Monday, October 20, 2014

கோன், என் மிகைநிகர் நண்பன்/அண்ணன்

சின்னஞ் சிறு வயதுகளில் ஒன்றாய் ஓடித்திரிந்து, பிறகு கால ஓட்டத்தில் பிரிந்து, பிறகு முகநூலால் மட்டும் தொடர்புகளை வைத்திருந்த ஒருவன், அண்மையில் மறைந்துவிட்டான்... அவன் நினைவாக...
இந்தமுறை ஊர் போனபோது கோனைச் சந்திக்கவேண்டும் என்பது மனதில் நின்றது. இவன் கம்பளையில்தானே நிற்பான் என்று இடைக்காடு போனபோது கோனைத் (வேலுப்பிள்ளை கனகக்கோன்) தேடவில்லை. அப்போது இடைக்காட்டில்தான் நின்றிருக்கிறான். பிறகு கொழும்புவந்து தொலைபேசியபோது கட்டாயம் சந்திப்பதாகச் சொன்னான். நான்தான் "நீ பெரியையாவின் அந்தியேட்டிக்குப் போவதாயின் அடுத்தமுறை சந்திக்கலாம்" என்றேன். அவன் சொன்ன பதில் ஒரு பத்து நிமிடங்கள் எடுத்திருக்கும். அவ்வளவு நேரமும் 'அன்பு, நட்பு' என்பதுபற்றி ஒரு குட்டிச் சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்தினான். அந்தக் கணத்தில்தான் கொஞ்சம் நெருடலாக உணர்ந்தேன்.

சிட்னி திரும்பும்வரை ஆளை சந்திக்கும் ஆவலுடன்தான் இருந்தேன். இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை. சந்திப்பு நடக்கவில்லை. நானும் அடுத்தமுறை பார்க்கலாம் என்றிருந்துவிட்டேன். வெறுமனே ஆறரை மாதங்களுக்குப் பிறகு தகவல் கிடைத்தது "கோன் சீரியஸ், அவரது தாயாரும், மூத்த அண்ணாவும் உடனே கனடாவில் இருந்து ஊர் புறப்பட்டு விட்டார்கள்" என. அடுத்தநாட் காலையே கோன் மறைந்துவிட்ட தகவல் கிடைத்தது. ஒருகணம் தாங்கமாட்டாத கோபமும் அடுத்த நிமிடமே ஒருவித வெறுமையும் சேர்ந்துவிட்டது.

கோன் எனக்கு அண்ணன் முறை. எங்கள் இருவரின் தாத்தாமாரும் ஒன்றுவிட்ட சகோதரர்கள் ! என்றாலும் நான் ஊரைவிட்டுப் படிக்கவென்று வெளியே வரும்வரை ஒவ்வொருநாளும் சென்றுவந்த வீடுகளில் அவன் வீடும் ஒன்று. என்னைவிட நான்கு வயது பெரியவன். சிறுவனாக இருந்தகாலங்களிம் மகிழ்ச்சி, குதூகலம், நக்கல், குறும்பு இருந்த ஒருவன் அவன். நான் கொஞ்சம் சீரியஸ் ரைப். நக்கல் பண்ணி என்னை அழ வைப்பது இவனது ஒரு பகுதிநேரத் தொழில்.

அநேகமான ஆண்கள் எல்லோருக்குள்ளும்- அவர்கள் வயதானவர்கள் ஆகிவிட்டாலும் ஒரு சிறுவன் ஒளிந்துகொண்டிருப்பான் என்பார்கள். என்றாலும் இவனில் இது சற்று அதிகம். கோனை இப்போது பார்த்தாலும் அவனில் தெரிவது ஒரு அதீத குறும்புச் சிறுவன். சந்தர்ப்பம் கிடைத்தால் இப்பவும் "பட்டப்பெயரொன்றைக் கட்டைக் குரலில் சொல்லிவிடுவான்போல் இருப்பான். இல்லாவிட்டால் சைக்கிள் ரயருக்குக் காற்றைத் திறந்துபோட்டு அப்பாவி மாதிரி முகத்தை வைத்துக் கொண்டிருக்கிறானோ என்று ஒரு சந்தேகமும் வரும். இவ்வளவு விளையாட்டுப் புத்திகள் இருந்தாலும் அத்தோடு ஞாபகம் இருப்பது இவனின் 'பகிர்ந்துண்ணும்' குணம். மீன் பொரியல் , இறால் பொரியல், வாழைப்பழம், பிஸ்கட் பெட்டி என்று எதென்றாலும் பக்கத்தில் இருக்கும் யாருடனும் பகிர்ந்தே உண்பான்.

