Saturday, January 14, 2012

துளிர்ப்பு

இவனுக்கு இவ்வூரில் எல்லாம் வித்தியாசமாக இருந்தது. "ஆமி வாறான்" என்றவுடன் கையில் கிடைத்ததைக் காவிக்கொண்டு குடும்பத்தோடு சைக்கிள்களில் இரண்டு மூன்று ஊர் தாண்டி, பிறகு ஒரு பழைய பாலத்தையும் தாண்டி இவ்வூர் வந்தாயிற்று... இவ்வூரில் வீடுகளுக்கு எல்லாப் பக்கமும் மணலும் நிறையத் தென்னை மரங்களும்... சொந்த ஊரில் மணலைக் காணவேண்டுமாயின் யாராவது வீடுகட்டவென்று லொறியில் கொண்டுவந்து கொட்டினால்தான் உண்டு. பள்ளிக்கூடக் கிறவுணட்ஸ் இலும் மணல் உண்டு. கலட்டிகளில் நின்ற பனை மரங்களும் ,வளவுகளுக்குள் நிற்கும் பூவரச மரங்களும், கிளுவை வேலிகளும் கொஞசம் ஊர் ஞாபகத்தைக் கொண்டு வந்தன. ஒரு பெரிய நாற்சார் வீட்டின் பின்புறத்தில் ஒண்டிக்கொண்டான். எல்லாமாக எட்டுக் குடும்பங்கள் அந்தவீட்டில். சற்று அதிகமாகவும் இருக்கலாம். எந்த நேரமும் யாராவது வருவதும் போவதுமாக இருந்ததால் எல்லாமாக எத்தனை பேர் வசித்தார்கள் என்று தெரியவில்லை. இரண்டொரு நாட்களுக்குள், சனம் குறைந்த இன்னொரு வீட்டுக்கு மாறினால் இப்போது இருக்கும் வீட்டுக்காரருக்குச் சிரமம் குறையும் என நினைத்தான். ஆனால் எல்லா வீடுகளிலும் இதே கூத்துத்தான். எல்லா வீடுகளும் இடம் பெயர்ந்த சனங்களால் நிரம்பி வழிந்தன.

இவன் சொந்த ஊரில் தோட்டங்கள் எல்லாம் சிவப்பு மண்ணில். இங்கு களிமண் தோட்டங்கள் தான் அதிகம் தென்பட்டன. ஊரில் 'நாலாயிரம் கன்று' வெங்காயம்-மிளகாய் செய்யும் கமக்காரனிவன். இங்கு கத்தரித் தோட்டங்களைதான் அதிகம் கண்டான். கத்தரிக் கன்றுகளை எந்த மாதம் நடுவது, எத்தனை நாளுக்கு ஒருமுறை தண்ணிவிடுவது, என்ன உரம் போடுவது என்று இவனுக்குத் தெரியவில்லை. "நான் என்ன இந்த ஊர்ப் பெட்டையையே கட்டியிருக்கிறேன் கத்தரித்தோட்டம் வைக்க?" என யோசிக்கச் சிரிப்பு வந்தது. கிணறுகள் அகலமாக இருந்தன. ஆனால் இறைப்பு மிசினால் இறைத்தால் விரைவாக நீர் வற்றிவிடும். கிணற்று நீரும் ஊர்க்கிணறுகளில் இருப்பதுமாதிரி ஸ்படிகமாக இல்லை. கொஞ்சம் கலங்கலாக இருக்கும். "கிணத்துத் தண்ணி கலங்கலாக இருக்குது" என்று மனைவியிடம் சொல்ல

"அகதி மகாராசாவுக்கு நினைப்பு மட்டும் குறைவில்லை" என்று சிரித்தாள்.

