Wednesday, June 13, 2012

சின்னாம்பி

சின்னாம்பியைப் பற்றிச் சொல்லமுன், என்னைப் பற்றிச் சொல்லவேண்டும். நான் ஒரு சாதாரண பதிவன். காலை 8 மணிக்கு ஒரு பதிவு போட்டுவிட்டு 8:00:02 இலிருந்து யாராவது புண்ணியவான் 'கொமென்ட்' போடுகிறானா என்று பார்க்கத் தொடங்கும் சாதாரண பதிவன். இரண்டு மூன்று 'அப்பாவிகள்' தொடர்ந்து 'கொமென்ட்' போடுகிறார்கள். அவர்கள் சீரும் சிறப்பும் பெற்றுப் பல்லாண்டு வாழ்க. எனக்கு ஒரு சின்னப் பிரச்சினை 'தலைப்பு'ப் போட்டால் அதைப்பற்றி எழுதாமல் என்னவோ எல்லாம் எழுதுவேன். எனது பெறாமகள் ஒருத்தி 4ம் வகுப்புப் படிக்கிறாள். தமிழ்ப்பாடத்தில் 'ஆடு' என்று தலைப்புப் போட்டு "எங்கள் வீட்டிலுள்ள ஆடு வேப்பங்குழை சாப்பிடும்" என்று தொடங்கி நிறைய எழுதி '...இப்படி சவர்க்காரத்திற்குப் பல பயன்பாடுகள் உண்டு' என்று முடித்தாள். இப்பதானே எல்லாம் ஜீன்ஸ், ஜெனிடிக் என்று ஆராயிறாங்கள். அதொன்றுதான் பரம்பரையிலே ஒடுதுபோல.

சரி, நான் சொல்லப்போற விஷயம் கொஞ்சம் சிக்கலானது. சரியாகப் புரியாவிட்டால் என்னை லூசு என்றுதான் நினைப்பீர்கள். இதைச் சொல்லுறது கொஞ்சம் கஷ்டம். முயற்சிக்கிறேன். முதல்ல எச்சரிக்கை நான் சொல்லப்போறது உண்மை, கற்பனையில்லை. பின்நவீனத்துவப் பிசுக்கோத்தும் இல்லை. அவன் ஒரு விநோதன். சின்னாம்பி என்பது நான் அவனுக்கு வைத்த பெயர்தான். அவனுக்குப் பெயர் இல்லை. "உனக்கு பெயர் என்னடா" என்று அவனை ஒருமுறை கேட்டேன்.

"எனக்கு ஏன் பெயர் இருக்கவேண்டும்" என்றான். இந்த இடத்தில் நான் குழம்பித்தான் போனேன். சின்ன வகுப்பிலை கணக்கு வாத்தியார் சொல்லுவார், "நீ உன்னையும் குழப்பி, என்னையும் குழப்பி, வகுப்பையும் குழப்புறாய்" என்று. அந்தப் பாவம்தான் என்னவோ திருப்பித் தாக்குது.

நான் குழம்பினமாதிரிக் காட்டிக் கொள்ளவில்லை. "சரி உனக்குப் பெயர் சின்னாம்பி" என்று வைத்துவிட்டேன். சரி உங்களுக்குச் சொன்னால் என்ன? சின்னாம்பியைப் பற்றி உங்களுக்குத்தான் முதல்லே சொல்லுகிறேன். பெண்டாட்டிக்குக் கூடச் சொல்லவில்லை. அவள் முந்தியே 'மனிசன் லூசு சந்திப்புக்களுக்கு (அதுதான் 'இலக்கியச் சந்திப்புக்கள்') போகிறார் என்கிறாள். அதிலே இதைச் சொல்லி ஏன் வீண்வேலை. கடைசியாப் போன சந்திப்பிலே வேட்டியை உருவிறமாதிரி நாலு கேள்வி கேட்டாங்கள்;சரி அது இருக்கட்டும். திருப்பப் பாருங்கோ சின்னாம்பியில் தொடங்கி வேட்டியில் வந்து நிற்கிறேன்.

