Monday, June 30, 2014

புது மாப்பிள்ளைகள்

இது புது மாப்பிள்ளைகளுக்கும் முன்னாள் புது மாப்பிள்ளைகளுக்கும் ஆனது.

புது மாப்பிள்ளைகளை எப்படி வரைவிலக்கணம் செய்யலாம் என்பது சர்ச்சைக்கு உரியது.
கல்யாண நாளுக்கு 'சில' மாதங்கள் முன்னாலும் பின்னாலும் இருக்கும் ஆண்கள் எனலாம். சிலருக்கு 'சில' என்பது எழுபது எண்பது வரை போவது ஒரு உளச் சிக்கல்.
என்றாலும் "என்ன ஆள் கொஞ்சம் மினு மினுப்பாக இருக்கிற மாதிரி இருக்கு? கல்யாணாம் கில்யாணம் எதாவது ஃபிக்ஸ்டோ" என்று ஆராவது ஆரம்பித்து வைக்க ஆள் கொஞ்சம் வெட்கப்பட்டுச் சிரித்தால் அவர் புதுமாப்பிள்ளையாக ரெடி ஆகின்றார் என அனுமானிக்கலாம்.

புதுமாப்பிளைகளுக்கு முழங்காலுக்குக் கீழ் எதுவும் இருப்பதுமாதிரி இராது. ஏதோ மிதப்பதுபோல் திரிவார்கள். எந்தநேரமும் எதையோ யோசித்துச் சிரித்துக் கொண்டிருப்பார்கள். (மற்றவர்களுக்கு அசட்டுச் சிரிப்பு மாதிரி இருக்கும்). சந்தியில் இருக்கிற ரொட்டிக் கடையில் சாதாரணமாக எட்டுப்பத்துச் சிநேகிதங்களுடன்கள்தான் பிளேன் ரீ என்றாலும் குடிக்கும் இவர் இப்போது புது மாப்பிள்ளை -தனியாகத்தான் ரீ குடிப்பார். நண்பர்களைக் கெட்டித்தனமாகக் காய் வெட்டி விடுவார். யாராவது கேட்டால், "இவங்கடை நக்கல் தாங்க முடியல்லை" என்பார். அது உண்மையல்ல, இவருக்குத் தனிமையியே கொஞ்சம் "திங்" பண்ண வேண்டும் என்பதுதான் காரணம்.

நேற்று வரைக்கும் ட்ரவுசர், சேர்ட் , சாரம், அது இது என்று எதையும் தோய்த்துத்தான் அணிய வேண்டும் என்று இவனுக்குத் தெரியுமா என்று மற்றவர்களை எண்ண வைத்திருப்பார் பெரியவர். இப்போது சைவ சமய பாடப் புத்தகத்தில் "கோவிலுக்கு எப்படிப் போக வேண்டும்?" என்பதற்குப் விடையான "நன்றாகக் குளித்துத் தோய்த்துலர்ந்த ஆடைகளை அணிந்து.." என்பதனை ஞாபகம் ஊட்டுவார்கள். கூடுதலாக "இஸ்திரி" போடும் வேலையையும் செவ்வனே செய்திருப்பார்கள்.

புது மாப்பிள்ளைகள் சவரம் செய்வது என்பது தனித் தலைப்பு வைத்து எழுத வேண்டிய ஒன்று. எனக்குத் தெரிந்த அண்ணா ஒருவர், 'தமிழீழம் கிடைத்தாலென்ன கிடைக்காட்டிலென்ன தாடியை வழிக்க மாட்டேன்' என்று வீர சபதம் போட்டிருந்தார். அப்பா, அம்மா, தாத்தா, ஆச்சி, கெமிஸ்ரி வாத்தியார், பிஸிக்ஸ் வாத்தியார் என்று எல்லாரும் இதைத்தான் சொன்னார்கள், "சகிக்கேல்லை". ஆனால் அண்ணனின் தாடி மட்டும் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமோ என்னவோ அதுமாதிரி வளர்ந்தது. "காதல் தோல்வி" என்றும் ஊரில் ஒரு கதை கிளம்பியது. (பின்னாட்களில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அவரின் தாடியை விட வேகமாக வளர்ந்த இன்னொன்று என்றால் அவரின் காதல்தான் என்று தெரிந்தது).

