Tuesday, November 19, 2013

சாருகேசி

நான் மிகச்சிறுவனாக இருந்தகாலங்களில் வந்த சினிமாப் பாடல்களில் இளையராஜாதான் இளைஞர்களின் விருப்ப இசையமைப்பாளர். அப்போது 'பெரிசு'களாக இருந்தவர்களெல்லாம் "இவன் என்ன மியூசிக் போடுகிறான்? அந்தக் காலப் பாட்டுக்கள் மாதிரி வருமா? " என்று அலுத்துக்கொள்வார்கள். கையோடு தியாகராஜ பாகவதர் உதாரணம் காட்டப்படுவார்.தியாகராஜ பாகவதர் என்றால் உடனே "மன்மத லீலையை வென்றார் உண்டோ" முதலில் ...



எனக்கும் இந்தப்பாட்டு அந்தக் காலங்களில் பிடிக்கவில்லை. பிறகு கொஞ்சம் பரவாயில்லை போலிருந்தது. இந்நாட்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்றாய் விட்டது. (இப்பாடல் ஜி.ராமநாதன் இசையில், ஹரிதாஸ் திரைப்படத்தில்(1944) வந்தது. இயற்றியவர் பாபநாசம் சிவன்)


இன்னுமொரு பாடல். எனக்கு சிறுவயதுகளில் இருந்து பிடிக்கும். அது,



இதுவும் ஜி.ராமநாதன் இசையில், ஆனால் டி.எம்,சௌந்தரராஜன் குரலில். (அந்நாட்களில் டி.எம்,சௌந்தரராஜன், தியாகராஜ பாகவதர் பாணியிலேயே பாடியே தன் இசைப் பணியைத் தொடங்கியதாகச் சினிமா இசை ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். மறுப்பில்லாமல் ஏற்றுக் கொள்ளலாம்)

கேள்வி: ராஜசுலோசனாவை மயில் என்னாது புறா என்று வர்ணிப்பது பொருத்தமாக இருக்கிறது. இல்லையா?

மேலேயுள்ள இரண்டு பாடல்களும் ஜி.ராமநாதன் இசையில் வந்தன. இரண்டும் சுப்பர் ஹிட் என்பதைவிட, இரண்டு பாடல்களுக்கும் சாருகேசி ராகத்தில் உள்ளன என்பது எனக்கு முந்தாநாள்தான் தெரியவந்தது.. சாருகேசி ராகத்தை எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் என்று யாரும் விட்டுவைக்கவில்லை.

"மலரே குறிஞ்சி மலரே" என்பது எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் வந்தது.




கீழேயுள்ளதுவும் சாருகேசி இராகத்தில்தான் உள்ளது. சிம்ரன் ஓடுவதைக் கவனிக்காமல் சாருகேசியைத் தேடவும். (இசை தேவா)




எனக்கு மிக மிகப் பிடித்த சாருகேசி கீழேயுள்ளதுதான். "ஆடமோடி காலடே". ஆக்கியது சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் (1767-1847). இதிலிருந்துதான் சாருகேசி பற்றித் கூகிளில் தேடவெளிக்கிடக் கிடைத்தவைதான் மேலேயுள்ளவை. மற்றும்படிக்கு என் சங்கீத அறிவு ஒரு பந்திக்குள் அடங்கிவிடும்.

(வயலின் லால்குடி ஜெயராமன், மிருதங்கம் காரைக்குடி மணி, கஞ்சிரா ஜி.ஹரிசங்கர்)




(ஆரம்பத்தில் அலுப்படித்தால் 3:59 இலிருந்து கேட்கவும். பிறகு, பிடித்திருந்தால் மீண்டும் முழுதாகக் கேட்கலாம் :-))

-------------------------

நன்றிகள்: மேலேயுள்ள லால்குடி அவர்களின் வயலினை ஃப்பேஸ்புக்கில் பகிர்ந்த திரு ஆறுமுக வேல்முருகன் அவர்களுக்கு.

Tuesday, September 10, 2013

பென் ஜோன்சனின் ஓட்டம் அல்லது "இதயம்" நிறைந்த காதல்

அழகான ஆறு, கரையில் மூங்கில் மரங்கள்,
வளாகம் முழுக்க அழகிய மரங்கள்...மிக அழகான் மரங்கள்-சிலது பூத்துக் குலுங்கும் சிலது பூக்காது, ஆனால் எல்லாமே அழகு. , மிக அழகான கட்டடங்கள். படத்தில் இருப்பது மாதிரி உண்மையாகவே பல 'சீனறிகளைக்' கொண்ட பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இது நடந்தது.

காலம்: 1992 ஒலிம்பிக் முடிந்து சில நாட்கள். உசேன் போல்ட் 'ஐ மட்டும் அறிந்த இளம் தலை முறைக்கு பென் ஜோன்சனைப் பற்றிச் சொல்லவேண்டும். நான்கு வருடங்களின் முன், 1988 இல் பென் ஜோன்சன் 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்று பிறகு ஊக்க மருந்து சாப்பிட்டதாக நிரூபிக்கப்பட்டு பதக்கத்தைப் இழந்தவர். பதக்கத்தை இழந்தாலும் 9.79 செக்கனில் 100 மீட்டர் ஓடியது அந்தக் காலப் பகுதியில் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. என்பதால் அடுத்த ஒலிம்பிக் காலத்திலும் பென் ஜோன்சன் பேசப்பட்ட நபராகிறார்.

மீண்டும் கதைக்கு: ஆற்றுக்கு இந்தப் பக்கம் அக்பர் விடுதியும் பொறியியல் பீடமும். அந்தப் பக்கம் மிச்ச எல்லாப் பீடங்களும் விடுதிகளும். அக்பர் விடுதி ஆண்கள் விடுதி. அங்கிருந்த பெரிய விதானையார் என்று அறியப்பட்ட பேர்வழியைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும். பேருக்கேற்ற மாதிரி ஆள் நன்றாக இடம் வலமாக வளர்ந்த ஆள். நல்ல பெலசாலியும் கூட. இவரை நகராமல் நிறுத்த நாலைந்து பேர்கள் போதாது. பெரிய விதானையார் என்று இவருக்குப் பெயர் வந்த காரணம், பெரிய என்பது உருவத்தால் வந்தது. விதானையார் என்பதற்கு ஒரு மசமசப்பான காரணம் உண்டு. சின்ன விதானையார் என்றும் இன்னொருவர் இருந்தார்.

இன்றைக்கு பெரிய விதானையாருக்கு நல்ல வெறி. 'ஃபாகல்ரி டே' என்று ஞாபகம். கான்ரீ'னுக்குப் பககத்தில் இருந்த பெரிய 'வரைதல் கட்டடத்தில்' டின்னர் & டான்ஸ். 'தண்ணி' ஆறாக ஓடாவிடினும் அருவியாக ஓடியது. ஒருசிலரை விட அநேகர் 'சோடா மூடி' அளவு பானத்தை மட்டும் முகர்ந்து விட்டு 'தள்ளாடிக்' கொண்டிருந்தார்கள். மிக முக்கியமாக, பெண் பிள்ளைகளைக் கண்டால் இன்னும் அதிகம் தள்ளாடினார்கள். "உன்னால தானையடி குடிக்கிறன்" என்று பொதுவாக அடிக்கடி சொல்லிக் கொண்டார்கள். அதுமட்டுமல்ல சிங்களப் பெண் பிள்ளைகளைக் கண்டால் திடீரென்று 'இங்கிலிஷ்' பேசத் தொடங்கினார்கள். 'இங்கிலிஷ்' கிழவிகள் என்று அறியப்பட்ட ஆங்கிலம் படிப்புக்கும் விரிவுரையாளார்களுடன் மட்டும் எதையும் பேசாமல் ஒரு அசட்டுச் சிரிப்புச் சிரித்துவிட்டு நழுவினார்கள். மேடையில் ஒரு மவுசு இழந்த ஒரு இசைக்குழுவினர் புதிய, பழைய சிங்கள, ஆங்கில, சில தமிழ்ப்பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தனர். ஆத்மா லியனகே'இன் லியத்தம்பராய் மட்டும் சுமாராகப் பாடப்பட்டது. மாணவர்கள் நடனமாடிக் கொண்டிருந்தனர். நடனம் என்றால் கிட்டத்தட்டத் தவளைகள் தாவிக் கொள்வதுமாதிரி... என்றாலும் இது கஷ்டமான வேலை. நிறைய 'எனர்ஜி' தேவைப்படும். களைத்துப் போனால் அதைக் காட்டிக் கொள்ளாமல் "வெறி" மாதிரித் தள்ளாட்டம் போடவேண்டும். இருக்க ஒரு சின்ன இடைச்செருகல் போடவேண்டியுள்ளது. நடனம் என்றால் நிறையக் கற்பனை கிற்பனை பண்ணக் கூடாது. ஆண்கள் தங்கள் பாட்டுக்குத் தனியாக நடனம் என்று எதோவொன்றைச் செய்து கொண்டிருப்பார்கள். பெண்களுடன் சேர்ந்து நடனம் ஆடுவது என்பது ஆராவது 'செற்' ஆன சோடிகளுக்கு மட்டும்தான். சில சிங்களப் பெண் பிள்ளைகள் இதேமாதிரி இன்னொரு இடத்தில் ஒரு குழுவாக நடனம் ஆடிக்கொண்டிருப்பார்கள். இதுதான் கம்பஸ் நடனம். தமிழ்ப் பிள்ளை யாராவது ஒருத்தி தன்னும் ஆடியதாகத் தகவல் இல்லை. (ஆட்டக்காரி என்று லேபல் அடிக்கப்பட்ட பெண்களும் ஆடியதாக இல்லை);ஆனால் லீவில ஊருக்குப் போகேக்க யாராவது ஒன்று கேட்கும் "கம்பசில பெட்டையள் எல்லாம் நல்ல "சோசலாக" பழகுவாள்கள் என்ன?". இந்த இடத்தில் மட்டும் கற்பனை பீறிட்டுக் கிளம்பும் . அங்காலை இஞ்சாலை பார்த்துவிட்டு "மச்சான் இந்த டின்னர் அண்ட் டான்சிலை பெட்டைகளோடைதான் டான்ஸ் ஆடுறது. சொல்லி வேலையில்லை". என்றாலும் நம்பாதமாதிரி "மச்சான் நீயெல்லாம் டான்ஸ் ஆடமாட்டாய்! " என்று ஆள் தொடரும். உள்ளுக்கு நம்பத் தொடங்கியிருப்பார்.

சரி பெரிய விதானையாரை மீண்டும் கவனிப்போம். அவருக்கு கூடப் படித்த ஒரு சிங்களப் பெட்டையில ஒரு கண். கேட்கத் துணிவில்லை. இதயம் முரளி கணக்காக ஒரு மௌனக் காதல். (அவளிற்குப் பெயர் சம்பிகா என்பது மட்டும் இப்போதைக்குப் போதும்)

"மச்சான் இவளுக்கு என்னிலை ஒரு கண் " என்று சொல்லிக் கொள்வார். உண்மை என்னவென்று "பாலர்" வகுப்புக் போகத் தொடங்கிய குறிஞ்சிக் குமரன் கோவில் ஐயரின்ர மகனுக்கே தெரியும். கிடக்கட்டும். இன்றைக்கு இருக்கிற வெறியிலே ஆள் அவளைக் கேட்டாலும் கேட்கலாம்.

"மஷான், இண்டைக்கு நான் இவளோடை கதைக்கப் போறன்" என்று தொடங்கினார்.

"உனக்கு வெறி மச்சான், இண்டைக்குச் சரி வராது, நாளைக்குக் கேட்போம்" என்றான் நூலகர் சிவா. (இவனுக்கு நூலகர் என்று பட்டம் வந்ததற்கு காரணங்கள் நான் சொல்லாமலே உங்களுக்குப் புரிந்திருக்கும்)

விதானையார் மிகத் தெளிவாகச் சொன்னார் "மச்சான், நாளைக்கு எனக்கு வெறி இறங்கினால், கதைக்கத் துணிச்சல் வராது, இண்டைக்கே இவளைக் கேட்கப் போறன். வெறி இருக்கக்கைதான்தான் மச்சான் கதைக்கலாம்".