சின்னாம்பியை எப்ப முதலில் சந்தித்தேன்? அதுவுமொரு சின்ன அதிர்ச்சிதான்.நானும் 'நானுண்டு என் மொக்கைப் பதிவுண்டு' என்றுதான் இருந்தேன். யாரைவாவது திட்டி எழுதிப் கொஞ்சம் பிரபலமாகுவமென்று ஒரு பதிவு எழுதிக் கொண்டிருந்தேனாம். பின்னும் "கீக் கீக்"என்று ஒரு சாதியாச் சிரித்துக் கேட்டுது. 'ஷிவ்ட்' கீ வேலை செய்யவில்லையென்றுதான் யோசனை ஓடியது. என்றாலும் திருப்ப "கீக் கீக்"என்று சிரித்துக் கேட்டது. சத்தம் அந்தக் காலத்து 'கட்டை ஸ்பீக்கர்'இலிருந்து வருகிறமாதிரி, ஸ்டீரியோ இல்லை. "யாரடா அது?" என்று அதட்டினேன்.

எதிரில் பணிவாக "ஐயா வணக்கம்" என்று வந்தான். சாதாரண உயரம், சாதாரண உருவம், சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை. அதுதான் எனக்குக் கொஞ்சம் கவலை. இரண்டு பந்தி வர்ணித்து உங்களை இம்சைப்படுத்தி இருக்கலாமில்லையா?

"எப்படி வந்தாய், முன்கதவு பூட்டியிருக்கே?"
"நான் ஏன் வரவேண்டும், நான் இங்குதான் எப்பவும் இருக்கிறேன்!"
"ஓஹோ தாங்கள்தான் கடவுளோ?"
"அதுதான் இல்லை, நானும் உன்னைமாதிரி ஒரு சாதாரணன்".
"கண்டுபிடித்து விட்டேன் நீ யாரென்று, பழைய நாடகங்களில் நீ நல்ல பேமஸ். நீதான் என் மனச்சாட்சி"
"கஸ்மாலம், கொஞ்சம் வித்தியாசமாக யோசி, இன்னும் பழைய காலத்திலை நிக்கிறாய். 'நனவிடை தோய்தல்' சக்கரவர்த்தி என்று மெல்பனில் இருந்து விருதெல்லாம் வரப்போகுது!"
"விருதா, நல்லதுதானே யப்பா!"
"இது நக்கல் விருது ஓய்,உமக்கு வயது போட்டுது என்று பூடகமாசச் சொல்லுறாங்கள்"

நானும் 'பதிவுலகத்திலே இது சகஜமப்பா'என்று இருந்துவிட்டேன்.

என்னோடு அந்தக் காலத்திலே படித்த உதயன் அடிக்கடி சொல்லுவான் "xyz இலே இதெல்லாம் சகஜமப்பா" என்று. இதிலே xyz என்னவாகவும் இருக்கலாம். உதாரணம் 'வாழ்க்கை, யானைபிடிப்பது, கொய்யாக்காய் களவெடுக்கிறது". இப்ப அவன் phD முடித்து அமெரிக்காவிலே. இவனைப்பற்றிச் சொல்லப்போனால் அது பெரிய கதை. ஆறாம் வகுப்பிலே தமிழ் வாத்தியாரைப் பிடிக்கவில்லை என்று கவிதை எழுதினான். வாத்தியாருக்கு ஒவ்வொரு நாளும் காலைச் சாப்பாடு இடியப்பமும் சொதியும் மட்டுமே என்பது ஊரறிந்த இரகசியம், மத்தியானச் சோற்றிலும் மீந்துபோன சொதியை ஊற்றித் தின்னுவார். சொதியர் என்றுதான் அவரை ஊரிலே தெரியும்.

"கொக்கு மூக்கனே, குதிரைச் செவியனே
நித்தமுனக்கு சொதி செய்வாள் உன்னில்லாள்
காட்டுவாய் உன் கொதியை எம் மீது
முறிந்தது பிரம்பு, என் பாவம் செய்தோம் யாம்?"


எப்பவுமே சிரிக்காத தமிழ் வாத்தியார் இதை வாசித்த பிறகு விழுந்து விழுந்து சிரித்தார். கடைசி வரி சரியில்லை என்று 'கொமெண்ட்' போட்டும் கொடுத்தார். கேதீஸ்வரனுக்கு இந்தச் சந்தங்களொன்றும் பிடிக்காது.

"முறிந்த பிரம்பொன்று
சொல்லிச் சென்றது
வாத்தியாரின் கொதியை..."


என்று எழுதவேண்டும் என்று திருத்தம் கொடுத்தான். நான் தலையைப் பிறாண்டிக் கொண்டேன்.

"டேய் உனக்குக் கவிதை எல்லாம் சுட்டுப் போட்டாலும் வராது, விட்டுர்ரா!"

