Thursday, January 2, 2014

இடைக்காடும் செலவில்லாமற் கிடைக்கும் ஒரு சில ஞாபகங்களும்

ஊரென்றால் என்ன இருக்கும்?

வயல்கள் வெளிகள், தோட்டங்கள், கலட்டிகள், வீடுகள், ஒரு சில தார் ரோட்டுக்கள், நிறையப் புழுதி படிந்த ஒழுங்கைகள், வாசிக சாலைகள், சிறிய கோவில்கள், அரைக் காற்சட்டை வழுக வழுக ஒருகையால் அதை இழுத்து விட்டுக் கொண்டு ஓடித்திரியும் சிறுவர்கள், இரட்டைப் பின்னல்/ஒற்றைப் பின்னல் சிறுமிகள், சந்தியில் 'அலம்பிக்' கொண்டிருக்கும் இளசுகள் பின்னே பெரிசுகள் இல்லையோ? எல்லாம் உண்டு இடைக்காட்டில். யாழ்ப்பாணத்தில் ஆறுகள் இருக்காது. எனவே எங்கள் ஊரிலும் ஆறுகள் இல்லை. அதைச் சரிக்கட்ட நிறையக் கிணறுகள் உண்டு. மொத்தத்தில் ஒரு சராசரி யாழ்ப்பாணக் கிராமம். ஆனால் எங்களுக்குக் மட்டும் மிகத் 'திறம்'பட்ட ஊர்.

என்ன இருக்கக் கூடாது? தொழிற்சாலைகள். இவை இருந்தால் ஊர், சிறு நகரமாகப் பதவி உயர்வு பெற்றுவிடும். நாங்கள் 'ஃபாக்டரி' கட்டக் கூடாது' என்று கொடி பிடித்து ஆர்ப்பாட்டம் எல்லாம் நடத்தத் தேவை வரவில்லை. ஊரில் யாரும் தொழிற்சாலைகள் கட்டவில்லை. ஒன்றிரண்டு கம்மாலைகள் அப்பப்ப திறந்து மூடப்பட்டன. சைக்கிள் கடை கூட நிரந்தரமாக இருந்ததில்லை.

எனக்கும் இடைக்காட்டுக்குமான தொடர்பு 1989 இலேயே குறையத் தொடங்கி 1990 இற்குப் பிறகு ஊரில் கால் வைக்கத் விடாமல் நாட்டு நிலைமையும் சொந்தத் தேவைகளும் சதி செய்தன. ஊர் என்று நான் எழுதுவதெல்லாம் 1990 இற்கு முன்பானவை. எனக்கு ஞாபகப் பிசகு இருப்பதால் தகவல்கள் முன்பின்னாக இருக்கலாம். பிழை இருப்பின் சுட்டிக் காட்டவும். அல்லது மொட்டைக் கடிதமாவது போடவும்.

இடைக்காட்டின் எனது ஆகப் பழைய ஞாபகம், "வெள்ளி விழா, பொன் விழா" என்று அறியப்பட்ட இடைக்காடு மகாவித்தியாலத்தின் பொன் விழாவும் இடைக்காடு பழைய மாணவர் சங்கத்தின் வெள்ளிவிழாவும். 1977 என்று ஞாபகம். மிகக் கோலாகலமாக இ.ம.வித்தியாலத்தில் நடைபெற்றது. பள்ளிக்கூடத்திற்குக் கிட்ட அலங்கார வளைவுகள் எல்லாம் கட்டப்பட்டிருந்தன . கலை நிகழ்வுகள், பொருட்காட்சி என்றெல்லாம் நடந்தன. இதை எழுதும் நான் அப்போது ஒரு சிறு பையன். என்பதால் அப்பா அம்மாவிடம் வாங்கிய சில்லறைக் காசுக்கு இனிப்பு, ரொபி, கச்சான் அலுவா, ஐஸ் பழம் என்று பக்ரீறியா, சுகாதாரம் என்றெல்லாம் யோசிக்காமல் தின்று தீர்த்தேன். அதைவிட முக்கியம் 'அவிட்டு' விட்ட மாடு மாதிரிச் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்தேன்.

