Saturday, March 24, 2012

எழுத விரும்பாத பதிவு

எனக்குத் தெரிந்த ஒருவர் எப்பவும் உரையாடலை இப்படித்தான் தொடங்குவார், "நான் உங்களைச் சொல்லவில்லை, பொதுவாகத்தான் சொல்லுறன்...". அவரின் நிலை இப்பதான் புரிகிறது. ஆனால், எனக்குப் பிடிக்காதது வரிக்கு வரி எல்லாவற்றுக்கும் Disclaimer கொடுப்பது. ஒவ்வொரு பதிவின் கீழேயும், "கதையில் வரும் பெயர்களும் சம்பவங்களும் கற்பனையே. எவரின் பெயராவது கதையில் வந்தால் அது தற்செயலே.." என்று போடக்கூடாது, அது வாசிப்பவருக்குத் தானாகப் புரியவேண்டும் என்று அடியேனுக்கு ஒரு 'மூன்றுகால் முயல்'க் கொள்கையுண்டு. என்றாலும் ஒரு பதிவிலாவது "மிக முக்கியம்: பெயர்கள் யாவும் கற்பனையே" என்று போட்டேன். (இடைக்கிடையாவது முயலுக்கு நான்கு கால்கள் என்று ஒப்புக்கொள்ள வேண்டாமா?)

நேற்றுத்தான் ஜேகே நொந்து போயிருந்தார்."என்ர அம்மாளாச்சி”, “கணவன் மனைவி” என்று வரிசையாக இரண்டு சிறுகதைகள் எழுதினேன் இல்லையா? எழுத்தாளன் சாபம், என் சாபம், நிஜ வாழ்க்கையில் நடந்தவற்றையே எழுதுகிறேன் என்று வாசிப்பவர்கள் நினைத்துக்கொள்வது( என் கற்பனை திறனில் அவ்வளவு நம்பிக்கை!)...".

என்ன முகூர்த்தத்தில் நானும் "அழி றப்பர்" எழுதினேனோ தெரியவில்லை. இப்போது நான் வறுத்தெடுக்கப்படுவது, "யார் அந்தச் சுகந்தி?" என்று. அது ஒரு கற்பனைப் பாத்திரம் என்றால் நம்புவாரில்லை. (வீட்டுக்குள்ளும் குத்துப்பாடு). நான் பதிவெழுத வந்தது சதா காலமும் என்னைப் பிடித்து உலுக்கும் என ஊர் ஞாபகங்களைச் சேமிக்க. ஏதோ கற்பனையிலாவது ஊர் போய்க் கொட்டில் போட்டு வாழும் மனது எனக்கு. அந்த யோசனை இன்னும் போகவில்லை. போகப்போவதுவும் இல்லை- நடை முறையிற் சாத்தியம் இல்லாவிட்டாலும். ஆனாலும் என் கற்பனையில் என்னால் 'என் நிலத்தில் கால் வைக்கமுடியும். அப்பாவின் கறள் பிடித்த றலி சைக்கிளில் இடைக்காடு-தம்பாலை-கதிரிப்பாய்-பத்தைமேனி-அச்சுவேலி என்று ஓடித்திரிய முடியும்'. இந்த அலம்பல்கள் எல்லாம் போக, மிகக் கட்டாயமாக நான் 'கொசிப்' எழுதுவதற்காகப் பதிவெழுத வரவில்லை. ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்வும் தனிப்பட்டது. அதை வ்ரி வரியாக எழுதுவது சிலருக்குத் தேவைப்படலாம், வாசிப்பதுவும் பலருக்குத் தேவைப்படலாம். எனக்கு இரண்டும் இல்லை. என்றாலும்.... எனக்கும் ஒரு டவுட். ஏன் யாரும் "அழி றப்பர்" இல் 'யார் அந்தக் குஞ்சிப் பெரியாச்சி" என்று கேட்கவில்லை. ரங்கன், சிறியன் பற்றியும் யாரும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

என் பார்வையில் சில சிறுவர்கள், அதில் ஒருவன் குறும்பானவன் ஆனால் மிக உத்தமமானவன் அல்ல ( 'அண்டல்' வேலை பார்க்கிறான்). வெளிக்குக் காட்டிக் கொள்ளாவிட்டாலும் இவங்களின் வம்பு தும்புகள் புரிந்த ஆச்சி. சுகந்தி கதைக்கு ஊறுகாய் மாதிரித்தான். இப்படிப் பின்னணியைச் சொல்லிவிட்டால் இனி ஏ.எ.வாலிபன் சொன்னதுமதிரி (என் கருத்தும் அஃதே) கதை 'சப்' என்று போய்விடும். அதற்கு முன்னமே கதை 'சப்' என்று இருந்தால் அது உங்கள் விதி.

