Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Tuesday, April 16, 2013

முடியுடை நம்பி அல்லது ஒரு சோக்கான காதல் கதை

"தணியன் சிவலிங்கம்" என்று ஒருவரை முகநூலிற் சந்தித்திருப்பீர்கள். இல்லாவிட்டாலும் அவர் புகைப்படத்தையாவது பார்த்திருப்பீர்கள். பிடரிவரை சிலிர்த்து நிற்கும் முடியுடன் "நான் சிங்கம்டா, சிங்கம்" என்று ஒரு அலட்சியப் பார்வையுடன், கமராவை ஒரு சாய்வாகப் பார்த்துக் கொண்டிருப்பார். அவர் கூந்தல் அழகு பெண்களையே பொறாமைப்பட வைக்கும், முக்கியமாக முப்பத்தைந்தைக் கடந்து , கூந்தல் அடர்த்தி குறைய -ஸ்ரயில் என்று என்றொரு மொக்கைக் காரணத்தைக் கண்டுபிடித்து -முடியைக் குட்டையாக்கிக் கொண்டு திரியும் பெண்களின் வயிறு பற்றி எரியும். நல்லகாலமாக அவர் என்னைச் சந்திக்கவில்லை , அத்தோடு நான் முகநூலில் என் உண்மையான போட்டோவைப் போடவுமில்லை.

என் தலைமுடி காடுபோல் அடர்ந்து வளர்ந்திருக்கும், அத்தோடு தோள்ப்பட்டைக்கும் கீழே வளர்த்து- மெதுவாக ஓடும் ஆறு போல் வழிய விட்டிருப்பேன். வேலைக்குப் போகும்போது மட்டும் இரண்டு ரப்பர் பாண்ட் களால் தலைமுடியை முடிந்து ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பேன். த.சிவலிங்கத்தையே பொறாமைப்பட வைக்கிறமாதிரி ஒரு போட்டோ முகநூலிற் போடவென்று எடுத்து வைத்துள்ளேன். "ஐயோ பப்ளிக்கில போடாதேயுங்கப்பா நாவூறு, கண்ணூறு பட்டிடும்" என்கிறாள் சுகந்தி. அவளுக்கு வேறு பயமோ தெரியவில்லை. இவளை நான் சந்தித்ததே என் நீண்ட 'கூந்தலாலே' தான்.

இது நடந்தபோது கிபிர், புக்காரா குண்டுகள் விழத்தொடங்கவில்லை. பல்குழல் எறிகணைகளும் வரவில்லை. சாதா ஷெல், பீரங்கிக்குண்டுகள், ஹெலிச் சூடு என்றிருந்த பழைய யாழ்ப்பாணம். மதில் சுவர்கள் இயக்க நோட்டீசுகளால் நிறைந்திருக்கும். இன்னும் இருவது இருவத்தைந்து ஆண்டுகள் கழித்து 'நான் குழந்தைப் போராளி' என்று இலக்கியம் எழுதப்போகிற சிலர் இரவுகளில் பசை வாளிகள், பிரஷ், நோட்டிஸ் என்று பிசியாக இருந்த காலம். பல்வேறு "ஐக்கிய" விளையாட்டுக் கழகங்கள் மின்னொளியில் வொலிபோல் விளையாடிக் கொண்டிருந்த, மின்சாரம் இருந்த பழைய யாழ்ப்பாணம்.

அக்காலத்திலே மழையும் பெய்யாத, வெயிலும் கடுமையாக எறிக்காத ஒரு நாளில், நான் என்பாட்டுக்கு எதோ ஒரு ரியூசன் சென்ரருக்கு முன்னாலே நடந்து போய்க் கொண்டிருந்தேனாம். முதல் நாள்தான் பியோர் மத்ஸ் வாத்தியார் என்னை வாங்கு வாங்கு என்று வாங்கியிருந்தார். "டேய் உனக்கு மண்டைக்கு வெளியிலை இருகிறமாதிரி மண்டைக்குள்ள ஒண்டும் இல்லை. ஏண்டா என்ரை உயிரை வாங்குகிறாய்?" என. எனக்கு மனசு சரியில்லை. ரோட்டுக்கு இந்தப் பக்க வேலியில் நின்ற ஓணானுக்கு ஏதோ பிரச்சினைபோல. தலையை ஆட்டுவதை நிறுத்திவிட்டு என்னைப் பார்த்துக் கொண்டு நின்றது. காலை ஓங்கி நிலத்தில் குத்தினேன். ஓணான் அலட்டிக்கொள்ளாமல் மெதுவாக நகர்ந்து சென்றது.


"எடி இஞ்சை பாரடி இதை!" என்று ஒரு பெண்குரல் சிந்தனையைக் குழப்பியது.
"என்னத்தை?"
"முன்னுக்கு ஒரு ஆசாமி பெண்டுகள் மாதிரி நீளமாக மயிர் வளர்த்துக் கொண்டு போகுது; ஒரு ஒற்றை ரோசாப்பூவை தலையில் வைத்தால் இன்னும் நல்லாயிருக்கும்".

பிறகு ஒரு நாலைந்து பெட்டையள் "களுக்" என்றோ 'ஈ ஈ " என்றோ சிரித்துக் கேட்டது.

எனக்குச் சுலபமாகக் கோபம் வராது, என்றாலும் இப்படிப் நாலைந்து பெட்டையள் நக்கல் விட்டால் ஆருக்குத்தான் கோபம் வராமல் விடும்? திரும்பி ஒரு கடு கடுப் பார்வையை விட்டேன். எல்லாரும் பயந்து போனாளையள். ஒருத்தி மட்டும் பயப்படாமல் 'நான் பனக்காட்டு நரி' என்றமாதிரி ஒரு பார்வையுடன் நின்று கொண்டிருந்தாள். எனக்கு விளங்கீட்டுது, இவள்தான் இந்த நக்கல்காரி என. ஆள் ஊருக்குப் புதுசு. ஆமிப்பிரச்சினை என்று குடும்பத்தோடு இடம்பெயர்ந்து ஊரில் வசிக்கிறாள்.

"ஏலுமெண்டா என்னை மாதிரி வடிவாக நீளமாக முடி வளர்த்துக் காட்டும், நான் ஒற்றை ரோசாப்பூ என்ன ஒரு கிலோ ரோசாப்புவையே உமக்கு வைக்கிறேன்" என்றேன். கொஞ்சம் வெட்கப்பட்டுக் கன்னம் சிவப்பாள் என்று பார்த்தால் ஒரு முறைப்பை மட்டும் எறிந்தாள். அப்பவெல்லாம் நான் அதிகம் தமிழ்ப் படங்களைப் பார்ப்பேன். அதன் விளைவோ தெரியவில்லை, அடுத்து இவளோடு 'லா லா' என்று பாடிக் கொண்டு திரியிறமாதிரி கனவுகளும் வரத் தொடங்கியது. பிறகு அழுக்கும் கறளுமாக இருந்த என் சைக்கிளை தேங்காயெண்ணெய் மண்ணெண்ணெய் எல்லாம் போட்டுப் பொலிஷ் பண்ணினேன். தலைக்கு மட்டும் இதுநாள் வரை போட்டுக் கொண்டிருந்த நல்லெண்ணையை நிறுத்தினேன். சேட்டு மட்டுமில்லை , சாரத்தையும் அயர்ன் பண்ணி அணியத் தொடங்கினேன்.

பிறகென்ன அந்தக் கால யாழ்ப்பாணக் காவாலிகளின் வரைவிலக்கணப்படி 'சைக்கிளில் பின்னுக்குச் சுத்தினேன் , பிறகு ஒருநாள் காய்ச்சல் என்று வீட்டில் ஓய்வெடுக்கும்போது "என் ஒற்றை ரோசாப்பூவே, செல்லமே அதுவே இதுவே .. " என்று கன்னா பின்னா என்று ஒரு கடுதாசியை எழுதினேன். தனியாகக் கொண்டுபோய்த் குடுக்கத் தைரியம் இல்லை. "டேய் எனக்குப் பயமாக் கிடக்குது, நீயும் வாடா" என்று விக்கியைக் கேட்டேன். கனக்கப் பிகு பண்ணினான். அச்சுவேலி ராஜா கபே'யில் ரோல்ஸ் உம் வடையும் பிளேன் ரீ'யும் வாங்கித் தருவதாக ஆசை காட்டிச் சரிப் பண்ணினேன். ஒருநாள் இரண்டு பேரும் சைக்கிளில் வெளிக்கிட்டு சின்ன வாசிகைசாலையைத் தாண்டி புளியமரச் சந்திக்குக் கிட்ட வந்தாச்சு. அப்ப பார்த்தால் எதிர்பார்த்தமாதிரி இவள் சுகந்தி ரியூசன் முடிந்து வந்து கொண்டிருந்தாள். பக்கத்திலே வழமையாக வருகிற தோழியரைக் காணவில்லை. சேட்டுப் பொக்கற்றுக்குள் கடதாசி, வெளியே எடுக்க முடியவில்லை. கை நடுங்கியது. தொண்டை உலர்ந்தது. இவன் விக்கியைப் பார்த்தேன். ஆள் என்னைவிடப் பயந்துபோனான். "டேய் எனக்கு வயத்தைக் கலக்குது, நான் வீட்டை போப்போறன்" என்றுவிட்டுப் பதிலை எதிர்பார்க்காமல் சைக்கிளைத் திருப்பிக்கொண்டு போய்விட்டான்.

"சரி இதுவும் நல்லதுக்குத்தான், 'கடுதாசு கொடுக்கிறது' மாதிரி சரித்திரப் பிரசித்தி வாய்ந்த சம்பவங்களுக்குச் சாட்சி வைத்துக்கொண்டா செய்வார்கள்?" என்று யோசித்துக் கொண்டேன். கொஞ்சக் காலத்துக்கு முன் ரூட் கிளியர் ஆக்கிய சேந்தன் அண்ணா எல்லாம் என்னை விடப் பயந்தாங்கொள்ளி, நான் மட்டும் என்ன குறைவா? என்று துணிச்சலை வரவழைச்சுக் கொண்டு "இந்தா பிடியும், உமக்கொரு கடதாசி வந்திருக்குது" என்று அவசரமாக நாலாக மடித்து வைத்திருந்த அதைக் கொடுத்தேன்.

"எப்பங்காணும் தபால்காரன் வேலை பாக்கத் தொடங்கின்னீர்?" என்று கண்களை நேரில் பார்த்துக் கொண்டு கேட்டாள். என்றாலும் 'தபாலை' வாங்கத் தயங்கவில்லை.

அந்த இடத்திலேயே வைத்து வாசித்தாள் , பிறகு "கிலோக் கணக்கில் இருந்து இப்ப ஒற்றை ரோசாப் பூவாச்சு, சரியான கஞ்சன் நீர்" என்றாள். பிறகென்ன...?

வீட்டை வந்தாப் பிறகு அக்கா மட்டும் "ஏன்டா இண்டைக்கு இலுப்பெண்ணை குடிச்ச கழுதை மாதிரி முகத்தை வச்சிருக்கிறாய்?" என்று கேட்டாள்.


*************

எனக்கு ஞாபகம் இருந்த நாளில் இருந்தே எனக்கு இந்த முடியுடன் பிரச்சினைதான்; சின்ன வயசில் பார்பர் நல்லையா "தம்பி சாப்பிடறது எல்லாம் முடிக்குத்தான் போகுது போல, உடம்பு வளரக் காணல்லை, முடி மட்டும் அளவு கணக்கிலாமல் வளருது" என்று அலுத்துக் கொண்டுதான் முடி வெட்டத் தொடங்குவார். எனக்கு முடி வெட்டுவது பிடிக்காது, பெண்களை மாதிரி ஆண்களுக்கும் நீளமாக முடி வளர்க்கும் உரிமை வேண்டும் என்று சின்ன வயதுகளிலே யோசிக்கத் தொடங்க்கிவிட்டேன். ஆனால், இதற்கு சில வில்லன்கள். ஒன்று அப்பா. மகன் நீளமாக முடி வளர்த்தால் காவாலியாக விடுவான் என்று ஒரு தப்பான கொள்கை வைத்திருந்தார். மற்றது பள்ளிக்கூடப் பிரின்சிபால் மற்றும் வாத்தியார்கள். இவர்கள் எல்லாம் என் முடிக்குச் சவாலாக இருந்தபடியால் வளர்ந்து இளந்தாரியாக ஆகுமட்டும் "முடியிழந்த" மன்னனாகத்தான் திரிய முடிந்தது.

என்றாலும் தலையில் முடி காட்டுத்தனமாக வளர்ந்ததால் பேன் , பொடுகு என்று கஷ்டப்படுவேன். அம்மாவும் அப்பாவும் மாறி மாறிப் பேன் பார்ப்பார்கள். அப்பா என்றால் பேன்சீப்பால் ஊன்றித் தலையை இழுப்பார். வலிக்கும். பிறகு சீப்பை முகத்தில் இருந்து நாலடி தள்ளிப் பிடித்துப் பார்ப்பார். சீப்பின் பல்லுகளுக்கு இடையில் மாட்டிக் கொண்டிருக்கும் கொழுத்த பேன்களை விரல்களால் வெளியே எடுத்து சீமெந்துத் தரையில் விடுவார்.

"பார்! பண்டிக்குட்டி சைசில் பேன்கள் . நீ சாப்பிட்டுகிறதெல்லாம் பேன்களுக்குத்தான் போகுது" என்றுவிட்டு தரையில் இருக்கும் பேன்களை நகத்தால் தரையுடன் சேர்த்து 'டிக் டிக்' என்று சத்தம் வர நசிப்பார்

"இவனுக்கு மொட்டை போட்டால்தான் சரி" என்று இலவச இணைப்பாக வயிற்றில் புளியையும் கரைப்பார்.

அம்மா பேன் பார்ப்பது ஒரு அழகு.

"வாடா பேன் பார்க்க" என்று கூப்பிட்டா என்றால் நான் மினக்கெடாமல்  அம்மாவின் மடியில் தலை வைத்துப் படுத்து விடுவேன்.

"என்ரை பெடிக்கு ஐயா மாதிரி அடர்த்தியான தலைமயிர்" என்று சொல்லிக்கொண்டு பெரிய பல்லுகள் உள்ள சீப்பால் தலையை வாரத்தொடங்குவா.

"மூளையும் கொப்பன் மாதிரி இல்லாவிட்டால் சரிதான்" என்று அப்பா தொடங்குவார். (மாமியார் மருமகள் பிரச்சினைமாதிரி மாமனார் மருமகன் பிரச்சினை இருக்கக் கூடாதா என்ன?)

அப்பாவும் அம்மாவும் சண்டைபிடிக்க நான் அம்மா மடியில் நித்திரை கொண்டுவிடுவேன்.

நான் வளர வளர உடம்பு வைத்ததுமாதிரி எல்லாம் இல்லை. தலைமயிர் மட்டும் காட்டுத்தனமாக வளரத் தொடங்கியது. தலையில் கடிக்குது என்று சொறிந்தால் நகம் தலையில் படாது, அவ்வளவு அடர்த்தி என் முடி. மலிவான சீப்பைத் தலைவாரப் பாவித்தால், அது முறிந்துவிடும். அப்பா சின்னக்கடையிலே தெரிந்த ஒரு சோனகக் கடையிலே சொல்லி, கொழும்பில் இருந்து எடுப்பித்த ஒரு ஜேர்மன் பிராண்ட் சீப்புத்தான் என் பாவனைக்கு. எனக்குத் தெரியாமல் அக்காகூட அந்தச் சீப்பை எடுத்தால் பெரிய சண்டை வரும். பள்ளிக்கூடத்தில் கூட சமூகக்கல்வி வாத்தியார் "டேய் பெருமுடி மன்னா, சூயஸ் கால்வாய் ஆர் எப்ப வெட்டினது?" என்றுதான் அறுப்பார். கேள்வி மாறும் ஆனால் தொடங்குவது எப்பவும் 'டேய் பெருமுடி.." என்று. இப்படி எனக்கு முடிப் பிரச்சினைகள் கூடக்கூட எனக்கு வழுக்கையரின் மேல் ஒரு சின்னப் பொறாமை வரத் தொடங்கியது. வாழ்க்கை எவ்வளவு சுலபமானது அவர்கட்கு?, பேன் இல்லை, தலையில் அரிப்பு இல்லை. தலைக்கு எண்ணை வார்க்கத் தேவையில்லை. தலைமுடி குழம்பி இருக்கா இல்லையா என்று கவலைப்படத் தேவையில்லை. நமக்குக் கொடுத்து வைத்தது இவ்வளவுதான் என்று பெருமூச்சு விடுவேன்.

*************

முடியுடன் எனக்குப் பிரச்சினை இருந்தாலும் சுகந்தியுடன் பிரச்சினைகள் இல்லை, ஒன்றைத் தவிர. இவளுக்கு என் முடியின் நீளத்தைக் குறைக்கவேண்டும் என்பதில்மட்டும் ஒரு பிடிவாதம். "உப்பிடி நீளமாக மயிர் வளைர்ப்பது எல்லாம் தியாகராஜ பாகவதர் காலம் பாரும், இப்ப கட்டையாக வெட்டுவதுதான் ஸ்ரையில்" என்று மெதுவாக ஒரு ஊக்கி தந்தாள். நான் புரியாததுமாதிரி இருந்துவிட்டேன். பிறகு நேரடியாக சொல்லிவிட்டாள், "தலை மயிர் சேட்டுக் கொலரிலை முட்டாத அளவிற்கு வெட்டவேண்டும்" என்று. அதுவும் சரிவரவில்லை. கடைசியாக இன்னொரு பாணத்தையும் எடுத்துவிட்டாள். "உங்களுக்கு சேந்தன் அண்ணாவைத் தெரியும் தானே? அவர் அவற்றை ஆள் சொல்லிப் போட்டுது என்று நாலு வருசமா வளத்த தாடியையே ஒரு நாளில் வழிச்சுக் போட்டாராம், உங்களுக்கு சலூன் போய் மனுசன் மாதிரி ஒரு ஸ்ரையிலிலே முடி வெட்டத் தெரியவில்லை" எனச் சிணுங்கினாள். அப்ப அவளின் காதில் இருந்த தொங்கட்டானும் சிணுங்கிய மாதிரி இருந்தது. அடுத்தநாட்தான் கனகாலத்திற்குப் பிறகு நான் அசோகன் சலூனிலை முடி வெட்டினேன். வெட்டினாப்பிறகு எனக்குப் என்னையே பார்க்கச் சிரிப்பாக இருந்தது. படலையைத் திறந்துகொண்டு வீட்டுக்குள் நுளைய அக்கா கத்தினாள்

"அம்மோய் இஞ்சை பார் தம்பியின்ரை சாயலில ஆனா ஆனால் சகிக்கக் கூடிய முகச் சாயலில் ஒண்டு வந்து நிக்குது. உனக்கு ஆரெண்டு தெரியுதே?" என்று.

நான் எல்லாப் பல்லும் தெரிய "ஈ ஈ" என்று முகத்தை அஷ்டகோணலாக்கி அழகு காட்டிவிட்டு "அம்மா பிளேண் ரீ போடேலுமே?" என்று கத்தினேன். தம்பி ஒரு நமுட்டுச் சிரிப்புடன் தலையைப் பார்த்தான். அவனுக்குப் பதினான்கு வயதிலேயே முடி கொட்டத் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு நாளும் பச்சை எலுமிச்சங்காயைத் தலையில் தேய்த்து, அரை மணித்தியாலம் ஊறவிட்டு கிணற்று நீரில் தலை முழுகினால் முடி வளரும் என்று யாரோ சொன்னதால், வீட்டில் கறிக்கு வாங்கிய எலுமிச்சங்காய்களை ஒரு கை பார்க்கிறான். இப்ப கீரைக்கறிக்குக்கூட எலுமிச்சம் புளி விடமுடிவதில்லை. எல்லாவற்றையும் 'முடிவளர்ச்சித் தைலமாகப்' பாவித்துத் தீர்க்கிறான்.

