Thursday, May 5, 2011

வழுக்கை இலக்கியம்

வரைவிலக்கணம் : ஒரு வழுக்கையனால்  வழுக்கையரால் வழுக்கையர்களுக்காக எழுதப்படும் இலக்கியம்  "வழுக்கையிலக்கியம் " எனப்படும்.

வழுக்கையரைப் பற்றி நிறையக் கட்டுக் கதைகள் உண்டு, என்றாலும், மிக அபத்தமானது 'இளம் பெண்களுக்கு வழுக்கையரைப் மிகப் பிடிக்கும்' என்பது. எனக்குத் தெரிய மாப்பிள்ளை மொட்டை என்று பெண்களால் தூக்கி எறியப்பட்ட ஆண்களின் எண்ணிகையை ஒரு பெரிய "தரவுக் கட்டு" அட்டவணையில் போட்டால் அதன் 'அடி, நுனி' தேட சிவபெருமான் புதிதாக ஆள் தேட வேண்டும். அத்தோடு 'மாப்பிள்ளைக்கு தலைமுடி போதாது" என்று வந்த "சம்பந்தத்தைத்' தட்டிக்கழித்த பெண்களின் 'நிரலும்' நீளமானது. 'பசையுள்ள' வழுக்கையரின் கதை வேறு.

வழுக்கை என்பது ஒரு நீண்ட நாள் நண்பன்/எதிரி. கிட்டத்தட்ட பதினாறு, பதினேழு வயதுகளில் நமக்குக் கிட்ட வந்துவிடுவான். பிறகு போ என்றாலும் போகமாட்டான். ஆரம்ப நாட்களின், அவன் ஒரு ரகசிய சிநேகிதன்.எமக்கு மட்டும் தெரிவான். 'எனக்கு முடி' கொட்டுது என்றால் எல்லாரும் சிரிப்பார்கள். ரகசியமாக "நெரில்", "கேர்ன்" என்று வாங்கி வைத்து காலையிலும் மாலையிலும் டியுஷன் போகுமுன்னும் தலை தேயத் தேய மசாஜ் செய்வீர்கள். வழுக்கையரை யாரேனும் கிண்டல் செய்தால் ரத்தம் கொதிக்கும். 'காவோலை விழக் குருத்தோலை சிரிக்குது' என்று பெரிய மனுசத்தனமாக யோசித்துக் கொள்வீர்கள். வழுக்கையயரில் மிகப் பிரபலமானவர்கள் எல்லாம் எங்கப்பன் பாட்டன் போல் உணர்வீர்கள். யாராவது வகுப்பில் 'வழுக்கையன் ஜோக்" சொன்னால் சங்கடமாக உணர்வீர்கள். இத்தனைக்கும் நீங்கள் ஒரு ஆரம்பகால வழுக்கையன்; உங்களைத் தவிர வேறு ஒருவருக்கும் நீங்கள் 'முடி' இழந்து கொண்டிருப்பது புரியாது. ம்ம்ஹூம், இதெல்லாம் சொல்லிப் புரிகிற விஷயமா?

'வழுக்கையர் மூளைசாலிகள்" என்றுதான் சொல்கிறார்கள் ! அது வடிகட்டிய பொய் என்று தெரிந்தாலும் ஒத்துக் கொள்ள மாட்டேன்.

வழுக்கைக்கான சிகிச்சை முறைகள்

கீழே உள்ள எதுவும் வேலை செய்யாது. ஆனால் "ஆரம்ப வழுக்கையர் சொல் கேளார்" என்பது வழுக்கையர் வாக்கு என்பதால் எழுதுகின்றேன்.