"எனக்குத் தண்ணி அடிச்சால்தான் இங்கிலிஷ் வரும், I want to talk to her in English மஷான்" தொடர்ந்தார் விதானையார். சரிதான் இவருக்கு சிங்களத்தில் "எக்காய், தெக்காய், துணாய், ... பாலுவாய்" வரைதான் வரும். எனவே சிங்களப் பெட்டையை எப்படி டாவடிக்கிறது? "ஷேக்ஸ்பியர் துணை" என்று மானசிகமாகக் கும்பிடு போட்டுவிட்டு இங்கிலிஷ்'இல் விளையாட வேண்டியதுதான். இதிலும் சிக்கல். விதானையார் அறிந்துவைத்திருந்த இங்கிலிஷ்'இல் நிறைய 'நாலெழுத்து' க் கெட்ட வார்த்தைகள்தான் அதிகம். மருதானைப் பக்கம் 'இங்கிலிஷ்" படம் பார்த்து ஆங்கில அறிவை வளர்த்துக் கொண்டதால் வந்த வினை. "மச்சான் நான் வெள்ளைக்காரன் மாதிரி இங்கிலிஷ் கதைப்பன்" என்று விதானையார் தொடர, திடுக்கிட்டுவிட்டான் ஆங்கிலப் புலவர் வீரசாமி (இயற்பெயர் எதற்கு?). வீரசாமியைப் பற்றி இரண்டே வசனங்களிற் விபரிக்க வேண்டுமானால், ஒன்று: அவன் அடிக்கடி ஆங்கிலப் பழமொழிகளைச் சொல்லுவான், இரண்டு: ஒட்டுமொத்த ஆங்கில மொழியையே தான் குத்தகைக்கு எடுத்தவிட்டது மாதிரிப் பீலா விடுவான்.

சாம்பிளுக்கு ஒன்று சொல்ல வேண்டுமானால், "மச்சான் கேள்," என்று தொடங்கி
''The perfection of wisdom and the end of true philosophy is to proportion our wants to our possessions, our ambitions to our capacities, we will then be a happy and a virtuous people.'' by Mark Twain என்று முடிப்பான். எனக்கு 20 வருடங்கள் கழித்தும் இன்னும் இது புரியவில்லை.

"மச்சான் வா! இண்டைக்குக் கேட்டிடுவம்" என்று தொடங்கினான் பொதிசுமந்த வரதன். வரதன் குழந்தை மனசுக்காரன். பெண்பிள்ளைகள் எதாவது பாரம் சுமந்தால் அவனுக்கு மனம் பொறுக்காது. ஓடிச்சென்று வாங்கித் தான் சுமப்பான். அப்பாதெல்லாம் கிளாலி, கொம்படி கடந்து யாழப்பாணம் போகவேண்டுமென்றால் வரதன் ஒரு வரப்பிரசாதம்- கம்பஸ் பெட்டைகளுக்கு; நாலைந்து பெண்களின் பொதிகளைத் தனியாளாக சுமந்து கொண்டு கிளாலி கொம்படி எல்லாம் திரிந்தபடியால் ஆள் நல்ல பெலசாலி என்பதை அறிவீர்கள்.

விதானையாருக்கு இப்ப கொஞ்சம் பயம் பிடித்துவிட்டது. என்றாலும் உள்ளே போயிருந்த நான்கு 'மூடிகள்' அளவான வெளிநாட்டுப் பானம் தந்த உத்வேகத்தில் படீரென்று எழுந்து நின்றார்.

"மச்சான் இந்த நேரம் அவளவை அக்பர் பாலத்தைத் தாண்டிப் போயிருப்பாளவ, நீ இன்னுங் கொஞ்சம் சுணங்கினால் ராமநாதன் ஹோலுக்குப் போய்த்தான் பிடிக்கவேணும்" என்று இன்னும் ஏற்றத் தொடங்கினான் பொ.சு.வரதன். எல்லாருக்கும் 'ஏத்திவைத்துக் கூத்துப் பாக்கிற' ஆர்வம். என்றாலும் விதானையார் வழமையாக எப்பவும் கடைசி நேரத்தில் ஒரு 'ராஜதந்திரப்' பின்வாங்கலில் ஈடுபட்டுச் சிக்கல்களில் இருந்து நழுவுவதால் கூத்து நடைபெறாது என்றுதான் எல்லோரும் எண்ணியிருந்தார்கள். என்றாலும் இறைவன் சித்தம் வேறக இருந்தது.

விதானையார் அந்தக் காலங்களில் சினிமாக் கதாநாயகர்கள் செய்வதுமாதிரி இடது கையால் தலை முடியைக் கோதிக்கொண்டார். தோள்களைக் குலுக்கினார். பிறகு நாம்பன் மாடு மூசுகிறமாதிரி மூச்சைச் சத்தமாக விட்டார் "டேய், பென் ஜோன்சன் தோத்தான்டா" என்றுவிட்டுத் திடீரென மிக வேகமாக ஓடத் தொடங்கினார். ஓரிரு விநாடிகள் தாமதித்துத்தான் எல்லாருக்கும் நிலைமையின் "சீரியஸ்னெஸ்' விளங்கியது. எல்லாரும் இவருக்குப் பின்னால் ஒடத்தொடங்குகிறார்கள். என்றாலும் யாராலும் விதானையாரை முந்தமுடியவில்லை.இவர்கள் அக்பர் பாலத்தின் இந்தப் பக்கத்திற்குக் கிட்டப் போகும்போது விதானையார் பாலத்தின் அடுத்தபக்கத்திற்குக் கிட்டஓடுவது தெரிந்தது.

அடுத்த சீன்: அக்பர் பாலம் தாண்டியவுடன் கண்ணில் படும் பெயர் தெரியாத, கூடாரமாகச் சடைத்து வளர்ந்திருக்கும் மரத்தின் கீழ் நடக்கிறது. சம்பிகா பழைய தமிழ்ப் படங்களில் வருகிறமாதிரி தோழிகளுடன் மரத்தில் உள்ள கொப்பொன்றில் சாய்ந்து நிற்கிறாள். அருகில் விதானையார். விரைவாக ஓடியதால் தலையெல்லாம் வியர்த்து ஈரமாகி இருந்தது. ஆனால் இவர் மிகத் தெளிவாக ஏதோ கதைத்துக் கொண்டிருந்தார். ஏதும் குளறுபடி நடந்தது மாதிரி இல்லை. விதானையார் தன் காதலைச் சொல்லிருந்தால் சீன் இப்படி இருக்கமாட்டாது என்று தெரிந்தது. இவர்கள் எல்லோரும் போய்ச்சேர ஒரு அசௌகரிய மௌனம். என்ன கதைப்பது என்று யாருக்கும் புரியவில்லை. என்றாலும் நடந்ததை ஊகிக்கக் கூடிய வகையில் அடுத்த வசனத்தை விதானையார் ஆங்கிலத்தில் விட்டார்.
"சம்பிகா, அடுத்த கிழமை கொடுக்க வேண்டிய 'பிராக்ரிகல் ரிப்போர்ட்'டை முடித்துவிட்டேன். நாளைக்குக் கொடுக்கிறேன்."

(முடிவுரை: இச்சம்பவம் நடந்து சிலநாட்களின் பின் "இதயம்" திரைப்படத்தைக் கண்டியில் உள்ள ஒரு பாடாவதி தியேட்டரில் பார்த்தோம். விதானையார் கண் கலங்கியதாகப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பொ.சு.வரதன் சொன்னான். என்றாலும் அன்று படம் பார்த்த கனபேர் சில பல காரணங்களால் கண் கலங்கியதால் "விதானையார் கண் கலங்கிய காதை" பெரிதாகப் பேசப்படவில்லை. அவனவனுக்கு அவனவன் பிரச்சினை!)




பொறுப்பாகாமை :
இது உண்மைச் சம்பவத்தை வைத்துக் கற்பனை செய்யப்பட்டது என்று பல பதிவர்கள் "பொறுப்பாகாமை/டிஸ்கி போடுகிறார்கள். எனக்கு அவ்வளவு நெஞ்சுரம் இல்லை. எனவே இது "உண்மையில்லாத சம்பவத்தை" வைத்துக் கற்பனை செய்யப்பட்டது என்று கூறிக்கொள்கிறேன்.

Tuesday, August 27, 2013

"கிழிச்சம்" சஞ்சிகையின் முப்பதாவது ஆண்டு விழா

"கிழிச்சம்", கலை இலக்கிய, மாத சஞ்சிகை என்றால் சாதாரண வாசகர்கள் தலை தெறிக்க ஓடித்தப்பி விடுவார்கள். என்றாலும் தீவிர வாசகர்கள் விட்டு விட மாட்டார்கள். ஒரு விசித்திரக் கூட்டம் நாடி, நரம்பு, இதயம் கணையம், பித்தப்பை எல்லாவற்றிலும் இலக்கியம் பரவி இனித்தப்ப முடியாது என்ற ஒரு நிலையில் இருப்பது எல்லாருக்கும் தெரிந்திருக்க நியாயம் இல்லை. இவர்கள்தான் தீவிர இலக்கிய வாசகர்கள். 2013 தை "கிழிச்சம்" இதழில் வந்த ஒரு 'படைப்பு'க் கீழே.

ஏம்பிச் சலித்து எழுந்து, "ஆவ் என்று கொட்டாவி விட்டான். கச கச என்று வியர்வை உடம்பெல்லாம் வழிந்து ஓடியது. பாயைச் சுருட்டிக் கதவுக்குப் பின் வைத்தான். பாயிருந்தவிடத்தில் பத்திருவது சிற்றெறும்புகள் ஓடின. கரப்பான் ஒன்று பாயின் ஓரத்திலிருந்து பாய்ந்தோடியது. (இது இலக்கிய எழுத்து என்பதால் "மோர்ட்டீன்" மாதிரிப் பூச்சி கொல்லிகள் வராது). சில்வண்டொன்று தூரத்தில் கத்திக் கேட்டது. அதற்கு எதிரொலியாக பல்லி ஒன்று "சொச் சொச்" என்று "சொல்லியது".

பூச்சி புழுவெல்லாம் இன்னும் இரண்டு பந்திகள் உலாவித் திரிந்தன. நாலாவது பந்தியில் கதை கொஞ்சம் சூடு பிடிக்கிறது.

ஆடுகள் மே மே என்று கத்தின. அவற்றிற்குப் பசித்திருக்க வேண்டும். ஆட்டுக் கொட்டிலில் இருந்து வந்த மூத்திர, புழுக்கை நெடியும் சாய்வாகக் தெறித்து விழுந்த சூரிய வெளிச்சமும் இவனுக்கு ஒரு சிறிய பரவச உணர்வைக் கொடுத்தது. ஆட்டுக் கொட்டில் எங்கும் பரவிக் கிடந்த புழுக்கைகளை விளக்குமாறினாற் கூட்டினான்.

(அடுத்த பந்தியிற் சாணம் அள்ளுகிறார்)

நீங்கள் பயப்பிடுகிறமாதிரி எனக்கும் "கிழிச்சம்" மாதிரி இதழ்களுக்கும் தொடர்புகள் இல்லை. அந்தக்கால சுஜாதா எழுத்துக்களில் வருகிறமாதிரி நான் ஒரு கொம்பியூட்டர் ஆசாமி. அண்மையில் கிழிச்சம் இதழின் முப்பதாவது ஆண்டு விழா நடந்தது. அதற்குப் போய் நொந்து, வாழை நாராய்க் கிழிந்து வந்த நண்பர் திருவடிவேல் சொன்ன கதைதான் இது. திருவடிவேல் ஒரு பதிவர்.ஒரு மாதத்தில் ஒரு பத்துப்பேர் வாசிக்கும் வலைப்பூ ஒன்று வைத்திருக்கிறார். ஆளுக்கு பேசக் கதைக்கத் தெரியாது, பிறகு எழுதவா வரும்? என்றாலும் தன் முயற்சியிற் சற்றும் தளராத விக்கிரமன் மாதிரித் தொடர்ந்து ஏதோ எழுதுகிறார்.

**************************

"திரு" விற்கு வீட்டில் தொல்லை தாங்க முடியவில்லை. அடிக்கடி தொட்டாண்டி வேலைகள் செய்யவேண்டி இருக்கிறது. செய்யவேண்டிய வேலைகளை மனிசன் செய்யார். ஒரு வேலையைச் செய்யாமல் தட்டிக்கழிக்க இன்னொரு வேலையைக் கண்டுபிடிப்பார் பிறகு இன்னொன்று. இப்படியே போகும். கடந்த ஆறுமாதமாக 'வீட்டுத் 'தோட்டத்தில்' புல் காடாய் மண்டிக்கிடந்தது. வெட்டவேண்டும். புல்வெட்டி "ஸ்டார்ட்" ஆகுதில்லை. இழுகயிற்றை ஊன்றி இழுத்தபின் முதுகுப் பிடிப்பு வந்தது. அது வந்ததால் வயதாகிவிட்டதும் ஞாபகத்திற்கு வந்தது. வயதாகியது புரிந்ததால் உடனே அடுத்த சனி நடக்கவிருந்த இலக்கியச் சந்திப்பும் ஞாபகத்திற்கு வந்தது.