கிணற்றடிக்கு வந்தேன், கொஞ்சம் மழைக் குணமாக இருந்தது. கிணற்றடியில் தென்னை, வாழைகள், இப்பில் இப்பில், பிறகு சின்னத் தம்பி நட்டிருந்த 'நாலு மணிச் செடி' , சீனியாஸ் செடிகள் என்று பச்சைப் பசேல் என்று இருந்தது. தலையிற் கிணற்றுத் தண்ணீர் படச் சிலீரென்று ஒரு புது உணர்வாக இருந்தது. அள்ளிஅள்ளித் தலையில் வார்க்க அடங்காத சிலிர்ப்பு. கிணற்றுத் துலாவில் இருந்து அணில் ஒன்று தாவி ஓடியது. ஒரு கவிதை எழுதலாம் போல் ஒரு வேகம். எல்லாம் அப்பா மீன் வாங்கிக்கொண்டு சைக்கிளில் திரும்பி வரும்போது நோ(ர்)மலுக்கு வந்தது.அப்பா என் தலையை விசித்திரமாகப் பார்த்தார். பிறகு ஒன்றும் பறையாமல் போய்விட்டார்.

கண்ணாடியில் என்னைப் பார்க்கும்தோது ஏனோ பண்டைக்காலங்களில் பெண்களால் முடியிழந்த மன்னர்கள் ஞாபகத்திற்கு வந்து போனார்கள். அப்போதே ஒரு முடிவு எடுத்தேன் 'இனி என் தலைமயிரை இப்படிக் கட்டையாக வெட்டுவது இல்லை" என.

*************

இப்படியே என் முடிப் பிரச்சினையும் திரௌபதியின் சேலை மாதிரி நீண்டு கொண்டு போனது. நான் இவளைக் கட்டி பிள்ளை குட்டிகள் பெத்து, நாப்பதைத் தாண்டினாலும் தலையில் முடி மட்டும் மற்ற நாற்பது பிளஸ் பேர்வழிகள் மாதிரிக் கொட்டவில்லை. பதிலாக முடி இன்னும் செழித்து வளரத் தொடங்கியது. சுகந்தி பயப்படத் தொடங்கினாள். "பேய் கீய் பிடித்துவிட்டதோ" என்று பயப்படுவதாகச் சொன்னாள். "நீ பக்கத்தை இருக்கேக்க எந்தப் பேய் கிட்ட வரும்?" என்று கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துக் கடி ஜோக்கை எடுத்து விட்டேன்.

"நான் சீரியஸ்சாக கதைக்க நீ நக்கல் விடுறாய் என்ன?" என்று கோவித்துக் கொண்டாள். பிரச்சினை அப்போதைக்கு முடிவுக்கு வந்தது. . இவள் "நீ' என்று விளித்தால் ஆள் கோபமாக இல்லை எனப் பொருள் படும் என்று அர்த்தம் . "நீர்" என்றால் கொஞ்சம் வில்லங்கம் . "நீங்கள்" என்றால் விருந்தினர் இருக்கிறார்கள் என்று அர்த்தம் -இல்லாவிட்டால் குழந்தைகள் காது கேட்குமிடத்தில் இருக்கிறார்கள். அடுத்தநாள் குண்டொன்றைத் தூக்கிப்போட்டாள்.

"இஞ்சரப்பா?"

"என்ன?"

"முடி நீக்கல் சிகிச்சை எண்டு ஒண்டைக் கேள்விப்பட்டனீங்களே?"

"என்னது கொப்பர் சொன்னவரே?"

"அந்தாளை இழுக்காட்டி உங்களுக்குத் திண்டது செமிக்காது என்ன?"

"சரி இருக்கட்டும், அதென்ன முடியகற்றும் சிகிச்சை?

"முடி நாட்டும் சிகிச்சை மாதிரி, இது அதுக்கு எதிர்!"

"ம்ம்ம்ம்ம்.."

"சரி இருக்கட்டும் எப்ப போறம்?"

"எங்கை?"

"விடிய விடிய ராமாயணாம், விடிஞ்சாப்போலை ராமன் சீதைக்குச் சித்தப்பா எண்ட மாதிரி...."

"சும்மா இரடி, ராமன் சீதைக்குச் சித்தப்பனாக இருந்தால் தப்பிப் பிழைச்சிருப்பான், எங்கைவது நிம்மதியாக...."

முடிவாக "3டி முடியகற்றும்" நிலையத்திற்கு போவது என்று ஒத்துக்கொண்டேன்.

"3டி முடியகற்றகம்" ரவுணில ஒரு ஹைஃபை'யான ஒரிடத்தில் இருந்தது. ஆரம்ம கொன்சல்ரிங் இலவசம். என்றாலும் பப்பளா என்றிருந்த கட்டடமும், குளுகுளு ஏசி'யும் நிறையைச் செலவு வைப்பார்கள் என்று தோன்றியது.

"திரும்பிப் போவமா?" என்று நைசாக நழுவும் ஐடியாவில் சுகந்தியைக் கேட்டேன். பதில் ஒன்றும் பேசாமல் அவள் முறைத்த முறைப்பில் கப்சிப் என்று இருந்துவிட்டேன். அதிகம் காத்திருக்க வைக்காமல் பெயரைக் கூப்பிட்டார்கள்.

கதவைத் திறந்து கொண்டு உள்ளிட்டால், "ஹாய் ஐ ஆம் தமாரா " என்று உதட்டுச் சாயம் கலையாத உச்சரிப்பில் அறிமுகப்படுத்தியவளை இவளுக்குப் பிடிக்கவில்லை என்று புரிந்தது. தன் அடர்த்தியான கூந்தலைத் தோள்வரை'தான் வளரவிட்டிருந்தாள்.

"சரி சொல்லுங்கோ.. " என்று தொடங்கினாள்.

"இவருக்கு 40 வயது கடந்தும், முடி இன்னும் காட்டுத்தனமாக வளருது, அதுதான் பேப்பரில உங்கடை விளம்பரத்தைப் பார்தனாங்கள்; வந்தம்" என்று உற்சாகமில்லாமல் தொடங்கினாள்.

"தலைமுடி எவ்வளவு அடர்த்தி என்று பார்ப்போம்" என்று ஹெல்மெட்  மாதிரி, ஆனால் இன்னும் சிக்கலான ஒரு கருவியைத் தலையில் மாட்டினாள் .
"நல்ல அடர்த்திதான், உங்கடை தலையிலை ஒரு ரோசாப்பூவை வைத்து அழகு பார்க்கலாம் போலுள்ளது. ... அவ்வளவு அடர்த்தி; பரவாயில்லை, குறைத்துவிடலாம், தொடர்ந்து சிகிச்சை எடுக்கவேண்டும்" என்று சொல்லத் தொடங்க, சுகந்தியின் முகம் கடு கடு என்று மாறியது.

படிரென்று எழுந்தாள். "வீட்டை போவோம்" என்று என்னை இழுக்காத குறையாக இழுத்துக்கொண்டு வெளியே வந்தாள்.


*************


"சரி அடுத்த அப்பொயின்ட்மன்ட் எப்ப?" என்று கண்ணைச் சிமிட்டினேன்.

"நான் வரல்லை, விருப்பம் என்றால் நீங்கள் போட்டுவாங்கோ" என்றாள் கொஞ்சம் வெட்கத்தோடு. முதல்நாள் கொஞ்சம் சிறுபிள்ளைத்தனமாக நடந்தது உறுத்தியிருக்க வேண்டும்.

"எனக்கு விருப்பமில்லை. நீ இப்ப பேன் பார்த்துவிட்டால் போதும்" என்றேன்.

"சரி" என்றாள்.

நான் மினக்கெடாமல் இவளின் மடியில் தலை வைத்துப்படுத்தேன்.

என் நீண்ட 'கூந்தலை'ப் பிரித்து பேன்களைத் தேடத் தொடங்கினாள்.

"அம்மா எனக்கும் பேன் கடிக்குது" என்றான் மூத்தவன்.

"எனக்கும்" என்றான் சின்னவன்.

கண்ணைச் சுழற்றிக்கொண்டு வந்தது நித்திரை.



Saturday, November 17, 2012

வைரவ சுவாமியும் கோனாச்சானாவும்

வைரவ சுவாமியை எல்லாருக்கும் தெரிந்திருக்கும். அவருக்கு ஒரு சின்னப் பிரச்சினை, இல்லைக் கொஞ்சம் பெரிய பிரச்சினை. அதைப் பிறகு பார்ப்போம். இப்ப கோனாச்சானா, கோனாச்சானா ஒரு தீவிர கடவுள் பக்தர். முருகன் சிவபெருமான், பிள்ளையார், உலகத்தில் உள்ள எல்லா அம்மன்கள், வைரவர்கள் என்று எல்லாக் கடவுளரையும் விட்டுவைக்காமற் கும்பிடுவார். இயேசு பிரானைத் தெரியாத ஊரிற் பிறந்துவிட்டார். இல்லாவிட்டால் அவருக்கும் ஒரு கும்பிடு போடாமல் இருக்கமாட்டார். கோனாச்சானா அவரிற்கு அவரின் அப்பா/அம்மா இட்டபெயராக இருக்கமுடியாது. கோ.சங்கரப்பிள்ளை தான் சுருங்கி கோனாச்சானா என்றாய் விட்டது. என்றாலும் ஊரில் முந்தநாள் மீசை முளைத்த பெடியளுக்கோ இல்லாவிட்டால் திரு கோ.சங்கரப்பிள்ளைக்கு அப்பா வயதில் உள்ளவர்களுக்கோ அவரின் இயற்பெயர் தெரியாது என்றுதான் சொல்வார்கள். எலக்சன் சமயத்தில் ஓட்டுப் போடுமிடத்தில்தான் இவரின் இயற்பெயர் அழைக்கப்படும். சங்கக்கடை மனேச்சர்கூட "கோவன்னா சங்கரப்பிள்ளை" என்று கூப்பன் மட்டையைப் பார்த்து முணுமுணுப்பாக வாசித்துவிட்டு உரத்து "கோனாச்சானா" என்றுதான் அழைப்பார். முறையாகப் பார்த்தால் "கோவன்னாச் சானா" என்றுதான் வரவேண்டும். இத்தவறை யாரும் கவனிப்பதாக இல்லை.

வயசென்று பார்த்தால் இவருக்கு ஒரு அறுபத்தைந்து மதிக்கலாம். கொஞ்சம் ஒல்லியான ஆனால் உறுதியான தேகம். சட்டை போடமாட்டார். சாரம் -அல்லது கோயில், குளம், விஷேசம் என்றால் வேட்டி அணிவார். மேலே போடும் துவாய், வேட்டியணியும் நாட்களில் நல்ல கைத்தறிச் சால்வையாக மாறும். நெற்றியில் எப்பவும் திருநீறு. போகிறவழியில் கோயில் இருந்தால் சந்தனத்தை எடுத்து நெஞ்சில் பூசுவார். சிக்கனம் எல்லாம் பார்க்காமல் நிறையப் அப்பி விடுவார். ஐந்து ஆறாம் வகுப்புவரை படித்திருக்கலாம். அந்தக் காலங்களில் அது ஒரு பெரிய பிரச்சினை இல்லை. ஆசாமியின் சிந்தனை எல்லாம் எப்போதும் "வயல், குளம், நெல்லு, குரக்கன், வெங்காயம் , மிளகாய், ஆடு, மாடு" என்றுதான் இருக்கும். வேறு எதைப்பற்றியும் கதைப்பதில்லை. நல்ல மனிசன், ஆனால் நல்ல மனிசனாக இருப்பதாற் கொஞ்சம் அப்பாவி.

வைரவ சுவாமியும் ஒரு அப்பாவிதான். கெட்டித்தனமாக நடந்து நல்லூர்க் கந்தன் மாதிரி ஒரு கோவிலில் குந்தியிருக்கத் தெரியவில்லை. மக்கள் ஊருக்கு ஊர் மரத்திற்குக் கீழே ஒரு சூலத்தை நட்டு இது உனக்குப் போதும் என்று சொல்லிவிட்டார்கள். சில ஊர்களில் பரிதாபப் பட்டு மூன்று பக்கமும் சுவர் வைத்து ஒரு "இசுக்குட்டி" கோவில் கட்டி வைத்தார்கள். வைரவருக்கும் தணியாத ஆசை. ஒரு 'சோக்கான கோவிலில்' ஆறுகாலப் பூசையுடன் 'செற்றில்' பண்ண. இது சரிவராவிட்டால் சந்நிதி கோவில் மாதிரி ஒரு சுமாரானா கோவில் என்றாலும் பரவாயில்லை என்று ஒரு 'பிளான் B" உம் வைத்துள்ளார். முன்னமே சொன்னேன் வைரவர் கொஞ்சம் அப்பாவிதான். அவருக்கு பசையுள்ள ஒரு ஆசாமியின் கனவில் தோன்றி, "பக்தா, எனக்கு ஒரு கோவில் கட்டாமல் காலத்தைக் கடத்துகிறாயா?" என்று நைச்சியமாகச் சொல்லத் தெரியவில்லை. இரண்டு, மூன்று கமக்காரர்களின் கனவில் தோன்றி, "பக்தா, எனக்குக் கோயில் கட்டு" என்று நேரடியாகவும் சொல்லிப் பார்த்தார். முதல் ஆள் தீவிர பெரியார் பக்தர். "எடே உழைக்காத கள்ளா! ஓடித்தப்பு" என்று பாதி நித்திரையில் எழும்பிக் கத்தத் தொடங்கினார். இரண்டாவது ஆள் மறதி/மாறாட்டக்காரன். காலை நித்திரையால் எழுந்ததும், "அட, கோவிலுக்கும் பொங்கச் சொல்லி வைரவர் சொன்னவர்" என்று பெண்டாட்டிக்குச் சொன்னர். மனைவி சீரியஸ்ஸாக எடுக்கவில்லை. எனவே வைரவருக்குப் பொங்கல் கூடக் கிடைக்கவில்லை.

மூன்றாவது முறை வைரவருக்கு 'லக்' அடித்தது. பெரிய கிணற்றடி சின்னையா உடனே அலுவலைப் பார்க்க எண்ணினார். கையில் காசில்லை. அடுத்த போகம் வெங்காயத் தோட்டத்தைப் பத்தாயிரம் கன்றாக்கினார். வைரவருக்கு கோவில் வரப்போகுது என்று புரியத் தொடங்கியது. 'நல்லூர்க் கந்தசாமி" கோவில் மாதிரி இல்லாவிட்டாலும் இப்போதைக்கு ஒரளவு பெரிய கோவில் எனக்கு என்று கனவு காணத் தொடங்கினார் உடம்பும் பூரிப்பாக மாறி மினுமினுக்கத் தொடங்கியது. பெரிய கோவில் என்றால் நல்ல 'பொலிஷ்' ஆகவும் இருக்கவேண்டும்தானே. வைரவருக்கும் தான் கொஞ்சம் 'வெள்ளையாக' மாறினால் என்ன என்று ஒரு சின்ன ஆசையும் வந்தது.

கோவில் விடயத்தில் நடந்ததோ வேறை. கிணத்தடிச் சின்னையாவுக்குக் அடுத்த போகம் வெங்காயம் நல்ல விலைக்குப் போனது. லொறிக் கூலி, நாலம் குறுக்குத் தெரு 'கமிசன் கடைக்காரனின்' வெட்டுக்கள் எல்லாம் போயும் கையில் காசு கனக்க மிஞ்சியது. எல்லாம் "வைரவர் அருள்" என்று சொல்லிக்க கொண்டார். சொல்லிக் கொண்டாலும் "கனவை நம்பிக் கோவில் எல்லாம் கட்டவேண்டுமா?" என்றும் சற்று சிந்திக்கத் தொடங்கினார். ஆரம்பத்தில் இருந்த வேகம் இப்போது இல்லை. என்றாலும் தெய்வக் குற்றம் ஏதாவது செய்ய வேண்டும். சின்னையர் அருகில் உள்ளா ஒரு கொல்லன் பட்டடைக்குப் போனார். திருப்பி வரும்போது நல்ல இரும்பில் 'அடித்த' ஒரு திரிசூலம் ரெடி. அன்றைக்குப் பின்னேரமே ஊருக்கு வடக்குப் புறம் இருக்கிற வெளிக்குப் போனார். வெறுமனே போகவில்லை. பெண்டாட்டி பிள்ளை, குட்டி, மூன்று கடகம் மோதகம், இரண்டு கடகம் வடை, இரண்டு பெரிய கதலி வாழைக் குலைகளுடன்தான் போனார். றோட்டுக் கரையில் இருகிற ஒரு சுமாரான சைஸ் மருத மரத்தைத் தேர்ந்தெடுத்தார். நிலத்தில் முறுகிப் பரவியிருந்த வேரில் திரிசூலத்தைக் கஷ்டப்பட்டுக் குத்தினார். இப்படித்தான் கண்டாமடம் வைரவர் கோவில் வந்த கதை.

வைரவருக்கும் கொஞ்சம் மனக்குறைதான். "மூன்று பக்கமும் சீமந்துச் சுவராவது கட்டியிருக்கலாம்" என்று முணுமுணுத்துக் கொண்டார்.

**************************

கண்டாமடம் வைரவர் கோவில் இருப்பது ஊரில் இருந்து கொஞ்சத் தூரம் தள்ளி. இன்னும் கொஞ்சத் தூரம் போனால் சுடலை. இடம் களிமண் தரை. வெங்காயம், நெல், குரக்கன் ,சாமி (சாமை) எல்லாம் விளையும் காணிகளும் அருகில். என்றாலும் வைரவர் கோவில் இருக்குமிடம் முள்ளுக்காடுகள் நிறைந்த இடம். இடைக்கிடை இருக்கும் வெறும் நிலத்தில் மழை பெய்யுங்காலங்களில் நல்ல பச்சைப் புல் முளைக்கும். பக்கத்தில் நல்ல தண்ணிக் கிணறும் உண்டு. பள்ளிக் கூடம் விட்டபின் ஆடு, மாடு மேய்க்கும் சிறுவர்கள், விடலைகள் இந்த இடத்தில் சந்திப்பார்கள். பெடியளுக்கு தினமும் ஆடு, மாடு மேய்ப்பது, கிட்டிப்புள் விளையாடுவது, வீட்டில் இருந்து களவாகக் கொண்டுவரும் தேயிலைத்தூள், சீனி, உடன் கறந்த பாலுடன் டீ போட்டுக் குடிப்பது என்று அலுத்துவிட்டது. வைரவருக்கும் வடை, வாழைப்பழத்துடன் படையல் கிடைப்பதுவும் அருகி விட்டது. இப்படி ஒருநாளில் தான் ஒரு பெடியன் வைரவருக்கு வேண்டுதல் வைத்தான், "வைரவரே எங்களுக்குத் 'பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் தேவையில்லை. தினமும் வடை, மோதகம், புக்கை, வாழைப்பழம் என்று கிடைக்க வழி செய்வாய்" என.