Draft இல் ஒரு கதை இப்ப இருக்குது. அதில் வரும் சில வரிகள், 'தியேட்டரில் இருட்டு, அவனுக்கு அவள் தன்னுடன் (சினிமாப்) படம் பார்க்க வந்ததை இன்னும் நம்பமுடியவில்லை. Structural Drawing" பாடம் கட்...."

இதைப் பிரசுரித்தால் "அதில் வந்த அவன் யார்? நீயா? அவள் யார்? அவளைத்தான் கட்டினீயா" இப்படிக் கேள்விகள் வரும் போல இருக்கு. எதுக்கும் பிரசுரிக்கமுன் ebay இல் மொட்டாக்கு விற்குதா என்று பார்க்கவேண்டும்.

ஒரு சொதப்பல் சிறுகதை எழுதிப்போட்டு வடிவேலு பாணியில் அலம்பல் பண்ணுறியா என்று நீங்கள் கேட்டால் பதில் ரெடி. ஆம்.

"சரி சரி, ஆரப்பா அவள்?" என்று காதுக்குக்கிட்ட ஒரு குரல் மிரட்டலுடன் கேட்குது. மரக்கறி வெட்டவேணும், இன்றைக்குச் சனிக்கிழமை ...வெளியில் புல்லும் வெட்டவேணும். எனக்கேன் வம்பு? போயிட்டு வாறன், என்ன?

ஆங் மறந்து போனேன், "நான் எதையும் குறிப்பாக உங்களைச் சொல்லவில்லை, பொதுவாகத்தான் சொல்லுறன்..."

--------------
கொட்டில் - குடிசை
கறள் பிடித்த -துருப் பிடித்த
'அண்டல்' வேலை -கோள் மூட்டுவது, போட்டுக் கொடுப்பது
மொட்டாக்கு- முக்காடு

15 comments:

  1. ஹ ஹ ஹா .. Same blood .. Red blood!!

    அண்ணை ஒரு விஷயம், வாசகர்களை குறை கூறுவதாக கூறவேண்டும். எம் பதிவுகளுக்கு "ஒரு சில" வாசகர்கள் சீரியஸ் வாசகர்கள் இல்லை. அவர்களுக்கு வாசிப்பு பொழுதுபோக்கும் இல்லை. என்ன தான் எழுதியிருக்கிறோம்? என்று பார்க்க வருபவர்களுக்கு இலக்கியத்தை(யாரடா அவன்?), அப்படியே ஏற்றுகொள்ளமாட்டார்கள். நிஜ அனுபவங்களை தான் எழுதுகிறோம் என்று நினைப்பவர்கள். நிஜத்தை புனைவுடன் கலப்பது நம்பமுடியாத விகிதத்தில் கலந்துவிடும்போது அது இன்னமும் குழப்பிவிடுகிறது. "இவனெல்லாம் பெரிய எழுத்தாளனா?" என்று நினைத்துக்கோண்டு வாசித்தால், "புனைவை" ஏற்றுகொள்ள மறுப்பார்கள். அதனால் தான் ஈழத்த்து எழுத்தாளர்கள் ஒருபோதும் பெண்ணை தப்பாக பார்த்திருக்கவே மாட்டார்கள்!!!

    கீரா, கரிசல் காட்டு கடுதாசிக்கு கொடுக்கும் முன்னுரை இது,

    கட்டுரை என்றால் ஞாயப்படி ஒரு மாற்றமும் செய்யாமல் நூற்றுக்கு நூறு - பெயர்கள் உட்பட - அப்படியே தான் சொல்லவேண்டுமா? கதை என்று எழுதினாலே 'யாரை வைத்து இது எழுதப்பட்டது?" என்று ஆராய்ச்சி நடக்கும் போது கட்டுரை என்பது எவ்வளவு சிரமம் என்பது தெரிந்தவர்களுக்கு தான் தெரியும், ஆவலாதி வராமல் எழுதிதொலைக்கணும்; தலையும் நனையாமல் சாத்திரமும் பொய்யாக்காமல் குளிக்கணும்....

    .. இப்படி நிறைய விஷயம் ...சொல்கிறான் .. கீராக்கே இந்த நிலை என்றால்?

    ReplyDelete
  2. நீங்க ரொம்ப அப்பாவியாக தெரிகிறீர்கள். கேள்வி கேட்பவர்களுக்கு இன்னுமொரு “கப்சா” கதையை அவிட்டு விட வேணடியது தானே.