திடுக்கிட்டு விட்டேன். இவனுக்கு நான் நினைப்பதுவும் தெரிகிறது.

"சின்னாம்பி" பரிதாபமாத் தொடங்கினேன்,"உனக்கு நான் நினைப்பதுவும் தெரியுதா?"
மீண்டும் "கீக் கீக்" என்று சிரித்தான் சின்னாம்பி. "அந்த 'அறிவில்' நான் கொஞ்சம் வீக்... நீ நினைப்பதில் ஒரு பகுதிதான் எனக்குத் தெரிகிறது, முழுக்கத் தெரியுதில்லை " என்று கொஞ்சம் வெட்கப்பட்டான்.

"சரி இப்ப சொல்லு நீ ஆர்?" பரிதாபமாகக் கெஞ்சினேன்.

"கேள்விக்குக் கேள்வி, மனிதனுக்கு எத்தனை அறிவு உண்டு?"

ஏழு என்று சொல்ல யோசித்து, "ஆறு" என்றேன்.

"எமக்குப் பன்னிரண்டு" என்றான்.


(தொடரலாம்)


-----------
கொதி -கடுங்கோபம்
சவர்க்காரம்- soap

Sunday, June 10, 2012

நொந்தகோபால்

இரண்டு பெண்கள் பேசிக்கொண்டது.
இடம்: சிட்னியின் மேற்குப்பக்க புறநகர் ஒன்று

"ஐசே நான் உங்களை எங்கையோ பாத்திருக்கிறன்..... நீங்கள் லேடீஸ் கொலிஜ்'சே?"
"ஓம், நான் 92 ஏ/எல் பாட்ச், நீங்கள்?"
"நான் 93!"
"எப்படி இருக்கிறீயள்"

"------"
...
"------"
கதை ஒரு பத்து நிமிசம் உப்புச் சப்பில்லாமல் போகுது. பிறகு

"ஐசே, உங்கடை மனிசன்ர பேரென்ன?"
"பாலகோபால்"
"ஓ, உயரமா சிவலையா இருப்பாரே?
இரண்டாவது பெண் கொஞ்சம் அசௌகரியமாகிறார். "ம்ம்ம்"
"உத்துப் பாத்தா கமலின்ரை சாயலடிக்கும்.."
"அப்படித்தான் அவர் நினைக்கிறார், உங்களுக்கு எப்படி அவரைத் தெரியும்?" என்றார் உடனே
"நான் கம்பசிலை அவருக்கு ஜூனியர்"
"ம்ம்ம் நான் வேறை கம்பஸ்!?"
"கோபால் நல்ல முசுப்பாத்தி. கடி ஜோக் நெடுகச் சொல்லி எல்லாரையும் சிரிக்கவைப்பார்."
"ம்ம்ம்"
"ஆனாப் பாருங்கோ அவர் கொஞ்சம் 'லெவல்' பேர்வழி, அவர் மாதிரி இருந்தால் கொஞ்சம் லெவல் வரும்தானே?"
"ம்ம்ம்"
"அது சரி இப்பவும் அவர் ஷூ'வை நல்லா மினுக்கித்தான் போடுறவரே? அப்ப அவர் ஷூ'வைப் பள பள எண்டு கண்ணாடி மாதிரிதான் வைச்சிருப்பார்"
கொஞ்சம் எரிச்சலோடு, "ஆருக்கு இதையெல்லாம் கவனிக்க நேரம் வருது..."

"சரி ஐசே, நானொருக்கா என்ரை மனிசனையும் கூட்டிக் கொண்டு உங்கடை வீட்டுக்கு வாறன்.கோபாலின்ரை கடி ஜோக்'குகளைக் கேட்டுக் கனகாலம் ஆச்சு, எப்ப ப்ரீ'யா நிப்பியள்?"

"இப்ப எங்களுக்கு நேரமில்லைப் பாருங்கோ, பெடியனுக்கு எக்ஸாம் வருது, பிறகு நேரம் வரேக்கை பாப்பம்...இப்ப நேரம் போயிட்டுது, நான் வரட்டே"

-----
பாலகோபாலுக்கு அட்வைஸ் :"ஆம்பிளை வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா!"

