Tuesday, April 16, 2013

முடியுடை நம்பி அல்லது ஒரு சோக்கான காதல் கதை

"தணியன் சிவலிங்கம்" என்று ஒருவரை முகநூலிற் சந்தித்திருப்பீர்கள். இல்லாவிட்டாலும் அவர் புகைப்படத்தையாவது பார்த்திருப்பீர்கள். பிடரிவரை சிலிர்த்து நிற்கும் முடியுடன் "நான் சிங்கம்டா, சிங்கம்" என்று ஒரு அலட்சியப் பார்வையுடன், கமராவை ஒரு சாய்வாகப் பார்த்துக் கொண்டிருப்பார். அவர் கூந்தல் அழகு பெண்களையே பொறாமைப்பட வைக்கும், முக்கியமாக முப்பத்தைந்தைக் கடந்து , கூந்தல் அடர்த்தி குறைய -ஸ்ரயில் என்று என்றொரு மொக்கைக் காரணத்தைக் கண்டுபிடித்து -முடியைக் குட்டையாக்கிக் கொண்டு திரியும் பெண்களின் வயிறு பற்றி எரியும். நல்லகாலமாக அவர் என்னைச் சந்திக்கவில்லை , அத்தோடு நான் முகநூலில் என் உண்மையான போட்டோவைப் போடவுமில்லை.

என் தலைமுடி காடுபோல் அடர்ந்து வளர்ந்திருக்கும், அத்தோடு தோள்ப்பட்டைக்கும் கீழே வளர்த்து- மெதுவாக ஓடும் ஆறு போல் வழிய விட்டிருப்பேன். வேலைக்குப் போகும்போது மட்டும் இரண்டு ரப்பர் பாண்ட் களால் தலைமுடியை முடிந்து ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பேன். த.சிவலிங்கத்தையே பொறாமைப்பட வைக்கிறமாதிரி ஒரு போட்டோ முகநூலிற் போடவென்று எடுத்து வைத்துள்ளேன். "ஐயோ பப்ளிக்கில போடாதேயுங்கப்பா நாவூறு, கண்ணூறு பட்டிடும்" என்கிறாள் சுகந்தி. அவளுக்கு வேறு பயமோ தெரியவில்லை. இவளை நான் சந்தித்ததே என் நீண்ட 'கூந்தலாலே' தான்.

இது நடந்தபோது கிபிர், புக்காரா குண்டுகள் விழத்தொடங்கவில்லை. பல்குழல் எறிகணைகளும் வரவில்லை. சாதா ஷெல், பீரங்கிக்குண்டுகள், ஹெலிச் சூடு என்றிருந்த பழைய யாழ்ப்பாணம். மதில் சுவர்கள் இயக்க நோட்டீசுகளால் நிறைந்திருக்கும். இன்னும் இருவது இருவத்தைந்து ஆண்டுகள் கழித்து 'நான் குழந்தைப் போராளி' என்று இலக்கியம் எழுதப்போகிற சிலர் இரவுகளில் பசை வாளிகள், பிரஷ், நோட்டிஸ் என்று பிசியாக இருந்த காலம். பல்வேறு "ஐக்கிய" விளையாட்டுக் கழகங்கள் மின்னொளியில் வொலிபோல் விளையாடிக் கொண்டிருந்த, மின்சாரம் இருந்த பழைய யாழ்ப்பாணம்.

அக்காலத்திலே மழையும் பெய்யாத, வெயிலும் கடுமையாக எறிக்காத ஒரு நாளில், நான் என்பாட்டுக்கு எதோ ஒரு ரியூசன் சென்ரருக்கு முன்னாலே நடந்து போய்க் கொண்டிருந்தேனாம். முதல் நாள்தான் பியோர் மத்ஸ் வாத்தியார் என்னை வாங்கு வாங்கு என்று வாங்கியிருந்தார். "டேய் உனக்கு மண்டைக்கு வெளியிலை இருகிறமாதிரி மண்டைக்குள்ள ஒண்டும் இல்லை. ஏண்டா என்ரை உயிரை வாங்குகிறாய்?" என. எனக்கு மனசு சரியில்லை. ரோட்டுக்கு இந்தப் பக்க வேலியில் நின்ற ஓணானுக்கு ஏதோ பிரச்சினைபோல. தலையை ஆட்டுவதை நிறுத்திவிட்டு என்னைப் பார்த்துக் கொண்டு நின்றது. காலை ஓங்கி நிலத்தில் குத்தினேன். ஓணான் அலட்டிக்கொள்ளாமல் மெதுவாக நகர்ந்து சென்றது.


