"எடியே பொன்னம்மா தெரியுமே விசயம்?". சின்னான் எப்பவும் இப்படித்தான் தொடங்கும். அநேகமாக உப்புச் சப்பில்லாத விசயங்கள்தான் வந்து விழும். சிலவேளை முக்கிய புலனாய்வுத் தகவல்களும் இருக்கும்.
பொன்னம்மாக் கிழவி கொஞ்சம் அழுத்தக்காரி; விசயத்தைத் துழாவினால் கௌவரவக் குறைவு என்று ஒரு அழுத்தமான கொள்கை ஒன்றை வைத்திருக்கிறா. விசயம் தன்பாட்டில் வந்து விழும் என்று நன்றாகத் தெரியும். எனவே 'நீ சொல்லப்போறது முக்கியம் இல்லை' என்றது மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு குட்டப் பெட்டியைத் திறந்து வெத்திலை, பாக்கைத் தயார் பண்ணினா. காதுகள் மட்டும் அடுத்த தகவலுக்காகக் காத்திருந்தன. "எனக்குக் கொஞ்சம் கிறுதி'யாக இருக்கு" என்று சொல்லிக்கொண்டு வெத்திலையொன்றை நடு நரம்போடு இரண்டாகக் கிழித்தா; பிறகு நிதானமாகச் சுண்ணம்பைப் பூசத் தொடங்கினா.
"நான் புதினம் சொல்லப்போக இவள் வெத்திலை போடுறாள்," என்று சின்னாச்சி அலுத்துக் கொண்டா.
"அவள் கிடந்தாள் நீ விசயத்தைச் சொல்லு, " இன்னொரு ஆச்சி சொன்னா.
இது நடப்பது வேதப் பள்ளிக்கூடத்துக்குப் பின்னுக்கு இருக்கிற ஊர்ச்சந்தையில். இதுதான் ஊரில் இருக்கிற ஒரே ஒரு சந்தை.
"ஆரோ ஒருத்தி பிளவுசோடையும் பாவாடை'யோடையும் ஒடிவந்திருக்கிறாளாம், " சின்னாச்சி தொடங்கியது. இப்ப அவாவைச் சுத்தி மூன்று நாலு பேர் வந்தாச்சு.
"இதென்ன புதினம், ஆர் இப்ப பிளவுசும் பாவாடையும் போடுறதில்லை? அது சரி ஏன் ஓடிவந்தவள்?" . கதை தொடர்ந்தது...
கோபாலகிருஷ்ணனுக்கு யாழ்ப்பாணந்தான் பூர்வீகம். சின்ன வயதிலேயே குடும்பத்துடன் ஹற்றனுக்குப் பக்கத்தில் உள்ள குட்டி ஊர் ஒன்றுக்குப் புலம் பெயர்ந்து விட்டார்களாம். பிறகு அங்கேயே நல்ல படிப்புப் படித்து, நல்ல வேலை எடுத்துக், கல்யாணமும் கட்டி இரண்டு பிள்ளைகளையும் பெற்றாயிற்று. தானுண்டு, தன் வேலையுண்டு, தான் வாசிக்கும் 'டெய்லி நியூஸ்' பேப்பர் உண்டு என்று அமைதியான குடும்பம். பெண்டாட்டிக்கும் பூர்வீகம் யாழ்ப்பாணந்தானாம். மனிசன் காலைமை நித்திரையாலே முழித்தவுடன் பல்லுத் தீட்டித் தேத்தண்ணி குடிக்க முதல் 'டெய்லி நியூஸ்' பேப்பர் வாசிப்பாராம். வீரகேசரிப் பேப்பரையும் போனாற் போகிறது என்று வாசிப்பாராம். இப்படி அமைதியாக ஓடிக்கொண்டிருந்தவரின் வாழ்க்கையில் விதி விளையாடியது 1978 கலவரமாக.
கொஞ்ச நாட்களாக நிலவரம் சரியில்லை. சிங்களவங்கள் எல்லாம் தமிழர்களைத் தேடித் தேடி அடித்துக் கொண்டிருந்தாங்கள். வெட்டிக் கொண்டிருந்தார்கள். தமிழர்களின் கடைகள்,வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டு அதுவும் போதாது என்று தீ வைத்தும் எரிக்கப்பட்டன. இவர் கோபாலகிருஷ்ணன் ஒருநாள் காலைமை வேலைக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். பெனியனையும் ட்றவுசரையும் போட்டுவிட்டார். மனைவி சுட்ட தோசையை ஒரு கை பார்த்துக் கொண்டிருந்தார். இவர் சாப்பிட்டு விட்டுத்தான் ஷேர்ட்டைப் போடுவார். அப்பதான் "அடோ தெமலுப் பண்டி' என்று கத்திக் கொண்டு ஒரு கும்பல் கத்தி, பொல்லுக்களுடன் கொலை வெறியுடன் ஓடிவருவது தூரத்தில் தெரிந்தது. போட்டது போட்டபடி இருக்க மனைவியையும் பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு எதோ விதமாக யாழ்ப்பாணம் வந்து பிறகு எங்கள் ஊருக்கும் வந்து விட்டார். ஓடி வரும்போது அவர் போட்டிருந்தது ஒரு நீளக் காற்சட்டையும், ஒரு கையில்லாத பெனியனும். மனைவி பாவாடையும் பிளவுசும். சாறி கட்டக்கூட அவகாசம் வரவில்லையாம். பிள்ளைகள் போட்டிருந்த உடுப்பு மட்டும். ஒரு மாற்றுடுப்பு இல்லை. ஒரு சதக் காசும் இல்லை.