வலு சீரியஸ் ஆக இலக்கியச் சந்திப்புக் ஆயத்தம் செய்யத் தொடங்கினார். ஆயத்தம் என்றால் கட்டுரை எதுவும் எழுதி வாசிக்கும் ஆயத்தம் இல்லை. முதலில் ஒரு நல்ல பெல்ட் வாங்கினார். ஜீன்ஸ்'சில் இறுக்கமாகக் கட்டினார். பிறகு இரகசியமாக ஜீன்ஸ்'சை உருவிப்பார்த்து 'நல்ல பெல்ட்' தான் என்று ஸ்திரப்படுத்தினார். போனமுறை கிச்சா அண்ணன் இப்படி ஒரு 'புத்தக வெளியீட்டிற்கு' வேட்டியுடன் போய், அங்கே ஒரு மோதல் நடந்து, வேட்டி உருவுப்பட்டு ,பிறகு அந்தப் போட்டோக்கள் 'பேஸ்புக்' இல் ஒரு ரவுண்ட் வந்தது. சொன்னால் நம்பமாட்டீர்கள். 366 முறை 'ஷெயர்' பண்ணுப்பட்டது. (குறிப்பு அண்ணர் வேட்டிக்குள்ளே ஒரு கோடுபோட்ட அரைக்காற்சட்டை போட்டிருந்தவர்)

ஆயிற்று. சனிக்கிழமையும் வந்தது. இது ஒரு முழுநாள் நிகழ்வு. மெல்பனில் இருந்தெல்லாம் இலக்கியத் தாதாக்கள் வந்திருந்தார்கள். வடிவேலர் மண்டபத்திற்குள் உள்ளிட்டபோது அந்த நாள்களில் ரேடியோ சிலோனில் கலக்கிய திருமதி பிரமீளா ரவீந்திரன் "சினிமாப் பாடல்களைத் திருப்பித் திருப்பிப் பாடுவதுதான் நம்மவர்கள் இலக்கியம் என்று நினத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சொந்தமாக ஆக்கப்படுவதுதான் தமிழ் வளர்ச்சிக்கு' வழிவகுக்கும்'.." என்று உருப்படியாக ஒரு கருத்தை விபரித்துக் கொண்டிருந்தார். இந்த இடத்தில் உண்மையாக விதி சிரித்துக் கொண்டிருக்கவேண்டும். ஏனென்றால் அடுத்துப் பேச எழுந்த 'சில்லெடுத்த சி.அம்பலம் (இயற்பெயர் சிற்றம்பலம்)' இதை வன்மையாக எதிர்த்தார். எதிர்ப்பது ஒரு குற்றமா என்ன? இல்லைத்தான். அடுத்து அவர் செய்ததுதான் வட்ட இலக்கியம் சிறுபத்திரிகை , குறும்பத்திகை இயக்கம் இங்கும் கேள்விப்படாதது. திடீரென்று மூச்சை நன்றாக உள்ளிழுத்து விட்டு "காயாத கானகத்தே.... " என்று தன்னைத் தானே டீ.ஆர். மகாலிங்கம் மாதிரிக் கற்பனை பண்ணிக் கொண்டு பாடத் தொடங்கினார். மேடையில் இருந்த நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் தலையைச் சொறிந்து கொண்டார். கடைசி வரிசையில் உட்கார்ந்திருந்த சிலர் அவசர அவசரமாக 'ரீ' குடிக்க என்று எழுந்து போனார்கள்.

அப்பதான் பின்னுக்கிருந்த ஒரு பெண் சங்கடத்தோடு தன் தோழிக்குச் சொன்னார். 'இந்தாள் இப்படி மானங்கெடுத்துமெண்டா வந்திருக்க மாட்டன்," என்று. அவ்வாளைக் கட்டிய இல்லாள் போல. பாவம்!

ஒருவழியாக திருவாளர் சி.அம்பலம் நாலைந்து சினிமாப் பாடல்களைப் பாடி தன் கருத்துக்களை ஆழமாகப் புரியவைத்துவிட்டுச் சென்றுவிட்டார்.

அடுத்து வந்தவர் மா(ர்)க்சிய இலக்கியத்தில் பழம் தின்று கொட்டைபோட்ட கோ.சா.பெரியதம்பி. இவர் எழுதிய எழுதுகிற விடயங்கள் யாருக்கும் புரிந்ததாகச் சரித்திரம் இல்லை. வாசித்த, கேட்ட துர்ப்பாக்கியவான்களெல்லாம் "நமக்கேன் வம்பு" என்ற பாணியில், "அருமை, அற்புதம்" என்று சொல்லவெளிக்கிட இவருக்குக் கிடைத்துவிட்டது ஒரு 'பரந்த அங்கீகாரம்" நம்பவில்லையாயின் அன்றைய பேச்சில் இருந்து ஒரு சின்ன 'சாம்பிள்'

"...காத்திரமான படைப்பு வெளியின் உச்சம் என்பது எமது மேலாண்மை விழுமியங்களின் சங்கிலித்தொடர்களை இணைக்கும் செவ்விய நீரோட்டத்தின் ஆளுமையை எடுத்தியம்புவதாக இருக்கவேண்டும். ஈழத்து இலக்கியத்தின் ஒவ்வொரு படிநிலைகளையும் இந்த யதார்த்த விழுமிய காரணகூறுகளுடன் புணருமிடத்து, போருக்கு பின்னரான நமது படைப்பு கூறுகள் , ரூசியப்புரட்சின் பின்னரான சோவியத் பண்புகளை தொக்கி நிற்கிறது ...."

இவ்வாறு ஒருவழியாக 'தேத்தண்ணி" இடைவேளை வந்தது. இந்தமாதிரி 'இலக்கியச்' சந்திப்புக்களில் உப்புச் சப்போடு இருக்கிற விஷயம் என்றால் தேத்தண்ணி'யோடு வரும் சிற்றுண்டிகளும் இதர சாப்பாட்டு அயிட்டங்களும்தான். பாட்டுப்பாடி இலக்கியம் வளர்த்த திருவாளர் சி.அம்பலத்துடன் ஒரு மெல்பன் கவிஞர் சீரியசாக ஏதோ விவாதித்துக் கொண்டிருந்தார்.

இடைவேளை முடிந்து இவர் உள்ளே வர மெல்பன் கவிஞர் கவிதை வாசித்துக் கொண்டிருந்தார். பிறகு மேடையிலேயே அழத் தொடங்கிவிட்டார். என்னவென்று விசாரித்தால் இவர் மேடையில் அழுவது இது பன்னிரண்டாம் தடவையாம். ஏதாவது ஒரு அதிஷ்ட எண் வந்ததும் அழுவதை நிறுத்தலாம். (சந்தேகம்: இவர் மேடையில் அழுவது இவர் குடும்பத்திற்குத் தெரியுமா?)

அழுகுணிக் கவிஞர் போனதும் "கிழிச்சம் 30" வெளியிடப்பட்டது. வெளியிடப் பட்டது என்று சாதரணமாகச் சொல்லமுடியாது. ஒரு பத்து இதழ்களை அழகாகப் பொதி செய்து ரிப்பனால் கட்டி, சிட்னியில் உள்ள ஒரு பத்துப் பிரமுகர்களைத் தனித்தனியாக  மேடைக்குக் கூப்பிட்டு ஒவ்வொன்றைக் கையில் கொடுத்து போட்டோ எடுத்து.. ஒரு வழியாக முடிந்தது.

"கிழிச்சம் 30" இனை விமர்சிக்க சோனா மாவன்னா தமிழ்க்கண்ணன் வந்தார்.மடை திறந்த வெள்ளம் என்பார்கள். இவர் "மடை' அது இது வெள்ளம் என்று கவலைப்படாமல் சூனாமி வேகத்தில் பேசத் தொடங்கினார். சற்று நேரம் போனதும்தான் புரிந்தது, புண்ணியவான் முன் அட்டையில் இருந்து பின்னட்டை வரை ஒரு எழுத்து விடாமல் வாசித்துக் கொண்டிருக்கிறார் என்று. இந்த அழகான விமர்சனத்தின் புண்ணியத்தாலோ அல்லது மக்கள் புத்திசாலிகளாகி விட்டார்களோ தெரியவில்லை, அன்றைக்கு "கிழிச்சம் 30" வெறுமனே நான்கு பிரதிகள்தான் விற்கப்பட்டது.


திரு' விற்குப் பசிக்கத் தொடங்கியது. பக்கத்தில் எங்காவது 'burgher' வாங்கிக் கடிக்கலாமோ அல்லது "தேநீர் இடைவேளை" வந்து காப்பாற்றுமோ என்று ஒரு சின்ன யோசனை ஓடியது. அப்போது

"அடுத்து ஏக்கே எனும் சோக்கான பதிவர்" என்றும் அறிமுகத்துடன் மேடையேறினார் அந்த இளைஞர். பெண்கள் பக்கத்தில் இருந்து பலத்த கரகோஷம். இலக்கியப் பெரிசுகளிற்கு வயிற்றில் இருந்து புகை வந்திருக்கும்.

"வணக்கங்க" என்று கைகூப்பினார் ஏக்கே.

"தம்பி தஞ்சாவூரிலை இருந்து இலக்கிய விழா'விற்கு வந்திருகிறார்" என்று குசுகுசுத்தார் பக்கத்தில் இருந்த பெரியவர்.

"சே இவன் புங்குடுதீவு" என்றான் பக்கத்தில் இருந்த யசோ. (இவன் யசோ என்ற பெயரில் முகநூல் கணக்கொன்று வைத்திருக்கிறான். ஆணா பெண்ணா என்று சரியாகச் 'செக்' பண்ணாமல், நாடறிந்த கவிஞர் பொ.ஐ.க.ஜெயவாணன் இவனிடம் முகநூல்-ஜொள் விட்டது தனிக்கதை.)

"நனைவிடை தோயும் நாதாரிகள்" என்று ஒருதரம் மெதுவாகச் சொன்னார் ஏகே . பிறகு எல்லாக் கவிஞர்களும் செய்வதுமாதிரி தலைப்பை மீண்டும் ஒருமுறை வாசித்தார்.- இம்முறை அழுத்தி உறுத்தி நிதானமாக இழுத்து வாசித்தார்.

"ந னை வி டை ...தோ யு ம்... நா தா ரி க ள்

இரண்டு வரிசை தள்ளி உட்கார்ந்திருந்த எஸ்.பொ சங்கடத்தோடு நெளிந்துகொண்டார்.

"மட்டுவில் கத்தரிக்காய், பூநகரிப் புழுக்கொடியல்
வெட்ட வெட்டத் தழைக்கும் இடைக்காட்டுக் கிழுவங் கொப்புக்கள்..
விஜிதா மில் மொட்டைக்கறுப்பன், ஊர்க் கோழிக்கறி
ஞாயிற்றுக் கிழமை முழுக்கு ......"

"ஐயா தீர்ந்ததா உங்கள் தோய்தல்??"

(இந்த இடத்தில் வலது கையை உயர்த்திச் சபையோரைக் கேள்வி கேட்பதுபோல் சைகை செய்கிறார்)

"அச்சுவேலிச் சந்தையடியில் அண்ணன் சைக்கிள் செயின் நழுவியது..
இவர் பெடல் சறுக்க, களுக் என்று சிரித்தாள் அவள்
வழிந்தார் அண்ணன் அசடாகி, மறக்கிலார் அந்தத் தொங்கட்டானை மூபத்து ஆண்டுகள் கழிந்தும்"


(இப்படிப் பந்தி பந்தியாக நனவிடை தோய்தல்கள் கிழிக்கப்பட்டன)

ரூல் அடித்த சீயார்க் கொப்பிகள், நட்ராஜ் கொம்பாஸ்
வாசம் வீசும் இலவசப் புத்தகங்கள், மரவேலைப் பாடம், ஒளித்துவைத்துப் படித்த இலக்கியங்கள்,

எல்லாம் விட்டு வைக்க மாட்டீர்- எல்லாம் எழுதித் தள்ளுவீர்

ந னை வி டை ...தோ யு ம்... நா தா ரி க ள்

என்று முடித்தார்.


**************************


திரு'விற்கு ஒரு சந்தேகம். ஏக்கே தன்னைத்தான் வறுத்தாரோ என்று. இவர் நன்றாகத் தாளிக்கப்பட்டது புரிந்தது. என்றாலும் "சே அப்படி இருக்காது" என்று சொன்னேன். இதுக்கு விடை சொன்ன என்னால் அவர் கேட்ட இன்னொன்றுக்கு விடை சொல்ல முடியவைல்லை.

"ஏன் எல்லாக் கவிஞர்களும் ஒவ்வொரு வரியையும் இவ்விரண்டு தரம் வாசிக்கிறார்கள்? யாராது இதை நிறுத்த மாட்டார்களா?"

நான் ஓடித் தப்பிவிட்டேன்.




----------

நன்றி-

(1) ஜேகே
"...காத்திரமான படைப்பு வெளியின் உச்சம் என்பது எமது மேலாண்மை விழுமியங்களின் .."என்று தொடங்கும் பந்தி ஜேகே'இன் முகநூற் பக்கத்தில் இருந்து அனுமதி இல்லாமற் சுடப்பட்டது.

