Monday, February 18, 2013

தூக்குத் தண்டனை

-ஜோர்ஜ் ஓ(ர்)வெல்

(தமிழில் எஸ். சக்திவேல்)

இது பர்மாவில் நடந்தது- மழையில் ஊறிக் கிடந்த ஒரு காலைப் பொழுதில். சிறை வளாகத்தைச் சுற்றியிருந்த உயரமான சுவரில் இருந்த ஒரு விளக்கு மஞ்சள் நிறமான நோஞ்சான் ஒளியை உமிழ்ந்து கொண்டிருந்தது. நாங்கள் குற்றவாளிகள் அடைக்கப்பட்டிருந்த அறைகளின் வெளியே காத்துக் கொண்டிருந்தோம். ஒவ்வொரு அறையும் பத்துக்குப் பத்தடியில்- சிறிய விலங்குகளை அடைத்து வைக்கும் கூண்டுகள் போல இருந்தன. ஒரு மரத் திண்டு (கட்டில்), கூடவே ஒரு கூஜா குடிநீர்- இவற்றை விட்டால் ஒவ்வொரு அறையும் ஏறக்குறைய வெறுமையாக இருந்தது. சிலவற்றில் மண்ணிற மனிதர்கள் போர்வையால் தங்களைச் சுற்றிக்கொண்டு அமைதியாகக் குந்தியிருந்தார்கள். அவர்கள் தண்டனை விதிக்கப்பட்ட நபர்கள், அடுத்த கிழமையோ அதுக்கடுத்த கிழமையோ தூக்கிலிடப்பட இருப்பவர்கள்.

ஒரு கைதி கூண்டிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டான். அவன் ஒரு இந்து. ஒல்லிக்குச்சி உருவம். தலை மொட்டை அடிக்கப்பட்டிருந்தது. வெறுமையான ஆனால் பெரிய ஆழமான கண்கள். மீசை தழைத்து வளர்ந்திருந்தது.- அவன் குச்சி உடம்பிற்கு இந்தப் பெரிய மீசை பொருந்தாமல் இருந்தது- சினிமாவில் வரும் 'காமெடியன்'இன் மீசை மாதிரி. ஆறு உயரமான இந்திய வார்டர்கள் அவனைக் காவல் காத்துக்கொண்டும் அதேவேளையில் அவனைத் தூக்கு மேடைக்கு ஆயத்தமாக்கியும் கொண்டிருந்தார்கள். இருவர் துப்பாக்கிகளுடன்- துப்பாக்கிச் சனியன்கள் நீட்டப்பட்டிருந்தன. மற்றவர்கள் அவன் கையில் விலங்குகளை மாட்டினார்கள். ஒரு சங்கிலியை கைவிலங்கினூடாகச் செலுத்தி தங்கள் 'பெல்ட்'களுடன் பொருத்திக் கொண்டார்கள். அவன் கைகளை அவன் உடலோடு பக்கவாட்டில் இறுக்கிக் கட்டினர். . அத்தோடு எல்லோரும் அவனுக்கு மிக நெருக்கமாக நின்றுகொண்டு அவனை இறுக்கிப் பிடித்துக் கொண்டு நின்றார்கள் -ஆசாமி நிற்கிறான் என்று உறுதிப்படுத்துவது போல. இது, இன்னும் உயிருள்ள ஒரு மீனைப் பிடித்து வைத்துக் கொண்டு அது பாய்ந்து நீரில் விழுந்து தப்பிவிடும் என்று பயந்துகொண்டு இருக்கும் சிலரைப் போல இருந்தது. ஆனால் அவன் எதிர்ப்பேதும் காட்டவில்லை. 'கைகளை வசதியாகக் கட்டு' என்று நெகிழ்வாக வைத்திருந்தான். சுற்றவர நடந்தவை எவற்றையும் அவன் கவனித்தது மாதிரித் தெரியவில்லை.

எட்டு மணி அடித்தது. கூடவே தூர இருந்த இராணுவ முகாமிலிருந்து ஊதுகுழல் ஒன்றும் அந்த ஈரக் காற்றில், அலுப்பாக ஒலித்தது. சற்றுத் தள்ளி நின்றிருந்த சிறை சூப்பிரின்டென்ட் பாதையில் இருந்த சரளைக் கற்களைத் கையிலிருந்த குச்சியால் தட்டினார். பிறகு தலையை சத்தம் வந்த திசையை நோக்கி உயர்த்தினார். அவர் ஆ(ர்)மி வைத்தியரும்கூட. நரைத்த பிரஷ் மீசையும் தடித்த குரலும் உடையவர்.