பள்ளிக் கூடத்தை விட்டால் அதுக்கு அடுத்த முக்கியமான இடங்கள் இரண்டு வாசிகசாலைகள். (கடவுள் பக்தர்கள் இதைவிடக் கோவில்கள் தான் முக்கியமானவை என்பார்கள். நான் இந்தப் பட்டிமன்றத்திற்கெல்லாம் வரவில்லை). "இடைக்காடு சனசமூக நிலையம்" என்பது ஒன்று. மற்றது "இடைக்காடு கலைமகள் சனசமூக நிலையம்". இரண்டிற்கும் இருக்கும் பெயரை வைத்துப் பார்க்கும்போது ஒன்றிலிருந்து கோவித்துக் கொண்டு பிரிந்துபோய்த் தொடங்கியதுதான் மற்றது என்று எண்ண இடமுண்டு. சன சமூக நிலையம் என்றூ 'ஒபிசியலாக' அறியப்பட்டாலும் வாய்ச்சொல்லில் (பேச்சு வழக்கில்) கிழக்கு வாசாலை, மற்றது மேற்கு வாசாலை என்றே அறியப் பட்டன. (வாசாலை =வாசிக சாலை ). இரண்டு வாசாலைகளிலும் வீரகேசரி, உதயன், ஈழ நாடு, ஈழ முரசு, டெய்லி நியூஸ் என்று எல்லாப் பேப்பர்களும், ஆனந்த விகடன், கல்கி, குமுதம் (நடுப்பக்கம் சில வேளைகளில் கிழிக்கப்பட்டிருக்கும்) ,குங்குமம், சாவி, இதயம் பேசுகிறது ,அம்புலி மாமா, ரத்ன பாலா, பால மித்திரா என்று எல்லா வாராந்திர/மாத சஞ்சிகைகளும் இருக்கும். ஒன்றிரண்டு இந்த 'வாசாலை'யில் இருக்காது எனில் அவை மற்றதில் இருக்கும். தனியப் பேப்பர், விகடன், குமுதம் எனில் மற்ற ஊர் வாசிகசாலைகள் போலாகி விடும். முக்கியமானதை விட்டு விட்டேன். அவை வகை பிரித்து வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்கள். புத்தகங்கள் என்றால் வெறுமானே கதைப் புத்தகங்கள் இல்லை. கதைப் புத்தகங்கள் பாடப் புத்தங்கள், கட்டுரைப் புத்தககள், கலைக் கழஞ்சியங்கள் முழுமையான எல்லா வகைப்புத்தகங்களும் இருந்தன..

என் இடைக்காட்டு நாட்களில் கைத்தொலைபேசி (மொபைல் போன்) இன்னும் பாவனைக்கு வந்திருக்கவில்லை. எனவே கண்ட இடத்தில் கண்ட நேரத்தில் அழைப்பு அல்லது குறுந்தகவல் அனுப்பும் வழி இல்லை. இணையம் இல்லை என்பதால் ஃபேஸ்புக்கும் இல்லை. அப்ப ஊர்ப்புதினங்களை எப்படி அறிவது? இந்த இடத்தில் ஆண்கள், பெண்கள் என்று இரண்டாகப் பிரிக்கவேண்டிள்ளது.
ஆண்களுக்கு வாசிகசாலை வாங்கும்(Bench) பெண்களுக்கு சந்தையும்தான் அன்றைய ஊர்ப்புதினம் கதைக்கும்/பரப்பும் இடம். ஊர் வம்புகள் அந்தக் காலத்தில் இன்னும் விரைவாகப் பரவியது என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. எல்லாவற்றையும் விட முக்கியமானது இவ்வாறு ஊர்ப்புதினம் பேசுவது அவரவர் கற்பனைத் திறனை வளர்க்க உதவியது. இக்காலங்களில் ஃப்பேஸ்புக்கில் 'share' பண்ணுவது அவரவர் கற்பனைத் திறனை மழுங்கடிக்கிறது.