வைரவருக்கும் கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விட விருப்பமில்லை. "யார் சொன்னது, இவங்களில் யாரோ ஒருவன் படித்து டாக்குத்தர், இஞ்சினியர், எக்கவுண்டன் என்று பின்னாட்களில் நன்றாக வந்தால் ஒரு பெரிய சோக்கான கோயில் எனக்குக் கட்ட மாட்டாங்களா என்ன?" என்று கணக்குப் போட்டார். இந்த இடத்தில் நீங்கள் சிரிக்கக் கூடாது. முன்னமே சொல்லி விட்டேனே வைரவர் ஒரு அப்பாவி என்று. அத்தோடு வைரவர் கணக்கிலும் 'வீக்'. இருக்கட்டும், வைரவர் அருள் பாலிக்கத் தீர்மானித்தார். அத்தோடு அவர் இப்பதான் 'தீடீரெனத் தெரிவதும் உடனே மறைவதும்' கலையைக் கற்கத் தொடங்கி சுமாரான வெற்றியும் ஈட்டுகிறார். (சிலவேளை சொதப்புகிறார், அநேகமாகச் சரிவருகிறது).

சிலநாட்கள் இப்படியே போய்விட்டது. வைரவருக்கும் இப்போது கனவிற் தோன்றி வேண்டுதல் அல்லது கட்டளை கொடுப்பதில் நம்பிக்கை குறைந்துவருகிறது. மக்கள் இதையெல்லாம் சீரியஸ் ஆக எடுகிறார்கள் இல்லை. இனிக் கொஞ்சம் 'வித்தியாசமாக' எதையாவது செய்வது என்று தீர்மானித்தார்.

ஒரு புதன்கிழைமை காலை பதினோரு மணி. கோனாச்சானா கண்டாமடம் வைர. கோவிலில் வந்து "அப்பனே, முருகா, வைரவா!" என்று ஒரு கும்பிடு போட்டார். பிறகு செவிகளைப் பிடித்துக் கொண்டு மூன்று முறை தோப்புக்கரணம் போட்டார். கண்களை மூடாமலே வேண்டுதல்களைச் சொல்லத் தொடங்கினார்.

"பக்தா கண்களை மூடு" திடீரேன ஒரு குரல் மருதமரத்தில் இருந்து கேட்டது. குரலில் ஒரு தெய்வீகம். ஆனால் ஒருவித கம்பீரமான உத்தரவிடும் தொனி.

"ஐயா நீங்கள் ஆர்?" கோனாச்சானா கண்களைத் திறக்காமல் பயபக்தியாகக் கேட்டார்.

வைரவருக்குக் கடுப்பு. இந்தநேரம் இது "முருகன், சிவபெருமான், பிள்ளையாராக' இருந்தால் இப்படி ஒரு கேள்வி வருமா? என் குரலில் 'தெய்வீகத்தன்மை" போதாதா? எனறு ஒருவித சுய பச்சாபமும் வந்தது. என்றாலும் வைரவர் முடிவெடுத்ததை நிறைவேற்றியே தீருவேன் என்றிருந்தார்.

"பக்தா மேலே பார்"

"ஒண்டுமே தெரியல்லையே?"

"கண்களைத் திற பக்தா" ரொம்ப மினக்கெட்டுக் கனிவாகச் சொன்னார் வைரவர்.

இப்பதான் கோனாச்சானா கண்களைத் திறக்கிறார். மருத மரத்தில் ஒரு கரிய குண்டான ஒரு பேர்வழி. சுருட்டை முடி. கொட்டைப் பாக்கு முழி. பெரிய தொந்தி. ஆனால் உறுதியான உடல்வாகு.இரண்டு வேட்டைப் பற்களும் வாயை மூடியிருக்குப்போதே மிக மெலிதாகத் துருத்திக் கொண்டு வெளியே தெரிந்தன. இவரின் தந்தையார் இவர் சிறு பிள்ளையாக இருக்கும்போது வைரவ சுவாமி எப்படி இருப்பார் என்று சொல்லியிருந்தார். எல்லாம் பொருந்தி வந்தது. ஆனால் இந்த வைரவர் கொஞ்சம் வயசாளி மாதிரி இருந்தார்.

"இது மெய்யா அல்லது யாரும் விளையாடுகிறார்களா?" என்று யோசிக்கும்போதே வைரவர் மறைந்து விடுகிறார். கோனாச்சானாவிற்கும் இது வைரவ சாமிதான் என்று புரிகிறது.

"பக்தா கண்களை மூடு" வைரவர் அவசரமாகச் சொல்கிறார். (கன நேரம் மறைந்திருப்பது சிரமம். அத்தோடு வைரவருக்கும் தன் 'மறைந்திருக்கும்" கலையில் அவ்வளவு நம்பிக்கை இல்லை.)

"எனக்குத் தினமும் வடை, மோதகம், புக்கையுடன் படையல் வைப்பாய். அத்தோடு பாயசமும் இருந்தால் நல்லது" வைரவர் கடைசியாகச் சொன்னது இதுதான். கோனாச்சனா அரை மணித்தியாலம் கழித்துத்தான் கண்களைத் திறந்தார்.



**************************

கதை ஊரில் பரவி விட்டது. நினைத்ததைவிட அதிகம் பேர் நம்பினார்கள். நம்பியவர்கள் எல்லாம் அள்ளி வழங்க, வைரவருக்குத் தினமும் வடை, மோதகம், புக்கை, சிலநாட்களில் பாயசம் என்று வேட்டைதான். பின்பலனாக ஆடு மேய்க்கும் சிறுவர்களுக்கும் தினமும் இவை கிடைத்தன. இது, இரு கிழமைகள் தொடர்ந்தன. மூன்றாம் கிழமையில் இருந்து வடை இருந்தால் மோதகம் இல்லை அல்லது மோதகம் இருந்தால் வடை இல்லை என்றாய் விட்டது. பிறகு அவற்றின் எண்ணிக்கைகளும் குறையத் தொடங்கியது. நாட் போகப் போக வடை மோதகமெல்லாம் மெலியத் தொடங்கின. ஆடு மேய்க்குக் சிறுவர்களுக்கு இப்போது ஆளுக்குப் பாதி வடை அல்லது மோதகம் கிடைத்தால் அதிசயம்.

தினமும் படையல் என்பது வாரம் ஒன்றாகியது. பிறகு அமாவாசை , பௌர்ணமி என்று சிறப்பு நாட்காளில் மட்டும். பிறகு எல்லாரும் வைரவரை மறந்து விட்டார்கள். வைரவர் மட்டும் கொண்ட கொள்கையில் பிடியாக இருந்தார்.

அன்றைக்கு ஒரு நல்ல பௌர்ணமி நாள். கோனாச்சானா தோட்டத்திற்கு இறைப்பு வேலை முடிந்து அலுத்துப் போய் கண்டாமடம் வைரவர் கோவிலில் "அப்பனே, முருகா, வைரவா!" என்று சொல்லிக்க் கொண்டு சாமி கும்பிடத் தொடங்கினார். இரவு எட்டு மணி இருக்கும். நிலவு உண்மையிலேயே இரவைப் பகலாக்கியமாதிரி எறித்துக் கொண்டிருந்தது.

"பக்தா கண்களை மூடு" அசரீரி கேட்டது. இவர் நிமிர்ந்து மேலே பார்த்தார். மரத்தில் அதே வைரவர்தான்.

"பொறுக்கிப் பயலே, என்னை ஏமாத்திறியா?" என்று அருகில் இருந்த நீண்ட கம்பைத் தூக்கிக் கொண்டு கோபமாக இவர் வர, மரத்தில் இருந்து குதித்து ஓடித் தப்பினார் வைரவர்.



-------------------------------------

படம் http://www.tamilmurasuaustralia.com/2010/07/blog-post_1486.html இலிருந்து

கதைக்குத் தேவையில்லாத குறிப்பு: 'வைரவர்' இலங்கையில், முக்கியமாக யாழ்ப்பாணத்தில் வழிபடப்படும் ஒரு கிராமக் கடவுள். தென்னிந்தியாவில் வைரவர் வழிபாடு இல்லை எனச் சில பதிவுகள் வாயிலாக அறிகிறேன். என்றாலும் கிராமப் புறங்களில் இருக்கும் மாடசாமி, ஐயனார் மாதிரிக் கடவுளர் இதுமாதிரித்தான் என ஊகிக்கிறேன்.

இசுக்குட்டி- மிகச் சிறிய, தம்மாத்துண்டு

Monday, September 10, 2012

ஓடி வந்தவர்கள்...

சின்னாச்சிக் கிழவிதான் விசயத்தைப் போட்டுடைத்தது...

"எடியே பொன்னம்மா தெரியுமே விசயம்?". சின்னான் எப்பவும் இப்படித்தான் தொடங்கும். அநேகமாக உப்புச் சப்பில்லாத விசயங்கள்தான் வந்து விழும். சிலவேளை முக்கிய புலனாய்வுத் தகவல்களும் இருக்கும்.

பொன்னம்மாக் கிழவி கொஞ்சம் அழுத்தக்காரி; விசயத்தைத் துழாவினால் கௌவரவக் குறைவு என்று ஒரு அழுத்தமான கொள்கை ஒன்றை வைத்திருக்கிறா. விசயம் தன்பாட்டில் வந்து விழும் என்று நன்றாகத் தெரியும். எனவே 'நீ சொல்லப்போறது முக்கியம் இல்லை' என்றது மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு குட்டப் பெட்டியைத் திறந்து வெத்திலை, பாக்கைத் தயார் பண்ணினா. காதுகள் மட்டும் அடுத்த தகவலுக்காகக் காத்திருந்தன. "எனக்குக் கொஞ்சம் கிறுதி'யாக இருக்கு" என்று சொல்லிக்கொண்டு வெத்திலையொன்றை நடு நரம்போடு இரண்டாகக் கிழித்தா; பிறகு நிதானமாகச் சுண்ணம்பைப் பூசத் தொடங்கினா.

"நான் புதினம் சொல்லப்போக இவள் வெத்திலை போடுறாள்," என்று சின்னாச்சி அலுத்துக் கொண்டா.

"அவள் கிடந்தாள் நீ விசயத்தைச் சொல்லு, " இன்னொரு ஆச்சி சொன்னா.

இது நடப்பது வேதப் பள்ளிக்கூடத்துக்குப் பின்னுக்கு இருக்கிற ஊர்ச்சந்தையில். இதுதான் ஊரில் இருக்கிற ஒரே ஒரு சந்தை.

"ஆரோ ஒருத்தி பிளவுசோடையும் பாவாடை'யோடையும் ஒடிவந்திருக்கிறாளாம், " சின்னாச்சி தொடங்கியது. இப்ப அவாவைச் சுத்தி மூன்று நாலு பேர் வந்தாச்சு.

"இதென்ன புதினம், ஆர் இப்ப பிளவுசும் பாவாடையும் போடுறதில்லை? அது சரி ஏன் ஓடிவந்தவள்?" . கதை தொடர்ந்தது...


கோபாலகிருஷ்ணனுக்கு யாழ்ப்பாணந்தான் பூர்வீகம். சின்ன வயதிலேயே குடும்பத்துடன் ஹற்றனுக்குப் பக்கத்தில் உள்ள குட்டி ஊர் ஒன்றுக்குப் புலம் பெயர்ந்து விட்டார்களாம். பிறகு அங்கேயே நல்ல படிப்புப் படித்து, நல்ல வேலை எடுத்துக், கல்யாணமும் கட்டி இரண்டு பிள்ளைகளையும் பெற்றாயிற்று. தானுண்டு, தன் வேலையுண்டு, தான் வாசிக்கும் 'டெய்லி நியூஸ்' பேப்பர் உண்டு என்று அமைதியான குடும்பம். பெண்டாட்டிக்கும் பூர்வீகம் யாழ்ப்பாணந்தானாம். மனிசன் காலைமை நித்திரையாலே முழித்தவுடன் பல்லுத் தீட்டித் தேத்தண்ணி குடிக்க முதல் 'டெய்லி நியூஸ்' பேப்பர் வாசிப்பாராம். வீரகேசரிப் பேப்பரையும் போனாற் போகிறது என்று வாசிப்பாராம். இப்படி அமைதியாக ஓடிக்கொண்டிருந்தவரின் வாழ்க்கையில் விதி விளையாடியது 1978 கலவரமாக.

கொஞ்ச நாட்களாக நிலவரம் சரியில்லை. சிங்களவங்கள் எல்லாம் தமிழர்களைத் தேடித் தேடி அடித்துக் கொண்டிருந்தாங்கள். வெட்டிக் கொண்டிருந்தார்கள். தமிழர்களின் கடைகள்,வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டு அதுவும் போதாது என்று தீ வைத்தும் எரிக்கப்பட்டன. இவர் கோபாலகிருஷ்ணன் ஒருநாள் காலைமை வேலைக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். பெனியனையும் ட்றவுசரையும் போட்டுவிட்டார். மனைவி சுட்ட தோசையை ஒரு கை பார்த்துக் கொண்டிருந்தார். இவர் சாப்பிட்டு விட்டுத்தான் ஷேர்ட்டைப் போடுவார். அப்பதான் "அடோ தெமலுப் பண்டி' என்று கத்திக் கொண்டு ஒரு கும்பல் கத்தி, பொல்லுக்களுடன் கொலை வெறியுடன் ஓடிவருவது தூரத்தில் தெரிந்தது. போட்டது போட்டபடி இருக்க மனைவியையும் பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு எதோ விதமாக யாழ்ப்பாணம் வந்து பிறகு எங்கள் ஊருக்கும் வந்து விட்டார். ஓடி வரும்போது அவர் போட்டிருந்தது ஒரு நீளக் காற்சட்டையும், ஒரு கையில்லாத பெனியனும். மனைவி பாவாடையும் பிளவுசும். சாறி கட்டக்கூட அவகாசம் வரவில்லையாம். பிள்ளைகள் போட்டிருந்த உடுப்பு மட்டும். ஒரு மாற்றுடுப்பு இல்லை. ஒரு சதக் காசும் இல்லை.

இவ்வளவு விசயங்களும் 'கோவால்' ஊருக்கு வந்திறங்கி அடுத்தநாளே சந்தைக்கு வந்திட்டுது.

"எண்டாலும் பாவமப்பா, இளங் குடும்பம்" என்றா சின்னாச்சி.

"எங்கடை ஊர்ச் சனங்கள் நல்லதுகள், உதவி செய்யாமலே இருக்குங்கள்?" என்றாவாம் பொன்னம்மா.

இலங்கைத் தமிழர் மேலே இந்தமாதிரி கலவரம், வெட்டுக் குத்து, கடை/வீடு எரிப்பு என்பதெல்லாம் வெள்ளையன்கள் சுதந்திரத்தைத் தூக்கித் தந்துவிட்டுப் போன காலத்தில் இருந்து அப்பப்ப நடப்பதுதான். என்றாலும் இது அதிகம் யாழ்ப்பாணத்திற்கு வெளியில்தான் நடக்கும். யாழ்ப்பாணத்தில் என்றால் ரவுண் பக்கம் நடக்கும். ஊர்ச் சனத்திற்கு இந்த மாதிரிக் குடும்பமாகத் துரத்துப் பட்டு வெறுங்கையுடன் வருபவர்களைப் பார்ப்பது இது முதல் தடவை. ஊரில் ஆட்களில்லாமல் இருந்த ஒரு வீட்டைச்சு த்தம் பண்ணி வசிக்கக் கொடுத்தார்கள். (அந்த வீட்டில் பேய்கள் நடமாட்டம் முன்பு இருந்ததாகக் கதை). தமிழ் உபாத்தியாயர் சில பல புதிய பழைய உடைகளையும் சமைக்கும் பாத்திரங்களையும் ஒரு 'துருவு பலகையும்' கொடுத்தார். கமக்காரர்கள் அரிசி, மரக்கறி கொடுத்தார்கள். உத்தியோகத்தர்கள் 'அஞ்சு, பத்துக்' கொடுத்தார்கள். இல்லாவிட்டால் போட்டுக் கழித்து வைத்த உடுப்புக்களையாவது கொடுத்தார்கள். மீன்கார ஆச்சியும் 'பாவம் ' என்று மீன் கடனாகக் கொடுத்தா. பேப்பர்காரத் தாத்தாவும் கடனாக 'டெய்லி நியூஸ்' பேப்பரும் வீரகேசரிப் பேப்பரும் கொடுக்க ஒத்துக்கொண்டார். "இங்கிலிஷ் படிச்ச மனிசன் வேலை எடுத்துக் கடனைக் கட்டமாட்டானா என்ன?" என்று பேப்பர்காரத் தாத்தா சொன்னாராம்.

கோபாலகிருஷ்னன் மனைவி அன்னலட்சுமி, ஒரு வாரத்திலேயே அயலிலுள்ள பெண்டுகள் குமருகளைச் சிநேகிதம் பிடித்துவிட்டா. அப்பப்ப பிள்ளைகளை அயலிலுள்ள வீடுகளில் விட்டுவிட்டு புருஷனுடன் ரவுண் பக்கம்போய் வருவா. அதுக்கெல்லாம் 'அஞ்சு பத்துக்' கடன் கொடுக்குமளவுக்கு ஊர் ஆட்களுக்கு நம்பிக்கை வந்துவிட்டது. கோபாலும் அவரது 'டெய்லி நியூஸ்' பேப்பர் வாசிப்பும் ஊரில் விரைவில் பரவத் தொடங்கிவிட்டது. ஊரிலே அப்பப்ப 'இங்கிலிசில' மொட்டைக்கடுதாசி எழுதுற மணிவண்ணனுக்குக் கூடக் கொஞ்சம் பொறாமை வரத் தொடங்கிவிட்டது. 'இவருக்கென்ன பெரிய இங்கிலிஸ் தெரியும்?" என்று அலுத்துக் கொண்டானாம். ஆனாலும் கோபாலுக்கு வேலை மாத்திரம் அகப்படுதில்லை. படித்த படிப்புக்கும் தெரிஞ்ச 'இங்லிசுக்கும்' பொருத்தமான வேலை கிடைப்பது என்றால் சிம்பிளா என்ன? ஆனால் இது மீன்கார ஆச்சிக்கும் பேப்பர்த் தாத்தாவுக்கும் புரியவில்லை.

"வீட்டுக்காரம்மா," என்று நைச்சியமாக கூப்பிட்டுக்கொண்டு மீன்கார ஆச்சி வந்தது ஒரு வியாழக்கிழமை.

"இண்டைக்குச் சூடை மீன் காணும்" என்றா அன்னம் என்கிற அன்னலட்சுமி.

"அதில்லை ...." மீன்காரா ஆச்சிக்கு அகதிப் பொம்பிளையிடம் கடன் காசைத் திருப்பிக் கேட்க அசௌகரியம்தான்.

"வீட்டிலை காசு கொஞ்சம் தேவைப்படுது, நீங்கள் தரவேண்டிய நாப்பது ரூவா சொச்சத்திலை ஒரு இருவதையாவது தந்தால் உதவியாக இருக்கும், நாளைக்கு வெள்ளிக்கிழமை நானும் வரமாட்டன். இண்டைக்கே தந்தால்..... "

"ஆச்சி, உண்ணான உனக்குத் தரவெண்டு இருவது ரூவா எடுத்து வைச்சிருந்தனான். பிள்ளைகள் இரண்டுக்கும் காச்சல். டாக்குத்தர்/மருந்துச் செலவுக்கு முடிஞ்சு போச்சுது. கட்டாயம் அடுத்தமுறை தாறன் என்ன?"

