Wednesday, January 4, 2012

வழித் துணை

"தம்பி, கண்டு கனகாலம்" குரல் வரவும் ட்ரெயின் பெட்டி உன்னிக் கொண்டு நகர ஆயத்தம் பண்ணவும் சரியாக இருந்தது. ஆளை நிமிர்ந்து பார்த்தேன்.

"உம்மடை அப்பா என்ரை மூத்த அண்ணாவோடை படிச்சவர், நான் நீர் அஞ்சாம்- ஆறாம் வகுப்புப் படிக்கேக்கை ஏ.எல். படிச்சிருப்பன்". இப்போது ஆளை மட்டுக்கட்டக் கூடியதாக இருந்தது. இவரை எனக்குத் தெரியும். பெயர் வாசுதேவன். ஊரில் அலம்பல் கந்தையரின் கடைக்குட்டி என்றால்தான் புரியும்.

"நல்லகாலம் உம்மைக் கண்டது, பயணம் முழுக்கக் கதைத்துக் கொண்டு போகலாம், என்ன சொல்லுறீர்?"

"அதுவுஞ் சரிதான்..."

"வவுனியாவில அக்காவின்ர மகளுக்கு வீடு சொந்தமா இருக்கு; அங்கைதான் ரண்டுநாள் நிண்டிற்று வாறன், நீர்?". விடை சொல்ல ஒன்றரைச் செக்கன் தந்தார். பிறகு தானே தொடர்ந்தார், "பெரியம்மா வீட்டை வந்து போறீர் போல".

"பெரியம்மா வீடு சொந்த வீடோ? வாடகை வீடோ?"

"வாடகை வீடுதான்"

"அக்கான்ரை மகள் சொந்தமா வீடு வாங்கிப் போட்டாள். அவளின்ர மனிசன் கவர்ன்மெண்டில் நல்ல வேலை, தெரியுமே?"

"ஓம்", இல்லை என்று சொன்னால் இன்னும் கதை வளரும்.

"அவர் இப்ப ஏ.ஜி.ஏ எல்லோ!"

"நல்லது"

"அவர் படிக்கிற காலத்தில படிப்பில வலு விண்ணன். இஞ்சினியறிங் படிச்சுக் காடு கரம்பு எண்டு வேலை செய்ய அவருக்கு விருப்பமிலையாம், அதுதான் கவர்ண்மெண்ட் சேர்விஸ் இல சேர்ந்தவர். அவற்றை குடும்பமே படிச்ச குடும்பமெல்லே?"

"நல்ல விஷயம்தானே"

"உமக்குத் தெரியாது, அக்கான்ர மகள் நல்ல வடிவு. அவர் இவளைத்தான் கட்டுவன் எண்டு நிண்டல்லோ கட்டினவர். மருமகள், அதுதான் அக்கான்ரை மகள்.. கல்யாணம் செய்திருக்காட்டி ஒரு டொக்டராகத் தன்னும் வந்திருப்பாள்; அவள் நல்ல கெட்டிக்காரி"

"உண்மைதான்"

"தம்பி இஞ்சினியரிங் செய்யிறீர் எண்டு கேள்விப்பட்டன்"

"ம்ம்ம்"

"இப்ப இஞ்சினியரிங் செய்தால் .. இந்தக் காலங்களில எதிர்காலத்திற்கு நல்லதில்லைத் தம்பி, சம்பளமும் முந்தி மாதிரி ஆகா ஓஹோ எண்டில்லை. பிறகு லஞ்சம் வாங்கித்தான் சமாளிக்கவேண்டும். "

"உண்மைதான், நீங்கள் முதலே சொல்லியிருக்கலாம், நான் விசயம் தெரியாமல் இஞ்சினியரிங் படிக்கத் தொடங்கிப்போட்டன்"

ஆசாமி என் நக்கலைக் கவனித்த மாதிரித் தெரியவில்லை. "என்ரை ஒரு அண்ணற்றை மகனுக்கு உங்கை பெரதேனியாவில இஞ்சினியரிங் செய்யக் கிடைச்சது," தொடர்ந்தார், "அவன் இங்கை படிச்சால் பியுச்சருக்கு நல்லதில்லை எண்டு லண்டனில் படிக்கப் போயிட்டான்"

"அங்கை என்ன படிக்கிறான் தெரியுமே?"
"இல்லை"

"எயறோ நோட்டிக்கல் இஞ்சியரிங்". என்னைக் கொஞ்சம் இளக்காரமாகப் பார்த்தமாதிரித் தெரிந்தது.



