங்கள் கத்தாமலேயே அவளுக்குக் காது கேட்கும்.

என்னது? கத்துவதா? மூச். அம்மா தாயே நீங்கள் எந்த நூற்றாண்டில் இருக்கிறீர்கள்?


(3) மனைவி சொல்வதை எப்போதும் கேளுங்கள். அது மிகவும் கஷ்டமானது என்று எனக்குத் தெரியும். உங்களால் அவள் சொல்வதைக் கொன்சென்ரேட் பண்ணிப் புரிந்துகொள்ள முடியாது. அது போறிங்'ஆக இருக்கலாம் அல்லது நீங்கள் செய்து கொண்டிருக்கும் வேலையைப் பாதியில் விட வேண்டி வரலாம். முயற்சி செய்யுங்கள். அவள் முக்கியமான ஒன்றைச் சொல்லவரலாம்.

இதைத்தான் எங்கள் தமிழர் "மனைவி சொல்லே மந்திரம் என்பார்கள்". யாருக்காவது மறுக்கிற துணிச்சல் உண்டா?

(4) மனைவி எதாவது ரிப்பேர், அல்லது வேறு 'அலுப்பு' வேலைகள் செய்யச் சொன்னால் எதையும் பின்போடாதீர்கள். சூடாற முதல் செய்யவும். இதெல்லாம் உங்கள் நல்லதுக்குத்தான் அவள் சொல்லுகிறாள்.

நாம் பிறப்பு எடுத்ததே எதற்காக? இதுமாதிரித் தொட்டாண்டி வேலை பார்க்கத்தானே?

(5)உங்கள் மனைவியைப் புகழ்ந்துதள்ளுங்கள். பாசாங்கு பண்ணாமல் 'உண்மையாகவே' சொல்லவும். அவள் 'ஷொப்பிங்' போனால், "உனக்கு என்ன வாங்கினாய்" என்று அக்கறையாகக் கேட்கவும். அப்படிக் கேட்டால்தான் அவள் வாங்கிவந்த "ட்ரஸ்' உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்று அவளுக்குப் புரியும்.

நான் மெய்யாகவே புகழ்ந்துதான் சொல்லுகிறேன்.. போனகிழமைகூட "நீ கிண்டிய கேசரி நல்லாகத்தான் இருக்குது" என்று புகழ்ந்தேன். 'கேக்குக்கும் கேசரிக்கும் வித்தியாசம் தெரியாதா?' என்று கோபித்துக் கொண்டாள்.

(6)ரொம்பக் கஞ்சத்தனம் வேண்டாமே. அவளுக்குக் தேவையானல எல்லாவற்றையும் நீங்களே வாங்கிக் கொடுத்துவிட்டால், அவளுக்குக் காசு செலவழிக்க வேண்டிய தேவை இல்லையல்லவா?

வேறை வழி?

(7)காசை வீணடிக்காதீர்- குடி, பீடி/சிகரட், 'படம்' போட்ட புத்தகம் என்று...

சான்ஸ்ஸே இல்லை

(8) ரொய்லட் மூடியை எப்போதும் மூடி வைத்திருக்கவும். உங்கள் மனைவி இது விசித்திரம் என்று நினைத்தால், உள்ளே உள்ள 'தண்ணீர்' தெரியாமல் இருப்பது அழகு என் விபரிக்கவும்.

இது புரியவே இல்லைங்கோ.

(9) உங்கள் உடைகளை நிலத்தில் வீசி எறியவேண்டாம். உடை மாற்றியதும் அழுக்கு உடைகளை அதற்குரிய 'லோண்டரி பாஸ்கற்' இனுள் போடவும்.

(10) பற்களை ஒழுங்காகத் துலக்கவும்.

(11) ஒழுங்காகக் குளிக்கவும்.

மேலே (9), (10), (11) - ஞாபகம் இருக்கும் குழந்தைப் பருவத்தில் இருந்ததே யாராவது சொல்லிக்கொண்டுதான் உள்ளார்கள். சின்ன வயசிலே (அதாவது கல்யாணம் கட்டமுதல்) அப்பா/அம்மா, இப்ப மனிசி. ஆனால் மனிசி ஒருக்கா மட்டும்தான் ஓ(ர்)டர் போட்டது சொன்னது. பிறகு திருப்பிச் சொல்லவேண்டிய தேவை வரவேயில்லை.

(12)குப்பைகளை வெளியே எடுத்துச் செல்லவும். அது உங்கள் வேலை, அவளுடையது அல்ல.

நீங்கள் சொல்லமுதலே-- சிட்னியிலே, இந்தச் சில்லுப் பூட்டிய குப்பை வாளிகளை (Wheelie Bins), தந்தைக் குலம்தான் வீதிக்கரைக்கு இழுத்துச் செல்லும். சிட்னியில் மட்டுமல்ல, முழு அவுஸ்திரேலியாவிலேயும் அப்படித்தான்..