பிள்ளைகள் இடம் பெயர்ந்ததைப் பற்றிப் பெரிதாக அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை. பெரியவன் பழைய நண்பர்களையும் புதிய நண்பர்களையும் கண்டு பிடித்துவிட்டான். பள்ளிக்கூடம் இல்லை என்று புளுகு போல. சின்னவன் மட்டும் இரவில் நித்திரை கொள்ளும்போது "எப்ப வீட்டை போவம்?" என்று கேட்கிறான். ஒரு பின்னிரவில் நித்திரையால் எழுப்பி, "அப்பா சிவப்பிக்கு ஆர் நெல்லுப் போடுறது?" என்று கேட்டான். சிவப்பி என்பது வீட்டில் வளர்ந்த பேட்டுக் கோழி. அதைத் துரத்தித் திரிவது சின்னவனின் பொழுதுபோக்கு. அப்பப்ப தாயிடம் அடம் பிடித்து ஒரு சிறங்கை நெல் வாங்கி சிவப்பிக்குப் பக்கத்தில் வீசுவான். அது நெல்லைப் கொத்தத் தொடங்க, திருப்பத் துரத்தத் தொடங்குவான்.

மகளுக்குப் பன்னிரண்டு வயதாகிறது இப்பவும் அம்மாவைக் கட்டிப்பிடித்துக்கொண்டு படுத்தால்தான் நித்திரை வரும். "குமரியாகப் போகிறாள் இப்பவும் அவாவுக்கு பேபி எண்டு நினைப்பு" என்று மனைவி கோவித்துக்கொள்வாள். 'விசர்க்கதை கதைக்காதே , அவள் குழந்தைப் பிள்ளை" என்று இவன் பாய்வான். மகளிற்கு இந்தச் சண்டையெல்லாம் ஒரு பொருட்டல்ல. அவள் நித்திரைகொள்ள அம்மா பக்கத்தில் வேண்டும் அவ்வளவே.


*****************************************

இவன் எப்போதாவதுதான் கள் அடிப்பான். பிறகு வாயைத் திறக்காமல் மனைவி சொல்லும் வேலைகளைச் செய்வான். அன்றைக்கு சந்தைக்குப் போய் மரக்கறிகூட வாங்கிவருவான். (மற்ற நாட்களில் இது பெண்டுகள் வேலை என்று கழற்றிக் கொள்வான்). இருந்தாலும் அத்தினங்களில் சமையல் பாத்திரங்கள் 'டொங்கு டொங்கு' என்று கொஞ்சம் சத்தம் அதிகமாக வைக்கப்படுவது தனக்குப் புரியவில்லை என்றமாதிரிப் பாவனை பண்ணிக்கொள்வான். அன்றைக்கும் பழைய நண்பன் ஒருவன்தான் 'மச்சான், இப்ப இருக்கிற நிலமையிலை கள்ளடித்தால்தான் கவலை தீரும், வா" என்று ஐந்து சந்திக்குக் கிட்ட இருந்த 'கோப்பரேசனுக்குக்' கூட்டிக்கொண்டுபோனான். விதி வலியது என்பார்கள். அன்றைக்குப் பார்த்து கனபேருக்குக் கவலை போல.கோப்பரேசன் வாடிக்கையாளரால் நிறைந்து வழிந்தது. இதற்கிடையில் இவன் அங்கு போன புலனாய்வுத் தகவல் மனைவிக்குத் தக்க நேரத்திற் கிடைத்திருக்கவேண்டும். இவன் நல்ல மத்தியான வெயிலில் சைக்கிளை ஒருமாதிரி வெட்டி, வெட்டி ஓடிக்கொண்டு இருந்த வீட்டுக்கு வர, வாசலில் இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு ஒரு 'ராங்கிப்' பார்வையுடன் அவள் நின்றிருந்தாள். "சாய், இண்டைக்குத்தான் நீ இன்னும் வடிவாயிருக்கிறாய்.." அன்று ஒரு அசட்டுக் கொமென்ற் அடித்துப்பார்த்தான். அவள் அதைக் காதிற் போட்ட மாதிரித் தெரியவில்லை. "ராதே உனக்குக் கோபம் ஆகாதடி" என்று தியாகராஜ பாகவதர்போல் பாவனை பண்ணிக் கொண்டு பாடிப் பார்த்தான். அது அவளை இன்னும் கோபமூட்டியது.

பிறகு அன்றைக்குப் பிள்ளைகள்தான் "பேச்சுவார்த்தைத்" தூதுவர்கள்.

"கொப்பரைச் சாப்பிடச் சொல்லு.."
"அப்பா, அம்மா சாப்பிடச் சொல்லுறா"
"எனக்குப் பசிக்கல்லையாம் எண்டு சொல்லு.."