"உனக்குப் புண்ணியமாகப் போகட்டும், சீக்கிரம் பிரான்சிஸ்" எரிச்சலுடன் சொன்னார் சூப்பிரின்டென்ட், "இந்த மனிதன் இவ்வளவுக்குள் செத்திருக்க வேண்டும், நீ இன்னும் ஆயத்தமாகவில்லையா?".

தலைமை ஜெயிலர் பிரான்சிஸ் ஒரு குண்டான தென்னிந்தியன். வெள்ளைச் சீருடையும் தங்க மூக்குக் கண்ணாடியும் அணிந்திருந்தார். "ஆம் ஐயா, ஆம் ஐயா, எல்லாம் திருப்ப்தியாக ஆயத்தமாக இருக்க்கிறது. *அலுக்கோசுவும் காத்துக் கொண்டிருக்கிறான். வேலையைக் கவனிக்கலாம்", தன் கறுத்த கைகளை காற்றில் வீசிக் கொண்டு குளறலாகச் சொன்னார்.

"நல்லது, அப்போது விரைவு படுத்து. இந்த 'வேலை' முடியாமல் மற்றச் சிறைவாசிகளுக்குக் காலைச் சாப்பாடு கிடைக்காது"

தூக்குமேடையை நோக்கி நடக்கத் தொடங்கினோம். இரண்டு வார்டர்கள் குற்றவாளிக்கு இருபுறமும், துப்பாக்கிகளைச் சாய்த்துப் பிடித்துக் கொண்டு; இன்னும் இருவர் அவனுக்கு மிக அருகில் அவன் கையையும் தோளையும் இறுக்கப் பற்றிக்கொண்டு -அவனைத் தள்ளுவது போலும் இருந்தது, சப்போர்ட் ஆகப் பிடிப்பது போலும் இருந்தது. மிகுதிப்பேர், மாஜிஸ்திரேட் மற்றும் இன்ன பிற பேர்வழிகள் பின்னால் நடந்தோம். பத்து யார்கள்தான் நடந்திருப்போம். எச்சரிக்கையோ அல்லது உத்தரவோ எதுவுமின்றி 'அணி' திடீரென்று நின்றது. ஒரு கெட்ட அல்லது பயங்கரச் சம்பவம் நடந்திருக்கவேண்டும்.ஒரு நாய் திடீரென முன்னால் தென்பட்டது-- எப்போது வந்தது என்று கடவுளுக்குத்தான் தெரியும். உரத்து நிறுத்தாமற் குரைக்கத் தொடங்கியது. பிறகு எங்களை நோக்கிப் பாய்ந்துவந்து வாலை மட்டுமல்ல, முழு உடலையும் ஆட்டத்தொடங்கியது. இவவளவு மனிதர்களையும் ஒருமிக்கக் காண அதற்குக் குஷி பிறந்திருக்க வேண்டும் உரோமங்களடர்ந்த நல்ல பெரிய நாய் அது- பாதிச் சீமைநாய், பாதித் தெருநாய். முதலில் அது எங்களை நோக்கித் தாவியது. பிறகு யாரும் நிறுத்தமுதல் தூக்குமேடைக் கைதியிடம் பாய்ந்துசென்று அவன் முகத்தை நக்க முயற்சித்தது. எல்லோரும் திடுக்கிட்டு நின்றோம், நாயைத் தடுக்க யாருக்கும் தோன்றவில்லை.

"யார் இந்தச் சோமாறி விலங்கை இங்கே வரவிட்டது?" சூப்பிரின்டென்ட் கோபத்திற் கத்தினார். "பிடியுங்கள் யாராவது!"

ஒரு வார்டர் நாயை நோக்கித் தாவினார். ஆனால் அது நளினமாகத தப்பி ஓடியது.அத்தோடு அந்த விளையாட்டு ஒரு முடிவுக்கு வந்தது. ஒரு யூரேசிய ஜெயிலர் கொஞ்சச் சரளைக் கற்களைப் பொறுக்கி வீசினார். ஆனால் கற்களைத் தவிர்த்து ஓடிய நாய் பிறகும் எங்களுக்குப் பின்னால் வரத் தொடங்கியது. அதன் சிறு குரைப்பு சிறைச் சுவர்களில் எதிரொலித்தது. இரண்டு வார்டர்களின் பிடியிலிருந்த தூக்குக்கைதி இவற்றை அசுவாரசியமாகப் பார்த்தான். அவன் பார்வை இதுவும் தூக்குமேடைச் சம்பிரதாயங்களில் ஒன்று என்பதுபோல் இருந்தது.சிலநிமிடங்களில் யாரோ நாயைப் பிடித்துவிட்டார்கள். எனது கைக்குட்டையை அதன் கொலரில் நுளைத்துக் கட்டி, அதை வெளியே தள்ளிக் கொண்டு போனோம்; அது இன்னமும் திமிறிக் கொண்டும் முனகிக் கொண்டும் இருந்தது.