ஆயிற்று அண்ணன் புது மாப்பிள்ளையானர். ஒரு பின்னேர நேரம் அண்ணி சொன்னா "இதென்ன ஒரு தாடி, இதை அடுத்தமுறை வரமுன்னே வழிக்கவேண்டும்" என்று. அண்ணனுக்கு ரோஷம் பொத்திக் கொண்டு வந்தது. விறுவிறு என்று சொல்லிக் கொள்ளாமல் நடையைக் கட்டினார். சூடாகி விட்டார் என்றுதான் அண்ணியும் நினைத்திருப்பா. ஆனால் அடுத்த அரை மணி நேரத்தில் அண்ணனின் தாடி காலி.

இது இன்னொரு கேஸ். இவர் இன்னை விடச் சிறியவர். எனவே தம்பி என்போம். தம்பிக்கு முகத்தில் முடி குறைவு. இரண்டு மூன்று முறை மீசை வளர்க்க முயற்சித்துத் தோல்வியடைந்து ஒரு ராஜதந்திரப் பின்வாங்கல் முடிவு ஒன்று எடுத்தார். "டீசன்ட் வேலை பாக்கிறவங்கள் க்ளீன் ஷேவ் ஆகத்தான் இருக்கவேண்டும்" என. இவரும் ஒரு நல்ல நாளில் புது மாப்பிள்ளையானார். "உங்களுக்கு பிரஞ்ச் தாடி வைச்சால் நல்லாயிருக்கும்" என்று அவா சொல்ல, இவர் உண்மையில் சூடானார். சூடாகி என்ன? ஆத்திரத்தை முகநூலில் நிலைத்தகவல் ஆக்கி ஒரு இருபத்து மூன்று லைக்குகள் வாங்கினார். அதில் ஒன்று அவரின் அம்மா இட்டது.

அண்மைக்காலப் புது மாப்பிள்ளைகள் சிலரைப் முகநூலில் அவதானிக்க முடிந்தது. காலையில் எழுந்து பல்லுத் தீட்டி, நீராடி, தேத்தண்ணி பாண் என்பவற்றை வயிற்றினுள் தள்ள முன்னரே முகநூலில் நிலைத்தகவல் போடுவார்கள். "It is so cold outside, but roses on my desk are beautiful- Handsome boy, the poet" என்ற கணக்கில். அதுக்கு எழுநூற்று அம்பத்தைஞ்சு 'லைக்குகள்' (அதில் ஒன்று நான் போட்டது). ஒவ்வொரு மணித்தியாலமும் ஒரு நிலைத்தகவல் போடுவார். தம்பிக்குக் கல்யாணம் ஆச்சு. பெண்டாட்டி ஒரே ஒரு வேலைதான் செய்தா. இந்த லைக்'குகளில் எததனை ஆண்கள் போட்டது, எத்தனை பெண்கள் போட்டது என்று ஒரு ஒரு excel sheet இலே இரு சின்ன ஆராய்ச்சி தொடங்கினா. தம்பியை இப்ப முகநூல் பக்கம் காணவில்லை. இது இப்படி என்றால் இப்ப கல்யாணம் ஆன ஒரு பதிவரைப் பற்றி எழுதி நான் அடி வாங்க ஆயத்தம் இல்லை. போனமுறை கண்டபோது தான் ஜிம்'இல் செய்யும் உடற்பயிற்சிகளைப் பற்றி ஒரு சின்ன வகுப்பு எடுத்து விட்டுத்தான் போனார். எதுவும் விளங்கவில்லை என்றாலும் பாரமான இரும்புகளைத் தூக்குகிறார், தள்ளுகிறார், இழுக்கிறார் என்று புரிந்தது. பிசகு வந்தால் ஓடித்தப்பலாம் என்றால் அன்பர் ஒவ்வொரு நாளும் முப்பது நாப்பது நிமிடங்கள் ஓட்டப் பயிற்சியும் செய்கிறாராம். வம்பெதற்கு?