இவ்வளவு விசயங்களும் 'கோவால்' ஊருக்கு வந்திறங்கி அடுத்தநாளே சந்தைக்கு வந்திட்டுது.
"எண்டாலும் பாவமப்பா, இளங் குடும்பம்" என்றா சின்னாச்சி.
"எங்கடை ஊர்ச் சனங்கள் நல்லதுகள், உதவி செய்யாமலே இருக்குங்கள்?" என்றாவாம் பொன்னம்மா.
இலங்கைத் தமிழர் மேலே இந்தமாதிரி கலவரம், வெட்டுக் குத்து, கடை/வீடு எரிப்பு என்பதெல்லாம் வெள்ளையன்கள் சுதந்திரத்தைத் தூக்கித் தந்துவிட்டுப் போன காலத்தில் இருந்து அப்பப்ப நடப்பதுதான். என்றாலும் இது அதிகம் யாழ்ப்பாணத்திற்கு வெளியில்தான் நடக்கும். யாழ்ப்பாணத்தில் என்றால் ரவுண் பக்கம் நடக்கும். ஊர்ச் சனத்திற்கு இந்த மாதிரிக் குடும்பமாகத் துரத்துப் பட்டு வெறுங்கையுடன் வருபவர்களைப் பார்ப்பது இது முதல் தடவை. ஊரில் ஆட்களில்லாமல் இருந்த ஒரு வீட்டைச்சு த்தம் பண்ணி வசிக்கக் கொடுத்தார்கள். (அந்த வீட்டில் பேய்கள் நடமாட்டம் முன்பு இருந்ததாகக் கதை). தமிழ் உபாத்தியாயர் சில பல புதிய பழைய உடைகளையும் சமைக்கும் பாத்திரங்களையும் ஒரு 'துருவு பலகையும்' கொடுத்தார். கமக்காரர்கள் அரிசி, மரக்கறி கொடுத்தார்கள். உத்தியோகத்தர்கள் 'அஞ்சு, பத்துக்' கொடுத்தார்கள். இல்லாவிட்டால் போட்டுக் கழித்து வைத்த உடுப்புக்களையாவது கொடுத்தார்கள். மீன்கார ஆச்சியும் 'பாவம் ' என்று மீன் கடனாகக் கொடுத்தா. பேப்பர்காரத் தாத்தாவும் கடனாக 'டெய்லி நியூஸ்' பேப்பரும் வீரகேசரிப் பேப்பரும் கொடுக்க ஒத்துக்கொண்டார். "இங்கிலிஷ் படிச்ச மனிசன் வேலை எடுத்துக் கடனைக் கட்டமாட்டானா என்ன?" என்று பேப்பர்காரத் தாத்தா சொன்னாராம்.
கோபாலகிருஷ்னன் மனைவி அன்னலட்சுமி, ஒரு வாரத்திலேயே அயலிலுள்ள பெண்டுகள் குமருகளைச் சிநேகிதம் பிடித்துவிட்டா. அப்பப்ப பிள்ளைகளை அயலிலுள்ள வீடுகளில் விட்டுவிட்டு புருஷனுடன் ரவுண் பக்கம்போய் வருவா. அதுக்கெல்லாம் 'அஞ்சு பத்துக்' கடன் கொடுக்குமளவுக்கு ஊர் ஆட்களுக்கு நம்பிக்கை வந்துவிட்டது. கோபாலும் அவரது 'டெய்லி நியூஸ்' பேப்பர் வாசிப்பும் ஊரில் விரைவில் பரவத் தொடங்கிவிட்டது. ஊரிலே அப்பப்ப 'இங்கிலிசில' மொட்டைக்கடுதாசி எழுதுற மணிவண்ணனுக்குக் கூடக் கொஞ்சம் பொறாமை வரத் தொடங்கிவிட்டது. 'இவருக்கென்ன பெரிய இங்கிலிஸ் தெரியும்?" என்று அலுத்துக் கொண்டானாம். ஆனாலும் கோபாலுக்கு வேலை மாத்திரம் அகப்படுதில்லை. படித்த படிப்புக்கும் தெரிஞ்ச 'இங்லிசுக்கும்' பொருத்தமான வேலை கிடைப்பது என்றால் சிம்பிளா என்ன? ஆனால் இது மீன்கார ஆச்சிக்கும் பேப்பர்த் தாத்தாவுக்கும் புரியவில்லை.
