Friday, June 8, 2012

மழை

இரவெல்லாம் ஒரே மழை. சாக்குக் கட்டிலில் போர்த்துக்கொண்டு படுத்திருக்க நன்றாக இருந்தது. ஒன்றிரண்டு மழைத்துளிகள் கூரையில் இருந்து எப்படியோ தப்பி வந்து முகத்தில் விழுந்தன. இரவு முழுவதும் தூரத்தில் ஷெல் வெடிப்பதுவும் துப்பாக்கிகள் சடசடப்பதுவும் இடிமுழக்கத்துடன் கலந்து கேட்டது. சிலவேளைகளில் ஷெல் விழுந்து யாரும் சாகாமல் இருந்திருக்கவும் கூடும். அப்படியே இருக்கக் கடவது. போன கிழமை இப்படி இரவு முழுக்க மழைபெய்த ஒரு இரவில்தான் ஷெல் விழுந்து பன்னிரண்டு பேர் ஏதோ ஒரு ஊரில் செத்தார்கள். ஈழநாடு,ஈழமுரசு, உதயனில் எல்லாம் தலைப்புச் செய்தி. நான்கு ஆண்கள், ஆறு பெண்கள், இரண்டு குழந்தைகள். ரூபவாஹினி ரிவி "நேற்றிரவு பலாலி இராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை இராணுவம் முறியடித்துப் பதில் தாக்குதல் நடத்தியதில் பதினைந்து பயங்கரவாதிகள் கொல்லப்பட்டார்கள்" என்றது. இன்றைக்கு அப்படி இராது. இருக்கக்கூடாது. சந்நிதி முருகன் பார்த்துக் கொள்வார். "அவருக்கு அவற்றை தேர் ஐக் காப்பாற்ற முடியவில்லை, ஆக்களைக் காப்பாற்றப் போறாறோ?" என்று சேந்தன் அண்ணா கேட்பார். அவர் நிறையச் சிவப்பு மட்டைப் புத்தகங்கள் வாசிப்பார். புத்தகங்கள் எல்லாம் பூர்ஷ்ஷவா, நிலவுடமை, சுரண்டல், உழைக்கும் வர்க்கம், ஆளும் வர்க்கம் என்று இருக்கும். ஒன்றும் புரியாது. ஒரு புத்தகத்திலும் ஒரு படமும் போட்டிருக்காது. நான் படம் போட்ட புத்தங்கள்தான் வாசிப்பேன். "ரொபின்சன் குறூசோ" கூட மழை பெய்த ஒரு நாளில்தான் சேந்தன் அண்ணாவின் புத்தக அலுமாரியில் கண்டு பிடித்து வாசித்தேன். "ரொபின்சன் குறூசோ" இற்குப் பக்கத்தில் ஒரு கறுப்பு/வெள்ளை புகைப்படங்கள் நிறையப் போட்ட ஒரு புத்தகமும் இருந்தது.

காலையில் மழை ஓய்ந்திருந்தது. ஆனால் ஒரே மழை இருட்டு. வெள்ளம் வடிந்திருந்தது. நிலம் சுத்தமாக இருந்தது. நிலத்தில் அட்டைகளும் நத்தைகளும் ஊர்ந்து திரிந்தன. மரங்களும் மழையில் கழுவுப்பட்டுச் சுத்தமாக இருந்தன. கிளிகள், குருவிகள் என்று கலவையாகச் சத்தம் கேட்டது. "கோபால் பற்பொடி நேரம் காலை ஏழு மணி" என்று றேடியோ சொன்னது. பொங்கும் பூம்புனல் அடுத்ததாக இருக்கலாம். றேடியோவை முடுக்கினேன், ஆமி றேடியோவில் "சிட்டூக்குச் செல்லச் சிட்டூக்குச்-சிறகு முளைத்தது.." என்று யேசுதாஸ் சோகமாகப் பாடிக்கொண்டிருந்தார். இடையில் எந்நேரமும் பாட்டு நிறுத்தப்பட்டு, "அச்சுவேலி, இடைக்காடு ,அவரங்கால் மக்கலுக்கு.....பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடக்க இருப்பதால் உடனடியாக பதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயரவும்... " என்று அறிவித்தல் வரலாம். வரவில்லை. "ஒரே இடத்தில் ஆட்களைக் குவித்தால் போடுகிற குண்டுகளுக்குக்கான செலவு குறையும்; குறைந்த குண்டுகள், நிறைந்த சாவுகள்"; இஸ்ரேல்காரன் 'அத்துலத் முதலி'க்குக் கொடுத்த அட்வைஸ் இப்படித்தான் இருந்திருக்க்கும்.