***************************

Sunday, June 29, 2014

ஓடக்காரனும் தோழரும் (சற்றுப் பெரிய குட்டிக் கதை)

தோழர் என்று அறியப்பட்ட பரமார்த்த செந்தமிழன் முற்றும் கற்ற ஒரு மார்க்ஸிய அறிஞர். தடித் தடியான சிவப்பு மட்டைப் புத்தகங்களை முதற் பக்கத்தில் இருந்து கடைசிப்பக்கம் வரை ஒருவித கொள்கை வெறியோடு படித்துத்தீர்த்தவர். அதுகாரணமாகவோ என்னவோ அவர் முகத்தில் ஒரு அறிவுக்களை எப்பவும் வீசும், எப்பவாவது முறையாகப் பனங்கள் அடித்தநாட்களில் மட்டும் இந்த அறிவுக்களை இன்னும் அதிகமாகும்.

ஒரு நன்னாளில் தோழருக்கு கடலின் இக்கரையிலிருந்து அக்கரைக்குப் போக வேண்டிய தேவை உண்டாயிற்று. முள்ளுப் பற்றைகள், மணல் வெளிகள் எல்லாம் தாண்டி இக்கரைக்கு வந்தார் தோழர். அக்காலங்களில் அக்கடலைக் கடந்து அந்தப் பக்கம் போவது ஒரு பயங்கர ரிஸ்க்கான விடயம். மேலேயிருந்து ஹெலி சுடும். நேவிக்காரன் ஷெல் அடிப்பான்; அல்லது பென்னாம் பெரிய கலிபர் துவக்கால் எட்ட நின்று சுடுவான். சனங்கள் இதுக்குப் பயந்தால் என்ன பயப்படாவிட்டால் என்ன இக்கரையிலிருந்து அக்கரை போகவேண்டிய தேவை. வள்ளக்காரர்கள் கரையில் நிற்பார்கள். நாலைந்து பேரிலிருந்து, பத்துப் பதினைந்துபேர்வரை கொள்ளக்கூடிய வள்ளங்கள் சேவையில் இருக்கும். அன்றைக்கு முதல் நாளில் போன வள்ளங்களை ஹெலி துரத்தித் துரத்திச் சுட்டதில் எட்டுப் பத்துப்பேர் பலி. இன்னும் எட்டுப் பத்துப் பேருக்குக் காயம். அதனால் அன்று படகோட்டிகள் யாரும் இல்லை. முதல் நாள் உதயன் பேப்பரில் தலைப்புச் செய்தியே இதுதான்.

தோழர் உள்ளூர் விடயங்களில் அவ்வளவு அக்கறை காட்டுவதில்லை. கியூபா, பழைய சோவியத் யூனியன், வியட்னாம் என்று அவர் சிந்திக்கும் தளமே வேறு. கரையில் சனஞ்சஞ்சடி குறைவாக இருப்பதால் ஏதோ சம்பவங்கள் நேற்று நடந்திருக்கலாம் என்று ஊகித்தார். சரி படகோட்டி ஒருவன் தன்னும் இன்றைக்கு வர விடாமலா போகின்றான்? என்று அங்கலாய்ப்போடு கடற்கரையில் இருந்த தென்னை மரத்தில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டு 'அன்னா கரீனினா' வை பன்னிரண்டாம் முறை வாசிக்கத் தொடங்கினார்.

மெலிதாக வீசும் கடற்கரை உப்புக் காற்று, தூரத்தே இருட்டில் தெரிந்த தென்னங்கூடல், பெயர் தெரிந்த தெரியாத விலங்குகள்/பூச்சிகளின் இரைச்சல், மற்றும் கடலில் இருந்து வந்த வாசனைகள் எதுவும் தோழரின் மனத்தில் படவில்லை. இன்றைக்குக் கடல் இரைச்சல் வேறு அதிகமாக இருந்தது இவர் தன்னை மறந்து புத்தகத்தில் மூழ்கிப் போனார். யாரோ மெலிதாகத் தோளில் தட்டுவது புரிந்ததும் திடுக்கிட்டு துள்ளி எழுந்தார்.