1986 அளவில் நிறைய இளைஞர்கள் ஊரில் (வடக்கில்) இருக்கமுடியாத நிலை. இந்த நிலையில்தான் கோன் கண்டிக்கு வந்து பேராதனை வீதியில் ஒரு வீட்டில் தங்குகிறான். பிறகு சில வருடங்கள் கழித்து 'நில அளவையியல்' படிக்கக் கிடைத்து தியத்தலாவ போகின்றான். அதே காலங்களில் நான் பேராதனை பல்கலைக்கழக அக்பர் விடுதியில். "அன்பின் கண்ணனுக்கு, .."என்று முத்து முத்தான கையெழுத்துக்களில் கடிதங்கள் போடுவான். என்வலப்பில் இருக்கும் கையெழுத்தும் மிக அழகாக இருப்பதால் இரண்டொருதரம் உடைக்கப்பட்டே கடிதங்கள் கிடைத்தன. கடிதங்கள் வாயிலாக தியத்தலாவ காடு எப்படி இருக்கும், அங்கு இருக்கும் மக்களின் எளிய வாழ்வு/அப்பாவித்தனம் பற்றி ஒரு விம்பத்தை உருவாக்கி வைத்திருந்தேன். ஓய்வு நேரங்களில் ஓவியம் வரைகின்றான் என்றும் எழுதியிருந்தான்.

பிறகு என் கல்யாண விட்டு நேரம், எனக்கு சொந்த அண்ணன் இல்லாத குறையை நிவர்த்தி செய்யுமாப் போல, வீட்டுக்கு வந்து 'போட்டுப் பறிச்சு' உதவிகள் செய்தான். கிண்டல், நக்கல், கல்யாணம் கட்டிய ஆணின் சோகக் கதைகள் (வேடிக்கையாக) என்று பொழுது போனது.

நான் வெளிநாடு சென்றபின் தொடர்புகள் குறையத் தொடங்கி ஏறக்குறைய இல்லாமற் போனது... பிறகு ஃபேஸ்புக் வந்தது. கவிதைகள் எழுதுகிறான் என்று புரிந்துகொண்டேன். கவிதைகள் பற்றிய என் புரிதல்கள் மட்டு என்பதால் அதைப்பற்றி நான் அவனிடம் பேசுவதில்லை. அடிக்கடி ஊர் (இடைக்காடு) போய் புகைப்படங்கள் எடுத்து ஃபேஸ்புக் இல் போடுவான். ரசித்துப் பார்ப்பேன். கிட்டத்தட்ட 80 களின் நடுப்பகுதிக்கு ஞாபகங்களை எடுத்துப் போய்விடுகிறது. எத்தனைமுறை மீட்டாலும் அலுக்காத ஞாபகங்கள். அதில்தான் ஒன்று கோன் உருவாக்க முயற்சித்த புது மொழி ஒன்று! அம்மொழியில் அவன் அடிக்கடி சொல்லியது 'பீற்றுண்டி பில்லி சுள்ளி, சுள்ளி'. அர்த்தம் இன்றுவரை தெரியாது. இவனையே கேட்கவேண்டும் என்று அப்பப்ப நினைத்துக் கொள்வேன். சென்றமுறை சந்தித்திருந்தால் கேட்டிருக்கலாம். இருக்கட்டும், எல்லா நினைவுகளையும் காவிக் கொள்கின்றேன்.
















------
மிகைநிகர் - virtual


2 comments:

  1. இரமணிதரன், க.October 21, 2014 at 4:20 PM

    மீண்டும் இதனை வாசித்தபோதும், கோன் இறந்த செய்தி செங்கோ சொன்னபோதேற்பட்ட சித்தம் விறைத்தநிலைதான் ....

    ReplyDelete
    Replies
    1. ஆம்... முதலிம் ஆள் சீரியஸ் என்று செங்கோவின் மெசேஜ் கிடைத்தது. எப்படியும் சரியாகும், தப்பி விடுவான் என்றுதான் எண்ணியிருந்தேன். 12 மணித்தியாலங்களுக்குள் வந்த செங்கோ'வின் அடுத்த மெசேஜ் அதைத் தகர்த்தது...

      முகத்தை அஷ்டகோணலாக்கி, சுட்டு விரலை நீட்டி "பீற்றுண்டி பில்லி சுள்ளி, சுள்ளி" என்று குழப்பம் விளைவித்த சிறுவன் என் மனக்கண்ணில்...

      Delete