Thursday, July 7, 2011

வந்தியத்தேவனின் காதல் தோல்வி அல்லது சோழர் காலத் தூய நட்பு

முன்னுரை

ஆறாம் வகுப்போ அல்லது ஏழாம் வகுப்போ படிக்கும்போது இரவு-பகலாக பசி-தூக்கமில்லாது தொடர்ந்து வாசித்து முடித்த "பொன்னியின் செல்வன்"ஐ மீண்டும் வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போதிருந்த பிரமிப்பு இப்பவும் கிட்டத்தட்ட அதேயளவு இருக்கிறது.

என்றாலும், அமரர் கல்கி அவர்கள் பாத்திரங்களைக் கொஞ்சம் "இலட்சியப்" படுத்திவிட்டார் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம் . எனவே நான் கொஞ்சம் அச்சுப்பிச்சுத்தனமாக "யதார்த்தப்" படுத்திப் பார்த்தேன்.

உசாத்துணை:

பொன்னியின் செல்வன்

**************************************


வந்தியத்தேவன் குழம்பிப் போயிருந்தான். மணிமேகலை கொஞ்சநாட்களாக அவன் அனுப்பிய காதல் ஓலைகளுக்குப் பதிலனுப்புவதிலை. ஓலைகளைக் கொண்டுபோய்ச் சேர்க்கும் சிறுவன் குஞ்சமல்லனும் இப்போது "ஓலைகாவுதல்" வேலைகளில் சுவாரசியம் காட்டுவதில்லை. "ஓலையைக் கொடுத்தால், முன்பு சம்பளமாக கற்கண்டுகள் கொடுப்பாள் மணிமேகலை அக்கா, இப்ப என் கன்னத்தில் கிள்ளல்களை மட்டும்தான் கொடுக்கிறாள்" என்கிறான்.

வந்தியத்தேவனின் நண்பன் கந்தமாறன். அவன் தங்கைதான் மணிமேகலை. அவன் காதலுக்கு கந்தமாறனின் மறைமுக ஆதரவும் இருந்தது. உடனே நீங்கள் "ஆஹா, எல்லா அண்ணன்மாரும் இப்படியிருந்தால் நல்லதல்லவா!" என்று பெருமூச்சு விடுவதும் கேட்கிறது. உங்கள் பெருமூச்சு வீரநாராயண ஏரியின் கரையில் குறுக்கும் நெடுக்கும் தன குதிரையில் பயணித்துக்கொண்டிருந்த வந்தியத்தேவனுக்குக் கேட்கமாட்டாதுதான். கேட்டாலும் குழம்பியிருந்த அவன் மனம் தெளியவா போகிறது?

போனமுறை, திருப்பனங்காட்டிலிருந்து வரவழைத்த அழகான, விலையுயர்ந்த, நன்கு பதப்படுத்திய ஓலையில், வேலை மினக்கெட்டு அழகான கையெழுத்தில் சிரமப்பட்டுக் காதல் மடல் வரைந்திருந்தான். அதற்கும் பதில் வரவில்லை. ஓலையில் அடியில் இரண்டு "இதயப்" படங்களை கிட்டக்கிட்ட வரைந்து, அவையிரண்டையும் ஒரு ஈட்டி துளைப்பது போலெல்லாம் வரைந்திருந்தான். ( கிரேக்க குதிரை வியாபாரி சொல்லிக் கொடுத்த யோசனையிது)

வந்தியத்தேவனின் குதிரையும் மூச்சு வாங்கத் தொடங்கியது. "கிழட்டுக் குதிரை" என்று அவன் திட்டிக் கொண்டிருக்க, எதிரில் ஒரு ஆஜானுபாவன் உருவம் ஒரு பெரிய முரட்டுக் குதிரையில் வந்து கொண்டிருப்பதைக் கண்டான். அவன் கண்கள் அந்தக் குதிரையைச் சற்றுப் பொறாமையுடன் நோக்கின. நல்ல கருநிறப் புரவி. இவனின் குதிரையைவிட அரை மடங்கு உயரம் அதிகமாக இருந்தது. "அதில் ஏறியிருந்தாலே ஒரு கம்பீரம்தான்" என்று சொல்லிக் கொண்டான். "இந்த மாதிரிப் பெரியபுரவி வைத்திருப்பவன் நிறையப் பொன் வைத்திருப்பவனாகத்தான் இருக்கவேண்டும். அத்தோடு இந்தக் குதிரைக்கு கொள்ளு வாங்கவும் இருமடங்கு பொன் தேவைப்படும்" மனம் முணுமுணுத்தது.