(1) சிரசாசனம் செய்யலாம், எச்சரிக்கை: சிரசாசனப் பயிற்சி ஆரம்பிக்கமுன் ஒரு தகுதி பெற்ற வைத்தியரை ஆலோசிக்கவும்.
(2) உங்கள் வழுக்கைத் தலையை மாட்டினால் நக்கப் பண்ணலாம்.மாட்டின் சொரசொரப்பான நாக்கு, முடி வளர்ச்சியைத் தூண்டும். திரும்ப எச்சரிக்கை பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல.
(3) மருதாணியை அரைத்துத் தலையில் பூசலாம். தலை சிவப்பாக மாறப்போவதால், அடுத்த சில நாட்களுக்கு "சிக்" லீவு அடிக்க வேண்டிய தேவையுண்டு. வேலை போனால் என்னிடம் மல்லுக்கு வரவேண்டாம். எதற்கும் முன்னெச்சரிகையாக "பயோடேட்டா" வைச் சோடித்து வைக்கவும். www.seek.com முதலிய தளங்கள் உதவியாக இருக்கும்.
(4) ஒரு கப் சூடான வெந்நீரில் ஒரு தேக்கரண்டி கடுகு' இனை இட்டு ஐந்து நிமிடங்கள் சூடாக்கவும். பிறகு அதை , அவசரப்பட்டுத் தலையில் வைத்து மசாஜ் பண்ண வேண்டாம். குடிக்கவும்.

கீழே உள்ளது பண்டைய எகிப்தில் கிட்டத்தட்ட 1100 வருடங்களிற்கு முன்
 பாவிக்கப்பட்டது என ஒரு வலைத்தளம் கூறுகின்றது.

சிங்கம், நீர் யானை, முதலை, பாம்பு, தாரா என்பவற்றின் கொழுப்பைத் தலையிற் தேய்க்கவும். தனித் தனியாகவா? அல்லது சேர்த்தா? என்ன விகிதத்தில்? என்ற விபரம் கிடைக்கவில்லை. ஈமெயில் அனுப்பியுள்ளேன் பதில் கிடைத்தால் பிறகு பதிகிறேன்.

மேலேயுள்ளதைப் பார்க்கும்போது கடந்த 1100 வருடங்களாக வழுக்கைத் தலைக்கு மருத்துவத் சிகிச்சையில் பெரிய மாற்றங்கள் வரவில்லைப் போல் இருக்கிறது. என்ன நான் "நெரில்", "கேர்ன்"  வைத்துத் தேய்த்தேன், 1100  வருடங்களுக்கு முன் முதலை எண்ணெய், பாம்பு எண்ணெய் ...

வழுக்கையை மறைப்பதற்கான ஒரு வழிமுறை அல்லது செல்லத்தம்பி வாத்தியாரின் முறை.

முதலில் கெட்ட செய்தி: சுத்தமான முழு வழுக்கையர் இதைப் பாவிக்க முடியாது. தலையின் பக்கங்களில் முடி இருக்க வேண்டும். எனக்குத் தெரிந்து, எங்களுக்கு ஆறாம் வகுப்பில் 'சமூகக் கல்வி' படிப்பித்த செல்லத் தம்பி வாத்தியார்தான் இதை முதலில் பாவித்தவர்.

தலையின் ஓரங்களில் வளரும் முடியை, எவ்வளவு நீளமாக வளர்கிறதோ அவ்வளவு நீளமாக வளர்க்கவும். பிறகு, அதை லாவகமாகச் சீப்பினால் இழுத்து (வாரி) ,தலையின் வழுக்கையான பிரதேசங்களை  மூடி மறைக்கவும். எஞ்சும் தலை முடியை வெட்டி விடவும். கடுங் காற்று அடிக்கும் இடங்களைத் தவிர்க்கவும். துரதிஷ்ட விதமாகச் செல்லத்தம்பி வாத்தியாருக்குக் காப்புரிமை பற்றித் தெரிந்திருக்கவில்லை. இரண்டு அமெரிக்காக்காரங்கள் முந்திக் கொண்டார்கள். நம்பாவிட்டால் கீழே பார்க்கவும்.

யு.எஸ். காப்புரிமை இலக்கம் 4,022,227

அவர்களுக்கு "இக் நோபல்" பரிசுகூடக் கிடைத்தது என்பது உபரித் தகவல்.

"காதலித்துப் பார், உன்னைச்சுற்றி ஒளிவட்டம் தோன்றும்"  என்று ஒரு கவிஞர் எழுதுகிறார். இது கவிதையா இல்லை மொக்கையா என்ற ஆராய்ச்சிகளைப் பிறகு பார்ப்போம். ஆனால் நாம்  சும்மா இருக்கவே நம்மைச் சுற்றி ஒளி வட்டம் தோன்றுகின்றது. என்ன, அருகில் ஒரு  *ஒளிமுதல் இருக்க வேண்டும்.

