Wednesday, December 14, 2011

செல்வன்

செல்வனைக் கடைசியாகக் கண்ட நாள் 25 வருடங்களின் பின்னும் அப்படியே ஞாபகம் உள்ளது. அப்பாவின் மறைவுக்குப் பின் சில நாட்களில் வந்திருந்தான். ஒரு அந்தி மங்கிய நேரம் வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் கதைத்துக்கொண்டு நின்றது நேற்றுப் போல் உள்ளது. சம்பிரதாயமான எதையும் சொல்லவேண்டும் என்ற ஒற்றைக் காரணத்திற்காகச் சொல்லும் சுபாவம் இல்லாத பேர்வழி. எனவே வழமையான ஆறுதல்/ இரங்கல் பேச்சுக்கள் எதுவும் இல்லை. கொஞ்ச நேரம் கதைத்துக் கொண்டு நின்றான். அந்த நாளிற்குப் பிறகு செல்வனை நான் காணவில்லை. அவனது வீட்டுக்காரருக்கும் காணக் கிடைத்திருக்காது என்றுதான் நினைக்கிறேன்.

ஒல்லியான உருவம். முன் பற்கள் கொஞ்சம் நீக்கல். ஊர் சொல் வழக்கப்படி நல்ல கறுவலான பெடியன் என்றுதான் சொல்லவேண்டும். டக்கென்று பார்த்தால் கொஞ்சம் முரடு என்று யோசிக்கவைக்கும் ஆனால் ஆள் என்னவோ அதற்கு நேர்மாறு. மென்மையான, யாருடனும் அதிகம் பேசாத ஒரு சுபாவம். தனிமை விரும்பியாகத்தான் இருந்திருப்பான் என்று இப்போது கணிக்கின்றேன்.

80 களின் ஆரம்பத்தில் இருந்த வடக்குக் கிழக்கு நிலைமையை 80 களில் அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்களுக்குப் புரிய வைப்பது கடினம். கிபிர், புக்காரா விமானத்தாக்குதல்கள் தொடங்கவில்லை. ஆனால், தமிழன் என்ற ஒரேகாரணத்தால் இம்சைகளை அனுபவிக்கும் காலம் எப்பவோ ஆரம்பித்தாயிற்று; என்றாலும் 1983 ஆடிக் கலவரங்களின் பின் ஒட்டுமொத்த தமிழரிற்கும் "இப்படியே இருந்தால் சரி வராது" என்று புரிபடத் தொடங்கியது. அப்போதுதான் இளைஞர்கள் அதிகளவில் இயக்கங்களிர் சேரத் தொடங்குகிறார்கள். ஆனால் அதற்கு முன்னரும் இளைஞர்கள் போராட்டத்தில் இணைத்துக் கொள்ளத் தொடங்கிவிட்டார்கள்.

செல்வன் 1982 இல் மாணவர் அமைப்பில் சேர்ந்து கொள்கின்றான். பிறகு இராணுவப் பிரிவிற்கு மாறுகின்றான். ஆள் இடைக்கிடை ஊரிற்கு வருவதும் பிறகு காணாமற் போவதும் நடக்கும். காணும் போதெல்லாம் எனக்கும் செல்வனுக்கும் நடைபெற்ற உரையாடல்கள் எல்லாம் மிகச் சரியாக இரண்டு 'கதை/காரியம்' இல்லாத இருவருக்கு இடையில் நிகழ்வது போல்தான் இருந்தது. ரோட்டில் எங்காவது கண்டால்

"எங்கை போறாய்?", இது செல்வன்.
"வீட்டுக்கு" என்று பதிலளித்து விட்டு நிறுத்திக்கொள்வேன்.

அல்லது சிலவேளைகளில் ஒரு கதையும் இல்லாமல் ஆளை ஆள் பார்த்து ஒரு அசட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொள்வோம்.