வாசிகசாலைகள மட்டும் பேசிவிட்டு ஊரில் மூலைக்கு மூலையிருக்கும் வைர(வ) கோவில்களைப் பற்றி எழுதாவிட்டால் வைரவர் கனவில் வந்து என்னை மிரட்டலாம். கொட்டடி வைர கோவில், பெரீய தம்பிரான் கோவில், சொத்தி வைர கோவில் ('சொத்தி வைரவர்', ' சோதி வைரவர்' என்று மறுநாமம் சூட்டப்பட்டார்), இத்திக்கலட்டி வைர கோவில் என்பன உடனே ஞாபத்திற்கு வருகின்றன. மாணிக்கப் பிள்ளையாரும் இருக்கிறார் காட்டுப் பிள்ளையாரையும் மறக்கவில்லை. அம்மன் கோவில் சற்றுப் பெரியது.. வருடாந்திர திருவிழாவும் உண்டு. அம்மன் கோவில் திருவிழா தவிர்த்து மற்றக் கோவில்களுக்கு வருடத்தில் ஒரே ஒருநாள்தான் திருவிழா. பகலில் பூசையும் அன்னதானமும் இருக்கும். இரவில் மேளக் கோஷ்டி, சின்ன மேளம், இசைக் குழுவினரின் பாட்டு, நாடகம் என்று களை கட்டும்- லையிற்று மிசின் புன்ணியத்தால் ரியூப் பல்ப்கள் (கலர் கலராக), "ஓடும்" பல்ப்புக்கள் என்று அலங்காரம். இதிலே ஒரு சின்ன 'அரசியலும்' எண்டு. எல்லா வைர கோவில்களுக்கும் வருஷத் திருவிழா இல்லை. எனவே வைரவர்களுக்குள்ளும் 'ஸ்ரேஸ்' பிரச்சினை இருக்குப் போல.

புது வருஷம் என்றாற் கூடுவோம் பள்ளிக்கூட மைதானத்தில். புது வருட விளையாட்டுப் போட்டி அவர் அவரிற்கு அவரவர் சோலி. பெடி பெட்டைகளுக்கு ஐஸ்கிறீம், அல்லது ரொபி , ஐஸ் இனிப்பு என. பேரன் பேர்த்தி கண்டவர்களுக்கு சிறிசுகளின் விளையாட்டைக் கண்டு களிக்க என்று. இளைஞர்களுக்கு பிரியமானவர்களின் பார்வை மட்டும் போதும். (மூன்று போத்தற் கள் அடித்தாலும் இதன் போதைக்கு இணையாகுமா?). கிறிஸ் கம்பில் ஏறுவார்கள் இளந்தாரிகள். அநேகமாக ஒவ்வொருவரும் தம் முயற்சிகளில் கிறீசை வழித்தெடுக்கக் கடைசியாக வருபவருக்கே 'லக்'. இதெல்லாம் நடக்க இன்னொரு சீரியஸ் பார்ட்டியையும் மறக்கலாகாது- நடுத்தர வயது கொழும்பு உத்தியோகத்தர்! லீவு போட்டு விட்டு ஊருக்கு வந்தால் போதுமா? கொஞ்சம் போட்டுவிட்டு இங்கிலிஷ்' கதைக்காவிட்டால நாலுபேர் மதிப்பார்களா? அல்லது கிடைத்த சந்தர்ப்பத்தை விடமுடியுமா?

