Saturday, June 11, 2011

ஒரு மத நல்லிணக்கக் கதை எழுதுவது எப்படி?

முதலில் முன்னுரை:

இது கனகாலம் முன்னுக்கு சிட்னியில் உள்ள ஒரு கற்பனைத் தமிழ்ப் பள்ளிக்கூடத்தில் உண்மையாக நடந்தது. அது தமிழ்ப் பள்ளிக்கூடம் என்பதால் சனிக்கிழமைகளில் மட்டும் கூடும். "வருடாந்த பெற்றோர், ஆசிரியர், பாடசாலை நிர்வாகத்தினர் கலந்துரையாடல்" அல்லது அதுமாதிரி நீளமான தலைப்பில் நடந்த ஒன்றில் நானும் ஓசித் தேத்தண்ணி, விசுக்கோத்துக்களை அனுபவித்துக்கொண்டு அமர்ந்து இருந்தேன். எல்லாரும் 'அமர்ந்திருந்து' கூட்டத்தில் பங்கு பற்றுமாறு அடிக்கடி வேண்டிக் கொண்டார்கள். எனவே, பின்வரிசையில், கதவிற்குக் கிட்ட, வழக்கம் போல் நிற்க முடியவில்லை. கதவுக்குக் கிட்டத்தான் விசுக்கோத்து, தேத்தண்ணி, கோப்பி எல்லாம் வைத்திருந்த மேசை இருந்தது.

நடுவில் நடுவுரை:

"கூட்டம்" வழக்கமான கூட்டங்களை போல் இருந்தது. "கொட்டாவி -தேத்தண்ணி- கொட்டாவி-கோப்பி- விசுக்கோத்து- கொட்டாவி", என்று என் பொழுது போயிற்று.

எப்படா எழும்பிப் போகலாம் என்று யோசித்துக் கொண்டிருக்க ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்தது. "கடந்த வருடம் நடந்த கலை விழாவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள், உங்கள் அபிப்பிராயங்களைக் கூறுங்கள்" என்று தலைவர் கேட்க, 'கச்சிதமாக அழுத்தப்பட்ட' நீளக் கைச் சட்டையும் பொருத்தமான, ஆனால் 1980 யாழ்ப்பாணத்தை ஞாபகப்படுத்தும் வகையிலான நீளக் காற்சட்டையும் அணிந்திருந்த ஒருவர் எழுந்தார்.

"என் பெயர் பீட்டர் சூசைதாசன். நான் ஒரு ஓய்வுபெற்ற பாடசாலை உப அதிபர்", எல்லோரையும் பார்த்துப் புன்னகைத்தார்.

"எல்லாம் நல்லாத்தான் இருந்தது, ஆனால் ஒரு சின்னக் கருத்தொன்றைச் சொல்லலாமென்று உள்ளேன். இது ஒரு நாடகத்தைப் பற்றியது. அதிலே ஒரு கிழவன் 'எல்லாம் அந்தச் சிட்னி முருகன் துணை என்று மானசீகமாக அந்தப் பக்கம் பார்த்துக் கும்பிடுகிறார்?", . இந்த இடத்திலே பேச்சை நிறுத்திவிட்டு ஒரு அரை வட்டமாத் திரும்பி, எல்லோரையும் பார்த்தார்.


"அது பிழைதானே?"

நான் மட்டும் குழம்பவில்லை என்று மற்றவர்களின் முகபாவனைகளிலிருந்து விளங்கியது.

"வழக்கமாக வயதானவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் தானே? அதிலென்ன பிழை?" என்று யாரோ பின்னுக்கிருந்து கேட்டார்கள். எல்லாவற்றிற்கும், "சந்நிதி முருகா" என்று முருகனைத் துணைக்கழைக்கும் என் ஆச்சி வேறு ஞாபகத்திற்கு வந்து போனா.

"இல்லை, நான் அதைச் சொல்லவில்லை, எல்லா மதப் பிள்ளைகளும் படிக்கிற ஒரு பள்ளிக் கூடத்திலே இப்படி ஒரு சைவ சமயத்தைப் திணிக்கிற காட்சிகள் வரக்கூடாதுதானே?" தொடர்ந்தார் அவர்.

இந்த இடத்தில் இன்னொரு பேர்வழியும் புகுந்து கொண்டார். "என் பெயர் ஜான் ஆசீர்வாதமுங்க , அது தப்புதாங்க" என்றார்.

எதோ இப்படியாவது " 'நீ இலங்கைத் தமிழன், நீ இந்தியாத் தமிழன்' என்று வேறுபடாது சேர்ந்து நிக்கிறாங்கள்" என்று யோசித்தும் கொண்டேன்.

"அப்ப அவர்கள் அப்படி நாடகங்கள் போட்டால், நீங்கள் ஏசுநாதரை வைத்து ஒரு நாடகம் போடலாமே", இது நான்.