"எடி இஞ்சை பாரடி இதை!" என்று ஒரு பெண்குரல் சிந்தனையைக் குழப்பியது.
"என்னத்தை?"
"முன்னுக்கு ஒரு ஆசாமி பெண்டுகள் மாதிரி நீளமாக மயிர் வளர்த்துக் கொண்டு போகுது; ஒரு ஒற்றை ரோசாப்பூவை தலையில் வைத்தால் இன்னும் நல்லாயிருக்கும்".

பிறகு ஒரு நாலைந்து பெட்டையள் "களுக்" என்றோ 'ஈ ஈ " என்றோ சிரித்துக் கேட்டது.

எனக்குச் சுலபமாகக் கோபம் வராது, என்றாலும் இப்படிப் நாலைந்து பெட்டையள் நக்கல் விட்டால் ஆருக்குத்தான் கோபம் வராமல் விடும்? திரும்பி ஒரு கடு கடுப் பார்வையை விட்டேன். எல்லாரும் பயந்து போனாளையள். ஒருத்தி மட்டும் பயப்படாமல் 'நான் பனக்காட்டு நரி' என்றமாதிரி ஒரு பார்வையுடன் நின்று கொண்டிருந்தாள். எனக்கு விளங்கீட்டுது, இவள்தான் இந்த நக்கல்காரி என. ஆள் ஊருக்குப் புதுசு. ஆமிப்பிரச்சினை என்று குடும்பத்தோடு இடம்பெயர்ந்து ஊரில் வசிக்கிறாள்.

"ஏலுமெண்டா என்னை மாதிரி வடிவாக நீளமாக முடி வளர்த்துக் காட்டும், நான் ஒற்றை ரோசாப்பூ என்ன ஒரு கிலோ ரோசாப்புவையே உமக்கு வைக்கிறேன்" என்றேன். கொஞ்சம் வெட்கப்பட்டுக் கன்னம் சிவப்பாள் என்று பார்த்தால் ஒரு முறைப்பை மட்டும் எறிந்தாள். அப்பவெல்லாம் நான் அதிகம் தமிழ்ப் படங்களைப் பார்ப்பேன். அதன் விளைவோ தெரியவில்லை, அடுத்து இவளோடு 'லா லா' என்று பாடிக் கொண்டு திரியிறமாதிரி கனவுகளும் வரத் தொடங்கியது. பிறகு அழுக்கும் கறளுமாக இருந்த என் சைக்கிளை தேங்காயெண்ணெய் மண்ணெண்ணெய் எல்லாம் போட்டுப் பொலிஷ் பண்ணினேன். தலைக்கு மட்டும் இதுநாள் வரை போட்டுக் கொண்டிருந்த நல்லெண்ணையை நிறுத்தினேன். சேட்டு மட்டுமில்லை , சாரத்தையும் அயர்ன் பண்ணி அணியத் தொடங்கினேன்.