"ஐ சே, ஜேயார் இஸ் ஏ ஸ்டுபிட் கை..... யூ சீ!, பெடியள் வில் டீச் ஹிம் எ லெஸ்ஸன்" என்று பிளந்து கட்டுவார்கள். (விடியக் காலமை இறக்கிய கள்ளின் வாடையும் இவர்கள் பேச்சில் லேசாக அடிக்கும்). இவர்கள் பேசுவது அநேகம் பேருக்குப் புரியாது. புரிந்தவர்கள் குழப்பிப் போய் இருப்பார்கள்). இருக்கட்டும் ஆனால் இவர்கள் 'முதியோர் " ஓட்டத்தில் மட்டும் பங்கு பற்ற மாட்டார்கள். 'பழைய மாணவர்" ஓட்டத்திற்கு 'அரைக் காற்சட்டையுடன்' ஆயத்தமாக இருப்பார்கள். மனதில் மட்டும் ஒரு நம்பிக்கை அந்தக் கால 'ஓட்டோகிறாப்ஃ' காரி நாம் ஓடுவதைப் பார்க்க மாட்டாளா என....

ஊரில் நிறையப் பேர் நீளக்காற்சட்டை போட்டு "ஒபிஸ்' வேலை பார்த்தாலும் இடைக்காடு விவசாய பூமிதான். மிகுதி யாழ்ப்பாணத்தையும் போல கிணற்று நீர் இருந்தாலும் கற் பூமி இது. அந்தக் காலத்திலேயே முன்னவர்கள் கலட்டிகளைத் 'திருத்தி' நிறையத் தோட்டாக்காணி ஆக்கிவிட்டார்கள். எனவே வெங்காயம், மிளகாய், பயறு, உளுந்து, தக்காளி, கத்தரி, மரவள்ளி என்று யாழ்ப்பாணத்தில் விளையும் எதையும் விட்டுவைக்கவில்லை. எல்லாவற்றையும் 'செய்தோம்'. என்றாலும் வெங்காயந்தான் எங்கள் முக்கிய பயிர்.

முழுநேரமாகத் தோட்டம் செய்பவர்கள் மூவாயிரம், நாலாயிரம், ஏன் பத்தாயிரம் 'கண்டு' என்று வெங்காயம் செய்வார்கள். இன்னொரு தொழில் செய்பவர்கள் 800- 1000 கண்டு வெங்காயமாவது செய்வோம். வெங்காயம்தான் அநேகத் தேவைகளுக்குப் பணம் கொடுத்தது. "புரொபஷனல்" கமக்காரருக்கு வருமானத்தில் பெரும்பகுதி வெங்காயச் செய்கையினால்தான் வரும். இன்னொரு வேலை செய்துகொண்டு கொஞ்சமாக வெங்காயம் செய்பவர்களுக்கு அவசரத் தேவைகளுக்குக் கை கொடுப்பதும் அதுவே. வெங்காயக் கொட்டிலில் தொங்கிக் கொண்டிருக்கும் வெங்காயப் பிடிகள் மாதிரி ஒரு "மாற்றுத் தங்கம்" இன்னும் நான் தேடிக்கொண்டிருப்பது. திடீர்ப் பணத்தேவைகளுக்கு உதவுவது இது மாதிரி ஒன்றில்லை. காசுத் தேவை எனில் கொட்டிலில் தொங்கிக் கொண்டிருக்கும் வெங்காயப் பிடிகள் சிலவற்றை அவிழ்த்தி, நுள்ளிச் சாக்குகளில் போட்டுக் கொழும்பு லொறியில் அனுப்பலாம், இல்லாவிட்டாம் உள்ளூர்க் கடைகளிலும் விற்கலாம். பெரியவர்களுக்கு இப்படி என்றால் சிறியவர்களையும் இந்த 'வெங்காயம்' கைவிடாது. இது வெங்காயம் பூக்கும் காலங்களில். வெங்காயப் பூக்களை 'முறித்து' அளவாகப் 'பிடிகளாகக் கட்டினால் பிறகு சந்தைக்குக் கிட்ட உள்ள ஒரு கடையில் விற்றால் கிடைக்கும் காசு சிறுவர் எமக்கே :-)

