"அட நாசமறுவானே வேலியை ஏண்டா தட்டுறாய்?" என்று வேலிக்கு அந்தப் புறமிருந்து கோபமான ஒரு குரல் கேட்டது. இவன் பாய்ந்து விழுந்து ஓடினாலும், அந்த அவசரத்திலும் வேலிக் கதியால்களில் இருந்து இரண்டு மூன்று கிளுவங் கொப்புகளை முறித்தெறிய மறக்கவில்லை. அந்த வீட்டிலிருந்த கிழவி கோபத்தோடு வெளியே வந்து இன்னொரு சிறுவனுக்கு திட்டத் தொடங்க அவன் தன்பங்குக்கு "ஆச்சி, பூச்சி, மதவாச்சிக் கோச்சி" என்று எதுகை மோனையுடன் நெளித்துக் காட்டி விட்டு ஓடத்தொடங்கினான். கிழவி 'தூய' செம்மொழியில் திட்டத் தொடங்கியது. அவா சொன்ன வசனங்களின் உண்மை அர்த்தம் புரிய அவனுக்கு இன்னும் பத்துப் பன்னிரண்டு வருடங்கள் கழியவேண்டியிருக்கும். தாய் மொழியில் கிழவிக்கு இருக்கும் புலமை அப்படி.
ஓடத்தொடங்கிய இரண்டு பேரும் போய் நின்றது பள்ளிக்கூடத்தில் நின்ற வேப்பமரங்களின் கீழே. மிச்சப்பேரும் சரியாக ஊகித்து அங்கே வந்து சேர்ந்தார்கள்.
**************************
ரங்கனின் அரைக்காற்சட்டைப் பொக்கற்றில் ஒரு நெருப்புப் பெட்டி இருக்கும். அதற்குள் நெருப்புக்குச்சி இருக்காது. பதிலாக உயிருள்ள ஒன்று இருக்கும். இன்றைக்கு சில்வண்டு . இவன் நடக்க நடக்க சில்வண்டு "ரீஈஈஈஈஈ, ரீற், ரீஈஈஈஈ" என்று விட்டுவிட்டுச் சத்தம் போட்டது. இவனைக் கண்ட எல்லோரும் சத்தத்தைக் கேட்டு விட்டுக் கேள்விக்குறியோடு பார்க்க, ஒன்றும் நடவாததுபோல் முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டு நடந்தான். இந்த 'அச்சாப்பிள்ளை' முகம் இவனுக்கு ஒரு கொடை. யார் வீட்டையாவது போய் 'ஆச்சி/அப்பு/மாமி உங்கடை வீட்டை மாங்காய் ஆயலாமா?" என்று கேட்டால் யாரும் மறுக்கப்போவதில்லை. ஆனால் களவாக மாங்காய், புளியங்காய் நெல்லிக்காய் ஆய்ந்து தின்பதின் சுகம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. இவன் முதல்நாள்தான் குஞ்சிப் பெரியாச்சி வீட்டில் மாங்காய் திருடியிடுப்பான். அடுத்தநாள் பெரியாச்சி இவனிடமே "ஆரோ கள்ளப் பெடியள் மாங்காய் ஆஞ்சு போட்டாங்கள். உனக்கு ஆரெண்டு தெரியுமே?" என்று விசாரிப்பா. இவனும் முகத்தைச் சீரியஸ் ஆக வைத்துக்கொண்டு ஏதோ ஒரு சடையல் பதில் சொல்லிக்கொண்டிருப்பான். அவாவும் "நீ நல்ல பெடியன், பதிவாக இருக்கிற ஒரு மாங்காய் ஆஞ்சு கொண்டு போய்த் தின்னேன்" என்பா. என்றாலும் இவனுக்குக் கனகாலம் ஒரு