"இண்டைக்கு அடுப்பு மூட்டுவது கஷ்டம், விறகு எல்லாம் ஈரம், போய்ப் பாண் வாங்கி வா" என்றா அம்மா. மழைநாட்களிற் பாண் சூடாக சாப்பிட்டால் நன்றாக இருக்கும். பாண்காரனும் மழை என்பதாற் பிந்தித்தான் கடைகளில் 'சப்ளை' பண்ணியிருப்பான். பாண் சூடாகத்தான் இருக்கும்.

அப்பா வாங்கித் தந்த ஹீரோ சைக்கிள். அதை உழக்க ஒருதரம் தனியாகச் சாப்பிட வேண்டும். என்றாலும் அதில் ஒரு பிரியம். ஓ/எல் பரீட்சைக்கு அதில்தான் போனேன். மகன் வளர்ந்திட்டான் என்று அப்பாவிற்குப் புரிந்த ஒருநாள் வாங்கியிருப்பார்.

மண் ரோட்டில் சைக்கிள் ரயர் தடம் பதிந்த அடையாளங்கள் தெரிந்தன. குட்டை குட்டையாகத் தேங்கி நின்ற தண்ணீரை விலக்கச் சைக்கிளை வெட்டி வெட்டி ஓட வேண்டியிருந்தது. "சரக்க்" என்று சத்தம் கேட்டது. அட்டையோ நத்தையோ ஒன்று ரயரில் நெரிந்து போயிருக்கவேண்டும். ஒருகணம் அரியண்டம், பிறகு பிறகு பரிதாப உணர்ச்சி. புத்த மதக் கொள்கைப்படி ஈ , எறும்பைக் கூடக் கொல்லக் கூடாதாமே? தூரத்தில் இடைக்கிடை துவக்குச் சூட்டுச் சத்தங்கள் கேட்டுக் கொண்டுதானிருந்தன. ஒன்றிரண்டு சூட்டுச் சத்தங்கள் கேட்டாலே தலை தெறிக்க எதிர்த் திசையில் ஓடும் காலம் கழிந்து, 'தூரத்தில் தானே'என்று அசண்டையாக இருக்கும் காலமிது. ஈரக்காற்று முகத்தில் அடித்தது... நெஞ்சுக்குக் குறுக்கே கைகளைக் கட்டிக்கோண்டு மெலிதாக நடுங்கிக்கொண்டு இரண்டொரு பெரிசுகள் நடந்து போய்க்கொண்டிருந்தர்கள். ('இந்தக் காலத்துப் பெடியளுக்குக் குளிர்ச்சட்டை தேவைப்படுது, நாங்களும் இருக்கிறமே, இந்த அறுவைத்தஞ்சு-எழுவது வயதிலும் சட்டையே இல்லாமல் நடந்து திரியுறம், இது ஒரு குளிரே?)