இன்னும் நாற்பது யார்களில் தூக்குமேடை வந்துவிடும். எனக்கு முன்னால் நின்ற தூக்குக் கைதியின் மண்ணிறமான பின்புறத் தோற்றத்தினைப் பார்த்தேன். அவன் கைகள் கட்டப்பட்டிருந்ததால் அசௌகரியமாக, கொஞ்சம் அலங்கோலமாக நடந்தான். முழங்கால்களை நேராக்கி எப்போதும் நடந்திராத இந்தியனின் ஒருவித உருளல் நடை. ஆனால் நடை உறுதியாக இருந்தது; ஒவ்வொரு முறையும் அவன் அடி எடுத்து வைக்கும் போது அவன் தசைகள் அசைவது தெரிந்தது, தலையில் உள்ள தோல் மேலும் கீழும் துள்ளியது. அவன் கால்கள் ஈரமான தரையில் பாத அடையாளங்களை வரைந்து சென்றன. ஒருதரம், ஒரு வார்டர் அவன் தோள்களை இறுக்கிப் பிடித்திருந்த போதிலும், தரையில் இருந்த சிறுகுட்டைநீர் காலில் படாமல் விலத்தி நடந்தான்.

இது ஒருவித விசித்திர உணர்வு. ஆனால் இந்தக் கணம்வரை, ஒரு ஆரோக்கியமுள்ள, உணர்ச்சியுள்ள மனிதனை அழிப்பது எப்படி இருக்கும் என்று யோசித்ததில்லை. இவன் நிலத்தில் இருந்த ஈரம் பாதத்தில் படாதவாறு விலத்தி நடந்தபோதுதான், இதிலுள்ள விசித்திரத்தையும் ஒரு உயிரை, முழுதான உயிரை இடையில் பறிப்பதின் மாபெரும் தப்பையும் உணர்ந்துகொண்டேன். இவன் இன்னும் செத்துப் போய்விடவில்லை. நாங்கள் உயிருடன் இருப்பது போலவே இவனும் உயிருடன் இருக்கிறான். இவன் உடலில் உள்ள உறுப்புக்கள் எல்லாம் தன்பாட்டுக்கு வேலை செய்துகொண்டிருக்கும்--- வயிறு உணவைச் செமித்துக் கொண்டிருக்கும். தோல் தன்னைத் தானே புதுப்பித்துக் கொண்டிருக்கும். நகம் வளர்ந்து கொண்டிருக்கும். கலங்கள் உருவாகிக் கொண்டிருக்கும்-- எல்லாம் முட்டாள்த் தனமாக வேலை செய்து கொண்டிருக்கும். தூக்கு மேடையில் -பலகையில் அவன் நிற்கும்போதும் அவன் நகங்கள் வளர்ந்து கொண்டிருக்கும். பலகை இழுக்கப்பட்டுக் காற்றில் இவன் விழுந்து கொண்டிருக்கும்போதும்... இன்னும் பத்திலொரு செக்கன்கள்தான் இவன் உயிரோடு இருக்கப் போகிறான் என்றபோதும்.

அவன் கண்கள் மஞ்சள் சரளைக் கற்களையும் சாம்பல் நிற சுவர்களையும் பார்த்தன; அவன் மூளை இன்னும் ஞாபகப்படுத்துகிறது, உய்த்தறிகிறது, ஆராய்கிறது, நிலத்தில் உள்ள சிறுகுட்டையின் ஈரத்தையும். அவனும் நாங்களும் ஒன்றாக நடந்து செல்லும் ஒரு குழுவினர்- ஒரே உலகத்தையே பார்த்துக் கொண்டு, கேட்டுக் கொண்டு, உணர்ந்து கொண்டு, விளங்கிக்கொண்டு; இன்னும் இரண்டு நிமிடங்களில், ஒரு திடீரென்ற 'ஒடிப்பில்' எங்களில் ஒருவன் போய்விடுவான்--- ஒரு மனது, ஒரு உலகம் குறைந்துவிடும்.