குழப்பம், "ஆச்சிக்கு என்னிலை சந்தேகமா?" என்று. கடைசிவரை அந்த 'டவுட்' கிளியர் ஆகவில்லை. ஆனால் இந்த அச்சாப்பிளை சொந்த ஆச்சி வீட்டிலேயே அப்பப்ப நெல்லிக்காய் களவாகப் புடுங்கும். கொஞ்சம் சோம்பலாக இருந்தால் மட்டும் ஆச்சியிடம் 'அனுமதி' வாங்கி நெல்லிக்காய்கள் பறிப்பான். அன்றைக்கு இவன் பாடு சோகம். ஆச்சி இவனை மரத்தில் ஏறவிடா. நீளத் தடியொன்றைக் கொடுத்துப் 'பத்திரமாகப்' பழுத்த நெல்லிக்காய்களை மட்டும் தட்டி விழுத்தச் சொல்லுவா. 'கிழவி' மறக்காமல் அன்று பின்னேரம் இவன் வீட்டை போய் அம்மாவிடம் 'இவன் நாசமறுவான் பச்சை நெல்லிக்காய்களை நாசம் பண்ணிப்போட்டான் ' என்று புகார் கொடுக்கும். அம்மாவிற்குத் தன்மகனை 'நாசமறுவான்' என்று ஆச்சி சொன்னது பிடிக்காது. அந்தக் கோபத்தையும் இவனிடம்தான் காட்டுவா.
இதெல்லாம் இப்படி இருந்தாலும், இன்றைய நாயகன் என்னவோ சொறியன் எனச் செல்லமாக அழைக்கப்படுகிற சிறியன் தான். சேட்'டுப் பொக்கற்றில் இருந்து "அதை" ஒரு நளினமாக எடுத்துப் போட்டான். அது அப்போதுதான் பிரபலமாகத் தொடங்கிய 'வாசம்' மணக்கிற அழிறப்பர். ஒரு றப்பரால் கெப்பரானது வரலாற்றில் இவனாகத்தான் இருப்பான். அதுக்குப் பின்னால் ஒரு கதை இருந்தது.
"சுகந்தி தந்தவள்" என்றான் சிறியன், ரத்தினச் சுருக்கமாக. சுகந்தி பள்ளிக்கூடத்தில் புதுப்பெட்டை. புத்தம்புது அரை லேடீஸ் பைக்கில் வருவாள். தலைமுடியைக் குட்டையாக வெட்டியிருப்பாள். "நீர்" என்றும் மற்றவர்களை விளிக்கலாம் என்று பட்டிக்காட்டுப் பெடி பெட்டைகளுக்குச் சொல்லிக் கொடுப்பவள். கொஞ்சம் கறுப்பு என்றாலும் கூடப்படிக்கிற பெடியள் எல்லாருக்கும் அவளில் ஒரு 'இது' இருந்தது. கற்பனையைச் சிறகடிக்க விடவேண்டாம். இப்பதான் இவர்கள் ஆறாம் வகுப்பிற் படிக்கிறார்கள். அக்காலங்களில் ரவுணிலை ஷெல் விழத் தொடங்கிவிட்டது. அதுதான் அவள் ரவுண் கொன்வென்ட் இலிருந்து உள்ளூர் மகாவித்தியாலத்திற்கு வந்த வரலாறு.
"நீ களவெடுத்திருப்பாய்" என்றான் ரங்கன்.
"நீ அழுதிருப்பாய், அவள் பரிதாபப்பட்டுக் கொடுத்திருப்பாள்" என்றான் ரவி.
"நீ உன்ரை ஆட்டுப் புழுக்கைப் பென்சிலைக் கொடுத்து ஏமாத்திப் பண்டமாத்துச் செய்திப்பாய்" என்றான் காந்தன்.
"சுப்பர் கடையில வாங்கிப்போட்டுக் கதை விடுகிறாய் என்ன?" என்றான் அளாப்பல் குஞ்சன்.
