Monday, October 15, 2012

நொந்தபோபால் 2

(கண்டிப்பாக நாற்பது வயது தாண்டியோருக்கு மட்டும்)

பாலகோபாலுக்கும் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்திற்கும் இரண்டு ஒற்றுமைகள் உண்டு. ஒன்று மிகச் சாதாரணமானது. இருவரும் தமிழர். மற்றது கொஞ்சம் முக்கியமானது. இருவரும் பிறந்த ஆண்டும் 1969. வயதைக் கணக்கிட்டால் கோபால் வெறும் 43 வயதான வாலிபன். அட, நம்ம Felix Baumgartner இற்குக்கூட வயசு வெறும் 43 தானே!

கொஞ்சநாளாக கோபாலுக்கு ட்ராபிக் பொலிசுடன் தகராறு. 'பிழையான' இடத்தில் கார் பா(ர்)க் பண்ணியது, 50 கிமீ/ம வலயத்தில் வெறுமனே 65 கிமீ/ம இல் ஓடியது என்று "தம்மாத்துண்டு" விசயங்களுக்குக் எல்லாம் தண்டம் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 500 டொலருக்கும் அதிகமாகக் கட்டினான். நொந்து நூலாகிப் போன இவன் இப்ப பஸ்'ஸில்தான் வேலைக்குப் போய் வருகிறான்.(காரை ஓட்டினால்தானே ஃபைன் எல்லாம்?). பஸ்ஸில் குறைந்தது இரண்டு, மூன்று 'தேங்காய்ப்' பார்ட்டிகளாவது கூடவரும். ஆனால் 'தேங்காய்ப்' பார்ட்டிகள் சக 'மண்ணிறத் தோலர்'களுடன் பேசமாட்டார்கள். ஒரு அசட்டு அறிமுகச் சிரிப்புச் சிரித்தாலும் ஒரு முறைப்பு முறைத்து விட்டு ஐ'ஃபோனையோ அல்லது ஏதோ ஒரு கொரியன் ஃபோனையோ மும்முரமாகத் தேய்க்கத் தொடங்குவார்கள். இவனும் வெறுத்துப் போய் இப்ப சக மண்ணிறங்களைப் பார்த்துப் புன்னகைப்பதில்லை. 'தானும் ஒரு தேங்காய்ப் பேர்வழியாக ஆகி விட்டேனோ?' என்று ஒரு டவுட்டு மட்டும் அப்பப்ப வந்து போகிறது இவனுக்கு.

ஒரு புதன்கிழைமை இப்படித்தான் இவன் பஸ் ஸ்டாண்ட்டில் பஸ் வரவில்லை. ஒரு இருபது, இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க 'சின்னப் பெடியன்' கோபாலுக்குக் கிட்ட வருகிறான்.

"உங்களை நான் எங்கோ பார்த்திருக்கிறேனே?" என்றான் ஒரு சிநேகிதமான புன்னைகையுடன். சுருட்டை முடி, கொஞ்சம் புசுபுசு என்று அகலமான முகமும் சற்றுப் பருத்த உடலும். . மலையாளியாக இருக்கலாம் . கொஞ்சம் மூளையைக் கசக்கியதில் மெதுவாக ஞாபகம் வந்தது.

" மூன்று நான்கு வருடங்களின் முன் உங்களிடம் என் மகன் நீச்சல் பழகினான், உங்கள் பெயர் சாம் என்று நினைக்கின்றேன். உங்களுடன் அதிகம் பேச முடியவில்லை"

"பிரச்சினை இல்லை. பிரியந்த சமரதுங்க என் பெயர், சாம் என்று சுருக்கிவிட்டேன்"

"அப்ப நீங்கள் இலங்கையில் எங்கே"

"கண்டி"

கண்டி என்றதும் குஷியாகிவிட்டான் கோபால். இவன் நான்கு வருடங்கள் படித்தது கண்டிக்குக் கிட்டவுள்ள கம்பஸில்.

"தொண்ணூற்றொன்றில் இருந்து தொண்ணூற்றைந்து வரை நான் பேராதனையில்தான் படித்தேன்"

"அப்போது நான் ஆரம்பப் பள்ளியில்.." சாம் இப்ப ஒரு வயதான பேர்வழியுடன் பேசிக்கொண்டிருப்பதாக உணர்ந்திருக்க வேண்டும்.

ஒரு அசௌகரிய மௌனம் வந்து குந்திக் கொண்டது. "உங்களுக்குக் ஆட்களுடன் கதைக்கப் பேசத் தெரியாதப்பா" என்று மனைவி காதுக்குள் சொல்லுவதுபோல் ஒரு பிரமை இவனுக்கு. இப்படி 'அச்சுப் பிச்சென்று' கதைப்பவர்களை "பெக்கோ" என்று இவன் கல்லூரிக் காலங்களில் அழைப்பார்கள்.

இப்படி அசௌகரியமாகத் தொடங்கிய பஸ் நட்பு, நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்ந்தது. கோபால் தன் பழைய சிறுவயதுக் குறும்புகள் , சிறுபிராய நனைவிடை தோய்தல்கள் என்று பெரிய பாராயணங்களையே மெதுவாக எடுத்துவிட்டான். 'சாம்'உம் தன் பழைய காதல் , ஊரில் புதுவருசத்திற்குக் 'கிரிபத்' சாப்பிட்ட ஞாபகங்கள் -அது இது என்று தன பங்குக்கு எடுத்து விட்டான். இரண்டுபேரும் "புலிக்கதை" கதைப்பதை மட்டும் கெட்டித்தனமாகத் தவிர்த்தார்கள்.