(13) அவளிடம் கார் இருப்பின், சே(ர்)விஸ்ஸிற்கு நீங்கள்தான் எடுத்துச் செல்லவேண்டும். எப்போது அடுத்த சே(ர்)விஸ் வருகின்றது என்று நீங்கள்தான் ஞாபகம் வைத்திருக்கவேண்டும்.

மேலே (6) ஐப் பார்க்கவும்

(14) ரிவி'யில் என்ன பார்ப்பது என்று அவள்தான் முடிவெடுக்கவேண்டும். அவள் பார்க்கும் 'மெகா' சீரியலைப் பக்கத்தில் இருந்து முடியும்வரை பார்க்கவும். வெறுமனே தேமே'யென்று பார்த்தால் போதாது. 'சுவாரசியமாகப்' பார்க்கவேண்டும்.

மாட்டேன் போ!! நேற்றுத்தான் "மாற்றான்" பார்த்தேன்.

(15) உங்களுக்கான உடைகளையோ பாதணிகளையோ அவளே தேர்ந்தெடுக்கட்டும். எப்படியும் நீங்கள் தேர்ந்தெடுப்பதைவிட அவை நன்றாக இருக்கும்.

சொந்தமாக ஒரு விருப்பு/வெறுப்பும் இருக்ககூடாது என்கிறீர்கள். இதைத்தான் ஞானிகள் "பற்றற்றிரு" என்றார்கள்.

(16) (மிக முக்கியம்). எக்காரணம் கொண்டும் மனைவிமேல் கோபமாகவே வேண்டாம். ரொம்பச் சூடானால், உடனே வெளியே போய் காலாற நடக்கவும். சூடு இறங்கியபின் உள்ளே வரவும். வந்தவுடன் மனைவிக்கு ஐஸ் வைக்கவும்.

மேலே (2) இல் சொல்லியும் உங்களுக்குத் திருப்தி வரவில்லை. ம்ஹூம். ரொம்பச் 'சூடானால்' வெளியே துரத்தப்படுவீர். எனவே வெளியே கௌரவமாக நாங்களாகவே முதலில் போகச் சொல்லுகிறீர்கள் போல.

(17) மனைவியிடன் 'ஐ லவ் யூ' அடிக்கடி சொல்லவும். நிறைந்த மனத்துடன் சொல்லவும். நக்கல் கூடவே கூடாது.

ற்ம்ம்ம்ம்ம்ப முயற்சித்தேன். "இது நக்கலா? அல்லது கிண்டலா?" என்கிறாள்.

(18)உங்கள் மனைவி எதாவது ஒரு சிக்கலில் மாட்டுப்பட்டால், புரிந்துணர்வுடன் நடவுங்கள். குற்றம் சாட்டும் வேலை எல்லாம் வேண்டாமே.

குற்றம் சாட்டும் அளவிற்குத் துணிச்சல்?

(19) நீங்கள் சிக்கலில் மாட்டுப்பட வேண்டாம். அப்படி மாட்டுப்பட்டாலும் அவளையும் உதவிக்கு இழுக்காது நீங்களே தனித்துத் தீர்த்து வைக்கவேண்டும்.

முயற்சிக்கிறேன். மேலே (18) இல் இருக்கிற மாதிரி புரிந்துணர்வு கிடைக்குமா?

(20) (மிக முக்கியம்) அவள் உங்கள் வேலைக்காரி இல்லை. அவள் பேசும்போதெல்லாம் 'கப்சிப்' என்று கேட்கவேண்டியது உங்கள் வேலை. அவள் பேசும்போது குறுக்கிடவேண்டாம்.

ஏற்கெனவே அப்படித்தானே? அவள் பேச, நான் கேட்கமட்டும் முடியும். சின்னச் சந்தேகம். (1) இலிருந்து (20) வரை உள்ளதைப் பார்க்க 'நாமதான்' வேலைக்கா..... சரி சரி எனக்கேன் வம்பு?



---------------

Image from: http://www.cartoonfaces.net/2009/11/cartoon-picture-of-cute-little-dog-with.html

Sunday, August 26, 2012

சுவையான தேநீர் போடுவது எப்படி?