மீன்கார ஆச்சி இன்றைக்கும் கடனாகத்தான் மீன் கொடுத்தா. அடுத்த கிழமைக்கும் காசைப்பற்றிக் கதைக்கவில்லை. பேப்பர்த் தாத்தா கொஞ்சம் 'கடுமை'. வீரகேசரிப் பேப்பரை நிறுத்திவிட்டார். இங்கிலிஷ் பேப்பரைத் தொடர்ந்து சப்ளை பண்ணிக் கொண்டுதான் இருந்தார்.

**************************
நாட்கள் போகப்போகக் கஷ்ட ஜீவனம் கோபாலகிருஷ்ணனுக்கு. ஊர் ஆட்களும் உதவிகளைக் குறைக்கத் தொடங்கிவிட்டார்கள். அன்னத்திற்கும் கடன் வாங்குவது சிரமமாய்க் கொண்டிருந்தது. பேப்பர்காரனுக்கு நூற்றி நாற்பத்தெட்டு ரூபாய்கள் பாக்கி. மீன்காரிக்கு எண்பத்தாறு. பக்கத்து வீடுகளுக்கும் ஐம்பது, நூறு, எழுபத்தைந்து என்று. தமிழ் வாத்தியார் மட்டும் அறிந்தவர் தெரிந்தவர் எல்லாரையும் அகதிக் குடும்பத்திற்கு உதவி செய்யப் 'பரப்புரை' செய்துகொண்டிருந்தார். தானும் இயலுமானவரை 'பத்து இருவது' கொடுத்துக் கொண்டிருந்தார். எது நடந்தாலும் காலை வேளைகளில் கோபால் நீளக் காற்சட்டையும், கையில்லாத பெனியனுமாய், வீட்டுக்கு வெளியில் சாய்வுக் கதிரையில் இருந்து நிதானமாகப் பேப்பர் படித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். கிழமைகளில் ஒரிரு நாட்கள் தம்பதி சமேதராய் ரவுணுக்கும் போய்வருவார்கள். சினிமா பார்க்கத்தான் என்று சின்னாச்சிக் கிழவிக்குத் தகவல் கிடைத்துவிட்டது.

பாக்கியம் அன்ரி அன்று காலை நல்ல 'மூட்'டில் இருக்கவில்லை. முற்றத்திற்குத் தண்ணி தெளித்து பிறகு விளக்குமாறால் கூட்டத் தொடங்கினா. கடுங்கோடை என்பதாலோ அல்லது மனிசனிலிருந்த கோபத்தை விளக்குமாறில் காட்டியதாலோ என்னவோ புழுதி ஒரு படையாகாக் கிளம்பியது. அரை மணித்தியாலத்திற்கு முதல்தான், மனிசன் 'கல்யாணம் கட்டி இருவது வருசமாச்சு, இன்னும் ஒழுங்காத் தோசை சுடத் தெரியல்லை' என்று கத்திப் போட்டுச் சாப்பிடாமல் போய்விட்டார். கல்யாணம் கட்டிய புதிதில் , "பாக்கியம் இது தேவலோகத்துத் தோசை'யப்பா" என்று சப்புக் கொட்டிச் சாப்பிடுவார்.

அன்னமும் கோபாலும் புழுதிக்குள்ளால் கண்களை சுருக்கிப் பார்த்துக் கொண்டு வந்தார்கள். கூடவே குழந்தைகள்.

"இண்டைக்கு ஒருக்கா ரவுணுக்குப் போய் வாறம். பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ளுகிறியளே?" என்றா அன்னம். கோபால் இங்லிஷ் பேப்பரை நிதானமாக மடித்து பையினுள் வைத்துக் கொண்டிருந்தார். மனிசன் பேப்பர் இல்லாமல் எங்கேயும் போகாது.

"ஐயோ இண்டைக்கு ஏலாது, நானும் மனிசனும் இண்டைக்குப் படம் பாக்கப் போறம்" என்று ஒரு பச்சைப் பொய்யை எடுத்து விட்டா.

"சரி பின்னை" என்று விட்டுக் குடும்பமா ரவுண் புறப்பட்டுச் சென்ற கோவால் குடும்பத்தை யாரும் அதுக்குப் பிறகு காணவில்லை.

**************************

கடன் கொடுத்த, கொடுக்காத ஊர்ச்சனங்கள் கொஞ்சநாள் இவர்களைத் திட்டிக் கொண்டிருந்தார்கள். நீண்ட நாட்களின் பின், ஏதோ ஒரு சினிமாத் தியேட்டரில் இருவரையும் கண்டதாக யாரோ பேசிக் கொண்டார்கள். பிறகு இவர்களை மறந்து விட்டார்கள்.

தமிழ் வாத்தியார் மட்டும் கனகாலத்திற்கு "பாவமப்பா அதுகள்" என்று சொல்லிக் கொண்டிருந்தார்.


Wednesday, June 13, 2012

சின்னாம்பி

சின்னாம்பியைப் பற்றிச் சொல்லமுன், என்னைப் பற்றிச் சொல்லவேண்டும். நான் ஒரு சாதாரண பதிவன். காலை 8 மணிக்கு ஒரு பதிவு போட்டுவிட்டு 8:00:02 இலிருந்து யாராவது புண்ணியவான் 'கொமென்ட்' போடுகிறானா என்று பார்க்கத் தொடங்கும் சாதாரண பதிவன். இரண்டு மூன்று 'அப்பாவிகள்' தொடர்ந்து 'கொமென்ட்' போடுகிறார்கள். அவர்கள் சீரும் சிறப்பும் பெற்றுப் பல்லாண்டு வாழ்க. எனக்கு ஒரு சின்னப் பிரச்சினை 'தலைப்பு'ப் போட்டால் அதைப்பற்றி எழுதாமல் என்னவோ எல்லாம் எழுதுவேன். எனது பெறாமகள் ஒருத்தி 4ம் வகுப்புப் படிக்கிறாள். தமிழ்ப்பாடத்தில் 'ஆடு' என்று தலைப்புப் போட்டு "எங்கள் வீட்டிலுள்ள ஆடு வேப்பங்குழை சாப்பிடும்" என்று தொடங்கி நிறைய எழுதி '...இப்படி சவர்க்காரத்திற்குப் பல பயன்பாடுகள் உண்டு' என்று முடித்தாள். இப்பதானே எல்லாம் ஜீன்ஸ், ஜெனிடிக் என்று ஆராயிறாங்கள். அதொன்றுதான் பரம்பரையிலே ஒடுதுபோல.

சரி, நான் சொல்லப்போற விஷயம் கொஞ்சம் சிக்கலானது. சரியாகப் புரியாவிட்டால் என்னை லூசு என்றுதான் நினைப்பீர்கள். இதைச் சொல்லுறது கொஞ்சம் கஷ்டம். முயற்சிக்கிறேன். முதல்ல எச்சரிக்கை நான் சொல்லப்போறது உண்மை, கற்பனையில்லை. பின்நவீனத்துவப் பிசுக்கோத்தும் இல்லை. அவன் ஒரு விநோதன். சின்னாம்பி என்பது நான் அவனுக்கு வைத்த பெயர்தான். அவனுக்குப் பெயர் இல்லை. "உனக்கு பெயர் என்னடா" என்று அவனை ஒருமுறை கேட்டேன்.

"எனக்கு ஏன் பெயர் இருக்கவேண்டும்" என்றான். இந்த இடத்தில் நான் குழம்பித்தான் போனேன். சின்ன வகுப்பிலை கணக்கு வாத்தியார் சொல்லுவார், "நீ உன்னையும் குழப்பி, என்னையும் குழப்பி, வகுப்பையும் குழப்புறாய்" என்று. அந்தப் பாவம்தான் என்னவோ திருப்பித் தாக்குது.

நான் குழம்பினமாதிரிக் காட்டிக் கொள்ளவில்லை. "சரி உனக்குப் பெயர் சின்னாம்பி" என்று வைத்துவிட்டேன். சரி உங்களுக்குச் சொன்னால் என்ன? சின்னாம்பியைப் பற்றி உங்களுக்குத்தான் முதல்லே சொல்லுகிறேன். பெண்டாட்டிக்குக் கூடச் சொல்லவில்லை. அவள் முந்தியே 'மனிசன் லூசு சந்திப்புக்களுக்கு (அதுதான் 'இலக்கியச் சந்திப்புக்கள்') போகிறார் என்கிறாள். அதிலே இதைச் சொல்லி ஏன் வீண்வேலை. கடைசியாப் போன சந்திப்பிலே வேட்டியை உருவிறமாதிரி நாலு கேள்வி கேட்டாங்கள்;சரி அது இருக்கட்டும். திருப்பப் பாருங்கோ சின்னாம்பியில் தொடங்கி வேட்டியில் வந்து நிற்கிறேன்.

சின்னாம்பியை எப்ப முதலில் சந்தித்தேன்? அதுவுமொரு சின்ன அதிர்ச்சிதான்.நானும் 'நானுண்டு என் மொக்கைப் பதிவுண்டு' என்றுதான் இருந்தேன். யாரைவாவது திட்டி எழுதிப் கொஞ்சம் பிரபலமாகுவமென்று ஒரு பதிவு எழுதிக் கொண்டிருந்தேனாம். பின்னும் "கீக் கீக்"என்று ஒரு சாதியாச் சிரித்துக் கேட்டுது. 'ஷிவ்ட்' கீ வேலை செய்யவில்லையென்றுதான் யோசனை ஓடியது. என்றாலும் திருப்ப "கீக் கீக்"என்று சிரித்துக் கேட்டது. சத்தம் அந்தக் காலத்து 'கட்டை ஸ்பீக்கர்'இலிருந்து வருகிறமாதிரி, ஸ்டீரியோ இல்லை. "யாரடா அது?" என்று அதட்டினேன்.

எதிரில் பணிவாக "ஐயா வணக்கம்" என்று வந்தான். சாதாரண உயரம், சாதாரண உருவம், சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை. அதுதான் எனக்குக் கொஞ்சம் கவலை. இரண்டு பந்தி வர்ணித்து உங்களை இம்சைப்படுத்தி இருக்கலாமில்லையா?

"எப்படி வந்தாய், முன்கதவு பூட்டியிருக்கே?"
"நான் ஏன் வரவேண்டும், நான் இங்குதான் எப்பவும் இருக்கிறேன்!"
"ஓஹோ தாங்கள்தான் கடவுளோ?"
"அதுதான் இல்லை, நானும் உன்னைமாதிரி ஒரு சாதாரணன்".
"கண்டுபிடித்து விட்டேன் நீ யாரென்று, பழைய நாடகங்களில் நீ நல்ல பேமஸ். நீதான் என் மனச்சாட்சி"
"கஸ்மாலம், கொஞ்சம் வித்தியாசமாக யோசி, இன்னும் பழைய காலத்திலை நிக்கிறாய். 'நனவிடை தோய்தல்' சக்கரவர்த்தி என்று மெல்பனில் இருந்து விருதெல்லாம் வரப்போகுது!"
"விருதா, நல்லதுதானே யப்பா!"
"இது நக்கல் விருது ஓய்,உமக்கு வயது போட்டுது என்று பூடகமாசச் சொல்லுறாங்கள்"

நானும் 'பதிவுலகத்திலே இது சகஜமப்பா'என்று இருந்துவிட்டேன்.

என்னோடு அந்தக் காலத்திலே படித்த உதயன் அடிக்கடி சொல்லுவான் "xyz இலே இதெல்லாம் சகஜமப்பா" என்று. இதிலே xyz என்னவாகவும் இருக்கலாம். உதாரணம் 'வாழ்க்கை, யானைபிடிப்பது, கொய்யாக்காய் களவெடுக்கிறது". இப்ப அவன் phD முடித்து அமெரிக்காவிலே. இவனைப்பற்றிச் சொல்லப்போனால் அது பெரிய கதை. ஆறாம் வகுப்பிலே தமிழ் வாத்தியாரைப் பிடிக்கவில்லை என்று கவிதை எழுதினான். வாத்தியாருக்கு ஒவ்வொரு நாளும் காலைச் சாப்பாடு இடியப்பமும் சொதியும் மட்டுமே என்பது ஊரறிந்த இரகசியம், மத்தியானச் சோற்றிலும் மீந்துபோன சொதியை ஊற்றித் தின்னுவார். சொதியர் என்றுதான் அவரை ஊரிலே தெரியும்.

"கொக்கு மூக்கனே, குதிரைச் செவியனே
நித்தமுனக்கு சொதி செய்வாள் உன்னில்லாள்
காட்டுவாய் உன் கொதியை எம் மீது
முறிந்தது பிரம்பு, என் பாவம் செய்தோம் யாம்?"


எப்பவுமே சிரிக்காத தமிழ் வாத்தியார் இதை வாசித்த பிறகு விழுந்து விழுந்து சிரித்தார். கடைசி வரி சரியில்லை என்று 'கொமெண்ட்' போட்டும் கொடுத்தார். கேதீஸ்வரனுக்கு இந்தச் சந்தங்களொன்றும் பிடிக்காது.

"முறிந்த பிரம்பொன்று
சொல்லிச் சென்றது
வாத்தியாரின் கொதியை..."


என்று எழுதவேண்டும் என்று திருத்தம் கொடுத்தான். நான் தலையைப் பிறாண்டிக் கொண்டேன்.

"டேய் உனக்குக் கவிதை எல்லாம் சுட்டுப் போட்டாலும் வராது, விட்டுர்ரா!"

திடுக்கிட்டு விட்டேன். இவனுக்கு நான் நினைப்பதுவும் தெரிகிறது.

"சின்னாம்பி" பரிதாபமாத் தொடங்கினேன்,"உனக்கு நான் நினைப்பதுவும் தெரியுதா?"
மீண்டும் "கீக் கீக்" என்று சிரித்தான் சின்னாம்பி. "அந்த 'அறிவில்' நான் கொஞ்சம் வீக்... நீ நினைப்பதில் ஒரு பகுதிதான் எனக்குத் தெரிகிறது, முழுக்கத் தெரியுதில்லை " என்று கொஞ்சம் வெட்கப்பட்டான்.

"சரி இப்ப சொல்லு நீ ஆர்?" பரிதாபமாகக் கெஞ்சினேன்.

"கேள்விக்குக் கேள்வி, மனிதனுக்கு எத்தனை அறிவு உண்டு?"

ஏழு என்று சொல்ல யோசித்து, "ஆறு" என்றேன்.

"எமக்குப் பன்னிரண்டு" என்றான்.


(தொடரலாம்)


-----------
கொதி -கடுங்கோபம்
சவர்க்காரம்- soap

Saturday, March 10, 2012

அழி றப்பர்

நாலைந்து நாட்களாக மண்டை பிளக்கும் வெயில். மத்தியான வெயிலில் சன சந்தடி குறைந்துவிட்டது. சின்னப் பெடி பெட்டைகளுக்கு மட்டும் வெயில் என்று ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை. புதிதாக விழுந்த கமுக மடல் ஒன்று அவர்களிடம் அகப்பட்டுவிட்டது. கமுகம் மடலை இழுத்துக் கொண்டு இரண்டு பொடிசுகள், மடலின் அடிப்பகுதியில் மூன்றுபேர் நெருக்கியடித்துக் கொண்டு இருந்தார்கள். "பீப் பீப்" என்று சத்தமிட்டுக் கொண்டு கற்பனைக் காரில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.ஒருவன் மட்டும் வேலிக்கரையில் நிழலில் நின்றுகொண்டு பூவரசம் இலையிற் செய்த குழலை ஆனந்தமயமாக ஊதிக்கொண்டிருந்தான். அவன் பாவனைகளும் அங்க சேஷ்டைகளும் முந்தநாள் அம்மன் கோவிற்திருவிழாவில் நாதஸ்வரம் வாசித்த வித்துவானை ஞாபகப்படுத்தியது. திடீரென வாயில் இருந்த பீப்பீக் குழலை எறிந்துவிட்டு மேளக்காரனாக மாறி விட்டான்.

"அட நாசமறுவானே வேலியை ஏண்டா தட்டுறாய்?" என்று வேலிக்கு அந்தப் புறமிருந்து கோபமான ஒரு குரல் கேட்டது. இவன் பாய்ந்து விழுந்து ஓடினாலும், அந்த அவசரத்திலும் வேலிக் கதியால்களில் இருந்து இரண்டு மூன்று கிளுவங் கொப்புகளை முறித்தெறிய மறக்கவில்லை. அந்த வீட்டிலிருந்த கிழவி கோபத்தோடு வெளியே வந்து இன்னொரு சிறுவனுக்கு திட்டத் தொடங்க அவன் தன்பங்குக்கு "ஆச்சி, பூச்சி, மதவாச்சிக் கோச்சி" என்று எதுகை மோனையுடன் நெளித்துக் காட்டி விட்டு ஓடத்தொடங்கினான். கிழவி 'தூய' செம்மொழியில் திட்டத் தொடங்கியது. அவா சொன்ன வசனங்களின் உண்மை அர்த்தம் புரிய அவனுக்கு இன்னும் பத்துப் பன்னிரண்டு வருடங்கள் கழியவேண்டியிருக்கும். தாய் மொழியில் கிழவிக்கு இருக்கும் புலமை அப்படி.

ஓடத்தொடங்கிய இரண்டு பேரும் போய் நின்றது பள்ளிக்கூடத்தில் நின்ற வேப்பமரங்களின் கீழே. மிச்சப்பேரும் சரியாக ஊகித்து அங்கே வந்து சேர்ந்தார்கள்.

**************************

ரங்கனின் அரைக்காற்சட்டைப் பொக்கற்றில் ஒரு நெருப்புப் பெட்டி இருக்கும். அதற்குள் நெருப்புக்குச்சி இருக்காது. பதிலாக உயிருள்ள ஒன்று இருக்கும். இன்றைக்கு சில்வண்டு . இவன் நடக்க நடக்க சில்வண்டு "ரீஈஈஈஈஈ, ரீற், ரீஈஈஈஈ" என்று விட்டுவிட்டுச் சத்தம் போட்டது. இவனைக் கண்ட எல்லோரும் சத்தத்தைக் கேட்டு விட்டுக் கேள்விக்குறியோடு பார்க்க, ஒன்றும் நடவாததுபோல் முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டு நடந்தான். இந்த 'அச்சாப்பிள்ளை' முகம் இவனுக்கு ஒரு கொடை. யார் வீட்டையாவது போய் 'ஆச்சி/அப்பு/மாமி உங்கடை வீட்டை மாங்காய் ஆயலாமா?" என்று கேட்டால் யாரும் மறுக்கப்போவதில்லை. ஆனால் களவாக மாங்காய், புளியங்காய் நெல்லிக்காய் ஆய்ந்து தின்பதின் சுகம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. இவன் முதல்நாள்தான் குஞ்சிப் பெரியாச்சி வீட்டில் மாங்காய் திருடியிடுப்பான். அடுத்தநாள் பெரியாச்சி இவனிடமே "ஆரோ கள்ளப் பெடியள் மாங்காய் ஆஞ்சு போட்டாங்கள். உனக்கு ஆரெண்டு தெரியுமே?" என்று விசாரிப்பா. இவனும் முகத்தைச் சீரியஸ் ஆக வைத்துக்கொண்டு ஏதோ ஒரு சடையல் பதில் சொல்லிக்கொண்டிருப்பான். அவாவும் "நீ நல்ல பெடியன், பதிவாக இருக்கிற ஒரு மாங்காய் ஆஞ்சு கொண்டு போய்த் தின்னேன்" என்பா. என்றாலும் இவனுக்குக் கனகாலம் ஒரு குழப்பம், "ஆச்சிக்கு என்னிலை சந்தேகமா?" என்று. கடைசிவரை அந்த 'டவுட்' கிளியர் ஆகவில்லை. ஆனால் இந்த அச்சாப்பிளை சொந்த ஆச்சி வீட்டிலேயே அப்பப்ப நெல்லிக்காய் களவாகப் புடுங்கும். கொஞ்சம் சோம்பலாக இருந்தால் மட்டும் ஆச்சியிடம் 'அனுமதி' வாங்கி நெல்லிக்காய்கள் பறிப்பான். அன்றைக்கு இவன் பாடு சோகம். ஆச்சி இவனை மரத்தில் ஏறவிடா. நீளத் தடியொன்றைக் கொடுத்துப் 'பத்திரமாகப்' பழுத்த நெல்லிக்காய்களை மட்டும் தட்டி விழுத்தச் சொல்லுவா. 'கிழவி' மறக்காமல் அன்று பின்னேரம் இவன் வீட்டை போய் அம்மாவிடம் 'இவன் நாசமறுவான் பச்சை நெல்லிக்காய்களை நாசம் பண்ணிப்போட்டான் ' என்று புகார் கொடுக்கும். அம்மாவிற்குத் தன்மகனை 'நாசமறுவான்' என்று ஆச்சி சொன்னது பிடிக்காது. அந்தக் கோபத்தையும் இவனிடம்தான் காட்டுவா.