"இது நல்ல ஐடியாதான், ஆனால் சரிவராது, எங்களில் ஆட்கள் குறைவு, எனவே ஏசுநாதரை வைத்து நாடகம் போடுவது கஷ்டம்" அவர் தொடர்ந்தார்.

இதுக்குப் பிறகு , 'எல்லோரையும் திருப்திப் படுத்தும் வகையில் நாடகம் போடுவது/ கதை எழுதுவது எப்படி' என்று மூளையைக் கசக்கி யோசித்ததில் வந்த எண்ணம் இது. யாரும் இதை இலவசமாகப் பயன்படுத்தலாம். காப்புரிமைப் பிரச்சினை இல்லை.

இப்ப விஷயம்

நீங்கள் இருக்குமிடத்தில் மூன்று மதங்களைப் பின்பற்றும் தமிழ் பேசும் நன்மக்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம் எனில் நீங்கள் எழுதும் கதை அல்லது நாடகம் நான்கு பகுதிகளாக்கப்படும் ஏன் நான்கு என்பது பிறகு விளங்கும். ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பந்தி கீழே ...

ஒன்று

யேசுதாசன் தாத்தாவிற்கு எண்பது வயதாகிவிட்டது. தடித்த கண்ணாடிக்குள் தெரியும் கண்கள் மட்டும் உயிர்ப்பாக உள்ளது. தோல் இன்னும் சுருங்க முடிய முடியாதளவிற்குச் சுருங்கி விட்டது. காதும் முக்கால் செவிடாயிற்று.

பிள்ளைகள் எல்லாம் அவுஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து என்று போய்விட்டார்கள். மனைவியும் பரலோகம் போய் விட்டாள். முதுமையிற் தனிமை வேதனையானது.

"ஏசுவே என்மீது இரக்கம் காட்டும்" என்று பொதுவாக வேண்டிக் கொள்வார். குறிப்பாக எதையும் யேசுவிடம் கேட்கமாட்டார். கடந்த அறுபது, எழுபது வருடங்களாக இரவில் பைபிள் படிக்கிறார். அதொன்றுதான் அவர் வாழ்வில் மாற்றமில்லாதது. மிகுதி எல்லாம் மாறி விட்டது. (தொடரும்)

இரண்டு

இஸ்மாயில் தாத்தாவிற்கு எண்பது வயதாகிவிட்டது. தடித்த கண்ணாடிக்குள் தெரியும் கண்கள் மட்டும் உயிர்ப்பாக உள்ளது. தோல் இன்னும் சுருங்க முடிய முடியாதளவிற்குச் சுருங்கி விட்டது. காதும் முக்கால் செவிடாயிற்று.

பிள்ளைகள் எல்லாம் அவுஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து என்று போய்விட்டார்கள். மனைவியும் மவுத்தாகி விட்டாள். முதுமையிற் தனிமை வேதனையானது.

"இன்ஷா அல்லா" என்று வாய்க்கு வாய் சொல்லிக் கொள்வார். குறிப்பாக எதையும் அல்லாவிடம் கேட்கமாட்டார். கடந்த அறுபது, எழுபது வருடங்களாக இரவில் குர்ஆன் படிக்கிறார். அதொன்றுதான் அவர் வாழ்வில் மாற்றமில்லாதது. மிகுதி எல்லாம் மாறி விட்டது. (தொடரும்)

மூன்று

முருகுப்பிள்ளை தாத்தாவிற்கு எண்பது வயதாகிவிட்டது. தடித்த கண்ணாடிக்குள் தெரியும் கண்கள் மட்டும் உயிர்ப்பாக உள்ளது. தோல் இன்னும் சுருங்க முடிய முடியாதளவிற்குச் சுருங்கி விட்டது. காதும் முக்கால் செவிடாயிற்று.

பிள்ளைகள் எல்லாம் அவுஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து என்று போய்விட்டார்கள். மனைவியும் சிவனடி சேர்ந்து விட்டாள். முதுமையிற் தனிமை வேதனையானது.

"முருகா முருகா" என்று வாய்க்கு வாய் சொல்லிக் கொள்வார். குறிப்பாக எதையும் முருகனிடம் கேட்கமாட்டார். கடந்த அறுபது, எழுபது வருடங்களாக இரவில் தேவாரம்/திருவாசகம் என்பன படிக்கிறார். அதொன்றுதான் அவர் வாழ்வில் மாற்றமில்லாதது. மிகுதி எல்லாம் மாறி விட்டது. (தொடரும்)

நான்கு

ஏதுசாமி தாத்தாவிற்கு எண்பது வயதாகிவிட்டது. தடித்த கண்ணாடிக்குள் தெரியும் கண்கள் மட்டும் உயிர்ப்பாக உள்ளது. தோல் இன்னும் சுருங்க முடிய முடியாதளவிற்குச் சுருங்கி விட்டது. காதும் முக்கால் செவிடாயிற்று. (ஏதுசாமி தாத்தாவிற்குக் கடவுள் நம்பிக்கையில்லை. பெற்றோர் வைத்த பெயரை "ஏதுசாமி" என்று மாற்றிவிட்டார்)

பிள்ளைகள் எல்லாம் அவுஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து என்று போய்விட்டார்கள். மனைவியும் உடல் இயக்கத்தை நிறுத்திவிட்டாள் . முதுமையிற் தனிமை வேதனையானது.

