Sunday, October 2, 2011

முருகா நீ ஏன் இப்படிக்...

இவங்கள் கொஞ்ச நாட்களாக ஓவர் ஆட்டம் போடுறாங்கள். "நான் ரண்டு வச்சிருக்கிறன்", என்றான் விஜயன். "மூண்டு என்னட்டை" என்றான் அச்சுவேலி ரமணன். "நான் எப்படியும் இந்த சனிக்கிழமை ஒண்டு வாங்கிப்போடுவன்" என்கிறான் விக்கி. ஐந்தாம் வகுப்பில் இருந்து ஆறாம் வகுப்பிற்கு வந்தால் புதுக் கொம்பாஸ் பெட்டி, கொப்பி, இலவசப் புத்தகங்கள் என்று போக இதுவும் சேர்ந்தாயிற்று. வீட்டிலே கேட்கக் கொஞ்சம் வெட்கம். மெதுவாக அம்மாவை அப்பாவிடம் காசு வாங்கச் சொன்னேன். அச்சுவேலியில்தான் இது விற்கும். "இதெல்லாம் தேவையில்லாத வேலை, கொம்மாவைக் கேட்டாத் தச்சுத் தருவா" என்று அப்பா சொல்லிப்போட்டார். சட்டை தைத்து மிஞ்சிப் போன சீததைத் துணியில் "சஸ்பென்ரர்" என்ற பெயரில் ஒன்று தைக்கப்பட்டு வந்தது. கதவைப் பூட்டிப்போட்டு அறைக்குள் ஒளிச்சு நின்று போட்டுப் பார்த்தேன். அழுகை அழுகையாக வந்தது. வலது பக்கக் காலில் இடுப்புக்குக் கிட்ட இரண்டு இடங்களில் முடிச்சுப் போட்டுக் கட்டவேண்டும். பழனி முருகன்தான் அப்ப ஞாபத்திற்கு வந்தார். இதோட ஊருக்கு வடக்குப் புறம் இருந்த அகலக் கிணறுகளுக்கு நீந்தப் பழகப் போகவேண்டும். நீந்தப் போறதென்றால் "பென்ரர்", "மினிப் பென்ரர்" என்ற பெயர்களில் அச்சுவேலிற் ரவுணிலே வாங்கின ஒன்றைப் போட்டால்தான் ஒரு 'ஸ்டாண்டட்". இதிலேயும் இந்த "மினிப்பென்ரர்" கொஞ்சம் எழுப்பம். பெயரரில்தான் "மினி" இருக்கே தவிர அது ஆக மினி அல்ல. இரண்டு 'கால்'வைத்திருக்கும். காசு/பணம் பத்திரமாக வைக்க ஒரு சின்ன zip வைத்து ஒரு பொக்கற்றும் இருக்கும்.

ஒரு மாதிரி அழுது அடம் பிடிச்சு 20 ரூபா வீட்டில் வாங்கியாயிற்று. இப்ப அடுத்த கட்டம். ஒரு சனிக்கிழமை காலை சைக்கிளில் விக்கியுடன் டபுள்ஸ்ஸில் அச்சுவேலிற் ரவுண் வந்தாயிற்று. "இண்டைக்கு எப்படியும் வாங்கிப் போடோணும்" என்று திட்டம். 'பெரிய' பஸ் ஸ்ராண்ட் இற்கு எதிரில் இருந்தது அந்தக் கடை. அலுமினியச் சட்டி, பிளாஸ்டிக் வாளிகள், ரெடிமேட் சேட்டுக்கள், ஸ்கேர்ட்டுக்கள், பிளவுஸ்கள், தேங்காய்த் திருவலை, பனடோல் எல்லாம் கிடைக்கும். அதோடு அங்கே பென்ரரும் மினிப்பென்ரரும் வாங்கலாம். ஒரு சின்னப் பிரச்சினை. கடையில் ஒரு பெண்பிள்ளை வேலை பார்த்தது. வயது இருபது, இருபத்திரண்டு இருக்கலாம். எங்கள் வயதைச் சொன்னால் இத்தனை வயதிலே இதை வாங்க வெட்கமே என்று சிரிப்பீர்கள். ஆனால் எங்கள் வயதோடு பார்த்தால் அவள் பெரிய பெண். ஆம்பிளைப் பிள்ளைகளின்ரை பிரச்சினை ஆம்பிளைப் பிள்ளைகளுக்குத் தானே விளங்கும்? அவளட்டை போய் "அக்கா இன்ன சைஸ் பென்ரர் எடுங்கோ" என்று எப்படிக் கேட்பது? நானும் விக்கியும் இரண்டு மூன்றுதரம் பக்கத்துக் கடையில் சைக்கிளை ஸ்ராண்ட் போட்டு நிற்பாட்டிவிட்டு 'தற்செயலாக' கடைக்குள் எட்டிப் பார்த்தோம். ஒவ்வொரு முறையும் கடையில் அவள் நின்றாள். அசோகனின் சலூனிலே ஓசிப் பேப்பர் பார்த்துவிட்டு, இன்னொரு கடைசி முயற்சி. இந்தமுறை அவள் இல்லை.