"சத்தியமாக அவள் ரண்டு றப்ப்ர் வச்சிருந்தவள், ஒண்டை எனக்குத் தந்தவள்" என்ற சிறியன் அதை கையில் வைத்து ஒரு சுண்டு சுண்டிவிட்டு ஏந்திப் பிடித்தான். பிறகு பொக்கற்றில் போட்டுவிட்டு ஒரு 'மிதப்புப்' பார்வை பார்த்தான்.
இந்த இடத்தில் சீன் கொஞ்சம் மாறுகிறது. அந்த நாட்களில் இலங்கை வானொலியில் "அடுத்து... நிலைய வித்துவான்கள் வாசிக்கக் கேட்கலாம்" என்றபின் வித்துவான்கள் இஷ்டம்போல வெளுத்துவாங்குவார்கள். அந்த இசையைக் கற்பனை செய்து பார்க்கவும்.
"சிறியன் சொறியன்" என்றன் ரவி
"சொ ஓஓஓஓ றீஈஈஈஈஈஈஈ யன் சீஈஈஈஈறீஈஈஈஈ யன்" என்று டீ.ஆர்.மகாலிங்கம் ஸ்டைலில் இழுத்துப் பாடினான் ரங்கன்.
"கொப்பர் ஏன் உனக்கு நேற்று அடிச்சவர்?" என்று ஒரு இடைச்செருகல் போட்டான் ரவி.
"நல்ல வெறி போலை.." ஏற்றினான் குஞ்சன்.
எல்லாரும் "ஹா ஹா" "ஹீ ஹீ.., "ஈ ஈ" என்று வகை வகையாகச் சிரிக்க அழுதுகொண்டு வீட்டை ஓடினான் சிறியன்.
**************************
குஞ்சிப் பெரியாச்சி வீட்டின் பின்பக்கம் பெரிய மாமரம். மாங்காய்கள் கைக்கெட்டும் உயரத்திலும் இருக்கும். வீட்டின் முன்பக்கம் ஆட்டுக் கொட்டில். உள்ளே ஒரு ஒரே ஒரு ஆடு கட்டப்பட்டிருந்தது. குட்டிகள் அண்மையில்தான் பிறந்திருக்கவேண்டும். அவை கட்டப்பட்டிருக்கவில்லை. தாயாடு, கூரையிலிருநது தொங்கிய கயிற்றில் கட்டியிருந்த கிளுவங் குழைகளைக் 'கறுக் முறுக்' என்று கடித்துக்கொண்டிருந்தது. குட்டிகளுக்குப் பொழுதுபோகாமல் இருந்திருக்க வேண்டும். ரங்கன் என்கின்ற ரங்கநாதன் வளவுக்குள் நுழைய இவனது கால்களில் ஈரமான மூக்குகளால் உரசிப்பார்த்தன. பிறகு இவனைப் பின்தொடர்ந்தன. ஒரு குட்டியை மட்டும் தூக்கி நெஞ்சோடு அணைத்துக் கொண்டு நடந்தான். மற்றக் குட்டி இன்னும் பின் தொடர்ந்தது.
திண்ணையில் ஆச்சி, அவித்த பனங் கிழங்குகளை உரித்து, நார்க் கடகமொன்றிற்குள் போட்டுக்கொண்டிருந்தா. இவன் ஆட்டுக் குட்டியை இறக்கிவிட்டான். பிறகு அதன் செவிகளைச் செங்குத்தாக உயர்த்திப் பிடித்து. "நீ இப்ப முயல்" என்றான். இம்சை தாங்காத குட்டி ஆடு ஓடித்தப்பியது.
"என்னடா பொறுக்கி இந்தப் பக்கம்?" ஆச்சி வரவேற்றா.
" ....... " இவன் கொஞ்சம் தயங்கி நின்றான்.
"இந்தா பனங் கிழங்கு சாப்பிடு" ஆச்சி பனங் கிழங்கொன்றை சரி இரண்டாகப் பிளந்து நடுவில் இருந்த 'ஈர்க்கை' எறிந்துவிட்டு, பிறகு நுனிப்பக்கதால் சின்னதாக முறித்துத் தும்புகளை இலாவகமாக நீக்கி விட்டுக் கொடுத்தா.