தூக்குமேடை, சிறையின் மைதானத்தில் இருந்து விலத்தி, ஒரு தனித்த சிறிய காணித்துண்டில் இருந்தது. அதைச் சுற்றி உயரமான முட்பற்றைகள் வளர்ந்திருந்தன. செங்கட்டிகளால் மூன்று பக்கங்களிலும் கட்டப்பட்ட ஒரு 'ஷெட்' இனை ஒத்திருந்தது.மேலே பலகை. இன்னும் மேலே இரண்டு மரச்சட்டங்கள், அவற்றில் குறுக்கே ஒரு சட்டம். அதில் தூக்குக் கயிறு தொங்கிக்கொண்டிருந்தது. அலுக்கோசு தலை நரைத்த ஒரு குற்றவாளி-வெள்ளைநிறச் சிறைச்சாலைச் சீருடையிலிருந்தான். தனது 'இயந்திரத்திற்கு' அருகில் காத்திருந்த அவன் நாங்கள் வந்ததும் ஒரு கூழைக் கும்பிடு வரவேற்புத் தந்தான். பிரான்சிஸ் ஒரு வார்த்தை கொடுத்ததும் கைதியை இறுக்கிப் பிடித்திருந்த இரண்டு வார்டர்களும் பாதி தள்ளியும் மீதி செலுத்தியும் அவனைத் தூக்கு மேடையை நோக்கிச் முன்னேற்றினர். அத்தோடு அவனை அசௌகரியமாக ஏணி வழியே மேலே போக உதவினர். பிறகு அலுக்கோசு மேலே ஏறித் தூக்குக் கயிற்றைக் கைதியின் கழுத்தில் மாட்டினான்.

ஐந்து யார்கள் தள்ளி நாங்கள் காத்துக் கொண்டிருந்தோம். வார்டர்கள் தூக்குமேடையைச் சுற்றி, கிட்டத்தட்ட ஒரு அரை வட்டமாக நின்றார்கள். பிறகு, கைதியின் கழுத்தில் தூக்குக் கயிறு சரிப் பண்ணப்படும்போது, கைதி பிரார்த்திக்கத் தொடங்கினான். "ராம்!, ராம்!, ராம்!, ராம்!". அவதியான பயந்த பிரார்த்தனை மாதிரியல்ல. அல்லது உதவி கேட்கும் அழுகையும் இல்லை. உறுதியான, ஒத்திசைக்கின்ற, கிட்டத்தட்ட ஒரு மணியோசைமாதிரி. நாய் ஒரு சிணுங்கலைப் பதிலாய் அளித்தது. இன்னும் தூக்குமேடையில் நின்ற அலுக்கோசு, கைதியின் தலையில் ஒரு சாக்குக் பையை வைத்துக் கழுத்துவரை இழுத்துவிட்டான். "ராம்! ராம்! ராம்! ராம்! ராம்!" சத்தம் சாக்குப் பையினால் அமுக்கப் பட்டாலும் இன்னும் கேட்டது.

அலுக்கோசு கீழே இறங்கி 'லீவரைப்' பிடித்துக்கொண்டு ஆயத்தமாக நின்றான். நிமிடங்கள் நகர்ந்தன. உறுதியான, அனால் அமுங்கிப்போன குரல் இன்னும் கேட்டது. "ராம்! ராம்! ராம்!" குரல் ஒருபோதும் தளம்பவில்லை. சூப்பிரின்டென்ட் தலையை தன் மார்பில் வைத்துக்கொண்டு மெதுவாகக் குச்சியால் நிலத்தைக் கிண்டிக் கொண்டிருந்தார்; ஒருவேளை கைதியின் "ராம்'களை எண்ணிக் கொண்டிருப்பார். ஐம்பது அல்லது நூறு எண்ணட்டும் எனக் காத்திருப்பார் போல. எல்லாரின் நிறமும் மாறியது. இந்தியர்கள் மோசமான கோப்பிபோல சாம்பல் நிறமாயினர். ஒரு துப்பாக்கிச் சனியன் நடுங்கியது. நாங்கள் தலை மூடப்பட்ட தூக்குக் கைதியைப் பார்த்தோம். அவன் 'ராம்' கூச்சல்களைக் கேட்டோம். ஒவ்வொரு 'கூச்சலும்' இவ்வொரு செக்கன் வாழ்வு. எல்லோர் மனதிலும் ஒரே எண்ணமே வந்தது. 'ஓ அவனை விரைவாகக் கொல்லுங்கள், இதை முடித்து வையுங்கள், அத்தோடு அந்த வெறுக்கத்தக்க சத்தத்தை நிறுத்துங்கள்"