(2) Image from
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/86381/language/ta-IN/--.aspx

Tuesday, April 16, 2013

முடியுடை நம்பி அல்லது ஒரு சோக்கான காதல் கதை

"தணியன் சிவலிங்கம்" என்று ஒருவரை முகநூலிற் சந்தித்திருப்பீர்கள். இல்லாவிட்டாலும் அவர் புகைப்படத்தையாவது பார்த்திருப்பீர்கள். பிடரிவரை சிலிர்த்து நிற்கும் முடியுடன் "நான் சிங்கம்டா, சிங்கம்" என்று ஒரு அலட்சியப் பார்வையுடன், கமராவை ஒரு சாய்வாகப் பார்த்துக் கொண்டிருப்பார். அவர் கூந்தல் அழகு பெண்களையே பொறாமைப்பட வைக்கும், முக்கியமாக முப்பத்தைந்தைக் கடந்து , கூந்தல் அடர்த்தி குறைய -ஸ்ரயில் என்று என்றொரு மொக்கைக் காரணத்தைக் கண்டுபிடித்து -முடியைக் குட்டையாக்கிக் கொண்டு திரியும் பெண்களின் வயிறு பற்றி எரியும். நல்லகாலமாக அவர் என்னைச் சந்திக்கவில்லை , அத்தோடு நான் முகநூலில் என் உண்மையான போட்டோவைப் போடவுமில்லை.

என் தலைமுடி காடுபோல் அடர்ந்து வளர்ந்திருக்கும், அத்தோடு தோள்ப்பட்டைக்கும் கீழே வளர்த்து- மெதுவாக ஓடும் ஆறு போல் வழிய விட்டிருப்பேன். வேலைக்குப் போகும்போது மட்டும் இரண்டு ரப்பர் பாண்ட் களால் தலைமுடியை முடிந்து ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பேன். த.சிவலிங்கத்தையே பொறாமைப்பட வைக்கிறமாதிரி ஒரு போட்டோ முகநூலிற் போடவென்று எடுத்து வைத்துள்ளேன். "ஐயோ பப்ளிக்கில போடாதேயுங்கப்பா நாவூறு, கண்ணூறு பட்டிடும்" என்கிறாள் சுகந்தி. அவளுக்கு வேறு பயமோ தெரியவில்லை. இவளை நான் சந்தித்ததே என் நீண்ட 'கூந்தலாலே' தான்.

இது நடந்தபோது கிபிர், புக்காரா குண்டுகள் விழத்தொடங்கவில்லை. பல்குழல் எறிகணைகளும் வரவில்லை. சாதா ஷெல், பீரங்கிக்குண்டுகள், ஹெலிச் சூடு என்றிருந்த பழைய யாழ்ப்பாணம். மதில் சுவர்கள் இயக்க நோட்டீசுகளால் நிறைந்திருக்கும். இன்னும் இருவது இருவத்தைந்து ஆண்டுகள் கழித்து 'நான் குழந்தைப் போராளி' என்று இலக்கியம் எழுதப்போகிற சிலர் இரவுகளில் பசை வாளிகள், பிரஷ், நோட்டிஸ் என்று பிசியாக இருந்த காலம். பல்வேறு "ஐக்கிய" விளையாட்டுக் கழகங்கள் மின்னொளியில் வொலிபோல் விளையாடிக் கொண்டிருந்த, மின்சாரம் இருந்த பழைய யாழ்ப்பாணம்.

அக்காலத்திலே மழையும் பெய்யாத, வெயிலும் கடுமையாக எறிக்காத ஒரு நாளில், நான் என்பாட்டுக்கு எதோ ஒரு ரியூசன் சென்ரருக்கு முன்னாலே நடந்து போய்க் கொண்டிருந்தேனாம். முதல் நாள்தான் பியோர் மத்ஸ் வாத்தியார் என்னை வாங்கு வாங்கு என்று வாங்கியிருந்தார். "டேய் உனக்கு மண்டைக்கு வெளியிலை இருகிறமாதிரி மண்டைக்குள்ள ஒண்டும் இல்லை. ஏண்டா என்ரை உயிரை வாங்குகிறாய்?" என. எனக்கு மனசு சரியில்லை. ரோட்டுக்கு இந்தப் பக்க வேலியில் நின்ற ஓணானுக்கு ஏதோ பிரச்சினைபோல. தலையை ஆட்டுவதை நிறுத்திவிட்டு என்னைப் பார்த்துக் கொண்டு நின்றது. காலை ஓங்கி நிலத்தில் குத்தினேன். ஓணான் அலட்டிக்கொள்ளாமல் மெதுவாக நகர்ந்து சென்றது.


"எடி இஞ்சை பாரடி இதை!" என்று ஒரு பெண்குரல் சிந்தனையைக் குழப்பியது.
"என்னத்தை?"
"முன்னுக்கு ஒரு ஆசாமி பெண்டுகள் மாதிரி நீளமாக மயிர் வளர்த்துக் கொண்டு போகுது; ஒரு ஒற்றை ரோசாப்பூவை தலையில் வைத்தால் இன்னும் நல்லாயிருக்கும்".

பிறகு ஒரு நாலைந்து பெட்டையள் "களுக்" என்றோ 'ஈ ஈ " என்றோ சிரித்துக் கேட்டது.

எனக்குச் சுலபமாகக் கோபம் வராது, என்றாலும் இப்படிப் நாலைந்து பெட்டையள் நக்கல் விட்டால் ஆருக்குத்தான் கோபம் வராமல் விடும்? திரும்பி ஒரு கடு கடுப் பார்வையை விட்டேன். எல்லாரும் பயந்து போனாளையள். ஒருத்தி மட்டும் பயப்படாமல் 'நான் பனக்காட்டு நரி' என்றமாதிரி ஒரு பார்வையுடன் நின்று கொண்டிருந்தாள். எனக்கு விளங்கீட்டுது, இவள்தான் இந்த நக்கல்காரி என. ஆள் ஊருக்குப் புதுசு. ஆமிப்பிரச்சினை என்று குடும்பத்தோடு இடம்பெயர்ந்து ஊரில் வசிக்கிறாள்.

"ஏலுமெண்டா என்னை மாதிரி வடிவாக நீளமாக முடி வளர்த்துக் காட்டும், நான் ஒற்றை ரோசாப்பூ என்ன ஒரு கிலோ ரோசாப்புவையே உமக்கு வைக்கிறேன்" என்றேன். கொஞ்சம் வெட்கப்பட்டுக் கன்னம் சிவப்பாள் என்று பார்த்தால் ஒரு முறைப்பை மட்டும் எறிந்தாள். அப்பவெல்லாம் நான் அதிகம் தமிழ்ப் படங்களைப் பார்ப்பேன். அதன் விளைவோ தெரியவில்லை, அடுத்து இவளோடு 'லா லா' என்று பாடிக் கொண்டு திரியிறமாதிரி கனவுகளும் வரத் தொடங்கியது. பிறகு அழுக்கும் கறளுமாக இருந்த என் சைக்கிளை தேங்காயெண்ணெய் மண்ணெண்ணெய் எல்லாம் போட்டுப் பொலிஷ் பண்ணினேன். தலைக்கு மட்டும் இதுநாள் வரை போட்டுக் கொண்டிருந்த நல்லெண்ணையை நிறுத்தினேன். சேட்டு மட்டுமில்லை , சாரத்தையும் அயர்ன் பண்ணி அணியத் தொடங்கினேன்.

பிறகென்ன அந்தக் கால யாழ்ப்பாணக் காவாலிகளின் வரைவிலக்கணப்படி 'சைக்கிளில் பின்னுக்குச் சுத்தினேன் , பிறகு ஒருநாள் காய்ச்சல் என்று வீட்டில் ஓய்வெடுக்கும்போது "என் ஒற்றை ரோசாப்பூவே, செல்லமே அதுவே இதுவே .. " என்று கன்னா பின்னா என்று ஒரு கடுதாசியை எழுதினேன். தனியாகக் கொண்டுபோய்த் குடுக்கத் தைரியம் இல்லை. "டேய் எனக்குப் பயமாக் கிடக்குது, நீயும் வாடா" என்று விக்கியைக் கேட்டேன். கனக்கப் பிகு பண்ணினான். அச்சுவேலி ராஜா கபே'யில் ரோல்ஸ் உம் வடையும் பிளேன் ரீ'யும் வாங்கித் தருவதாக ஆசை காட்டிச் சரிப் பண்ணினேன். ஒருநாள் இரண்டு பேரும் சைக்கிளில் வெளிக்கிட்டு சின்ன வாசிகைசாலையைத் தாண்டி புளியமரச் சந்திக்குக் கிட்ட வந்தாச்சு. அப்ப பார்த்தால் எதிர்பார்த்தமாதிரி இவள் சுகந்தி ரியூசன் முடிந்து வந்து கொண்டிருந்தாள். பக்கத்திலே வழமையாக வருகிற தோழியரைக் காணவில்லை. சேட்டுப் பொக்கற்றுக்குள் கடதாசி, வெளியே எடுக்க முடியவில்லை. கை நடுங்கியது. தொண்டை உலர்ந்தது. இவன் விக்கியைப் பார்த்தேன். ஆள் என்னைவிடப் பயந்துபோனான். "டேய் எனக்கு வயத்தைக் கலக்குது, நான் வீட்டை போப்போறன்" என்றுவிட்டுப் பதிலை எதிர்பார்க்காமல் சைக்கிளைத் திருப்பிக்கொண்டு போய்விட்டான்.

"சரி இதுவும் நல்லதுக்குத்தான், 'கடுதாசு கொடுக்கிறது' மாதிரி சரித்திரப் பிரசித்தி வாய்ந்த சம்பவங்களுக்குச் சாட்சி வைத்துக்கொண்டா செய்வார்கள்?" என்று யோசித்துக் கொண்டேன். கொஞ்சக் காலத்துக்கு முன் ரூட் கிளியர் ஆக்கிய சேந்தன் அண்ணா எல்லாம் என்னை விடப் பயந்தாங்கொள்ளி, நான் மட்டும் என்ன குறைவா? என்று துணிச்சலை வரவழைச்சுக் கொண்டு "இந்தா பிடியும், உமக்கொரு கடதாசி வந்திருக்குது" என்று அவசரமாக நாலாக மடித்து வைத்திருந்த அதைக் கொடுத்தேன்.

"எப்பங்காணும் தபால்காரன் வேலை பாக்கத் தொடங்கின்னீர்?" என்று கண்களை நேரில் பார்த்துக் கொண்டு கேட்டாள். என்றாலும் 'தபாலை' வாங்கத் தயங்கவில்லை.

அந்த இடத்திலேயே வைத்து வாசித்தாள் , பிறகு "கிலோக் கணக்கில் இருந்து இப்ப ஒற்றை ரோசாப் பூவாச்சு, சரியான கஞ்சன் நீர்" என்றாள். பிறகென்ன...?

வீட்டை வந்தாப் பிறகு அக்கா மட்டும் "ஏன்டா இண்டைக்கு இலுப்பெண்ணை குடிச்ச கழுதை மாதிரி முகத்தை வச்சிருக்கிறாய்?" என்று கேட்டாள்.


*************

எனக்கு ஞாபகம் இருந்த நாளில் இருந்தே எனக்கு இந்த முடியுடன் பிரச்சினைதான்; சின்ன வயசில் பார்பர் நல்லையா "தம்பி சாப்பிடறது எல்லாம் முடிக்குத்தான் போகுது போல, உடம்பு வளரக் காணல்லை, முடி மட்டும் அளவு கணக்கிலாமல் வளருது" என்று அலுத்துக் கொண்டுதான் முடி வெட்டத் தொடங்குவார். எனக்கு முடி வெட்டுவது பிடிக்காது, பெண்களை மாதிரி ஆண்களுக்கும் நீளமாக முடி வளர்க்கும் உரிமை வேண்டும் என்று சின்ன வயதுகளிலே யோசிக்கத் தொடங்க்கிவிட்டேன். ஆனால், இதற்கு சில வில்லன்கள். ஒன்று அப்பா. மகன் நீளமாக முடி வளர்த்தால் காவாலியாக விடுவான் என்று ஒரு தப்பான கொள்கை வைத்திருந்தார். மற்றது பள்ளிக்கூடப் பிரின்சிபால் மற்றும் வாத்தியார்கள். இவர்கள் எல்லாம் என் முடிக்குச் சவாலாக இருந்தபடியால் வளர்ந்து இளந்தாரியாக ஆகுமட்டும் "முடியிழந்த" மன்னனாகத்தான் திரிய முடிந்தது.

என்றாலும் தலையில் முடி காட்டுத்தனமாக வளர்ந்ததால் பேன் , பொடுகு என்று கஷ்டப்படுவேன். அம்மாவும் அப்பாவும் மாறி மாறிப் பேன் பார்ப்பார்கள். அப்பா என்றால் பேன்சீப்பால் ஊன்றித் தலையை இழுப்பார். வலிக்கும். பிறகு சீப்பை முகத்தில் இருந்து நாலடி தள்ளிப் பிடித்துப் பார்ப்பார். சீப்பின் பல்லுகளுக்கு இடையில் மாட்டிக் கொண்டிருக்கும் கொழுத்த பேன்களை விரல்களால் வெளியே எடுத்து சீமெந்துத் தரையில் விடுவார்.

"பார்! பண்டிக்குட்டி சைசில் பேன்கள் . நீ சாப்பிட்டுகிறதெல்லாம் பேன்களுக்குத்தான் போகுது" என்றுவிட்டு தரையில் இருக்கும் பேன்களை நகத்தால் தரையுடன் சேர்த்து 'டிக் டிக்' என்று சத்தம் வர நசிப்பார்

"இவனுக்கு மொட்டை போட்டால்தான் சரி" என்று இலவச இணைப்பாக வயிற்றில் புளியையும் கரைப்பார்.