முரட்டுக் குதிரைக்காரன் கிட்ட வரத்தொடங்கவும் வந்தியத்தேவனின் கை குறுவாளை இறுகப் பற்றியது. சாலையிலிருந்து சற்று விலகி நின்று, வந்த உருவத்தை உற்று நோக்கினான். அருண்மொழிவர்மனின் மதிப்பிற்குரிய ஒற்றனின் விழிகளுக்கு அவன் யாரென்பது கணநேரத்தில் புரிந்துவிட்டது. இளவரசன் மதுராந்தகன்! அவன் சம்புவரையரின் கடம்பூர் மாளிகைக்கு போய்க்கொண்டிருக்க வேண்டும். சம்புவரையர் மணிமேகலையின் தந்தை.

அவன் அடிக்கடி சம்புவரையரின் மாளிகைக்கு போய் வருவது வந்தியத்தேவனிற்குப் பிடிக்கவில்லை. அத்தோடு போனமுறை அவன் சம்புவரையரின் மாளிகைக்கு போனபோது ஒரு அழகிய முத்துச்சரமும், சில வளையல்களும் எடுத்துச் சென்றதும் வந்தியத்தேவனின் காதுகளிற்கு எட்டாமல் போகுமா?

"அவர்கள் சந்திப்பது இராஜ காரியத்திற்கு, எனக்கு இதற்குமேல் தெரியாது," என்று கந்தமாறன் சொல்லியதையும் அவன் நம்பவில்லை.

**************************************

"வீரநாராயணன் மோர்க்குடில்" சம்புவரையரின் கடம்பூர் மாளிகைக்கு அதிக தூரத்தில் இல்லை. எப்பவும் அங்கு இளவட்டங்களின் சத்தம் , கும்மாளம் கேட்டுக் கொண்டிருக்கும். வயதானவர்கள் "காலம் கெட்டுப் போய் விட்டது" என்று சொல்லி அங்கு வருவது குறைவு. கால் முட்டி மோரை வாங்கிப் பத்து நாழிகைகள் செலவழித்து அதி மெதுவாகக் குடிக்கும் கலையை இளைஞர்கள் அல்லது யுவதிகளால்தான் செய்ய முடியும். அதுவும் தங்கள் மனங் கவர்ந்தவர்களுடன் வந்த இளைஞர்களைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. மோர்க்குடிலின் பின்புறம் இரகசியமாக, அரசனின் அனுமதியின்றிச் சோமபானமும் விற்கப்படுவதாகப் பேசிக் கொள்கிறார்கள்.

இங்குதான் வந்தியத்தேவன் மணிமேகலையை நீண்ட முயற்சிகளுக்குப் பிறகு சந்திக்கின்றான்.

"மணிமேகலை," வந்தியத்தேவன் காதல் உணர்ச்சியுடன் அழைத்தான்.

"என்ன?" பதில் கொஞ்சம் சூடாக வந்தது.

"நீ, ஏன் நான் அனுப்பிய மடல்களுக்குப் பதில் அனுப்பவில்லை"

"நேரம் கிடைக்கவில்லை," அவன் கண்களைப் பார்க்காமல் பதில் கூறினாள்.

"ஓ அதுதானா நான் வேறு ஏதோவென்று பயந்து விட்டேன் !"

"ஏதோவென்று?"

"இல்லை அடிக்கடி அந்த மதுராந்தகன் உன் மாளிகைக்கு வந்து போகின்றான்.."

"அதுக்கென்ன?"

