Friday, November 18, 2011

ஐந்து வெள்ளி யாசிப்பவன்

நல்ல வெயில் எறித்த சனிக்கிழமை காலை நேரம். லிஃப்டில் இருந்து இறங்கிக் கீழே வர, வழக்கம்போல் அந்த நிலமட்டத்தில் இருந்த சீமெந்துக் கதிரை மேசைகளில் சீனக் கிழவர்கள் கடதாசி விளையாடிக் கொண்டிருந்தார்கள். இரண்டு மலேக் கிழவர்கள் பிளாஸ்ரிக் பையில் இருந்த 'ரெக் எவே' தேனீரை ஸ்ரோ (straw) வைத்து உறிஞ்சிக் கொண்டிருந்தார்கள். இப்பதான் அரை றாத்தல் பாணை நேற்று இரவு தின்றும் மிஞ்சின கோழிக்கறியுடன் கலந்து அடித்தது, என்றாலும் நிறையற் ரின் பாலும் கடும் தேயிலைச் சாயமும் கலந்து 75 சென்ற் இற்கு விற்கும் பிளாஸ்ரிக் பை தேனீரைக் குடிக்கவேணும்போல் இருந்தது.

இப்பதான் அவனைப் பார்த்தேன். இந்திய அல்லது இலங்கையனாக இருக்கவேண்டும் எனக்கு மிகக் கிட்ட நின்றான். என்னை விடச் சற்று உயரம். கொஞ்சம் மெலிந்த உடல்வாகு. நாலைந்து நாட்களாகச் சவரம் பண்ணியிருக்க மாட்டான். போட்டிருந்த உடுப்பைப் பார்த்தால் கஷ்டப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்தவன்போல் இல்லை. கண்கள் மட்டும் ஒரு அடிபட்ட விலங்கின் கண்ளைப் போல பரிதாபமாக இருந்தன. மொத்தத்தில் விசிற் விசாவில் வந்து, வேலை தேடிக் களைத்து நாளைக்குத் தோல்வியுடன் நாட்டுக்குப் திரும்பிப் போகும் இஞ்சினியர் மாதிரி இருந்தான். ஒன்றும் பேசாமல் மிகக் கிட்ட நின்று என்னப் பார்த்துக் கொண்டு நிற்பது கொஞ்சம் அசௌகரியமாக இருந்தது.

"நீங்கள் இலங்கையே?" அசௌகரியத்தை உடைக்க முயன்றேன்.
"இல்லை, நான் சிங்கப்பூரிலதான் பிறந்தது," பதில் உடனே வந்தது.
"இண்டைக்கு வேலை இல்லைப் போல?"
"இல்லை அண்ணே, வேலை ஆரும் தர மாட்டேங்கிராங்க."
"ஏன்?" கேட்டிருக்கக் கூடாது, கேட்டுவிட்டேன். சிங்கப்பூரில் முன்னாள் சிறைக் கைதிகளுக்கும், முன்னாள்- இன்னாள் போதைப் பொருள் அடிமைகளுக்கும் வேலை கிடைப்பது கஷ்டம்.

இப்போது சங்கடப் பட்டான். கொஞ்சம் தயங்கி பிறகு சொல்லத் தொடங்கினான். "எனக்கு முந்திக் கொஞ்சம் 'மனநிலை' குழம்பி இருந்திச்சு, இப்ப சிகிச்சை எல்லாம் எடுத்துச் சரியா வந்திட்டுது. ஆனா எல்லாரும் என்னை "லூசு" எண்டுதான் நினைக்கிறாங்கள்.". இப்போது நான் இடத்தை விட்டு நழுவ முயற்சித்தேன், என்றாலும் சட்டென்று எப்படி இடத்தைக் காலி பண்ணுவது? ஏற்கெனவே நான் அரை லூசுகளுடன் சிநேகிதம் வைத்திருப்பதாக மனைவி சொல்லிக்கொள்வாள். இதிலே இது வேறு. சுற்றவர நின்ற எல்லோரும் என்னையே பார்ப்பதுமாதிரி ஒரு உணர்வு.

"அண்ணே, ஒரு அஞ்சு வெள்ளிக் காசு தருவியளா? வீட்டில சாப்பாடு சரியாத் கொடுக்கிறாங்கள் இல்லை"

"அஞ்சு வெள்ளி இப்ப இல்ல", முகத்தைக் கடுகடுப்பாக வைத்துக் கொண்டு வேகமாக நடக்கத் தொடங்கினேன். அவன் அடுத்த இழித்த வாயைத் தேடத் தொடங்கினான்.

****
பிறகு இவனைப் பல இடங்களிற் காணக் கிடைத்தது. அநேகமாக இந்திய, இலங்கை உருவமுள்ள ஆட்களுடன் கதைத்துக் கொண்டு நிற்பதைக் காணக்கிடைத்தது. வேறு என்ன? "வீட்டில சாப்பாடு போடுறாங்கள் இல்லை, ஐந்து வெள்ளி தருவியளே?" என்று கேட்பானாக்கும். இப்போது எனக்கும் அவனில் பரிதாபம் வரத்தொடங்கிவிட்டது. ஒவ்வொரு முறை காணும்போதும் இன்னும் மெலிந்தமாதிரி இருந்தான், தாடிமட்டும் கூடிக்கொண்டு போனது ; உடையும் முந்தி மாதிரி இல்லை. அழுக்காகிக் கொண்டே போனது. கண்ட கண்ட எல்லாரிடமும் ஐந்து வெள்ளி கேட்பவன் என்னிடம் மட்டும் அதற்குப் பிறகுகேட்கவில்லை. நல்ல ஞாபகசக்தி இருக்கவேண்டும். இவனிடம் காசு பெயராது என்று இன்னும் மறக்கவில்லை.


