காதுக்குள் குளிர் புகுந்து இம்சை பண்ணியது. உச்சந்தலையிலும் குளிர் சுள்ளென்று பிடித்தது. அன்றுதான் சனியும் பிடிக்கப்போகுது என்று புரியாமல் இடியப்பக் கடைக்குள் பாய்ந்து உள்ளிட்டு "ரண்டு ஃபிஷ் ரொட்டியும், ரண்டு வெஜி ரோல்ஸ்ஸும் தாங்கோ" என்றேன்.
"ஐயோ இவ்வளவு மயிர் கொட்டுண்டு போச்சு உங்களுக்கு" என்று பின்னுக்குக் கேட்டது. திரும்பிப் பார்த்தால் 'நண்பர்' நின்று கொண்டிருந்தார். நண்பருக்குத் தும்புத்தடி மாதிரி நிறையத் தலைமுடி. அதைப் பகரவீ நிறத்திற்குச் சாயம் அடித்திருந்தார். "ஞாபகம் இருக்கே? உங்களுக்கு ரண்டு வருசம் ஜூனியராகப் படிச்சனான்? இப்பதான் வந்தனான் ஒஸ்ரேலியாவுக்கு , வேலையும் எடுத்துட்டன், என்ன கார் லைசன்ஸ்தான் இன்னும் எடுக்கல்லை" என்றார். கையில் இருந்த சின்னச் சரையில் இருந்து தட்டை வடையொன்றை எடுத்து நீட்டினார்.
வடையைக் கடித்துக்கொண்டு, 'ஆரப்பா இவன்' என்று யோசனையில் ஆழ்ந்தேன். கற்பனையில் அவரின் தலைமுடியைக் கறுப்பாக்கினேன். ஆளை ஒரு பதினைந்து வருடங்கள் இளமையாக்கினேன். அவரின் பிள்ளையார் போன்ற உடம்பை, முருகனின் உடம்புபோல் 'ஒல்லி' ஆக்கினேன். அப்பவும் பிடிபடவில்லை. 'மொட்டையனாக ஆகியும் இவன் என்னை அடையாளம் கண்டு பிடித்துவிட்டான்', எனக்குக் கொஞ்சம் வெட்கமாயிற்று.
நண்பர் வலு நிதானமாக இன்னொரு வடையை எடுத்து நீட்டினார், "இன்னும் கண்டு பிடிக்கவில்லைப் போல, நான் சுகுமார், பூனை சுகுமார் எண்டா ஞாபகம் வரும்". பூனை மாதிரி வந்ததும் தெரியாமல், போனதும் தெரியாமல் வலு அமைதியாக இருந்ததால் வந்த பெயர். "நல்லா மாறீட்டாயடாப்பா, வண்டி எல்லாம் வைத்து", என்று அசடு வழிந்தேன்.
'சரி இப்ப உங்கடை மொபைல் நம்பரைத் தாங்கோ, பிறகு கதைக்கிறன்," என்று நம்பரையும் எடுத்தார் நண்பர்.
சரியாக இரண்டு நாட்கள் கழித்து நண்பரின் அழைப்பு வந்தது. மிக மெல்லிய குரலில், பக்கத்தில் யாரோ ஒட்டுக்கேட்பதைத் தவிர்ப்பதுமாதிரிப் பேசினார்.
"ஒரு சின்ன உதவி..."
"சொல்லுங்கோ"
"இந்த டிரைவிங் லைசன்ஸ் விசயம்... நான் ரண்டு மூண்டு தரம் RTA இலே டெஸ்ட் கொடுத்தாச்சு, இன்னும் சரிவரல்லை."
"ஐயோ இங்கை ஊர்மாதிரி இல்லை, காசு தள்ளி எல்லாம் எடுக்க முடியாது" என் உள்ளூர் அறிவை மெதுவாகப் பறை சாற்றினேன்.
"ஹா ஹாஹ் ஹா" என்று எதிர்முனையில் நண்பர் ஏதோ தலைசிறந்த நகைச்சுவையைக் கேட்டமாதிரிச் சிரித்துக் கொண்டிருந்தார்.
"இல்லையப்பா, டிரைவிங் பழக்கிற ஆள் சொன்னார், ஆரேனும் நண்பர் மூலம் கொஞ்சம் அதிகம் ஓடிப் பழகச் சொல்லி. கிழமைக்கு ஒருநாள் அந்த ஆளட்டை பழகிறது போதாதுதானே?"
"போதாதுதான்!"
இப்படித்தான் ஆறுமுறை தவறி, ஏழாவது முறை டிரைவிங் லைசன்ஸ் எடுத்த நான் நண்பருக்குக் கார் ஓட்டப் பழக்கிய சம்பவம் தொடங்கியது.
