Sunday, October 9, 2011

'அன்னக்கிளி' யும் அது கொண்டுவரும் ஞாபகங்களும்...

Nostalgia என்ற ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழில் சரியாக என்ன சொல் வரும் என்று தெரியவில்லை. 'நனவிடை தோய்தல்' என்பது ஞாகத்திற்கு வருகிறது. ஆனால் மிகச் சரியான அர்த்தமா இல்லை இரண்டும் சற்று வித்தியாசமா என்று குழப்பமாகவுள்ளது. Nostalgia என்பது இறந்த காலத்தை ஒருவித ஏக்கத்துடன் நினைவு படுத்துக் கொள்வது. இதில் முக்கியமானது இறந்த காலத்தில் உள்ள நல்லதுகளை மட்டும் நினைத்துப் பார்ப்போம். உதாரணமாக, "நான் சின்னப்பிள்ளையாக இருக்கேக்கை பாண் ஒரு றாத்தல் 60 சதம்தான்" என்று ஞாகத்தில் உள்ளது. அப்ப ஒரு குடும்பத்தின் சராசரி வருமானம் என்பது சௌகரியமாக மறந்துவிடும்.

வெள்ளெழுத்துக் கண்ணாடி போட்டாப்பிறகும் அரைக்காற்சட்டையுடன் பள்ளிக்கூட ஞாபகம் வருவதும் அதோடு ஒட்டிக்கொண்டு ஒரு மெல்லிய ஏக்கம் வருவதும் தவிர்க்க முடியாமல் வருவதற்கும் காரணம் இந்த 'நனவிடை தோய்தல்' தான். இந்த 'ஏக்கம்' சென்ரிமென்ற்'இற்குக் காரணம் சுமைகளற்ற சிறுவயது மென் ஞாபகங்கள் அவை என்பது மட்டுமல்ல. என்னதான் தலைகீழாக நின்றாலும் அந்தக்காலம் திரும்பி வரப்போவதில்லை என்ற புரிதல்தான் முக்கிய காரணம் என நினைக்கின்றேன்.



சிலவற்றைக் காணும்போது அல்லது கேட்கும்போது இந்தப் பின்னோக்கிப் போகும் நினைவுகள் அதிகம் வரும். கொஞ்சம் பழைய தூசி பிடித்த பெட்டி ஒன்றைத் திறந்தபோது அதுக்குள் இருந்த ஆறாம் வகுப்பு 'றிப்போர்ட்'ஐக் காணும்போது கூடவே வருபவை ஞாபகங்கள். ஆறாம் வகுப்பில்தான் நட்ராஜ் அல்லது ஒக்ஸ்போர்ட் கொம்பாஸ் பெட்டி வாங்கியிருப்போம். விஞ்ஞானம், தமிழ், சமூகக்கல்வி என்று பாடங்கள் தனித்தனியாய்ப் பிரிந்து ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி வாத்தியா(ய)ர் வந்திருப்பார். சிலபேர் அப்பதான் களிப்பேனை பாவிக்கத்தொடங்கியிருப்போம். சின்னப் பள்ளிக்கூடத்திலிருந்து பெரிய பள்ளிக்கூடத்திற்கு வந்த 'மிதப்பு'க் கொஞ்சம் மீந்திருக்கும். 'ஏ/எல் படிக்கிற அண்ணாமார் அக்காமார் படிப்பு விடயமாக (!) டிஸ்கஸ் பண்ணுவதைக் கவனிக்கத் தொடங்கியிருப்போம்.

