Monday, February 6, 2012

சயந்தனின் நாவல்: ஆறா வடு

"நீர்கொழும்புக்கு அருகேயான கடற்கரையில் குந்தியிருந்து இத்தாலிக்கு எந்த ரூட்டால் போவது என்று இவன் யோசித்துக் கொண்டிருந்தபோது இரவாயிருந்தது. உப்பும் குளிரும் கலந்த சேர்ந்த மெல்லிய காற்று முகத்தில் வருடியபடியிருந்தது. கடலின் வாசம் சூழவும் நிறைந்திருந்தது. போட்டிருந்த சேர்ட்டினுள் காற்று நுழைந்து முதுகில் டப் டப் என்று சடசடத்தது..." இப்படித் தொடங்கும் நாவல் 1987 இல் தொடங்கி 2003 வரையான இரண்டு 'அமைதிக்' காலங்களுக்கு இடையில் நகர்கிறது.

மிக நீண்ட நாட்களின் பின், ஒரு நாவலை ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். தேவையில்லாத அலங்கார வார்த்தைகள் இல்லாத ஒரு தெள்ளிய நீரோடை போன்ற எழுத்து நடை சயந்தனினது. கொடி, குடை, ஆலவட்டங்கள், ஒளிவட்டங்கள் இல்லாமல் மிக இயல்பாக நம் துயரங்களையும் வரலாற்றையும் எழுதிச் செல்லுகிறார். ஆங்காங்கே மெலிதான கிண்டல் /அங்கத நடையில் கதை செல்கிறது. புன்முறுவலை ஏற்படுத்தும் சில இடங்கள்:

தூய தமிழ்ப்பெயர் சூட்டும் காலம்: கல்வியங்காடு முத்திரைச் சந்தியில் சைக்கிள் ரியூப் ஒட்டுகிற கடையொன்றின் முகப்பில் ராஜா ஒட்டகம் என்று பெரிய போர்ட் வைத்திருந்தார்கள். இரண்டு மூன்று நாட்களில் அது இராசா ஒட்டகம் என்று மாறியிருந்தது.

இவன் (அமுதன் என்கின்ற ஐயாத்துரை பரந்தாமன்) ஓரிடத்தில் சண்டையை விபரிக்குமிடம்: சண்டையென்று வந்துவிட்டால் என் துப்பாக்கியிலிருந்து ரவுண்ஸ்சும் வாயிலிருந்து தூஷணங்களும் பாய்ந்துகொண்டே இருக்கும். ரவுண்ஸை அளவாகப் பாவிக்கச்சொல்லி இயக்கத்துக்குள்ளே விதிமுறை இருந்தது. தூஷணத்திற்கு அப்படியொன்றும் இருக்கவில்லை.

பாடசாலை நாடகமொன்றில்: வெள்ளைக்காரத் துரையாக நடித்த விசுவலிங்கம் வெள்ளைக்காரர்களுக்கு எல்லாம் வெள்ளை என்று நினைத்திருக்கவேண்டும். வெண்ணிறத் தலை, வெண்ணிற மீசை, வெள்ளை நிற உடை, வெள்ளை நிறச் சப்பாத்து, அதே நிறத்து சொக்ஸ் என்று வெளிறிப்போனான்....

இவன் கப்பலில் கனவு காணுமிடம்: கொஞ்சநேரத்துக் கனவொன்றில் அகிலா வந்தாள். இவனும் அவளும் டைட்டானிக் கப்பலின் ஏதோ ஒரு தளத்தில் ஜீப் ஒன்றிற்குள்.. (சரி நீங்கள் எல்லாரும் டைட்டானிக் பார்த்திருப்பீர்கள் தானே? - எஸ்.ச). சின்னப்பெடியன் இவனை மிரட்சியுடன் பார்க்கத் தொடங்கினான்....


*****************************************

சயந்தனின் எழுத்து நடை மெலிதான அங்கத/ கிண்டல் நடை என்பதை நான் சொல்லப்போக, இது பொழுதுபோக்கு/ நகைச்சுவைக் கதை என்று எடுக்கக் கூடாது. எந்தக் கஷ்டத்திலும் வாழவேண்டும் என்ற விருப்புள்ள ஒருவனின் பார்வையில் இரண்டு "சமாதான" காலங்களிற்கு இடையேயான ஈழத்தவர் வாழ்வு காட்டப்படுகிறது. கதை முழுவதும் ஒரு பெரிய "வள்ளப்" பயணத்தில் சொல்லப்படுகிறது. அதற்காக இது வெறுமனே கடற்பயணக் கதையுமல்ல. சென்டிமென்டல் பேர்வழிகள் அநேகமாக ஒரு துளி கண்ணீராவது விடுவார்கள். (சே, நான் அழவில்லை). சின்னப் பெடியனும் அவனைத் தன் தம்பியாக நினைக்கும் பெரியய்யாவும் ஏற்படுத்தும் தாக்கம்தான் எனக்கு அதிகமாக இருந்தது.