"இல்லை, உன் தந்தை அவனை உனக்கு மணம் முடித்து வைக்கப் போகிறார் என்று பயந்து விட்டேன்"

"அவரைத்தான் நான் மணக்கப் போகின்றேன்", அவள் முகத்திலிருந்தது நாணமா அல்லது அச்சமா என்று தெரியவில்லை.

அதிர்ச்சியடைந்த வந்தியத்தேவன் தன்னிலையடையச் சில நிமிடங்கள் எடுத்தது. "மணிமேகலை, யாது சொல்லுகின்றாய்" என்றான்.

"ஏன் உங்களுக்குக் காது கேட்காதா? நான் இளவரசர் மதுராந்தகரை மணக்கப் போகின்றேன் என்று சொன்னேன்," சற்று உரக்கக் கூறினாள்.

"அப்போது நாங்கள் காதலித்தது?"

"காதலித்தது? நீங்கள் அப்படி யோசித்தால் நான் என்ன செய்வது? என்னைப் பொறுத்தவரையில் எமக்கிடையே இருந்தது தூய நட்புத்தான்!"

"புரிகிறது மணிமேகலை, அவன் இளவரசன். நான் ஒருகாலத்தில் நன்றாக இருந்து கெட்ட வாணர் குலத்தவன். நீ என்னை மெதுவாக நீக்க விழைகிறாய்"

"வல்லவரையரே, தங்களுக்கு நட்பென்றால் என்னவென்று புரியாது. நான் போய்வருகிறேன். சொல்ல மறந்துபோய் விட்டேன். இந்த ஓலை அனுப்புதல் வேலைகளையெல்லாம் இனி வைத்துக் கொள்ளாதீர்கள், மதுராந்தகருக்குப் பிடிக்காது" வந்தியத்தேவனின் கண்களை ஊடுருவிப் பார்த்துச் சொன்னாள். பிறகு மென்மையாக, மிக மென்மையாக, தனக்கு மட்டும் கேட்கக் கூடிய குரலில், "என் நிலைமை தங்களுக்குப் புரியாது" என்றாள்.

அதற்குப் பிறகு முட்டி முட்டியாகச் சோமபானம் அருந்தியதுதான் வந்தியத்தேவனின் ஞாபகத்தில் இருந்தது.

மணிமேகலை தன் முதல் ஆண் குழந்தைக்கு வந்தியக்குமாரன் என்று பெயர் வைத்தது வந்தியத்தேவனுக்குக் கனகாலம் பிறகுதான் தெரிய வந்தது.


--------------

1 நாழிகை = 24 நிமிடம்
கால் முட்டி = கால்வாசி முட்டி = 1/4 முட்டி

படங்கள் : http://www.eegarai.net/t50562-topic இலிருந்து

15 comments:

  1. என்ன ஐயா... பொன்னியின் செல்வனை இப்படி ஆக்கிவிட்டீர்கள்?

    ReplyDelete
  2. இதுவரை பொன்னியின் செல்வனை பதினொரு தடவைகள் படித்துவிட்டேன்... ஆனால் இன்று படித்தாலும் பிரமிப்பை ஏற்படுத்துகிறது

    ReplyDelete
  3. @மதுரன், ஒரு குசும்புக்குத்தான் :-) . மற்றப்படி, நானும் ஒரு காலத்தில் அருண்மொழிவர்மன், குளம்புச் சத்தம், வந்தியத்தேவன், ஆழ்வார்க்கடியான் நம்பி, பழுவேட்டரையர், குந்தவை-- என்று ஒரு கற்பனை உலகத்தில் மிதந்த ஒரு ஆள்தான்.

    ReplyDelete
  4. பொன்னியின் செல்வனை ஞாபகப்படுத்தியதற்கு நன்றி. உங்கள் நவீன பொன்னியின் செல்வன் முறுவலி்க்க வைக்கிறது

    ReplyDelete
  5. கருத்துரைக்கு நன்றி Dr. ஐயா.

    ReplyDelete
  6. நிறைய முறை பொன்னியின் செல்வன் படித்திருக்கிறேன்.