"வீட்டுக்காரம்மா," என்று நைச்சியமாக கூப்பிட்டுக்கொண்டு மீன்கார ஆச்சி வந்தது ஒரு வியாழக்கிழமை.
"இண்டைக்குச் சூடை மீன் காணும்" என்றா அன்னம் என்கிற அன்னலட்சுமி.
"அதில்லை ...." மீன்காரா ஆச்சிக்கு அகதிப் பொம்பிளையிடம் கடன் காசைத் திருப்பிக் கேட்க அசௌகரியம்தான்.
"வீட்டிலை காசு கொஞ்சம் தேவைப்படுது, நீங்கள் தரவேண்டிய நாப்பது ரூவா சொச்சத்திலை ஒரு இருவதையாவது தந்தால் உதவியாக இருக்கும், நாளைக்கு வெள்ளிக்கிழமை நானும் வரமாட்டன். இண்டைக்கே தந்தால்..... "
"ஆச்சி, உண்ணான உனக்குத் தரவெண்டு இருவது ரூவா எடுத்து வைச்சிருந்தனான். பிள்ளைகள் இரண்டுக்கும் காச்சல். டாக்குத்தர்/மருந்துச் செலவுக்கு முடிஞ்சு போச்சுது. கட்டாயம் அடுத்தமுறை தாறன் என்ன?"
மீன்கார ஆச்சி இன்றைக்கும் கடனாகத்தான் மீன் கொடுத்தா. அடுத்த கிழமைக்கும் காசைப்பற்றிக் கதைக்கவில்லை. பேப்பர்த் தாத்தா கொஞ்சம் 'கடுமை'. வீரகேசரிப் பேப்பரை நிறுத்திவிட்டார். இங்கிலிஷ் பேப்பரைத் தொடர்ந்து சப்ளை பண்ணிக் கொண்டுதான் இருந்தார்.
**************************
நாட்கள் போகப்போகக் கஷ்ட ஜீவனம் கோபாலகிருஷ்ணனுக்கு. ஊர் ஆட்களும் உதவிகளைக் குறைக்கத் தொடங்கிவிட்டார்கள். அன்னத்திற்கும் கடன் வாங்குவது சிரமமாய்க் கொண்டிருந்தது. பேப்பர்காரனுக்கு நூற்றி நாற்பத்தெட்டு ரூபாய்கள் பாக்கி. மீன்காரிக்கு எண்பத்தாறு. பக்கத்து வீடுகளுக்கும் ஐம்பது, நூறு, எழுபத்தைந்து என்று. தமிழ் வாத்தியார் மட்டும் அறிந்தவர் தெரிந்தவர் எல்லாரையும் அகதிக் குடும்பத்திற்கு உதவி செய்யப் 'பரப்புரை' செய்துகொண்டிருந்தார். தானும் இயலுமானவரை 'பத்து இருவது' கொடுத்துக் கொண்டிருந்தார். எது நடந்தாலும் காலை வேளைகளில் கோபால் நீளக் காற்சட்டையும், கையில்லாத பெனியனுமாய், வீட்டுக்கு வெளியில் சாய்வுக் கதிரையில் இருந்து நிதானமாகப் பேப்பர் படித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். கிழமைகளில் ஒரிரு நாட்கள் தம்பதி சமேதராய் ரவுணுக்கும் போய்வருவார்கள். சினிமா பார்க்கத்தான் என்று சின்னாச்சிக் கிழவிக்குத் தகவல் கிடைத்துவிட்டது.பாக்கியம் அன்ரி அன்று காலை நல்ல 'மூட்'டில் இருக்கவில்லை. முற்றத்திற்குத் தண்ணி தெளித்து பிறகு விளக்குமாறால் கூட்டத் தொடங்கினா. கடுங்கோடை என்பதாலோ அல்லது மனிசனிலிருந்த கோபத்தை விளக்குமாறில் காட்டியதாலோ என்னவோ புழுதி ஒரு படையாகாக் கிளம்பியது. அரை மணித்தியாலத்திற்கு முதல்தான், மனிசன் 'கல்யாணம் கட்டி இருவது வருசமாச்சு, இன்னும் ஒழுங்காத் தோசை சுடத் தெரியல்லை' என்று கத்திப் போட்டுச் சாப்பிடாமல் போய்விட்டார். கல்யாணம் கட்டிய புதிதில் , "பாக்கியம் இது தேவலோகத்துத் தோசை'யப்பா" என்று சப்புக் கொட்டிச் சாப்பிடுவார்.