நெஞ்சை நிமித்திக் கொண்டு கடைக்குள் உள்ளிட்டோம். கடை முதலாளி 'ரீ' யை உறிஞ்சிக் கொண்டிருந்தார்.

"தம்பிமார் கொஞ்சம் இருங்கோ, இந்தற் ரீ' யைக் குடிச்சிட்டு வாறான்" , மனிசன் சாவகாசமாகக் ரீ' யைக் குடிக்கத் தொடங்கினார்.

வாழ்க்கையில் தேவையில்லாத நேரங்களில் தேவையில்லாத விஷயங்கள் நடக்கும். அதுமாதிரி அப்பதான் அவள் எங்கிருந்தோ திடீரென்று வந்தாள். "பிள்ளை, இந்தப் பெடியளுக்கு என்ன வேணும்" எண்டு கேட்டுக் குடு", முதலாளி அக்கறையாகச் சொன்னார்.

நான் விக்கியைப் பார்த்தேன். அவன் இப்ப தேங்காய்த் திருவலை ஒன்றைத் தூக்கி மேல், கீழ், இடம், வலம் என்று மும்முரமாக ஆராய்ந்து கொண்டிருந்தான். விபுலானந்த அடிகள் யாழ்'ஐப் பற்றி ஆராய்ச்சி செய்து ஒரு புத்தகம் எழுதினாராம். விட்டால் இவன் தேங்காய்த் திருவலை பற்றி நூறு பக்கத்தில் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினாலும் எழுதியிருப்பான். அவ்வளவு மும்முரம்.

"தம்பி என்ன வேணும்" அவள் கேட்டாள்.

"ம்ம்ம்ம் வந்து....... அந்தக் கண்ணாடிப் பெட்டிக்குள்ள இருக்கிற பவுடர் பேணி என்ன விலை?" என்றேன் அசடு வழிய.

**************************************************

யோசித்துப் பார்த்தால் தாத்தாமார் காலத்தில் இந்தமாதிரிப் பிரச்சினைகள் இருந்திருக்காது. வேட்டியை ஒடுக்கமாக நீளமாகக் கிழித்தால் கோவணம் ரெடி. இடுப்பில் அறுணாக் கொடி கட்டாயம் தேவைப்படும்தான். ஆனால் கடைக்கெல்லாம் போய் மினக்கெடத் தேவையில்லை. செலவும் இல்லை. எனது இரண்டு தாத்தாமாரும் கனக்க விஷயங்களில் வித்தியாசம். ஒற்றுமையான ஒன்று உண்டென்றால், இந்தக் குளிப்பு விடயத்தில்தான். கௌபீனத்துடன் கிணத்தடிக்கு வந்தால் 45 நிமிடம் ஆகாமல் குளிப்பு முடியாது. 15- 20வது நிமிடத்தில் கிணத்தடியில் நிக்கிற கமுக மரம் அல்லது ஒல்லித் தென்னையில் முதுகு தேய்ப்பார்கள். "ஓடிப் போய் சமையல் முடிஞ்சுதோ எண்டு பாத்திட்டு வா" என்றால் குளியல் முடியப் போகுது என்று அர்த்தம். ஆச்சிமாரும் ஒரேமாதிரித்தான் பதில் சொல்லுவார்கள், "கிழவன் ஏன் இப்படிச் சாணக முதலை மாதிரித் தண்ணியில நிக்குது?, கெதியாக சாப்பிட வரச் சொல்லு " என்று.

தாத்தாமார் காலம் போய் அப்பாமார் காலம் வந்ததும் சஸ்பென்ரர் என்று ஓன்று வந்தது. இது கடையிற் கிடைக்காது. வேறு உடுப்புத் தைத்த மிச்சத் துணியில் கெட்டித்தனமாக வெட்டித் தைக்க வேண்டும். இடுப்பில் இரண்டு இடத்தில் முடிச்சுப் போடவேண்டும். முடிச்சுப் போட்டுக் கட்டுவதால், இலாஸ்ரிக் பட்டை இடுப்பில் தேவைப்படாது. இந்தமாதிரி ஒன்றை சிட்னி டிசைனர் ஷொப்'பில் கண்டேன். விலை: ஒன்று எண்பத்தைந்து டொலர்கள் மட்டுமே!.

