Tuesday, January 8, 2013

நில். கவனி. செல்லாதே.

திரைப்பட விமர்சனம்


கதை: ஐந்து நண்பர்கள்,எல்லோரும் இளைஞர்கள்: மூன்று ஆண்கள், இரண்டு பெண்கள்.  தமிழ் சினிமா விதிப்படி இந்த இரண்டு பெண்களுக்கும் அந்த ஆண்களில் நல்ல லுக் உள்ள இரண்டு பேரிலும் காதல். மூன்றாவது ஆண் நீங்கள் ஊகித்தமாதிரியே  'காமெடியன்'.  சிரிக்க வைக்க முயற்சிக்கிறார்.  "முயற்சி உடையோர் இகழ்ச்சி அடையார்". எனவே அவரைப் பார்த்து சிரிக்காமல் இருக்க முடிகிறது.

இது ஒரு த்ரில்லர்.எனவே ஹொலிவூட்டோ அல்லது எதோவொரு அமேரிக்கன், இங்கிலாந்துப் படத்தையோ கூச்ச நாச்சம் இல்லாமல் உருவி இருப்பார்கள் இல்லையா?

The Texas Chain Saw Massacre என்னும் அமேரிக்கப் படத்தைக் கொஞ்சம் உள்ளூர்க் 'கலாச்சாரத்திற்கு ' மாற்றி மசாலாவும் தூவிப் படைத்திருக்கிறார்கள்.

 ஒறிஜினல் படமும் 'பட்ஜெட்' படம்தான். அதையும் சேர்த்துக் கொப்பி அடித்திருப்பார்களோ?

சரி கதைக்குத் திருப்ப வருவோம். இளைஞர்கள் ஐந்து பேரும் தமிழ்நாடு/ஆந்திரா எல்லையில் உள்ள ஒரு ஊருக்குப் (தெள்ளூர்) போகிறார்கள். ஊர் எல்லையில் முகத்தில் காயங்களுடன் ஒரு பெண்ணைக் காண்கிறார்கள். ஏன்/எப்படிக் காண்கிறார்கள்? வழி கேட்கப் போய்த்தான். (அந்தப் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் வானில் GPS system இல்லையா?.. ஒறிஜினல் இங்கிலிஷ் படம் 1974 இல் வந்தது, எனவே சரிதான் GPS ஆவது மண்ணாவது !). அந்த அபலைப் பெண் 'இந்தப் பக்கம் போகாதீர்கள் என்று இவர்களை எச்சரித்து விட்டுத் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்துபோகிறாள். (ஏன்?). இந்த ஐந்து நண்பர்களும் "The Texas Chain Saw Massacre" ஐ முன்னமே பார்த்திருக்கவில்லை என்பதால் ஊருக்குள் (அல்லது காட்டுக்குள்) நுழைகிறார்கள். காட்டுக்குள் ஒரு சந்தேகமான ரீக்'கடை. அந்தக் கடைக்காரம்மாவின் கள்ள 'முழி' கூட இந்த ஐவரையும் அலேர்ட் ஆக வைக்கவில்லை. ரொம்ப  அப்பாவியாய் 'வேனுக்குள்ள ஒரு டெட் பாடி இருக்கு" என்று போலிசுக்குப் போன் பண்ண உதவி கேட்கிறார்கள். பிறகு கடைக்காரம்மா சொன்னது மாதிரி ஒரு கைவிடப்பட்ட பஞ்சாலைக்குப் போகிறார்கள், பிறகு அங்கிருந்து ஒரு மர்ம மாளிகைக்கு... இல்லை ஒரு வீட்டுக்கு போகின்றார்கள்.