இத்தனைக்கும் இருவரும் ஒருவருக்குப் பக்கத்தில் ஒருவராக முழங்கைகள் இடிபடும் தூரத்தில்தான் நின்று கொண்டிருந்தார்கள். ஆளை ஆள் பார்ப்பதை மட்டும் தவிர்த்தார்கள். இவன் பிகு பண்ணிக் கொண்டு சாப்பிடத் தொடங்கினான் . "நீ சாப்பிட்டிட்டியே" என்று அரைக்கோப்பை சோறு காலியாகும்போதுதான் கேட்டான். அவள் ஒன்றும் பேசாமல் தட்டில் சாப்பாட்டைப் போட்டுச் சாப்பிடத் தொடங்கினாள். இவன் அவளைப் பேசச் செய்வதற்காக "சள் புள் " என்று சத்தம் போட்டுச் சாப்பிடத் தொடங்கினான். தண்ணீர்ச் செம்பை "ரர்ர்ர்ர்" என்று நிலத்தில் தேய்த்து இழுத்தான். பிறகு வேண்டுமென்றே "களக் களக்" என்று ஓவராகச் சத்தம் பண்ணிக்கொண்டு தண்ணீர் குடித்தான். அவள் இதுக்கெல்லாம் எடுபடுகிறமாதிரித் தெரியவில்லை. முகத்தில் எதுவித சலனமும் இல்லை; உதட்டில் தெரிந்தும் தெரியாமலும் தோன்றிய சிறு புன்னகை மட்டும் விதிவிலக்கு.

ஆனால் இன்னொருவரின் வீட்டில் 'தொங்கிக்கொண்டு' நின்றபடியால் சமையல் பாத்திரங்களை அவள் 'டொங்கு டொங்கு' என்று வைக்கவில்லை. "இண்டைக்குச் சட்டி, பானைகள் எல்லாம் இடி வாங்காமல் தப்பிட்டுது" என்று சொல்லிவிட்டுக் கடைக்கண்ணால் அவளைப் பார்த்தான். அவள் வந்த புன்சிரிப்பைக் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு முகத்தைக் கடுகடுப்பாக வைத்துக் கொள்ள முயன்றுகொண்டிருந்தாள். பிறகு கன்னம் சிவக்க வெட்கப்பட்டாள். திடீரென இவனுக்கு சொந்த ஊரில் சொந்த வீட்டில் இந்தக் கணமே நிற்கவேண்டும்போல் இருந்தது!

மறுநாள் மனைவி ஒரு உரப்பையையும் ஐநூறு ரூபா காசையும் கொடுத்து அரிசி வாங்கிவரச் சொன்னாள். இவன் கிட்ட உள்ள பெரிய சந்தைகளுக்குப் போகாமல், பழைய பாலத்தையும் உப்புவெளியையும் கடந்து, மீண்டும் 'தப்பி' ஓடிவந்த வழியே இரண்டு ஊர்களைக் கடந்து தனது ஊருக்குப் பக்கத்தில் உள்ள சின்ன ரவுணுக்கு வந்தான். எந்த நேரமும் ஆட்கள் குறுக்கும் நடக்கும் போய்க்கொண்டிருந்தார்கள். அநேகர் சைக்கிள்களில், சிலர் பொடி நடையில். இன்னும் சிலர் உழவு மிசின் பெட்டிகளில். எங்கே இந்த ஓட்டம் முடியப்போகிறது என்று தெரியவில்லை. சந்தியில் உள்ள டீ'க் கடையில் பிளேன் டீ'யும் போண்டாவும் சாப்பிட்டுக் கொண்டு ரோட்டில் போன ஆட்களை வேடிக்கை பார்த்தான். பிறகு வெளியில் வந்து, தெரிந்த ஆட்களிடம் ஊர் நிலவரம் கேட்டான். 'ஆமிக்காரன் போய்விட்டான்' என்றும் 'இல்லை போகவில்லை, ஒளித்து நிற்கிறான்' என்றும் குழப்பகரமான தகவல்கள் கிடைத்தன். ஆனால் யாரும் ஊருக்குத் திரும்பிப் போவதாய் இல்லை. சில வீரவாகுகள் ஊர் போய் அவரவர் வீடுகளில் அத்தியாவசியச் சாமான்களை எடுத்துக் கொண்டு 'உயிருடன் திரும்பி வந்தார்கள்' என்ற தகவலும் கிடைத்தது. இவனுக்கு அவ்வளவு றிஸ்க் எடுக்கத் துணிவில்லை. "நான் ஊர் போய்த் துவக்குச் சூடு வாங்க என்ன முட்டாளா?' என்று தன்னைத்தானே திருப்திப்படுத்திக் கொண்டு அரிசியுடன் திரும்பி வந்தான்.