அன்னக்கிளி படம் வந்தது 1976 இல். முதலாம் வகுப்புக் படித்துக்கொண்டிருந்திருப்பேன். படத்தைப் பார்த்ததில்லை. ஆனால் இந்தப் பாட்டு என் அரைக்காற்சட்டைப் பருவம் முழுவதுமே என்னோடு கூட வந்தது. கோயிற் திருவிழா, சித்திரை வருஷப் பிறப்பு விளையாட்டுப்போட்டி, 'மின்னோளியிற்' கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி, ஐஸ்கிறீம் வான் என்று லவுட் ஸ்பீக்கர் இருக்கும் இடமெல்லாம் இந்தப் பாட்டுத் தப்பாது. இப்ப இந்தப் பாட்டைக் கேட்டால் கூடவே வருபவை ஒரு கலவை ஞாபகங்கள். ஏதோ ஒரு வைரவ கோயிற் திருவிழாவில் சோளப்பொரி கொறித்துக்கொண்டு இரவு எந்த மேளக்குழுக்கள் வருது, கண்ணன் கோஷ்டி பாட்டுப் பாட வருதா? போன்ற 'முக்கியமான' தகவல்களைச் சேர்த்துக் கொண்டிருப்பேன். அல்லது இவற்றைக் கொஞ்சக் கைச்சரக்குச் சேர்த்து இன்னொருவனுக்கு அவித்துக் கொண்டிருப்பேன். கோயிற்திருவிழாக்கள் தொடங்கினால் நாலைந்து மேளக் கோஷ்டிகள் இருக்கும், அநேகமாக இரவில்தான் இருக்கும். எங்களைப் போன்ற அரைக்காற்சட்டைகளுக்கு மேளக்காரர்களுக்குக் கிட்ட, முன்வரிசையில் இருந்து பார்க்கத்தான் ஆசை. மேளத்தைப் பார்ப்பதைவிட மேளக்காரரின் அங்க சேஷ்டைகளைத்தான் பார்த்து ரசிப்போம். இல்லாவிட்டால் 'ஆர் மேளத்தை உடைக்கிறமாதிரிக்' கெட்டித்தனமாக அடிக்கிறான்' என்பதிற்தான் நிறைய 'விவாதங்கள்' வரும்.


கோயில் இரவுத் திருவிழா என்றால் கலர் ரியூப் லைற், 'விட்டு விட்டு' எரியும் பல்ப் அலங்காரம் என்று கோயிலே ஒரு கலாதியாக இருக்கும். மத்தியான நேரத்திற்குப் பின் எந்நேரமும் 'லைற் மிசின்காரன்' வரலாம். எல்லாவற்றையும்விடத் 'திறிலான' விஷயம் லைற்று மிசினைச் 'ஸ்ரார்ட்' பண்ணுவது. 'பொழுதுபட்டுக்' கொஞ்சம் இருட்டத் தொடங்க ஆயத்தமாவார்கள். குட்டி ராட்சதன்மாதிரி இருக்கும் லைற் மிசினிற்குக் கற்பூரம் (சூடம்) காட்டி விட்டுப் பயபக்தியோடு இரண்டு 'பெலமான' ஆசாமிகள் ஒரு "ஸ்ரார்டிங் லீவர்' ஐத், தம் பிடித்துச் சுத்துவார்கள். ஒன்று, இரண்டு, மூன்று,..., என்று சுற்ற, 'டட், .. டட், .. டட், டட் டட்' என்று 'ஸ்ரார்ட்' ஆகும். பிறகு விடிய வெளிச்சம் வரும் மட்டும் இதன் இயந்திரச் சத்தம் எட்டுப் பத்து வீடுகளுக்காவது கேட்கும்.

சிவராத்திரி அநேகம் ஊர்களில் கோவில்களிற்தான் கொண்டாடப்படும் . எங்களூரில் மட்டும் சிவராத்திரிக்குக் கோவில்களில் சனம் மினக்கெடுகிறமாதிரி ஞாபகம் இல்லை அன்றைக்குப் பள்ளிக்கூடத்தில் மேடையில் இரவிரவாக பாட்டு/நாடகம் போடுப்படும். அநேகமாகக் கிட்டத்தட்ட விடியும் மட்டும் ஏதாவது நிகழ்ச்சி இருக்கும். தொடக்கத்தில் 'இப்போது நான்காம் வகுப்பு மாணவி தர்சினி ஒரு பாட்டுப் பாடுவார்" என்று அறிவிக்க, அவா கொஞ்சம் வெட்கப்பட்டுக்கொண்டு "சின்னப் பாப்பா எங்கள் தங்கப் பாப்பா, சொன்ன சொல்லைக் கேட்டால்தான் நல்ல பாப்பா..." என்ற மாதிரி ஒரு பாட்டைப் பாடுவா. இப்படியே போய் ஏ/எல் அண்ணாமார் நாடகம் போட நடு இரவு தாண்டிவிடும். அவர்களின் நாடகம் நிறைப்பேருக்குப் பிடிக்கும். காதல், நகைச்சுவை என்று கலந்து வெளுத்துவாங்குவார்கள்!

நாடகம் கிட்டத்தட்ட இப்படித்தான் இருக்கும். நீளத் தலைமயிர் வளர்த்து, பெல்பொட்டம் போட்ட இளைஞன். கொஞ்சம் 'பாதுகாப்பான' இடைவெளி விட்டு ஒரு சிவந்த இளம்பெண் நிற்பாள். இது முதல் சீன்.