*****************************************

இரவு ட்ரெயின். விடியத்தான் கொழும்பை அடையும். பிறகு கண்டி பஸ் பிடிக்கவேண்டும். ட்ரெயின் இல் ஏறினால் பாதிநேரமாவது நித்திரை கொள்ளவேண்டும். மீதி நேரம் வெளியில் பராக்குப் பார்க்க வேண்டும். அல்லது ட்ரெயின் பெட்டிக்குள் பராக்குப் பார்க்கவேண்டும். பெட்டியின் படியில் சில விடலைப் பையன்கள் நின்று கொண்டிருந்தார்கள். அனேகமாக ஏதாவது ஒரு பக்கத்தில் ஒன்றோ இரண்டோ வாலைக் குமரிகளின் கண்பார்வை வீச்சில் இவர்கள் இருக்கலாம். இல்லாவிட்டால் இவர்களின் முகத்தில் இவ்வளவு குதூகலமும் அசட்டுத்தனமும் எப்படி இருக்கும்?

வெளியில் நிறையத் தென்னை மரங்களும் குறுக்குக் நெடுக்குமாக நிறையத் தண்டவாளங்களும் ... பொல்காவலை ஸ்டேசன் ஆக இருக்கலாம். "குறும்ப குறும்ப" என்று இளநீர் வித்துக் கொண்டிருந்தார்கள், கைகளில் இளநீர் சீவும் கூரிய கத்திகளுடன். என்னதான் சொன்னாலும் கூர்க் கத்தியுடன் "அன்புச் சகோதரர்களைக்" கண்டால் அடி வயிற்றில் ஒரு மெல்லிய திகில் வருவதைத் தடுக்க முடிவதில்லை. மரபணுக்கள் வரை அந்தப் பயம் பரவிவிட்டதுபோல.

"தம்பி இளநி குடிக்கப் போறீரே, நான் வழியில் இளநி குடிக்கிறதில்லை, அநியாய விலை?" அவர் கதைக்கத் தொடங்கினார். அவரின் இரண்டாவது அண்ணரின் இரண்டு மகன்மார் லண்டனில் 'மெடிசின்' படிக்கிறார்கள். (உள்ளூரில் ஸ்டாண்டர்ட் காணாது), சின்ன அண்ணிக்கு கல்வயலில் தென்னந்தோட்டம் இருக்கு(மாதவருமானம் 20,000 ரூபா), இலங்கையில் இஞ்சினியரிங் படித்தால் லண்டனில் கோப்பைதான் கழுவ வேண்டும், மூன்றாவது அண்ணா கல்விக்கந்தோரில் நல்ல வேலை (சம்பளம் இரண்டு இஞ்சினியர்களின் சம்பளங்களின் கூட்டுத்தொகைக்குச் சமன்), இலங்கையில் வாத்தி வேலை பார்ப்பவர்கள் எல்லாம் *பேயர்கள் (நான் ஒரு வாத்தியாரின் மகன்), முதலிய அருந்தகவல்கள் நான் ஒரு இளநீர் குடித்து முடிக்கும் நேரத்தில் கிடைத்தவை.


*****************************************


ட்ரெயின் உலுக்கி ப்ரேக் அடிக்கத்தான் விழித்தேன். கோட்டை புகையிரத நிலையம். எதிரில் அவரைக் காணவில்லை. ஸ்ரேசனுக்கு வெளியே வந்தேன். மழை பெய்து ஓய்ந்திருந்தது. றோட்டு எல்லா இடமும் சேறு. யாரும் அதைக் கணக்கில் எடுத்ததாகத் தெரியவில்லை. இந்த அதிகாலையிலும் சுறுசுறுப்பான கொழும்பு நகரம். ஒரு சைவச் சாப்பாட்டுக் கடையில் எட்டுப்பத்து இடியப்பங்களும் ஒரு ரீ'யும் பசியை அடக்கின. உடம்பு உளைந்தது. கண் எரிந்தது. இனி விடுதி போய் ஒரு குளிப்பு அடித்துவிட்டு ஒரு பெருந்தூக்கம் போடவேண்டும். நல்ல சீற் கிடைத்தால் கண்டி பஸ்ஸிலும் ஒரு குட்டித் தூக்கம் போடலாம்.

"நுவர, நுவர" என்று கொண்டக்ரர் கத்திக்கொண்டிருந்த ஒரு பஸ்'ஸினுள் பாய்ந்து ஏறினேன்.