*****
அரசகேசரி சிவன் கோவில் அப்போது வுட்லண்ஸ் வீதியில், மலேசிய எல்லைக்குக் கிட்ட இருந்தது. இப்போது கோவில் இடம் மாறியிருக்கவேண்டும். சிங்கப்பூரின் பரபரப்பான மற்றக் கோவில்கள் மாதிரியில்லாமல் அமைதியாக இருக்கும். கோவிலோடு ஒரு குளம், குளத்தில் சில ஆமைகள், மீன்கள், அலம்பல் பேர்வழியான கோவிற் கணக்குப் பிள்ளை என்று ஒரு நல்ல செற்றப். ஐயர் யாழ்ப்பாணம். ஆனால் இடைக்கிடை தமிழ்நாட்டில் இருந்து 'விசிற்றிங்' ஐயர்மாரும் வருவார்கள். கோவிலில் நின்றால் பத்துப் பதினைந்து வருடங்களின் முன் ஊரில் 'திருவிழா இல்லாதபோது' கோவிலில் நின்ற ஞாபகம் வரும். பின்னுக்கு என்னைக் 'கண்காணிக்க' மனைவி மட்டும் மேலதிகம். ஐந்து வெள்ளிக்காரன் இப்போது கோவில் மணியடிக்கும் வேலையைக் கைப்பற்றி விட்டான். பூசை இடையில் எப்பப்ப மணி அடிக்கவேண்டுமோ அப்பப்ப சுமாராகச் சரியாக மணி அடிக்கத் தொடங்குவான். அடிக்கத் தொடங்கினால் நிறுத்த விருப்பம் இல்லை. கணக்குப்பிள்ளை மெதுவாகத் தோளிற் தொட்டு, "நிப்பாட்டும்" என்று சொல்லுமட்டும் நிறுத்தமாட்டான். மணி அடிக்கும் 'பணிக்காகக்' கிடைத்த ஊதியம் என்றமாதிரிக் கோயிற் பிரசாதங்களை உரிமையுடன் தின்னப் பழகிவிட்டான். இப்போதும் என்னிடம் 'அஞ்சு வெள்ளி' கேட்பதில்லை. எப்போதாவது அவன் இன்னுமொரு முறை கேட்டால் ஒரு 'ரண்டோ,அஞ்சோ' வெள்ளியைக் கொடுத்து என் குற்றவுணர்ச்சியை 'அவுட்சோர்ஸ்' பண்ண இருந்த எனக்குப் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது.

கோவிற் பிரசாதம் அவன் வயிற்றை நிரப்பப் போதாதோ அல்லது ஐந்து வெள்ளி யாரிடம் வாங்கினாற்தான் அன்றைய பொழுது நன்றே போகும் என்று யோசித்தானோ தெரியவில்லை. கோவில் வந்த யாரையாவது மடக்கி ஏதோ ஒரு தாள்க் காசு வாங்காமற் போகமாட்டான்.


******
இவனைக் கடைசியாகக் கண்டதுவும் அரசகேசரி சிவன் கோவிலிற்தான். 2003 இன் கடைசிப் பகுதி. அப்போது சிட்னி வரும் முடிவிற்கு வந்தாயிற்று. கொஞ்சம் டல் அடித்தாலும் சிங்கப்பூர் பிடித்துத்தான் இருந்தது. பிளாஸ்க் பையில் விற்கும் ரீ'யும் 'புட் கோ(ர்)ட்'இல் கொலஸ்திறோல் பயமில்லாமல் சாப்பிடும் நாசி கொறெங், பிறகு எண்ணையில் 'குளிக்கவார்த்து' சுடச் சுடக் கிடைக்கும் பரோட்டாக்களும் பழகிவிட்டது. ஊர் ஞாபகம் வந்தால் செரங்கூன் சாலை, சிலோன் பிள்ளையார் கோயில், அல்லது அ.சிவன் கோவில் என்று ஒரு ஞாயிற்றுப் பொழுதைப் போக்காட்டி விட்டால் ஆயிற்று. ஒரு மழையும் பெய்யாத வெயிலும் அடிக்காத வெள்ளிக்கிழமை பின்னேரம் கோவிலின் வெளிப்புறம் றோட்டில் இருந்த பஸ் ஸ்டாண்டில் எனக்குக் கிட்ட இவன். நீண்ட நாட்களாக மனதில் அரித்துக் கொண்டிருந்த ஒன்றைக் கேட்டேன்.

"தம்பி, அப்பா என்ன செய்யிறார்?"
"நீங்கள் புது அப்பாவைக் கேக்கிறியளோ? அல்லது எங்க அப்பாவைக் கேக்கிறியளோ? புது அப்பா வந்து நாலைந்து வருஷங்களாச்சு ஆனா எனக்கு அடிக்கிறதை மட்டும் நிறுத்தல, புதுத் தம்பிமாரும் அடிக்கிறாங்கள், அம்மாவும் அடிக்கிறா, எல்லாரும் அடிக்கிறாங்கள். இப்ப நான் வீட்டில சாப்பாடு கேக்கிறதில்ல. ஏன் அண்ணே எல்லாரும் அடிக்கிறாங்கள்?".

*****

இப்பவும் அவன் வீட்டில் அடி வாங்கிக் கொண்டிருக்கலாம், அல்லது வெளியில் யாரிடமாவது ஐந்து வெள்ளி தரச்சொல்லிக் கெஞ்சிக் கொண்டிருக்கலாம்.