பிறகென்ன அந்தக் கால யாழ்ப்பாணக் காவாலிகளின் வரைவிலக்கணப்படி 'சைக்கிளில் பின்னுக்குச் சுத்தினேன் , பிறகு ஒருநாள் காய்ச்சல் என்று வீட்டில் ஓய்வெடுக்கும்போது "என் ஒற்றை ரோசாப்பூவே, செல்லமே அதுவே இதுவே .. " என்று கன்னா பின்னா என்று ஒரு கடுதாசியை எழுதினேன். தனியாகக் கொண்டுபோய்த் குடுக்கத் தைரியம் இல்லை. "டேய் எனக்குப் பயமாக் கிடக்குது, நீயும் வாடா" என்று விக்கியைக் கேட்டேன். கனக்கப் பிகு பண்ணினான். அச்சுவேலி ராஜா கபே'யில் ரோல்ஸ் உம் வடையும் பிளேன் ரீ'யும் வாங்கித் தருவதாக ஆசை காட்டிச் சரிப் பண்ணினேன். ஒருநாள் இரண்டு பேரும் சைக்கிளில் வெளிக்கிட்டு சின்ன வாசிகைசாலையைத் தாண்டி புளியமரச் சந்திக்குக் கிட்ட வந்தாச்சு. அப்ப பார்த்தால் எதிர்பார்த்தமாதிரி இவள் சுகந்தி ரியூசன் முடிந்து வந்து கொண்டிருந்தாள். பக்கத்திலே வழமையாக வருகிற தோழியரைக் காணவில்லை. சேட்டுப் பொக்கற்றுக்குள் கடதாசி, வெளியே எடுக்க முடியவில்லை. கை நடுங்கியது. தொண்டை உலர்ந்தது. இவன் விக்கியைப் பார்த்தேன். ஆள் என்னைவிடப் பயந்துபோனான். "டேய் எனக்கு வயத்தைக் கலக்குது, நான் வீட்டை போப்போறன்" என்றுவிட்டுப் பதிலை எதிர்பார்க்காமல் சைக்கிளைத் திருப்பிக்கொண்டு போய்விட்டான்.

"சரி இதுவும் நல்லதுக்குத்தான், 'கடுதாசு கொடுக்கிறது' மாதிரி சரித்திரப் பிரசித்தி வாய்ந்த சம்பவங்களுக்குச் சாட்சி வைத்துக்கொண்டா செய்வார்கள்?" என்று யோசித்துக் கொண்டேன். கொஞ்சக் காலத்துக்கு முன் ரூட் கிளியர் ஆக்கிய சேந்தன் அண்ணா எல்லாம் என்னை விடப் பயந்தாங்கொள்ளி, நான் மட்டும் என்ன குறைவா? என்று துணிச்சலை வரவழைச்சுக் கொண்டு "இந்தா பிடியும், உமக்கொரு கடதாசி வந்திருக்குது" என்று அவசரமாக நாலாக மடித்து வைத்திருந்த அதைக் கொடுத்தேன்.

"எப்பங்காணும் தபால்காரன் வேலை பாக்கத் தொடங்கின்னீர்?" என்று கண்களை நேரில் பார்த்துக் கொண்டு கேட்டாள். என்றாலும் 'தபாலை' வாங்கத் தயங்கவில்லை.

அந்த இடத்திலேயே வைத்து வாசித்தாள் , பிறகு "கிலோக் கணக்கில் இருந்து இப்ப ஒற்றை ரோசாப் பூவாச்சு, சரியான கஞ்சன் நீர்" என்றாள். பிறகென்ன...?

வீட்டை வந்தாப் பிறகு அக்கா மட்டும் "ஏன்டா இண்டைக்கு இலுப்பெண்ணை குடிச்ச கழுதை மாதிரி முகத்தை வச்சிருக்கிறாய்?" என்று கேட்டாள்.


*************

எனக்கு ஞாபகம் இருந்த நாளில் இருந்தே எனக்கு இந்த முடியுடன் பிரச்சினைதான்; சின்ன வயசில் பார்பர் நல்லையா "தம்பி சாப்பிடறது எல்லாம் முடிக்குத்தான் போகுது போல, உடம்பு வளரக் காணல்லை, முடி மட்டும் அளவு கணக்கிலாமல் வளருது" என்று அலுத்துக் கொண்டுதான் முடி வெட்டத் தொடங்குவார். எனக்கு முடி வெட்டுவது பிடிக்காது, பெண்களை மாதிரி ஆண்களுக்கும் நீளமாக முடி வளர்க்கும் உரிமை வேண்டும் என்று சின்ன வயதுகளிலே யோசிக்கத் தொடங்க்கிவிட்டேன். ஆனால், இதற்கு சில வில்லன்கள். ஒன்று அப்பா. மகன் நீளமாக முடி வளர்த்தால் காவாலியாக விடுவான் என்று ஒரு தப்பான கொள்கை வைத்திருந்தார். மற்றது பள்ளிக்கூடப் பிரின்சிபால் மற்றும் வாத்தியார்கள். இவர்கள் எல்லாம் என் முடிக்குச் சவாலாக இருந்தபடியால் வளர்ந்து இளந்தாரியாக ஆகுமட்டும் "முடியிழந்த" மன்னனாகத்தான் திரிய முடிந்தது.