சிறுவனாக ஓடித்திரிந்து, கள்ள மாங்காய், புளியங்காய் ஆய்ந்து, பிறகு அந்த ஆமிப் பிரச்சினைக்கிடையில் வளர்ந்து ஒரு இருபது வயது இளைஞனாக ஊரை விட்டு வெளிக்கிட்டேன். பிறகு படிப்பு, வேலை, என்று நாட்டுக்கு நாடு மாறினேன். பிறகு ஊரிற் கால் வைக்கக் கிடைக்கவில்லை. கிடைத்ததெல்லாம் காசில்லாமல் அனுபவிக்கக் கூடிய சில சிலிர்ப்பான ஞாபகங்கள் ம்ட்டுமே.

கனவா, நனவா என்று புரியாத ஒரு மத்திய நிலையில் நடந்து கொண்டிருக்கிறேன் -சத்தியமாக உற்சாக பானம் எதுவும் ஏற்றாமல். தொண்டை வறள்கிறது. பசி வயிற்றையும் தாண்டிக் காதையும் பிறாண்டுகிறது. என்றாலும் எதையோ தேடி இன்னும் இன்னும் நடக்கின்றேன். கால்கள் 'நீ இன்னும் இளைஞன் இல்லை" என்று உணர்த்துகின்றன. ஆழ் மனத்திற்குள் ஒளித்திருக்கும் இன்னும் வளராத சிறுவன் மட்டும் சொல்லுகிறான் 'இன்னும் நட, கிடைக்கும்' என்று. என்னத்தைத் தேடுகிறேன் என்றால் விடை கொஞ்சம் குழம்பலாக... சில வாசனைகள், சத்தங்கள், மற்றும் நினைவுகளின் கோர்வைகள்.

", வாய்க்கால்களில் வளர்ந்திருக்கும் அறுகம்புல்லை உழவாரத்தால் கஷ்டப்பட்டுச் 'செருக்கும்' ஒரு வயதானவர், பக்கத்துத் தோட்டத்தில் இயங்கும் இறைப்பு மிசினின் ரீங்காரம், வாசிகசாலை வாங்கில் இருந்தபடியே அரசியலில் pHD செய்யும் ஆய்வாளர்கள், சிலிப்பர் போடாமல் பள்ளிக்கூடம் போகும் சிறுவர்கள், மீன் சந்தையில் கேட்கக்கூடிய 'விசேட' தமிழ், ரியூசன் விடும் நேரம் பார்த்துக் கணக்காகத் தற்செயலாக குறுக்கே நெடுக்கே சைக்கிள் ஓடும் பெரிய பொடியள், நவராத்திரிக்குக் கிடைக்கும் ஓசி அவல்/கடலை, மாரித் தவளைகளின் கத்தல்கள், முறித்த வெங்காயப் பூவின் மெதுவாக மூக்கை அரிக்கும் வாசனை, மாரியில் மட்டும் நீர்ப்பிட்டிக் கடற்கரையில் கிடைக்கும் சீலா மீனையும் மறந்துவிட முடியவில்லை "

இவ்விடை கூட அண்ணளவானதுதான். முழு விடையும் இடைக்காட்டில்தான் இருக்கிறது என்று மட்டும் புரிகிறது. ஆனால் இன்னும் தேடுகின்றேன்.





-----

கண்டு (கன்று) - என்பது ஒரு நில அளவை. 1000 கன்று = ?????? பரப்பு
செருக்குதல்- செதுக்குதல் என்பதன் மருவிய வடிவம் என நினைகிறேன். தமிழ்ப் பண்டிதர்கள் யாராவது விளக்குவார்களா?

நன்றி- 'இத்தி மலர் 2013", யாழ் இடைக்காடு மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கம் (கனடா)