சனங்கள் சைக்கிளில் கட்டிய மூட்டை முடிச்சுக்களுடன் வெளியேறிக்கொண்டிருந்தனர். "எட்டி நடவணை" என்றும் "கெதியில வா" என்றும் குரல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. இருட்டில் யாரோ சிவராசனை அழைத்தார்கள். "சிவராசண்ணை, நல்லூரடியில் ஆமி வந்திட்டானாம். சனங்கள் அரியாலைக்கால வெளியில் போகுதுகள். பொம்பிள்ளைப் பிள்ளைகளை வச்சிருக்கிறியள், கெதியாக வெளிக்கிடுங்கோ.." - இதை வாசிக்கும்போது திடீரென்று 25 ஆண்டுகள் பினனோக்கிச் சென்று விட்டேன். பெயர்கள் சம்பவங்கள் வேறு. ஆனால் நாமெல்லாம் அனுபவித்த ஒன்று. ஒரு முறையல்ல, பலமுறைகள்.

பாத்திரங்களும் அப்படியே மனதில் நிற்கிறார்கள்: இந்திய இராணுவத்தின் கண்களில் விரலை வைத்தது ஆட்டிய வெற்றி, சற்று மனநிலை தவறிய தேவி, நிலாமதி, படகில் கூடவரும் பெரியய்யா, சின்னப்பயல், மூன்று குமர்ப்பிள்ளைகளை வைத்துக் கொண்டு பட படக்கும் சிவராசன், தூய தமிழ்ப்பெயர் மாற்றத்தால் கடுப்படையும் "டில்ஷான் ரீ ரூம்" முதலாளி (சில பதிவர்கள் இவருக்கு ரசிகர் மன்றம் வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!) என்று யாரையும் மறக்க முடியவில்லை.

எப்போதோ மறந்தபோன, 80 களின் நடுப்பகுதிகளிற்குப் பிறகு "பிரபலமாக" இருந்த, சோலாப்பூரிச் செருப்பையும் ஞாபகப்படுத்துகிறார் சயந்தன். சோலாப்பூரித் திருடன் பிறகு இந்திய இராணுவத்தில் தலையாட்டியாக மாறிப்போய் பிறகு மண்டையில் போடுப்படுகிறான். இந்த இழுபறியில்தான் செருப்பின் உரிமையாளர் தேவையிலாத சிக்கல்களில் மாட்டுப்பட்டு, தவிர்க்கமுடியாமல் ஆயுதம் தூக்க வைக்கப்படுகிறான். இப்படிச் சொன்னால் சற்று நம்பமுடியாத கதை மாதிரி இருக்கும். ஆனால் உண்மைகளும் சிலசமயங்களில் நம்பவே முடியமாட்டாததாய் இருக்கும், இருக்கிறது. இதை நுட்பமாகச் சொல்கிறார் கதைசொல்லி.

ஏதாவது நொட்டை சொல்லவேண்டும் என்றால், சில கடைசி அத்தியாயங்கள் அவசரமாக எழுதியது போல் தெரிகிறது. ஆனால் கடைசி சில அத்தியாயங்கள்தான் கவனமாக எழுதப்பட்டிருப்பதாக ஒருவர் முகநூலிற் கூறியிருந்தார். என்னைப் பொறுத்தவரையில் இதுவும் எழுத்தாளனின் வெற்றியே. (அதாவது எனக்கு கதையின் முதற் சில அத்தியாயங்கள் கூடுதலாகப் பிடித்த மாதிரி, இன்னொருவருக்கு கடைசி சில அத்தியாயங்கள் கூடுதலாகப் பிடித்துள்ளது. ஆனால் இருவருக்கும் முழுக்கதையும் பிடித்துள்ளது)

மொத்தத்தில், இது ஈழ (இலக்கிய நாவல்) வரலாற்றில் ஒரு முக்கியமான நாவலாக இருக்கப் போகிறது. வாழ்த்துக்கள் சயந்தன்.