இதெல்லாம் இப்படி இருந்தாலும், இன்றைய நாயகன் என்னவோ சொறியன் எனச் செல்லமாக அழைக்கப்படுகிற சிறியன் தான். சேட்'டுப் பொக்கற்றில் இருந்து "அதை" ஒரு நளினமாக எடுத்துப் போட்டான். அது அப்போதுதான் பிரபலமாகத் தொடங்கிய 'வாசம்' மணக்கிற அழிறப்பர். ஒரு றப்பரால் கெப்பரானது வரலாற்றில் இவனாகத்தான் இருப்பான். அதுக்குப் பின்னால் ஒரு கதை இருந்தது.

"சுகந்தி தந்தவள்" என்றான் சிறியன், ரத்தினச் சுருக்கமாக. சுகந்தி பள்ளிக்கூடத்தில் புதுப்பெட்டை. புத்தம்புது அரை லேடீஸ் பைக்கில் வருவாள். தலைமுடியைக் குட்டையாக வெட்டியிருப்பாள். "நீர்" என்றும் மற்றவர்களை விளிக்கலாம் என்று பட்டிக்காட்டுப் பெடி பெட்டைகளுக்குச் சொல்லிக் கொடுப்பவள். கொஞ்சம் கறுப்பு என்றாலும் கூடப்படிக்கிற பெடியள் எல்லாருக்கும் அவளில் ஒரு 'இது' இருந்தது. கற்பனையைச் சிறகடிக்க விடவேண்டாம். இப்பதான் இவர்கள் ஆறாம் வகுப்பிற் படிக்கிறார்கள். அக்காலங்களில் ரவுணிலை ஷெல் விழத் தொடங்கிவிட்டது. அதுதான் அவள் ரவுண் கொன்வென்ட் இலிருந்து உள்ளூர் மகாவித்தியாலத்திற்கு வந்த வரலாறு.

"நீ களவெடுத்திருப்பாய்" என்றான் ரங்கன்.
"நீ அழுதிருப்பாய், அவள் பரிதாபப்பட்டுக் கொடுத்திருப்பாள்" என்றான் ரவி.
"நீ உன்ரை ஆட்டுப் புழுக்கைப் பென்சிலைக் கொடுத்து ஏமாத்திப் பண்டமாத்துச் செய்திப்பாய்" என்றான் காந்தன்.
"சுப்பர் கடையில வாங்கிப்போட்டுக் கதை விடுகிறாய் என்ன?" என்றான் அளாப்பல் குஞ்சன்.

"சத்தியமாக அவள் ரண்டு றப்ப்ர் வச்சிருந்தவள், ஒண்டை எனக்குத் தந்தவள்" என்ற சிறியன் அதை கையில் வைத்து ஒரு சுண்டு சுண்டிவிட்டு ஏந்திப் பிடித்தான். பிறகு பொக்கற்றில் போட்டுவிட்டு ஒரு 'மிதப்புப்' பார்வை பார்த்தான்.

இந்த இடத்தில் சீன் கொஞ்சம் மாறுகிறது. அந்த நாட்களில் இலங்கை வானொலியில் "அடுத்து... நிலைய வித்துவான்கள் வாசிக்கக் கேட்கலாம்" என்றபின் வித்துவான்கள் இஷ்டம்போல வெளுத்துவாங்குவார்கள். அந்த இசையைக் கற்பனை செய்து பார்க்கவும்.

"சிறியன் சொறியன்" என்றன் ரவி
"சொ ஓஓஓஓ றீஈஈஈஈஈஈஈ யன் சீஈஈஈஈறீஈஈஈஈ யன்" என்று டீ.ஆர்.மகாலிங்கம் ஸ்டைலில் இழுத்துப் பாடினான் ரங்கன்.
"கொப்பர் ஏன் உனக்கு நேற்று அடிச்சவர்?" என்று ஒரு இடைச்செருகல் போட்டான் ரவி.
"நல்ல வெறி போலை.." ஏற்றினான் குஞ்சன்.

எல்லாரும் "ஹா ஹா" "ஹீ ஹீ.., "ஈ ஈ" என்று வகை வகையாகச் சிரிக்க அழுதுகொண்டு வீட்டை ஓடினான் சிறியன்.

**************************

குஞ்சிப் பெரியாச்சி வீட்டின் பின்பக்கம் பெரிய மாமரம். மாங்காய்கள் கைக்கெட்டும் உயரத்திலும் இருக்கும். வீட்டின் முன்பக்கம் ஆட்டுக் கொட்டில். உள்ளே ஒரு ஒரே ஒரு ஆடு கட்டப்பட்டிருந்தது. குட்டிகள் அண்மையில்தான் பிறந்திருக்கவேண்டும். அவை கட்டப்பட்டிருக்கவில்லை. தாயாடு, கூரையிலிருநது தொங்கிய கயிற்றில் கட்டியிருந்த கிளுவங் குழைகளைக் 'கறுக் முறுக்' என்று கடித்துக்கொண்டிருந்தது. குட்டிகளுக்குப் பொழுதுபோகாமல் இருந்திருக்க வேண்டும். ரங்கன் என்கின்ற ரங்கநாதன் வளவுக்குள் நுழைய இவனது கால்களில் ஈரமான மூக்குகளால் உரசிப்பார்த்தன. பிறகு இவனைப் பின்தொடர்ந்தன. ஒரு குட்டியை மட்டும் தூக்கி நெஞ்சோடு அணைத்துக் கொண்டு நடந்தான். மற்றக் குட்டி இன்னும் பின் தொடர்ந்தது.

திண்ணையில் ஆச்சி, அவித்த பனங் கிழங்குகளை உரித்து, நார்க் கடகமொன்றிற்குள் போட்டுக்கொண்டிருந்தா. இவன் ஆட்டுக் குட்டியை இறக்கிவிட்டான். பிறகு அதன் செவிகளைச் செங்குத்தாக உயர்த்திப் பிடித்து. "நீ இப்ப முயல்" என்றான். இம்சை தாங்காத குட்டி ஆடு ஓடித்தப்பியது.

"என்னடா பொறுக்கி இந்தப் பக்கம்?" ஆச்சி வரவேற்றா.
" ....... " இவன் கொஞ்சம் தயங்கி நின்றான்.
"இந்தா பனங் கிழங்கு சாப்பிடு" ஆச்சி பனங் கிழங்கொன்றை சரி இரண்டாகப் பிளந்து நடுவில் இருந்த 'ஈர்க்கை' எறிந்துவிட்டு, பிறகு நுனிப்பக்கதால் சின்னதாக முறித்துத் தும்புகளை இலாவகமாக நீக்கி விட்டுக் கொடுத்தா.

"ஆச்சி ... " இவன் எச்சிலை விழுங்கிக் கொண்டு எதையோ சொல்ல வெளிக்கிட்டான். நாக்குக் கொஞ்சம் உலர்ந்தது. நெஞ்சு கொஞ்சம் பட பட என்று அடித்தது.
"உனக்கு முந்தநாள் மாங்காய் ஆஞ்சது ஆரெண்டு தெரியுமே?" ஒருமாதிரிச் சொல்லத் தொடங்கினான்.
"அதைச் சொல்லத்தான் துரை வந்திருக்கிறார் போல, சொல்லு ராசா"
"உவன் கள்ளச் சிறியன்தான்!"

ஆச்சி கொஞ்சமும் அதிசயப்பட்டதாகத் தெரியவில்லை. கொஞ்சநேரம் வாய்க்குள் இருந்த வெத்திலை, பாக்குச் சமாச்சாரங்களைக் குதப்பத் தொடங்கினா. இவன் பொறுமை இழக்கத் தொடங்கிய நேரத்தில் பொழிச் என்று வெற்றிலைச் சாற்றை திண்ணைக்கு வெளியே எட்டித் துப்பினா.

"அவன் கள்ளன், எனக்கும் அவனிலைதான் சந்தேகம்.... நீ நல்ல பெடியன்; சரி சரி கறுத்தைக் கொழும்பான் காய்ச்சிருக்குது; அதிலை பதிவாக இருக்கிற ஒரு மாங்காயை ஆஞ்சு கொண்டு போய்த் தின்னேன்" என்றாவாம்.

இவன் மினக்கெடாமல் வளவுக்குப் பின்புறம் மாமரத்தடிக்கு வந்தான். நாலைந்து மாங்காய்களைச் கணநேரத்திற் பிடுங்கி வேலிக்குக் கீழே ஒளித்துவைத்தான். பிறகு ஆச்சி சொன்ன 'ஒரு' மாங்காயை ஆயும்போது திரும்ப அந்த டவுட் வந்தது "ஆச்சிக்கு என்னிலைதான் சந்தேகமா?" என்று.



--------------------

ஆய்தல் - பிடுங்குதல் , ஆய் - பிடுங்கு

Saturday, January 14, 2012

துளிர்ப்பு

இவனுக்கு இவ்வூரில் எல்லாம் வித்தியாசமாக இருந்தது. "ஆமி வாறான்" என்றவுடன் கையில் கிடைத்ததைக் காவிக்கொண்டு குடும்பத்தோடு சைக்கிள்களில் இரண்டு மூன்று ஊர் தாண்டி, பிறகு ஒரு பழைய பாலத்தையும் தாண்டி இவ்வூர் வந்தாயிற்று... இவ்வூரில் வீடுகளுக்கு எல்லாப் பக்கமும் மணலும் நிறையத் தென்னை மரங்களும்... சொந்த ஊரில் மணலைக் காணவேண்டுமாயின் யாராவது வீடுகட்டவென்று லொறியில் கொண்டுவந்து கொட்டினால்தான் உண்டு. பள்ளிக்கூடக் கிறவுணட்ஸ் இலும் மணல் உண்டு. கலட்டிகளில் நின்ற பனை மரங்களும் ,வளவுகளுக்குள் நிற்கும் பூவரச மரங்களும், கிளுவை வேலிகளும் கொஞசம் ஊர் ஞாபகத்தைக் கொண்டு வந்தன. ஒரு பெரிய நாற்சார் வீட்டின் பின்புறத்தில் ஒண்டிக்கொண்டான். எல்லாமாக எட்டுக் குடும்பங்கள் அந்தவீட்டில். சற்று அதிகமாகவும் இருக்கலாம். எந்த நேரமும் யாராவது வருவதும் போவதுமாக இருந்ததால் எல்லாமாக எத்தனை பேர் வசித்தார்கள் என்று தெரியவில்லை. இரண்டொரு நாட்களுக்குள், சனம் குறைந்த இன்னொரு வீட்டுக்கு மாறினால் இப்போது இருக்கும் வீட்டுக்காரருக்குச் சிரமம் குறையும் என நினைத்தான். ஆனால் எல்லா வீடுகளிலும் இதே கூத்துத்தான். எல்லா வீடுகளும் இடம் பெயர்ந்த சனங்களால் நிரம்பி வழிந்தன.

இவன் சொந்த ஊரில் தோட்டங்கள் எல்லாம் சிவப்பு மண்ணில். இங்கு களிமண் தோட்டங்கள் தான் அதிகம் தென்பட்டன. ஊரில் 'நாலாயிரம் கன்று' வெங்காயம்-மிளகாய் செய்யும் கமக்காரனிவன். இங்கு கத்தரித் தோட்டங்களைதான் அதிகம் கண்டான். கத்தரிக் கன்றுகளை எந்த மாதம் நடுவது, எத்தனை நாளுக்கு ஒருமுறை தண்ணிவிடுவது, என்ன உரம் போடுவது என்று இவனுக்குத் தெரியவில்லை. "நான் என்ன இந்த ஊர்ப் பெட்டையையே கட்டியிருக்கிறேன் கத்தரித்தோட்டம் வைக்க?" என யோசிக்கச் சிரிப்பு வந்தது. கிணறுகள் அகலமாக இருந்தன. ஆனால் இறைப்பு மிசினால் இறைத்தால் விரைவாக நீர் வற்றிவிடும். கிணற்று நீரும் ஊர்க்கிணறுகளில் இருப்பதுமாதிரி ஸ்படிகமாக இல்லை. கொஞ்சம் கலங்கலாக இருக்கும். "கிணத்துத் தண்ணி கலங்கலாக இருக்குது" என்று மனைவியிடம் சொல்ல

"அகதி மகாராசாவுக்கு நினைப்பு மட்டும் குறைவில்லை" என்று சிரித்தாள்.

பிள்ளைகள் இடம் பெயர்ந்ததைப் பற்றிப் பெரிதாக அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை. பெரியவன் பழைய நண்பர்களையும் புதிய நண்பர்களையும் கண்டு பிடித்துவிட்டான். பள்ளிக்கூடம் இல்லை என்று புளுகு போல. சின்னவன் மட்டும் இரவில் நித்திரை கொள்ளும்போது "எப்ப வீட்டை போவம்?" என்று கேட்கிறான். ஒரு பின்னிரவில் நித்திரையால் எழுப்பி, "அப்பா சிவப்பிக்கு ஆர் நெல்லுப் போடுறது?" என்று கேட்டான். சிவப்பி என்பது வீட்டில் வளர்ந்த பேட்டுக் கோழி. அதைத் துரத்தித் திரிவது சின்னவனின் பொழுதுபோக்கு. அப்பப்ப தாயிடம் அடம் பிடித்து ஒரு சிறங்கை நெல் வாங்கி சிவப்பிக்குப் பக்கத்தில் வீசுவான். அது நெல்லைப் கொத்தத் தொடங்க, திருப்பத் துரத்தத் தொடங்குவான்.

மகளுக்குப் பன்னிரண்டு வயதாகிறது இப்பவும் அம்மாவைக் கட்டிப்பிடித்துக்கொண்டு படுத்தால்தான் நித்திரை வரும். "குமரியாகப் போகிறாள் இப்பவும் அவாவுக்கு பேபி எண்டு நினைப்பு" என்று மனைவி கோவித்துக்கொள்வாள். 'விசர்க்கதை கதைக்காதே , அவள் குழந்தைப் பிள்ளை" என்று இவன் பாய்வான். மகளிற்கு இந்தச் சண்டையெல்லாம் ஒரு பொருட்டல்ல. அவள் நித்திரைகொள்ள அம்மா பக்கத்தில் வேண்டும் அவ்வளவே.


*****************************************

இவன் எப்போதாவதுதான் கள் அடிப்பான். பிறகு வாயைத் திறக்காமல் மனைவி சொல்லும் வேலைகளைச் செய்வான். அன்றைக்கு சந்தைக்குப் போய் மரக்கறிகூட வாங்கிவருவான். (மற்ற நாட்களில் இது பெண்டுகள் வேலை என்று கழற்றிக் கொள்வான்). இருந்தாலும் அத்தினங்களில் சமையல் பாத்திரங்கள் 'டொங்கு டொங்கு' என்று கொஞ்சம் சத்தம் அதிகமாக வைக்கப்படுவது தனக்குப் புரியவில்லை என்றமாதிரிப் பாவனை பண்ணிக்கொள்வான். அன்றைக்கும் பழைய நண்பன் ஒருவன்தான் 'மச்சான், இப்ப இருக்கிற நிலமையிலை கள்ளடித்தால்தான் கவலை தீரும், வா" என்று ஐந்து சந்திக்குக் கிட்ட இருந்த 'கோப்பரேசனுக்குக்' கூட்டிக்கொண்டுபோனான். விதி வலியது என்பார்கள். அன்றைக்குப் பார்த்து கனபேருக்குக் கவலை போல.கோப்பரேசன் வாடிக்கையாளரால் நிறைந்து வழிந்தது. இதற்கிடையில் இவன் அங்கு போன புலனாய்வுத் தகவல் மனைவிக்குத் தக்க நேரத்திற் கிடைத்திருக்கவேண்டும். இவன் நல்ல மத்தியான வெயிலில் சைக்கிளை ஒருமாதிரி வெட்டி, வெட்டி ஓடிக்கொண்டு இருந்த வீட்டுக்கு வர, வாசலில் இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு ஒரு 'ராங்கிப்' பார்வையுடன் அவள் நின்றிருந்தாள். "சாய், இண்டைக்குத்தான் நீ இன்னும் வடிவாயிருக்கிறாய்.." அன்று ஒரு அசட்டுக் கொமென்ற் அடித்துப்பார்த்தான். அவள் அதைக் காதிற் போட்ட மாதிரித் தெரியவில்லை. "ராதே உனக்குக் கோபம் ஆகாதடி" என்று தியாகராஜ பாகவதர்போல் பாவனை பண்ணிக் கொண்டு பாடிப் பார்த்தான். அது அவளை இன்னும் கோபமூட்டியது.

பிறகு அன்றைக்குப் பிள்ளைகள்தான் "பேச்சுவார்த்தைத்" தூதுவர்கள்.

"கொப்பரைச் சாப்பிடச் சொல்லு.."
"அப்பா, அம்மா சாப்பிடச் சொல்லுறா"
"எனக்குப் பசிக்கல்லையாம் எண்டு சொல்லு.."

இத்தனைக்கும் இருவரும் ஒருவருக்குப் பக்கத்தில் ஒருவராக முழங்கைகள் இடிபடும் தூரத்தில்தான் நின்று கொண்டிருந்தார்கள். ஆளை ஆள் பார்ப்பதை மட்டும் தவிர்த்தார்கள். இவன் பிகு பண்ணிக் கொண்டு சாப்பிடத் தொடங்கினான் . "நீ சாப்பிட்டிட்டியே" என்று அரைக்கோப்பை சோறு காலியாகும்போதுதான் கேட்டான். அவள் ஒன்றும் பேசாமல் தட்டில் சாப்பாட்டைப் போட்டுச் சாப்பிடத் தொடங்கினாள். இவன் அவளைப் பேசச் செய்வதற்காக "சள் புள் " என்று சத்தம் போட்டுச் சாப்பிடத் தொடங்கினான். தண்ணீர்ச் செம்பை "ரர்ர்ர்ர்" என்று நிலத்தில் தேய்த்து இழுத்தான். பிறகு வேண்டுமென்றே "களக் களக்" என்று ஓவராகச் சத்தம் பண்ணிக்கொண்டு தண்ணீர் குடித்தான். அவள் இதுக்கெல்லாம் எடுபடுகிறமாதிரித் தெரியவில்லை. முகத்தில் எதுவித சலனமும் இல்லை; உதட்டில் தெரிந்தும் தெரியாமலும் தோன்றிய சிறு புன்னகை மட்டும் விதிவிலக்கு.