**************************
இப்போது சிட்னியில் "வேலைத்தளங்களில் ஆட் குறைப்புத்தான்' எல்லா இடங்களிலும் பேசப்படும் ஒரு பொதுத் 'தலைப்பு'.

இன்றைக்குக் கதை இப்படிப் போனது.

கோபால்: எனக்கு 'இந்தக்' கம்பனியில் குப்பை கொட்டி அலுத்து விட்டது. ஆள் குறைத்தலில் அகப்பட்டு கொஞ்சக் காசு எடுத்தால் சந்தோசமாக வேறு வேலை எடுத்துவிடுவேன்.

சாம் : உங்களை மாதிரி ஆட்களை இலகுவில் வெளியே அனுப்ப மாட்டாங்கள்.

கோபால் ஒரு கணம் சிலுசிலு என்று உணர்ந்தான். தன்னை மாதிரி எக்ஸ்பீரியன்ஸ் + அறிவு உள்ளவனை இலகுவில் "வீட்டை போ" என்று சொல்லமாட்டாங்கள் என்று சொல்ல வருகிறான் என்று புளகாங்கிதம் அடைந்தான்.

சாம்: வயசு போனவர்களை இலகுவில் அனுப்ப மாட்டார்கள். அது கம்பனிக்குக் கனக்க காசு செலவழியும் வழி. பதிலாக 'அதிகரிப்புக்களை' நிறுத்தி வைத்தல், உன் வேலை சரியில்லை என்று நொட்டை நொடுக்குச் சொல்லுதல்மாதிரி இம்சை வேலை செய்து நீங்களாகவே வெளியில் போகச் செய்வாங்கள்.

பஸ்'ஸில் வீடு வரும்போது வழியில் இருந்த முதியோர் இல்லத்தைக் கொஞ்சம் பயத்தோடுதான் பார்த்தான் போபால்.


------
அரும்பதவுரை:

'தேங்காய்ப்' பார்ட்டி - Coconut Party- Brown outside, white inside. தங்களைத் தாங்களே வெள்ளையராகப் பாவனைப் பண்ணிக் கொண்டு திரியும் பேர்வழிகள். ஏதோ தங்கள் கெட்டகாலம் தாம் மண்ணிறமாகப் பிறந்துவிட்டோம் என்பது மாதிரித்தான் இவர்களின் உடல் மொழி இருக்கும். சீனர்களில் இருக்கும் இவ்வாறானவர்களை Banana Party என்பார்கள்.

14 comments:

  1. ப‌ல‌ இடங்க‌ளில் வாய்விட்டு சிரித்தேன்,

    // இரண்டுபேரும் "புலிக்கதை" கதைப்பதை மட்டும் கெட்டித்தனமாகத் தவிர்த்தார்கள்// மிக‌வும் ச‌ரியாக‌ கூறியிருக்கிறீர்க‌ள். ந‌ல்ல‌ ப‌திவு சக்தி.

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் யசோ. உங்களுக்குக் இன்னும் 40 ஆகவில்லை என்று நினைத்தேன்!

      Delete
  2. நல்ல கதைதான் உங்கட சொந்தக் கதை போல இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் சுகர்மன். சொன்னால் நம்பவேண்டும் :-). இது நான் கேள்விப்பட்ட கதை.

      Delete
  3. "புலிக்கதை"

    எனக்கும் ஒரு சிங்கள நண்பன் இருக்கிறார் 15 வருட பழக்கம் இன்றுவரை புலிக்கதை கதைக்கவில்லை....ஆனால் அவர் ஒரு சிங்கள தேசியவாதி நான் டமிழ்தேசியவாதி....கி..கி....

    ReplyDelete
  4. பஸ்'ஸில் வீடு வரும்போது வழியில் இருந்த முதியோர் இல்லத்தைக் கொஞ்சம் பயத்தோடுதான் பார்த்தான் போபால்... பாவம் !

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் இராஜராஜேஸ்வரி. பாவம் அவன் மட்டும்தானா? :-)

      Delete
  5. இதைப் பற்றிக் கருத்துச் சொன்னால் எனக்கு 40 வயதுக்கு மேலாகி விடும் என்பதால் கருத்து இருந்தும் சொல்லாமல் செல்கிறேன். :))

    ReplyDelete
    Replies
    1. >கருத்துச் சொன்னால் எனக்கு 40 வயதுக்கு மேலாகி விடும் என்பதால் கருத்து இருந்தும் சொல்லாமல் செல்கிறேன்.

      அப்ப?

      Delete
  6. அன்பின் சக்திவேல் - கதை நன்று - முடிவு நன்று - முதியோர் இல்லம் நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. அன்பின் சீனா; முதியோர் இல்லம் பார்க்க நன்றாக இருந்தாலும் அடிவயிற்றில் சிலீரென்று ஒரு பயம்...

      Delete
  7. உங்களுக்கு நிஜமாவே அவ்ளோ வயசா - நம்பமுடியவில்லை வில்லை வில்லை.

    ReplyDelete