"தம்பி!, நீர் கண்டியே போகிறீர், நல்ல விசயம், பக்கத்தில இரும் கதைத்துக் கொண்டு போகலாம்" . குரல் வந்த திக்கைப் பார்த்தேன். அலம்பல் கந்தையரின் கடைக்குட்டி சாவகாசமாக பட்டர் பூசிய பாணைக் கடித்தபடி... பக்கத்து சீற்றில் உட்காரச் சைகை செய்தார்.



---------------
*பேயன் - முட்டாள்
நுவர- 'கண்டி' நகரின் சிங்களப் பெயர்
பாண்- bread

17 comments:

  1. எங்கட ஆட்களுக்கு இது ஒன்றும் புதுசு இல்லையே .. மற்றவனை மட்டம் தட்டாவிட்டால் நித்திரை வராது. நல்ல எழுத்து சக்திவேல்.

    ReplyDelete
  2. நன்றிகள் ஜேகே, இப்பவும் இப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  3. இப்பவும், எப்பவும், வெளிநாட்டிலும் கூட இப்படித் தான் மாற்றுவது மிகக் கடினம். நல்ல எழுத்து நடை. வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  4. அருமையான ஒரு பயண அனுபவம்! மற்றவனை எப்போதும் மட்டம் தட்டுவதும், தன்னையும் தன்னைச் சேர்ந்தவர்களையும், தூக்கிப் பிடிப்பதும், எமது இனத்தின் சாபக்கேடு, என்பதை யதார்த்தமாக எழுதியுள்ளீர்கள்!

    ReplyDelete
  5. எங்கடை இனத்தின் சாபக்கேடு இது! எப்போதும் தானே பெரிது என்பதை, மிகவும் அழகாக வடித்துள்ளீர்கள், சக்தி!

    ReplyDelete
  6. வருகைக்கும் கருத்துரைகளுக்கும் நன்றிகள் @kavithai (kovaikkavi) மற்றும் @புங்கையூரன்.

    ReplyDelete
  7. வணக்கம்.வாழ்த்துக்கள்.
    வாயாடி வழித் துணை ரொம்ப ரசித்தேனுங்க..

    ReplyDelete
  8. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சக்தி...மறுபடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் சந்தோசம்..

    அருமையான பயண அனுபவம்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  9. வணக்கம் சக்திவேல், நம்மவர் இயல்பை ரசனையுடன் பதிவிட்டிருக்கிறியள்.அலம்பல் கந்தையரின் கடைக்குட்டியின் குளோனிங் பிரதிகள் ஊருக்கு ஒருவராவது இருக்கினம்.

    ReplyDelete
  10. நன்றிகள் Kalidoss Murugaiya, ரெவெரி, & @அம்பலத்தார்.

    ReplyDelete
  11. இந்த மொழி நடை - இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே...

    ReplyDelete
  12. எப்பவோ வாசித்தது இப்போது தான் கருத்திடத் தோன்றியது நல்ல அனுபவம்

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் இலங்கைத்தமிழன்.

      Delete
  13. //பெட்டியின் படியில் சில விடலைப் பையன்கள் நின்று கொண்டிருந்தார்கள். அனேகமாக ஏதாவது ஒரு பக்கத்தில் ஒன்றோ இரண்டோ வாலைக் குமரிகளின் கண்பார்வை வீச்சில் இவர்கள் இருக்கலாம்.//

    இவ்வ‌ரிக‌ள் 90 க‌ளின் ந‌டுப்ப‌குதியில் நீர்கொழும்பில் இருந்து கொழும்புக்கு நான் தின‌ம்தோறும் ப‌ய‌ணித்த‌ ர‌யில் பிர‌யாண‌த்தை நினைவூட்டிய‌து, இந்த‌ வாலைக் குமரிகளின் கண்பார்வை தான் நீண்ட‌ அய‌ர்ச்சியான‌ ப‌ய‌ண‌ங்க‌ளை இல‌குவாக்கிய‌து என்ப‌தும் உண்மை.‌

    ReplyDelete
  14. //அக்கான்ரை மகள்.. கல்யாணம் செய்திருக்காட்டி ஒரு டொக்டராகத் தன்னும் வந்திருப்பாள்; அவள் நல்ல கெட்டிக்காரி
    //

    அதெண்டால் உண்மைதான் பாருங்கோ. அவ சரியான கெட்டிக்காரி எண்டுதான் நானும் கேள்விப்பட்டனான். ஆனா அவாவின்ரை கஷ்ர காலத்தக்கு ஓஎல் (ஓம் O/L தான்) சோதனைக்க வருத்தம் வந்து பாஸ் பண்ணேல்லாமல் போய்ற்றுது

    ReplyDelete