Monday, May 23, 2011

பணப் பையைத் தொலைத்தவன்

"நண்பனே" , என்று அந்தக் குரல் என்னை அழைத்தபோது, நான் "தூங்காபி" ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தேன். அன்று கிறிஸ்தமஸ் தினம் வேறு. 50 அடி நடைக்குள் வரும் மூன்று இடியப்பக் கடைகளில் ஒன்றாவது மூடாமலிருக்க வேண்டும். இல்லாவிட்டால் இரவுச் சாப்பாடும் பாண் தான்.

குரல் வந்த திசையில் தலையை நிமிர்த்திப் பார்த்தேன். 6 அடி 4 அங்குலத்திற்கும் குறையாத உயரத்தில் நம் "சகோதர" இனத்தவன். கொஞ்சம் சதுர முகம். கருப்பான சுருட்டை முடி. மண்ணிறக் கண்கள். இந்த மார்கழி வெக்கையிலும் கோட் , சூட் போட்டிருந்தான். நல்ல வேலையில் இருக்கவேண்டும். சில ஆங்கிலப் படங்களில் வரும் வில்லன் மாதிரிச் சுமாராக இருந்தான். இவன் பூர்வீகம் இத்தாலி அல்லது கிரேக்கமாக இருக்கவேண்டும் என்று எண்ணிக் கொண்டேன். பக்கத்தில் நின்றவள் அவன் மனைவி அல்லது துணைவியாக இருக்கவேண்டும். உயரமாக, ஒல்லியாக வில்லு மாதிரியிருந்தாள். அவளின் காலைக் கட்டிக் கொண்டு ஒரு நான்கு வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை. நீலக் கண்கள். நீளமான, பொன்னிற முடி. குழந்தை அம்மா மாதிரியே அழகாக இருந்தது.

நான் வாய் பார்த்துக் கொண்டு நின்றதால் பதில் சொல்ல மறந்து போய் விட்டேன் போலிருக்கிறது.

"தொந்தரவிற்கு மன்னிக்கவும், என் பெயர் மார்க்கஸ் செர்ஜோபௌலஸ். இவள் என் துணைவி கிளாரா , இவள் சாரா - என் குழந்தை , அப்படித்தான் நினைகிறேன்" என்று வெடிச் சிரிப்புச் சிரித்தான்.

அவளும் நக்கலுக்குக் குறைந்தவள்போல் இல்லை.

"நானும் அப்படித்தான் நினைக்கிறேன்" என்று கண் சிமிட்டினாள்.

"என் பெயர் சுப்ரமணியம் வாசுதேவன்" , வேண்டுமென்று பாஸ்போர்ட் இல் இருக்கிறமாதிரிச் சொன்னேன்.

இப்ப அவன் கொஞ்சம் கிட்ட வந்தான். குரலைத் தாழ்த்தி, "இன்றைக்குக் கிறிஸ்மஸ் தெரியுமா?" என்றான். 'கிறிஸ்மஸ், கோட் , சூட் போட்ட வெள்ளைக்காரன், அடுத்து என்ன , பைபிளை எடுத்து நீட்டப் போகிறான்' என்று யோசனை ஓடியது.

"எல்லா வங்கிகளும் பூட்டு. கடைகளும் பூட்டு", என்று தொடந்தான். "இடியப்பக் கடை திறந்திருக்கும்" அன்று நான் என் உள்ளூர்த் தகவல்திரட்டை எடுத்துவிடமுன், "நான் என் பணப்பையைத் தொலைத்து விட்டேன்" என்றான்.

பணப்பையைத் தொலைத்துவிட்டுத் 'தேடுவபவர்களை' நான் துபாய் தேய்ராவில், ஷார்ஜா கிரிக்கெட் கிரவுண்ட்டிற்கு வெளியே, சிறிரங்கம் கோவில் உள்வீதியில், கொழும்பு /கோட்டை பஸ் ஸ்ராண்ட்டில், இன்னும் பின்னுக்குப் போனால் யாழ்ப்பாண நகரத்தில் எல்லாம் சந்தித்திருக்கிறேன். எல்லாரும் நிறையத் தூரத்தில் இருந்துதான் வந்திருப்பார்கள். எல்லாருக்கும் அது நண்பர்கள் இல்லாத புது நகரமாகத்தான் இருக்கும். இப்பதான் ஞாபகம் வருது. எல்லாரும் நாகரிகமாக "இங்கிலிஷ்" பேசுவார்கள். எல்லாரும் வீட்டுக்குப் போக பஸ் காசு கேட்பார்கள். மறக்காமல் எங்கள் பெயர், விலாசத்தையும் எழுதி வைப்பார்கள், காசைத் திருப்பி அனுப்பத்தான்!

நான் கொஞ்சம் உஷார் பேர்வழி. 'யாரிடமும் ஒருக்காக்கூட ஏமாந்ததில்லை' என்று மனைவியிடம் சொல்லியிருக்கிறேன். அவள் நம்பியமாதிரித் தெரியவில்லை.