நூலை வாங்க, இணையத்தில் - கீழேயுள்ள இணைப்புக்களில் ஏதோவொன்றில் சொடுக்கவும்.

உடுமலை.com
வடலி இணையப் புத்தகக் கடை
கிழக்குப் பதிப்பகம்

அல்லது, நீங்கள் இலங்கை அல்லது இந்தியாவில் வசிப்பின், உள்ளூர்ப் புத்தகக் கடைகளில் வாங்க முயற்சிக்கலாம்.

14 comments:

  1. ‎//ஏதாவது நொட்டை சொல்லவேண்டும் என்றால் இ சில கடைசி அத்தியாயங்கள் அவசரமாக எழுதியது போல் தெரிகிறது. ஆனால் கடைசி சில அத்தியாயங்கள்தான் கவனமாக எழுதப்பட்டிருப்பதாக ஒருவர் முகநூலிற் கூறியிருந்தார். என்னைப் பொறுத்தவரையில் இதுவும் எழுத்தாளனின் வெற்றியே. (அதாவது எனக்கு கதையின் முதற் சில அத்தியாயங்கள் கூடுதலாகப் பிடித்த மாதிரிஇ இன்னொருவருக்கு கடைசி சில அத்தியாயங்கள் கூடுதலாகப் பிடித்துள்ளது. ஆனால் இருவருக்கும் முழுக்கதையும் பிடித்துள்ளது)//எனக் கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளார்

    ஆரம்பத்தில் கேலியும் கிண்டல் சார்ந்த விமர்சனங்கள் எல்லா இயங்கங்கள் மீதும் சம அளவில் இருந்தது. புலிகள் மீது தூக்கலாக இருந்தது என்றுகூட சொல்லலாம் போகப்போக அது தணிந்து புலிகள் மீது ஒரு அனுதாபப் பார்வை, விட்டுக்கொடாத தன்மை, அல்லது போற்றுதல் தனம் என்பதுபோல உணரமுடிந்தது.இதுவே ஒருவருக்கு பிடிக்காமல் போனதும் கட்டுரையாளருக்கு அவையே பிடித்துப்போன இடங்களுக்கு காரணமாக அமைந்தது என நான் நினைக்கிறேன். நானும் கட்டுரையாளரின் கருத்தையே கொண்டிருந்தேன். முன்னால் உள்ள அத்தியாயங்களை தனித்தனி நல்ல சிறுகதைகளாக பார்க்க முடியும். பல நல்ல சிறுகதைகளை ஒரு நாரில் தொடுத்த கதம்பச்சரம் போல தோன்றியது. போகப்போக அவசரப்பட்டிருக்கிறார் எனவே நானும் எண்ணினேன். என்னளவில் நல்லதொரு நாவல். எழுதத்தொடங்கிய காலத்தில் தொடர்ந்து எழுதி முடித்திருந்தால் என்னும் உச்சத்தை தொட்டிருக்கும். நான் உசாவியதில் 2009இல் தொடங்கி பின் போட்டுவைத்து 2011 தொடர்ந்து முடித்ததாக சொன்னார். அவருக்குள் எற்பட்ட மாற்றங்களே மேலே நான் உணர்ந்த மாற்றங்களுக்கு காரணம். தொடகிய காலத்திலிருந்து தொடர்சியாக எழுதி முடித்திருந்தால் என்னும் உச்சத்தை தொட்டிருக்கும். கசகரணம் ஆறாவடு இரண்டுமே தொடற்சியான துன்பம் என்ற ஒரு பொருள் தருகின்ற சொற்கள். அண்மைக்காலத்தில் வெளிவந்த இரண்டு ஈழநாவல்லளுக்கு ஒரே பொருள் படும் தலைப்பு அமைந்ததே சிறப்புத்தான்.

    ReplyDelete
    Replies
    1. >என்னளவில் நல்லதொரு நாவல். எழுதத்தொடங்கிய காலத்தில் தொடர்ந்து எழுதி முடித்திருந்தால் என்னும் உச்சத்தை தொட்டிருக்கும்.

      எனக்கும் அதே கருத்து. அப்படிச் செய்திருந்தால் ஒரு classic ஆக வந்திருக்கும். என்றாலும் இப்பவும் நல்லதொரு நாவலே.