"தம்பி, வள்ளத்திற்கு காத்திருக்கிற மாதிரி இருக்கு.." என்று கேட்ட ஆசாமிக்கு சுமார் ஐம்பது வயதிருக்காலம். பெயர் சீனித்தம்பி, சுருக்கமாகச் சீனி. உறுதியான ஆனால் சற்று வரண்ட உடல்வாகு. "ஐஞ்சியாங் காசு உழைக்க லாயக்கில்லை, இரவிலை சுரண்டுறதுக்கு மட்டும் குறைச்சல் இல்லை" என்று பெண்டாட்டி வழக்கம்போல் டோஸ் கொடுத்ததால் இன்றைக்கு மட்டும் ரோஷம் பொத்திக் கொண்டு வர ' ஐந்நூறு ரூபாக் காசாவது உழைக்காமல் வீட்டுக்கு வருவதில்லை' என்று திட சங்கற்பற்பத்தோடு வீட்டைவிட்டு வந்திருந்தார்.

"ஓம் தோழர் அந்தப் பக்கம் போகலாமே?" என்றார் தோழர். இது நடந்தது தாடி வைத்த - பீடி குடிக்கிற எல்லாரும் தம்மைத் தானே கொம்யூனிஸ்ட் என்று நம்பிக் கொண்டு தில்லாகத் திரிந்த காலத்திற்குச் சற்றுப் பின். "தோழர்" என்று அழைக்கப்பட்டதில் சீனி வியப்பேதும் அடையவில்லை. சீனிக்குச் சின்ன வயதில் 'எறும்பு' என்று ஒரு பட்டப்பெயர் இருந்தது மட்டும் ஞாபகம் வந்தது. வாத்திமார்கள் அதேகாலத்தில் அவனை 'கணக்குப்புலி' என்று செல்லமாக அழைப்பார்கள். கணக்குப் போடுவதில் விண்ணன்தான். கல்யாணம் கட்டிய புதிசில் மனிசி செல்லமாக அழைத்த பெயரை எழுதினால் சங்கடப்படுவார். இந்தப் பெயர் வரிசையில் 'தோழர்' என்பதுவும் ஒன்றெண்டு அலுத்துக் கொண்டார்.

"தம்பி, ஐஞ்நூறு ரூபா எண்ணி வையும்," என்றார் சீனி.

"ஐந்நூறா?" என்று திடுக்கிட்ட தோழர், "உழைப்பைச் சுரண்டக் கூடாது" என்று ஞாபகம் வர அமைதியானார்.

தோழர் சாரத்தை மடித்துக் கட்டி விட்டு வள்ளத்தினுள் ஏறிக்கொண்டார். சீனி வள்ளத்தைக் கொஞ்சத்தூரம் தள்ளிக்கொண்டு சென்று பிறகு படகின்
ஒருபக்கத்தில் கைகளை ஊன்றி ஒரு எம்பு எம்பிப் படகில் குதித்தார். மாரி காலக் கடற் காற்று சில்லென்று வீசியது. தூரத்தில் புலம்பெயர்ந்து வந்த பெயர் தெரியாத பறவைகள் கூட்டங் கூட்டமாகப் பறந்து திரிந்தன. தோழர் 'பைக்கால்' ஏரியில் இதுமாதிரிப் படகுச் சவாரி செய்தால் எப்படி இருக்கும் என்று கற்பனையில் ஒருவித மம்மல் நிலைக்குப் போய்க் கொண்டிருந்தார்.

அன்றைக்குக் கடலில் அலை சற்று அதிகமாக அடித்தது. வள்ளமும் கொஞ்சம் தூக்கிப் போட்டதில் தோழர் மோகன நிலையில் இருந்து சற்று மீண்டுவந்தார். குளிருக்கு இதமாக பீடி குடிக்கவேண்டும் போல் இருந்தது. இடுப்பில் செருகி வைத்திருந்த பீடிக்கட்டைப் பிரித்து ஒன்றை வாயில் வைத்தார். இன்னொன்றை சீனித்தம்பியிடம் நீட்டனார். "தம்பி நான் கட்டினாப் பிறகு விட்டுட்டன்" என்று வழக்கமாக யாழ்ப்பாணத்துக்காரர் அநேகம்பேர் சொல்லுகிற மாதிரிச் சொன்னார்.