நான் வேண்டுமென்று ஒன்றும் சொல்லவில்லை. ஒரு சிறிய அசௌகரியமான அமைதி. "என் கார் அங்கே நிற்கிறது, பார்" என்று எதிற்பக்கம் சுட்டிக்காட்டினான். "அப்பாடா, இது ரிக்கற் வாங்கப் பணம் கேட்கப்போகும் வகையல்ல" என்று ஒரு சின்ன ஆசுவாசம். தூரத்தில் தெரிந்த காரைப் பார்த்தேன். புத்தம் புதிய காரல்ல. என்றாலும் என் நகரும் தகரக் கூடு போலிருக்கும் காருடன் பார்க்கும்போது எவ்வளவோ பரவாயில்லை. "இவன் பைபிள் பேர்வழிதான்" என்று முடிவு கட்டிக்கொண்டிருக்க, "தந்தையே, பசிக்கிறது, மக்காஸ் போவோம்" என்று சிறுமி அழத் தொடங்கினாள்.

"சரி, உன் நேரத்தை அதிகம் எடுக்க விரும்பவில்லை. உன்னைப் பார்த்தால் கௌரவமான பேர்வழி போலுள்ளாய்; என் காருக்குப் பெற்றோல் தீர்ந்துவிட்டது. முந்தியே சொன்னேனே, என் பணப் பையும் தொலைந்து விட்டது. ஒரு முப்பது டொலர் இப்போது தருவாயாயின், நான் வீடு போய்ச்சேருமட்டுமளவிற்குப் பெற்றோல் போட்டுவிடுவேன், ஒரு நண்பனுக்கு நண்பனாக இந்த உதவியைச் செய்யமாட்டாயா?" என்று கெஞ்சும் தொனியிற் கேட்டான்.

என்ன சொல்லி இவனைக் "கழட்டுவது" என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

******************

"எங்கேயப்பா இடியப்பம்? வழக்கம்போல் மறந்தாச்சோ?", இது மனைவியின் வரவேற்பு.
"அது பெரிய கதை". கதையைச் சொல்லத் தொடங்கினேன்.

முடிக்கமுன்னே "நான் மிச்சத்தைச் சொல்லுறன். கொடைவள்ளல் அவன் கேட்கமுன்னே அம்பது டொலரைத் தூக்கிக் குடுத்திருப்பீங்கள்" என்றாள்.

"ஹா ஹா பிழை, முப்பது டொலர் மட்டும்தான் இருந்தது. குடுத்துட்டன். அவன் திருப்பியனுப்புவான். "அக்கவுன்ட்" நம்பரெல்லாம் எழுதிக் கொண்டு போறான்."

"வடிவாக அனுப்புவான், வட்டியும் சேர்த்து, இருக்கட்டும் ஒரு கேள்வி"

"கேள்"

"அவள் வடிவோ?"

"சே, சும்மா ஒரு சாதாரண 'லுக்'தான்" என்றேன்!


------------

மக்காஸ் = Maccas = McDonalds
mate - இதை "நண்பன்" என்று மொழிபெயர்ப்பது மிகச் சரியாகாது. வேறு பொருத்தமான சொல் அகப்படவில்லை.

5 comments:

  1. ஹாஹா இங்கே லண்டனில் எல்லாம் பஸ் பாஸ் டொப் அப் பண்ண என ஆகக்குறைந்தது 2 பவுண்ட்ஸ் கேட்பார்கள் ஆனால் அதுக்கு சைடரோ பியரோ வாங்கிக் குடித்துவிடுவார்கள். சில பெண்கள் பால் போச்சியுடனும் குழந்தையுடனும் நின்று பால் வாங்க காசு தாருங்கள் என்பார்கள்(அழகான ஆங்கிலத்தில்) எல்லாம் ஏமாத்தத்தான்.

    ReplyDelete
  2. நாகரீகமான பிச்சைக்கார்களும், ஏமாளிப் பேரவளிகளும் என்று சொல்லலாம்

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி, வந்தியத்தேவன் & Dr ஐயா. இதுவும் ஒரு சர்வதேசப் பொதுப்பிரச்சினைதான் (ஏமாளிகள்+ஏமாற்றிகள்) போலிருக்கிறது.

    ReplyDelete
  4. மார்க்கஸ் செர்ஜோபௌலஸ் என்ற பெயர் உங்களுக்கு ஞாபகம் இருந்துதாக்கும் ...
    "சே, சும்மா ஒரு சாதாரண 'லுக்'தான்" என்றேன்! ஹி ஹி .. அதுக்கு அப்புறமா என்னங்கோ நடந்தது...

    ரசித்தேன் நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. சஞ்சயன், நீங்கள் சரியாகக் கடைசி வரியில் உள்ள 'விடயத்தைக்' கண்டுபிடித்துள்ளீர்கள் :-)

      Delete