Friday, June 8, 2012

மழை

இரவெல்லாம் ஒரே மழை. சாக்குக் கட்டிலில் போர்த்துக்கொண்டு படுத்திருக்க நன்றாக இருந்தது. ஒன்றிரண்டு மழைத்துளிகள் கூரையில் இருந்து எப்படியோ தப்பி வந்து முகத்தில் விழுந்தன. இரவு முழுவதும் தூரத்தில் ஷெல் வெடிப்பதுவும் துப்பாக்கிகள் சடசடப்பதுவும் இடிமுழக்கத்துடன் கலந்து கேட்டது. சிலவேளைகளில் ஷெல் விழுந்து யாரும் சாகாமல் இருந்திருக்கவும் கூடும். அப்படியே இருக்கக் கடவது. போன கிழமை இப்படி இரவு முழுக்க மழைபெய்த ஒரு இரவில்தான் ஷெல் விழுந்து பன்னிரண்டு பேர் ஏதோ ஒரு ஊரில் செத்தார்கள். ஈழநாடு,ஈழமுரசு, உதயனில் எல்லாம் தலைப்புச் செய்தி. நான்கு ஆண்கள், ஆறு பெண்கள், இரண்டு குழந்தைகள். ரூபவாஹினி ரிவி "நேற்றிரவு பலாலி இராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை இராணுவம் முறியடித்துப் பதில் தாக்குதல் நடத்தியதில் பதினைந்து பயங்கரவாதிகள் கொல்லப்பட்டார்கள்" என்றது. இன்றைக்கு அப்படி இராது. இருக்கக்கூடாது. சந்நிதி முருகன் பார்த்துக் கொள்வார். "அவருக்கு அவற்றை தேர் ஐக் காப்பாற்ற முடியவில்லை, ஆக்களைக் காப்பாற்றப் போறாறோ?" என்று சேந்தன் அண்ணா கேட்பார். அவர் நிறையச் சிவப்பு மட்டைப் புத்தகங்கள் வாசிப்பார். புத்தகங்கள் எல்லாம் பூர்ஷ்ஷவா, நிலவுடமை, சுரண்டல், உழைக்கும் வர்க்கம், ஆளும் வர்க்கம் என்று இருக்கும். ஒன்றும் புரியாது. ஒரு புத்தகத்திலும் ஒரு படமும் போட்டிருக்காது. நான் படம் போட்ட புத்தங்கள்தான் வாசிப்பேன். "ரொபின்சன் குறூசோ" கூட மழை பெய்த ஒரு நாளில்தான் சேந்தன் அண்ணாவின் புத்தக அலுமாரியில் கண்டு பிடித்து வாசித்தேன். "ரொபின்சன் குறூசோ" இற்குப் பக்கத்தில் ஒரு கறுப்பு/வெள்ளை புகைப்படங்கள் நிறையப் போட்ட ஒரு புத்தகமும் இருந்தது.

காலையில் மழை ஓய்ந்திருந்தது. ஆனால் ஒரே மழை இருட்டு. வெள்ளம் வடிந்திருந்தது. நிலம் சுத்தமாக இருந்தது. நிலத்தில் அட்டைகளும் நத்தைகளும் ஊர்ந்து திரிந்தன. மரங்களும் மழையில் கழுவுப்பட்டுச் சுத்தமாக இருந்தன. கிளிகள், குருவிகள் என்று கலவையாகச் சத்தம் கேட்டது. "கோபால் பற்பொடி நேரம் காலை ஏழு மணி" என்று றேடியோ சொன்னது. பொங்கும் பூம்புனல் அடுத்ததாக இருக்கலாம். றேடியோவை முடுக்கினேன், ஆமி றேடியோவில் "சிட்டூக்குச் செல்லச் சிட்டூக்குச்-சிறகு முளைத்தது.." என்று யேசுதாஸ் சோகமாகப் பாடிக்கொண்டிருந்தார். இடையில் எந்நேரமும் பாட்டு நிறுத்தப்பட்டு, "அச்சுவேலி, இடைக்காடு ,அவரங்கால் மக்கலுக்கு.....பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடக்க இருப்பதால் உடனடியாக பதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயரவும்... " என்று அறிவித்தல் வரலாம். வரவில்லை. "ஒரே இடத்தில் ஆட்களைக் குவித்தால் போடுகிற குண்டுகளுக்குக்கான செலவு குறையும்; குறைந்த குண்டுகள், நிறைந்த சாவுகள்"; இஸ்ரேல்காரன் 'அத்துலத் முதலி'க்குக் கொடுத்த அட்வைஸ் இப்படித்தான் இருந்திருக்க்கும்.