அம்மா பேன் பார்ப்பது ஒரு அழகு.

"வாடா பேன் பார்க்க" என்று கூப்பிட்டா என்றால் நான் மினக்கெடாமல்  அம்மாவின் மடியில் தலை வைத்துப் படுத்து விடுவேன்.

"என்ரை பெடிக்கு ஐயா மாதிரி அடர்த்தியான தலைமயிர்" என்று சொல்லிக்கொண்டு பெரிய பல்லுகள் உள்ள சீப்பால் தலையை வாரத்தொடங்குவா.

"மூளையும் கொப்பன் மாதிரி இல்லாவிட்டால் சரிதான்" என்று அப்பா தொடங்குவார். (மாமியார் மருமகள் பிரச்சினைமாதிரி மாமனார் மருமகன் பிரச்சினை இருக்கக் கூடாதா என்ன?)

அப்பாவும் அம்மாவும் சண்டைபிடிக்க நான் அம்மா மடியில் நித்திரை கொண்டுவிடுவேன்.

நான் வளர வளர உடம்பு வைத்ததுமாதிரி எல்லாம் இல்லை. தலைமயிர் மட்டும் காட்டுத்தனமாக வளரத் தொடங்கியது. தலையில் கடிக்குது என்று சொறிந்தால் நகம் தலையில் படாது, அவ்வளவு அடர்த்தி என் முடி. மலிவான சீப்பைத் தலைவாரப் பாவித்தால், அது முறிந்துவிடும். அப்பா சின்னக்கடையிலே தெரிந்த ஒரு சோனகக் கடையிலே சொல்லி, கொழும்பில் இருந்து எடுப்பித்த ஒரு ஜேர்மன் பிராண்ட் சீப்புத்தான் என் பாவனைக்கு. எனக்குத் தெரியாமல் அக்காகூட அந்தச் சீப்பை எடுத்தால் பெரிய சண்டை வரும். பள்ளிக்கூடத்தில் கூட சமூகக்கல்வி வாத்தியார் "டேய் பெருமுடி மன்னா, சூயஸ் கால்வாய் ஆர் எப்ப வெட்டினது?" என்றுதான் அறுப்பார். கேள்வி மாறும் ஆனால் தொடங்குவது எப்பவும் 'டேய் பெருமுடி.." என்று. இப்படி எனக்கு முடிப் பிரச்சினைகள் கூடக்கூட எனக்கு வழுக்கையரின் மேல் ஒரு சின்னப் பொறாமை வரத் தொடங்கியது. வாழ்க்கை எவ்வளவு சுலபமானது அவர்கட்கு?, பேன் இல்லை, தலையில் அரிப்பு இல்லை. தலைக்கு எண்ணை வார்க்கத் தேவையில்லை. தலைமுடி குழம்பி இருக்கா இல்லையா என்று கவலைப்படத் தேவையில்லை. நமக்குக் கொடுத்து வைத்தது இவ்வளவுதான் என்று பெருமூச்சு விடுவேன்.

*************

முடியுடன் எனக்குப் பிரச்சினை இருந்தாலும் சுகந்தியுடன் பிரச்சினைகள் இல்லை, ஒன்றைத் தவிர. இவளுக்கு என் முடியின் நீளத்தைக் குறைக்கவேண்டும் என்பதில்மட்டும் ஒரு பிடிவாதம். "உப்பிடி நீளமாக மயிர் வளைர்ப்பது எல்லாம் தியாகராஜ பாகவதர் காலம் பாரும், இப்ப கட்டையாக வெட்டுவதுதான் ஸ்ரையில்" என்று மெதுவாக ஒரு ஊக்கி தந்தாள். நான் புரியாததுமாதிரி இருந்துவிட்டேன். பிறகு நேரடியாக சொல்லிவிட்டாள், "தலை மயிர் சேட்டுக் கொலரிலை முட்டாத அளவிற்கு வெட்டவேண்டும்" என்று. அதுவும் சரிவரவில்லை. கடைசியாக இன்னொரு பாணத்தையும் எடுத்துவிட்டாள். "உங்களுக்கு சேந்தன் அண்ணாவைத் தெரியும் தானே? அவர் அவற்றை ஆள் சொல்லிப் போட்டுது என்று நாலு வருசமா வளத்த தாடியையே ஒரு நாளில் வழிச்சுக் போட்டாராம், உங்களுக்கு சலூன் போய் மனுசன் மாதிரி ஒரு ஸ்ரையிலிலே முடி வெட்டத் தெரியவில்லை" எனச் சிணுங்கினாள். அப்ப அவளின் காதில் இருந்த தொங்கட்டானும் சிணுங்கிய மாதிரி இருந்தது. அடுத்தநாட்தான் கனகாலத்திற்குப் பிறகு நான் அசோகன் சலூனிலை முடி வெட்டினேன். வெட்டினாப்பிறகு எனக்குப் என்னையே பார்க்கச் சிரிப்பாக இருந்தது. படலையைத் திறந்துகொண்டு வீட்டுக்குள் நுளைய அக்கா கத்தினாள்

"அம்மோய் இஞ்சை பார் தம்பியின்ரை சாயலில ஆனா ஆனால் சகிக்கக் கூடிய முகச் சாயலில் ஒண்டு வந்து நிக்குது. உனக்கு ஆரெண்டு தெரியுதே?" என்று.

நான் எல்லாப் பல்லும் தெரிய "ஈ ஈ" என்று முகத்தை அஷ்டகோணலாக்கி அழகு காட்டிவிட்டு "அம்மா பிளேண் ரீ போடேலுமே?" என்று கத்தினேன். தம்பி ஒரு நமுட்டுச் சிரிப்புடன் தலையைப் பார்த்தான். அவனுக்குப் பதினான்கு வயதிலேயே முடி கொட்டத் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு நாளும் பச்சை எலுமிச்சங்காயைத் தலையில் தேய்த்து, அரை மணித்தியாலம் ஊறவிட்டு கிணற்று நீரில் தலை முழுகினால் முடி வளரும் என்று யாரோ சொன்னதால், வீட்டில் கறிக்கு வாங்கிய எலுமிச்சங்காய்களை ஒரு கை பார்க்கிறான். இப்ப கீரைக்கறிக்குக்கூட எலுமிச்சம் புளி விடமுடிவதில்லை. எல்லாவற்றையும் 'முடிவளர்ச்சித் தைலமாகப்' பாவித்துத் தீர்க்கிறான்.

கிணற்றடிக்கு வந்தேன், கொஞ்சம் மழைக் குணமாக இருந்தது. கிணற்றடியில் தென்னை, வாழைகள், இப்பில் இப்பில், பிறகு சின்னத் தம்பி நட்டிருந்த 'நாலு மணிச் செடி' , சீனியாஸ் செடிகள் என்று பச்சைப் பசேல் என்று இருந்தது. தலையிற் கிணற்றுத் தண்ணீர் படச் சிலீரென்று ஒரு புது உணர்வாக இருந்தது. அள்ளிஅள்ளித் தலையில் வார்க்க அடங்காத சிலிர்ப்பு. கிணற்றுத் துலாவில் இருந்து அணில் ஒன்று தாவி ஓடியது. ஒரு கவிதை எழுதலாம் போல் ஒரு வேகம். எல்லாம் அப்பா மீன் வாங்கிக்கொண்டு சைக்கிளில் திரும்பி வரும்போது நோ(ர்)மலுக்கு வந்தது.அப்பா என் தலையை விசித்திரமாகப் பார்த்தார். பிறகு ஒன்றும் பறையாமல் போய்விட்டார்.

கண்ணாடியில் என்னைப் பார்க்கும்தோது ஏனோ பண்டைக்காலங்களில் பெண்களால் முடியிழந்த மன்னர்கள் ஞாபகத்திற்கு வந்து போனார்கள். அப்போதே ஒரு முடிவு எடுத்தேன் 'இனி என் தலைமயிரை இப்படிக் கட்டையாக வெட்டுவது இல்லை" என.

*************

இப்படியே என் முடிப் பிரச்சினையும் திரௌபதியின் சேலை மாதிரி நீண்டு கொண்டு போனது. நான் இவளைக் கட்டி பிள்ளை குட்டிகள் பெத்து, நாப்பதைத் தாண்டினாலும் தலையில் முடி மட்டும் மற்ற நாற்பது பிளஸ் பேர்வழிகள் மாதிரிக் கொட்டவில்லை. பதிலாக முடி இன்னும் செழித்து வளரத் தொடங்கியது. சுகந்தி பயப்படத் தொடங்கினாள். "பேய் கீய் பிடித்துவிட்டதோ" என்று பயப்படுவதாகச் சொன்னாள். "நீ பக்கத்தை இருக்கேக்க எந்தப் பேய் கிட்ட வரும்?" என்று கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துக் கடி ஜோக்கை எடுத்து விட்டேன்.

"நான் சீரியஸ்சாக கதைக்க நீ நக்கல் விடுறாய் என்ன?" என்று கோவித்துக் கொண்டாள். பிரச்சினை அப்போதைக்கு முடிவுக்கு வந்தது. . இவள் "நீ' என்று விளித்தால் ஆள் கோபமாக இல்லை எனப் பொருள் படும் என்று அர்த்தம் . "நீர்" என்றால் கொஞ்சம் வில்லங்கம் . "நீங்கள்" என்றால் விருந்தினர் இருக்கிறார்கள் என்று அர்த்தம் -இல்லாவிட்டால் குழந்தைகள் காது கேட்குமிடத்தில் இருக்கிறார்கள். அடுத்தநாள் குண்டொன்றைத் தூக்கிப்போட்டாள்.

"இஞ்சரப்பா?"

"என்ன?"

"முடி நீக்கல் சிகிச்சை எண்டு ஒண்டைக் கேள்விப்பட்டனீங்களே?"

"என்னது கொப்பர் சொன்னவரே?"

"அந்தாளை இழுக்காட்டி உங்களுக்குத் திண்டது செமிக்காது என்ன?"

"சரி இருக்கட்டும், அதென்ன முடியகற்றும் சிகிச்சை?

"முடி நாட்டும் சிகிச்சை மாதிரி, இது அதுக்கு எதிர்!"

"ம்ம்ம்ம்ம்.."

"சரி இருக்கட்டும் எப்ப போறம்?"

"எங்கை?"

"விடிய விடிய ராமாயணாம், விடிஞ்சாப்போலை ராமன் சீதைக்குச் சித்தப்பா எண்ட மாதிரி...."

"சும்மா இரடி, ராமன் சீதைக்குச் சித்தப்பனாக இருந்தால் தப்பிப் பிழைச்சிருப்பான், எங்கைவது நிம்மதியாக...."

முடிவாக "3டி முடியகற்றும்" நிலையத்திற்கு போவது என்று ஒத்துக்கொண்டேன்.

"3டி முடியகற்றகம்" ரவுணில ஒரு ஹைஃபை'யான ஒரிடத்தில் இருந்தது. ஆரம்ம கொன்சல்ரிங் இலவசம். என்றாலும் பப்பளா என்றிருந்த கட்டடமும், குளுகுளு ஏசி'யும் நிறையைச் செலவு வைப்பார்கள் என்று தோன்றியது.

"திரும்பிப் போவமா?" என்று நைசாக நழுவும் ஐடியாவில் சுகந்தியைக் கேட்டேன். பதில் ஒன்றும் பேசாமல் அவள் முறைத்த முறைப்பில் கப்சிப் என்று இருந்துவிட்டேன். அதிகம் காத்திருக்க வைக்காமல் பெயரைக் கூப்பிட்டார்கள்.

கதவைத் திறந்து கொண்டு உள்ளிட்டால், "ஹாய் ஐ ஆம் தமாரா " என்று உதட்டுச் சாயம் கலையாத உச்சரிப்பில் அறிமுகப்படுத்தியவளை இவளுக்குப் பிடிக்கவில்லை என்று புரிந்தது. தன் அடர்த்தியான கூந்தலைத் தோள்வரை'தான் வளரவிட்டிருந்தாள்.

"சரி சொல்லுங்கோ.. " என்று தொடங்கினாள்.

"இவருக்கு 40 வயது கடந்தும், முடி இன்னும் காட்டுத்தனமாக வளருது, அதுதான் பேப்பரில உங்கடை விளம்பரத்தைப் பார்தனாங்கள்; வந்தம்" என்று உற்சாகமில்லாமல் தொடங்கினாள்.

"தலைமுடி எவ்வளவு அடர்த்தி என்று பார்ப்போம்" என்று ஹெல்மெட்  மாதிரி, ஆனால் இன்னும் சிக்கலான ஒரு கருவியைத் தலையில் மாட்டினாள் .
"நல்ல அடர்த்திதான், உங்கடை தலையிலை ஒரு ரோசாப்பூவை வைத்து அழகு பார்க்கலாம் போலுள்ளது. ... அவ்வளவு அடர்த்தி; பரவாயில்லை, குறைத்துவிடலாம், தொடர்ந்து சிகிச்சை எடுக்கவேண்டும்" என்று சொல்லத் தொடங்க, சுகந்தியின் முகம் கடு கடு என்று மாறியது.

