Tuesday, April 12, 2011

"-------" கள் தினம்.

காலையில் எழுந்ததில் இருந்து எல்லாம் வித்தியாசமாக இருந்தது. மனைவி போட்டுத்தந்த தேத்தண்ணி தேவாமிருதமாக இருந்தது. அதைக் குடித்துப் போட்டு இன்னுமொரு குட்டிப் தூக்கம் போட்டேன். "பொறுப்பில்லாமல்" நித்திரை கொள்வதாக மனைவி சொல்லவில்லை. இரண்டாம் தரம் அடித்த "அலாரம்" மணிக்கூட்டு கூட சங்கீதமாக ஒலித்தது.

வழக்கம் போலில்லாமல் நிதானமாய்க் குளித்து, நிதானமாய்ச் சாப்பிட்டுவிட்டு பஸ் ஸ்டாண்ட் போனேன். பஸ் ஸ்டாண்டில், சும்மா புன்னகைத்தாலும் பதிலுக்கு முறைக்கும் அந்தச் சீனன், இன்று வலியக் "காலை வணக்கங்கள்" என்றான். வெள்ளைக்காரங்களுக்கு மட்டும் காலை வணக்கம் சொல்லும் நாதனும் (தன் பெயர் நேத்தன் என்றுதான் அடம் பிடிப்பார்) இன்று "என்ன சுகமே, நல்ல weather என்ன?" என்று தமிழில் கேட்டார். பக்கத்தில் வெள்ளைக்காரங்கள் இல்லை அதுதான் என்று நினைத்துக் கொண்டேன்.

பஸ்ஸில் ஏறினேன். "இன்றைக்கு டிக்கெட் தேவையில்லை" என்று கனிவான புன்னகையுடன் டிரைவர் கூறினார். குழப்பமாக இருந்தது. என்றாலும் நாலு டொலர் முப்பது காசு சேமித்தது புளுகாக இருந்தது. படக்கென்று 105.5 ஆல் பெருக்கிப் பார்த்து அற்பச் சந்தோசம் கொண்டேன். (1 A$ = 105.5 SL Rs). பஸ் கூட டிராபிக் ஜாமில் மாட்டவில்லை. பஸ் உள்ளிற்கும் வெப்பநிலை மிகச் சரியாக இருந்தது. வழக்கமாகக் கை, கால்கள் விறைக்கிற அளவிற்கு இருக்கும். "எல்லாம் சரியாக இருக்குது, இண்டைக்கு ஏதோ பெரிய பிரச்சினை வரப்போகுது" என்று மனம் அடித்துக் கொண்டது. (வெளிக்கு மாத்திரம் ஐயா "எனக்கு மூடக் கொள்கைகள் எல்லாம் கிடையாது" என்று தம்பட்டம் அடித்துக் கொள்வார். )

அலுவலகத்தில் அடுத்த ஆச்சரியம் காத்திருந்தது. என்னைப் பார்த்து வழமையாக முறைக்கும் வரவேற்பாளினி முகம் மலர "காலை வணக்கங்கள்" என்றாள். எனக்குப் நேரே பின்பக்கம் யாரவது நிற்கின்றார்களா என்று பார்த்தேன். இல்லை. இப்ப பயம் கொஞ்சம் கூடப் பிடித்தது. அடித்துப் பிடித்து என் வழமையான இடத்திற்கு வந்து கதிரையில் குந்தினேன். எல்லோரும் இன்று புதிதாக ஞானம் பெற்றவர்கள் போல இருந்தார்கள். பிடரிப் பக்கம் கொஞ்சம் குறுகுறுப்பாக இருந்தது. எல்லாருக்கும் பொதுவாக ஒரு அசட்டுச் சிரிப்பை வரவழைத்தேன்.

இரவுச் சாப்பாடும் "கல்யாண சமையல் சாதம்" போல் இருந்தது. பெரிய மகன் "அப்பா இண்டைக்கு நான் எல்லா வீட்டு வேலைகளையும் நீங்கள் சொல்லாமலே செய்து விட்டேன்" என்றான் சுந்தரத் தமிழில்.