முன்னமே சொன்னதுமாதிரி இந்த ஐவரும் ஒறிஜினல் படத்தையோ அல்லது வேறு திகில் படங்களையோ பார்த்திருக்க மாட்டார்கள். (பார்த்திருந்தால் van ஐக் கிளப்பிக் கொண்டு 'துண்டைக் காணோம் துணியைக் காணோம்' என்று ஓடித் தப்பியிருக்க மாட்டார்களா?). காட்டுக்கு நடுவில் ஒரு பழைய வீடு, பார்க்கவே பயம் வருது. கதைவைத் தட்டினால் ஒரு கிழவன், சக்கர நாற்காலியில் வருகிறான். (கெட்ட பேர்வழி என்பதால்  'ன்' என்று எழுதுகிறேன்.). பார்க்கும்போதே தெரிகிறது ஆசாமி ஒரு கெட்ட பேர்வழி என்று. பி ற கு தொடர்வதுதான் த்ரில். தமிழ்த் திரைப்பட வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு அதிபயங்கர, அதி பலசாலியான சைக்கோ ( சைக்கோ என்ற சொல்லைப் பாவித்ததற்காக டொக்டர் ருத்ரன் மன்னிப்பாராக) வருகிறான். இவனுக்குத் தொழில் அகப்பட்ட எல்லோரையும் (தன் குடும்பத்தினர் மற்றும் அந்த வன இலாகா அதிகாரியைத் தவிர) கொல்லுவதுதான். அதுவும் விதம் விதமாக அறுத்து, குத்தி என.  மொட்டையான துருப் பிடித்த ஆயுதங்கள் எனில் இவனுக்கு மிக இஷ்டம். மிகுதியை அகலத் திரையில் காண்க. சிறுவர்கள், இளகிய மனமுள்ளோர் கட்டாயம் தவிர்க்கவேண்டும்.

சரி நிறைகளைப் பார்ப்போம்.

(1) நல்ல கமெரா. திரை அரங்கில் இன்னும் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது.

(2) கதாநாயகி கட்டாயம் காதலிக்க வேண்டும் என்ற இந்தியச் சினிமாச் சூத்திரத்திலிருந்து வெளியே வரமுடியவில்லை என்றாலும், கதாநாயகன்/கி யின் அப்பா, அண்ணா, தம்பி தங்கைகள் என்று தேவையில்லாத பாத்திரங்கள் இல்லை. ('சேகர் எங்கள் காதலை வீட்டில ரொம்ப எதிர்க்கிறாங்க' வகையறா காட்சிகள் இல்லை).

(3) தமிழில் த்ரில்லர் என்ற வகைக்குள் ஒரளவு த்ரில் வர எடுத்திருக்கிறார்கள். (ஒரிஜினல் படம் பார்த்திருக்காவிட்டால் நல்ல த்ரில்லர் என்பேன். நிறைக் காட்சிகள் முன்னமே எதிர்பார்த்த மாதிரி வந்ததால் த்ரில் வரவில்லை)

(4) பெண்களைக் 'கரப்பான் பூச்சியைக் கண்டாலே வீல் என்று கத்துபவர்கள்' என்ற மாதிரிக் காட்டாமல் துணிச்சல்காரிகளாகக் காட்டியது, அதிலும் தன்ஷிகா பாத்திரம்.


குறைகள்:

(1) ஓராண்டுக்கள் இவ்வளவு பேர் கொலை செய்யப்பட்டும் மீடியா, போலிஸ் ,ஃபேஸ்புக் என்று யாருமே கண்டுகொள்வில்லையா? (அல்லது 'நெசமாகத்தான்' கேட்கிறேன், செத்தவர்கள் எல்லாரும் ஈழத் தமிழர்களா?)

(2) என்னதான் இந்தியப் போலீஸ்/ வன இலாகா அதிகாரிகள் லஞ்சம் வாங்கினாலும், இந்தப் பிச்சைக் காசு, செயின் மாதிரி விசுக்கோத்துச் சாமான்களுக்கு  ஒரு வன இலாகா அதிகாரி அடிபணிவாரா? தருணத்திற்கு அவரும் கொலைவெறியோடு அலைகிறார்.