என்றாலும் தலையில் முடி காட்டுத்தனமாக வளர்ந்ததால் பேன் , பொடுகு என்று கஷ்டப்படுவேன். அம்மாவும் அப்பாவும் மாறி மாறிப் பேன் பார்ப்பார்கள். அப்பா என்றால் பேன்சீப்பால் ஊன்றித் தலையை இழுப்பார். வலிக்கும். பிறகு சீப்பை முகத்தில் இருந்து நாலடி தள்ளிப் பிடித்துப் பார்ப்பார். சீப்பின் பல்லுகளுக்கு இடையில் மாட்டிக் கொண்டிருக்கும் கொழுத்த பேன்களை விரல்களால் வெளியே எடுத்து சீமெந்துத் தரையில் விடுவார்.

"பார்! பண்டிக்குட்டி சைசில் பேன்கள் . நீ சாப்பிட்டுகிறதெல்லாம் பேன்களுக்குத்தான் போகுது" என்றுவிட்டு தரையில் இருக்கும் பேன்களை நகத்தால் தரையுடன் சேர்த்து 'டிக் டிக்' என்று சத்தம் வர நசிப்பார்

"இவனுக்கு மொட்டை போட்டால்தான் சரி" என்று இலவச இணைப்பாக வயிற்றில் புளியையும் கரைப்பார்.

அம்மா பேன் பார்ப்பது ஒரு அழகு.

"வாடா பேன் பார்க்க" என்று கூப்பிட்டா என்றால் நான் மினக்கெடாமல்  அம்மாவின் மடியில் தலை வைத்துப் படுத்து விடுவேன்.

"என்ரை பெடிக்கு ஐயா மாதிரி அடர்த்தியான தலைமயிர்" என்று சொல்லிக்கொண்டு பெரிய பல்லுகள் உள்ள சீப்பால் தலையை வாரத்தொடங்குவா.

"மூளையும் கொப்பன் மாதிரி இல்லாவிட்டால் சரிதான்" என்று அப்பா தொடங்குவார். (மாமியார் மருமகள் பிரச்சினைமாதிரி மாமனார் மருமகன் பிரச்சினை இருக்கக் கூடாதா என்ன?)

அப்பாவும் அம்மாவும் சண்டைபிடிக்க நான் அம்மா மடியில் நித்திரை கொண்டுவிடுவேன்.

நான் வளர வளர உடம்பு வைத்ததுமாதிரி எல்லாம் இல்லை. தலைமயிர் மட்டும் காட்டுத்தனமாக வளரத் தொடங்கியது. தலையில் கடிக்குது என்று சொறிந்தால் நகம் தலையில் படாது, அவ்வளவு அடர்த்தி என் முடி. மலிவான சீப்பைத் தலைவாரப் பாவித்தால், அது முறிந்துவிடும். அப்பா சின்னக்கடையிலே தெரிந்த ஒரு சோனகக் கடையிலே சொல்லி, கொழும்பில் இருந்து எடுப்பித்த ஒரு ஜேர்மன் பிராண்ட் சீப்புத்தான் என் பாவனைக்கு. எனக்குத் தெரியாமல் அக்காகூட அந்தச் சீப்பை எடுத்தால் பெரிய சண்டை வரும். பள்ளிக்கூடத்தில் கூட சமூகக்கல்வி வாத்தியார் "டேய் பெருமுடி மன்னா, சூயஸ் கால்வாய் ஆர் எப்ப வெட்டினது?" என்றுதான் அறுப்பார். கேள்வி மாறும் ஆனால் தொடங்குவது எப்பவும் 'டேய் பெருமுடி.." என்று. இப்படி எனக்கு முடிப் பிரச்சினைகள் கூடக்கூட எனக்கு வழுக்கையரின் மேல் ஒரு சின்னப் பொறாமை வரத் தொடங்கியது. வாழ்க்கை எவ்வளவு சுலபமானது அவர்கட்கு?, பேன் இல்லை, தலையில் அரிப்பு இல்லை. தலைக்கு எண்ணை வார்க்கத் தேவையில்லை. தலைமுடி குழம்பி இருக்கா இல்லையா என்று கவலைப்படத் தேவையில்லை. நமக்குக் கொடுத்து வைத்தது இவ்வளவுதான் என்று பெருமூச்சு விடுவேன்.