"ஆச்சி ... " இவன் எச்சிலை விழுங்கிக் கொண்டு எதையோ சொல்ல வெளிக்கிட்டான். நாக்குக் கொஞ்சம் உலர்ந்தது. நெஞ்சு கொஞ்சம் பட பட என்று அடித்தது.
"உனக்கு முந்தநாள் மாங்காய் ஆஞ்சது ஆரெண்டு தெரியுமே?" ஒருமாதிரிச் சொல்லத் தொடங்கினான்.
"அதைச் சொல்லத்தான் துரை வந்திருக்கிறார் போல, சொல்லு ராசா"
"உவன் கள்ளச் சிறியன்தான்!"
ஆச்சி கொஞ்சமும் அதிசயப்பட்டதாகத் தெரியவில்லை. கொஞ்சநேரம் வாய்க்குள் இருந்த வெத்திலை, பாக்குச் சமாச்சாரங்களைக் குதப்பத் தொடங்கினா. இவன் பொறுமை இழக்கத் தொடங்கிய நேரத்தில் பொழிச் என்று வெற்றிலைச் சாற்றை திண்ணைக்கு வெளியே எட்டித் துப்பினா.
"அவன் கள்ளன், எனக்கும் அவனிலைதான் சந்தேகம்.... நீ நல்ல பெடியன்; சரி சரி கறுத்தைக் கொழும்பான் காய்ச்சிருக்குது; அதிலை பதிவாக இருக்கிற ஒரு மாங்காயை ஆஞ்சு கொண்டு போய்த் தின்னேன்" என்றாவாம்.
இவன் மினக்கெடாமல் வளவுக்குப் பின்புறம் மாமரத்தடிக்கு வந்தான். நாலைந்து மாங்காய்களைச் கணநேரத்திற் பிடுங்கி வேலிக்குக் கீழே ஒளித்துவைத்தான். பிறகு ஆச்சி சொன்ன 'ஒரு' மாங்காயை ஆயும்போது திரும்ப அந்த டவுட் வந்தது "ஆச்சிக்கு என்னிலைதான் சந்தேகமா?" என்று.
--------------------
ஆய்தல் - பிடுங்குதல் , ஆய் - பிடுங்கு
அழகு சக்திவேல் .. ஈழத்து பேச்சுவழக்கு இயல்பு. சிறியனும் இப்படி வந்து ஆச்சியிடம் சொன்னாலும் ஆச்சி அவனுக்கும் மாங்காயை ஆய்ஞ்சு கொண்டு போ என்று சொல்லுமோ? சொல்லாத சேதி அது என்றும் இறுதியில் சொல்லப்போகிறீர்களோ என்றும் நினைத்தேன். சொல்லவில்லை. பின்பு தான் புரிந்தது. அட தலைப்பு அழி ரப்பர் ஆச்சே!
ReplyDeleteஒரு சின்ன வாழ்க்கையை அழகாக படம் பிடிப்பது Swami and Friends ஞாபகம்! பிரதேசங்கள், பெயர்கள் விட்டுப்போவது ஒட்டிப்போவதில் இருந்து எம்மை விலக்குகிறது.. ஏன்? வேண்டுமென்றே தவிர்த்தீர்களா? ஆச்சி ஆரம்பத்தில் திட்டும்போது ஏன் அந்த வார்த்தைகளை தவிர்த்துவிட்டீர்கள்? செந்தமிழ் என்பதாலா? சாம்பிளுக்கு இரண்டு கொடுத்திருந்தால் இன்னும் ஒட்டியிருக்குமே..
அழிரப்பர் புரிகிறது! அதை வெளிப்படையாக விளக்காமல் விட்டது இன்னமும் சிறப்பு. ஆனால் அதற்கென்று ஒரு காட்சியை அமைத்ததில் சீக்குவன்ஸ் என் சிற்றறிவுக்கு தவறிவிட்டது. மீண்டும் ஒரு முறை வாசித்து பார்க்கிறேன்.