சீன மகாராஜா ஷெனொங் 'சுடுதண்ணி' குடித்துக்கொண்டிருந்தார். நிச்சயமாக அரண்மனையில் இல்லை. வெளியில் எங்கோ காட்டில் என்று வைத்துக் கொள்வோம். திடீரென்று குடித்துக் கொண்டிருந்த சுடுதண்ணி சுவையாக மாறியது. அதன் நிறமும் மாறிவிட்டது. மாண்புமிகு ஷெனொங் அவர்களுக்கு அளவுக்கு அதிகமாகக் கடவுள் நம்பிக்கை அல்லது பேய்,பிசாசு நம்பிக்கை இல்லைப் போல. தேத்தண்ணிப் பேணிக்குள்ளே மெதுவாகப் பார்வையை விட்டார். எங்கிருந்தோ மரத்தில் இருந்து உதிர்ந்து பேணிக்குள் விழுந்திருந்த இலைகளைக் கவனித்தார். வேறு பேர்வழிகள் எனில் உடனே கவிதை எழுதத் தொடங்கியிருப்பார்கள். மகாராஜா புத்திசாலி. ஆராய்ந்து பார்த்து அந்த இலைகள் எந்த மரத்தில் இருந்து உதிர்ந்தன என்று கண்டுபிடித்தார். இதுதான் தேநீர் பிறந்த வரலாறு.

நல்ல தேநீர் போடுவது ஒரு கலை. எல்லோராலும் ஏதோ ஒரு தேநீர் போடமுடியும். அல்லது தேத்தண்ணி ஊத்தமுடியும். ஆனால் ஒரு சிலரால்தான் 'சுவையான தேநீர்' தயாரிக்கமுடியும். தேநீர் போடுவதும் ஒருவிதத்தில் கவிதை எழுதுவது மாதிரித்தான். ஒரு பேப்பர் (இல்லாவிட்டால் ஒரு பஸ் ரிக்கட்டின் பின்புறம்), பேனை, யாரோ ஒருத்தியின் கண்வெட்டு- கவிதை ரெடி. தேயிலைத்தூள், சுடுதண்ணி, சீனி (சென்னையில் இதை ஏன் சர்க்கரை என்கிறார்கள்?), பால் மா (பவுடர்) அல்லது பால், இரண்டொரு பேணிகள் - தேநீர் ரெடி.

மீண்டும் நல்ல தேநீர் போடுவது. அது எல்லாருக்கும் வராது. அந்தக் கைமணம் ஒரு சிலருக்குத்தான் வரும். நானும் வாழ்க்கையில் எதோ ஒரு புள்ளியில் இந்த நல்ல தேநீர் போடும் கலையில் தேர்ந்துவிட்டேன். பேராதனைப் ப.க. இல் படிக்கும்போது என் தேநீர் அக்பர் ஹோல் இல் என் 'பாட்ச்' மாணவரிடையே பிரபலம். தேநீர் வாசம் ஹோல் விறாந்தை வழியே பரவிச் செல்ல பக்கத்து அறை மோகன், ராம், சந்திரன், சாஸ்திரிகள், ஆனந்தன் எல்லாம் திடீரென்று ஆனையிறவுத் தாக்குதல், பால்ராஜ், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், தங்களின் முதற் காதல்கள் பற்றி டிஸ்கஸ் பண்ண அறைக்கு வருவாங்கள். பிறகு என்ன ரண்டு தேத்தண்ணி ஊத்த வெளிக்கிட்ட நான் பதினைஞ்சு இருவது தேத்தண்ணி ஊத்த வேண்டி வரும்.

எல்லாரும் கதைகளுக்கிடையே, "மச்சான் உன்ரை தேத்தண்ணி சுப்பர்" என்று சொல்லுவாங்கள். நக்கலாகச் சொல்வது மாதிரி எனக்கு இருக்கவில்லை.

சாம்பிள்க் கதைகள் இப்படித்தான் இருக்கும்.

மோகன்: மச்சான் இளையராஜா மாதிரி இனி ஒருவன் மியூசிக் போடமுடியாது.
குமார்: இளையராஜாவுக்கும் அவற்றை ரசிகருக்கும் வயசு போட்டுது. இப்ப ரகுமான்தான் காய்.

சாஸ்திரி: மச்சான் சக்தி, இன்னொரு தேத்தண்ணி போடு. நீ போட்டாத்தான் மச்சான் அது தேத்தண்ணி மாதிரி இருக்கும்.

மோகன்:(சூடாக)எவன்டா இளையராஜாவைக் குறைச்சுக் கதைக்கிறது?

சந்திரன்: மக்கள்! இப்ப நாங்கள் சக்தியின்ரை தேத்தண்ணியைப் பற்றிக் கதைப்பம்...

இப்படிச் சூடான தேத்தண்ணியைக் குடித்துக் குடித்துக் கதைக்கும் கதைகள் பிறகு, சூடாகப் போய் அச்சில் என்ன? இணையத்திலேயே ஏற்ற முடியாதளவுக்குப் போய்விடும்.

**************************

தேநீர் போடுவதில் ஒரு சின்ன ரெக்னீக் இருக்கிறது. கனபேர் இதில்தான் கோட்டை விடுவார்கள். தண்ணீரை நன்றாகச் சூடாக்கி, தேயிலைத் தூளை teapot இல் போட்டு தேயிலை சாயம் நன்றாக ஊறுமட்டும் காத்திருக்கவேண்டும். அவசரம் கூடாது. சாயம் நன்றாக ஊறியபின் அதையும் பாலையும் கொஞ்சம் கொஞ்சமாகக் கலக்கவேண்டும். பிறகு அளவாகச் சீனியைக் கலந்தால் "சுவையான தேநீர்" ரெடி.

