Saturday, March 24, 2012

எழுத விரும்பாத பதிவு

எனக்குத் தெரிந்த ஒருவர் எப்பவும் உரையாடலை இப்படித்தான் தொடங்குவார், "நான் உங்களைச் சொல்லவில்லை, பொதுவாகத்தான் சொல்லுறன்...". அவரின் நிலை இப்பதான் புரிகிறது. ஆனால், எனக்குப் பிடிக்காதது வரிக்கு வரி எல்லாவற்றுக்கும் Disclaimer கொடுப்பது. ஒவ்வொரு பதிவின் கீழேயும், "கதையில் வரும் பெயர்களும் சம்பவங்களும் கற்பனையே. எவரின் பெயராவது கதையில் வந்தால் அது தற்செயலே.." என்று போடக்கூடாது, அது வாசிப்பவருக்குத் தானாகப் புரியவேண்டும் என்று அடியேனுக்கு ஒரு 'மூன்றுகால் முயல்'க் கொள்கையுண்டு. என்றாலும் ஒரு பதிவிலாவது "மிக முக்கியம்: பெயர்கள் யாவும் கற்பனையே" என்று போட்டேன். (இடைக்கிடையாவது முயலுக்கு நான்கு கால்கள் என்று ஒப்புக்கொள்ள வேண்டாமா?)

நேற்றுத்தான் ஜேகே நொந்து போயிருந்தார்."என்ர அம்மாளாச்சி”, “கணவன் மனைவி” என்று வரிசையாக இரண்டு சிறுகதைகள் எழுதினேன் இல்லையா? எழுத்தாளன் சாபம், என் சாபம், நிஜ வாழ்க்கையில் நடந்தவற்றையே எழுதுகிறேன் என்று வாசிப்பவர்கள் நினைத்துக்கொள்வது( என் கற்பனை திறனில் அவ்வளவு நம்பிக்கை!)...".

என்ன முகூர்த்தத்தில் நானும் "அழி றப்பர்" எழுதினேனோ தெரியவில்லை. இப்போது நான் வறுத்தெடுக்கப்படுவது, "யார் அந்தச் சுகந்தி?" என்று. அது ஒரு கற்பனைப் பாத்திரம் என்றால் நம்புவாரில்லை. (வீட்டுக்குள்ளும் குத்துப்பாடு). நான் பதிவெழுத வந்தது சதா காலமும் என்னைப் பிடித்து உலுக்கும் என ஊர் ஞாபகங்களைச் சேமிக்க. ஏதோ கற்பனையிலாவது ஊர் போய்க் கொட்டில் போட்டு வாழும் மனது எனக்கு. அந்த யோசனை இன்னும் போகவில்லை. போகப்போவதுவும் இல்லை- நடை முறையிற் சாத்தியம் இல்லாவிட்டாலும். ஆனாலும் என் கற்பனையில் என்னால் 'என் நிலத்தில் கால் வைக்கமுடியும். அப்பாவின் கறள் பிடித்த றலி சைக்கிளில் இடைக்காடு-தம்பாலை-கதிரிப்பாய்-பத்தைமேனி-அச்சுவேலி என்று ஓடித்திரிய முடியும்'. இந்த அலம்பல்கள் எல்லாம் போக, மிகக் கட்டாயமாக நான் 'கொசிப்' எழுதுவதற்காகப் பதிவெழுத வரவில்லை. ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்வும் தனிப்பட்டது. அதை வ்ரி வரியாக எழுதுவது சிலருக்குத் தேவைப்படலாம், வாசிப்பதுவும் பலருக்குத் தேவைப்படலாம். எனக்கு இரண்டும் இல்லை. என்றாலும்.... எனக்கும் ஒரு டவுட். ஏன் யாரும் "அழி றப்பர்" இல் 'யார் அந்தக் குஞ்சிப் பெரியாச்சி" என்று கேட்கவில்லை. ரங்கன், சிறியன் பற்றியும் யாரும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

என் பார்வையில் சில சிறுவர்கள், அதில் ஒருவன் குறும்பானவன் ஆனால் மிக உத்தமமானவன் அல்ல ( 'அண்டல்' வேலை பார்க்கிறான்). வெளிக்குக் காட்டிக் கொள்ளாவிட்டாலும் இவங்களின் வம்பு தும்புகள் புரிந்த ஆச்சி. சுகந்தி கதைக்கு ஊறுகாய் மாதிரித்தான். இப்படிப் பின்னணியைச் சொல்லிவிட்டால் இனி ஏ.எ.வாலிபன் சொன்னதுமதிரி (என் கருத்தும் அஃதே) கதை 'சப்' என்று போய்விடும். அதற்கு முன்னமே கதை 'சப்' என்று இருந்தால் அது உங்கள் விதி.

Draft இல் ஒரு கதை இப்ப இருக்குது. அதில் வரும் சில வரிகள், 'தியேட்டரில் இருட்டு, அவனுக்கு அவள் தன்னுடன் (சினிமாப்) படம் பார்க்க வந்ததை இன்னும் நம்பமுடியவில்லை. Structural Drawing" பாடம் கட்...."

இதைப் பிரசுரித்தால் "அதில் வந்த அவன் யார்? நீயா? அவள் யார்? அவளைத்தான் கட்டினீயா" இப்படிக் கேள்விகள் வரும் போல இருக்கு. எதுக்கும் பிரசுரிக்கமுன் ebay இல் மொட்டாக்கு விற்குதா என்று பார்க்கவேண்டும்.

ஒரு சொதப்பல் சிறுகதை எழுதிப்போட்டு வடிவேலு பாணியில் அலம்பல் பண்ணுறியா என்று நீங்கள் கேட்டால் பதில் ரெடி. ஆம்.

"சரி சரி, ஆரப்பா அவள்?" என்று காதுக்குக்கிட்ட ஒரு குரல் மிரட்டலுடன் கேட்குது. மரக்கறி வெட்டவேணும், இன்றைக்குச் சனிக்கிழமை ...வெளியில் புல்லும் வெட்டவேணும். எனக்கேன் வம்பு? போயிட்டு வாறன், என்ன?

ஆங் மறந்து போனேன், "நான் எதையும் குறிப்பாக உங்களைச் சொல்லவில்லை, பொதுவாகத்தான் சொல்லுறன்..."

--------------
கொட்டில் - குடிசை
கறள் பிடித்த -துருப் பிடித்த
'அண்டல்' வேலை -கோள் மூட்டுவது, போட்டுக் கொடுப்பது
மொட்டாக்கு- முக்காடு