படிரென்று எழுந்தாள். "வீட்டை போவோம்" என்று என்னை இழுக்காத குறையாக இழுத்துக்கொண்டு வெளியே வந்தாள்.


*************


"சரி அடுத்த அப்பொயின்ட்மன்ட் எப்ப?" என்று கண்ணைச் சிமிட்டினேன்.

"நான் வரல்லை, விருப்பம் என்றால் நீங்கள் போட்டுவாங்கோ" என்றாள் கொஞ்சம் வெட்கத்தோடு. முதல்நாள் கொஞ்சம் சிறுபிள்ளைத்தனமாக நடந்தது உறுத்தியிருக்க வேண்டும்.

"எனக்கு விருப்பமில்லை. நீ இப்ப பேன் பார்த்துவிட்டால் போதும்" என்றேன்.

"சரி" என்றாள்.

நான் மினக்கெடாமல் இவளின் மடியில் தலை வைத்துப்படுத்தேன்.

என் நீண்ட 'கூந்தலை'ப் பிரித்து பேன்களைத் தேடத் தொடங்கினாள்.

"அம்மா எனக்கும் பேன் கடிக்குது" என்றான் மூத்தவன்.

"எனக்கும்" என்றான் சின்னவன்.

கண்ணைச் சுழற்றிக்கொண்டு வந்தது நித்திரை.



Monday, February 18, 2013

தூக்குத் தண்டனை

-ஜோர்ஜ் ஓ(ர்)வெல்

(தமிழில் எஸ். சக்திவேல்)

இது பர்மாவில் நடந்தது- மழையில் ஊறிக் கிடந்த ஒரு காலைப் பொழுதில். சிறை வளாகத்தைச் சுற்றியிருந்த உயரமான சுவரில் இருந்த ஒரு விளக்கு மஞ்சள் நிறமான நோஞ்சான் ஒளியை உமிழ்ந்து கொண்டிருந்தது. நாங்கள் குற்றவாளிகள் அடைக்கப்பட்டிருந்த அறைகளின் வெளியே காத்துக் கொண்டிருந்தோம். ஒவ்வொரு அறையும் பத்துக்குப் பத்தடியில்- சிறிய விலங்குகளை அடைத்து வைக்கும் கூண்டுகள் போல இருந்தன. ஒரு மரத் திண்டு (கட்டில்), கூடவே ஒரு கூஜா குடிநீர்- இவற்றை விட்டால் ஒவ்வொரு அறையும் ஏறக்குறைய வெறுமையாக இருந்தது. சிலவற்றில் மண்ணிற மனிதர்கள் போர்வையால் தங்களைச் சுற்றிக்கொண்டு அமைதியாகக் குந்தியிருந்தார்கள். அவர்கள் தண்டனை விதிக்கப்பட்ட நபர்கள், அடுத்த கிழமையோ அதுக்கடுத்த கிழமையோ தூக்கிலிடப்பட இருப்பவர்கள்.

ஒரு கைதி கூண்டிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டான். அவன் ஒரு இந்து. ஒல்லிக்குச்சி உருவம். தலை மொட்டை அடிக்கப்பட்டிருந்தது. வெறுமையான ஆனால் பெரிய ஆழமான கண்கள். மீசை தழைத்து வளர்ந்திருந்தது.- அவன் குச்சி உடம்பிற்கு இந்தப் பெரிய மீசை பொருந்தாமல் இருந்தது- சினிமாவில் வரும் 'காமெடியன்'இன் மீசை மாதிரி. ஆறு உயரமான இந்திய வார்டர்கள் அவனைக் காவல் காத்துக்கொண்டும் அதேவேளையில் அவனைத் தூக்கு மேடைக்கு ஆயத்தமாக்கியும் கொண்டிருந்தார்கள். இருவர் துப்பாக்கிகளுடன்- துப்பாக்கிச் சனியன்கள் நீட்டப்பட்டிருந்தன. மற்றவர்கள் அவன் கையில் விலங்குகளை மாட்டினார்கள். ஒரு சங்கிலியை கைவிலங்கினூடாகச் செலுத்தி தங்கள் 'பெல்ட்'களுடன் பொருத்திக் கொண்டார்கள். அவன் கைகளை அவன் உடலோடு பக்கவாட்டில் இறுக்கிக் கட்டினர். . அத்தோடு எல்லோரும் அவனுக்கு மிக நெருக்கமாக நின்றுகொண்டு அவனை இறுக்கிப் பிடித்துக் கொண்டு நின்றார்கள் -ஆசாமி நிற்கிறான் என்று உறுதிப்படுத்துவது போல. இது, இன்னும் உயிருள்ள ஒரு மீனைப் பிடித்து வைத்துக் கொண்டு அது பாய்ந்து நீரில் விழுந்து தப்பிவிடும் என்று பயந்துகொண்டு இருக்கும் சிலரைப் போல இருந்தது. ஆனால் அவன் எதிர்ப்பேதும் காட்டவில்லை. 'கைகளை வசதியாகக் கட்டு' என்று நெகிழ்வாக வைத்திருந்தான். சுற்றவர நடந்தவை எவற்றையும் அவன் கவனித்தது மாதிரித் தெரியவில்லை.

எட்டு மணி அடித்தது. கூடவே தூர இருந்த இராணுவ முகாமிலிருந்து ஊதுகுழல் ஒன்றும் அந்த ஈரக் காற்றில், அலுப்பாக ஒலித்தது. சற்றுத் தள்ளி நின்றிருந்த சிறை சூப்பிரின்டென்ட் பாதையில் இருந்த சரளைக் கற்களைத் கையிலிருந்த குச்சியால் தட்டினார். பிறகு தலையை சத்தம் வந்த திசையை நோக்கி உயர்த்தினார். அவர் ஆ(ர்)மி வைத்தியரும்கூட. நரைத்த பிரஷ் மீசையும் தடித்த குரலும் உடையவர்.

"உனக்குப் புண்ணியமாகப் போகட்டும், சீக்கிரம் பிரான்சிஸ்" எரிச்சலுடன் சொன்னார் சூப்பிரின்டென்ட், "இந்த மனிதன் இவ்வளவுக்குள் செத்திருக்க வேண்டும், நீ இன்னும் ஆயத்தமாகவில்லையா?".

தலைமை ஜெயிலர் பிரான்சிஸ் ஒரு குண்டான தென்னிந்தியன். வெள்ளைச் சீருடையும் தங்க மூக்குக் கண்ணாடியும் அணிந்திருந்தார். "ஆம் ஐயா, ஆம் ஐயா, எல்லாம் திருப்ப்தியாக ஆயத்தமாக இருக்க்கிறது. *அலுக்கோசுவும் காத்துக் கொண்டிருக்கிறான். வேலையைக் கவனிக்கலாம்", தன் கறுத்த கைகளை காற்றில் வீசிக் கொண்டு குளறலாகச் சொன்னார்.

"நல்லது, அப்போது விரைவு படுத்து. இந்த 'வேலை' முடியாமல் மற்றச் சிறைவாசிகளுக்குக் காலைச் சாப்பாடு கிடைக்காது"

தூக்குமேடையை நோக்கி நடக்கத் தொடங்கினோம். இரண்டு வார்டர்கள் குற்றவாளிக்கு இருபுறமும், துப்பாக்கிகளைச் சாய்த்துப் பிடித்துக் கொண்டு; இன்னும் இருவர் அவனுக்கு மிக அருகில் அவன் கையையும் தோளையும் இறுக்கப் பற்றிக்கொண்டு -அவனைத் தள்ளுவது போலும் இருந்தது, சப்போர்ட் ஆகப் பிடிப்பது போலும் இருந்தது. மிகுதிப்பேர், மாஜிஸ்திரேட் மற்றும் இன்ன பிற பேர்வழிகள் பின்னால் நடந்தோம். பத்து யார்கள்தான் நடந்திருப்போம். எச்சரிக்கையோ அல்லது உத்தரவோ எதுவுமின்றி 'அணி' திடீரென்று நின்றது. ஒரு கெட்ட அல்லது பயங்கரச் சம்பவம் நடந்திருக்கவேண்டும்.ஒரு நாய் திடீரென முன்னால் தென்பட்டது-- எப்போது வந்தது என்று கடவுளுக்குத்தான் தெரியும். உரத்து நிறுத்தாமற் குரைக்கத் தொடங்கியது. பிறகு எங்களை நோக்கிப் பாய்ந்துவந்து வாலை மட்டுமல்ல, முழு உடலையும் ஆட்டத்தொடங்கியது. இவவளவு மனிதர்களையும் ஒருமிக்கக் காண அதற்குக் குஷி பிறந்திருக்க வேண்டும் உரோமங்களடர்ந்த நல்ல பெரிய நாய் அது- பாதிச் சீமைநாய், பாதித் தெருநாய். முதலில் அது எங்களை நோக்கித் தாவியது. பிறகு யாரும் நிறுத்தமுதல் தூக்குமேடைக் கைதியிடம் பாய்ந்துசென்று அவன் முகத்தை நக்க முயற்சித்தது. எல்லோரும் திடுக்கிட்டு நின்றோம், நாயைத் தடுக்க யாருக்கும் தோன்றவில்லை.

"யார் இந்தச் சோமாறி விலங்கை இங்கே வரவிட்டது?" சூப்பிரின்டென்ட் கோபத்திற் கத்தினார். "பிடியுங்கள் யாராவது!"

ஒரு வார்டர் நாயை நோக்கித் தாவினார். ஆனால் அது நளினமாகத தப்பி ஓடியது.அத்தோடு அந்த விளையாட்டு ஒரு முடிவுக்கு வந்தது. ஒரு யூரேசிய ஜெயிலர் கொஞ்சச் சரளைக் கற்களைப் பொறுக்கி வீசினார். ஆனால் கற்களைத் தவிர்த்து ஓடிய நாய் பிறகும் எங்களுக்குப் பின்னால் வரத் தொடங்கியது. அதன் சிறு குரைப்பு சிறைச் சுவர்களில் எதிரொலித்தது. இரண்டு வார்டர்களின் பிடியிலிருந்த தூக்குக்கைதி இவற்றை அசுவாரசியமாகப் பார்த்தான். அவன் பார்வை இதுவும் தூக்குமேடைச் சம்பிரதாயங்களில் ஒன்று என்பதுபோல் இருந்தது.சிலநிமிடங்களில் யாரோ நாயைப் பிடித்துவிட்டார்கள். எனது கைக்குட்டையை அதன் கொலரில் நுளைத்துக் கட்டி, அதை வெளியே தள்ளிக் கொண்டு போனோம்; அது இன்னமும் திமிறிக் கொண்டும் முனகிக் கொண்டும் இருந்தது.

இன்னும் நாற்பது யார்களில் தூக்குமேடை வந்துவிடும். எனக்கு முன்னால் நின்ற தூக்குக் கைதியின் மண்ணிறமான பின்புறத் தோற்றத்தினைப் பார்த்தேன். அவன் கைகள் கட்டப்பட்டிருந்ததால் அசௌகரியமாக, கொஞ்சம் அலங்கோலமாக நடந்தான். முழங்கால்களை நேராக்கி எப்போதும் நடந்திராத இந்தியனின் ஒருவித உருளல் நடை. ஆனால் நடை உறுதியாக இருந்தது; ஒவ்வொரு முறையும் அவன் அடி எடுத்து வைக்கும் போது அவன் தசைகள் அசைவது தெரிந்தது, தலையில் உள்ள தோல் மேலும் கீழும் துள்ளியது. அவன் கால்கள் ஈரமான தரையில் பாத அடையாளங்களை வரைந்து சென்றன. ஒருதரம், ஒரு வார்டர் அவன் தோள்களை இறுக்கிப் பிடித்திருந்த போதிலும், தரையில் இருந்த சிறுகுட்டைநீர் காலில் படாமல் விலத்தி நடந்தான்.

இது ஒருவித விசித்திர உணர்வு. ஆனால் இந்தக் கணம்வரை, ஒரு ஆரோக்கியமுள்ள, உணர்ச்சியுள்ள மனிதனை அழிப்பது எப்படி இருக்கும் என்று யோசித்ததில்லை. இவன் நிலத்தில் இருந்த ஈரம் பாதத்தில் படாதவாறு விலத்தி நடந்தபோதுதான், இதிலுள்ள விசித்திரத்தையும் ஒரு உயிரை, முழுதான உயிரை இடையில் பறிப்பதின் மாபெரும் தப்பையும் உணர்ந்துகொண்டேன். இவன் இன்னும் செத்துப் போய்விடவில்லை. நாங்கள் உயிருடன் இருப்பது போலவே இவனும் உயிருடன் இருக்கிறான். இவன் உடலில் உள்ள உறுப்புக்கள் எல்லாம் தன்பாட்டுக்கு வேலை செய்துகொண்டிருக்கும்--- வயிறு உணவைச் செமித்துக் கொண்டிருக்கும். தோல் தன்னைத் தானே புதுப்பித்துக் கொண்டிருக்கும். நகம் வளர்ந்து கொண்டிருக்கும். கலங்கள் உருவாகிக் கொண்டிருக்கும்-- எல்லாம் முட்டாள்த் தனமாக வேலை செய்து கொண்டிருக்கும். தூக்கு மேடையில் -பலகையில் அவன் நிற்கும்போதும் அவன் நகங்கள் வளர்ந்து கொண்டிருக்கும். பலகை இழுக்கப்பட்டுக் காற்றில் இவன் விழுந்து கொண்டிருக்கும்போதும்... இன்னும் பத்திலொரு செக்கன்கள்தான் இவன் உயிரோடு இருக்கப் போகிறான் என்றபோதும்.