திடீரென்று வெயில் அடிக்க ஆரம்பித்தது. இப்பதான் முதல் முதலில் வெயில் அடிப்பதுமாதிரி ஒரு சுத்தமான புது வெயில். கண்கூசியது. தும்பிகளும், வண்ணத்திப் பூச்சிகளும் பறக்கத் தொடங்கின. முன்பு எங்கு ஒளித்திருந்தன? தூரத்தில் ஹெலிகொப்ரர் பறப்பது கேட்டது. ஹெலிகொப்ரர்காரன் என்றால் கண்ணில் பட்ட யாரையும் துரத்திச் துரத்திச் சுடுவான். "பிளேன்"காறன் என்றால் முன்பே திட்டமிட்டிருந்தால் தான் குண்டு போடுவான். போற வாற வழியில் "எந்நேரமும் எவருக்கும்" வஞ்சகமில்லாமல் சுடுவது ஹெலிகாரன்தான். நினைத்தது மாதிரி 'ஹெலிச்சூட்டுச்' சத்தம் கேட்டது, தூரத்தான். கிட்ட வந்தால் கண்ணில் அகப்பட்ட வீட்டுக்கு புகுந்து தலைக்கறுப்பையும் சைக்கிளையும் மறைக்கவேண்டும். '50 கலிபரா?, 60 கலிபரா' ? எதுவாக இருந்தாலும் ஒரு மனிதனைப் பிய்த்தெறியப் போதும். சிலவேளை ஜாம்பழப் போத்தலில் கைக்குண்டைப் நுளைத்து, அதைச் சும்மா மேலேயிருந்து போட்டுவிடுவாங்கள். அப்படி ஒன்று விழுந்துதான் எங்கள் கணக்கு வாத்தியார் ஒருவர் இறந்து போனார்.

மீண்டும் இருட்டு. இருட்டு என்றால் இரவு மாதிரி இருட்டு. எதிரில் சுகந்தி வந்திருந்தாலே மட்டுக்கட்டியிருக்க மாட்டேன். அவ்வளவு இருட்டு. மழை எந்நேரமும் பெய்யலாம். அல்லது ரூபவாஹினியில் சொல்வதுமாதிரி 'மழை பெய்யக்கூடும்' . அதுக்குமுன் பாணோடு வீடு போகவேண்டும். இரண்டரை இறாத்தல் பாண் வாங்கவேண்டும். அதில் ஒரு இறாத்தல் "அச்சுப்" பாண், மிகுதி "ரோஸ்" பாண். 'ரோஸ்" பாணின் கரை சைக்கிளை ஓடி ஓடித் தின்ன நன்றாக இருக்கும். பாணுக்கு கோழிக்கறி நல்ல பொருத்தம்-அதுவும் மழை நாட்களில். இல்லாவிட்டால் போனாப் போகுது என்று தேங்காய்ச் சம்பலோடு சாப்பிடலாம், அதுவும் நல்லாத்தான் இருக்கும். மழைக்கு இடித்த அரிசிமாப் புட்டும் நல்லாகத்தான் இருக்கும். வெளியில் மழை பெய்ய , வீட்டு விறாந்தையில் குந்தியிருந்து, புட்டை தேங்காய்ச் சம்பலோடு... காமுகன் என்பவன் எந்த நேரமும் பொம்பிளையைப் பற்றி யோசிப்பானாம், நான் மழை வந்தால் சாப்பாட்டைப் பற்றி யோசிக்கத் தொடங்கிவிடுகிறேன்.