என்னடா இது டெக்னிகலாக அலசுகிறேன் என்று என் மேல் கோபம் கொள்ளவேண்டாம். "அருமை" என்ற கமெண்ட் போடும் நட்பை நாம் தாண்டிவிட்டோம் என்றே நினைக்கிறேன். எதற்கும் ...
அருமை!
முதலில் மினக்கெட்டு விபரமாக எழுதியதற்கு நன்றி. ஆச்சி திட்டியதை எழுதினால் இப்பத்தைய 'சில' கவிதாயினிகளே வெட்கப்படுவார்கள். எனவே தணிக்கை செய்துவிட்டேன். கொஞ்சத்தைக் கோடிட்டுக் காட்டியிருக்கலாமென்று இப்ப நினைக்கிறேன். கதைக்களம்- யாழ்ப்பாணத்தில் உள்ள ஏதோ ஒரு நகரமல்லாத ஊர்; பெயர் முக்கியமில்லை என்பதால் விட்டு விட்டேன்.
Deleteஎப்போதும் போல இன்னும் கொஞ்சம் மினக்கெட்டு இன்னும் கொஞ்சம் 'அமத்தி' எழுதியிருக்கலாம் என்றுதான் யோசிக்கின்றேன். கடைசி வரியை (உங்கள் மொமென்டில்) விட்டிருக்கலாம் :-). விமர்சனங்களில் எப்பவும் மதிப்புக் கொண்டுள்ளேன். Supppose மோசமென்று எழுதியிருந்தாலும் கோபிக்கமாட்டேன்.
மிக நல்ல கவித்துவமான சிறுகதை, நுணுக்கமான சில அவதானிப்புகளை ரசனையா தூவி அடி தூள், இது செமை ரகம்.
ReplyDeleteஉதாரணத்திற்க்கு, ஆச்சி பனங்கிழங்கு கிழிக்கிற காட்ச்சிப் படுத்தலும் அதில் நிறைந்திருக்கும் எங்கள் மொழி வழக்கும். செல்லடிக்கு டவுனுக்கு வெளியே ஒதுங்கும் டவுன் காரர்களும் அவர்கள் பேச்சு வழக்கும்.
கதை முழுக்க இன்பத்தமிழ் வந்து பாயுது - கனகாலம் இந்த மொழி கேட்டு. பால்யம் நினைவு வந்தது - தவிர்க்காமல் பெரு மூச்சு.
என் பால்ய நினைவுகள் அப்பப்ப வந்து குழப்புவதனாற்தான் அப்பப்ப கிறுக்குகிறேன்.
Deleteநன்று
ReplyDelete:-)
Deleteநுணுக்கமான ரசனையான மீண்டும் வாசிக்கத்தூண்டும் அருமையான வரிகள்.. பாராட்டுக்கள்..
ReplyDeleteவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் :-)
Delete//"சுகந்தி தந்தவள்" என்றான் சிறியன், ரத்தினச் சுருக்கமாக.// ஒரு கணம் அவர்களிடம் பரவியிருக்கக்கூடிய மெளனத்தை உணரக்கூடியதாக இருந்தது... அருமை...
ReplyDeleteஅந்த ஒருகண மௌனத்தையும் எழுதியிருக்கவேண்டும் என நினைக்கிறேன்; அல்லது விட்டது நல்லதா புரியவில்லை.
Deleteஅந்த ஒருகண மௌனத்தை எழுதாமல் விட்டு வாசகனை உணர வைத்ததே நல்லது, என்னதான் சிறியனின் நண்பர்கள், சிறியன் கதை விடுகிறான் என்ற கோணத்தில் கதைத்தாலும் நண்பர்கள் யாருக்காவது ஒருவனுக்கு "சிறியன் உண்மையிலும் சுகந்தியை மடக்கியிருப்பாநோ" எண்ட எண்ணம் ஒடியிருக்கும், அதை அந்த மௌனம்தான் இட்டு நிரப்புகிறது.