அவன் கண்கள் மஞ்சள் சரளைக் கற்களையும் சாம்பல் நிற சுவர்களையும் பார்த்தன; அவன் மூளை இன்னும் ஞாபகப்படுத்துகிறது, உய்த்தறிகிறது, ஆராய்கிறது, நிலத்தில் உள்ள சிறுகுட்டையின் ஈரத்தையும். அவனும் நாங்களும் ஒன்றாக நடந்து செல்லும் ஒரு குழுவினர்- ஒரே உலகத்தையே பார்த்துக் கொண்டு, கேட்டுக் கொண்டு, உணர்ந்து கொண்டு, விளங்கிக்கொண்டு; இன்னும் இரண்டு நிமிடங்களில், ஒரு திடீரென்ற 'ஒடிப்பில்' எங்களில் ஒருவன் போய்விடுவான்--- ஒரு மனது, ஒரு உலகம் குறைந்துவிடும்.

தூக்குமேடை, சிறையின் மைதானத்தில் இருந்து விலத்தி, ஒரு தனித்த சிறிய காணித்துண்டில் இருந்தது. அதைச் சுற்றி உயரமான முட்பற்றைகள் வளர்ந்திருந்தன. செங்கட்டிகளால் மூன்று பக்கங்களிலும் கட்டப்பட்ட ஒரு 'ஷெட்' இனை ஒத்திருந்தது.மேலே பலகை. இன்னும் மேலே இரண்டு மரச்சட்டங்கள், அவற்றில் குறுக்கே ஒரு சட்டம். அதில் தூக்குக் கயிறு தொங்கிக்கொண்டிருந்தது. அலுக்கோசு தலை நரைத்த ஒரு குற்றவாளி-வெள்ளைநிறச் சிறைச்சாலைச் சீருடையிலிருந்தான். தனது 'இயந்திரத்திற்கு' அருகில் காத்திருந்த அவன் நாங்கள் வந்ததும் ஒரு கூழைக் கும்பிடு வரவேற்புத் தந்தான். பிரான்சிஸ் ஒரு வார்த்தை கொடுத்ததும் கைதியை இறுக்கிப் பிடித்திருந்த இரண்டு வார்டர்களும் பாதி தள்ளியும் மீதி செலுத்தியும் அவனைத் தூக்கு மேடையை நோக்கிச் முன்னேற்றினர். அத்தோடு அவனை அசௌகரியமாக ஏணி வழியே மேலே போக உதவினர். பிறகு அலுக்கோசு மேலே ஏறித் தூக்குக் கயிற்றைக் கைதியின் கழுத்தில் மாட்டினான்.

ஐந்து யார்கள் தள்ளி நாங்கள் காத்துக் கொண்டிருந்தோம். வார்டர்கள் தூக்குமேடையைச் சுற்றி, கிட்டத்தட்ட ஒரு அரை வட்டமாக நின்றார்கள். பிறகு, கைதியின் கழுத்தில் தூக்குக் கயிறு சரிப் பண்ணப்படும்போது, கைதி பிரார்த்திக்கத் தொடங்கினான். "ராம்!, ராம்!, ராம்!, ராம்!". அவதியான பயந்த பிரார்த்தனை மாதிரியல்ல. அல்லது உதவி கேட்கும் அழுகையும் இல்லை. உறுதியான, ஒத்திசைக்கின்ற, கிட்டத்தட்ட ஒரு மணியோசைமாதிரி. நாய் ஒரு சிணுங்கலைப் பதிலாய் அளித்தது. இன்னும் தூக்குமேடையில் நின்ற அலுக்கோசு, கைதியின் தலையில் ஒரு சாக்குக் பையை வைத்துக் கழுத்துவரை இழுத்துவிட்டான். "ராம்! ராம்! ராம்! ராம்! ராம்!" சத்தம் சாக்குப் பையினால் அமுக்கப் பட்டாலும் இன்னும் கேட்டது.

அலுக்கோசு கீழே இறங்கி 'லீவரைப்' பிடித்துக்கொண்டு ஆயத்தமாக நின்றான். நிமிடங்கள் நகர்ந்தன. உறுதியான, அனால் அமுங்கிப்போன குரல் இன்னும் கேட்டது. "ராம்! ராம்! ராம்!" குரல் ஒருபோதும் தளம்பவில்லை. சூப்பிரின்டென்ட் தலையை தன் மார்பில் வைத்துக்கொண்டு மெதுவாகக் குச்சியால் நிலத்தைக் கிண்டிக் கொண்டிருந்தார்; ஒருவேளை கைதியின் "ராம்'களை எண்ணிக் கொண்டிருப்பார். ஐம்பது அல்லது நூறு எண்ணட்டும் எனக் காத்திருப்பார் போல. எல்லாரின் நிறமும் மாறியது. இந்தியர்கள் மோசமான கோப்பிபோல சாம்பல் நிறமாயினர். ஒரு துப்பாக்கிச் சனியன் நடுங்கியது. நாங்கள் தலை மூடப்பட்ட தூக்குக் கைதியைப் பார்த்தோம். அவன் 'ராம்' கூச்சல்களைக் கேட்டோம். ஒவ்வொரு 'கூச்சலும்' இவ்வொரு செக்கன் வாழ்வு. எல்லோர் மனதிலும் ஒரே எண்ணமே வந்தது. 'ஓ அவனை விரைவாகக் கொல்லுங்கள், இதை முடித்து வையுங்கள், அத்தோடு அந்த வெறுக்கத்தக்க சத்தத்தை நிறுத்துங்கள்"

திடீரென்று சூப்பிரின்டென்ட் ஒரு முடிவுக்கு வந்தார். தலையைச் சிலிர்த்துக் கொண்டு,கையிலிருந்த குச்சியை விரைவாக அசைத்தார். "சலோ" கோரமாகக் கத்தினார்.

லீவர் இழுபடும் உலோகச் சத்தம். பிறகு மரண அமைதி. தூக்குக் கைதி மறைந்துவிட்டான், கயிறு முறுகிக் கொண்டிருந்தது. நான் நாயைப் போக விட்டேன். அது தூக்கு மேடையின் பின்பகுதிக்குப் பாய்ந்து சென்றது. அங்கு போனதும் நின்று குரைத்தது. பின்பு மைதானத்தின் பின்புறத்திற்குப் பின்வாங்கியது. முட்பற்றைகளுக்குள் நின்று கொண்டு எங்களை நோக்கிப் பீதியாகப் பார்த்தது. கைதியின் உடலைப் பரிசோதிக்கவென்று நாங்கள் தூக்குமேடைக்குக் கிட்டப் போனோம். அவன் கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்தான்; காற்பெருவிரல்கள் கீழ்நோக்கியிருக்க, உடல் மெதுவாகச் சுழன்றது. சுத்தமாகச் செத்துப் போயிருந்தான்.

சூப்பிரின்டென்ட் கையிலிருந்த தன் குச்சியை எடுத்து அவன் உடலை நோண்டிப் பார்த்தார். அது மெதுவாக அங்குமிங்கும் ஆடியது. "ஆள் சரி", என்றார். தூக்கு மேடையில் இருந்து சற்று பின்வாங்கினார். மூச்சைப் ஆழமாக விட்டார். முன்பிருந்த 'அசௌகரிக' முகம் போய்விட்டது. "எட்டு மணி எட்டு நிமிடங்கள். நல்லது, இந்தக் காலைப் பொழுதிற்கு இது மட்டும்தான், நன்றி இறைவா."

வார்டர்கள் துப்பாக்கிச் சனியன்களை உள்ளே இழுத்துவிட்டு, போய்விட்டார்கள். நாய் கொஞ்சம் நிதானத்துடனும் குளறுபடி செய்த உணர்வுடன் பின்னாற் சென்றது. நாங்கள் தூக்குமேடை இருந்த பகுதியை விட்டு விலகி, தண்டனைக் கைதிகள் இருக்கும் சிறைச்சாலையும் கடந்து சிறைச் சாலையின் மத்திய பிரிவை அடைந்தோம். லத்திகளுடன் உலாவும் வார்டர்கள் கைதிகளைக் காவல் காத்துக்கொண்டிருந்தார்கள். கைதிகள் தகரத் தட்டுக்களுடன் நீளமான வரிசையில் குந்தியிருந்தார்கள். இரண்டு வார்டர்கள் வாளிகளில் சோற்றைக் நிறைத்துப் பரிமாறிக் கொண்டிருந்தார்கள். தூக்குக் தண்டனை நிறைவேற்றப்பட்டதன் பின் இது நல்ல 'ஹோம்லி'யான 'ஜொலி'யான நிகழ்வாக இருந்தது. 'வேலை' முடிந்துவிட்டதால் மனதில் ஒரு ஆறுதல் உணர்வு. ஒருவன் ஒரு உத்வேகத்திற் பாடத் தொடங்கினான்.; பிறகு ஓடினான். பிறகு அடக்கிக்கொண்டு சிரிக்கத் தொடங்கினான். பிறகு எல்லோரும் மகிழ்வுடன் பேசத் தொடங்கினோம்.

யூரேசியன் பையன் என்பக்கமாக நடந்துகொண்டிருந்தான். தலையை அசைத்து ஒரு அறிமுகப் புன்னகையைச் சிந்தினான். "உங்களுக்குத் தெரியுமா ஐயா, எங்கள் நண்பன் (தூக்கில் தொங்கியவனைச் சொல்கிறான்)அப்பீல் நிராகரிக்கப்பட்டதும் என்ன செய்தான் என்று? தன் சிறை அறையிலேயே மூத்திரம் பெய்துவிட்டான், பயத்திலே. அன்புடன் இந்தச் சிகரட்'டை எடுங்கள். இந்த வெள்ளிப் பெட்டி நன்றாக உள்ளதல்லவா? பெட்டிக்கடையில் வாங்கினேன்- இரண்டு ரூபா எட்டணா. அச்சு அசலான ஐரோப்பிய ஸ்டைல்."

பலர் சிரித்துக் கேட்டது--- யாருக்கும் ஏனென்று தெரியவில்லை.

பிரான்சிஸ், சூப்பிரின்டென்ட்'இற்கு அருகாக சளசள என்று பேசிக்கொண்டு நடந்துகொண்டிருந்தான். "நல்லது ஐயா, எல்ல்லாம் அதி உன்னதத் திருப்திகரமாக நடந்து முடிந்துவிட்டது. எல்ல்லாம் முடிந்துவிட்டது. --- ஒரு கைவிரற் சுண்டல். அப்படியே ஆயிற்று. இது எப்போதுமே இப்ப்படி நடப்பதில்லை. ஆம்..., சிலவேளைகளில் வைத்தியர் தூக்குமேடைக்குக் கீழே போய்க் கைதியின் கால்களைக் கீழே இழுக்க்க நேரிடும். செத்துவிட்டான் என்று உறுதியாக்க வேண்டுமல்லவா? மிகவும் அருவருப்பானது!"

"நெளிந்து கொண்டிருக்குமா? ஆஹ், அது மோசமானது," என்றார் சூப்பிரின்டென்ட்.

"ஆஹ், ஐயா, சிலவேளைகளில் அவர்கள் எதிர்க்க்கும்போது இன்னும் மோசமாகும். எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. நாங்கள் ஒருவனை வெளியே கொண்டுவரப் போனபோது அவன் தன் கூண்டின் கம்பிகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்தான். நம்புங்கள் ஐயா. அவனை வெளியே இழுக்க ஆறு வார்டர்கள் தேவைப்பட்டார்கள். ஒவ்வொரு காலையும் மூவர் இழுக்க்கவேண்டியதாயிற்று. நாங்கள் சொல்லிப்பார்த்தோம், "தோழனே, நீ எங்களுக்கு ஏற்படுத்தும் துன்பத்தை எண்ணிப்பார்த்தாயா?" என்று. ம்ஹூம், அவன் கேட்கவில்லை. ஆஹ், அவன் ரொம்ம்பக் கோளாறுகாரன்".