    பகிர்வு அருமை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  7. அது சரி - குசும்பு தான் - இரசித்தேன் - நல்வாழ்த்துகள் சக்தி வேல் - நட்புடன் சீனா

    ReplyDelete
  8. ஆமா இந்த வேர்டு வெரிஃபிகேஷனை எடுக்கக் கூடாதா ? தேவை யற்ற ஒன்றில்லையா >

    ReplyDelete
  9. நன்றிகள் இராஜராஜேஸ்வரி மற்றும் cheena (சீனா).

    @cheena (சீனா)
    ஆமா இந்த வேர்டு வெரிஃபிகேஷனை எடுக்கக் கூடாதா ?

    மிக்க நன்றிகள் நண்பரே. எடுத்துவிட்டேன்.

    ReplyDelete
  10. கலக்கிட்டீங்க போங்க!!
    வந்தியத்தேவன் நம்மனங்களில் குடிகொண்ட வீர கதாநாயகன்!!

    ReplyDelete
  11. பொன்னியின் செல்வன் உங்கள் கனவுகளிலும் நிறைய வருகிறார் எண்டு தெரிகிறது.....

    ReplyDelete
    Replies
    1. அத்தோடு, வந்தியத்தேவனில் இலேசாக ஒரு பொறாமையும் இருந்தது :-)

      Delete
  12. அது வலி .. வேற டிபார்த்மன்ட் ..

    அண்ணே உங்கள் பொறாமை புரிகிறது .. ம்ம்ம்ம் .. குந்தவி தேவி பாத்திரம் ஒரு இன்ஸ்பிரேஷன் .. நான் கிறுக்கும் விஷயங்களில் வரும் மேகலா கொஞ்சம் புத்திசாலி, intimidating (சனியன் பிடிச்ச இங்க்லீஷ் இங்கயும் வந்திட்டு ஹ ஹஹா) பாத்திரமாக இருப்பாள். குந்தவை தான் மூலம்! ரோஜா மதுபாலா அப்புறமா தான்!

    ReplyDelete
    Replies
    1. ஆம் அது வேறுதான். ஆனால் "நட்புத்தான், இல்லை காதல்தான்" எனத் தர்க்கங்கள் வரும் ஒரிடத்தில் (மட்டும்) ஒரு சின்னக் Connection. (சே இங்கிலிஸ்!)

      >(மேகலாவிற்குக்) குந்தவை தான் மூலம்!
      அப்பிடிப் போகுதோ :-). சுகந்திக்கு ஆர் இன்ஸ்பிரேஷன் என்று வீட்டில் ஒரே உருட்டல்/மிரட்டல். கற்பனைப் பாத்திரம் என்றேன். நம்புகிறபாட்டைக் காணவில்லை. குந்தவையைச் சொல்லியிருக்கலாமோ என்று இப்ப யோசிக்கிறேன்.

      Delete
  13. //ஆறாம் வகுப்போ அல்லது ஏழாம் வகுப்போ படிக்கும்போது இரவு-பகலாக பசி-தூக்கமில்லாது தொடர்ந்து வாசித்து முடித்த "பொன்னியின் செல்வன்"ஐ மீண்டும் வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. //
    எனக்கு ஐந்தாம் ஆண்டில் வாய்ப்பு கிடைத்தது. அப்பா வாசிச்சிட்டு வைத்தாப்பிறகு இருந்து நித்திரை முழிச்சு 5 பாகமும் வாசிச்சது! மற்றப்பெடியள் எல்லாம் ராணி காமிக்ஸ் வாசிக்கேக்க பொன்னியின் செல்வன் வாசிச்சன்! அப்ப ஸ்கொலர்சிப்புக்கு தமிழ் பாடமும் இருந்ததால அப்பா வாசிக்க விட்டுட்டார்!

    வந்தியத்தேவன்ர பாத்திரம் வாசிக்கிற எல்லாருக்கும் பிடிக்கும்!அதில் ஒரு பகுதியை சிறுகதை ஆக்கிவிட்டீங்களே! நல்லா இருக்கு! முடிவு சூப்பர்!

    ReplyDelete