காருக்கு முன்புறமும் பின்புறமும் பெரிய L என்று எழுதிய அட்டைகளை மாட்டிவிட்டு , சிட்னியில் உள்ள பெரிய பெரிய வீதிகளில் எல்லாம் ஆமை வேகத்தில் நண்பர் என் அறிவுறுத்தல்களின்படி கார் ஓடிப் பழகினார். சொறிப்பார்வைகள், நடுவிரல் உயர்த்தல்களையெல்லாம் புத்தரின் உண்மையான சிஷ்யர்கள் போல் புன்னகையால் எதிர் கொண்டோம். என் 'திறமையான' பயிற்சியளிப்பால் நண்பர் மிகக் குறுகிய எட்டு மாதங்களில், இன்னும் நாலே நாலு முறை முயற்சித்து, டிரைவிங் லைசன்ஸ் எடுத்துவிட்டார். பிறகு ஒருநாள் ஒரு சின்னச் சரையில் கொஞ்சத் தட்டை வடைகளையும் நிறைய நன்றிகளையும் எடுத்து வந்தார்.
இதுக்குப் பிறகு நான் நண்பரை மறந்துவிட்டேன். ஆனால் நண்பர் இடைக்கிடை நட்பைப் புதுப்பித்துக் கொண்டிருந்தார். ஒரு வருடம் கழித்து நான் ஊருக்குப் போக ஆயத்தம் பண்ணிக் கொண்டிருக்கும்போது வாய் நிறையப் புன்னகையுடனும் கையில் நாலு கிலோ எடையில் ஒரு 'சின்னப்' பையுடனும் வீடு வந்து சேர்ந்தார்.
"அண்ணை ஊருக்குப் போறியள் எண்டு கேள்விப்பட்டன். இந்தச் சின்னப் பார்சலை கொழும்பிலை என்ரை மனிசியின்ரை தம்பியிட்டை கொடுத்து விடுவியளே?"
நன்றிக்கடனாக நண்பர் தட்டைவடைச் சரை ஒன்றை எனக்குத் தரவும் மறக்கவில்லை.
-----
நட்பு மிக ஆழமானது என்று மீண்டும் ஆறு மாதங்களின் பின் புரிந்தது.
"அண்ணை ஒரு சின்ன உதவி," நண்பர் வழக்கம்போல் மெல்லிய குரலில் தொலைபேசினார்.
"சொல்லுங்கோ"
"மாமா ஊரிலை இருந்து வாறார், சிட்னி எயர்போர்டில் இருந்து கூட்டி வரவேணும், எனக்கு உந்தப் பெரிய பெரிய ரோட்டுகளிலை கார் ஓடப் பயமாக இருக்கு. இப்பதானை லைசன்ஸ் எடுத்தனான். நீங்கள்தான் கார் ஓடவேணும், சனிக்கிழமை இரவுதான் வாறார். ஏலும்தானே?"
சிட்னி விமான நிலையத்திலிருந்து திரும்பி வரும்போது , 'மாமா' என் வாகனமோட்டும் திறமையை வெகுவாகப் புகழ்ந்து கொண்டு வந்தார். மாமா கொண்டு வந்த 'பருத்துறை' வடைகளில் பாதி எனக்குக் கிடைத்தது.
-----
நட்பு இன்னும் ஆழமானது என்று இன்னும் ஆறே மாதங்களிற் புரிந்தது.
ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலையில், நடுத்தர வயதைத் தாண்டிய என் கார் சண்டித்தனம் பண்ணி நடுவீதியில் நின்றுவிட்டது. இரண்டு வெள்ளைக்காரத் தடியன்கள் 'பாவம்' பார்த்துத் தள்ளியதில் காரை வீதியின் கரையில் நிறுத்திவிட்டேன். 'வீதி உதவி'(road assist) இற்கு வருடச் சந்தா கட்ட மறந்து விட்டேன். இப்ப கூப்பிட்டால் பெரிய தொகையை உருவி விடுவார்கள், கட்டணமாக.
காருக்கு வெளியே வந்தேன். காதுக்குள் குளிர் புகுந்து இம்சை பண்ணியது. உச்சந்தலையிலும் குளிர் சுள்ளென்று பிடித்தது. சூடாக மொறுமொறுப்பாக 'ரண்டு ஃபிஷ் ரொட்டியும், ரண்டு வெஜி ரோல்ஸ்ஸும்' சாப்பிட்டால் நன்றாக இருக்கும் போல இருந்தது.
ஆங் , என் மறதி மண்டைக்குள் தலை முடியைப் பகரவீ நிறத்திற்குச் சாயமடித்த நண்பர் வந்தார். செல்பேசியில் நண்பர் உடனே கிடைத்தார்.
இப்ப என் முறை, "மச்சான் ஒரு சின்ன உதவி"
"சொல்லுங்கோ" என்றார் நண்பர் எதிர் முனையில். சொன்னேன்.