தோழர் தான் வாசித்த ரஷ்யக் கதைகளில் யாராவது படகோட்டி எதுவும் புகைக்காமல் இருந்தானா என்று யோசிக்க ஆரம்பித்தார்.

"தோழர், இன்றைக்கு ஐநூறு ரூபாய்கள் உழைத்துவிட்டீர், இனி இன்றைக்கு இது போதுந்தானே?" என்று கதையைத் தொடங்கினார். வெறும் பரமார்த்த செந்தமிழன் எப்ப 'தோழர் பரமார்த்த செந்தமிழன்' ஆனாரோ அன்றையிலிருந்து அவரின் பேச்சுத் தமிழும் எழுத்துத் தமிழும் கிட்டக் கிட்ட வரத் தொடங்கின. அத்தோடு, செயப்பாட்டு வினைச் சொற்களை அதிகம் பாவிக்கத் தொடங்கினார். உ+ம் "ஒடுக்கப்படுகிறார்கள், சுரண்டப்படுகிறார்கள், ஏமாற்றப்படுகிறீர்கள்". சிலவேளை இவர் பேசுவது சுவிஷேஷ நற்செய்தி கேட்பதுமாதிரி இருக்கும். இதைச் சொன்னால் பத்திரகாளியின் பெரியப்பா மாதிரியாய் விடுவார் செந்தமிழன். விட்டு விடுவோம்.

"தம்பி சூடாக்காதேயும்," சீனி சூடாகத் தொடங்கினார்.

"ஏன் தோழர்?" தோழர் நோண்டத் தொடங்கினார்.

"படகு என்ரை இல்லை. படகுச் சொந்தக் காரனுக்கு சரி பாதிக் காசு கொடுக்கோணும். அவங்களுக்கும் 2 வீதம் வரியும் குடுக்கவேணும்"

"நீங்கள் நன்றாகச் சுரண்டப் படுகிறீர்கள்!" இப்போது தோழரின் மீசை, தாடி, புஜங்கள் எல்லாம் துடிக்கத் தொடங்கின. கண்கள் சிவந்தன. குடித்துக் கொண்டிருந்த பீடியைக் கடலினுள் வீசீனார்.

"ஒவ்வொரு நாளும் நான்தான் சுரண்டுறதாகப் பெண்டாட்டி அலுத்துக் கொள்ளுறாள்" சீனி கனக்க வெட்கப் பட்டார்.

"தோழர் உங்களுக்குப் பிரச்சினை புரியவில்லை. இதுதான் பிரச்சினையே" தோழர் தொடர்ந்தார்.

"நீங்கள் கார்ல் மார்க்ஸின் மூலதனம் படித்தீர்களா?" ஆர்வத்தோடு தோழர் கேட்டார்.

"இல்லை!" படகு அலைகளில் சற்று அதிகமாக ஆடுவதைக் கவனித்துக்கொண்டே பதிலளித்தார் சீனி.

"கார்ல் மார்க்ஸ் எழுதிய வேறு ஏதாவது புத்தகங்கள் படித்தீரா?"

"இல்லை"

"லெனின், ஏங்கெல்ஸ், மாவோ எழுதிய ஏதாவது புத்தகங்கள்?"

"தம்பி, நான் சின்ன வயசில கணக்கு நல்லாச் செய்வன். கணக்கு வாத்தியார் கனக்க இங்கிலிஸ் புத்தகங்கள் தந்து பயிற்சி செய்யச் சொல்லுறவர்.. " சீனி தான் படித்த கணக்குப் புத்தகங்களை மனதில் கொண்டுவர எத்தனித்தார். ஐம்பது வயதில் மூளை முன்போல் இல்லை என்று சற்று கவலைப்பட்டார். கூடவே தன்னோடு படித்த சிலபேர் டாக்குத்தர், இஞ்சினியர் என்று இப்ப இருக்க தான் மட்டும் படகோட்ட வேண்டி வந்திட்டுது என்று ஒரு சுய பச்சாபமும் வந்துவிட்டது.