**************************

பின்னேரம் ஆகியும் இருட்டு விலகவில்லை. இனி வெளிச்சம் நாளை காலை வந்தால்தான் உண்டு. வயல் வெளியில் நடுங்கிக் கொண்டு நடந்தேன். சுருக்கிய குடை கையில். குளிர் காற்றுக் காதில் வீசியது. வயல் கட்டில் 'பலன்ஸ்' பண்ணி நடக்க நாரியை நெளித்து இடைக்கிடை ஒரு சின்ன ஓட்டம் ஓட வேண்டியிருந்தது. எதிரில் சின்ராசு அண்ணை "தண்ணீஈஈ கருக்கையிலே அங்கே தவளை சத்தம் கேட்டீஈஈருச்சு..." என்று பாடிக்கொண்டு வந்தார். என்னைக் கண்டதும் பாட்டை நிறுத்தி , "தம்பி வளலாய்க் குளத்துக்க முதலை வந்துட்டுதாம், பாத்துப் போ" என்றார். இந்த முதலைகள் எப்படி வருகின்றனவோ தெரியாது. மழைக்காலத்தில் மட்டும்தான் யாராவது காண்பார்கள். முதலை என்றவுடனே ஆளை விழுங்கிவிடுமென்றுதான் யோசனை ஓடும். ஆருக்காவது ஒரு முதலைக்கடி தன்னும் விழுந்தது மாதிரி ஊரில் அறியவில்லை. ஆனால் 'வழிதவறி' ஒரு தோட்டக் கிணற்றிற்குள் விழுந்துவிட்ட ஒரு குட்டி முதலையை அடி அடி என்று அடித்துப் பின்னும் அது சாகாததால் அதன் வாய்க்குள் இறைப்பு மிசின் பைப்'பைச் செருகி தண்ணீர் பம்ப் பண்ணிக் கொன்றார்கள்.அது பழங்கதை.செத்த முதலையை நானும் போய்ப் பார்த்திருந்தேன். முதலைப் பயம் இருந்தாலும் தலை முழுக்க அடிகாயங்களுடன் செத்திருந்த குட்டி முதலையைப் பார்க்கப் பாவமாகத்தான் இருந்தது.

புத்த மதக் கொள்கைப்படி ஈ , எறும்பைக் கூடக் கொல்லக் கூடாதாமே?


------------

நன்றிகள்:
(1) புகைப்படம்: சுகேசன் கேதீஸ்வரன்

22 comments:

  1. //
    'ரோஸ்" பாணின் கரை சைக்கிளை ஓடி ஓடித் தின்ன நன்றாக இருக்கும்.
    //

    எனக்கும் இது பிடிக்கும் பாருங்கோ......:-)

    //புத்த மதக் கொள்கைப்படி ஈ , எறும்பைக் கூடக் கொல்லக் கூடாதாமே?
    //
    கொல்லக் கூடாதுதான்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வலசு - வேலணை, இது புத்தரையோ, புத்த மதத்தையோ விமர்சிக்கும் வரியல்ல என்று புரிந்திருப்பீர்கள்.

      Delete
    2. புத்தரின் மீதும் புத்த மதக் கொள்கைகள் மீதும் மிகுந்த மதிப்பும் மரியாதையும் உங்களுக்கும் இருக்கும் என்பது புரிகிறது. உங்கள் கருத்தினைப் புரிந்ததும் எனக்கும் ஒரு கரு உருவானது.

      விளைவு
      பார்த்தீனியமும் அரசும்

      Delete
  2. நல்ல கதை அண்ணை. ஊரில 1995 மழைகாலத்தில நடந்த சம்பவங்களை கண்ணுக்குள்ள கொண்டுவந்திட்டியள்.

    ReplyDelete
  3. முதலை கதை முற்றிலும் உண்மை . நானும் சென்று பார்த்தேன். அது நாலு அடி உடல் நீளம் , வாய்பகுதி பெரிய அலவாங்கால் குத்தி மறு பக்கம் வந்திருந்தது. சாகவில்லை யாழ் கால் நடை திணைக்களம் கொண்டு சென்றனர்.
    என்ன அதில் அதிசயம் எனில் இருபது மைல் சுற்றளவுக்கு முதலைகளும் இல்லை, நன்னீர் தடாகமும் இல்லை. இயக்கச்சி , மருதங்கேணியில் இருந்து வந்திருக்கலாம் ஆனால், இவ்வளவு தூரம் வரை யார் கண்ணிலும் படாமை யாரையும் துன்புறுத்தாதது தான் புதுமையிலும் புதுமை.
    மழையில் நனைந்தேன், ரசனை அருமை, தொகுத்த விதம் பொறுமையை காட்டுது, சோழக்காற்று கால நிலைக்கு மழை நல்ல குளிர்மை.
    பழமை மீட்ட ஆறுதல்.
    தொடர்க.

    ReplyDelete
    Replies
    1. >>தொகுத்த விதம் பொறுமையை காட்டுது
      தொகுத்த விதம் பொறுமையைச் சோதிக்குது?? :-)

      நான் பார்த்த முதலை வேறோ தெரியவில்லை. நான் பார்த்தபோது அது செத்துப் போயிருந்தது.