இன்னொரு விஷயமும் இருக்குது. இதைத்தான் 'மா(ர்)க்கற்றிங்' என்பது. நீங்கள் போடும் தேநீரை நீங்களே நல்லது என்று சொல்லிக்கொண்டு திரியவேண்டும். நீங்களே நல்லது என்று சொல்லாவிட்டால் மற்றவர்கள் எப்படி நல்லது என்று ஒப்புக்கொள்வார்கள்? இது மட்டுமில்லை, யாராவது மற்றவர்கள் போட்ட தேநீரை நல்லது என்று ஒப்புக்கொள்ளவே கூடாது. அப்படி உண்மையிலேயே நன்றாக இருந்தாலும் நீங்கள் சொல்லவேண்டியது "ரீ நல்லாகத்தானிருக்குது, ஆனால் இதில் ஏதோவொன்று குறையுது." கேட்பவரும் ஏதோ ஒன்று குறையுது என்று நம்பத் தொடங்கிவிடுவார்.

எச்சரிக்கை : நான் சொன்னது எதுவும் ஓசித் தேத்தண்ணிக்குப் பொருந்தாது.ஓசித் தேத்தண்ணி எப்பவுமே சுப்பர் (அல்லது சூப்பர்)!!
**************************

நான் கல்யாணம் கட்டிப் 10, 12 வருஷமாகின்றது. காலை எழுந்து பல்லு விளக்கமுன் இரண்டு தேநீர்கள் போடுவேன். ஒன்று எனக்கு, மற்றது மனைவிக்கு. மழை,வெயில், குளிர் என்று காலநிலை மாறினாலும் இது மாறாது. ஆனாலும் இனியும் தேநீர் போட வேண்டுமா என்று நீங்கள்தான் சொல்லவேண்டும். அதுக்குக் காரணம். மனைவியின் டயறி. மனைவியின் டயறி என்றாலும் படித்துப் பார்க்காதே என்பார்கள். எனக்கு இந்த ஜென்ரில்மன் குணவியல்பு எல்லாம் இல்லை. அண்மையில்தான் வாசித்தேன். இது நான் கல்யாணம் கட்டிக் கொஞ்ச நாட்களில் எழுதியிருந்தது.

22-04-2000

அசடு இன்றைக்குக் காலை இரண்டு கப் தேநீர்களுடன் வந்துது.
"என்ன?", என்றேன். தான் தேத்தண்ணி போடுவதில் விண்ணன் என்று ஒரு அரை மணித்தியாலம் கிளாஸ் எடுத்துது.

குடித்துப் பார்த்தேன். வாழ்க்கையில் இதுமாதிரி ஒரு மோசமான ஒரு தேத்தண்ணியைக் குடித்ததில்லை. ஒரு மாதிரிச் சகித்துக் கொண்டு குடித்தேன்.

"ரீ எப்படீருக்கு?" என்று இன்னும் அசடு வழிந்தது.

"சுப்பர் ரீ'யப்பா!" என்றேன்.


Sunday, April 8, 2012

கலைமகள் தேநீர்ச்சாலை

- இது தமிழ் உயிர் எழுத்துக்களில், நான்காமெழுத்தாகும். ஈ என்ற எழுத்திற் தொடங்கும் திருக்குறள்கள் எட்டு உண்டு. ஈ என்பது 'அசுத்தமான இடங்களில் இருக்கின்ற ஒருவகைப் பூச்சி, வண்டு, அழிவு, தேனீ, அம்பு, அரைநாள், பாம்பு, கொடு" என்பவற்றில் ஒன்றைக் குறிக்கும் என்று தமிழ் விக்சனறி கூறுகிறது. ஈ என்பது இலங்கைப் பேச்சு வழக்கில் இலையான் எனப்படும். தமிழ்நாட்டிலும் 'இலையான்' என்ற சொல் பாவனையில் உண்டா என அறிந்தவர்கள் கூறவும்.

மதிப்புக்குரிய எழுத்தாளர் அ.முத்துலிங்கம் ஐயாவிற்கு எங்கு ஈயோட்ட வேண்டிய தேவை இருந்ததோ தெரியவில்லை.

"அப்பொழுது பார்த்து ஜிவ்வென்று இலையான் ஒன்று பறந்து வந்து அவளையே சுற்றியது. தானாகவே பிரகாசம் வீசும் பச்சை இலையான். உருண்டைக் கண்கள். தோள் மூட்டில் இருக்க முயற்சித்த போது உதறினாள். நான் பொறுக்க முடியாமல் கையை வீசினேன். .."

என்று "மஹாராஜாவின் ரயில் வண்டி" சிறுகதையில் எழுதுகிறார்.