"இண்டைக்கு அடுப்பு மூட்டுவது கஷ்டம், விறகு எல்லாம் ஈரம், போய்ப் பாண் வாங்கி வா" என்றா அம்மா. மழைநாட்களிற் பாண் சூடாக சாப்பிட்டால் நன்றாக இருக்கும். பாண்காரனும் மழை என்பதாற் பிந்தித்தான் கடைகளில் 'சப்ளை' பண்ணியிருப்பான். பாண் சூடாகத்தான் இருக்கும்.

அப்பா வாங்கித் தந்த ஹீரோ சைக்கிள். அதை உழக்க ஒருதரம் தனியாகச் சாப்பிட வேண்டும். என்றாலும் அதில் ஒரு பிரியம். ஓ/எல் பரீட்சைக்கு அதில்தான் போனேன். மகன் வளர்ந்திட்டான் என்று அப்பாவிற்குப் புரிந்த ஒருநாள் வாங்கியிருப்பார்.

மண் ரோட்டில் சைக்கிள் ரயர் தடம் பதிந்த அடையாளங்கள் தெரிந்தன. குட்டை குட்டையாகத் தேங்கி நின்ற தண்ணீரை விலக்கச் சைக்கிளை வெட்டி வெட்டி ஓட வேண்டியிருந்தது. "சரக்க்" என்று சத்தம் கேட்டது. அட்டையோ நத்தையோ ஒன்று ரயரில் நெரிந்து போயிருக்கவேண்டும். ஒருகணம் அரியண்டம், பிறகு பிறகு பரிதாப உணர்ச்சி. புத்த மதக் கொள்கைப்படி ஈ , எறும்பைக் கூடக் கொல்லக் கூடாதாமே? தூரத்தில் இடைக்கிடை துவக்குச் சூட்டுச் சத்தங்கள் கேட்டுக் கொண்டுதானிருந்தன. ஒன்றிரண்டு சூட்டுச் சத்தங்கள் கேட்டாலே தலை தெறிக்க எதிர்த் திசையில் ஓடும் காலம் கழிந்து, 'தூரத்தில் தானே'என்று அசண்டையாக இருக்கும் காலமிது. ஈரக்காற்று முகத்தில் அடித்தது... நெஞ்சுக்குக் குறுக்கே கைகளைக் கட்டிக்கோண்டு மெலிதாக நடுங்கிக்கொண்டு இரண்டொரு பெரிசுகள் நடந்து போய்க்கொண்டிருந்தர்கள். ('இந்தக் காலத்துப் பெடியளுக்குக் குளிர்ச்சட்டை தேவைப்படுது, நாங்களும் இருக்கிறமே, இந்த அறுவைத்தஞ்சு-எழுவது வயதிலும் சட்டையே இல்லாமல் நடந்து திரியுறம், இது ஒரு குளிரே?)

திடீரென்று வெயில் அடிக்க ஆரம்பித்தது. இப்பதான் முதல் முதலில் வெயில் அடிப்பதுமாதிரி ஒரு சுத்தமான புது வெயில். கண்கூசியது. தும்பிகளும், வண்ணத்திப் பூச்சிகளும் பறக்கத் தொடங்கின. முன்பு எங்கு ஒளித்திருந்தன? தூரத்தில் ஹெலிகொப்ரர் பறப்பது கேட்டது. ஹெலிகொப்ரர்காரன் என்றால் கண்ணில் பட்ட யாரையும் துரத்திச் துரத்திச் சுடுவான். "பிளேன்"காறன் என்றால் முன்பே திட்டமிட்டிருந்தால் தான் குண்டு போடுவான். போற வாற வழியில் "எந்நேரமும் எவருக்கும்" வஞ்சகமில்லாமல் சுடுவது ஹெலிகாரன்தான். நினைத்தது மாதிரி 'ஹெலிச்சூட்டுச்' சத்தம் கேட்டது, தூரத்தான். கிட்ட வந்தால் கண்ணில் அகப்பட்ட வீட்டுக்கு புகுந்து தலைக்கறுப்பையும் சைக்கிளையும் மறைக்கவேண்டும். '50 கலிபரா?, 60 கலிபரா' ? எதுவாக இருந்தாலும் ஒரு மனிதனைப் பிய்த்தெறியப் போதும். சிலவேளை ஜாம்பழப் போத்தலில் கைக்குண்டைப் நுளைத்து, அதைச் சும்மா மேலேயிருந்து போட்டுவிடுவாங்கள். அப்படி ஒன்று விழுந்துதான் எங்கள் கணக்கு வாத்தியார் ஒருவர் இறந்து போனார்.