"அண்ணை குறை நினையாதீங்கோ, நான் அந்தப் பக்கம் இப்ப வர வேண்டிய தேவையில்லை. அதுதான் ... "
"தம்பி , நீங்கள் இந்தப் பக்கம் வர வேண்டிய தேவையில்லைதான், ஆனால் ஒருக்கா வந்து என்னைப் 'பிக்கப்' பண்ணிக் கொண்டு வீட்டில் விட்டு விடுகிறீயளே? இஞ்சை குளிராக் கிடக்கு"
"அண்ணை திருப்பச் சொல்லுறன் குறை நினையாதீங்கோ. நான் உந்தப் பக்கம் வர வேண்டியிருந்தால் கட்டாயம் உங்களுக்கு உந்த உதவியைச் செய்ய மாட்டனே? இப்ப நான் தேவையில்லாமல் ரண்டு கிலோமீட்டர் கார் ஓடி உங்கை வரக்கிடையிலே, நீங்கள் கிட்ட இருக்கிற வேறை ஃப்ரென்ட்ஸைக் கூப்பிடலாமே!"
ஒரு உதவியும் எதிர்பாராமற் செய்யும் உதவிதானே உண்மை நட்புக்கு அழகு? இது ஏன் எனக்கு இப்பதான் புரிகிறது?
************************************
நன்றிகள்: படம் http://n-aa.blogspot.com/2010/12/blog-post_24.html இலிருந்து
சரை = பொதி, பொட்டலம்
வண்டி = தொப்பை
RTA - Roads & Traffic Authority
ஹா ஹா நல்ல நன்பர்தான் போங்கள்
ReplyDeleteஹிஹி
ReplyDeleteசுவையாக இருந்தது. நட்புக்கு இலக்கணம் அவர். ஹா ஹர்.
ReplyDeleteஒரு சந்தோசம்!!
என்னைப் போன்ற ஒரு அசடனை உங்களிலும் கண்டது.
வருகைக்கு நன்றி, மதுரன், மைந்தன் சிவா, & Dr ஐயா.
ReplyDelete@Dr.எம்.கே.முருகானந்தன்
ReplyDeleteஐயா, அப்ப நீங்களும் நிறைய அனுபவப்பட்டீர்கள் போலுள்ளது.:-)
ஹா ஹா...நன்றாக இருந்தது நட்பின் பெருமை
ReplyDeleteநானும் யோசித்துப் பார்த்தேன் எனக்கும் உங்களைப் போல் நடந்திருந்தால் என்ன செய்திருப்பேன் என்று
நானும் நண்பர்களைத் தான் கூப்பிட்டிருப்பேன் ஆனால் அவர்கள் வந்திருப்பார்கள்
நல்ல நண்பர்களை தேடி கண்டு பிடியுங்கள்
@BOOPATHY நல்ல நண்பர்களைக் கண்டுபிடிப்பதற்கு, இந்த மாதிரி அனுபவங்களையும் படவேண்டும். அல்லது படவேண்டியுள்ளது. நிற்க, இது அப்படியே 100% நடக்கவில்லை. பல்வேறு உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் என் கற்பனையில் எழுந்தது.
ReplyDeleteஉங்கள் குறும்பு + குசும்பு அடடா ரகம், இதை எப்படி மிஸ் பண்ணினன்....
ReplyDelete//நாலு கிலோ எடை சின்னப்பை// குறுகிய எட்டு மாசம் என எல்லா இடமும் குசும்பு கொப்பளிக்குது. குளிருக்கு இலகுள ரொட்டி நாவூறும் சிலாக்கியம்.
நன்றி வாலிபன். எல்லாம் "ஒரு நண்பர்" பார்த்த வேலைகளை என் கற்பனைகளுடன் சேர்த்தது.
Delete"நான் உந்தப் பக்கம் வர வேண்டியிருந்தால் கட்டாயம் உங்களுக்கு உந்த உதவியைச் செய்ய மாட்டனே? இப்ப நான் தேவையில்லாமல் ரண்டு கிலோமீட்டர் கார் ஓடி உங்கை வரக்கிடையிலே, நீங்கள் கிட்ட இருக்கிற வேறை ஃப்ரென்ட்ஸைக் கூப்பிடலாமே!"
ReplyDeleteஇந்த நாட்டில இரண்டு கிலோமீட்டருக்கு குறைவா ஒரு கடை கூட இருக்காதே, நண்பன் எங்க இருக்கப்போறான்.
நன்றி கேதா. அவர் 'வெட்டுவதற்காகச்' சொன்னது என்று பொருள் எடுக்கவும்.
Deleteமிக நல்ல வார்ப்பு, தொடருங்கள்.
Delete