      Delete
  2. சுவையாக அறிமுகப்பத்தியுள்ளீர்கள்.
    கடந்த காலங்களின் நினைவுகளில்
    மூழ்க வைக்கும் படைப்பாக இருக்கிறது போலும்.
    நூலாசிரியர் சயந்தனுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. சக்திவேல், வாசிக்க தூண்ட வைக்கும் விமர்சனம். புலிகள் பற்றிய பார்வை மாற்றம் காலத்துக்கேற்ப மாறியதை புரிந்ததுகொள்ள முடிகிறது. அது சமகாலத்தில் வாழ்பவர் பற்றிய விமர்சனம். சயந்தன் நம்பிக்கை தரும் ஒரு openminded எழுத்தாளர் என்பதை நிரூபிக்கிறார் போல. வாங்கி வாசித்துவிட்டு விரைவில் படிச்சதென்ன பிடிச்சதென்ன வில் போட வேண்டியது தான்!

    அது சரி, விமர்சனத்துகொரு விமர்சனம்! உங்கள் விமர்சனம் கூட இறுதியில் அவசரப்படுகிறதே! ஆற அமர எழுதியிருக்கலாமோ? கதையை விலாவாரியாக விமர்சிக்க தேவையில்லை. ஆனால் உங்கள் பார்வை வீச்சு எனக்கு தெரியும். இன்னொரு பரிமாணத்தை நீங்கள் இந்த நூலுக்கு கொடுத்திருக்கலாமே! வாசித்த மூச்சில் எழுதிவீட்டீங்களா?

    சயந்தனின் பதில் கிடைத்ததா?

    ReplyDelete
    Replies
    1. ஆம் ஜேகே. இதை எழுதத்தொடங்கி 15 நாட்களாயிருக்கும். முடிக்க நேரம் கிடைக்கவில்லை. பிறகு கட்டாயம் இன்றைக்கு முடிப்பது என்றுதான் நேற்றிரவு முடித்தேன். திருப்ப வாசித்தபோது எனக்கே நான் நிதானமாக - இன்னும் அழுத்தமாக எழுதியிருக்கலாம் என்று பட்டது. வாசித்த மூச்சில் எழுதவில்லை. கதையை 4, 5 தடவைகள் வாசித்திருப்பேன்.

      சயந்தன் இப்பதிவைத் தன் முகநூற் பக்கத்தில் பதிந்திருந்தார். கதை சொல்லி கதையில் மாறுவது (இரு கதைசொல்லிகள்) ஏன் என்று முகநூல் message இல் கேட்டிருந்தேன். ஒரு பரீட்சார்த்த உத்தி என்றார். கடைசிப்பகுதி பற்றிக் கேட்கவில்லை. நீங்கள் எப்படி (கதையின் கடைசி அத்தியாயங்கள் பற்றி) உணர்கிறீர்கள் எனச் சொல்லுங்களேன்.

      Delete
  4. நல்ல அறிமுகம்...Better late than never...வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. ஆம் ரெவரி. நேரம் கிடைப்பதில்லை. பிந்திவிட்டதுதான் :-)

      Delete
  5. வணக்கம் அண்ணா,
    உங்கள் விமர்சனத்தைப் படிக்கையில் நானும் இந்த நூலினை வாங்க வேண்டும் எனும் ஆவல் எழுகின்றது,
    நல்லதோர் நாவல் விமர்சனத்தினைக் கொடுத்திருக்கிறீங்க. ஒன்லைனில் ஓடர் பண்ண முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  6. உங்கள் விமர்சனம் சயந்தனின் படைப்பினைப் படிக்க வேண்டும் எனும் ஆவலைத் தூண்டுகின்றது.
    ஒரு வரலாற்றினை உள்ளடக்கி வெளிவந்திருக்கும் நாவலைப் படிக்கும் வண்ணம் விமர்சனம் படைத்த உங்களுக்கு நன்றி, படைப்பாளிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. வாங்கியே ஆகவேண்டும் எண்டு நினைக்க வைக்குமாறு எழுதி இருக்குறீர்கள். என் மாதாந்த budget இல் துண்டு விழுந்தாலும் பரவாயில்லை வேண்டுவது எண்ட நிலைக்கு தள்ளி விட்டீர்கள். உங்களுக்கு ஏதாவது ஒரு நல்ல தமிழ் நாவல் பரிசாகக் கிடைக்க கடவது....

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வேண்டுதல் பலிக்கக்கடவது :-)

      Delete
  8. நன்றி உங்களுக்கு.வாசிக்கும் ஆவல் வருகிறது உங்கள் விமர்சனம் !

    ReplyDelete