"நல்லது, PS4 விக்கத் தொடக்கி விட்டாங்களா?"

"இல்லை"

"பின்னை 4DS ? "

"இல்லை"

"அப்ப நான் என்ன வாங்கித் தர வேண்டும்? "

"ஒன்றும் இல்லை, அப்பா?"

"சோழியன் குடும்பி சும்மா ஆடாதே?"

"What is that?"

"இல்லை பின்னே ஏன் ஏழு, எட்டுக் காட்டுக் கத்தல் கத்தமுந்தி வீட்டு வேலையைச் செய்தாய்?"

"ஒவ்வொரு நாளும் மூஞ்சயைக் கழுதை மாதிரித் தொங்கப் போட்டுக் கொண்டு திரியிறிகள், இண்டைக்காவது கொஞ்சம் உங்களைச் கொஞ்சம் குஷிப் படுத்தத்தான்"

எல்லாரும் சொல்லி வைத்துக் கொண்டு என்னோடு நல்லமாதிரிப் பகிடி பண்ணுற மாதிரி இருந்தது.

திடீரென்று ஞாபகம் வந்தது இன்றைக்கு வியாழக்கிழமை. வியாழக்கிழமை மட்டும்தான் சிட்னியில் கடைகள் இரவு ஒன்பது பத்து மணி வரை திறந்திருக்கும். மற்ற நாட்களில் பின்னேரம் ஐந்து ஆறு மணியோடை கடைகள் எல்லாம் பூட்டிவிடும். வியாழன் ஷொப்பிங் பிரியர்களின் ஆசீர்வதிக்கப்பட்ட நாள்.

இந்த முறை நான் முந்திக் கொண்டேன். "என்னப்பா இண்டைக்கு வியாழன் எல்லே? ஷொப்பிங் போவமே?"

"இல்லையப்பா , நீங்கள் இண்டர்நெட்டிலே வழக்கம்போல ஊர்த் துளவாரங்களைப் பாருங்கோ. பொடியள் உங்களைக் குழப்புவாங்கள். நான் அவங்களைக் கூட்டிக் கொண்டு ஷொப்பிங் போயிட்டு வாறன்" என்று மனைவி சொல்ல மாத நாவல் எழுத்தாளர்கள் எழுதுகிற மாதிரி உண்மையில் "கண்கள் பனித்தன" பாருங்கோ. என்றாலும் நக்கல் விடுறாளோ என்று ஒரு யோசனையும் ஓடியது.

Google இன்றைக்கு ஒரு மாதிரி இருந்தது. இப்ப சில நாட்களில் அவங்களும் ஒரு "தீம்" வைக்கிறாங்கள் தானே. Google என்றதைப் பார்க்கும்போது ஒரு செல்லக் கழுதையைப் பார்ப்பது போலிருந்தது. ஆர்வமுந்த அதன்மேல் கிளிக்கினேன். முதலாவதாக இருந்தது,

International Donkeys' Day- Be nice to donkeys and donkeylikes today.

3 comments:

  1. வருடம் ஒரு முறைதான் எனக்கு முழுநாள் விடுமுறை. இரண்டு மூன்று குட்டித் துர்க்கம். துர்ங்கநகரம் படம், நெட் என இடையிடையே வலம் வரும்போது உங்கள் பதிவு சிரிப்போடு ஊசார் தந்தது.

    ReplyDelete
  2. நன்றி ஐயா. காதலர் தினம், அன்னையர் தினம், தந்தையர் தினம் மாதிரி, கழுதைகள் தினம் என்று ஒன்று இருந்தால் எப்படி என்பதைக் கற்பனை பண்ணிப் பார்த்தேன். உண்மையில் ஒருநாள் வேலை முடிந்து, வீடு வரும்போதுதான் இப்படி ஒரு கற்பனை வந்தது.

    ReplyDelete
  3. நல்ல கற்பனை சக்திவேல் சார் .... last line படிக்கிற வரைக்கும் எனக்கும் suspensave இருந்தது

    ReplyDelete