அமைதியான சுபாவம் என்றாலும், அமைதியான சுபாவமானவர்களுக்குள் ஒளிந்திருக்கும் மற்ற பக்கம் போலவே செல்வனுக்கும் இருந்திருக்கிறது. "கோடையில் இளநீர் பிடிங்கிக் குடித்து , வடக்குக் கடலில் நீந்தி, மாரி காலங்களின் களவாக மரவள்ளிக் கிழங்கு பிடுங்கிச் சுட்டுச் சாப்பிட்ட" ஒரு நண்பர் கூட்டம் அவனுக்கு இருந்திருக்கிறது. அதே நண்பர்களுடன் பின்னேரங்களில் காற்பந்து விளையாடுவதையும் கண்டுள்ளேன். இலகுவிற் களைப்படையாத செல்வன் நன்றாகப் காற்பந்து விளையாடுவான் என்று அவன் நண்பர்கள் சொல்லக் கேட்கிறேன். காற்பந்து விளையாட முடியாதளவு இருட்டியபின் அதே இளைஞர் கூட்டம் பள்ளிக்கூட மதிலில் அல்லது திறந்தவெளி மேடையில் இருந்து வம்பளக்கத் தொடங்கும். "நீ சின்னப் பெடியன்... ஓடு வீட்டை" என்று என்னையும் கலைக்கும். "இவங்கள் 'நோட்டிஸ்' எழுதப் போகிறான்கள், அதுதான் என்னைக் கலைக்கிறாங்கள்" என்று யோசித்துக் கொள்வேன்.

****

இயக்கங்களிடையே 'கருத்து வேறுபாடு' தொடங்கி இனப்பிரச்சினை மாதிரி இதுவும் சிக்கலாகிக் கொண்டிருக்கும் ஒரு காலப் பகுதியில்தான் கிழக்கில் நிறைய வேலை செய்ய இருக்குது என்று கிழக்கு மாகாணங்களுக்குப் புறப்பட்டுப் போனான். பிறகு ஊர் வருவது ஆடிக்கொருக்கால் அமாவசைக்கொருக்காற் தான்.

இவ்வளவு காலம் கடந்து, வடக்குக்/ கிழக்கு என்று ஒரு மாபெரும் பிளவு வந்து, அது எல்லாவற்றையும் காவு கொண்டு போனபின், 25, 26 வருடங்களிற்கு முன்பே "கிழக்கில் செய்ய வேண்டிய வேலைகள் கனக்க இருக்கு" என்று கிழக்கிற்குப் பயணமான ஒரு 22 வயது இளைஞனை நினைத்துப் பார்க்கின்றேன். How great he is ! தீவிர தமிழ்ப் பிரியர்கள் மன்னிப்பீர்களாக. உண்மையாகவே கடைசி வரியைத் தமிழிற் கோர்க்க முடியவில்லை.

கிழக்குக்குப் பயணமாகமுன் சொந்த அண்ணா ஒருவரிடம் செல்வன் சொன்னது, "அண்ணை நான் இனி அடிக்கடி இங்கை வருவனோ தெரியாது, எனக்கு ஒரு ஷே(ர்)ட்டும் ஒரு மணிக்கூடும் வாங்கி அனுப்பு" என்று. அண்ணா அனுப்பினார். போய்ச்சேர்ந்ததோ இல்லயோ என்பது செல்வனுக்கு மட்டும் தெரிந்ததொன்றாகியது.

செல்வன் ஞாபகமாக:
************************
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
ஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
- பாரதியார்


--------------------------
செல்வன் என்கின்ற சுப்பிரமணியம் செல்வகுமார் (இயக்கப் பெயர் செல்றின்) 14/12/1986 இல் அம்பாறை மாவட்டத்தில் உள்ள தங்கவேலாயுதபுரத்தில் நடந்த மோதலில் வீரமரணம் அடைகின்றார். அன்றுதான் அவரது 23 வது பிறந்த நாள். என்னைவிட ஆறு வயது பெரியவன் என்றாலும் "ன்" போட்டுக் கதைத்த பழைய இடைக்காட்டில் வாழ்ந்தோம். என்பதால் அதே உரிமையோடு 'அவன்' என்று பத்தியில் எழுதுகின்றேன். செல்வனின் தாய்வழிப் பேத்தியாரும் என் தந்தைவழிப் பேத்தியாரும் சகோதரிகள் என்பது டிஸ்கி.

"கோடையில் இளநீர் பிடிங்கிக் குடித்து , வடக்குக் கடலில் நீந்தி, மாரி காலங்களின் களவாக மரவள்ளிக் கிழங்கு பிடுங்கிச் சுட்டுச் சாப்பிட்ட" என்ற சொற்றொடரை அவரது நண்பர் எழுதிய அஞ்சலியில் இருந்து எடுத்துப் பாவிக்கின்றேன்.

7 comments:

  1. இப்படிப் பல செல்வன்கள்...

    ReplyDelete
  2. ஆம் @Pathman மிகச் சரியாக!

    ReplyDelete
  3. கடந்தவைகளின் கனதி
    உங்களை மட்டுமல்ல
    முழுச் சமூகத்தையும்
    தாக்கியது.

    ReplyDelete
  4. அருமை.
    மனம் நெகிழ்கிறது.

    ReplyDelete
  5. ம்...கனத்த நினைவுகள்.

    ReplyDelete