திடீரென்று சூப்பிரின்டென்ட் ஒரு முடிவுக்கு வந்தார். தலையைச் சிலிர்த்துக் கொண்டு,கையிலிருந்த குச்சியை விரைவாக அசைத்தார். "சலோ" கோரமாகக் கத்தினார்.

லீவர் இழுபடும் உலோகச் சத்தம். பிறகு மரண அமைதி. தூக்குக் கைதி மறைந்துவிட்டான், கயிறு முறுகிக் கொண்டிருந்தது. நான் நாயைப் போக விட்டேன். அது தூக்கு மேடையின் பின்பகுதிக்குப் பாய்ந்து சென்றது. அங்கு போனதும் நின்று குரைத்தது. பின்பு மைதானத்தின் பின்புறத்திற்குப் பின்வாங்கியது. முட்பற்றைகளுக்குள் நின்று கொண்டு எங்களை நோக்கிப் பீதியாகப் பார்த்தது. கைதியின் உடலைப் பரிசோதிக்கவென்று நாங்கள் தூக்குமேடைக்குக் கிட்டப் போனோம். அவன் கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்தான்; காற்பெருவிரல்கள் கீழ்நோக்கியிருக்க, உடல் மெதுவாகச் சுழன்றது. சுத்தமாகச் செத்துப் போயிருந்தான்.

சூப்பிரின்டென்ட் கையிலிருந்த தன் குச்சியை எடுத்து அவன் உடலை நோண்டிப் பார்த்தார். அது மெதுவாக அங்குமிங்கும் ஆடியது. "ஆள் சரி", என்றார். தூக்கு மேடையில் இருந்து சற்று பின்வாங்கினார். மூச்சைப் ஆழமாக விட்டார். முன்பிருந்த 'அசௌகரிக' முகம் போய்விட்டது. "எட்டு மணி எட்டு நிமிடங்கள். நல்லது, இந்தக் காலைப் பொழுதிற்கு இது மட்டும்தான், நன்றி இறைவா."

வார்டர்கள் துப்பாக்கிச் சனியன்களை உள்ளே இழுத்துவிட்டு, போய்விட்டார்கள். நாய் கொஞ்சம் நிதானத்துடனும் குளறுபடி செய்த உணர்வுடன் பின்னாற் சென்றது. நாங்கள் தூக்குமேடை இருந்த பகுதியை விட்டு விலகி, தண்டனைக் கைதிகள் இருக்கும் சிறைச்சாலையும் கடந்து சிறைச் சாலையின் மத்திய பிரிவை அடைந்தோம். லத்திகளுடன் உலாவும் வார்டர்கள் கைதிகளைக் காவல் காத்துக்கொண்டிருந்தார்கள். கைதிகள் தகரத் தட்டுக்களுடன் நீளமான வரிசையில் குந்தியிருந்தார்கள். இரண்டு வார்டர்கள் வாளிகளில் சோற்றைக் நிறைத்துப் பரிமாறிக் கொண்டிருந்தார்கள். தூக்குக் தண்டனை நிறைவேற்றப்பட்டதன் பின் இது நல்ல 'ஹோம்லி'யான 'ஜொலி'யான நிகழ்வாக இருந்தது. 'வேலை' முடிந்துவிட்டதால் மனதில் ஒரு ஆறுதல் உணர்வு. ஒருவன் ஒரு உத்வேகத்திற் பாடத் தொடங்கினான்.; பிறகு ஓடினான். பிறகு அடக்கிக்கொண்டு சிரிக்கத் தொடங்கினான். பிறகு எல்லோரும் மகிழ்வுடன் பேசத் தொடங்கினோம்.