      Delete
  4. பழைய நினைவுகளில் தோய வைத்தீர்கள்.
    சோர்ந்தும் நிமிர்ந்தும் அலைக்கழிகிறது மனம்.
    அது சரி ஏன் எல்லோருக்கும் இந்தக்
    கொல வெறி.

    ReplyDelete
    Replies
    1. >அது சரி ஏன் எல்லோருக்கும் இந்தக்
      கொல வெறி.

      அந்தக் கொலை வெறி பரவியதால்தான் இந்தத் துன்பங்கள் எல்லாம்.

      Delete
  5. அண்ணே .. கதை அருமை என்று மட்டும் வாலிபன் கமெண்ட் போடா சொன்னான். எனக்கு முதுகு அரிப்பு பிரச்சனை உங்களுக்கு தெரியும் தானே!

    // ஒன்றிரண்டு மழைத்துளிகள் கூரையில் இருந்து எப்படியோ தப்பி வந்து முகத்தில் விழுந்தன. இரவு முழுவதும் தூரத்தில் ஷெல் வெடிப்பதுவும் துப்பாக்கிகள் சடசடப்பதுவும் இடிமுழக்கத்துடன் கலந்து கேட்டது. //
    அட போட வைத்த இரண்டுவரிகள். கவிதை போல. தொடுக்கும் போது மெய்யாலுமே ஒரு அனுபவம்! ஆனால்
    //சிலவேளைகளில் ஷெல் விழுந்து யாரும் சாகாமல் இருந்திருக்கவும் கூடும். அப்படியே இருக்கக் கடவது.//
    என்ற மூன்றாவது வரி சப்பென்று ஆக்கிவிட்டது. வேண்டாமே!

    //என்று அறிவித்தல் வரலாம். வரவில்லை. "ஒரே இடத்தில் ஆட்களைக் குவித்தால் போடுகிற குண்டுகளுக்குக்கான செலவு குறையும்; குறைந்த குண்டுகள், நிறைந்த சாவுகள்"; இப்படி இஸ்ரேல்காரன் அட்வைஸ் கொடுத்திருப்பான்.//

    அண்ணே அறிவித்தல் வரவில்லை என்ற பின்னரான அட்வைஸ் போருந்தவில்லையோ?

    //மழைநாட்களிற் பாண் சூடாக சாப்பிட்டால் நன்றாக இருக்கும். //
    அண்ணே .. அம்மா சொல்லி நான் பேக்கரி போய் வாங்குவதுண்டு. மழைக்கு சூடான பான், பொரிச்சு இடிச்ச சம்பலோட, இல்ல பருப்போட சாப்பிட்டா .. சொர்க்கம்.. இப்போது வியன்னா பிரெட்டில் அவ்வப்போது சொர்க்கத்தை தேடுவதுண்டு!

    //ஹீரோ சைக்கிள். அதை உழக்க ஒருதரம் தனியாகச் சாப்பிட வேண்டும். //
    சிரித்துவிட்டேன்! ஹீரோ கொட்டு சைக்கிள் .. உலக்கவே முடியாது! அருமை!

    நாங்கள் புத்த மதக்கொள்கையை புத்தமதத்தை கடைப்பிடிப்பவர்கள் தான் பின்பற்றவேண்டும் எண்டு சொல்லுவோம் அண்ணே.
    எங்களுக்கு பகவத்கீதை.
    ‘உன் சுமையையெல்லாம் என்மேல் இறக்கி வை. தருமம், அதருமம் இரண்டுக்கும் பொறுப்பாளி நீயல்ல என்றறிந்து, என்னையே ஒரே புகலிடமாகக் கொண்டு, உன் கடமையைச் செய்.’
    என்பதை வசதியாக பயன்படுத்துவோம் அண்ணே!!!

    அழகான கதை .. நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒரு விமர்சனம் எழுதவைத்த கதை. நன்றி!