பிறகு சித்தப்பாமார் காலத்தில் வந்ததுதான் இந்த பென்ரர், மினிப் பென்ரர் என்பன. இவை கடையில் மட்டுமே கிடைக்கும். இப்படித்தான் ஆண்கள் உள்ளாடை வர்த்தக மயமாக்கப்பட்டு சர்வதேசப் பெருமுதலாளிகளின் சுரண்டலுக்கு ஆண்வர்க்கம் உள்ளாவதாக தோழர் செந்தமிழ்ச்செல்வன் சொல்லுகிறார்.

************************************************

பழனி முருகனுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்.




-------------------------------------
தேங்காய்த் திருவலை - தேங்காய்த் துருவு பலகை
கொம்மா - உனது அம்மா
கெதியாக- விரைவாக

Photo: Thanks to

http://ta.wikipedia.org/wiki/பழனி_முருகன்_கோவில்


27 comments:

  1. எண்டாலும் உங்களுக்கு "கூச்ச" சுபாவம்!கடேசியா "அது" வாங்கவே இல்லைப் போல கிடக்கு?

    ReplyDelete
  2. @Yoga.s.FR
    பவுடர் பேணியுடன் வீடு வந்து சேர்ந்தேன்.

    ReplyDelete
  3. அப்ப பவுடர் பேணியோட வீட்ட வந்திட்டியள்,சரி!இண்டைக்கு வரைக்கும் "அது" வாங்கினியளோ இல்லையோ,அதச் சொல்லுங்கோ???

    ReplyDelete
  4. பழனி முருகனுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்.////அப்பிடியெண்டால்?!?!?!?!?!

    ReplyDelete
  5. @Yoga.s.FR
    பிறகு, ஒருமாதிரி இன்னொரு கடை பிடிச்சாச்சு. அங்கை பொம்பிளைப் பிள்ளைகள் வேலை செய்வதில்லை.

    2வது கேள்விக்கு விடை: பழனி முருகன் ஒரு trend setter பாருங்கோ. அதனால்தான் அவருக்குச் சமர்ப்பணம்.

    ReplyDelete
  6. ஹா...ஹா...
    நகைச்சுவையோடு அசத்தலாக எழுதியிருக்கிறீங்க.

    எந்தப் புடவைக் கடை அது?
    அச்சுவேலி பஸ் நிலையத்திற்குப் பின்னாடி இருக்கிற புடவைக் கடையா?

    ReplyDelete
  7. அடப் பாவமே..
    சரியான வெட்கம் பிடிச்ச ஆளா இருப்பீங்களே...

    பவுடர் வாங்கி வந்திருக்கிறீங்க.

    ReplyDelete
  8. ஓம், பஸ் நிலையத்திற்கு எதிரில்.

    ReplyDelete
  9. சுவையான பதிவு. நானட நீச்சலுக்கு போகாததால் சற்றுப் பின்தான் தேவைப்பட்டது. ரெயிலர் கடையில் பெட்டைகள் அப்பொழுது இல்லாததால் உந்தப் பிரச்சனை எழவில்லை.

    ReplyDelete
  10. கருத்துரைக்கு நன்றிகள் டொக்டர் ஐயா.

    ReplyDelete
  11. முருகனை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்..வேண்டுமென்றால் நீங்களும் வேட்டியை கிழியுங்கள்...:)

    ReplyDelete
  12. நிரூபன் அறிமுகம் பார்த்து வந்தேன்.

    பெனரர் சஸ்பெனரர் என்றால் என்னவென்று புரியாமல் விழித்து முழுப் பதிவும் படித்தபின் புரிந்தது. பழனி முருகனுக்கு சமர்ப்பணம் என்றால் கெள்பீனத்துடனேயே இருந்து விட்டீர்கள் என்று பொருளா...! ரசித்துப் படித்தேன்.

    ReplyDelete
  13. நன்றிகள் ஸ்ரீராம். ஆண்களின் underwear எப்படி யாழ் தமிழில் பெனரர் /சஸ்பெனரர் ஆயிற்று என்று புரியவில்லை.

    >>பழனி முருகனுக்கு சமர்ப்பணம் என்றால் கௌபீனத்துடனேயே இருந்து விட்டீர்கள் என்று பொருளா?

    அய்யய்யோ அப்படிப் பொருளல்ல. அவரைவிட வேறுயார் பொருத்தமாக இருப்பார்?

    ReplyDelete
  14. ஐயோ !ஐயோ ! மினிப் பென்ரரில சிப்பிற்கு மேல கொஞ்சம் நடுவால ஒரு பவுன் கலரில பட்ச் ஒன்டு இருக்கும் அது தான் திறம் பென்ரர்.சக்திவேலருக்கு உது தெரியாது. நான் சாரம் அவுட்டுக் கட்டேக்க லைட்டா பட்ச் தெரியிற மாதிரித்தான்அவுட்டுக் கட்டிரனான். அப்பதானே எழுப்பம்!