    ReplyDelete
    Replies
    1. அதைத்தானே மேலே (பதிவில்) செய்துள்ளேன் !

      Delete
  3. அடப்பாவி மக்கா .. யாவும் கற்பனையே என்று போட்டா இவ்வளவு பிரச்சனை இருக்குதா. தங்களின் கற்பனையால் மற்றவரை குற்றவாளி என்பதற்கு கூறி அவனின் உயிரை எடுக்க ஒரு பெரீய கூட்டமே அலைந்து திரிகிறது. நானும் இப்படி கனக்க வாங்கிக் கட்டியிருக்கிறேன். நான் Michelle Obama டேடிங் பண்ணுறேன் என்று யாரும் நினைத்தால் மட்டும் அது நடந்துடுமா என்ன? Michelle Obama விரும்பினாலும் நான் விரும்பமாட்டனே.இப்படி எத்தனை பிரச்சனை இருக்கிறது. இதுகள் அவர்களுக்கு புரிவதில்லை.

    ”ஆங் மறந்து போனேன், "நான் எதையும் குறிப்பாக உங்களைச் சொல்லவில்லை, பொதுவாகத்தான் சொல்லுறன்..."

    அந்த 'தியேட்டரில் இருட்டு, அவனுக்கு அவள் தன்னுடன் (சினிமாப்) படம் பார்க்க வந்ததை இன்னும் நம்பமுடியவில்லை” கதையை கெதியில் வெளியிடுங்களய்யா. செம திறில்லிங்கா இருக்கும் போல இருக்கிறதே

    ReplyDelete
    Replies
    1. //யாவும் கற்பனையே// எனப் போட்டால் இன்னும் சந்தேகம் வளரும்.

      Delete
    2. இது blog எழுதுபவர்களுக்கு ஏற்படும் தவிர்க்க முடியாத விதி, நண்பர்களே எங்கள் முதல் வாசக வட்டம் ஆகிவிடுவதாலும், கதையின் தொடர்ச்சியான உரையாடல் உடனடியாகவும் வெளிப்படையாகவும் இருப்பதாலும் இதன் தாக்கம் அதிகம். எங்கள் அச்சுலகம் மற்றும் தொடர்பான வியாபாரம் இன்னமும் முன்னேறின் உங்களது கதைகள் அச்சில் வரும் போது இதற்க்கு கொஞ்சம் விலக்கு கிடைக்கும்.

      பல பிரபல பதிவர்களது உத்தியும், பதிவில் பிரபல்யமாகும் உத்தியும், இதாகிப் (கற்பனையை எங்களுக்கு நெருக்கமான உண்மைகளோடு உலவ விடுதல், அன்றாட பிரபல்ய செய்திகளை ஒட்டி புனைதல்) போனதால் பதிவிடுகிற நாங்கள் இப்படிப்பட்ட எதிர் வினைகளை கடக்க வேணும். வேறு வழி இல்லை. இதில் ஜேகே கடைசி வி.மா இல் குறிப்பிட்ட மாதிரி கதையின் மற்ற மாந்தர்களின் பெயரும் அடித்து நொறுக்கப்படும் - இதுக்காகவே "காதலிக்க நேரமில்லை" டிராப்ட் இல் நீண்ட காலம் தூங்கி, அட போங்கடா போக்கத்தவங்களா எண்டு முடிவெடுத்து ரிலீஸ் பண்ணினான்.

      Delete
    3. என்னது, அச்சிலா? பயமுறுத்தாதீர்கள். :-)

      Delete
    4. >அந்த 'தியேட்டரில் இருட்டு, அவனுக்கு அவள் தன்னுடன் (சினிமாப்) படம் பார்க்க வந்ததை இன்னும் நம்பமுடியவில்லை” கதையை கெதியில் வெளியிடுங்களய்யா. செம திறில்லிங்கா இருக்கும் போல இருக்கிறதே

      அதை draft இலிருந்து அழித்துவிட்டேன். நிறையப்பேர் அந்தவேலையைச் (அதுமாதிரி எழுதுவதை) செய்கிறார்கள். எனவே போட்டி அதிகம். நான் ஒதுங்கிக் கொள்கிறேன்.

      Delete
  4. ஆம், கதையில் வரும் கதாபாத்திரங்களை கதை சொல்லியின் வாழ்வில் தேடுவது வாசகர்கள் மத்தியில் அடிக்கடி இடம்பெறும் விடயம்தான். எனக்கும் வாசகர்களிடமிருந்து அடிக்கடி இதுபொன்ற கேள்விகள் வருவது வழமை.