அ.மு. ஐயாவின் நுணுக்கமான அவதானிப்புக்களுக்கும் வர்ணனைகளுக்கும் நிறைய ரசிகர்கள். ஆனால் "கலைமகள் தேநீர்ச்சாலை" உரிமையாளர் திருவடிவேல் ஈககளைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தபோது தானும் 'ஈ' விடயத்திலாவது அ.மு ஐயா மாதிரி நுணுக்கமான அவதானிப்புள்ளவர் என்று சிலாகித்துக் கொண்டார்.
காலை 11 மணி. கடைதிறந்த நேரத்தில் இருந்து தனியாக 'ரீ' ஆத்தி ஆத்தித் தோள்மூட்டுக்களில் வலி. கடைவாசலில் ஒரு கண்ணை வைத்துக் கொண்டு, 'எனக்கு கஸ்டமர்களின் எண்ணிக்கை முக்கியமில்லை, தரம் தெரிந்த வாடிக்கையாளர்தான் முக்கியம்' என்று மனதிற்குள் பீலா விட்டுக் கொண்டிருந்தார்.

தூரத்தில் யாரோ மூவர் வருவது தெரிந்தது. 'யாரோ வழிதவறிய அப்பாவிகள் வருகிறார்கள் போல... ' என்று யோசித்துக்கொண்டார்.

கேஜே: அண்ணே மூண்டு காப்பி போடுங்க.

திரு: தம்பி வாங்கோ வாங்கோ.., ஊர் எது? உங்கடை மொழிதான் கொஞ்சம் இடிக்குது. இதேன் இந்தத் தொப்பியைப் பின்பக்கமாகப் போட்டிருக்கிறீர்?

கேஜே: (மனதிற்குள் 'ஒரு ரீ குடிக்க வந்தால் ஒரே இம்சை, இந்த ஆள் ஈயோட்டுவதற்கு இதுதான் காரணம், காப்பியோ கோப்பியோ கேட்டால் தரவேண்டியதுதானே?') ரவுண் பக்கந்தான். எங்கடை வீட்டில 'காப்பி' எண்டுதான் சொல்லுவம். கோப்பி என்று சொல்லுறதில்லை.

கேதீஸ்: அண்ணை, கேஜே சொல்லுறது சரி.

திரு: தம்பிமார், கடை போ(ர்)ட்டை வடிவாகப் பாருங்கோ.

எல்லோரும் குழம்பிப்போய் இருக்க, வாலி வாயைத் திறக்கிறார். "கலைமகள் தேநீர்ச்சாலை" நல்ல வடிவான பெயர். நான் "தேநீர்ச்சாலை" எண்டு ஒரு கவிதையே எழுதியிருக்கிறன்.

திரு:ஆங், நான் கடை போ(ர்)ட்டிலை இருக்கிறமாதிரி தேத்தண்ணி மட்டும்தான் போடுவன். மூண்டு ரீ போடட்டே? இல்லாட்டி 'கிரூபன் காப்பி/டீ ஸ்டால்' தான் போகோணும்.

வாலி: (வேண்டாவெறுப்பாக) "சரி, சரி போடுங்கோ.."

கேஜே: அண்ணே சொல்லுறன் எண்டு குறை நினைக்காதேங்கோ, 'ரீ, மசாலா ரீ, சாயா, காப்பி, கப்புச்சினோ, லாற்றே' எண்டு வகை வகையாக மார்(க்)கற் பண்ணினால்தான் ஆக்கள் வருவினம்.

வாலி: ரீ போடுவது ஒரு தவம். அதுக்கொரு டெடிக்கேஷன் வேணும்.

கேஜே: இது விசர்க்கதை, 'ஜஸ்ட் லைக்' போடுவதுதான் ரீ. அதுக்கொரு கைமணம் வேணும், அது பிறவியிலைதான் வரும்.

வாலி: பிறவித் திறமை உள்ளவனும் தவம் மாதிரி டெடிக்கேஷன் உடன் ஊத்தினால் வருவது தேவலோகத்துத் தேநீர்! நான் ஒரு கவிதை ....

திரு: மன்னிக்கோணும், எனக்குக் கவிதை விளங்காது.

வாலி: அண்ணே பொய் சொல்லுறியள், ரீ போடுற உங்களுக்கு கவிதை விளங்காதா?

கேதீஸ்: அண்ணை, கேஜே சொல்லுறது சரி; 'ஜஸ்ட் லைக்' போடுவதுதான் ரீ

திரு: (மனதிற்குள், இவங்கள் என்னைவிட இம்சை பண்ணுறாங்கள்). கேஜே நீர் ரீ'யையும் 'கோப்பி'யையும் கலந்து ஏதோ ஒரு புதுப் பானம் தயாரிக்கிறீராமே?