நான் உரத்துச் சிரித்துக்கொண்டேன். எல்லாரும் சிரித்தார்கள். சூப்பிரின்டென்ட் கூட சகித்துக்கொள்ளும் அளவிற்கு இளித்துக்கொண்டார். "எல்லாரும் வெளியே வந்து ஏதாவது பானம் அருந்துங்கள்" நட்புடன் கூறினார் அவர். "காரில் ஒரு போத்தல் விஸ்கி உள்ளது. நாம் பகிர்ந்து கொள்ளலாம்"

சிறையின் இரட்டைக் கதவுகளைத்தாண்டி, வெளியே வீதிக்கு வந்தோம். "காலைப் பிடித்து இழு!" என்று கூறிய ஒரு பர்மிய மாஜிஸ்திரேட் வெடிச் சிரிப்புச் சிரித்தார். மீண்டும் எல்லாரும் சிரிக்கத் தொடங்கினோம். இப்போது பிரான்சிஸ்'ஸின் கதை நல்ல நகைச்சுவையாக இருந்தது. நாம் எல்லாரும், உள்ளூர், ஐரோப்பியர், சினேகிதமாக- ஒன்றாக மது அருந்தினோம். செத்துப்போன தூக்குக் கைதியின் உடல் ஒரு நூறு யார்கள் தொலைவில்தான் கிடந்திருக்கும்.



------------------------------------------------------------
குறிப்பு: எழுத்துக்களுக்கு இடைக்கிடை வர்ணம் தீட்டியது எனது வேலை.

*அலுக்கோசு- தூக்குத் தண்டனையை நிறைவேற்றுபவன் ; a hangman
யார்- yard
யூரேசியன்- ஐரோப்பிய ஆசியக் கலப்பினத்தவன்.

http://www.george-orwell.org/A_Hanging/0.html
http://www.george-orwell.org/l_disclaimer.html

Tuesday, January 8, 2013

நில். கவனி. செல்லாதே.

திரைப்பட விமர்சனம்


கதை: ஐந்து நண்பர்கள்,எல்லோரும் இளைஞர்கள்: மூன்று ஆண்கள், இரண்டு பெண்கள்.  தமிழ் சினிமா விதிப்படி இந்த இரண்டு பெண்களுக்கும் அந்த ஆண்களில் நல்ல லுக் உள்ள இரண்டு பேரிலும் காதல். மூன்றாவது ஆண் நீங்கள் ஊகித்தமாதிரியே  'காமெடியன்'.  சிரிக்க வைக்க முயற்சிக்கிறார்.  "முயற்சி உடையோர் இகழ்ச்சி அடையார்". எனவே அவரைப் பார்த்து சிரிக்காமல் இருக்க முடிகிறது.

இது ஒரு த்ரில்லர்.எனவே ஹொலிவூட்டோ அல்லது எதோவொரு அமேரிக்கன், இங்கிலாந்துப் படத்தையோ கூச்ச நாச்சம் இல்லாமல் உருவி இருப்பார்கள் இல்லையா?

The Texas Chain Saw Massacre என்னும் அமேரிக்கப் படத்தைக் கொஞ்சம் உள்ளூர்க் 'கலாச்சாரத்திற்கு ' மாற்றி மசாலாவும் தூவிப் படைத்திருக்கிறார்கள்.

 ஒறிஜினல் படமும் 'பட்ஜெட்' படம்தான். அதையும் சேர்த்துக் கொப்பி அடித்திருப்பார்களோ?

சரி கதைக்குத் திருப்ப வருவோம். இளைஞர்கள் ஐந்து பேரும் தமிழ்நாடு/ஆந்திரா எல்லையில் உள்ள ஒரு ஊருக்குப் (தெள்ளூர்) போகிறார்கள். ஊர் எல்லையில் முகத்தில் காயங்களுடன் ஒரு பெண்ணைக் காண்கிறார்கள். ஏன்/எப்படிக் காண்கிறார்கள்? வழி கேட்கப் போய்த்தான். (அந்தப் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் வானில் GPS system இல்லையா?.. ஒறிஜினல் இங்கிலிஷ் படம் 1974 இல் வந்தது, எனவே சரிதான் GPS ஆவது மண்ணாவது !). அந்த அபலைப் பெண் 'இந்தப் பக்கம் போகாதீர்கள் என்று இவர்களை எச்சரித்து விட்டுத் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்துபோகிறாள். (ஏன்?). இந்த ஐந்து நண்பர்களும் "The Texas Chain Saw Massacre" ஐ முன்னமே பார்த்திருக்கவில்லை என்பதால் ஊருக்குள் (அல்லது காட்டுக்குள்) நுழைகிறார்கள். காட்டுக்குள் ஒரு சந்தேகமான ரீக்'கடை. அந்தக் கடைக்காரம்மாவின் கள்ள 'முழி' கூட இந்த ஐவரையும் அலேர்ட் ஆக வைக்கவில்லை. ரொம்ப  அப்பாவியாய் 'வேனுக்குள்ள ஒரு டெட் பாடி இருக்கு" என்று போலிசுக்குப் போன் பண்ண உதவி கேட்கிறார்கள். பிறகு கடைக்காரம்மா சொன்னது மாதிரி ஒரு கைவிடப்பட்ட பஞ்சாலைக்குப் போகிறார்கள், பிறகு அங்கிருந்து ஒரு மர்ம மாளிகைக்கு... இல்லை ஒரு வீட்டுக்கு போகின்றார்கள்.

முன்னமே சொன்னதுமாதிரி இந்த ஐவரும் ஒறிஜினல் படத்தையோ அல்லது வேறு திகில் படங்களையோ பார்த்திருக்க மாட்டார்கள். (பார்த்திருந்தால் van ஐக் கிளப்பிக் கொண்டு 'துண்டைக் காணோம் துணியைக் காணோம்' என்று ஓடித் தப்பியிருக்க மாட்டார்களா?). காட்டுக்கு நடுவில் ஒரு பழைய வீடு, பார்க்கவே பயம் வருது. கதைவைத் தட்டினால் ஒரு கிழவன், சக்கர நாற்காலியில் வருகிறான். (கெட்ட பேர்வழி என்பதால்  'ன்' என்று எழுதுகிறேன்.). பார்க்கும்போதே தெரிகிறது ஆசாமி ஒரு கெட்ட பேர்வழி என்று. பி ற கு தொடர்வதுதான் த்ரில். தமிழ்த் திரைப்பட வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு அதிபயங்கர, அதி பலசாலியான சைக்கோ ( சைக்கோ என்ற சொல்லைப் பாவித்ததற்காக டொக்டர் ருத்ரன் மன்னிப்பாராக) வருகிறான். இவனுக்குத் தொழில் அகப்பட்ட எல்லோரையும் (தன் குடும்பத்தினர் மற்றும் அந்த வன இலாகா அதிகாரியைத் தவிர) கொல்லுவதுதான். அதுவும் விதம் விதமாக அறுத்து, குத்தி என.  மொட்டையான துருப் பிடித்த ஆயுதங்கள் எனில் இவனுக்கு மிக இஷ்டம். மிகுதியை அகலத் திரையில் காண்க. சிறுவர்கள், இளகிய மனமுள்ளோர் கட்டாயம் தவிர்க்கவேண்டும்.

சரி நிறைகளைப் பார்ப்போம்.

(1) நல்ல கமெரா. திரை அரங்கில் இன்னும் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது.

(2) கதாநாயகி கட்டாயம் காதலிக்க வேண்டும் என்ற இந்தியச் சினிமாச் சூத்திரத்திலிருந்து வெளியே வரமுடியவில்லை என்றாலும், கதாநாயகன்/கி யின் அப்பா, அண்ணா, தம்பி தங்கைகள் என்று தேவையில்லாத பாத்திரங்கள் இல்லை. ('சேகர் எங்கள் காதலை வீட்டில ரொம்ப எதிர்க்கிறாங்க' வகையறா காட்சிகள் இல்லை).

(3) தமிழில் த்ரில்லர் என்ற வகைக்குள் ஒரளவு த்ரில் வர எடுத்திருக்கிறார்கள். (ஒரிஜினல் படம் பார்த்திருக்காவிட்டால் நல்ல த்ரில்லர் என்பேன். நிறைக் காட்சிகள் முன்னமே எதிர்பார்த்த மாதிரி வந்ததால் த்ரில் வரவில்லை)

(4) பெண்களைக் 'கரப்பான் பூச்சியைக் கண்டாலே வீல் என்று கத்துபவர்கள்' என்ற மாதிரிக் காட்டாமல் துணிச்சல்காரிகளாகக் காட்டியது, அதிலும் தன்ஷிகா பாத்திரம்.


குறைகள்:

(1) ஓராண்டுக்கள் இவ்வளவு பேர் கொலை செய்யப்பட்டும் மீடியா, போலிஸ் ,ஃபேஸ்புக் என்று யாருமே கண்டுகொள்வில்லையா? (அல்லது 'நெசமாகத்தான்' கேட்கிறேன், செத்தவர்கள் எல்லாரும் ஈழத் தமிழர்களா?)

(2) என்னதான் இந்தியப் போலீஸ்/ வன இலாகா அதிகாரிகள் லஞ்சம் வாங்கினாலும், இந்தப் பிச்சைக் காசு, செயின் மாதிரி விசுக்கோத்துச் சாமான்களுக்கு  ஒரு வன இலாகா அதிகாரி அடிபணிவாரா? தருணத்திற்கு அவரும் கொலைவெறியோடு அலைகிறார்.

(3) அந்த van தன்ஷிகாவைப் பின் தொடர்வதுவும் , அதற்கு ஒரு பில்டப் கொடுப்பதுவும் -- பிறகு அது ஏன் என்று தெரிந்தபின் வரும் புஸ்வாணமும் தேவையா?

(4) காமெடி சீன்கள் இல்லாவிட்டால் பரவாயில்லை. அதற்காக இப்படிச் செத்த காமெடிளை இட்டு ரசிகர்களை வறுத்தெடுப்பதா?

(5) இயக்குநரே கதாநாயகனாக வருவதால் அவருக்குத் திடீரென்று சூப்பர் ஹீரோ ஆசை வந்து விட்டது போல. அவரே பிரதான வில்லனை ஒண்டிக்கு ஒண்டி மோதித் தீர்த்துக் கட்டுவது.... அவசியம் தேவையா?

(6) இரண்டு கதாநாயகிகளும் என்னதான் துணிச்சல்காரிகள் என்றாலும், இப்படியான ஒரு அசுரத்தனமான வில்லனைக் கண்டு "கஷ்டப்பட்டுப்" பயப்படுவது ரசிக்கும்படியாக இல்லை. போனாற் போகுது என்று பயப்படாத மாதிரியே காட்டியிருக்கலாம். அல்லது 'பயப்படுவது எப்படி" என்று திரைப்படக் கல்லூரியில் எதாவது course போகலாம்.

(7) வறுமை காரணமாகக் கொள்ளை அடிப்பது புரிந்து கொள்ளக்கூடியது. கொலை செய்வது? அதுவும் இப்படிக் கணக்கு வழக்கு இல்லாமல் கண்டவர்கள் எல்லாரையும் போட்டுத் தள்ளுவது? வில்லன் சைக்கோவா? அல்லது கொள்ளைக்காரனா?

டொக்டர் ருத்ரன் விளக்குவாரா? அல்லது title உடன் அவர் வேலை தீர்ந்ததா?

(8) Title மகா அறுவை. தாங்க முடியவில்லை.


மொத்தத்தில்- பார்க்கலாம். மீண்டும் சொல்கிறேன்: சிறுவர்கள், இளகிய இதயமுள்ளோர், அல்லது வன்முறை, ரத்தம் என்பவற்றைச் சகிக்க மாட்டாதவர்கள் தவிர்க்கவும்.

**************************
The Texas Chain Saw Massacre  இன்னும் வன்முறைகள், வெட்டுக்கள், குத்துக்கள் நிறைந்த படம். இதை நான் பார்த்தது 2004 இல். அதுவும் அவுஸ்திரேலியா வந்து, ஒரு சிறு நகரத்தில் (Orange) வேலை எடுத்து, இன்னும் வீடு வாடகைக்கு எடுத்திருக்கவிலை. தங்க இடமில்லை என்று நகரத்தில் இருந்து கொஞ்சம் தள்ளி இருந்த ஒரு பாடாவதி மோட்டலில் சில நாட்கள் தங்கினேன். அப்போது என்னிடம் கார் இருக்கவில்லை. முதல்நாள் ஒரு சக வேலையாள் ஓசி லிஃப்ட் தந்தான். அது ஒரு மிகப் பழைய துருப்பிடித்த கார். வழி முழுக்க முக்கி முனகிக் கொண்டு ஓடியது. ஹெட் லைட் இடைக்கிடை மக்கர் பண்ணியது. அறை வந்து ரிவி'யைப் போட்டேன். கறுப்பு வெள்ளையில் The Texas Chain Saw Massacre என்று தெரியாமலேயே அதைப் பார்த்தேன். பார்த்து முடிந்தவுடன் வயத்தைக் கலக்கியது. பாத்றூம் இருந்த பக்கம் நோக்கினேன். கதவு கொஞ்சம் பழசாக இருந்தமாதிரி இருந்தது. திறந்தால் அநேகமாகக் கிரீச் என்று ஒலி எழும்பும். எதாவது தட்டு முட்டுச் சாமான் டொங் என்று சத்தத்துடன் விழலாம். காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன்.