மீண்டும் இருட்டு. இருட்டு என்றால் இரவு மாதிரி இருட்டு. எதிரில் சுகந்தி வந்திருந்தாலே மட்டுக்கட்டியிருக்க மாட்டேன். அவ்வளவு இருட்டு. மழை எந்நேரமும் பெய்யலாம். அல்லது ரூபவாஹினியில் சொல்வதுமாதிரி 'மழை பெய்யக்கூடும்' . அதுக்குமுன் பாணோடு வீடு போகவேண்டும். இரண்டரை இறாத்தல் பாண் வாங்கவேண்டும். அதில் ஒரு இறாத்தல் "அச்சுப்" பாண், மிகுதி "ரோஸ்" பாண். 'ரோஸ்" பாணின் கரை சைக்கிளை ஓடி ஓடித் தின்ன நன்றாக இருக்கும். பாணுக்கு கோழிக்கறி நல்ல பொருத்தம்-அதுவும் மழை நாட்களில். இல்லாவிட்டால் போனாப் போகுது என்று தேங்காய்ச் சம்பலோடு சாப்பிடலாம், அதுவும் நல்லாத்தான் இருக்கும். மழைக்கு இடித்த அரிசிமாப் புட்டும் நல்லாகத்தான் இருக்கும். வெளியில் மழை பெய்ய , வீட்டு விறாந்தையில் குந்தியிருந்து, புட்டை தேங்காய்ச் சம்பலோடு... காமுகன் என்பவன் எந்த நேரமும் பொம்பிளையைப் பற்றி யோசிப்பானாம், நான் மழை வந்தால் சாப்பாட்டைப் பற்றி யோசிக்கத் தொடங்கிவிடுகிறேன்.

**************************

பின்னேரம் ஆகியும் இருட்டு விலகவில்லை. இனி வெளிச்சம் நாளை காலை வந்தால்தான் உண்டு. வயல் வெளியில் நடுங்கிக் கொண்டு நடந்தேன். சுருக்கிய குடை கையில். குளிர் காற்றுக் காதில் வீசியது. வயல் கட்டில் 'பலன்ஸ்' பண்ணி நடக்க நாரியை நெளித்து இடைக்கிடை ஒரு சின்ன ஓட்டம் ஓட வேண்டியிருந்தது. எதிரில் சின்ராசு அண்ணை "தண்ணீஈஈ கருக்கையிலே அங்கே தவளை சத்தம் கேட்டீஈஈருச்சு..." என்று பாடிக்கொண்டு வந்தார். என்னைக் கண்டதும் பாட்டை நிறுத்தி , "தம்பி வளலாய்க் குளத்துக்க முதலை வந்துட்டுதாம், பாத்துப் போ" என்றார். இந்த முதலைகள் எப்படி வருகின்றனவோ தெரியாது. மழைக்காலத்தில் மட்டும்தான் யாராவது காண்பார்கள். முதலை என்றவுடனே ஆளை விழுங்கிவிடுமென்றுதான் யோசனை ஓடும். ஆருக்காவது ஒரு முதலைக்கடி தன்னும் விழுந்தது மாதிரி ஊரில் அறியவில்லை. ஆனால் 'வழிதவறி' ஒரு தோட்டக் கிணற்றிற்குள் விழுந்துவிட்ட ஒரு குட்டி முதலையை அடி அடி என்று அடித்துப் பின்னும் அது சாகாததால் அதன் வாய்க்குள் இறைப்பு மிசின் பைப்'பைச் செருகி தண்ணீர் பம்ப் பண்ணிக் கொன்றார்கள்.அது பழங்கதை.செத்த முதலையை நானும் போய்ப் பார்த்திருந்தேன். முதலைப் பயம் இருந்தாலும் தலை முழுக்க அடிகாயங்களுடன் செத்திருந்த குட்டி முதலையைப் பார்க்கப் பாவமாகத்தான் இருந்தது.

புத்த மதக் கொள்கைப்படி ஈ , எறும்பைக் கூடக் கொல்லக் கூடாதாமே?


------------

நன்றிகள்:
(1) புகைப்படம்: சுகேசன் கேதீஸ்வரன்