ஆனால் இன்னொருவரின் வீட்டில் 'தொங்கிக்கொண்டு' நின்றபடியால் சமையல் பாத்திரங்களை அவள் 'டொங்கு டொங்கு' என்று வைக்கவில்லை. "இண்டைக்குச் சட்டி, பானைகள் எல்லாம் இடி வாங்காமல் தப்பிட்டுது" என்று சொல்லிவிட்டுக் கடைக்கண்ணால் அவளைப் பார்த்தான். அவள் வந்த புன்சிரிப்பைக் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு முகத்தைக் கடுகடுப்பாக வைத்துக் கொள்ள முயன்றுகொண்டிருந்தாள். பிறகு கன்னம் சிவக்க வெட்கப்பட்டாள். திடீரென இவனுக்கு சொந்த ஊரில் சொந்த வீட்டில் இந்தக் கணமே நிற்கவேண்டும்போல் இருந்தது!

மறுநாள் மனைவி ஒரு உரப்பையையும் ஐநூறு ரூபா காசையும் கொடுத்து அரிசி வாங்கிவரச் சொன்னாள். இவன் கிட்ட உள்ள பெரிய சந்தைகளுக்குப் போகாமல், பழைய பாலத்தையும் உப்புவெளியையும் கடந்து, மீண்டும் 'தப்பி' ஓடிவந்த வழியே இரண்டு ஊர்களைக் கடந்து தனது ஊருக்குப் பக்கத்தில் உள்ள சின்ன ரவுணுக்கு வந்தான். எந்த நேரமும் ஆட்கள் குறுக்கும் நடக்கும் போய்க்கொண்டிருந்தார்கள். அநேகர் சைக்கிள்களில், சிலர் பொடி நடையில். இன்னும் சிலர் உழவு மிசின் பெட்டிகளில். எங்கே இந்த ஓட்டம் முடியப்போகிறது என்று தெரியவில்லை. சந்தியில் உள்ள டீ'க் கடையில் பிளேன் டீ'யும் போண்டாவும் சாப்பிட்டுக் கொண்டு ரோட்டில் போன ஆட்களை வேடிக்கை பார்த்தான். பிறகு வெளியில் வந்து, தெரிந்த ஆட்களிடம் ஊர் நிலவரம் கேட்டான். 'ஆமிக்காரன் போய்விட்டான்' என்றும் 'இல்லை போகவில்லை, ஒளித்து நிற்கிறான்' என்றும் குழப்பகரமான தகவல்கள் கிடைத்தன். ஆனால் யாரும் ஊருக்குத் திரும்பிப் போவதாய் இல்லை. சில வீரவாகுகள் ஊர் போய் அவரவர் வீடுகளில் அத்தியாவசியச் சாமான்களை எடுத்துக் கொண்டு 'உயிருடன் திரும்பி வந்தார்கள்' என்ற தகவலும் கிடைத்தது. இவனுக்கு அவ்வளவு றிஸ்க் எடுக்கத் துணிவில்லை. "நான் ஊர் போய்த் துவக்குச் சூடு வாங்க என்ன முட்டாளா?' என்று தன்னைத்தானே திருப்திப்படுத்திக் கொண்டு அரிசியுடன் திரும்பி வந்தான்.

இவனுக்குப் பகல் பொழுதுகள் நரகமாக இருந்தன. எட்டுப் பத்துக் குடும்பங்கள் இருந்த வீட்டில் மூஞ்சையை மூஞ்சையைப் பார்த்துக் கொண்டி இருக்க முடியவில்லை. வீட்டுக்கு வெளியே என்ன வேலை என்றாலும் வலிந்து செய்யத் தொடங்கினான். அரிசி மரக்கறி வாங்குவது, சங்கக் கடையில் மாவிற்கும் மண்ணெண்ணைக்கும் கியூவில் நிற்பது, என்று எல்லாவற்றிற்கும் நல்ல பிள்ளையாக வீட்டுக்கு வெளியே போய்விடுவான். சாப்பாட்டு நேரம் தவிர பகலில் அவ்வீட்டில் நிற்கமாட்டான். இரவு எல்லாரும் உறங்கியபின் பூனைபோல் சத்தம்போடாமல் உள்ளே வந்து சாப்பிட்டுப் படுப்பான்.

அன்றிரவும் அப்படி ஒன்றும் விசேடமாக இல்லை. சத்தம் போடாமல் சைக்கிளை ஸ்டான்ட் போட்டு நிற்பாட்டிவிட்டு உள்ளே பின் விறாந்தைக்கு வந்தான். மனைவி மண்ணெண்ணை விளக்கைத் தூண்டி விட்டுத் தட்டில் சாப்பாட்டைப் போட்டாள். வழக்கம் போலவே கிட்ட வந்து கள் வாசனை அடிக்குதோ என்று 'செக்' பண்ணிணாள். இவன் எப்போதாவதுதான் கள் அடிப்பான் என்றாலும் அவளுக்கு ஒவ்வொரு நாளும் சந்தேகம். இவன் முகம் ஒரு குறும்புச் சிறுவனின் முகம் போல் மாறியது. "சள் புள் " என்று சத்தம் போட்டுச் சாப்பிடத் தொடங்கினான். தண்ணீர்ச் செம்பை "ரர்ர்ர்ர்" என்று நிலத்தில் தேய்த்து இழுத்தான். பிறகு வேண்டுமென்றே "களக் களக்" என்று ஓவராகச் சத்தம் பண்ணிக்கொண்டு தண்ணீர் குடித்தான். அவள் இம்முறை குபீரெனக் கண்களில் நீர் வரச் சிரிக்கத் தொடங்கினாள்.


Wednesday, January 4, 2012

வழித் துணை

"தம்பி, கண்டு கனகாலம்" குரல் வரவும் ட்ரெயின் பெட்டி உன்னிக் கொண்டு நகர ஆயத்தம் பண்ணவும் சரியாக இருந்தது. ஆளை நிமிர்ந்து பார்த்தேன்.

"உம்மடை அப்பா என்ரை மூத்த அண்ணாவோடை படிச்சவர், நான் நீர் அஞ்சாம்- ஆறாம் வகுப்புப் படிக்கேக்கை ஏ.எல். படிச்சிருப்பன்". இப்போது ஆளை மட்டுக்கட்டக் கூடியதாக இருந்தது. இவரை எனக்குத் தெரியும். பெயர் வாசுதேவன். ஊரில் அலம்பல் கந்தையரின் கடைக்குட்டி என்றால்தான் புரியும்.

"நல்லகாலம் உம்மைக் கண்டது, பயணம் முழுக்கக் கதைத்துக் கொண்டு போகலாம், என்ன சொல்லுறீர்?"

"அதுவுஞ் சரிதான்..."

"வவுனியாவில அக்காவின்ர மகளுக்கு வீடு சொந்தமா இருக்கு; அங்கைதான் ரண்டுநாள் நிண்டிற்று வாறன், நீர்?". விடை சொல்ல ஒன்றரைச் செக்கன் தந்தார். பிறகு தானே தொடர்ந்தார், "பெரியம்மா வீட்டை வந்து போறீர் போல".

"பெரியம்மா வீடு சொந்த வீடோ? வாடகை வீடோ?"

"வாடகை வீடுதான்"

"அக்கான்ரை மகள் சொந்தமா வீடு வாங்கிப் போட்டாள். அவளின்ர மனிசன் கவர்ன்மெண்டில் நல்ல வேலை, தெரியுமே?"

"ஓம்", இல்லை என்று சொன்னால் இன்னும் கதை வளரும்.

"அவர் இப்ப ஏ.ஜி.ஏ எல்லோ!"

"நல்லது"

"அவர் படிக்கிற காலத்தில படிப்பில வலு விண்ணன். இஞ்சினியறிங் படிச்சுக் காடு கரம்பு எண்டு வேலை செய்ய அவருக்கு விருப்பமிலையாம், அதுதான் கவர்ண்மெண்ட் சேர்விஸ் இல சேர்ந்தவர். அவற்றை குடும்பமே படிச்ச குடும்பமெல்லே?"

"நல்ல விஷயம்தானே"

"உமக்குத் தெரியாது, அக்கான்ர மகள் நல்ல வடிவு. அவர் இவளைத்தான் கட்டுவன் எண்டு நிண்டல்லோ கட்டினவர். மருமகள், அதுதான் அக்கான்ரை மகள்.. கல்யாணம் செய்திருக்காட்டி ஒரு டொக்டராகத் தன்னும் வந்திருப்பாள்; அவள் நல்ல கெட்டிக்காரி"

"உண்மைதான்"

"தம்பி இஞ்சினியரிங் செய்யிறீர் எண்டு கேள்விப்பட்டன்"

"ம்ம்ம்"

"இப்ப இஞ்சினியரிங் செய்தால் .. இந்தக் காலங்களில எதிர்காலத்திற்கு நல்லதில்லைத் தம்பி, சம்பளமும் முந்தி மாதிரி ஆகா ஓஹோ எண்டில்லை. பிறகு லஞ்சம் வாங்கித்தான் சமாளிக்கவேண்டும். "

"உண்மைதான், நீங்கள் முதலே சொல்லியிருக்கலாம், நான் விசயம் தெரியாமல் இஞ்சினியரிங் படிக்கத் தொடங்கிப்போட்டன்"

ஆசாமி என் நக்கலைக் கவனித்த மாதிரித் தெரியவில்லை. "என்ரை ஒரு அண்ணற்றை மகனுக்கு உங்கை பெரதேனியாவில இஞ்சினியரிங் செய்யக் கிடைச்சது," தொடர்ந்தார், "அவன் இங்கை படிச்சால் பியுச்சருக்கு நல்லதில்லை எண்டு லண்டனில் படிக்கப் போயிட்டான்"

"அங்கை என்ன படிக்கிறான் தெரியுமே?"
"இல்லை"

"எயறோ நோட்டிக்கல் இஞ்சியரிங்". என்னைக் கொஞ்சம் இளக்காரமாகப் பார்த்தமாதிரித் தெரிந்தது.



*****************************************

இரவு ட்ரெயின். விடியத்தான் கொழும்பை அடையும். பிறகு கண்டி பஸ் பிடிக்கவேண்டும். ட்ரெயின் இல் ஏறினால் பாதிநேரமாவது நித்திரை கொள்ளவேண்டும். மீதி நேரம் வெளியில் பராக்குப் பார்க்க வேண்டும். அல்லது ட்ரெயின் பெட்டிக்குள் பராக்குப் பார்க்கவேண்டும். பெட்டியின் படியில் சில விடலைப் பையன்கள் நின்று கொண்டிருந்தார்கள். அனேகமாக ஏதாவது ஒரு பக்கத்தில் ஒன்றோ இரண்டோ வாலைக் குமரிகளின் கண்பார்வை வீச்சில் இவர்கள் இருக்கலாம். இல்லாவிட்டால் இவர்களின் முகத்தில் இவ்வளவு குதூகலமும் அசட்டுத்தனமும் எப்படி இருக்கும்?

வெளியில் நிறையத் தென்னை மரங்களும் குறுக்குக் நெடுக்குமாக நிறையத் தண்டவாளங்களும் ... பொல்காவலை ஸ்டேசன் ஆக இருக்கலாம். "குறும்ப குறும்ப" என்று இளநீர் வித்துக் கொண்டிருந்தார்கள், கைகளில் இளநீர் சீவும் கூரிய கத்திகளுடன். என்னதான் சொன்னாலும் கூர்க் கத்தியுடன் "அன்புச் சகோதரர்களைக்" கண்டால் அடி வயிற்றில் ஒரு மெல்லிய திகில் வருவதைத் தடுக்க முடிவதில்லை. மரபணுக்கள் வரை அந்தப் பயம் பரவிவிட்டதுபோல.

"தம்பி இளநி குடிக்கப் போறீரே, நான் வழியில் இளநி குடிக்கிறதில்லை, அநியாய விலை?" அவர் கதைக்கத் தொடங்கினார். அவரின் இரண்டாவது அண்ணரின் இரண்டு மகன்மார் லண்டனில் 'மெடிசின்' படிக்கிறார்கள். (உள்ளூரில் ஸ்டாண்டர்ட் காணாது), சின்ன அண்ணிக்கு கல்வயலில் தென்னந்தோட்டம் இருக்கு(மாதவருமானம் 20,000 ரூபா), இலங்கையில் இஞ்சினியரிங் படித்தால் லண்டனில் கோப்பைதான் கழுவ வேண்டும், மூன்றாவது அண்ணா கல்விக்கந்தோரில் நல்ல வேலை (சம்பளம் இரண்டு இஞ்சினியர்களின் சம்பளங்களின் கூட்டுத்தொகைக்குச் சமன்), இலங்கையில் வாத்தி வேலை பார்ப்பவர்கள் எல்லாம் *பேயர்கள் (நான் ஒரு வாத்தியாரின் மகன்), முதலிய அருந்தகவல்கள் நான் ஒரு இளநீர் குடித்து முடிக்கும் நேரத்தில் கிடைத்தவை.


*****************************************


ட்ரெயின் உலுக்கி ப்ரேக் அடிக்கத்தான் விழித்தேன். கோட்டை புகையிரத நிலையம். எதிரில் அவரைக் காணவில்லை. ஸ்ரேசனுக்கு வெளியே வந்தேன். மழை பெய்து ஓய்ந்திருந்தது. றோட்டு எல்லா இடமும் சேறு. யாரும் அதைக் கணக்கில் எடுத்ததாகத் தெரியவில்லை. இந்த அதிகாலையிலும் சுறுசுறுப்பான கொழும்பு நகரம். ஒரு சைவச் சாப்பாட்டுக் கடையில் எட்டுப்பத்து இடியப்பங்களும் ஒரு ரீ'யும் பசியை அடக்கின. உடம்பு உளைந்தது. கண் எரிந்தது. இனி விடுதி போய் ஒரு குளிப்பு அடித்துவிட்டு ஒரு பெருந்தூக்கம் போடவேண்டும். நல்ல சீற் கிடைத்தால் கண்டி பஸ்ஸிலும் ஒரு குட்டித் தூக்கம் போடலாம்.

"நுவர, நுவர" என்று கொண்டக்ரர் கத்திக்கொண்டிருந்த ஒரு பஸ்'ஸினுள் பாய்ந்து ஏறினேன்.

"தம்பி!, நீர் கண்டியே போகிறீர், நல்ல விசயம், பக்கத்தில இரும் கதைத்துக் கொண்டு போகலாம்" . குரல் வந்த திக்கைப் பார்த்தேன். அலம்பல் கந்தையரின் கடைக்குட்டி சாவகாசமாக பட்டர் பூசிய பாணைக் கடித்தபடி... பக்கத்து சீற்றில் உட்காரச் சைகை செய்தார்.



---------------
*பேயன் - முட்டாள்
நுவர- 'கண்டி' நகரின் சிங்களப் பெயர்
பாண்- bread

Thursday, December 8, 2011

காய்ச்சல்காரன்

வாய் கைய்த்தது. உடல் கொஞ்சம் குளிர்ந்தது மாதிரி இருந்தது. நல்ல வெயில் எறித்த காலை நேரம். வெளியில் கூவிய குயில்கூட கொஞ்சம் உசார் இல்லாமல் கூவியமாதிரி இருந்தது. அம்மாவிடம் கேட்டு ஒரு பிளேன் ரீ குடித்தாயிற்று.

முற்றத்தில், நேற்று வந்திறங்கிய விறகுக் குற்றிகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. மண்ணிறம், சாம்பல் நிறங்களில் காட்டு மரங்கள், ஒருவித வாசனையுடன். சில குற்றிகளில் பச்சை இலைகள் ஒன்றிரண்டு இன்னும் காயாமல் இருந்தன. பத்து மணிக்குக் கிட்ட விறகு கொத்த ஆள் வரலாம். குவியலாக இருந்த விறகுக் குற்றிகளை உருட்டி விட்டேன். ஓணான் ஒன்று அவசரமில்லாமல் ஓடியது.

"குரங்கு!, கால்ல விறகுக்குத்தி விழப்போகுது" அப்பா கத்திக் கேட்டது. அப்பா கோபமாக இருந்தால் 'குரங்கு, கழுதை' என விளிப்பார். கொஞ்சம் குஷி 'மூட்டில்' இருந்தால் 'பெரிய பண்டி' என்று கூப்பிடுவார். அக்காவை 'மகாராணி' என்றுமட்டும்தான் கூப்பிடுவார். 'மகாராணியார்' என்று சொன்னால் ஏதோ பிடிக்கவில்லை என்றாகும்.

"காச்சல்காரனை ஏன் திட்டுறியள்?" அம்மா சப்போர்ட்டிற்கு வந்தா.

"இன்னும் மாறல்லையே" அப்பா கிட்ட வந்து நெற்றியில் கை வைத்துப் பார்த்தார். "வெளிக்கிடு ஆஸ்பத்திரிக்கு" என்றார்.

****

"வாயை 'ஆ' காட்டு" டாக்குத்தர் ரோ(ர்)ச்லைற் அடித்துப்பார்த்தார். எனக்கு மனிசன் ஊசி போடப்போகிறாறோ என்றுதான் பயம் வந்தது.
"எத்தினை நாளாக் காச்சல்?" அப்பாவைப் பார்த்துக் கேட்டார்.
"மூண்டு நாளாச்சு"
"வயித்துக் குத்து, வயித்தோட்டம் இருக்கே?" எனக்குக் கொஞ்சம் வெட்கம். வெளியில் இருந்த ஆட்களுக்குக் கேட்டிருக்குமோ?
"இல்லை" அவசரமாக மறுத்தேன்.
"இவன் ஒழுங்காக கக்கூசுக்குப் போறேல்லை" என்று அப்பா சொல்ல வெட்கம் பிடுங்கித் தின்றது.
"கடைசியாக எப்ப போனவர்?" என்று டாக்குத்தர் அப்பாவைக் கேட்க, எழுந்து வெளியே ஓடலாம் போலிருந்தது.

டாக்குத்தரைப் பார்க்க எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மாதிரி இருப்பார், குண்டாகத் தள தள என்று. மீசை இல்லை. எப்பவும் புன்சிரிப்புடன் இருப்பார். என்றாலும் மனிசனைப் பார்த்தால் ஊசி ஞாபகம் வருவதால் நெஞ்சு கொஞ்சம் 'பக் பக்' என்று அடித்துக்கொள்ளும். இன்றைக்கு ஊசி போடவேண்டி வரவில்லை. மனிசன் குனிந்து சதுரவடிவ வெள்ளைத்தாளில் எழுதத் தொடங்கினார்.

"இதை எடுத்துப்பாருங்கோ, 3, 4 நாளில் மாறிவிடும்" என்றார்.

சின்ன மஞ்சள் குளிசைகள், சிவப்பில் இன்னொரு வகை (நக்கினால் மேல்பக்கம் இனிக்கும்), பிறகு கூட்டுக் குளிசைகள், காய்ச்சல் இருக்கும்போது விழுங்க வெள்ளைக் குளிசைகள் (காய்ச்சல் இருந்தால் மட்டும் எடுக்கவும்). இத்தோடு சிவப்புக் கலர் 'சிரப்' ஒன்றும் குடிக்கவேண்டும். ஒருபாதி மஞ்சளாகவும் மற்றப்பாதி சிவப்பாகவும் இருந்த கூட்டுக்குளிசைதான் எழுப்பமானது. காய்ச்சல் மாறின பிறகு பள்ளிக்கூடம் போனால் 'கப்சூல்' குளிசை விழுங்கித்தான் காய்ச்சல் மாறியது என்று பீற்றிக்கொள்ளலாம்.