"சுகந்தி, நான் உன்னை எவ்வளவு ஆழமாக நேசிக்கிறேன். உன் இதயம் என்ன கல்லா? நீ ஏன் இப்படி என்னை நோகடிக்கிறாய்?...", சுகந்தி அநேகமாக ஆராவது கொஞ்சம் சிவந்த பெடியன் 'பேமாஷார்ப்' பிளேட்டின் துணையால் மீசையிழந்து, பொய்முடி கட்டி, கஷ்டப்பட்டுச் சேலையும் கட்டி இருப்பான். சுகந்தி கோபப்பட்டுக் கொண்டு, "சேகர், உனக்கு இந்த வயதிற் காதல் தேவையா? உன் அப்பா/அம்மா உன் படிப்புக்கு எவ்வளவு செலவழிக்கிறார்கள் தெரியுமா? அதை யோசித்துப் பார்த்தாயா?" என்று காரைக்காலம்மையார் ரேஞ்'சிற்கு அட்வைஸ் மழை பொழிவாள். இப்படிக் காதல் வசனம்- அட்வைஸ் என்று நாடகம் ஒரு பத்து நிமிசம் ஓடும்.

அடுத்த காட்சி. ஒரு முரட்டு இளைஞன். சாரம் தான் கட்டி இருப்பான்.(அந்தக் காலங்களில் நாடகங்களில் வரும் முரடர்கள் சாரம்தான் கட்டியிருப்பார்கள்). கோபமாகக் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருக்கிறான். இவன்தான் சுகந்தியின் அண்ணா என்று இவ்வளவுக்குள் புரிந்திருக்கும்...

மிச்ச நாடகம் எப்படிப் போகும் என்று ஊகிக்க முடியாவிட்டால் நான் எழுதப்போகும் "காதல் என்பது கானல் நீரா?" மேடை நாடகத்திற்காகக் காத்திருக்கவும்.

எங்கள் வகுப்புப் பெடியளும் ஒருதரம் நாடகமொன்று போட்டார்கள். அது ஒரு 'ப.ய.ங்.க.ர.த் திகில் துப்பறியும் நாடகம்'. அப்படித்தான் நிகழ்ச்சி தொடங்கமுதல் அறிவிப்பாளர் அடிக்கடி ஞாபகமூட்டினார். கதை/வசனம்/நெறியாள்கை/நடிப்பு எல்லாம் வகுப்பு 7 பி மாணவர்கள். நேரம் கிடைக்கும்போது அதைப்பற்றி எழுதுகிறேன்.



--------------------------------------------------------------------------------------------
மிக முக்கியம்: பெயர்கள் யாவும் கற்பனையே.


பாண் - ப்ரெட் (தமிழ்நாடு)
லைற்று மிசின் -a diesel generator fixed permanently onto the body of a small lorry/truck
பொழுதுபட்ட நேரம் - சாயுங்காலம் (தமிழ்நாடு)
சாரம் - சாரம் (இலங்கை, தமிழ்நாட்டில் சில பாகங்கள் ( உ+ம் திருநெல்வேலி), லுங்கி/கைலி (சென்னை)
ஏ/எல்- A/L = Advanced Level, கிட்டத்தட்ட (இந்தியாவில்) ப்ளஸ் 2 மாதிரி

நன்றிகள்:
(1) புகைப்படம்: www.idaikkadu.com

Sunday, October 2, 2011

முருகா நீ ஏன் இப்படிக்...