கேஜே: ஓமண்ணே, நல்ல சுவை. 'காப்பிப்' பிரியர்களுக்கும் பிடிச்சிருக்கு. 'டீ'ப் பிரியர்களுக்கும் பிடிச்சிருக்கு. ஆரோ ஆடிவேல் எண்டு ஒரு கோணங்கி மட்டும் குறை சொல்லுது.

**************************

இப்போது, தோளில் ஜோல்னாப்பை ,முகத்தில் ஒருவாரத் தாடியுடன் ஒருவர் கடைக்குள் நுளைகிறார். பையை எடுத்து மேசையில் வைக்கிறார். பையில் இருந்து பெயின்ற் பிரஷ்களும் போட்டோக்களும் எட்டிப் பார்க்கின்றன.

ஆள்: திறுவேள், ஒரு தோத்தண்ணி போடும்.

திரு: ஆங் வரணியண்ணே, கனகாலம் இஞ்சால காணல்லை.

வரணி: (உன்ரை தோத்தண்ணியை நான் சகிச்சுக் கொல்லவேணும், பிரகு ஒவ்வொறு நாளும் வறோணூம்) இந்தப் பெயின்ரிங் வேலை கனக்க இருக்குது. பிறகு உலையங்குளத்திலையும் வேலை இருக்குது.

திரு: அண்ணே, ஊரில ஒரு ரீ'க் கடை போட்டீங்களாமே?

வரணி :(சூடாகிறார்) தம்பி, அதைப்பற்றிக் கதைக்கக் கூடாது தெரியுதே? அங்கை பார் 'சும்மா தேநீர்ச்சாலை' ஜயந்தன் வாறார்.

ஜயந்: ஐயா, உங்கடை கடைக்கு இப்படி ஏன் பெயர் வந்தது? தூய தமிழ்பெயர் வைக்கச் சொல்லி ஓடர் வந்ததே?

திரு: சீச் சீ, எனக்குத் தமிழ்ப் பற்று

கனகு: சும்மா கதை அளக்காதேயும். 'தமன்னா டீ ஸ்டால்' என்று பெயர் வைக்க 'மேலிடம்' பெமிசன் தரல்லை. பிறகு கடுப்பில இப்படிப் பேர் வைச்சனீர்.

திரு: (இந்தாள் எப்ப வந்தது? உள் வீட்டு வேலையை எல்லாம் லீக் பண்ணுது) கனகண்ணே ரீ போடட்டுமே? ரீ இருக்கட்டும், 1995 இலே சந்திக் கடையில கொத்துரொட்டி திண்ட உங்கடை சோகக் கதையைச் சொல்லுங்கோ.

கனகு: (இவன் ஆப்பு வைக்கிறான்) சரி சரி அவசர வேலை இருக்குப் பிறகு வரவே?

**************************

கேஜே: அண்ணே, நாங்கள் போய் வரட்டே, ரீ நல்லாக இருந்துது. ஒரு சின்னச் சந்தேகம்.

திரு: சொல்லுங்கோ

கேஜே: நீங்கள் போடுற ரீ'யை உங்கடை பிள்ளையள் குடிப்பாங்களே?

இவ்வளவு நேரமும் கூலாக இருந்த திருவடிவேல் ரென்ஷன் ஆகிறார். விடு விடுவென்று தேநீர் தயாரிக்குமிடத்திற்கு நடந்தார். பெரிய பாத்திரத்திற் தயாரித்து இருந்த தேநீரைக் கவிழ்த்து தொட்டியினுள் ஊற்றினார். "நாளையிலிருந்து கடை பூட்டு" என்று கத்தினார்.

எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு இலையான் பட்டாளம் ஊற்றப்பட்ட தேநீரை மொய்த்தது. தன் முயற்சியிற் சற்றும் தளராத விக்கிரமன்போல் அவற்றை விரட்டத் தொடங்கினார் திருவடிவேல்.

Thursday, July 7, 2011

வந்தியத்தேவனின் காதல் தோல்வி அல்லது சோழர் காலத் தூய நட்பு

முன்னுரை

ஆறாம் வகுப்போ அல்லது ஏழாம் வகுப்போ படிக்கும்போது இரவு-பகலாக பசி-தூக்கமில்லாது தொடர்ந்து வாசித்து முடித்த "பொன்னியின் செல்வன்"ஐ மீண்டும் வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போதிருந்த பிரமிப்பு இப்பவும் கிட்டத்தட்ட அதேயளவு இருக்கிறது.

என்றாலும், அமரர் கல்கி அவர்கள் பாத்திரங்களைக் கொஞ்சம் "இலட்சியப்" படுத்திவிட்டார் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம் . எனவே நான் கொஞ்சம் அச்சுப்பிச்சுத்தனமாக "யதார்த்தப்" படுத்திப் பார்த்தேன்.