கிளினிக்கில் இருந்து ஊசி போடாமல் வந்தது சந்தோஷம். என்றாலும் மிக முக்கிய வேலை ஒன்று மிச்சம் இருந்தது.

"அப்பா" உலகத்தின் ஆகத்திறம் அப்பாவை, ஆகத்திறம் மகன் கூப்பிடுகிறமாதிரிக் குரலை வைத்துக் கொண்டேன்.
"என்னடா?"
"வி.சு.க்.கோ.த்.து..." ஒருமாதிரி மெல்லமாக இழுத்துச் சொல்லிவிட்டு உண்மையாகவே கொஞ்சம் தயங்கினேன். அப்பா என்னைப் பார்த்தார். ஆள் இளகிவிட்டார். சைக்கிள் கணேஸ் கடையை நோக்கித் திரும்பியது. நான் உண்மையாகவே மகாராசா மாதிரிப் பாவனை பண்ணிக்கொண்டு சைக்கிள் 'கரியலில்' உட்கார்ந்து இருந்தேன்.

திரும்பி வரும்போது சைக்கிள் ஹாண்டிலில் கொழுவிருந்த வயர்க்கூடையில் இருந்த 250 கிராம் 'நைஸ்' பிஸ்கட்டிலும், தோடம்பழ இனிப்புச் சரையிலும்தான் மனம் இருந்தது.

"தம்பிமாருக்கும் குடுத்துத் தின்ன வேணும், தெரியுதே?"
"ம்ம்ம்.. " அரைகுறை மனத்துடன் சொன்னேன்.
"கொக்கா கேட்கமாட்டாள், அவளுக்கும் ஒரு விசுக்ககோத்துக் குடு என்ன?"
"சரி அப்பா". அக்காவிற்கு கொடுத்துவிட்டுத் திருப்பி வாங்குவது கஷ்டம் இல்லை.

****
பின்னேரம் தாத்தா வந்தார். கையில் இருந்த பையில் மூன்று செவ்விளநீர்களும் இரண்டு தோடம்பழங்களும்.
"இவனுக்குக் காய்ச்சல் எண்டு கேள்விப்பட்டன்", உரத்த குரலில் சொல்லிக்கொண்டு வந்தார். இவர் மெல்லிய குரலில் சொன்னால்தான் அதிசயம். காய்ச்சல் நேரத்தில் இளநீர் எனக்குப் பிடிக்காது. யார் அதைக் கணக்கில் எடுத்தது? தாத்தா மொட்டைக் கத்தியால் 'சத், சத்'என்று இளநீர் வெட்டுவது கேட்டது. குடித்தே ஆகவேண்டும். தப்ப முடியாது.

"இந்தக் காலத்துப் பெடியங்களுக்குக் காச்சல் பீச்சல் எண்டு எப்பவும்; நானும் இருந்தன், சின்னப்பிள்ளை வயதில ஒரு காச்சல் வந்திருக்குமே?" தாத்தா எடுத்து விட்டுக் கொண்டிருந்தார். எவர்சில்வர் கப்பில் இளநீர் வந்தது. இளநீரைக் குடிக்க 'சத்தி' வரும்போல் இருந்தது. ஒருமாதிரி அடக்கிக் கொண்டேன். தம்பிமார் இளநீர் வழுக்கைக்கும் 'கயருக்கும்' அடிபடத் தொடங்கினார்கள்.


****
இரவு நித்திரை கொள்ளமுடியவில்லை. இடையில் அப்பா வந்து வியர்த்துப் போயிருந்த தலையைத் கோதிவிட்டார்; பிறகு போர்வையை இழுத்துக் கழுத்துவரை மூடிவிட்டார். பிறகு அம்மாவும் அக்காவும் அதே வேலையை இரண்டு இரண்டு மணித்தியால வித்தியாசத்தில் செய்தார்கள்.

காலையில் எழும்போது தலை நல்ல 'கிளியராக' இருந்தது. பசியும் வயிற்றைக் கிள்ளத் தொடங்கியது. இனிக் காய்ச்சல் அடிக்கமாட்டாது என்று புரிய எதையோ இழந்தது மாதிரி இருந்தது.



--------------

பண்டி - பன்றி
கொக்கா (யாழ் பேச்சு வழக்கு) - உனது அக்கா

Thursday, June 2, 2011

தட்டை வடைகளும் ஒரு 'உண்மை' நண்பரும்

காதுக்குள் குளிர் புகுந்து இம்சை பண்ணியது. உச்சந்தலையிலும் குளிர் சுள்ளென்று பிடித்தது. அன்றுதான் சனியும் பிடிக்கப்போகுது என்று புரியாமல் இடியப்பக் கடைக்குள் பாய்ந்து உள்ளிட்டு "ரண்டு ஃபிஷ் ரொட்டியும், ரண்டு வெஜி ரோல்ஸ்ஸும் தாங்கோ" என்றேன்.

"ஐயோ இவ்வளவு மயிர் கொட்டுண்டு போச்சு உங்களுக்கு" என்று பின்னுக்குக் கேட்டது. திரும்பிப் பார்த்தால் 'நண்பர்' நின்று கொண்டிருந்தார். நண்பருக்குத் தும்புத்தடி மாதிரி நிறையத் தலைமுடி. அதைப் பகரவீ நிறத்திற்குச் சாயம் அடித்திருந்தார். "ஞாபகம் இருக்கே? உங்களுக்கு ரண்டு வருசம் ஜூனியராகப் படிச்சனான்? இப்பதான் வந்தனான் ஒஸ்ரேலியாவுக்கு , வேலையும் எடுத்துட்டன், என்ன கார் லைசன்ஸ்தான் இன்னும் எடுக்கல்லை" என்றார். கையில் இருந்த சின்னச் சரையில் இருந்து தட்டை வடையொன்றை எடுத்து நீட்டினார்.

வடையைக் கடித்துக்கொண்டு, 'ஆரப்பா இவன்' என்று யோசனையில் ஆழ்ந்தேன். கற்பனையில் அவரின் தலைமுடியைக் கறுப்பாக்கினேன். ஆளை ஒரு பதினைந்து வருடங்கள் இளமையாக்கினேன். அவரின் பிள்ளையார் போன்ற உடம்பை, முருகனின் உடம்புபோல் 'ஒல்லி' ஆக்கினேன். அப்பவும் பிடிபடவில்லை. 'மொட்டையனாக ஆகியும் இவன் என்னை அடையாளம் கண்டு பிடித்துவிட்டான்', எனக்குக் கொஞ்சம் வெட்கமாயிற்று.

நண்பர் வலு நிதானமாக இன்னொரு வடையை எடுத்து நீட்டினார், "இன்னும் கண்டு பிடிக்கவில்லைப் போல, நான் சுகுமார், பூனை சுகுமார் எண்டா ஞாபகம் வரும்". பூனை மாதிரி வந்ததும் தெரியாமல், போனதும் தெரியாமல் வலு அமைதியாக இருந்ததால் வந்த பெயர். "நல்லா மாறீட்டாயடாப்பா, வண்டி எல்லாம் வைத்து", என்று அசடு வழிந்தேன்.

'சரி இப்ப உங்கடை மொபைல் நம்பரைத் தாங்கோ, பிறகு கதைக்கிறன்," என்று நம்பரையும் எடுத்தார் நண்பர்.

சரியாக இரண்டு நாட்கள் கழித்து நண்பரின் அழைப்பு வந்தது. மிக மெல்லிய குரலில், பக்கத்தில் யாரோ ஒட்டுக்கேட்பதைத் தவிர்ப்பதுமாதிரிப் பேசினார்.

"ஒரு சின்ன உதவி..."
"சொல்லுங்கோ"
"இந்த டிரைவிங் லைசன்ஸ் விசயம்... நான் ரண்டு மூண்டு தரம் RTA இலே டெஸ்ட் கொடுத்தாச்சு, இன்னும் சரிவரல்லை."
"ஐயோ இங்கை ஊர்மாதிரி இல்லை, காசு தள்ளி எல்லாம் எடுக்க முடியாது" என் உள்ளூர் அறிவை மெதுவாகப் பறை சாற்றினேன்.

"ஹா ஹாஹ் ஹா" என்று எதிர்முனையில் நண்பர் ஏதோ தலைசிறந்த நகைச்சுவையைக் கேட்டமாதிரிச் சிரித்துக் கொண்டிருந்தார்.

"இல்லையப்பா, டிரைவிங் பழக்கிற ஆள் சொன்னார், ஆரேனும் நண்பர் மூலம் கொஞ்சம் அதிகம் ஓடிப் பழகச் சொல்லி. கிழமைக்கு ஒருநாள் அந்த ஆளட்டை பழகிறது போதாதுதானே?"

"போதாதுதான்!"

இப்படித்தான் ஆறுமுறை தவறி, ஏழாவது முறை டிரைவிங் லைசன்ஸ் எடுத்த நான் நண்பருக்குக் கார் ஓட்டப் பழக்கிய சம்பவம் தொடங்கியது.

காருக்கு முன்புறமும் பின்புறமும் பெரிய L என்று எழுதிய அட்டைகளை மாட்டிவிட்டு , சிட்னியில் உள்ள பெரிய பெரிய வீதிகளில் எல்லாம் ஆமை வேகத்தில் நண்பர் என் அறிவுறுத்தல்களின்படி கார் ஓடிப் பழகினார். சொறிப்பார்வைகள், நடுவிரல் உயர்த்தல்களையெல்லாம் புத்தரின் உண்மையான சிஷ்யர்கள் போல் புன்னகையால் எதிர் கொண்டோம். என் 'திறமையான' பயிற்சியளிப்பால் நண்பர் மிகக் குறுகிய எட்டு மாதங்களில், இன்னும் நாலே நாலு முறை முயற்சித்து, டிரைவிங் லைசன்ஸ் எடுத்துவிட்டார். பிறகு ஒருநாள் ஒரு சின்னச் சரையில் கொஞ்சத் தட்டை வடைகளையும் நிறைய நன்றிகளையும் எடுத்து வந்தார்.

இதுக்குப் பிறகு நான் நண்பரை மறந்துவிட்டேன். ஆனால் நண்பர் இடைக்கிடை நட்பைப் புதுப்பித்துக் கொண்டிருந்தார். ஒரு வருடம் கழித்து நான் ஊருக்குப் போக ஆயத்தம் பண்ணிக் கொண்டிருக்கும்போது வாய் நிறையப் புன்னகையுடனும் கையில் நாலு கிலோ எடையில் ஒரு 'சின்னப்' பையுடனும் வீடு வந்து சேர்ந்தார்.

"அண்ணை ஊருக்குப் போறியள் எண்டு கேள்விப்பட்டன். இந்தச் சின்னப் பார்சலை கொழும்பிலை என்ரை மனிசியின்ரை தம்பியிட்டை கொடுத்து விடுவியளே?"

நன்றிக்கடனாக நண்பர் தட்டைவடைச் சரை ஒன்றை எனக்குத் தரவும் மறக்கவில்லை.

-----
நட்பு மிக ஆழமானது என்று மீண்டும் ஆறு மாதங்களின் பின் புரிந்தது.

"அண்ணை ஒரு சின்ன உதவி," நண்பர் வழக்கம்போல் மெல்லிய குரலில் தொலைபேசினார்.
"சொல்லுங்கோ"
"மாமா ஊரிலை இருந்து வாறார், சிட்னி எயர்போர்டில் இருந்து கூட்டி வரவேணும், எனக்கு உந்தப் பெரிய பெரிய ரோட்டுகளிலை கார் ஓடப் பயமாக இருக்கு. இப்பதானை லைசன்ஸ் எடுத்தனான். நீங்கள்தான் கார் ஓடவேணும், சனிக்கிழமை இரவுதான் வாறார். ஏலும்தானே?"

சிட்னி விமான நிலையத்திலிருந்து திரும்பி வரும்போது , 'மாமா' என் வாகனமோட்டும் திறமையை வெகுவாகப் புகழ்ந்து கொண்டு வந்தார். மாமா கொண்டு வந்த 'பருத்துறை' வடைகளில் பாதி எனக்குக் கிடைத்தது.

-----
நட்பு இன்னும் ஆழமானது என்று இன்னும் ஆறே மாதங்களிற் புரிந்தது.

ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலையில், நடுத்தர வயதைத் தாண்டிய என் கார் சண்டித்தனம் பண்ணி நடுவீதியில் நின்றுவிட்டது. இரண்டு வெள்ளைக்காரத் தடியன்கள் 'பாவம்' பார்த்துத் தள்ளியதில் காரை வீதியின் கரையில் நிறுத்திவிட்டேன். 'வீதி உதவி'(road assist) இற்கு வருடச் சந்தா கட்ட மறந்து விட்டேன். இப்ப கூப்பிட்டால் பெரிய தொகையை உருவி விடுவார்கள், கட்டணமாக.

காருக்கு வெளியே வந்தேன். காதுக்குள் குளிர் புகுந்து இம்சை பண்ணியது. உச்சந்தலையிலும் குளிர் சுள்ளென்று பிடித்தது. சூடாக மொறுமொறுப்பாக 'ரண்டு ஃபிஷ் ரொட்டியும், ரண்டு வெஜி ரோல்ஸ்ஸும்' சாப்பிட்டால் நன்றாக இருக்கும் போல இருந்தது.

ஆங் , என் மறதி மண்டைக்குள் தலை முடியைப் பகரவீ நிறத்திற்குச் சாயமடித்த நண்பர் வந்தார். செல்பேசியில் நண்பர் உடனே கிடைத்தார்.

இப்ப என் முறை, "மச்சான் ஒரு சின்ன உதவி"

"சொல்லுங்கோ" என்றார் நண்பர் எதிர் முனையில். சொன்னேன்.

"அண்ணை குறை நினையாதீங்கோ, நான் அந்தப் பக்கம் இப்ப வர வேண்டிய தேவையில்லை. அதுதான் ... "

"தம்பி , நீங்கள் இந்தப் பக்கம் வர வேண்டிய தேவையில்லைதான், ஆனால் ஒருக்கா வந்து என்னைப் 'பிக்கப்' பண்ணிக் கொண்டு வீட்டில் விட்டு விடுகிறீயளே? இஞ்சை குளிராக் கிடக்கு"

"அண்ணை திருப்பச் சொல்லுறன் குறை நினையாதீங்கோ. நான் உந்தப் பக்கம் வர வேண்டியிருந்தால் கட்டாயம் உங்களுக்கு உந்த உதவியைச் செய்ய மாட்டனே? இப்ப நான் தேவையில்லாமல் ரண்டு கிலோமீட்டர் கார் ஓடி உங்கை வரக்கிடையிலே, நீங்கள் கிட்ட இருக்கிற வேறை ஃப்ரென்ட்ஸைக் கூப்பிடலாமே!"

ஒரு உதவியும் எதிர்பாராமற் செய்யும் உதவிதானே உண்மை நட்புக்கு அழகு? இது ஏன் எனக்கு இப்பதான் புரிகிறது?

************************************

நன்றிகள்: படம் http://n-aa.blogspot.com/2010/12/blog-post_24.html இலிருந்து


சரை = பொதி, பொட்டலம்
வண்டி = தொப்பை
RTA - Roads & Traffic Authority

Monday, May 23, 2011

பணப் பையைத் தொலைத்தவன்

"நண்பனே" , என்று அந்தக் குரல் என்னை அழைத்தபோது, நான் "தூங்காபி" ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தேன். அன்று கிறிஸ்தமஸ் தினம் வேறு. 50 அடி நடைக்குள் வரும் மூன்று இடியப்பக் கடைகளில் ஒன்றாவது மூடாமலிருக்க வேண்டும். இல்லாவிட்டால் இரவுச் சாப்பாடும் பாண் தான்.

குரல் வந்த திசையில் தலையை நிமிர்த்திப் பார்த்தேன். 6 அடி 4 அங்குலத்திற்கும் குறையாத உயரத்தில் நம் "சகோதர" இனத்தவன். கொஞ்சம் சதுர முகம். கருப்பான சுருட்டை முடி. மண்ணிறக் கண்கள். இந்த மார்கழி வெக்கையிலும் கோட் , சூட் போட்டிருந்தான். நல்ல வேலையில் இருக்கவேண்டும். சில ஆங்கிலப் படங்களில் வரும் வில்லன் மாதிரிச் சுமாராக இருந்தான். இவன் பூர்வீகம் இத்தாலி அல்லது கிரேக்கமாக இருக்கவேண்டும் என்று எண்ணிக் கொண்டேன். பக்கத்தில் நின்றவள் அவன் மனைவி அல்லது துணைவியாக இருக்கவேண்டும். உயரமாக, ஒல்லியாக வில்லு மாதிரியிருந்தாள். அவளின் காலைக் கட்டிக் கொண்டு ஒரு நான்கு வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை. நீலக் கண்கள். நீளமான, பொன்னிற முடி. குழந்தை அம்மா மாதிரியே அழகாக இருந்தது.

நான் வாய் பார்த்துக் கொண்டு நின்றதால் பதில் சொல்ல மறந்து போய் விட்டேன் போலிருக்கிறது.

"தொந்தரவிற்கு மன்னிக்கவும், என் பெயர் மார்க்கஸ் செர்ஜோபௌலஸ். இவள் என் துணைவி கிளாரா , இவள் சாரா - என் குழந்தை , அப்படித்தான் நினைகிறேன்" என்று வெடிச் சிரிப்புச் சிரித்தான்.

அவளும் நக்கலுக்குக் குறைந்தவள்போல் இல்லை.

"நானும் அப்படித்தான் நினைக்கிறேன்" என்று கண் சிமிட்டினாள்.

"என் பெயர் சுப்ரமணியம் வாசுதேவன்" , வேண்டுமென்று பாஸ்போர்ட் இல் இருக்கிறமாதிரிச் சொன்னேன்.

இப்ப அவன் கொஞ்சம் கிட்ட வந்தான். குரலைத் தாழ்த்தி, "இன்றைக்குக் கிறிஸ்மஸ் தெரியுமா?" என்றான். 'கிறிஸ்மஸ், கோட் , சூட் போட்ட வெள்ளைக்காரன், அடுத்து என்ன , பைபிளை எடுத்து நீட்டப் போகிறான்' என்று யோசனை ஓடியது.

"எல்லா வங்கிகளும் பூட்டு. கடைகளும் பூட்டு", என்று தொடந்தான். "இடியப்பக் கடை திறந்திருக்கும்" அன்று நான் என் உள்ளூர்த் தகவல்திரட்டை எடுத்துவிடமுன், "நான் என் பணப்பையைத் தொலைத்து விட்டேன்" என்றான்.

பணப்பையைத் தொலைத்துவிட்டுத் 'தேடுவபவர்களை' நான் துபாய் தேய்ராவில், ஷார்ஜா கிரிக்கெட் கிரவுண்ட்டிற்கு வெளியே, சிறிரங்கம் கோவில் உள்வீதியில், கொழும்பு /கோட்டை பஸ் ஸ்ராண்ட்டில், இன்னும் பின்னுக்குப் போனால் யாழ்ப்பாண நகரத்தில் எல்லாம் சந்தித்திருக்கிறேன். எல்லாரும் நிறையத் தூரத்தில் இருந்துதான் வந்திருப்பார்கள். எல்லாருக்கும் அது நண்பர்கள் இல்லாத புது நகரமாகத்தான் இருக்கும். இப்பதான் ஞாபகம் வருது. எல்லாரும் நாகரிகமாக "இங்கிலிஷ்" பேசுவார்கள். எல்லாரும் வீட்டுக்குப் போக பஸ் காசு கேட்பார்கள். மறக்காமல் எங்கள் பெயர், விலாசத்தையும் எழுதி வைப்பார்கள், காசைத் திருப்பி அனுப்பத்தான்!