இவனுக்குப் பகல் பொழுதுகள் நரகமாக இருந்தன. எட்டுப் பத்துக் குடும்பங்கள் இருந்த வீட்டில் மூஞ்சையை மூஞ்சையைப் பார்த்துக் கொண்டி இருக்க முடியவில்லை. வீட்டுக்கு வெளியே என்ன வேலை என்றாலும் வலிந்து செய்யத் தொடங்கினான். அரிசி மரக்கறி வாங்குவது, சங்கக் கடையில் மாவிற்கும் மண்ணெண்ணைக்கும் கியூவில் நிற்பது, என்று எல்லாவற்றிற்கும் நல்ல பிள்ளையாக வீட்டுக்கு வெளியே போய்விடுவான். சாப்பாட்டு நேரம் தவிர பகலில் அவ்வீட்டில் நிற்கமாட்டான். இரவு எல்லாரும் உறங்கியபின் பூனைபோல் சத்தம்போடாமல் உள்ளே வந்து சாப்பிட்டுப் படுப்பான்.

அன்றிரவும் அப்படி ஒன்றும் விசேடமாக இல்லை. சத்தம் போடாமல் சைக்கிளை ஸ்டான்ட் போட்டு நிற்பாட்டிவிட்டு உள்ளே பின் விறாந்தைக்கு வந்தான். மனைவி மண்ணெண்ணை விளக்கைத் தூண்டி விட்டுத் தட்டில் சாப்பாட்டைப் போட்டாள். வழக்கம் போலவே கிட்ட வந்து கள் வாசனை அடிக்குதோ என்று 'செக்' பண்ணிணாள். இவன் எப்போதாவதுதான் கள் அடிப்பான் என்றாலும் அவளுக்கு ஒவ்வொரு நாளும் சந்தேகம். இவன் முகம் ஒரு குறும்புச் சிறுவனின் முகம் போல் மாறியது. "சள் புள் " என்று சத்தம் போட்டுச் சாப்பிடத் தொடங்கினான். தண்ணீர்ச் செம்பை "ரர்ர்ர்ர்" என்று நிலத்தில் தேய்த்து இழுத்தான். பிறகு வேண்டுமென்றே "களக் களக்" என்று ஓவராகச் சத்தம் பண்ணிக்கொண்டு தண்ணீர் குடித்தான். அவள் இம்முறை குபீரெனக் கண்களில் நீர் வரச் சிரிக்கத் தொடங்கினாள்.


24 comments:

  1. 'டொங்கு டொங்கு' என்று கொஞ்சம் சத்தம் அதிகமாக வைக்கப்படுவது தனக்குப் புரியவில்லை என்றமாதிரிப் பாவனை பண்ணிக்கொள்வான்.

    வீட்டுக்கு வீடு வாசல்படி தான்... :-)
    ரசித்தேன்.

    ReplyDelete
  2. நல்லாயிருந்தது...

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நண்பரே...

    ReplyDelete
  3. அந்த ஊடலும் காதலும் எந்த சூழ்நிலையிலும் இருக்கும். இருக்கவேண்டும். அது தான் நம்மை இயக்கிக்கொண்டு இருக்கிறது. அழகாக சொன்னீர்கள்!

    ReplyDelete
  4. வரவிற்கும் கருத்துரைகளுக்கும் நன்றிகள் @விசரன், @ரெவெரி & @ஜேகே.

    ஜேகே, you are spot on.

    ReplyDelete
  5. வணக்கம்,
    தங்களுக்கும் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் @சி.கருணாகரசு. குக்கரில் பொங்கிய புக்கையுடன் (=பொங்கலுடன்) என் தைப்பொங்கல் கழிந்தது. உங்களுக்கும் (நாட்கள் கழிந்தாலும்) எனது பொங்கல் வாழ்த்துக்கள்.