    ReplyDelete
    Replies
    1. சிலவேளைகளில் ஷெல் விழுந்து யாரும் சாகாமல் இருந்திருக்கவும் கூடும். அப்படியே இருக்கக் கடவது.//
      என்ற மூன்றாவது வரி சப்பென்று ஆக்கிவிட்டது. வேண்டாமே!

      முதலில் நன்றிகள்;

      என் அப்போதைய மனவோட்டத்தை எழுதினேன். ( ஒவ்வொரு நாளும் ஒன்று, நாலு, பத்து என்று ஷெல் விழுந்து சனங்கள் செத்துக் கொண்டிருந்த காலமது. அடுத்த நாள் பேப்பரில் வரும், எத்தனை பேர் செத்தது/அங்கவீனமானது என்று. சில நாட்களில் ஷெல் புறம் போக்கு நிலத்தில் விழும். இது, அப்பா இறந்த பின்னரான காலத்தை மனதில் இறுத்தி எழுதியது. ஆனால் அதற்கு முன்னரான காலத்தில் அவ்வளவு கடவுள் நம்பிக்கை இல்லாத அப்பா, தூரச் ஷெல் வெடிக்கும்போது சொல்வார், "முருகா யாருக்கும் மேல் விழக்கூடாது" என்று)

      இப்பகூட நல்ல மழை இரவுகளில் கூரையில் மழை விழுவதை ரசித்துக் கொண்டிருக்கும்போது தூரத் துப்பாக்கிகள் சட சடப்பது மாதிரி ஒரு பிரமை. அதை எழுதுவோம் என்றுதான் இருந்தேன் , ஆனால் "மகாராஜாவின் ரயில் வண்டி" முடிவு போல் இருக்கும் என்பதால் தவிர்த்து விட்டேன். (என்றாலும் உங்கள் விமர்சனம் முக்கியம், வெறுமனே "அருமை" என்று போட்டால் நான் தேங்கி விடுவேன்!)

      >அண்ணே அறிவித்தல் வரவில்லை என்ற பின்னரான அட்வைஸ் போருந்தவில்லையோ?
      அதுவும் என் மனவோட்டமே; அந்த அறிவித்தல் இஸ்ரேல்காரன் கொடுத்தது என்று பேசிக்கொள்வார்கள். அந்த அறிவித்தல் எந்நேரமும் வரலாம் என்பதற்காகவே ஆமி றேடியோ கேட்பார்கள். என்றாலும் sequence தப்பிவிட்டது. Re-word பண்ணியுள்ளேன்.

      மீண்டும் நன்றிகள்.

      Delete
  6. சிறுவ‌ய‌தில் நான் அனுப‌வித்த‌ ம‌ழைக்கால‌த்தை நினைவூட்டினீர்க‌ள், மாரிகாலங்க‌ளில் எங்க‌ள் ஊரில் சில‌ ப‌ள்ள‌க்காணிக‌ளில் இடுப்புக்கும் மேலே த‌ண்ணி நிக்கும், அதில் எல்லாம் க‌ட்டும‌ர‌ம் க‌ட்டி ஓட‌ எல்லாம் முய‌ச்சித்திருக்கிறேம்... மாரிகாலங்க‌ளில் வ‌ரும் நீர்ச்சிர‌ங்கும் அத‌னுட‌ன் ப‌டும்பாடும், சிர‌ங்குக் காளை சொறியிற‌த்திக்கெண்டே ஒருத்த‌னை ப‌க்க‌த்தில் வைத்திருப்போம்... ஊரில் ர‌சித்த‌ அள‌வு இங்கு ம‌ழையை ர‌சிக்க‌முடிய‌வில்லை.....

    //மீண்டும் இருட்டு. இருட்டு என்றால் இரவு மாதிரி இருட்டு. எதிரில் சுகந்தி வந்திருந்தாலே மட்டுக்கட்டியிருக்க மாட்டேன். //

    சுக‌ந்தி உங்க‌ளை ந‌ல்லாவே அலைக்க‌ளித்திருக்கிறா போல‌.....