------------------------------------------
*'ஒளிமுதல்' என்றால் என்ன என்று புரியாதவர்கள் சின்ன வயதில் தமிழில் விஞ்ஞானம் படித்தவர்களை அணுகவும்.

Image: cartoon  character Caillou

தரவுக் கட்டு -  database
நிரல் -list
சோடித்து - அலங்கரித்து

11 comments:

  1. எதுக்கெல்லாம் காப்புறிமை எடுக்குறது என்று இல்லையா? நான் உடனே சாப்பிடறது எப்படி,காலை கடன் கழிப்பது எப்படி, படுப்பது எப்படி என்பதுக்கெல்லாம் காப்புறிமை எடுக்க போறன்.

    ஆனந்

    (நீர் உம்முடைய முடிய பிய்க்கிறதுக்கு ஒரு காரணமான அதே ஆள்)

    ReplyDelete
  2. காப்புரிமையை எடுக்கவும். உடனே இக் நோபல் பரிசிற்கு சிபார்சு செய்கிறேன் :-)

    ReplyDelete
  3. மிகவும் பிரயோசனமான பதிவு மிக்க நன்றிகள்..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    அளவுக்கதிகமான பரசிட்டமோல் என்ன செய்யும்.. (Paracetamol Poisoning)

    ReplyDelete
  4. வருங்காலத்துக்கு தேவையான பதிவு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. "..ஒரு வழுக்கையனால் வழுக்கையரால் வழுக்கையர்களுக்காக எழுதப்படும் இலக்கியம் வழுக்கையிலக்கியம் "

    இந்த வழுக்கையனுக்கு ரெம்பப் பிடித்திருக்கிறது.

    ReplyDelete
  6. வருகைக்கு நன்றி, Dr ஐயா , மற்றும் மைந்தன் சிவா.

    ReplyDelete
  7. Nice article. Sorry, I don't know how to type in Tamil. One day, my son asked his dad showing an olden golden day photo "Dad! How did you get hair in your top part of the head??".

    ReplyDelete
  8. சரி சரி..
    பரவாயில்லை. கலாநிதி பட்டம் எடுக்கிற அளவுக்கு வழுக்கையை பற்றி ஆராய்ச்சி பண்ணி இருக்கிறீங்க. நீங்க சொன்னா நம்பத்தான் வேணும்.

    "அற நனைந்தவனுக்கு குளிரென்ன கூதலென்ன" ...
    முழு வழுக்கை விழுந்தா
    இப்ப இதுதான் ஸ்ரைல் எண்டு சொல்லிக்கொண்டு திரிய வேண்டியதுதான்.

    ReplyDelete
  9. @கணேஷ் >நீங்க சொன்னா நம்பத்தான் வேணும்.
    இந்த நக்கல்தானே வேண்டாம் என்கிறது :-)

    ReplyDelete
  10. எனது வழுக்கையான வாழ்த்துக்கள்.
    ” வழுக்கை என்பது ஒரு நீண்ட நாள் நண்பன்/எதிரி. கிட்டத்தட்ட பதினாறு, பதினேழு வயதுகளில் நமக்குக் கிட்ட வந்துவிடுவான். பிறகு போ என்றாலும் போகமாட்டான். ஆரம்ப நாட்களின், அவன் ஒரு ரகசிய சிநேகிதன்.எமக்கு மட்டும் தெரிவான். 'எனக்கு முடி' கொட்டுது என்றால் எல்லாரும் சிரிப்பார்கள். ரகசியமாக "நெரில்", "கேர்ன்" என்று வாங்கி வைத்து காலையிலும் மாலையிலும் டியுஷன் போகுமுன்னும் தலை தேயத் தேய மசாஜ் செய்வீர்கள். வழுக்கையரை யாரேனும் கிண்டல் செய்தால் ரத்தம் கொதிக்கும். ”

    கல்வெட்டில் எழுதப்பட வேண்டிய வாசகங்கள் இவை. நான் கல்லு ஸ்பான்சர் பண்ணுகிறேன்.

    ReplyDelete