இவங்கள் கொஞ்ச நாட்களாக ஓவர் ஆட்டம் போடுறாங்கள். "நான் ரண்டு வச்சிருக்கிறன்", என்றான் விஜயன். "மூண்டு என்னட்டை" என்றான் அச்சுவேலி ரமணன். "நான் எப்படியும் இந்த சனிக்கிழமை ஒண்டு வாங்கிப்போடுவன்" என்கிறான் விக்கி. ஐந்தாம் வகுப்பில் இருந்து ஆறாம் வகுப்பிற்கு வந்தால் புதுக் கொம்பாஸ் பெட்டி, கொப்பி, இலவசப் புத்தகங்கள் என்று போக இதுவும் சேர்ந்தாயிற்று. வீட்டிலே கேட்கக் கொஞ்சம் வெட்கம். மெதுவாக அம்மாவை அப்பாவிடம் காசு வாங்கச் சொன்னேன். அச்சுவேலியில்தான் இது விற்கும். "இதெல்லாம் தேவையில்லாத வேலை, கொம்மாவைக் கேட்டாத் தச்சுத் தருவா" என்று அப்பா சொல்லிப்போட்டார். சட்டை தைத்து மிஞ்சிப் போன சீததைத் துணியில் "சஸ்பென்ரர்" என்ற பெயரில் ஒன்று தைக்கப்பட்டு வந்தது. கதவைப் பூட்டிப்போட்டு அறைக்குள் ஒளிச்சு நின்று போட்டுப் பார்த்தேன். அழுகை அழுகையாக வந்தது. வலது பக்கக் காலில் இடுப்புக்குக் கிட்ட இரண்டு இடங்களில் முடிச்சுப் போட்டுக் கட்டவேண்டும். பழனி முருகன்தான் அப்ப ஞாபத்திற்கு வந்தார். இதோட ஊருக்கு வடக்குப் புறம் இருந்த அகலக் கிணறுகளுக்கு நீந்தப் பழகப் போகவேண்டும். நீந்தப் போறதென்றால் "பென்ரர்", "மினிப் பென்ரர்" என்ற பெயர்களில் அச்சுவேலிற் ரவுணிலே வாங்கின ஒன்றைப் போட்டால்தான் ஒரு 'ஸ்டாண்டட்". இதிலேயும் இந்த "மினிப்பென்ரர்" கொஞ்சம் எழுப்பம். பெயரரில்தான் "மினி" இருக்கே தவிர அது ஆக மினி அல்ல. இரண்டு 'கால்'வைத்திருக்கும். காசு/பணம் பத்திரமாக வைக்க ஒரு சின்ன zip வைத்து ஒரு பொக்கற்றும் இருக்கும்.

ஒரு மாதிரி அழுது அடம் பிடிச்சு 20 ரூபா வீட்டில் வாங்கியாயிற்று. இப்ப அடுத்த கட்டம். ஒரு சனிக்கிழமை காலை சைக்கிளில் விக்கியுடன் டபுள்ஸ்ஸில் அச்சுவேலிற் ரவுண் வந்தாயிற்று. "இண்டைக்கு எப்படியும் வாங்கிப் போடோணும்" என்று திட்டம். 'பெரிய' பஸ் ஸ்ராண்ட் இற்கு எதிரில் இருந்தது அந்தக் கடை. அலுமினியச் சட்டி, பிளாஸ்டிக் வாளிகள், ரெடிமேட் சேட்டுக்கள், ஸ்கேர்ட்டுக்கள், பிளவுஸ்கள், தேங்காய்த் திருவலை, பனடோல் எல்லாம் கிடைக்கும். அதோடு அங்கே பென்ரரும் மினிப்பென்ரரும் வாங்கலாம். ஒரு சின்னப் பிரச்சினை. கடையில் ஒரு பெண்பிள்ளை வேலை பார்த்தது. வயது இருபது, இருபத்திரண்டு இருக்கலாம். எங்கள் வயதைச் சொன்னால் இத்தனை வயதிலே இதை வாங்க வெட்கமே என்று சிரிப்பீர்கள். ஆனால் எங்கள் வயதோடு பார்த்தால் அவள் பெரிய பெண். ஆம்பிளைப் பிள்ளைகளின்ரை பிரச்சினை ஆம்பிளைப் பிள்ளைகளுக்குத் தானே விளங்கும்? அவளட்டை போய் "அக்கா இன்ன சைஸ் பென்ரர் எடுங்கோ" என்று எப்படிக் கேட்பது? நானும் விக்கியும் இரண்டு மூன்றுதரம் பக்கத்துக் கடையில் சைக்கிளை ஸ்ராண்ட் போட்டு நிற்பாட்டிவிட்டு 'தற்செயலாக' கடைக்குள் எட்டிப் பார்த்தோம். ஒவ்வொரு முறையும் கடையில் அவள் நின்றாள். அசோகனின் சலூனிலே ஓசிப் பேப்பர் பார்த்துவிட்டு, இன்னொரு கடைசி முயற்சி. இந்தமுறை அவள் இல்லை.

நெஞ்சை நிமித்திக் கொண்டு கடைக்குள் உள்ளிட்டோம். கடை முதலாளி 'ரீ' யை உறிஞ்சிக் கொண்டிருந்தார்.

"தம்பிமார் கொஞ்சம் இருங்கோ, இந்தற் ரீ' யைக் குடிச்சிட்டு வாறான்" , மனிசன் சாவகாசமாகக் ரீ' யைக் குடிக்கத் தொடங்கினார்.