*************

முடியுடன் எனக்குப் பிரச்சினை இருந்தாலும் சுகந்தியுடன் பிரச்சினைகள் இல்லை, ஒன்றைத் தவிர. இவளுக்கு என் முடியின் நீளத்தைக் குறைக்கவேண்டும் என்பதில்மட்டும் ஒரு பிடிவாதம். "உப்பிடி நீளமாக மயிர் வளைர்ப்பது எல்லாம் தியாகராஜ பாகவதர் காலம் பாரும், இப்ப கட்டையாக வெட்டுவதுதான் ஸ்ரையில்" என்று மெதுவாக ஒரு ஊக்கி தந்தாள். நான் புரியாததுமாதிரி இருந்துவிட்டேன். பிறகு நேரடியாக சொல்லிவிட்டாள், "தலை மயிர் சேட்டுக் கொலரிலை முட்டாத அளவிற்கு வெட்டவேண்டும்" என்று. அதுவும் சரிவரவில்லை. கடைசியாக இன்னொரு பாணத்தையும் எடுத்துவிட்டாள். "உங்களுக்கு சேந்தன் அண்ணாவைத் தெரியும் தானே? அவர் அவற்றை ஆள் சொல்லிப் போட்டுது என்று நாலு வருசமா வளத்த தாடியையே ஒரு நாளில் வழிச்சுக் போட்டாராம், உங்களுக்கு சலூன் போய் மனுசன் மாதிரி ஒரு ஸ்ரையிலிலே முடி வெட்டத் தெரியவில்லை" எனச் சிணுங்கினாள். அப்ப அவளின் காதில் இருந்த தொங்கட்டானும் சிணுங்கிய மாதிரி இருந்தது. அடுத்தநாட்தான் கனகாலத்திற்குப் பிறகு நான் அசோகன் சலூனிலை முடி வெட்டினேன். வெட்டினாப்பிறகு எனக்குப் என்னையே பார்க்கச் சிரிப்பாக இருந்தது. படலையைத் திறந்துகொண்டு வீட்டுக்குள் நுளைய அக்கா கத்தினாள்

"அம்மோய் இஞ்சை பார் தம்பியின்ரை சாயலில ஆனா ஆனால் சகிக்கக் கூடிய முகச் சாயலில் ஒண்டு வந்து நிக்குது. உனக்கு ஆரெண்டு தெரியுதே?" என்று.

நான் எல்லாப் பல்லும் தெரிய "ஈ ஈ" என்று முகத்தை அஷ்டகோணலாக்கி அழகு காட்டிவிட்டு "அம்மா பிளேண் ரீ போடேலுமே?" என்று கத்தினேன். தம்பி ஒரு நமுட்டுச் சிரிப்புடன் தலையைப் பார்த்தான். அவனுக்குப் பதினான்கு வயதிலேயே முடி கொட்டத் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு நாளும் பச்சை எலுமிச்சங்காயைத் தலையில் தேய்த்து, அரை மணித்தியாலம் ஊறவிட்டு கிணற்று நீரில் தலை முழுகினால் முடி வளரும் என்று யாரோ சொன்னதால், வீட்டில் கறிக்கு வாங்கிய எலுமிச்சங்காய்களை ஒரு கை பார்க்கிறான். இப்ப கீரைக்கறிக்குக்கூட எலுமிச்சம் புளி விடமுடிவதில்லை. எல்லாவற்றையும் 'முடிவளர்ச்சித் தைலமாகப்' பாவித்துத் தீர்க்கிறான்.