(3) அந்த van தன்ஷிகாவைப் பின் தொடர்வதுவும் , அதற்கு ஒரு பில்டப் கொடுப்பதுவும் -- பிறகு அது ஏன் என்று தெரிந்தபின் வரும் புஸ்வாணமும் தேவையா?

(4) காமெடி சீன்கள் இல்லாவிட்டால் பரவாயில்லை. அதற்காக இப்படிச் செத்த காமெடிளை இட்டு ரசிகர்களை வறுத்தெடுப்பதா?

(5) இயக்குநரே கதாநாயகனாக வருவதால் அவருக்குத் திடீரென்று சூப்பர் ஹீரோ ஆசை வந்து விட்டது போல. அவரே பிரதான வில்லனை ஒண்டிக்கு ஒண்டி மோதித் தீர்த்துக் கட்டுவது.... அவசியம் தேவையா?

(6) இரண்டு கதாநாயகிகளும் என்னதான் துணிச்சல்காரிகள் என்றாலும், இப்படியான ஒரு அசுரத்தனமான வில்லனைக் கண்டு "கஷ்டப்பட்டுப்" பயப்படுவது ரசிக்கும்படியாக இல்லை. போனாற் போகுது என்று பயப்படாத மாதிரியே காட்டியிருக்கலாம். அல்லது 'பயப்படுவது எப்படி" என்று திரைப்படக் கல்லூரியில் எதாவது course போகலாம்.

(7) வறுமை காரணமாகக் கொள்ளை அடிப்பது புரிந்து கொள்ளக்கூடியது. கொலை செய்வது? அதுவும் இப்படிக் கணக்கு வழக்கு இல்லாமல் கண்டவர்கள் எல்லாரையும் போட்டுத் தள்ளுவது? வில்லன் சைக்கோவா? அல்லது கொள்ளைக்காரனா?

டொக்டர் ருத்ரன் விளக்குவாரா? அல்லது title உடன் அவர் வேலை தீர்ந்ததா?

(8) Title மகா அறுவை. தாங்க முடியவில்லை.


மொத்தத்தில்- பார்க்கலாம். மீண்டும் சொல்கிறேன்: சிறுவர்கள், இளகிய இதயமுள்ளோர், அல்லது வன்முறை, ரத்தம் என்பவற்றைச் சகிக்க மாட்டாதவர்கள் தவிர்க்கவும்.

**************************
The Texas Chain Saw Massacre  இன்னும் வன்முறைகள், வெட்டுக்கள், குத்துக்கள் நிறைந்த படம். இதை நான் பார்த்தது 2004 இல். அதுவும் அவுஸ்திரேலியா வந்து, ஒரு சிறு நகரத்தில் (Orange) வேலை எடுத்து, இன்னும் வீடு வாடகைக்கு எடுத்திருக்கவிலை. தங்க இடமில்லை என்று நகரத்தில் இருந்து கொஞ்சம் தள்ளி இருந்த ஒரு பாடாவதி மோட்டலில் சில நாட்கள் தங்கினேன். அப்போது என்னிடம் கார் இருக்கவில்லை. முதல்நாள் ஒரு சக வேலையாள் ஓசி லிஃப்ட் தந்தான். அது ஒரு மிகப் பழைய துருப்பிடித்த கார். வழி முழுக்க முக்கி முனகிக் கொண்டு ஓடியது. ஹெட் லைட் இடைக்கிடை மக்கர் பண்ணியது. அறை வந்து ரிவி'யைப் போட்டேன். கறுப்பு வெள்ளையில் The Texas Chain Saw Massacre என்று தெரியாமலேயே அதைப் பார்த்தேன். பார்த்து முடிந்தவுடன் வயத்தைக் கலக்கியது. பாத்றூம் இருந்த பக்கம் நோக்கினேன். கதவு கொஞ்சம் பழசாக இருந்தமாதிரி இருந்தது. திறந்தால் அநேகமாகக் கிரீச் என்று ஒலி எழும்பும். எதாவது தட்டு முட்டுச் சாமான் டொங் என்று சத்தத்துடன் விழலாம். காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன்.