"கடவுள் இல்லை, கடவுள் இல்லை" என்று வாய்க்கு வாய் சொல்லிக் கொள்வார். கடந்த ஐம்பது, அறுபது வருடங்களாக இரவில் பெரியாரின் புத்தகங்களைப் படிக்கிறார். அதொன்றுதான் அவர் வாழ்வில் மாற்றமில்லாதது. மிகுதி எல்லாம் மாறி விட்டது. (தொடரும்)

******************************************************

எப்படி என் ஐடியா?


-----------

Image from http://www.humanitarianforum.org/pages/en/faith-religion-and-the-forum.html


தேத்தண்ணி = தேநீர் = tea ; இந்தியாவில் பரவலாக "டீ" எனப்படும். மலேசியா/சிங்கப்பூரில் "டீத்தண்ணி" எனச் சொல்லப்படுவதைக் கேட்டுள்ளேன்.

விசுக்கோத்து = பிஸ்கட்=biscuit;

9 comments:

  1. உங்களின் சிறுகதை எழும் முறை நல்ல செய்திகளை தருகிறது பாராட்டுகள் தொடருங்கள் நன்றி

    ReplyDelete
  2. ஐயா தாங்கள் எழுதிய இந்தக் கதை.. உங்கள் எந்த அபிமான எழுத்தாளரைப் போலவும் இல்லையே... எஸ்.பொ.. செங்கை ஆழியான், சுஜாதா கேளிவிப்பட்டிருக்கிறேன்... ஆரது முத்துலிங்கம் ரஞ்சிதகுமார் ராமகிருஷ்ணன் என்பது....? பிரபலமில்லாத எழுத்தாளரோ இவங்கள் எல்லாரும்

    ReplyDelete
  3. @Anonymous

    நக்கல் அடிக்கிறீர்களோ என்று எண்ண வைக்கிறீர்கள். என்றாலும் சீரியஸ் ஆகப் பதிலிறுக்கின்றேன். அ.முத்துலிங்கமும் எஸ்.ராமகிருஷ்ணனும் இலங்கை, இந்தியா இரண்டிலும் நன்கு அறியப்பட்டவர்கள். ரஞ்சகுமார் இலங்கையில் நல்ல வாசகர் மட்டத்தில் அறியப்பட்டவர். ஆனால் மிக நிறைய எழுதுபவர் அல்ல. (அல்லது எனக்கு நிறைய வாசிக்கக் கிடைக்கவில்லை).

    பின்வரும் சுட்டிகளைக் copy/paste செய்து address bar இல் இடவும்.

    http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%85._%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

    http://www.sramakrishnan.com/

    http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D
    June 19, 2011 1:40 PM

    ReplyDelete
  4. நன்றி உங்கள் உதவிக்கு. இவற்றை வாசித்துப் பார்க்கிறேன். புரிந்தால் மீண்டும் நன்றி தெரிவிப்பேன். புரியாவிட்டால் திட்டித் தீர்ப்பேன்

    ReplyDelete
  5. ஏன் சார் இப்படி அடுக்கியிருக்கிற புத்தகங்கள் எல்லாம் நிங்கள் வாசித்ததா? அல்லது சும்மா பந்தா காட்டுகிறீர்களா..? நீங்கள் படித்த நல்ல புத்தகங்களை எங்களுக்கும் அறிமுகப்படத்துவிர்களா?

    ReplyDelete
  6. @Anonymous1

    தாராளமாகத் திட்டலாம்.

    @Anonymous2

    நீங்கள் சொல்வதில் கொஞ்சம் உண்மையுண்டு. மிச்சம், இது blogger இல் இலவசமாகக் கிடைத்த படம்.

    ReplyDelete
  7. உங்கள் கதை வாசித்தேன் கிடத்தட்ட எல்லா மதங்களையும் சமப்படுத்தி இருக்கிறீர்கள் என்று எனக்கு விளங்குது ஆனால் அவைகளின் பிள்ளை பேரன்களுக்கு விளங்கும் என்று உத்தரவாதம் இல்லை ..அவர்கள் சிலவேளையில் சண்டைக்கு வரலாம்....கவனம்....

    ReplyDelete
  8. Excellent! Well observed............

    ReplyDelete