கிணற்றடிக்கு வந்தேன், கொஞ்சம் மழைக் குணமாக இருந்தது. கிணற்றடியில் தென்னை, வாழைகள், இப்பில் இப்பில், பிறகு சின்னத் தம்பி நட்டிருந்த 'நாலு மணிச் செடி' , சீனியாஸ் செடிகள் என்று பச்சைப் பசேல் என்று இருந்தது. தலையிற் கிணற்றுத் தண்ணீர் படச் சிலீரென்று ஒரு புது உணர்வாக இருந்தது. அள்ளிஅள்ளித் தலையில் வார்க்க அடங்காத சிலிர்ப்பு. கிணற்றுத் துலாவில் இருந்து அணில் ஒன்று தாவி ஓடியது. ஒரு கவிதை எழுதலாம் போல் ஒரு வேகம். எல்லாம் அப்பா மீன் வாங்கிக்கொண்டு சைக்கிளில் திரும்பி வரும்போது நோ(ர்)மலுக்கு வந்தது.அப்பா என் தலையை விசித்திரமாகப் பார்த்தார். பிறகு ஒன்றும் பறையாமல் போய்விட்டார்.

கண்ணாடியில் என்னைப் பார்க்கும்தோது ஏனோ பண்டைக்காலங்களில் பெண்களால் முடியிழந்த மன்னர்கள் ஞாபகத்திற்கு வந்து போனார்கள். அப்போதே ஒரு முடிவு எடுத்தேன் 'இனி என் தலைமயிரை இப்படிக் கட்டையாக வெட்டுவது இல்லை" என.

*************

இப்படியே என் முடிப் பிரச்சினையும் திரௌபதியின் சேலை மாதிரி நீண்டு கொண்டு போனது. நான் இவளைக் கட்டி பிள்ளை குட்டிகள் பெத்து, நாப்பதைத் தாண்டினாலும் தலையில் முடி மட்டும் மற்ற நாற்பது பிளஸ் பேர்வழிகள் மாதிரிக் கொட்டவில்லை. பதிலாக முடி இன்னும் செழித்து வளரத் தொடங்கியது. சுகந்தி பயப்படத் தொடங்கினாள். "பேய் கீய் பிடித்துவிட்டதோ" என்று பயப்படுவதாகச் சொன்னாள். "நீ பக்கத்தை இருக்கேக்க எந்தப் பேய் கிட்ட வரும்?" என்று கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துக் கடி ஜோக்கை எடுத்து விட்டேன்.

"நான் சீரியஸ்சாக கதைக்க நீ நக்கல் விடுறாய் என்ன?" என்று கோவித்துக் கொண்டாள். பிரச்சினை அப்போதைக்கு முடிவுக்கு வந்தது. . இவள் "நீ' என்று விளித்தால் ஆள் கோபமாக இல்லை எனப் பொருள் படும் என்று அர்த்தம் . "நீர்" என்றால் கொஞ்சம் வில்லங்கம் . "நீங்கள்" என்றால் விருந்தினர் இருக்கிறார்கள் என்று அர்த்தம் -இல்லாவிட்டால் குழந்தைகள் காது கேட்குமிடத்தில் இருக்கிறார்கள். அடுத்தநாள் குண்டொன்றைத் தூக்கிப்போட்டாள்.

"இஞ்சரப்பா?"

"என்ன?"

"முடி நீக்கல் சிகிச்சை எண்டு ஒண்டைக் கேள்விப்பட்டனீங்களே?"

"என்னது கொப்பர் சொன்னவரே?"

"அந்தாளை இழுக்காட்டி உங்களுக்குத் திண்டது செமிக்காது என்ன?"

"சரி இருக்கட்டும், அதென்ன முடியகற்றும் சிகிச்சை?

"முடி நாட்டும் சிகிச்சை மாதிரி, இது அதுக்கு எதிர்!"

"ம்ம்ம்ம்ம்.."

"சரி இருக்கட்டும் எப்ப போறம்?"

"எங்கை?"

"விடிய விடிய ராமாயணாம், விடிஞ்சாப்போலை ராமன் சீதைக்குச் சித்தப்பா எண்ட மாதிரி...."