    ReplyDelete
  15. இந்தமாதிரி ஒன்றை சிட்னி டிசைனர் ஷொப்'பில் கண்டேன். விலை: ஒன்று எண்பத்தைந்து டொலர்கள் மட்டுமே!

    கொஞ்ச நாளில பேஷன் மாறி உதைத்தான் எங்கட மகன்மார் போட்டுக்கொண்டு திரிய போறன்களோ தெரியாது.

    ReplyDelete
  16. ம்ம்ம்......
    ந்ல்லாய் இரசிக்கும்படியாய் இருந்ததுடன் எனது இளமைக்கால நினைவுகளையும் மீட்டிவிட்டிருக்கிறது

    ReplyDelete
  17. இதுக்குதான்யா சொல்லுறது  என்னைபோல இருக்கோனும்ன்னு.. பழைய வேட்டியும் ஒரு அறுணாகயிறும் இருந்தா காணுமே கனகாலம் சமாளிக்கலாம்..! ஹி ஹி

    பழைய நினைவுகளை மீட்ட வைச்சிட்டீங்க..!!) 
    நன்றி..

    ReplyDelete
  18. வாங்கோ காட்டான், அதென்ன பழைய நினைவு? இப்பவும் நீங்கள் அப்படித்தானே? (profile photo சொல்லுது)

    ReplyDelete
  19. இந்த‌ சீத்தைத் துணியில் தைக்க‌ப‌ட்ட‌ "சீத்த‌பென்ரர்" வ‌ட‌க்கில் புள‌க்க‌த்தில் இருந்த‌ பொழுது இல‌ங்கையின் தென்ப‌குதியிலும் இது இருந்த‌தா??? இந்த‌ "சீத்த‌பென்ரர்" யாழ்பாண‌த்தானின் சிக்க‌ன‌த்துக்கு ஒரு ந‌ல்ல‌ எடுத்துக்காட்டு என்று நினைக்கின்ரேன், சீத்தை துணியிலும் த‌ர‌மான‌தும் ம‌லினவான‌துமாக‌ இருவ‌கை இருந்த‌து, ம‌லிவான‌ இந்த‌ சீத்தை துணி ம‌ட்ட‌மாண‌‌ ம‌ண்ணெண்ணை ம‌ண‌த்துட‌ன் இருக்கும் இதுக்கு ம‌ண்ணெண்ணை சீத்தை என்டு சொல்லுவ‌தாக‌ நினைவு, ப‌ல‌நோக்கு கூட்டுற‌வு சங்க‌க‌டைக‌ளில் கிடைக்கும், இதைதான் இந்த‌ சீத்த‌பென்ரருக்கு பாவித்தும் இருந்தார்க‌ள், சாவ‌க‌ச்சேரியில் சில‌ க‌டைக‌ளில் இந்த‌ சீத்த‌பென்ரர் ரெடிமேட்டாக‌வும் கிடைத்த‌து, க‌டைகார‌ர்க‌ள் இந்த‌ சீத்த‌பென்ரர்க‌ளை ஒரு கொத்தாக‌ க‌டைக்குள் க‌ட்டி தொங்க‌விட்டிருந்த‌தையும் க‌ண்டிருக்கிரேன்....... அருமையான‌ ப‌திவு ச‌க்தி, ப‌ல‌ பால்ய‌ நினைவுக‌ளை மீட்டுத்த‌ந்த‌து...

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் யசோதரன். தென்பகுதியில் இருந்தமாதிரி இருந்தமாதிரித் தெரியவில்லை. சிங்கள நண்பர்களிடம் கேட்டிருக்கலாம். தவற விட்டுவிட்டேன். இந்த மண்ணெண்ணைச் சீத்தை இன்னும் ஞாபகத்தில் உள்ளது. அப்ப நான் சின்னப் பெடியன் என்ற போதும்...

      Delete
  20. நினைவுகளை ஊஞ்சலாட்டுவதில் நீங்கள் படு கிலலாடி ஆள். ரசிக்கவும் சிரிக்கவும் நினைக்கவும் வைக்கும்...

    ReplyDelete
  21. I think the actual word is 'suspender' as an indication of it's function.............

    ReplyDelete
  22. பிழைக்கத் தெரியாத பிள்ளைகள். நானும் எனது நண்பர்களும் அக்காமார் உள்ள நேரமாக கணக்குப் பார்த்து போய் இதை எடு அதை எடு என்று கேட்டு எக்கச்சக்கமான நேரம் மினைக்கெட்டு செலக்ட் பண்ணி வாங்குவோம்.

    ReplyDelete