உசாத்துணை:

பொன்னியின் செல்வன்

**************************************


வந்தியத்தேவன் குழம்பிப் போயிருந்தான். மணிமேகலை கொஞ்சநாட்களாக அவன் அனுப்பிய காதல் ஓலைகளுக்குப் பதிலனுப்புவதிலை. ஓலைகளைக் கொண்டுபோய்ச் சேர்க்கும் சிறுவன் குஞ்சமல்லனும் இப்போது "ஓலைகாவுதல்" வேலைகளில் சுவாரசியம் காட்டுவதில்லை. "ஓலையைக் கொடுத்தால், முன்பு சம்பளமாக கற்கண்டுகள் கொடுப்பாள் மணிமேகலை அக்கா, இப்ப என் கன்னத்தில் கிள்ளல்களை மட்டும்தான் கொடுக்கிறாள்" என்கிறான்.

வந்தியத்தேவனின் நண்பன் கந்தமாறன். அவன் தங்கைதான் மணிமேகலை. அவன் காதலுக்கு கந்தமாறனின் மறைமுக ஆதரவும் இருந்தது. உடனே நீங்கள் "ஆஹா, எல்லா அண்ணன்மாரும் இப்படியிருந்தால் நல்லதல்லவா!" என்று பெருமூச்சு விடுவதும் கேட்கிறது. உங்கள் பெருமூச்சு வீரநாராயண ஏரியின் கரையில் குறுக்கும் நெடுக்கும் தன குதிரையில் பயணித்துக்கொண்டிருந்த வந்தியத்தேவனுக்குக் கேட்கமாட்டாதுதான். கேட்டாலும் குழம்பியிருந்த அவன் மனம் தெளியவா போகிறது?

போனமுறை, திருப்பனங்காட்டிலிருந்து வரவழைத்த அழகான, விலையுயர்ந்த, நன்கு பதப்படுத்திய ஓலையில், வேலை மினக்கெட்டு அழகான கையெழுத்தில் சிரமப்பட்டுக் காதல் மடல் வரைந்திருந்தான். அதற்கும் பதில் வரவில்லை. ஓலையில் அடியில் இரண்டு "இதயப்" படங்களை கிட்டக்கிட்ட வரைந்து, அவையிரண்டையும் ஒரு ஈட்டி துளைப்பது போலெல்லாம் வரைந்திருந்தான். ( கிரேக்க குதிரை வியாபாரி சொல்லிக் கொடுத்த யோசனையிது)

வந்தியத்தேவனின் குதிரையும் மூச்சு வாங்கத் தொடங்கியது. "கிழட்டுக் குதிரை" என்று அவன் திட்டிக் கொண்டிருக்க, எதிரில் ஒரு ஆஜானுபாவன் உருவம் ஒரு பெரிய முரட்டுக் குதிரையில் வந்து கொண்டிருப்பதைக் கண்டான். அவன் கண்கள் அந்தக் குதிரையைச் சற்றுப் பொறாமையுடன் நோக்கின. நல்ல கருநிறப் புரவி. இவனின் குதிரையைவிட அரை மடங்கு உயரம் அதிகமாக இருந்தது. "அதில் ஏறியிருந்தாலே ஒரு கம்பீரம்தான்" என்று சொல்லிக் கொண்டான். "இந்த மாதிரிப் பெரியபுரவி வைத்திருப்பவன் நிறையப் பொன் வைத்திருப்பவனாகத்தான் இருக்கவேண்டும். அத்தோடு இந்தக் குதிரைக்கு கொள்ளு வாங்கவும் இருமடங்கு பொன் தேவைப்படும்" மனம் முணுமுணுத்தது.

முரட்டுக் குதிரைக்காரன் கிட்ட வரத்தொடங்கவும் வந்தியத்தேவனின் கை குறுவாளை இறுகப் பற்றியது. சாலையிலிருந்து சற்று விலகி நின்று, வந்த உருவத்தை உற்று நோக்கினான். அருண்மொழிவர்மனின் மதிப்பிற்குரிய ஒற்றனின் விழிகளுக்கு அவன் யாரென்பது கணநேரத்தில் புரிந்துவிட்டது. இளவரசன் மதுராந்தகன்! அவன் சம்புவரையரின் கடம்பூர் மாளிகைக்கு போய்க்கொண்டிருக்க வேண்டும். சம்புவரையர் மணிமேகலையின் தந்தை.

அவன் அடிக்கடி சம்புவரையரின் மாளிகைக்கு போய் வருவது வந்தியத்தேவனிற்குப் பிடிக்கவில்லை. அத்தோடு போனமுறை அவன் சம்புவரையரின் மாளிகைக்கு போனபோது ஒரு அழகிய முத்துச்சரமும், சில வளையல்களும் எடுத்துச் சென்றதும் வந்தியத்தேவனின் காதுகளிற்கு எட்டாமல் போகுமா?