அன்னமும் கோபாலும் புழுதிக்குள்ளால் கண்களை சுருக்கிப் பார்த்துக் கொண்டு வந்தார்கள். கூடவே குழந்தைகள்.
"இண்டைக்கு ஒருக்கா ரவுணுக்குப் போய் வாறம். பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ளுகிறியளே?" என்றா அன்னம். கோபால் இங்லிஷ் பேப்பரை நிதானமாக மடித்து பையினுள் வைத்துக் கொண்டிருந்தார். மனிசன் பேப்பர் இல்லாமல் எங்கேயும் போகாது.
"ஐயோ இண்டைக்கு ஏலாது, நானும் மனிசனும் இண்டைக்குப் படம் பாக்கப் போறம்" என்று ஒரு பச்சைப் பொய்யை எடுத்து விட்டா.
"சரி பின்னை" என்று விட்டுக் குடும்பமா ரவுண் புறப்பட்டுச் சென்ற கோவால் குடும்பத்தை யாரும் அதுக்குப் பிறகு காணவில்லை.
**************************
கடன் கொடுத்த, கொடுக்காத ஊர்ச்சனங்கள் கொஞ்சநாள் இவர்களைத் திட்டிக் கொண்டிருந்தார்கள். நீண்ட நாட்களின் பின், ஏதோ ஒரு சினிமாத் தியேட்டரில் இருவரையும் கண்டதாக யாரோ பேசிக் கொண்டார்கள். பிறகு இவர்களை மறந்து விட்டார்கள்.
தமிழ் வாத்தியார் மட்டும் கனகாலத்திற்கு "பாவமப்பா அதுகள்" என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
முதல் வரவு....
ReplyDeleteநல்வரவாகுக :-)
Deleteஅண்ணா எங்கட காலத்தில ஒரு ஊரே இன்னொரு ஊரில பொய் அகதியா இருக்கும்.. ஆக உதவியெல்லாம் ஒன்டோரெண்டு நாளைக்கு தான்.அங்கால எப்பிடியாவது உழைக்கவேனும் இல்லாட்டி உண்டியல் வரோணும்.
ReplyDeleteஅகதி அந்தஸ்து கூட அஞ்சாறு நாளைக்கு தான், அங்கால வருமானத்துக்கு வழி தேடோணும் எண்டு சொல்லுற கதை.. கொஞ்சம் யோசிச்சா புலம்பெயர் அகதிகள்,செண்டர்லின்க், டக்ஸ் பேயர்ஸ் தளத்துக்கு கூட பொருந்துது. அது தான் கதையின் வெற்றி!
Regards,
JK
இது 1978 அல்லது அதுக்கு முந்திய கதை. அத்தோடு ஊர்ச்சனங்களுக்கு இந்த மாதிரி ஒடிவந்த சனங்களைப் பார்ப்பது இதுதான் முதல்தடவை. இல்லாவிட்டால் மாதக்கணக்கிற்கு இப்படிச் சமாளிக்க முடியாது. நாங்களே (முழு ஊரே) அகதியாக ஓடியது பலமுறை நடந்தது. அது வேறு கதை.
Deleteகதை நடை வடிவாக இருக்கிறது. அயல் வீட்டில் நடப்பது போல ஒரு உணர்வு. பாராட்டுக்கள். கோவாலரும், அன்னலச்சிமியும் பிள்ளைகளும் அமளி அடங்கிப் போச்சு எண்டு ஒருவேளை ஹற்றனுக்கே போய்விட்டினமோ?
ReplyDeleteநன்றிகள் குணபாலன். ஹற்றனில் யாரும் பேப்பர் வாங்க, 'படம்' பார்க்க, என்று அஞ்சு-பத்துக் கொடுப்பார்களா (ஊரில் அறிந்த அதே பேர்வழிகளுக்கு)? நான் நினைக்கிறேன் இன்னொரு ஊரில் இரண்டு ஆச்சிமார் ஒரு சந்தையில் 'மேலே' வந்தது போல் கதைத்துக் கொண்டிருப்பார்கள். (வெறும் ஊகம்தான்).
Deleteமற்றது 'ஹற்றனுக்குப் பக்கத்தில்' ஊர் என்று சொன்னது கோவால்தான். உண்மையாக இருக்குமோ?
நல்ல ஒரு பதிவு ..தொடரட்டும் உங்கள் படைப்புக்கள்
ReplyDeleteஇயல்பான நடையில்,
ReplyDeleteசெயற்கைப்பூச்சுப் பூசாத மொழியில்
சொல்லியிருக்கிறீர்கள்.
நன்றாக இருக்கிறது