Deleteநல்ல பேச்சு வழக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது ஆனாலும் கதை உங்களுடைய பழைய கதைகள் அளவுக்கு நல்லமில்லை
ReplyDeleteமிக்க மதிப்புடன் உங்கள் விமர்சனத்தினை ஏற்கின்றேன்.
Delete"நீ களவெடுத்திருப்பாய்" என்றான் ரங்கன்.
ReplyDelete"நீ அழுதிருப்பாய், அவள் பரிதாபப்பட்டுக் கொடுத்திருப்பாள்" என்றான் ரவி.
"நீ உன்ரை ஆட்டுப் புழுக்கைப் பென்சிலைக் கொடுத்து இதை ஏமாத்திப் பண்டமாத்துச் செய்திப்பாய்" என்றான் காந்தன்.
"சுப்பர் கடையில வாங்கிப்போட்டுக் கதை விடுகிறாய் என்ன?" என்றான் அளாப்பல் குஞ்சன்.
இந்த அழகன வரிகளை ரசிக்கின்றேன் மற்றும் மனக்கண்ணு முன்னே கொண்டு வருகின்றேன். அண்ண உம்மை நல்லாயிருக்கு.
பையன்களிடையே வந்த மெல்லிய பொறாமையைப் புரிந்துள்ளீர்கள்; கருத்துரைக்கு நன்றிகள்.
Deleteஅதிகம் எழுதுவதால் தங்கள் சிந்தனைக்கிணறு தற்போது வற்றிவிட்டது போலும். எதையோ எழுதப்போய் எங்கேயோ போய்முடித்துவிட்டீர்கள் போல உள்ளது.
ReplyDeleteநன்றி அனானி; பேரைப் போட்டு எழுதியிருக்கலாம். சிந்தனைக்கிணறு என்று ஒன்று இருந்தமாதிரி ஞாபகம் இல்லை. நீங்கள் 'முன்பு இருந்தது' என்று சொல்கின்றபடியால் சந்தோஷமாக உள்ளது :-)
Deleteநல்லது சின்ன வயசு நிணைவுகள அசைபோட்டு இருக்கீங்க. நல்லது.
ReplyDelete:-)
Deleteமீண்டும் ஒரு முறை ஊர் சென்று பழைய இடத்தை பார்க்கலாம். ஊர் இப்போதும் அப்படியே தான் உள்ளது. ஆனால் எமது பழைய நண்பர்கள் தான் இல்லை. நான் பல முறை சென்று வந்தேன். அது ஒரு தனி சுகம். வாழ்வில் விலை கொடுக்க முடியாத ஒரு ஆனந்தம். வருடத்தில் ஒரு மாதம் எமது ஊரில். அனுபவித்து பார். அங்கு உள்ளவர்கள் பள்ளி நாட்களை மறந்து இருப்பார்கள், நாம் தான் மீண்டும் மீண்டும் அசை மீட்கிறோம்.
ReplyDeleteமிகவும் அருமை.
மீண்டும் வருவேன்.
ஓம், கிட்ட இருக்கிறவர்களுக்கு எங்கள் மாதிரி (புலம்பெயர்ந்ததால் வருவது) இவ்வளவு இழந்த உணர்வு இருக்குமா தெரியவில்லை. ஆனால் எல்லாருக்கும எங்கோ ஒரு மூலையில் அந்தப் பள்ளிக்கூட நாட்கள் இனிப்பாகத் தேங்கிநிற்கும். ஊரில், தாத்தா தன் பள்ளிநாட்களைப் பற்றி சொல்லுவது இப்பவும் ஞாபகமுண்டு. என்ன, எனக்கு அப்ப அலட்டல் போல் தென்பட்டது.
Deleteஉண்மை வெளிப்படுகிறது.