    ReplyDelete
  5. ஹி ஹி. யாவும் கற்பனையே என்று பெரிதாக போட்டால்தான் கதையில் வரும் கதாபாத்திரங்களை தேடுவதும் அதிகமாக் இருகும்

    ReplyDelete
    Replies
    1. அதனாற்தான், நான் அப்படி அபூர்வமாகத்தான் போடுவேன்.

      Delete
  6. //என்ன முகூர்த்தத்தில் நானும் "அழி றப்பர்" எழுதினேனோ தெரியவில்லை. இப்போது நான் வறுத்தெடுக்கப்படுவது, "யார் அந்தச் சுகந்தி?" என்று.//

    நீங்க‌ள் வ‌றுத்தெடுக்க‌ப்ப‌டுவ‌துக்கு கார‌ணம், ஒன்று சுக‌ந்தி எண்ட‌ பெய‌ரில் இருக்கும் ஈர்ப்பாக‌ இருக்க‌லாம், எங்க‌ட‌ வ‌ய‌தை ஒத்த‌வ‌ர்க‌ள் குறைந்த‌து ஒரு சுக‌ந்தி என்ட‌ பெய‌ரையாவ‌து க‌ட‌ந்து வ‌ந்திருப்பார்க‌ள், ம‌ற்ற‌து புதின‌ம் கேட்ப‌திலும் க‌தைப‌திலும்(விடுப்பு)எங்க‌ளுக்குள் இருக்கிற‌ ஆர்வ‌மும் ஒரு கார‌ண‌மாக‌ இருக்கும்...

    ReplyDelete
  7. பார்க்கும், கேட்கும் சம்பவங்கள் கதைகள், கட்டுரைகளாகும்போது இந்தக் கேள்வி சகஜம். மேலும் எந்த சம்பவங்களும் படிப்பவர்களின் நினைவில் அவர்கள் அனுபவத்தில் இது போன்று சம்பந்தப் பட்ட நிகழ்வுகளைக் கிளறி விடும்போதுதான் எழுதியவர்களுக்கும் ஒரு திருப்தி, எழுத்துக்கும் ஒரு வெற்றி கிடைக்கிறது. எந்த வகையிலும் நம் மனதைப் பாதிக்காத எழுத்துகளை யாரே படிப்பர்? நீங்கள் எழுதியுள்ள பதிவில் உள்ள மெல்லிய நகைச்சுவையை ரசித்தேன்.

    ReplyDelete

  8. //நான் எதையும் குறிப்பாக உங்களைச் சொல்லவில்லை, பொதுவாகத்தான் சொல்லுறன்..."//
    //எழுத்தாளன் சாபம், என் சாபம், நிஜ வாழ்க்கையில் நடந்தவற்றையே எழுதுகிறேன் என்று வாசிப்பவர்கள் நினைத்துக்கொள்வது( என் கற்பனை திறனில் அவ்வளவு நம்பிக்கை!)...".//

    நிஜவாழ்க்கையில் நடந்தவற்றையே எழுதுவதாக நினைக்கிறார்கள் என்றால் அது உங்களின் எழுத்து வன்மைக்கு கிடைத்த வெற்றி! நிச்சயமாக காலரைத்தூக்கி விட்டுக்கொள்ளலாம்!

    உங்களுக்குப்பரவாயில்லை! எழுத்துலக வேந்தன் சுஜாதாவின் புத்தகம் ஒன்று (அ....ஆ என்று நினைக்கிறேன்) வாசித்த இளைஞன் ஒருவன் தனது முற்பிறப்பில் மனைவியாக இருந்தவர் சுஜாதாவின் மகள் என்று அடம்பிடித்த கதையையும் சுஜாதா தனக்கு மகள் இல்லை என்று அவரை பாடுபட்டு அனுப்பி வைத்ததையும் அவரே எழுதியிருக்கிறார்! சுஜதாவே சொல்கிறார் இதைப்பற்றி விரிவாக..!

    உங்களது எழுத்து நடையிலும் சில இடங்களில் எழுத்தாளர் சுஜாதாவின் நடையை காண்கிறேன்! அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்! ( நானும் சுஜாதாவின் தீவிர வாசகன் தான்..!)
    மற்றப்படி என் போன்ற வாசகர்கள் “யார் அந்தச் சுகந்தி” என்று கேட்டால்... அது ஒரு ஜாலிக்காக கூட இருக்கலாம்..!இதுவும் இல்லாவிட்டால் ஏது சுவாரசியம்..? take it easy!! keep it up writing!!!

    ReplyDelete