வாழ்க்கையில் தேவையில்லாத நேரங்களில் தேவையில்லாத விஷயங்கள் நடக்கும். அதுமாதிரி அப்பதான் அவள் எங்கிருந்தோ திடீரென்று வந்தாள். "பிள்ளை, இந்தப் பெடியளுக்கு என்ன வேணும்" எண்டு கேட்டுக் குடு", முதலாளி அக்கறையாகச் சொன்னார்.

நான் விக்கியைப் பார்த்தேன். அவன் இப்ப தேங்காய்த் திருவலை ஒன்றைத் தூக்கி மேல், கீழ், இடம், வலம் என்று மும்முரமாக ஆராய்ந்து கொண்டிருந்தான். விபுலானந்த அடிகள் யாழ்'ஐப் பற்றி ஆராய்ச்சி செய்து ஒரு புத்தகம் எழுதினாராம். விட்டால் இவன் தேங்காய்த் திருவலை பற்றி நூறு பக்கத்தில் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினாலும் எழுதியிருப்பான். அவ்வளவு மும்முரம்.

"தம்பி என்ன வேணும்" அவள் கேட்டாள்.

"ம்ம்ம்ம் வந்து....... அந்தக் கண்ணாடிப் பெட்டிக்குள்ள இருக்கிற பவுடர் பேணி என்ன விலை?" என்றேன் அசடு வழிய.

**************************************************

யோசித்துப் பார்த்தால் தாத்தாமார் காலத்தில் இந்தமாதிரிப் பிரச்சினைகள் இருந்திருக்காது. வேட்டியை ஒடுக்கமாக நீளமாகக் கிழித்தால் கோவணம் ரெடி. இடுப்பில் அறுணாக் கொடி கட்டாயம் தேவைப்படும்தான். ஆனால் கடைக்கெல்லாம் போய் மினக்கெடத் தேவையில்லை. செலவும் இல்லை. எனது இரண்டு தாத்தாமாரும் கனக்க விஷயங்களில் வித்தியாசம். ஒற்றுமையான ஒன்று உண்டென்றால், இந்தக் குளிப்பு விடயத்தில்தான். கௌபீனத்துடன் கிணத்தடிக்கு வந்தால் 45 நிமிடம் ஆகாமல் குளிப்பு முடியாது. 15- 20வது நிமிடத்தில் கிணத்தடியில் நிக்கிற கமுக மரம் அல்லது ஒல்லித் தென்னையில் முதுகு தேய்ப்பார்கள். "ஓடிப் போய் சமையல் முடிஞ்சுதோ எண்டு பாத்திட்டு வா" என்றால் குளியல் முடியப் போகுது என்று அர்த்தம். ஆச்சிமாரும் ஒரேமாதிரித்தான் பதில் சொல்லுவார்கள், "கிழவன் ஏன் இப்படிச் சாணக முதலை மாதிரித் தண்ணியில நிக்குது?, கெதியாக சாப்பிட வரச் சொல்லு " என்று.

தாத்தாமார் காலம் போய் அப்பாமார் காலம் வந்ததும் சஸ்பென்ரர் என்று ஓன்று வந்தது. இது கடையிற் கிடைக்காது. வேறு உடுப்புத் தைத்த மிச்சத் துணியில் கெட்டித்தனமாக வெட்டித் தைக்க வேண்டும். இடுப்பில் இரண்டு இடத்தில் முடிச்சுப் போடவேண்டும். முடிச்சுப் போட்டுக் கட்டுவதால், இலாஸ்ரிக் பட்டை இடுப்பில் தேவைப்படாது. இந்தமாதிரி ஒன்றை சிட்னி டிசைனர் ஷொப்'பில் கண்டேன். விலை: ஒன்று எண்பத்தைந்து டொலர்கள் மட்டுமே!.

பிறகு சித்தப்பாமார் காலத்தில் வந்ததுதான் இந்த பென்ரர், மினிப் பென்ரர் என்பன. இவை கடையில் மட்டுமே கிடைக்கும். இப்படித்தான் ஆண்கள் உள்ளாடை வர்த்தக மயமாக்கப்பட்டு சர்வதேசப் பெருமுதலாளிகளின் சுரண்டலுக்கு ஆண்வர்க்கம் உள்ளாவதாக தோழர் செந்தமிழ்ச்செல்வன் சொல்லுகிறார்.

************************************************

பழனி முருகனுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்.




-------------------------------------
தேங்காய்த் திருவலை - தேங்காய்த் துருவு பலகை
கொம்மா - உனது அம்மா
கெதியாக- விரைவாக

Photo: Thanks to

http://ta.wikipedia.org/wiki/பழனி_முருகன்_கோவில்