      Delete
  6. ஊடலும் கூடலும் கூடிய குடும்பவாழ்வுதான் நீடித்து நிலைக்கும். நல்ல கதைசொல்லியாக இருக்கிறியள். லயித்து படித்தேன். கதை மாந்தருடன் கூட வாழ்ந்த உணர்வைத்தந்தது கதை.

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் @அம்பலத்தார், இதுமாதிரி ஊக்குவிப்புக்கள்தான் தொடர்ந்து எழுதவைக்கிறது. (நீங்கள் பாராட்டியிருக்கிறீர்கள், ஆனால் குட்டினாலும் ஏற்றுக்கொள்வேன்)

      Delete
  7. இரசித்துப் படித்தேன். அழகாக எழுதியிருக்கிறீர்கள்!

    ReplyDelete
  8. அம்மாவை விடாதது மட்டுமல்ல பதினெட்டு வயசாகியும் ஒரு கோப்பி கூட போட தெரியாத பிள்ளைகளை இங்க பாக்கிறன். ஊரில நாங்க அம்மா பேச்சுக்கு பயந்து வீட்டு வேலைகளை பங்கிட்டு செய்வதில்லை இப்ப அதையும் செய்து பிள்ளைகளோட கொஞ்சம் கூடுதலாகவே பாசத்தோட இருப்பதால் பிள்ளைகளுக்கு பொறுப்புணர்வு குறைவதாக நினைக்கிறம். அது பொய்யுங்கோ இஞ்சத்த பிள்ளைகள் தங்களுக்கு என்று வரும்போது தெளிவாத்தான் இருக்கிறாங்க..!!

    ReplyDelete
    Replies
    1. ஓமுங்கோ தங்கள் விசயத்திலாவது தெளிவாக உள்ளார்கள் :-)

      Delete
  9. ஐயா தங்களை வேலையால் தூக்கி விட்டார்கள் போல உள்ளது

    ReplyDelete
  10. கிராமத்து தமிழில் அழகாய் ........... வர்ணித்து இருக்கிறீர்கள்.
    பாராட்டுக்கள் . தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  11. //திடீரென இவனுக்கு சொந்த ஊரில் சொந்த வீட்டில் இந்தக் கணமே நிற்கவேண்டும்போல் இருந்தது! // இது வலி வெறும் காதல் சௌந்தர்யம் அல்ல என்பது எதனை பேருக்கு புரிகிறதோ ?

    ReplyDelete
    Replies
    1. மிகச் சரியாகச் சொன்னீர்கள!

      Delete
  12. இக்க‌தை ந‌ட‌க்கும் இட‌ம் ம‌ட்டுவில்லா?, அந்த‌ ஐந்து சந்தி க‌ன‌க‌ம்புலிய‌டிச் சந்தியா? இது என‌து ஊக‌ம், க‌தை ந‌ல்ல‌ ஒரு வாசிப்பு அனுப‌வ‌த்தை கொடுத்த‌து, தொட‌ர்ந்து எழுதுங்க‌ள்..

    ReplyDelete
    Replies
    1. இடம், கதைக்கு முக்கியமில்லை என்பதால் போடவில்லை. ஆனால் உங்கள் ஊகம் சரியானது.

      Delete
  13. நீங்க‌ள் கூறுவ‌து ச‌ரிதான், க‌தைக்கு ஊர் பெய‌ர் முக்கிய‌மில்லை தான், க‌தை க‌ள‌ம் என‌து ஊர்ராக‌ இருப்ப‌தால் ஒரு சின்ன‌ ஆர்வ‌க்கோளாறுதான்...

    ReplyDelete
  14. நானும் மட்டுவிலைத்தான் நினைச்சனான் :). நான் இடம்பெயர்ந்து இருந்ததும் மட்டுவில் தான். அங்க நிறைய கத்தரி தோட்டங்கள் இருந்தன

    ReplyDelete

  15. What's up every one, here every person is sharing these know-how, thus it's fastidious to read this webpage, and I used to go to see this blog all the time. facebook login in

    ReplyDelete