"சொச் சொச், " தோழர் தொடர்ந்தார். "உங்கள் வாழ்க்கையில், அம்பது வீதத்தை இழந்து விட்டீர்களே!!"

"தம்பி சரியாச் சொல்லுது, எனக்கு இப்ப அம்பது வயசு. நூறு வயசுக்கு இருக்க ஆசை", சீனிக்குச் சின்ன வயதில் கடியன் என்று ஒரு பெயரும் இருந்தது.

தோழர் பரமார்த்த செந்தமிழனுக்கு சீனியின் நக்கல் புரிபடவில்லை. "பொருள்முதல்வாதமும் அனுபவ விமர்சனமும், ஏகாதிபத்தியம் பற்றி, லெனினியத்தில் பிரச்சினைகள், மார்க்சியமும் மொழியியல் பிரச்சினையும், பிற்போக்குவாதிகள் பற்றி, இதில் ஏதாவது ஒன்றாவாது கேள்விப்பட்டிருக்கிறீரா?"

சீனியின் அவதானம் கடல் சற்றுப் பொங்குவதிலும் படகின் ஆட்டத்தைச் சரிப் பண்ணுவதிலும் இருந்தது. "இது எந்தப் பள்ளிக்கூடத்தில தம்பி சொல்லிக் கொடுக்கிறங்கள்?" என்றார் அசுவாரசியமாக.

"ஐயா, இதெல்லாம் பள்ளிக்கூடத்திலை சொல்லிக் கொடுக்கிறதில்லை. முதலாளித்துவ கல்வித்திட்டத்திலை உங்களுக்குத் தேவையில்லாதவற்றைத் தான் சொல்லிக்கொடுக்கிறர்கள். தேவையான ஒன்றையும் படிக்கவில்லை. உங்கள் வாழ்வில் எழுவது வீதததை இழந்துவிட்டீர்களே?" என்றார் பரமார்த்த செந்தமிழன் நக்கலாக.

கடலில் அலை இன்னும் வேகமாக அடிக்கத் தொடங்கியது. காற்றும் பலமாக வீசத் தொடங்கியது. படகு மேலும் கீழுமாகவும் பக்கப் பாட்டாகவும் ஆடத் தொடங்கியது. படகு கவிழ்ந்து விடப் போதுதோ என்று தோழரும் பயந்தார்.

அப்போதுதான் சீனித்தம்பி முதல்முறையாகத் 'தோழர்' என்ற வார்த்தையைப் பாவித்தார்.

"தோழர், உங்களுக்கு நீந்தத் தெரியுமா?"

"இல்லையே" என்றார் தோழர் பரிதாபமாக

"அப்ப உங்கள் வாழ்க்கையில் நூறு வீதத்தையும் இழக்கப் போகிறீர்களே!" என்றுவிட்டுச் சீனித்தம்பி கடலில் குதித்து நீந்தலானார்.


-------------------------------------------
பொறுப்பாகாமை: இது ஒரு கற்பனைக் கதை. உயிரோடு இருப்பவர்கள், இறந்தவர்கள், அல்லது அயிராக அலைபவர்கள் எவரையும் குறிக்கவில்லை. அத்தோடு பல்வேறு இஸவாதிகள், நிலைவாதிகள், குழப்பவாதிகள், திரிபுவாதிகள், திரியாதவாதிகள், ஃப்பேஸ்புக் சிந்தனைவாதிகள், மற்றும் அப்பாவிகள், அப்பாவிகள் அல்லாதோர் எவரையும் குறிக்கவில்லை. மேலும் யாராவது மேலே உள்ள பட்டியலில் விடுபட்டிருந்தால், அவர்களையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகமோ இக்கதை குறிப்பிடவில்லை என்று கூறிக்கொள்கிறேன்.

அயிர்- (பெயர்ச்சொல்)
1. zombie என்பதற்கான தமிழ் வார்த்தை. சத்தியமாக இது நான் உண்டாக்கிய தமிழ் வார்த்தை. எழுத்தாளர் ஜெயமோகனிடம் இருந்து திருடப்படவில்லை.
2. வெல்லம் ( 1. இற்குத் தொடர்பற்றது)


கனக்க- நிறைய