"சும்மா இரடி, ராமன் சீதைக்குச் சித்தப்பனாக இருந்தால் தப்பிப் பிழைச்சிருப்பான், எங்கைவது நிம்மதியாக...."

முடிவாக "3டி முடியகற்றும்" நிலையத்திற்கு போவது என்று ஒத்துக்கொண்டேன்.

"3டி முடியகற்றகம்" ரவுணில ஒரு ஹைஃபை'யான ஒரிடத்தில் இருந்தது. ஆரம்ம கொன்சல்ரிங் இலவசம். என்றாலும் பப்பளா என்றிருந்த கட்டடமும், குளுகுளு ஏசி'யும் நிறையைச் செலவு வைப்பார்கள் என்று தோன்றியது.

"திரும்பிப் போவமா?" என்று நைசாக நழுவும் ஐடியாவில் சுகந்தியைக் கேட்டேன். பதில் ஒன்றும் பேசாமல் அவள் முறைத்த முறைப்பில் கப்சிப் என்று இருந்துவிட்டேன். அதிகம் காத்திருக்க வைக்காமல் பெயரைக் கூப்பிட்டார்கள்.

கதவைத் திறந்து கொண்டு உள்ளிட்டால், "ஹாய் ஐ ஆம் தமாரா " என்று உதட்டுச் சாயம் கலையாத உச்சரிப்பில் அறிமுகப்படுத்தியவளை இவளுக்குப் பிடிக்கவில்லை என்று புரிந்தது. தன் அடர்த்தியான கூந்தலைத் தோள்வரை'தான் வளரவிட்டிருந்தாள்.

"சரி சொல்லுங்கோ.. " என்று தொடங்கினாள்.

"இவருக்கு 40 வயது கடந்தும், முடி இன்னும் காட்டுத்தனமாக வளருது, அதுதான் பேப்பரில உங்கடை விளம்பரத்தைப் பார்தனாங்கள்; வந்தம்" என்று உற்சாகமில்லாமல் தொடங்கினாள்.

"தலைமுடி எவ்வளவு அடர்த்தி என்று பார்ப்போம்" என்று ஹெல்மெட்  மாதிரி, ஆனால் இன்னும் சிக்கலான ஒரு கருவியைத் தலையில் மாட்டினாள் .
"நல்ல அடர்த்திதான், உங்கடை தலையிலை ஒரு ரோசாப்பூவை வைத்து அழகு பார்க்கலாம் போலுள்ளது. ... அவ்வளவு அடர்த்தி; பரவாயில்லை, குறைத்துவிடலாம், தொடர்ந்து சிகிச்சை எடுக்கவேண்டும்" என்று சொல்லத் தொடங்க, சுகந்தியின் முகம் கடு கடு என்று மாறியது.

படிரென்று எழுந்தாள். "வீட்டை போவோம்" என்று என்னை இழுக்காத குறையாக இழுத்துக்கொண்டு வெளியே வந்தாள்.


*************


"சரி அடுத்த அப்பொயின்ட்மன்ட் எப்ப?" என்று கண்ணைச் சிமிட்டினேன்.

"நான் வரல்லை, விருப்பம் என்றால் நீங்கள் போட்டுவாங்கோ" என்றாள் கொஞ்சம் வெட்கத்தோடு. முதல்நாள் கொஞ்சம் சிறுபிள்ளைத்தனமாக நடந்தது உறுத்தியிருக்க வேண்டும்.

"எனக்கு விருப்பமில்லை. நீ இப்ப பேன் பார்த்துவிட்டால் போதும்" என்றேன்.

"சரி" என்றாள்.

நான் மினக்கெடாமல் இவளின் மடியில் தலை வைத்துப்படுத்தேன்.

என் நீண்ட 'கூந்தலை'ப் பிரித்து பேன்களைத் தேடத் தொடங்கினாள்.

"அம்மா எனக்கும் பேன் கடிக்குது" என்றான் மூத்தவன்.

"எனக்கும்" என்றான் சின்னவன்.

கண்ணைச் சுழற்றிக்கொண்டு வந்தது நித்திரை.