"அவர்கள் சந்திப்பது இராஜ காரியத்திற்கு, எனக்கு இதற்குமேல் தெரியாது," என்று கந்தமாறன் சொல்லியதையும் அவன் நம்பவில்லை.

**************************************

"வீரநாராயணன் மோர்க்குடில்" சம்புவரையரின் கடம்பூர் மாளிகைக்கு அதிக தூரத்தில் இல்லை. எப்பவும் அங்கு இளவட்டங்களின் சத்தம் , கும்மாளம் கேட்டுக் கொண்டிருக்கும். வயதானவர்கள் "காலம் கெட்டுப் போய் விட்டது" என்று சொல்லி அங்கு வருவது குறைவு. கால் முட்டி மோரை வாங்கிப் பத்து நாழிகைகள் செலவழித்து அதி மெதுவாகக் குடிக்கும் கலையை இளைஞர்கள் அல்லது யுவதிகளால்தான் செய்ய முடியும். அதுவும் தங்கள் மனங் கவர்ந்தவர்களுடன் வந்த இளைஞர்களைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. மோர்க்குடிலின் பின்புறம் இரகசியமாக, அரசனின் அனுமதியின்றிச் சோமபானமும் விற்கப்படுவதாகப் பேசிக் கொள்கிறார்கள்.

இங்குதான் வந்தியத்தேவன் மணிமேகலையை நீண்ட முயற்சிகளுக்குப் பிறகு சந்திக்கின்றான்.

"மணிமேகலை," வந்தியத்தேவன் காதல் உணர்ச்சியுடன் அழைத்தான்.

"என்ன?" பதில் கொஞ்சம் சூடாக வந்தது.

"நீ, ஏன் நான் அனுப்பிய மடல்களுக்குப் பதில் அனுப்பவில்லை"

"நேரம் கிடைக்கவில்லை," அவன் கண்களைப் பார்க்காமல் பதில் கூறினாள்.

"ஓ அதுதானா நான் வேறு ஏதோவென்று பயந்து விட்டேன் !"

"ஏதோவென்று?"

"இல்லை அடிக்கடி அந்த மதுராந்தகன் உன் மாளிகைக்கு வந்து போகின்றான்.."

"அதுக்கென்ன?"

"இல்லை, உன் தந்தை அவனை உனக்கு மணம் முடித்து வைக்கப் போகிறார் என்று பயந்து விட்டேன்"

"அவரைத்தான் நான் மணக்கப் போகின்றேன்", அவள் முகத்திலிருந்தது நாணமா அல்லது அச்சமா என்று தெரியவில்லை.

அதிர்ச்சியடைந்த வந்தியத்தேவன் தன்னிலையடையச் சில நிமிடங்கள் எடுத்தது. "மணிமேகலை, யாது சொல்லுகின்றாய்" என்றான்.

"ஏன் உங்களுக்குக் காது கேட்காதா? நான் இளவரசர் மதுராந்தகரை மணக்கப் போகின்றேன் என்று சொன்னேன்," சற்று உரக்கக் கூறினாள்.

"அப்போது நாங்கள் காதலித்தது?"

"காதலித்தது? நீங்கள் அப்படி யோசித்தால் நான் என்ன செய்வது? என்னைப் பொறுத்தவரையில் எமக்கிடையே இருந்தது தூய நட்புத்தான்!"

"புரிகிறது மணிமேகலை, அவன் இளவரசன். நான் ஒருகாலத்தில் நன்றாக இருந்து கெட்ட வாணர் குலத்தவன். நீ என்னை மெதுவாக நீக்க விழைகிறாய்"

"வல்லவரையரே, தங்களுக்கு நட்பென்றால் என்னவென்று புரியாது. நான் போய்வருகிறேன். சொல்ல மறந்துபோய் விட்டேன். இந்த ஓலை அனுப்புதல் வேலைகளையெல்லாம் இனி வைத்துக் கொள்ளாதீர்கள், மதுராந்தகருக்குப் பிடிக்காது" வந்தியத்தேவனின் கண்களை ஊடுருவிப் பார்த்துச் சொன்னாள். பிறகு மென்மையாக, மிக மென்மையாக, தனக்கு மட்டும் கேட்கக் கூடிய குரலில், "என் நிலைமை தங்களுக்குப் புரியாது" என்றாள்.

அதற்குப் பிறகு முட்டி முட்டியாகச் சோமபானம் அருந்தியதுதான் வந்தியத்தேவனின் ஞாபகத்தில் இருந்தது.

மணிமேகலை தன் முதல் ஆண் குழந்தைக்கு வந்தியக்குமாரன் என்று பெயர் வைத்தது வந்தியத்தேவனுக்குக் கனகாலம் பிறகுதான் தெரிய வந்தது.


--------------

1 நாழிகை = 24 நிமிடம்
கால் முட்டி = கால்வாசி முட்டி = 1/4 முட்டி

படங்கள் : http://www.eegarai.net/t50562-topic இலிருந்து