நான் கொஞ்சம் உஷார் பேர்வழி. 'யாரிடமும் ஒருக்காக்கூட ஏமாந்ததில்லை' என்று மனைவியிடம் சொல்லியிருக்கிறேன். அவள் நம்பியமாதிரித் தெரியவில்லை.

நான் வேண்டுமென்று ஒன்றும் சொல்லவில்லை. ஒரு சிறிய அசௌகரியமான அமைதி. "என் கார் அங்கே நிற்கிறது, பார்" என்று எதிற்பக்கம் சுட்டிக்காட்டினான். "அப்பாடா, இது ரிக்கற் வாங்கப் பணம் கேட்கப்போகும் வகையல்ல" என்று ஒரு சின்ன ஆசுவாசம். தூரத்தில் தெரிந்த காரைப் பார்த்தேன். புத்தம் புதிய காரல்ல. என்றாலும் என் நகரும் தகரக் கூடு போலிருக்கும் காருடன் பார்க்கும்போது எவ்வளவோ பரவாயில்லை. "இவன் பைபிள் பேர்வழிதான்" என்று முடிவு கட்டிக்கொண்டிருக்க, "தந்தையே, பசிக்கிறது, மக்காஸ் போவோம்" என்று சிறுமி அழத் தொடங்கினாள்.

"சரி, உன் நேரத்தை அதிகம் எடுக்க விரும்பவில்லை. உன்னைப் பார்த்தால் கௌரவமான பேர்வழி போலுள்ளாய்; என் காருக்குப் பெற்றோல் தீர்ந்துவிட்டது. முந்தியே சொன்னேனே, என் பணப் பையும் தொலைந்து விட்டது. ஒரு முப்பது டொலர் இப்போது தருவாயாயின், நான் வீடு போய்ச்சேருமட்டுமளவிற்குப் பெற்றோல் போட்டுவிடுவேன், ஒரு நண்பனுக்கு நண்பனாக இந்த உதவியைச் செய்யமாட்டாயா?" என்று கெஞ்சும் தொனியிற் கேட்டான்.

என்ன சொல்லி இவனைக் "கழட்டுவது" என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

******************

"எங்கேயப்பா இடியப்பம்? வழக்கம்போல் மறந்தாச்சோ?", இது மனைவியின் வரவேற்பு.
"அது பெரிய கதை". கதையைச் சொல்லத் தொடங்கினேன்.

முடிக்கமுன்னே "நான் மிச்சத்தைச் சொல்லுறன். கொடைவள்ளல் அவன் கேட்கமுன்னே அம்பது டொலரைத் தூக்கிக் குடுத்திருப்பீங்கள்" என்றாள்.

"ஹா ஹா பிழை, முப்பது டொலர் மட்டும்தான் இருந்தது. குடுத்துட்டன். அவன் திருப்பியனுப்புவான். "அக்கவுன்ட்" நம்பரெல்லாம் எழுதிக் கொண்டு போறான்."

"வடிவாக அனுப்புவான், வட்டியும் சேர்த்து, இருக்கட்டும் ஒரு கேள்வி"

"கேள்"

"அவள் வடிவோ?"

"சே, சும்மா ஒரு சாதாரண 'லுக்'தான்" என்றேன்!


------------

மக்காஸ் = Maccas = McDonalds
mate - இதை "நண்பன்" என்று மொழிபெயர்ப்பது மிகச் சரியாகாது. வேறு பொருத்தமான சொல் அகப்படவில்லை.

Wednesday, April 20, 2011

தாத்தாவும் மற்றவைகளும்

மழை மெதுவாகத் தூறிக்கொண்டிருந்தது. வெளியில் போக முடியாது. ஏழாவது பேரன் அனுப்பியிருந்த "Bunnings " என்று பெரிதாக எழுதிருந்த கனமான பெரிய குடையை முன்போல இலேசாகத் தூக்க முடிவதில்லை. மணியங் கடையில் வாங்கிய சின்னக் குடை ஒழுகும். சமாளித்து வெளிக்கிட்டாலும் எங்காவது விழுந்து வைக்காமல் திரும்பி வரவேணும். இல்லாவிட்டால் மனிசி திட்டும். "அப்பனே முருகா, பின்னேரத்துக்கிடையில மழையை நிப்பாட்டு" என்று வேண்டிக் கொண்டார்.

ரேடியோவைப் போட்டார். "புத்தூரைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை தங்கராசா மரணமானார். அன்னார், ......." என்று உலகத்தில் உள்ள கால்வாசி நாடுகளில் உள்ள உறவினர்களின் பெயர்கள் வந்தது. இதில் வரும் பேரப்பிள்ளைகளின் பெயர்கள் வாயில் புகுவதில்லை. "நிமிஷன் , நமேஷன், வமிஷா, கநூஷா.." என்று இருந்தது.

காலமை சாப்பிட்ட தோசை இன்னும் செமிக்கவில்லை. மழைநாட்களில தப்பாது வீட்டு முற்றத்தில் தாவித்திரிகிற தவளைகளையும் காணவில்லை. வளவு முழுவதும் பரவியிருந்த ஈசல் செட்டைகள் முதல்நாள் பின்னேரத்தின் மழையிருட்டை ஞாபகப்படுத்தின. முதல்நாள், பின்னேரம் நாலு மணிவரை கொட்டுமழை. நாலு மணிக்குப்பிறகு ஒரே மழையிருட்டு.

மத்தியானமாகத் தூறல் நின்றுவிட்டது. குளிக்கவென்று கிணத்தடிக்குப் போனார். கிணற்றிற்குள் இருந்து தவளைக் கச்சேரி கேட்டது. "சே , இது வேறை ஒண்டு" என்று அலுத்துக் கொண்டார். துலா உடன் மல்லுக் கட்டி நாலு வாளி தண்ணீரில் குளித்து முடித்தார். மறக்காமல் திருநீறு பூசினார். மனிசி தட்டில் வைத்த சாப்பாட்டை "கப்சிப்" என்று விழுங்கினார். இந்நேரம் மனிசி "வாத"த்திற்கு எண்ணை பூசிவிட்டு கண்ணயர்ந்து இருக்கும். இப்போதெல்லாம் மத்தியானங்களில் அவரிற்கு நித்திரை வருவதில்லை.

பின்னேரம் வரை என்ன செய்வது என்று யோசித்தார். "கேற்"றைத் திறந்து வெளியில் நடந்தார். ஆளில்லாத நாலு வீடுகளைத் தாண்டியதும் பள்ளிக்கூடம் வந்தது. "playgrounds " இனை ஒட்டியிருந்த மதிலில் இரண்டு முழங்கைகளையும் ஊன்றி தலையைக் கைகளில் முட்டுக் கொடுத்து , கிரிக்கெட், காற்பந்து என்று விளையாடும் சிறுவர்களைப் பார்த்தார். கொஞ்ச நேரந்தில் கால் மூட்டுக்களில் விண் விண் என்று வலி. தொடர்ந்து நிற்க முடியவில்லை. மனிசியிடம் "வாத" எண்ணை கொஞ்சம் கடன் வாங்கிப் பூச வேண்டும் என்று யோசித்தார். "உந்தப் பச்சை, சிவப்பு, கத்தரிப்பூக் கலர் எண்ணைகளை ஊத்திப் போட்டுக் கொஞ்சம் நட, எல்லாம் போய்விடும்" என்று மனுசிக்குக் கொடுத்த மருத்துவ அறிவுரைகள் திரும்பி விழும் என்பதில் சந்தேகம் இல்லை.

பள்ளிக்கூடத்தில் எதோ ஒரு பாடம் முடிந்து மணி அடிக்க நடக்கத் தொடங்கினார். இம்முறை சின்ன வைரவ கோவிற் பக்கம் போனார். ஒருவரும் இல்லை. முன்பெனில் குறைந்த பட்சம் வீட்டிற்குத் தெரியாமல் கள் அடித்துவிட்டு கள்மணம் "ஆறுமட்டும்" ஓய்வெடுக்கும் பேர்வழிகளாவது கோவிலிற்கு எதிரில் இருக்கும் ஒரு மரத்திற்குக் கீழ் இருப்பார்கள். இப்ப இலையான்கள், காகங்களுடன், மழை காலமென்பதால் நிறையத் தவளைகளும் தென்பட்டன. கலட்டிச் செடிகள் பூத்திருந்தன.நிறைய வண்ணாத்திப் பூச்சிகள் கண்ணுக்குப் பட்டன. கோயிலும் வெளிநாட்டுப் புண்ணியவான்களின் நன்கொடையில் பளிச் என்று பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்தது. ஆனால் சின்ன மேளம், பெரிய மேளம், சேக்கஸ், இரண்டு மூன்று "லைற் மெசின் " போட்டு கலர் "டியூப்" லைற் கட்டித் திருவிழா நடந்தது எல்லாம் பழைய காலம். ஒவ்வொரு திருவிழா முடியவும் இரண்டு மூன்று கல்யாணங்களும் , இன்னும் இரண்டு மூன்று காதல்களும் "செற்" ஆகும்.

மனதில் தோன்றிய வெறுமை முகத்தில் தெரியவில்லை. திருப்பி வீட்டை நோக்கி நடந்தார். வழியில் வந்த "வாசிக சாலை" யில் இருந்த வாங்கில் குந்தினார். அலுப்பாக முன்னால் மேசையில் இருந்த பேப்பர்களைப் பார்த்தார். "என்ன வரப்போகுது, களவு, கொள்ளை, கொலை, ஆட் கடத்தல், சினிமா நடிகைகளின் படங்கள்.' என்று மனதிற்குள் அலுத்துக் கொண்டார்.எதிரில் வாங்கில் இருந்த செல்லையர் "வாங்கோ பெஞ்சனர்" என்று வரவேற்றார். இதில் "பெஞ்சனர்" என்பது ஒரு நக்கல். மாதமாதம் வெளிநாட்டில் இருந்து கொஞ்சம் காசு கைச்செலவுக்கு வருவதைத்தான் செல்லையர் குறிப்பிட்டார். செல்லையருக்கு மூத்த மகளும், கடைசி மகனும் மட்டும் நாட்டில். மிச்சப் பிள்ளைகள் வெளிநாட்டில்தான்.

பின்னேரமாக , பெரிய வேப்ப மரங்களும் பூவரச மரங்களும் நின்ற நீண்ட பாதையால் நடந்து, அந்த ஊரில் இருந்த ஒரே ஒரு "communication centre" இனை அடைந்தார்.

"என்ன அப்பு, இண்டைக்காவது லைன் கிடைக்குதா எண்டு பார்ப்பம்" என்று இவரைக் கேட்காமலே டெலிபோன் இனை அழுத்தத் தொடங்கினார், அங்கு வேலையில் இருந்தவர்.

"ஹலோ" என்று நித்திரைத் தூக்கத்தில் ஒரு குரல் ஒலித்தது.
"சுட்டி, நான் அப்புவடா" என்று ஆர்வத்தோடு சொன்னார். சின்ன மகனை "சுட்டி" என்றுதான் கூப்பிடுவார். இயற்பெயர், அந்த நாள் யாழ்ப்பாண ஸ்டைல் இல் "சிறிசற்குணநாதன்"

"அப்பு நான் இப்பதான் வேலையால வந்து நித்திரை கொள்ளத் தொடங்கின்னான், என்ன விஷயம் " குரல் கொஞ்சம் எரிச்சலாக ஒலித்தது.

"இல்லை ,கன நாளா உன்ரை குரலைக் கேட்கவில்லை, அதுதான்......... "

"அப்பு எனக்கு இப்ப நேரமில்லை, காசு ஏதும் தேவையே?" குரலில் விரைவாக ஆளைக் கழட்டிவிடும் அவசரம் தெரிந்தது.

அவரிற்கு தொடர்ந்தது ஒரு கிழமையாக டெலிபோன் எடுக்க முயற்சித்தது ஞாபகம் வந்தது. படக்கென்று லைனைத் துண்டித்தார்.

வீடு வரும்போது மத்தியானம் சாப்பிடவில்லை என்பதைவிட இனிமேல் மாதா மாதம் வரும் காசு நின்று விடுமோ என்ற பயம்தான் அவரின் முன்னே நின்றது.

Tuesday, April 12, 2011

"-------" கள் தினம்.

காலையில் எழுந்ததில் இருந்து எல்லாம் வித்தியாசமாக இருந்தது. மனைவி போட்டுத்தந்த தேத்தண்ணி தேவாமிருதமாக இருந்தது. அதைக் குடித்துப் போட்டு இன்னுமொரு குட்டிப் தூக்கம் போட்டேன். "பொறுப்பில்லாமல்" நித்திரை கொள்வதாக மனைவி சொல்லவில்லை. இரண்டாம் தரம் அடித்த "அலாரம்" மணிக்கூட்டு கூட சங்கீதமாக ஒலித்தது.

வழக்கம் போலில்லாமல் நிதானமாய்க் குளித்து, நிதானமாய்ச் சாப்பிட்டுவிட்டு பஸ் ஸ்டாண்ட் போனேன். பஸ் ஸ்டாண்டில், சும்மா புன்னகைத்தாலும் பதிலுக்கு முறைக்கும் அந்தச் சீனன், இன்று வலியக் "காலை வணக்கங்கள்" என்றான். வெள்ளைக்காரங்களுக்கு மட்டும் காலை வணக்கம் சொல்லும் நாதனும் (தன் பெயர் நேத்தன் என்றுதான் அடம் பிடிப்பார்) இன்று "என்ன சுகமே, நல்ல weather என்ன?" என்று தமிழில் கேட்டார். பக்கத்தில் வெள்ளைக்காரங்கள் இல்லை அதுதான் என்று நினைத்துக் கொண்டேன்.

பஸ்ஸில் ஏறினேன். "இன்றைக்கு டிக்கெட் தேவையில்லை" என்று கனிவான புன்னகையுடன் டிரைவர் கூறினார். குழப்பமாக இருந்தது. என்றாலும் நாலு டொலர் முப்பது காசு சேமித்தது புளுகாக இருந்தது. படக்கென்று 105.5 ஆல் பெருக்கிப் பார்த்து அற்பச் சந்தோசம் கொண்டேன். (1 A$ = 105.5 SL Rs). பஸ் கூட டிராபிக் ஜாமில் மாட்டவில்லை. பஸ் உள்ளிற்கும் வெப்பநிலை மிகச் சரியாக இருந்தது. வழக்கமாகக் கை, கால்கள் விறைக்கிற அளவிற்கு இருக்கும். "எல்லாம் சரியாக இருக்குது, இண்டைக்கு ஏதோ பெரிய பிரச்சினை வரப்போகுது" என்று மனம் அடித்துக் கொண்டது. (வெளிக்கு மாத்திரம் ஐயா "எனக்கு மூடக் கொள்கைகள் எல்லாம் கிடையாது" என்று தம்பட்டம் அடித்துக் கொள்வார். )

அலுவலகத்தில் அடுத்த ஆச்சரியம் காத்திருந்தது. என்னைப் பார்த்து வழமையாக முறைக்கும் வரவேற்பாளினி முகம் மலர "காலை வணக்கங்கள்" என்றாள். எனக்குப் நேரே பின்பக்கம் யாரவது நிற்கின்றார்களா என்று பார்த்தேன். இல்லை. இப்ப பயம் கொஞ்சம் கூடப் பிடித்தது. அடித்துப் பிடித்து என் வழமையான இடத்திற்கு வந்து கதிரையில் குந்தினேன். எல்லோரும் இன்று புதிதாக ஞானம் பெற்றவர்கள் போல இருந்தார்கள். பிடரிப் பக்கம் கொஞ்சம் குறுகுறுப்பாக இருந்தது. எல்லாருக்கும் பொதுவாக ஒரு அசட்டுச் சிரிப்பை வரவழைத்தேன்.

இரவுச் சாப்பாடும் "கல்யாண சமையல் சாதம்" போல் இருந்தது. பெரிய மகன் "அப்பா இண்டைக்கு நான் எல்லா வீட்டு வேலைகளையும் நீங்கள் சொல்லாமலே செய்து விட்டேன்" என்றான் சுந்தரத் தமிழில்.

"நல்லது, PS4 விக்கத் தொடக்கி விட்டாங்களா?"

"இல்லை"

"பின்னை 4DS ? "

"இல்லை"

"அப்ப நான் என்ன வாங்கித் தர வேண்டும்? "

"ஒன்றும் இல்லை, அப்பா?"

"சோழியன் குடும்பி சும்மா ஆடாதே?"

"What is that?"

"இல்லை பின்னே ஏன் ஏழு, எட்டுக் காட்டுக் கத்தல் கத்தமுந்தி வீட்டு வேலையைச் செய்தாய்?"

"ஒவ்வொரு நாளும் மூஞ்சயைக் கழுதை மாதிரித் தொங்கப் போட்டுக் கொண்டு திரியிறிகள், இண்டைக்காவது கொஞ்சம் உங்களைச் கொஞ்சம் குஷிப் படுத்தத்தான்"

எல்லாரும் சொல்லி வைத்துக் கொண்டு என்னோடு நல்லமாதிரிப் பகிடி பண்ணுற மாதிரி இருந்தது.

திடீரென்று ஞாபகம் வந்தது இன்றைக்கு வியாழக்கிழமை. வியாழக்கிழமை மட்டும்தான் சிட்னியில் கடைகள் இரவு ஒன்பது பத்து மணி வரை திறந்திருக்கும். மற்ற நாட்களில் பின்னேரம் ஐந்து ஆறு மணியோடை கடைகள் எல்லாம் பூட்டிவிடும். வியாழன் ஷொப்பிங் பிரியர்களின் ஆசீர்வதிக்கப்பட்ட நாள்.

இந்த முறை நான் முந்திக் கொண்டேன். "என்னப்பா இண்டைக்கு வியாழன் எல்லே? ஷொப்பிங் போவமே?"

"இல்லையப்பா , நீங்கள் இண்டர்நெட்டிலே வழக்கம்போல ஊர்த் துளவாரங்களைப் பாருங்கோ. பொடியள் உங்களைக் குழப்புவாங்கள். நான் அவங்களைக் கூட்டிக் கொண்டு ஷொப்பிங் போயிட்டு வாறன்" என்று மனைவி சொல்ல மாத நாவல் எழுத்தாளர்கள் எழுதுகிற மாதிரி உண்மையில் "கண்கள் பனித்தன" பாருங்கோ. என்றாலும் நக்கல் விடுறாளோ என்று ஒரு யோசனையும் ஓடியது.

Google இன்றைக்கு ஒரு மாதிரி இருந்தது. இப்ப சில நாட்களில் அவங்களும் ஒரு "தீம்" வைக்கிறாங்கள் தானே. Google என்றதைப் பார்க்கும்போது ஒரு செல்லக் கழுதையைப் பார்ப்பது போலிருந்தது. ஆர்வமுந்த அதன்மேல் கிளிக்கினேன். முதலாவதாக இருந்தது,

International Donkeys' Day- Be nice to donkeys and donkeylikes today.