    அருமையான‌ ப‌திவு ச‌க்தி, தொட‌ர்ந்து எழுதுங்க‌ள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி யசோ. உங்கள் ஊர் மழை சற்று வித்தியாசமான இருந்திருக்கும். நீங்களும் எழுதுங்களேன்?
      சுக‌ந்தி - அது ஒரு கற்பனைப் பாத்திரம், யாரும் நம்புகிறாங்கள் இல்லை :-(

      Delete
    2. என‌ன‌ ச‌க்தி என்னையா எழ‌த‌சொல்கிறீர்க‌ள், உங்க‌ளுக்கு ந‌ல்ல‌ ந‌க‌ச்சுவை உண‌ர்வுதான் போங்க‌ள்....

      Delete
  7. கதை நல்ல இருந்தது, இது சக்தி அண்ணை முத்திரை தெளிவாத் தெரியும் கதை. //மகன் வளர்ந்திட்டான் என்று அப்பாவிற்குப் புரிந்த ஒருநாள் வாங்கியிருப்பார். // கவித்துவமான வரிகள். இன்னமும் சில இருக்கு ஜேகே கொஞ்சம் எடுத்துக் காட்டி இருக்குறார். மழைக்கு சூடா வறுத்த கடலை - அதன் வாசம் நல்லா இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. அன்பின் வாலிபன், ஜேகே லேசாக வறுத்தெடுத்து இருக்கிறார்:-) விமர்சனங்களை எப்பவும் விரும்புவேன் :-). சூடா வறுத்த கடலை- கொலஸ்திறோல் பயமில்லாத காலத்தை நினைத்துப் பார்க்கிறேன்.

      Delete
    2. நீங்கள் அந்தாளை சும்மா விட்டத்தானே, வடமராட்ச்சித் தமிழ், வேலணை வடக்கு தமிழ், கொக்குவில் கிழக்கு தமிழ் எண்டு காண்டு பண்ணினா இப்படித்தான் பண்ணும்.

      Delete
    3. நேற்று அவரையும் கேதா'வையும் சந்தித்தேன். (ஏதோ ஒரு இலக்கியவிழா, மழைக்கு ஒதுங்கினேன்- உண்மையாகவே வெளியில் மழை). ரொம்ப அப்பாவிகள் இவர்கள்.

      Delete
    4. ஆமாம் ஜெகே யும் கேதாவும் ரொம்ப ரொம்ப அப்பாவிகள்...(இது அவ‌ர்க‌ளின் இல‌க்கிய‌ அறிவுக்கு சொல்லும் க‌ருத்த‌ல்ல‌ என‌ தாழ்மையுட‌ன் தெரிவித்துக்கொள்கிரேன்)

      Delete
    5. //ஜேகே லேசாக வறுத்தெடுத்து இருக்கிறார்//
      அட போங்கப்பா ... பச்சை கடலையையே எவ்வளவு காலத்துக்கு தான் சாப்பிடுறது? செமியா குத்து வந்திடும் எண்டு தான் அப்பப்ப சாதுவா மெல்லிய பொன்னிறத்தில வறுகிறது!

      //ஏதோ ஒரு இலக்கியவிழா, மழைக்கு ஒதுங்கினேன்- உண்மையாகவே வெளியில் மழை//
      குடை உள்ளேயும் பிடிச்சுக்கொண்டு இருந்ததை கவனித்தேன்!!

      //ஆமாம் ஜெகே யும் கேதாவும் ரொம்ப ரொம்ப அப்பாவிகள்//
      ஆத்தா நம்மளையும் ரெண்டு பேரு அப்பாவிங்க எண்டு ஒத்துக்கிட்டாங்க!!!

      Delete
  8. So evocative. Thank you so much. Regret not being able to comment in Tamil. Still investigating the possibility. Once you hit your 40's, it's difficult to get acquainted with new technology...........

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் ராஜன்.

      "Google transliteration" is one way to type in Tamil. Other way is to install e-kalappai (which is free) and type in Tamil.

      http://www.thamizha.com/project/ekalappai

      Delete