யூரேசியன் பையன் என்பக்கமாக நடந்துகொண்டிருந்தான். தலையை அசைத்து ஒரு அறிமுகப் புன்னகையைச் சிந்தினான். "உங்களுக்குத் தெரியுமா ஐயா, எங்கள் நண்பன் (தூக்கில் தொங்கியவனைச் சொல்கிறான்)அப்பீல் நிராகரிக்கப்பட்டதும் என்ன செய்தான் என்று? தன் சிறை அறையிலேயே மூத்திரம் பெய்துவிட்டான், பயத்திலே. அன்புடன் இந்தச் சிகரட்'டை எடுங்கள். இந்த வெள்ளிப் பெட்டி நன்றாக உள்ளதல்லவா? பெட்டிக்கடையில் வாங்கினேன்- இரண்டு ரூபா எட்டணா. அச்சு அசலான ஐரோப்பிய ஸ்டைல்."

பலர் சிரித்துக் கேட்டது--- யாருக்கும் ஏனென்று தெரியவில்லை.

பிரான்சிஸ், சூப்பிரின்டென்ட்'இற்கு அருகாக சளசள என்று பேசிக்கொண்டு நடந்துகொண்டிருந்தான். "நல்லது ஐயா, எல்ல்லாம் அதி உன்னதத் திருப்திகரமாக நடந்து முடிந்துவிட்டது. எல்ல்லாம் முடிந்துவிட்டது. --- ஒரு கைவிரற் சுண்டல். அப்படியே ஆயிற்று. இது எப்போதுமே இப்ப்படி நடப்பதில்லை. ஆம்..., சிலவேளைகளில் வைத்தியர் தூக்குமேடைக்குக் கீழே போய்க் கைதியின் கால்களைக் கீழே இழுக்க்க நேரிடும். செத்துவிட்டான் என்று உறுதியாக்க வேண்டுமல்லவா? மிகவும் அருவருப்பானது!"

"நெளிந்து கொண்டிருக்குமா? ஆஹ், அது மோசமானது," என்றார் சூப்பிரின்டென்ட்.

"ஆஹ், ஐயா, சிலவேளைகளில் அவர்கள் எதிர்க்க்கும்போது இன்னும் மோசமாகும். எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. நாங்கள் ஒருவனை வெளியே கொண்டுவரப் போனபோது அவன் தன் கூண்டின் கம்பிகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்தான். நம்புங்கள் ஐயா. அவனை வெளியே இழுக்க ஆறு வார்டர்கள் தேவைப்பட்டார்கள். ஒவ்வொரு காலையும் மூவர் இழுக்க்கவேண்டியதாயிற்று. நாங்கள் சொல்லிப்பார்த்தோம், "தோழனே, நீ எங்களுக்கு ஏற்படுத்தும் துன்பத்தை எண்ணிப்பார்த்தாயா?" என்று. ம்ஹூம், அவன் கேட்கவில்லை. ஆஹ், அவன் ரொம்ம்பக் கோளாறுகாரன்".

நான் உரத்துச் சிரித்துக்கொண்டேன். எல்லாரும் சிரித்தார்கள். சூப்பிரின்டென்ட் கூட சகித்துக்கொள்ளும் அளவிற்கு இளித்துக்கொண்டார். "எல்லாரும் வெளியே வந்து ஏதாவது பானம் அருந்துங்கள்" நட்புடன் கூறினார் அவர். "காரில் ஒரு போத்தல் விஸ்கி உள்ளது. நாம் பகிர்ந்து கொள்ளலாம்"

சிறையின் இரட்டைக் கதவுகளைத்தாண்டி, வெளியே வீதிக்கு வந்தோம். "காலைப் பிடித்து இழு!" என்று கூறிய ஒரு பர்மிய மாஜிஸ்திரேட் வெடிச் சிரிப்புச் சிரித்தார். மீண்டும் எல்லாரும் சிரிக்கத் தொடங்கினோம். இப்போது பிரான்சிஸ்'ஸின் கதை நல்ல நகைச்சுவையாக இருந்தது. நாம் எல்லாரும், உள்ளூர், ஐரோப்பியர், சினேகிதமாக- ஒன்றாக மது அருந்தினோம். செத்துப்போன தூக்குக் கைதியின் உடல் ஒரு நூறு யார்கள் தொலைவில்தான் கிடந்திருக்கும்.



------------------------------------------------------------
குறிப்பு: எழுத்துக்களுக்கு இடைக்கிடை வர்ணம் தீட்டியது எனது வேலை.

*அலுக்கோசு- தூக்குத் தண்டனையை நிறைவேற்றுபவன் ; a hangman
யார்- yard
யூரேசியன்- ஐரோப்பிய ஆசியக் கலப்பினத்தவன்.

http://www.george-orwell.org/A_Hanging/0.html
http://www.george-orwell.org/l_disclaimer.html