ReplyDeleteஎனக்கு சுகந்தியையும் தெரியும் சிறியனையும் தெரியும். அழிறப்பரையும் வாங்கிய ஊரையும் தெரியும். ஆனால்அந்தகாலம் லேடீஸ் பைக் எண்டு சொல்வதில்லை பார் இல்லா சைக்கிள் எண்டுதான் சொல்வது. தலை முடி வெட்டுக்கு “பொப் கட்டு” எண்டுதான் சொல்லுவது. நிறம் கொஞ்சம் கறுப்பு எண்டதான் உதைக்குது. தங்களை விட குறைவே ஒழிய எமது பார்வைக்கு வெள்ளை. நன்றாய் இருக்கு. அரைச்ச மாவை திருப்பி அரைச்ச உணர்வு.
இது அழியாத றப்பர்.
தொடர்க
யாவும் கற்பனை அண்ணோய். பொப் கட், சிலிப்பாத் தலை, பார் இல்லாத சைக்கிள் (இல்லாவிட்டால் பெட்டைச் சைக்கிள்) இன்னும் மறக்கவில்லை. ஆனால், இது (கதை அல்லது அளப்பு) நான் இப்ப சொல்லுவது மாதிரி எழுதினேன். எனவே 'இப்பத்தைய' சொற்கள் இடம்பெறுகின்றன.
Deleteஆச்சி கோச்சி-ல கொழும்புக்குப் போனாவாம்.
ReplyDeleteமதவாச்சி வரேக்கை லாச்சியைத் திறந்தாவாம்
அதுக்குள்ளயிருந்த பூச்சி பாச்சில கடிச்சிற்றுதாம்.
-இப்பிடித்தான் எங்கட ஊரில சின்ன வயசில சொன்னதா ஞாபகம்.
சற்று வித்தியாசமாக எங்கள் ஊரிலும் இருந்தது. அர்த்தம் தெரியாமல் பாடி(?) ஏச்சுக் கேட்டுள்ளோம்.
Deleteகொஞ்ச நேரம் ஊரில் உலவி வந்த சந்தோஷம்.ஒவ்வொரு சொல்லும்,செயலும் வாழ்வோடு ஒன்றிக்கிடக்கு.மனசில ஏக்கம்தான் மிஞ்சிக்கிடக்கு !
ReplyDeleteசிறு வயதில் அத்திப்பூத்தாற்போல் ரூபவாஹினியில் வரும் கதை பார்த்து...கேட்டது போன்று இருந்தது...
ReplyDeleteகருத்துரைக்கு நன்றிகள் ஹேமா, மற்றும் ரெவெரி.
ReplyDeleteit is very interesting when we read your mini-stories. Keep it up.
ReplyDeleteவணக்கம், எங்கள் இலங்கை தமிழிலேயே சிறுவயது ஞாபகமீட்டல்கள் ஒரு கதைபோன்று அழகாக நகர்கிறது. சில நொடிகள் எம்மையும் தாயகத்தின் அன்றையகால வாழ்விற்கு அழைத்து சென்றுவிட்டீர்கள். இன்னமும் கொஞ்சம் மெருகூட்டி எழுதினீர்களானால் சிறந்ததொரு கதைசொல்லியாக மிளிர்வீர்கள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஊக்கமூட்டலுக்கு நன்றிகள் @அம்பலத்தார். ஒவ்வொரு முறையும் எழுதியபின் இன்னும் நன்றாக எழுதியிருக்கலாம் என்றுதான் தென்படுகிறது.
DeleteNEER ennum sol kiramathilum valakkathil ullathu.. thamizhin arumai, neengal entra mariyathayum intri.. ne enum mariyathai inmaiyum intri.. naduvil ontru..
ReplyDelete(thamizh thaddachu theriyathu mannikkavum)
நன்றாக கதைக்கிறீர்கள் ஈழத்தமிழில்
ReplyDeleteநன்றிகள் ஐயா.
Deletevery nice.you have written in our vilage language.keep it up
ReplyDeletevery nice.you have written in our vilage language.keep it up
ReplyDelete